அனுப்பும் பங்குச் சந்தை.
பாதாளத்தை நோக்கிப் பங்குச் சந்தை வீழ்ந்து போகிறது.அரசுகள்
மக்களின் வரிப்பணத்தால் முதலாளிகளை-நிதிமுதலீட்டாளர்களைக் காப்பதற்கெடுக்கும்
முயற்சி சமூகவிரோதமானது!பங்குச் சந்தைகுறித்துக் கட்டுரை புனைந்தவர்கள் கள்ள
மௌனத்துள்.
இவர்களின் கடவுளான அமெரிக்காவோ அடுத்த அடியெடுக்க அச்சப்படும் காலம் இது.யாருடைய கழுத்தை நெரித்தாவது தமது முகங்களைத் தியாக தீபங்களாகக் காட்டவெடுத்துவரும் முயற்சிக்கு உழைப்பவர்கள் பலியாக முடியுமா?
ஆமா,முடியும் என்கிறார்கள் அரசியல் வாதிகள்!அவர்களுக்கென்ன?இந்த ஊக வணிகத்துறையின் துணிகரமான கொன்சேர்ன்கள் கொட்டிய பெருந்தொகைப் பணத்துக்கு அவர்கள் கத்துகிறார்கள்;நாம் கொதிப்படைகிறோம்!
உலகைக் காட்டமாகக் காவுகொள்ளப்போகும் பங்குச் சந்தைச் சூதாட்டமானது பொறிந்துவரும் இன்றைய சூழலை, கடந்த ஆண்டுமட்டில் நொருங்கி விழும் என்றே சொன்னேன்.எத்தனையோ நண்பர்கள்-குறிப்பாகப் பத்திரி- எள்ளி நகையாடினார்கள்.இன்று, அமெரிக்கதாசர்கள் எவ்வளவு முயன்றும் பொறிந்துவரும் ஊக வணிகம், உலக அரசுகளையே பொறியவைக்கப் போகிறது!
முதற்கட்டமாகப் பொறிந்துபோகும் வங்கிகளைத் தூக்கி நிறுத்த முனையும் அரசுகள், பொதுசனத்தின் வரிப்பணத்தைக்கொட்டித் திவாலாகும் வங்கிகளைக் காவுகிறார்கள்.இதுவும், புஷ்வாணமாகும்.அடுத்தடுத்துச் சரியும் பங்குச் சந்தையை எண்ணிக்கொள்ளமுடியாதளவுக்குக் கதைவிடும் பொருளாதார மேதைகள் தொலைந்துபோக.
இருப்பவர்களின் கைகளுக்கு மேலும் கீழ்மட்டமக்களின் சில்லறைகளையே தட்டிப்பறித்துக் கொடுக்கும் இந்த அரசுகள், கீழிருந்து மேலே சமூகப்பங்கீடைச் செய்கிறார்கள்.இது, நவீன உலகம்.இங்கே,முதலாளித்துவம் என்பது "தோன்றும் போது சவக்குழியைத் தோண்டியபடியேதான் பிறந்ததாக"க் கார்ல் மார்க்ஸ் அன்றே குறிப்பட்டார்.சமூகத்துக்குத் தீங்கு செய்யும் சந்தைப் பொருளாதாரமானது ஐரோப்பிய நவலிபிரல்களால் நவீன அடிமைத்தனமாக மாற்றப்பட்டபின் உலகை யுத்தங்களால் பங்கீடு செய்ய எத்தனித்தார்கள்.இத்தகைய யுத்தங்களால் கோடி மனிதர் அழிந்தும் செல்வம் குவிந்தது இத்தகைய வல்லாதிக்க அரசுகளுக்கு.எனினும்,உலகை வேட்டையாடும் அதிபகாசூர மனேச்சர்கள் இந்தச் செல்வத்தையெல்லாம் தமது கரங்களுக்கு மாற்றியபடி, ஊக வணிகத்தில் கட்டப்பட்ட கணக்குப் புள்ளிகள் காலத்தால் நிலைக்க முடியவில்லை.
இது, தொடர்கதையாக மாறம்போது ஐரோப்பியப் பொது நாணயமான யூரோ நொருங்கிச் சின்னாபின்னமாகும்.கூடவே,ஐரோப்பியக்கூட்டமைப்பு ஏழை நாடுகளை அம்போவென நடாற்றில்தள்ளியபடி மேலும் இராணுவவாதத்தைத் தொடரும்.இத்தகைய தருணத்தில் பழைய ஐரோப்பா மீளவுருவாகிக் குருதியாற்றைத் திறக்கும்.
இன்றைய மதிப்பீட்டின்படி ஐரோப்பிய உற்பத்தி தன்னைக் கட்டுப்படுத்த முனைகிறது.ஜேர்மனிய முன்னணிக் கார்க் கம்பனிகள் எடுத்து வைக்கும் உற்பத்திக் குறைப்பு, அடுத்து நொருங்கும் நடுத்தர வர்க்க உற்பத்திச் சாலைகளைத் தெருவுக்குக் கொணர்ந்துவிடப் போகிறது.இத்தகைய நிலையில், இன்று உலகத்தின் முன் எந்தத் தீர்வும் கிடையாது.
மனிதர்களின் பொதுவான செல்வமெல்லாம் சிலமணி நேரத்தில் சாம்பலாகும் சந்தைப்பொருளாதார வர்த்தக முறைமையானது எப்போது பங்குச் சந்தைச் சூதாட்டமாக ஊக வணிகத்துக்கு மாற்றமாச்சோ, அன்றே வட்டிக்கு வட்டி என்ற மனிதமுகமற்ற மலட்டுப் பொருளாதாரப் பணச் சுற்றோட்டம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டது!
நடுத்தர உற்பத்திச் சக்திகளோடு உறவாடிய உற்பத்தியுறவுகள் தெருவுக்குத் துரத்தப்பட்டது எதனால்?
எத்தனையோ நடுத்தரத் தொழிற்ச்சாலைகள் வங்கிகளிடம் வேண்டிய கடனுக்கு வட்டிகட்டியே திவாலாகிப் போயின.இதனால்,தொழிலாளர்களைத் தெருவுக்குத் துரத்திவிட்டுள்ளது.உழைப்பாளர்கள் உதிரிகளாகவும்,நாடோடிகளாகவும் மாற்றப்பட்டுவரும் இந்தச் சோதனையான காலம் திடீரெனத்தொடங்கியதல்ல.இது, சந்தைப்பொருளாதாரத்தின் படுதோல்வி.
இனிவரும் காலத்தில் இதை மாற்றியச் சமூகத்தன்மை மிக்கப் பொருளாதார உற்பத்தி பொறிமுறையைக் கைக்கொள்ளும் புதிய அணுகுமுறைகள் உலகத்துக்கும் உழைப்பவர்களுக்கும் அவசியமாகிறது.இது, தவிர்க்கமுடியாது மக்களைத் தெருவுக்கு இறங்கிப் போராடும் நிலைக்கு மாற்றும் என்பதை உணர்ந்த ஜேர்மனிய அரசு, இதுவரை தனது இராணுவத்தை உள்ளநாட்டுப் பிரச்சனைகளுக்கு உட்புகுத்தாத மறைமுக அரசியலைச் செய்து வந்ததைமாற்றி, இராணுவத்தைச் சட்டபூர்வமாகக் களமிறக்கக் காத்திருக்கிறது.இது, உழைப்பவர்களை வேட்டையாட எத்தனிக்கும் அரசியல்.
இனிவரும் காலங்கள் கலகத்துக்குரிய காலங்களாகவே இருக்கும்.கற்பனாவாதக் கதைக்காலங்கள் காற்றோடு பறக்கும்.தேசங்கள்பல திவாலாகிப்போகும்.அங்கே, உணவுக்கலகம் ஆரம்பமாகும்.இது, தற்காலிகமாக உயிர்ப்பலிகளோடு அடக்கியொடுக்கப்படும்.எனினும், மக்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்படும் அவர்களது உழைப்பு மக்களையின்னும் தெருவுக்குக் கூட்டிவரும்.இழப்பதற்கரிய வேலையைப் பறிக்கும் வங்குறோத்துப் பொருளாதாரச் சூழல், மக்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லாத சூழலை உருவாக்கும்.அங்கே,வெடிக்கும் உயிர்த்திருப்பதற்கான போராட்டம் வெறும் தொழிற்சங்க வாதத்துக்குள் உள்வாங்கப்பட முடியாது திண்டாடும்.இத்தகைய தருணத்தில் மீண்டும் மார்க்ஸ் மிக எளிதாக உலகை வலம் வருவார்.இது, தொடரப்போகும் அடுத்த நூற்றாண்டின் கட்டியம்.
இன்றிருக்கும் இத்தகையவொரு சூழலை முன்வைத்துத் தமது மூளைகளைக் கசக்கும் பெரும் பொருளாதாரப் புலிகள், ஊக வணிகத்தைப் பற்றிக் கட்டியமைக்கப்பட்ட மேடையில் நிற்கவே அஞ்சுகிறார்கள்.அவர்கள் தனியார் வங்கிகளை அரசமயமாக்கும் மாய்மாலம் காட்டுகிறார்கள்.இன்று, மீள முடியாத கடனிலுள்ள வங்கிகளைத் தேசிய-அரசமயமாக்கல் என்பதன் உண்மை முகம் மக்களின் வரிப்பணத்தைத் தட்டிப்பறித்துத் தமது கையாலாக-மனித விரோத முகத்தை மறைப்பதே.
"உலகத்தின் மூலவளங்களை பொதுச் சொத்தாக்கு,
நிலத்துக்கான தனியுடமையை இல்லாதாக்கு,
அனைவருக்கும் அடிப்படை வருமானத்தைச் சட்டமாக்கு,
உழைப்பவர்களின் ஊதியத்தை வரியாக்கி வங்கிகளுக்குப் பங்கீடு செய்வதை நிறுத்து" எனும்,பொருளாதார வாதங்கள், மேலும் மக்களை முடமாக்கும்.
உண்மையில் புரட்சிக்குரிய காலத்தில் அதை நீற்றுப்போக வைக்கும் இந்த மாய்மாலங்களை உழைப்பவர்கள் நம்ப முடியாது.
இனிவரும் காலத்தில் சந்தைப் பொருளாதாரம் தவிடுபொடியாகும் என்பதே பொருளாதாரச் சூழல் சொல்லுகிறது.
உபரிச் செல்வத்தைப் பெருக்க முனையும் இந்தச் சூதாட்டம் இதுவரை மக்களைப் பலியெடுத்து யுத்தங்களை ஊக்குவித்தது.இது, வளர்ந்துவரும் உலகத்தின் விஞ்ஞானப் பொறிமுறைகளால் இதுவரை உயிர்வாழ்ந்துவந்தது.இனி,இத்தகைய விஞ்ஞான வேடிக்கையெல்லாம் இவர்களைக் காக்க முடியாது.
உலகம் மிக விரைவாக இன்னொரு தளத்துக்கு மாறித்தான் போகும்:அது,புரட்சி அல்லது சர்வதிகாரச் சரணாகதியாவென்பதை தீர்மானிப்பது அரசுகள் அல்ல.உழைப்பவரே.
இதற்கான தளம் ஒன்று புரட்சிகரமாக உருவாகிவருவதை இத்தகைய அரசுகள் அனுமதிப்பது திவிர்க்க முடியாது நிகழும்.மக்களின் எழிச்சிகள் எப்பவும் வெடிக்கலாம்.அதுவரை மக்களை வேட்டையாடுதல் பல முறைமைகளில் தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
07.10.2008
No comments:
Post a Comment