Wednesday, May 18, 2011

இன்று,இன்னுமொரு மே,மேய்-மே : 18 ...

முள்ளி வாய்க்காலில் முரசெறிந்த" எங்கள் தலைமையும் "வீழ்ந்ததுவோ?

சேர்பவர்:

செல்வி.தமிழீழா,
மே/பா: முள்ளி வாய்க்கால்,
யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு,மற்றும்
வன்னிப் பெருங்காடு,
தமிழீழம்.


18.05.2011

ன்புக்குரிய ,தமிழ் ஈழா,
நலந்தானே எனக் கேட்கேன்-நான் " எல்லாம்" பெற்று, உன்னை வைத்து உண்டியல் குலுக்கியபடி சௌக்கியமாக...

இன்று,இன்னுமொரு மே,மேய்-மே : 18 ...

கொலைஞருக்குப் பின் தமிழ்நாட்டைச் சுற்றி,"தமிழ் உலகே ஜெய,ஜெய,ஜெயவெனப் பஜனையிட" உன் மேனி சிலிர்த்திருக்குமே?

இருக்காதா பின்னே! நா(கா)டு கடந்த தமிழீழ அரசு அம்மையாருக்கு வாழ்த்தனுப்ப,முள்ளி வாய்க்காலில் மண்டை பிளந்த(படி) துட்டக் கைமுனுவைப் பார்த்த பொரிகாலனுக்குக் கட்டையடித்த கையோடு,உன்னை வைத்துப் பெரு வர்த்தகஞ் சூடாய்ப் பிறக்கிறதாம்! இதுள், பெரு மகிழ்வை நீ அடைந்தாலும், பேரானந்தம் நிலைத்தாலும் எல்லாம் எங்கள் மேதகு(வி)தேசிய மாமனிதருக்கே சொந்தம்!இன்று,அவருக்கும்,அவர் பஜனைக் குழுவுக்கும் இரண்டாவது திவசம் செய்கிறார்கள் நம்ம தோழர்கள்- அம்மையாரிடம் "அரிசி" கொடுப்பதில் உருத்திரகுமார் முந்திக்கொண்டார்!



உனக்கும்,உனது குடிகளுக்கும் "விதவை-முடம்-சடமெனப் பல" பெறுமதிமிக்க அன்பளிப்புகளைத் தந்த மேதகுக்கு எந்த வார்த்தையால் பா(போ)ட்டிசைக்க?

இன்று,முள்ளி வாய்க்காலில் உன்னைக் கா(கூ)ட்டிக்கொடுத்த தினமெனச் சொல்லப்படுகிறது "புரட்சி" வட்டத்தில்!

எல்லாம் அறிந்த,முற்றுமு(பு)ணர்ந்த தேசியத் தலைவருக்குக் கோவணங்கட்டிய தினமும் இன்றுதானாம்!

அவரது கோ(கொ)ட்டைக்குள் உன்னைச் சொல்லித் தமிழ்ச் சனத்தைத் துரத்தித் துரத்திக்கொன்று குவித்ததும், தலைவருக்கு வெள்ளைக் கொடியுடன் சமாதானம் பிறப்பதென்ற பாட்டோடு உன்னை விலைப்படுத்தியதும் இந்த "மே 16-17-18" எனப் பகரப்படுகிறதே தமிழீழா!

நேசம் நிறைந்த என் தமிழீழாவுக்கு,உன் ஈழவன் எழுதும் வஞ்சகக் காண்டம் இது!வஞ்சியே-வனப்பே,உன்னை வைத்துப் பிழைப்பதிலிருக்கும் சுகம் அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கும்மிபோடும்புலித் தேசியம் புரட்டிய புரவர்கள், இப்பவெல்லாம் நிறைய-நிறைய...மகிந்தா மாமாவுக்குக் கூஜாத் தூக்குவதுதானாம் உனக்கான விடுதலை!உம்... என்ன மகிழ்ச்சிதானே?சுரேஸ்பிரேமச் சந்திராச்சாரியார் தானாம் இப்போதைய தேசியத் தலைவரெனவும் ஒரு மட்டத்தில் கே.பி.கூப்பாடு போடுகிறார் ஜீ.ரீவி துணைகொண்டு!


எதற்கெடுத்தாலும் உன் பொய்மையைப் புனைவதன் தொடர்கதைகளில் காலம் கிழிபடுகிறது கண்ணே!

கனவினில் உன்னுடன் நான் சல்லாபித்த காலவெளியுள் கண்டெடுத்த உன்னை எருமைக்கடாவில் வந்திருந்து வாட்டியெடுத்தான் தேசபிதா உருவத்தோடு.முள்ளி வாய்க்காலில் அவனுக்குச் சங்கு ஊதியிருப்பாய் நீ!போடி கள்ளி,பொல்லாதவள் நீ!நிச்சியம் நீ செய்திருப்பாய்!அநுபவித்தவள் நீதானே?உன்னைச் சபிக்க எனக்கேது தெம்பு பெண்ணே?

இதென்ன புதுக்கதை,புகழ்மிக்க உனது உடலொடு உரசப்பட்ட எத்தனையோ"ஆண்மைகள்"கடுப்படக்கக் காரியக் குட்டிகளாகக் கைகளில் எதையோ காவித்திருந்து இன்னுஞ்சில ஒட்டிய வயிறுகளை உன்னுடன் சல்லாபிக்கத் தேதி குறிப்பதாகக் கூட்டிச் சென்றதும் நீயோ நினைவிழந்து கிடந்தாயாமே அன்று?

புதுமை.

எத்தனையோ தெருக்களில் உன்னை விலைப்படுத்தும் இன்றைய கணம் வரை நான் உனது விழிக்கோலத்தின் நீண்ட கனவில் என்னை உனக்குள் தேடுகிற தருணத்தில் உனது மார்பில் கொடும்பற்கள் பதிய நீ மல்லாந்து கிடக்கிறாய் தமிழீழா!
வருபவர், இன்னும் போபவர் என்ற தொகை வகைகளில் உன்னைத் தொலைப்பதற்கு ஏனம்மா நீ மௌனித்தாய்?

காலமெல்லாம் கடுந்தொலைவினில் நீ,உன்னிடம், வருவதற்காய் என்னை மடலிட்டுக் கூப்பிட்ட அந்தப் பொழுதில், உன்னைத் தரிசிப்பதற்காய் நான் புனைந்த கனவுக்குள் நீ வாழ்வதற்குச் சம்மதியாத இந்தக் கணம்வரை உன்னை நான் வெறுத்தே வருகிறேன்.

ஈழாச்சி,என் கண்ணே!

விதவைகளுக்கு நீ அல்லவா உதாரணமானாய்? உன்னை வைத்து இன்னும் வருடுபவர்கள் குறித்து எதையுரைக்க? ஏகத் தலைக்கு எருக்கலையும்,போகத் தலைக்குக் நாடு கடந்த அரசும் கொடுத்தவளே! கோதையே, கொள்ளிக் கட்டையான உனது விடுதலைக்கு "ஜெயலலிதா அமையாரென" வாழ்த்தனுப்பும் வீரப் புலிகளையுங் கண்டாயோ? தலைவருக்குக் கோவணம்,மக்களுக்கு வேட்டென விலை வைத்தவர்கள்,இப்போது,வாழ்த்துப்பா மடல் வரைந்து மடிப் பிச்சை ஏந்தி... முள்ளிவாய்க்காற்றேவராம் இசைத்து அம்பிகை பக்கதரானார் அகதி வெளியுள்!

நினைவிருக்கிறதா?

என்றோ ஓர் நிலாப்பொழுதில் உன்னை வேட்டையாடிய ஒரு தொகைக்குள் நானும் உன்னைத்தடவிய வலிய பொழுதின் நிலைமறுப்பில் நானும் அழிந்ததை?

கட்டுக்கடங்காத ஆசைகள் அரவணைக்க, அடுப்படியில் பூனை படுத்த பொழுதுகளில் நானும் நீயுமாகச் சண்டையிட்ட தெருமுனையில்தான் தம்பிகள் உருவாகினார்கள்.நல்லது கண்ணே!

இப்போது ,நலமாக இருக்கிறாயா என்றுகூடக் கேட்க முடியவில்லை!

அவ்வளவுக்கு, உனது நிலைமைகளை என்னைவிட எவரறிவார் என் ஈழா!

இருப்பதற்கே இடமின்றி நீ அலையும்போதெல்லாம் உன்னைப் புணர்ந்தபடி உப்பிடுவதாகச் சொல்லும் தமிழ்நாட்டு அம்பிகையோ பட்டை நாமத்தோடு உன்னை அடிமைகொள்வதற்கும் உன்னையே ஏலமிட்டுக் காசு பண்ணுவதற்கும் எத்தனையோ தலைகளை உருட்டுவதற்கும் உன்னை அண்மித்தாளோ?அவள் வஞ்சகங்கொண்ட சூர்ப்பனகை-நம்பி விடாதே என் ஈழாத்தா.

அதன்பின் நரகத்தின் கோட்டையில் நீயே பீடாதிபதியென நானே விட்டு விடப்போகிறேன்.

நரம்பில்லா நாவு
நக்கியே பிழைக்கும் இன்னுஞ் சில பிணங்கண்டு.


முள்ளிவாய்க்காலில்,ஊருபேர் தெரியாத உன்னைக் கனவொடு தாக்கி மெல்லத் தின்ற பொழுதொன்றில் புலியின் தொண்டையில் உனது முள்ளெலும்பு சிக்கியது.அதையும் தோண்டிப் பறித்தெடுக்கச் சில உதிரிப் புலிகளும் நரிகளும் முனைகையில் எங்கிருந்தோ வரும் ஓநாய்கள் இவைகளை மெல்ல ஊளையிட்டே வெருட்டின.கொடுமையான இரைதேடலில் "உனது மார்பைப் பிய்த்துப் புசித்த கரங்களை நானே கொண்டிருப்பேன்" என்ற அவனது உரிமைபாராட்டலில் அவன் பலியெடுக்கும் இன்னும் எத்தனை உயிர்களையும் உன்னைச் சுற்றியே கதைபுனைந்து"காதல்மலரக்காய்த்து"அவர்களை வேட்டைக்கு அனுப்பிய பின்னிரவில் அவனே தலை பிளந்தபடி வான் பார்த்து மாயக் (கெடு)காலம் விரைந்தது!இந்த நிலைமையிலும் மண்டியிட்டா உனது பெண்மை நான் அடைய?மகத்தான எனது காதலுக்கு உனது மடி ஆஸ்த்தியாக இருப்பது அவசியமே என் ஈழாயி.

கச்சையில் கனமின்றி காயடித்த பொல்லாத பொழுதுகளில் என் தலை உதிர்ந்துவிடும் சூனியத்தை எவர் வைத்தாரோ தெரியாது.நான் உன்னைச் சுற்றிக் கண்ட கனவுகளைப் பறிப்பதற்கே காலத்துக்குச் சரியாகிப்போச்சு.இதுதான் என்னையொத்தவர்களின் இல்லாத"ஆண்மை"ஆண்ட பரம்பரைக் கனவொடு மந்திரித்து மாங்காய் பறிப்பதென்ற ( வி )தேசியத் தலைப் புரிதலுக்கு நீயே இப்படி ஆப்பு அடிப்பாய் என்று கனவிலும் காணேன் குஞ்சு ஈழா.

இது,முள்ளி வாய்க்காலில் எப்படியடி நடந்தது? எள்ளுக் காய்ந்தது எண்ணைக்கு,ஏனடி எலிப் புழுக்கைகளையும் கொன்று போட்டாய்?

கொஞ்சக்காலத்துக்கு முன் உன்னைப் புணரப்போகும் எல்லாவகைகளையும் அவனோ கூட்டி வைத்துக் கதை பேசிய சர்வதேசிய உண்டியல் ஊடகங்களுக்கு இன்று உனது மொழி புரியமுடியவில்லை.

உனதுவலி-உதிரம்-கண்ணீர் எனக்குக் கடுப்பைத் தந்திடினும்,நானும் அதுள் மயக்கமுற உனது உடலின் அநாயசமான அங்கக் கனிவுகள் என்னைப் புரட்டிப்போடுகிறது.

ஓர் கிழமைக்குள் உன்னைக் கொடுக்குக்குள் வைப்பதற்கெடுத்தவர்களை முள்ளி வாய்க்காலில்சரமாரியாகத் தாக்கிய வரலாறு அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.செருப்படிக்குள் நீ இப்போது முடங்கிக் கிடந்தாலும், முள்ளி வாய்க் காலில் மேதகு மேய்ப்பருக்குச் சங்கு ஊதிய உனது பெருமையே பெரும் பெருமை! எனது பழைய கனவைத் தாங்கிக்கொள்.

உன்னைமீட்டெடுத்து நான்மட்டுமே மிதித்துக் குஞ்சு பொருத்தலில் இருக்கும் பெருமையே எனக்கு விடுதலை.ஆதலால், நானே நாடு-காடு கடந்துவிட்டாலும், உன்னைச் சொல்லி அரசமைத்துப் புரவலரானேன் புரிந்து கொள்!இது, மே 18 முள்ளி வாய்க்கால் பேரிகை என.

இப்படிக்கு,

உன் ஈழவன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
18.05.11

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...