Sunday, May 22, 2011

புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்!

தமிழீழத் தற்காலிக உள்ளக அரசின்அரசியற்றுறைத் தலைவர் விடுக்கும் அவசர வேண்டுகோள்:

பாசிசப் புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்!



ன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!,
முள்ளி வாய்க்காலில் பாசிசப் புலிகளோடு எமது மக்கள் வகை தொகையின்றி அழிந்துபோனார்கள்.இந்த அழிவு இன்று, இரண்டாவது நினைவுத் தட ஆண்டாக வந்து போயுள்ள நிலையில் நாம் தமிழீழ அரசுக்கான கட்டுமானத்தைப் பொறுப்பேற்கிறோம்.

எமது தேசம் அன்னிய இனங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது.

இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.புலிகளது அழிப்பு அரசியலானது நம்மை இத்தகைய நெருக்கடிக்குள் தள்ளியபோதும் புலிகளது புலம்பெயர் நிறுவனங்கள் மக்கள் சொத்தோடு தம்மைத் தலைமறைவாக்கி வரும் இன்றைய சூழலில், நாம் நாடுகடந்த தமிழீழ அரசோடு ஒரு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்தி எமது உரிமைகளைக் காக்கும் தற்காலிக உள்ளக அரசை நிறுவியுள்ளோம்.

நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் வர்க்க முரண்பாடுகளே காரணமாகிறது.இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில் தமிழீழத்தின் தற்காலிக உள்ளக அரசானது சமீப காலமாகச் செயற்கரிய திட்டங்களோடு நகர்கிறது.புலிகள் விட்டுச்சென்ற பாரிய வெற்றிடத்தை நிரப்பும் செயற்றிறனோடு மேற்குலக வியூகங்களுக்கு முகங்கொடுக்கும் அரசியற் தத்துவக் கட்டுமானத்தையும் நாம் தொட்டியக்கும் இந்தத் தற்காலிக உள்ளக அரசானது இன்றைய சூழலில் அகரீதியான முரண்பாடுகளைச் செவ்வனவே பயன்படுத்தி மக்களை ஓரணிக்குள் கொணர்கிறது.

இந்த நகர்வானது நமது மக்களை வலுவானவொரு வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ளி வருகிறது.எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போரை எண்பதுகளின் ஆரம்பத்தில் பற்பல குழுக்களாக இருந்த அமைப்புகள் முன்னெடுத்ததும் அதை சீரான முறைமைகளில் ஒருங்கமைத்து, வலுவாக்கி எதிரியை வென்றுவிட முடியவில்லை.எதிரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணித்தார்கள்.அவர்களுள் மிக முக்கியமான, தமிழ்பேசும் மக்களது எதிரிகள் பாசிசப் புலிகளே என்பது இன்று காலத்தால் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இது கடந்த இருபதாண்டுகளுக்கு முன் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.

இத்தகைய எதிரிகள்-அன்னிய நெருக்கடிகளால் எமது தேசத்தின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.இன்று, இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்படுத்தியபோது,அங்கே உதிரி இயக்கமாகவிருந்த தமிழர் தேசிய படையான நாம் வரலாற்றுப் போக்கில் தமிழ்பேசும் மக்களின் நிலப்பரப்புகளைக் கட்டுப்படுத்தித் தேசிய அரசுக்கானவொரு அரச கட்டமைப்பையும்,அதைக்காப்பதற்கான தேசிய இராணுவத்தையும் நிறுவிக் கொள்ள முயல்கிறது. இந்த வரலாற்று இயக்கப்பாட்டில் நமது தேசமானது தனக்கானவொரு அரசவடிவத்தையும்,பொருளாதாரப் பொறிமுறையையும் மெல்ல உருவாக்கிக் கொள்ள முயலும்!

இது காலத்தால் கருக்கொண்ட முரண்பாடுகளிலிருந்து தோற்றமுறுகிறது.

இந்த அரச வடிவத்தை-அரசுக்குரிய அனைத்து கட்டமைப்புகளையும் நமது தேசத்தில் நாம் இப்போது உருவாக்கிவருகிறோம்.

உலகுக்கு ஒரு இயக்கமாக இருக்கும் தமிழர் தேசிய இராணுவமானது உள்ளக மட்டத்தில் அரசவடிவமாகவும் இருக்கும் இன்றைய நிலையில், எங்கள் தேசத்துக்கான அரசினது தோற்றம் சாத்தியமாகியுள்ளது.இது உலக அங்கீகாரமற்ற நிலையால் வடிவத்தில் தேசிய விடுதலை இயக்கமாகவும்,உள்ளடக்கத்தில் அரசாகவும் செயற்பபடும்.அந்த முதன்மையான செயற்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் அவர்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது அரசியல் ஒத்துழைப்புடன் ஈழங்கடந்த வெளித் தொடர்புகளோடு இயக்கிவருகிறார்.இதை,ஏலவே நீங்கள் அறிவீர்கள்.நாம் பாசிசப் புலிகளது எச்சமாக உருவாக முடியாதென்பதைச் செல்வி ஜெயலலிதா அவர்களது வலுவான செயற்றிறனை நாடு கடந்த தமிழீழ அரசு உள்வாங்குவதிலிருந்தே நீங்கள் ஊகித்திருக்க முடியும்.



இதைப் புரிந்திடாத தமிழ் தேசிய அரசின் எதிரிகள் அந்த அரசை ஒரு சிறு குழுவாகவும்,குழு நலனாகவும் நமது உரிமைகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.இவர்களிடம் இருபதாண்டுகளுக்குமுன்னிருந்த கண்ணோட்டமே இன்றும் காணக்கிடக்கிறது.எமது போராட்டமானது பற்பல தடைகளைத்தாண்டித் தமிழ் தேசியத்தின் இருத்தலைச் சாத்தியப்படுத்தும் கட்டமைப்பை மெல்லக் கட்டியுள்ளது.

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழீழமானது தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது தேசிய தற்காலிக உள்ளக அரசு பயன்படுத்துவதும்,அதை அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஒருமித்தபடி முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

நாம் கடந்த கால எமது அரசியற் செயற்பாட்டிலிருந்து எமது தேசத்தையும்,அதைக்காக்கும் எங்கள் தேசிய இராணுவத்தையும் ,அரச-நிர்வாகக் கட்டமைப்பையும் சிதறவிடாது காத்தாகவேண்டும்.அன்னியச் சக்திகளின் கவனமெல்லாம் எமது அரச கட்டமைப்பையும்,அதைச் சாத்தியமாக்கிய இராணுவ வலுவையும் உடைப்பதே நோக்கமாக இருக்கிறது.

எமது தேசம் விடுவிக்கப்பட்டு வருகிறது.

அஃது,இலங்கைப் பாசிசச் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் இன்று தவிர்க்க முடியாதிருக்கும்.உலக நாடுகளாலும்,நாடுகடந்த தமிழீழ அரசாலும் அரசியல் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பாசிச அரசு தக்க சூழலில் நொருக்கப்படும். அதற்கானவொரு வாய்ப்பை அந்த கட்டமைப்புத் தனக்குள் வலுவாக வைத்திருப்பதால் இதை நாம் காப்பதற்கான நமது கடமைகளைச் செய்வோம்.

எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு,அது நிர்மாணிக்கப்படவேண்டும்.இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும்.எமது வரலாற்றுத் தாயகத்தை நாம் நிர்மாணித்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக்கப்படவேண்டும்.


"தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையே நமது மூச்சு"



வணக்கம்.

ப.வி.ஸ்ரீரங்கன்


(தமிழீழத் தற்காலிக உள்ளக அரசின்அரசியற்றுறைத் தலைவர்)

தமிழீழம்-ஜேர்மனி
22.05.2011

2 comments:

தருமி said...

பல ஆண்டுகளுக்குப் பிறகு .. ஒரு பின்னூட்டத்தால் நினைவுபடுத்தப்பட்டு உங்கள் பக்கம் வந்தேன்.

நலமா?

Sri Rangan said...

வாருங்கள் தருமி ஐயா,வணக்கம்!நலமே உள்ளேன்.நீண்ட நாட்களின் பின் நாம் உரையாடுகிறோம்...நீங்கள் நலம்தானே?

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...