Monday, October 13, 2008

சுதந்திரச் சந்தை வர்த்தகம்

ஆளும் அரசுகள்:கொடியவர்தம் கூடாரம்!


பெருவங்கிக் கள்ளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிட்ட இன்றையபொழுதில் ஜேர்மனியப் பங்குச் சந்தை 11வீதம் தலைதெறிக்க உயர்ந்து, பங்குச் சந்தைச் சூதாடிகளையும் அவர்களது மனேச்சர்களையும் பெருமிதப்பில் ஆழ்த்தி மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு அரச அங்கீகாரத்தையே பெற்றுவிட்டனர்.


சமூக நலத்திட்டங்களுக்கு எந்தவொரு மானியமும் வழங்கமுடியாத ஜேர்மனிய அரசு,இன்று 50.000.கோடி யூரோவை(500 பில்லியன்கள் யுரோ) "வங்கிகளைக்காப்பாற்ற"வழங்குவதாக முடிவெடுத்து(The German government unveiled a €500 billion ($679 billion) rescue plan to shore up the banking system after Sunday's emergency summit of euro zones nations at which leaders agreed to guarantee new bank debt and inject capital to unfreeze money markets and restore confidence in the financial system.-Spiegelonline)
வெற்றுச் செக்குகளைக்கொடுத்த அடுத்த சில மணிநேரத்தில், பங்குச் சந்தைப் பெறுமதி வானைத்தொட்டு விட்டது. டக்ஸ் இன்டக்ஸ் வானை நோக்கி நகர்கிறது!ஆனாலும்,அது சில வாரங்களில் தகர்ந்து போகும்.புதிய பண உதவி பழைய விளையாட்டிற்கு!இது,சுவரை நோக்கி வாகனத்தைச் செலுத்துவதற்கு ஒப்பானது.ஆனால், முதலாளியத்துக்கு இதைவிட வேறு வழியில்லை-அதன் விதி இது!


"பாடாசாலைகளுக்கு மானியமில்லை-30 குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு,அதற்கு ஒரு ஆசிரியை".


"வேலையிழந்தவர்களுக்கான உதவிகளை நீண்ட நாட்களுக்கு வழங்க முடியாது.ஓடு, என்ன கல்வி கற்றாலும் தெருக்கூட்டவாவது!"


"வேலையிழந்தவர்கள் மணித்தியாலம் ஒரு யுரோவுக்கு வேலைக்குக் கண்டிப்பாகச் செல்லவேண்டும்." அரசு இத்தகைய அவலதுள் மக்களைத் தள்ளியபடி...


இன்று, உழைப்பவர்களுக்கு எதிரான கொடிய சட்டங்களை இயற்றிய இந்த நவ லிபரால்கள், கொள்ளை இலாபம் அடையும் பெருவங்கி மனேச்சர்களைக் காப்பதற்கு இப்போது எங்கிருந்தோ பல்லாயிரம் கோடிகளைக் கொடுக்கிறார்கள்?


அப்பாவி மக்களை அறா வரிக்குள் தள்ளி,அவர்களின் குருதியை உறிஞ்சும் வரிவிதிப்பின்மூலம் அவர்தம் சில்லறைகளைப் பறித்துப் பணக்காரர்களைக் காக்கும் இந்தப் பொருளாதாரப் பொறி முறை எவ்வளவுதூரந்தாம் மக்களைக் கருவறுக்கும்?


நாம் வாழும் உலகம் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலுக்குள் வீழ்ந்திருக்கிறது.


இந்தப் பொருளாதரத்தின் "சுதந்திரச் சந்தை வர்த்தகம்" இன்றைக்கு-இத்தகைய சூழலிலும், மக்களைக் கொள்ளையடிக்கும் அரசுகளால் காப்பாற்றப்பட்டுவரினும் இதன் ஆயுள் நீண்டதில்லை.உலகத்தின் பொருளாதாரச் சுழற்சியானது எந்தப் பெருவணிகத்திலும் செல்வத்தைக் குவிக்கவில்லை!மாறாக, உலகத்தின் கனிவளங்களையும்,உழைப்பவர்களையும் கொள்ளையடித்தே இன்றுவரை உயிர்வாழ்கிறது.இதன் உச்சக்கட்டமானது ஊக வணிகத்தில் சூதாடிகளால் ஊதிப்பெருபிக்கப்பட்டு, ஏழைகளின் தலையில் சுமைகளை ஏற்றியே பெருந்தொகையான செல்வத்தைச் சேர்த்துவருகிறார்கள்.இதன் தாக்கம் இன்னுஞ் சில மாதங்களில் அடுத்தகட்டப் பங்குச் சந்தைச் சிதைவில் தேசங்கள் பலதைத் திவாலாக்கி வரும்போது மக்களைப் பட்டுணிச் சாவுக்கும்-கடும் உழைப்புக்கும் தள்ளும்.


மக்களினது நலன்களை வேட்டையாடும் கொடிய அரசுகள் இன்றையப் பொருளாதாரச் சிக்கலை மக்களின் தலைகளில் கொட்டிவிட்டுத் தனது எஜமானர்களைக் காப்பதற்கெடுக்கும் இந்த முயற்சியை மக்களின் பெயரால்"வேலை வாய்பைக் காத்தல்"எனும் போர்வையில் கீழிருந்து மேல் நோக்கிச் செல்வத்தைப் பங்கீடு செய்வது உண்மையில் கொடிய நிகழ்வு.


அடிமுட்டாள் தனதுமான சந்தைப் பொருளாதாரத்தின் உற்பத்திப்பொறிமுறை மற்றும் நிதிமுதலீட்டுப் பங்குச் சந்தைச் சூதாட்டம், இன்று உலகப் பாட்டாளிகள் அனைவரையுமே புதிய பாணியில் மேய்ந்து வருவதற்குப் பெயர்"வேலை வாய்பைக் காத்தல்".நமது காலத்தில் இத்தகைய கொடிய பொருளாதாரச் சுரண்டலை இதற்கு முன் பார்த்தே இருக்கமுடியாது.


மக்களை மறைமுகமாகவும்,நேர்முகமாகவும் வரிவிதித்துக் கொள்ளையடிக்கும் இந்தக் கொடி அரசுகள் ஏலவே பலகோடி யூரோக்களை தொழிற்சாலைகளுக்கான மானியமாகவே கொட்டி வருவது வழக்கம்.இதைப் பயன்படுத்திப் புதிய முதலீட்டாளர்கள் குறுகிய காலத்துக்குக் கம்பனி ஒன்றை ஆரம்பித்து அரச மானியத்தைப் பெற்ற அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் "திவால்"எனும் முகமூடியினூடாக மீளவும் அரசைத் தமது கடன்களைப் பொறுப்பேற்கச் செய்து, கருப்புப் பணத்தை லிக்றன் ஸ்டையின்,மொனக்கோ,சுவிஸ் வங்கிகளில் பதுக்கியபடி இந்தப் பொருளாதாரம் நகர,இப்போது பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் பங்குகொண்ட பெருவங்கிகளும் அதன் நிர்வாகிகளும் இந்தக் கொள்ளையை மேலும் வளர்க்கின்றனர்!


எந்தக் காலத்துக்கும் இத்தகைய ஏமாற்றங்களைச் செய்துவரத்தக்கபடி மக்கள் மனங்களை இவர்கள் தொடர்ந்து தயார்ப்படுத்தி வருவதற்கான அனைத்து வளங்களையும் பல்வேறு அரசியலூடாகச் செய்வதில் இத்தகைய நவலிபரல் ஆட்சியாளர்கள் கெட்டிக்காரர்கள்.


சுதந்திரச் சந்தையின் கோர முகத்தைச் பங்குச் சந்தைச் சூதாட்டத்துள் நாம் தரிசிக்கின்றோம்.


இந்தச் சந்தை, மூலவளங்கள் கொட்டிக்கிடக்கும் தேசங்களை வேட்டையாடக் கொடிய யுத்தங்களை ஜனநாயகத்தின் போர்வையில் செய்து, அப்பாவிகளைக் கொன்று குவிப்பதும் மறுபுறும் தமது தேசத்தில் கொடிய வரிகளை விதித்துத் தம் சொந்த மக்களைச் சுரண்டுவதும் இருவேறு முகங்களாக விரிகிறது.இதன் உள்ளடக்கம் மேலும்,மேலும் ஒரு வடிவத்தையே எடுக்கிறது.அது: கீழிருந்து மேல் நோக்கிக் கூம்பு வடிவமாகச் செல்வதைத் தள்ளுவது.இது,எந்தப் பொழுதிலும் மனித சமுதாயத்தை மகத்தான முறையில் வளர்ச்சிப்பாதைக்கு நகர்தமுடியாது.தொடர்ந்து பல சிக்கல்களையும் ஒருமுகப்படுத்தி உலகை யுத்த அபாயத்துள் வைத்தபடி, மக்களையும்,இயற்கையையும் கொள்ளையிடுகிறது.


நமது மொழிகள் பலம் இழப்பதற்கான ஊடக யுத்தமானது,இந்தப் பொருளாதாரத்தின் கொடிய முகத்தை மக்களின் நல்வாழ்வுக்கான இறுதி வடிவமாகச் சொல்லி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் அரசை நியாயப்படுத்துகிறது.கொள்ளையில் பங்குகள் நன்றாக பிரிகப்படுகின்றன.இவற்றைப் பெறுவதில் ஆர்வங்கொண்டவர்கள் துள்ளிக் குதிக்கும் பொதுவிடம் இன்றைய நிலையில் பாராளுமன்றச் சாக்கடையாகவே இருக்கிறது.


இத்தகைய தருணத்தில் இவர்களை இனியும் நம்பி,"இந்தக் கட்சிக்குப் பதில் அந்தக் கட்சி"என்று தொடர்ந்து தூங்கி ஏமாறும் கூட்டமாக உழைப்பவர்கள் இருப்பதற்கு என்னதாம் காரணம்?


இந்தக் கேள்விக்கு மிக இலகுவாகப் பதிலளிப்பதைவிடுத்து, நீண்ட ஆய்வு முறையில் சிந்திக்க வேண்டிய காலம் இது.


கொடியவர்கள்,கும்மாளம் அடித்துக் கொண்டாட்டங்கள் செய்து, தமது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.இதற்காக அப்பாவி மக்களின் குருதி பிழிந்தெடுக்கப்படுகிறது.இத்தகைய குருதியை உறிஞ்சும் அட்டைகளை மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக முதலாளித்துவ ஊடகங்கள் காட்டிக்கொண்டு வருகிறார்கள்.இத்தகைய ஊடகங்களின்வழி அரசியல் புரியும் மனிதர்களைக்கொண்ட தேசங்கள் தொடர்ந்து உழைப்பவரை வேட்டையாட இன்றைய சமூக ஜனநாயக வாதிகள் மக்களின் மடியில் தவழ்ந்து, தமது அரசியலை முன்னெடுக்க இந்தக் கேடுகெட்ட கொடிய முதலாளியம் தொடர்ந்து குற்றுயிரோடு உலகத்தில் யுத்தத்தை முன்னெடுக்கிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்
13.10.2008

2 comments:

Anonymous said...

The last picture was superb!

Unidentified Space said...

http://www.unidentifiedspace.blogspot.com/

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...