Sunday, May 15, 2011

மந்தைத் தெருவினில்...

மந்தைத் தெருவினில்...

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" இரண்டாயிரம் வருடத்துக்குமுன் தமிழன், " Edel,sei der Mensch,hilfreich und Gut"-Goethe "மனிதன் மேன்மையானவன்,கருணையும் சிறப்பும் நிறைந்தவன்!"பதினோழாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த கோத்தே முதல் இன்றுஞ் சொல்லப்படும் மனிதமாண்பு மகா கேவலமாச்சு. இந்த மொழிவுகளுக்கும் பின்னால் நிகழ்ந்தவைகளுக்கும் என்ன சம்பந்தம் உண்டு?

கலைகள்-எண்ணங்கள்... முட்கம்பிகளுக்குப் பின்னே ஊசலாடும்!

இந்தத் தருணங்களைப் பற்றி எந்த மொழிவுகளோடு வருகிறோம்?

ஏதோவொரு தேவைக்காகப் பலவுயிர்களைப் பலியெடுத்துவிட்டு,மீளத் தகவமைக்கும்"துரோகி"ப் பட்டங்களுக்காக நபர்களைக் குறிவைக்கும் திசை தமிழுக்கான உயர்வைக் குறித்துக் கனவு காண்கிறதாம்.

மனித மொழிகள்அவனது எண்ணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குச் சேவிக்கிறது.எண்ணங்களைத்தானேதவிர எந்த உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும் ஊடகமில்லை!என்றபோதும்,அதன்வழியே தொடர்பாடலுஞ் செயலுக்குமான விளக்கும் பிறக்க வேண்டியுமிருக்கிறது.சமுதாயத்தின்-குழுமத்தின் நோக்கம் உலகைத் தொடர்புபடுத்திச் சொல்வதில் வார்த்தைகளே உடுத்திப் போர்க்கிறது.இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் தன்மைகளில் முழுமொத்த மொழியும் எதேச்சதிகாரத்துக்கிசைவாக மாற்றப்படுஞ் சந்தர்ப்பமே எனது விழிகள்முன் காண் செயலூக்கமாக விரிகிறது.



இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைச் செயலில் மனிதப் படைப்பைச் சுமக்கவேண்டிய இந்த மொழியை அன்றைய சிலுவையுத்தம் முதல் சமீப நாசிகள் வரை உதாசீனப்படுத்தியது ஓரளவு வரலாறாக நாம் காணும்போதும், நமது வரலாறு சொல்லப்படும் மொழி எத்தகைய முறைமைகளில் துஷ் பிரயோகப்பட்டுள்ளதென்பதைக் குறித்துப் பார்ப்பனியத்தை வைத்து வியாபாரப்படுத்திய நாம், நமது "தேசிய விடுதலை"ப் போரில் புலிப் பாசிசம் எங்ஙனம் மொழியைத் துஷ்பிரயோகித்து மனிதத்தைக் குதறியதென்பதையொட்டி மௌனிக்கிறோம்.

"விடுதலைப் புலிகள்"மொழியையும்,வார்த்தைகளையும் மட்டுமல்ல அதன்வழியான அனைத்துக் கலைவடிவங்களையும் இசையையும்-ஒலியையும் தமக்கான இருப்புக்கும்,தம்மை எதிர்த்த-எதிர்க்கும் மக்களுக்குமான கொலைக் கருவிகளாக்கியிருக்கின்றார்கள்.அதன் தொடர்ச்சியே இப்போது ஆங்காங்கே காணும் புலி-தமிழ்மக்கள் ஆதரவுக் கருத்தாகப் பொதுவரங்கில் கொட்டப்பட்டுவருகிறது.இந்த மொழிவுகளுக்குள் இருக்கும் வரலாற்று மோசடியானது ஏலவே கட்டயமைக்கப்பட்ட மொழித் துஷ்பிரயோகத்திலிருந்து நியாயமுறுகிறது.

கிட்லர் தனது எஜமானர்களுக்காக 32 இனக் குழுமங்களை இதன்வழி கொன்று நியாயப்படுத்தினான்.பதினொரு மில்லியன்கள் மக்களது உயிரைப்பறித்தபோது உலகத்துக்கு மொழியப்பட்ட உரைகளுக்குள் ஒதுக்கப்பட்ட நியாயம் இன்றும் பேசுபொருளாகப் புரட்டி எடுக்கப்படும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நாமும் வாழ்ந்து சாகிறோம்.எனினும்,எமது மக்களுக்கு "ஈழஞ்" சொல்லி உயிர்க் கொள்ளையிட்டவர்களோ தம்மீதான அனைத்துக் கிரிமினல் எத்தனங்களையும் அப்பாவிகள்மீது ஏவிவிட்டு வர்த்தகஞ் செய்யும் இந்தக் கொடுமையை எதிர்கொள்வதும்-புரிந்துகொள்ள முனைவதும் அவசியமில்லையா?

விடுதலைப் போராளிகள் சீருடையில் தம்மை எதிர்த்தவர்களையும்,தமக்கு ஆதரவு தரமறுத்தவர்களையும் வேட்டையாடிய ஒரு பயங்கரவாத அமைப்பின் அழிவில் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லை!மீளவும்,அவர்களது மொழியைத் தூக்கியபடி அலையும் அவதூறாளர்கள் அதை மக்களுக்கான புரட்சி உரையாடலாக மாற்றுகிறார்கள்.இது ஆபத்தானது-அழிவுக்குள் நிரந்தரமாக நம்மைக் கட்டிப்போடவல்லதில்லையா?

மக்களது சுதந்திரத்தையும்,ஆன்ம இருப்பையும் மறுதலித்து அவர்களது அனைத்து வளங்களையும் கொள்ளையடித்த காட்டுமிராண்டி யுத்தம்-கொலைகள் முள்ளிவாய்க்காலில் கைமாறுவதில் அதே மொழி, மீளத் தகவமைக்கப்பட்டு மக்களை மீள அடிமைமைச் சேவகத்துக்குத் தயார்ப்படுத்துகிறதே!இது,எந்த நியாயத்தை மக்கள்மீது பொழிகிறதோ அதே நியாயம் தமது தலைக்கே திரும்புமென்பதை இலங்கைப் பாசிச அரசு புரிந்துகொண்டிருப்பினும் அதன் இருப்புக்கு இந்த அழிவுவாத அடக்குமுறை மொழிவுகள் அவசியமாக மேலெழுகிறது.அவ்வண்ணமே நமது "புரட்சி"க்காரர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறது!

இங்குதாம் கலையும்-எண்ணங்களும் இதற்கெதிரான கூரிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றப்பட்டு, அந்த மொழியை முதலில் விடுவித்தாகவேண்டும். தமிழ்ச் சூழலுக்குள் இத்தகைய எந்த உரையாடலும் இதுவரை மக்களது நலனிலிருந்து எழவே இல்லை!கலையும்-எண்ணமும் ஏதொவொரு அதிகாரத்துக்கிசைவாகக் கட்டியமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாம் கூறுகிற அனைத்து எதிர்க் கருத்தாடலும்-கதையாடலும் அதே பாணியில் மொழியைத் துஷ்பிரோயாகஞ் செய்கிறது. இது சமீப காலமாகத் தமிழுக்குள் எழுந்த அனைத்து ஆக்க இலக்கியத்துக்கும் பொருந்திப் போகிறது.ஒன்று புலிச்சார்பு அல்லது உலக-இலங்கை அரச ஆதிக்கத்துக்குச் சேவையாற்றும் பிரயத்தனத்தில் ஈடுபாடுகொள்கிறது.

இனிவரும் பொழுதேனும்,இத்தகைய குறுகிய நோக்ககங்களைக்கடந்து,புலிப்பாசசத்தின் இருண்ட பக்கங்களையும்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தினது உலகளாவிய கூட்டோடிணைந்த மக்கள் விரோத அனைத்து முகங்களையும் பெறுமதிமிக்க மொழியைக் கூரிய ஆயுதமாக்கி எதிர்த்தெழுவேண்டியுள்ளது.

இதுவரை எந்தவொரு தமிழ் நூலும் மக்கள் பக்கத்தின் சாட்சியமாக இருக்கும் அருகதையையும் பெறவே இல்லை!மக்களது வலியைப் பேசுவதாகச் சொல்லப்படும் உரையாடல்கள்,கதைகளெல்லாம் தமது எஜமான விருப்புக்கிசைவாகவே மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்துகொண்டிருக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி
15.05.11

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...