Sunday, May 01, 2011

1 May 2011:சிந்தி-ரோமா மக்களுக்காக...

சிந்தி-ரோமா மக்களுக்காக...

யிரம் பேர்கள் ஊர்வலத்திலும்,இறுதி நிகழ்வில் 5000 பேர்கள் வரை திரண்ட இந்த(01.05.2011) மேதின ஊர்வல நிகழ்வில் வழமைபோலவே நான் எம்.எல்.பி.டி.( MLPD )கட்சி ஒலிவாங்கியில் உரையாற்றினேன்.இவ்வாண்டினது கோசங்கள்,பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக் குறித்தானதாக இருந்தபோது,பொருளாதாரப் பேராசிரியர் றுடேல்ப் கிக்கல் ( Rudolf Hickel von der Universität Bremen_பிறீமன் பல்கலைக் கழகம் ) மிகச் சிறந்த உரையொன்றைச் செய்தார் (அவருக்கு கரங்கொடுத்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு 50 யூரோ பணத்தை அவரது கையுக்குள் திணித்தனர்,அவரோ வேண்டாமெனும்போது, உங்கள் பிரயாணச் செலவுக்கென்றனர்).எப்பவும்போலவே இம்முறை இலங்கைப் பிரச்சனை குறித்து என்னால் எதுவுமே பேசமுடியவில்லை!


எனது மனத்திரையெங்கும், உலகெங்கும் நசிபடும்-பாதிக்கப்படும் அந்த மக்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டுமென அவா ஏற்ப்பட்டது!

எந்தத் தலைமையுமின்றி-கேட்பாருக்கு நாதியின்றித்தவிக்கும் ஒரு மகட்டொகுதி குறித்துக் கவனயீர்ப்பு செய்யவேண்டுமென்றே கடந்தசில நாட்களாக உறுதிபூண்டேன்!எங்கள் மக்களுக்காவது ஒரு டக்ளஸ்-சோ அல்லது சம்பந்தனோ,நாடுகடந்த தமிழீழ அரசோ இருக்கும்போது, இந்த மக்களை பிரான்ஸ் சாவதிகாரி சார்கோசி படாதபாடு படுத்தினான்-நாடுகடத்தினான்.போதாக் குறைக்குக் கங்கேரி தேசத்து நவ நாசிய அரசோ அவர்களை வீடுவீடாகச் சென்று நரவேட்டையாடியபோதும் கங்கேரியை ஐரோப்பிய கூட்டமைப்புக்குள் வைத்திருக்கும் ஐரோப்பியப் பாராளுமன்றமோ வாயே திறப்பதில் பின் நிற்கும்போது,அவ்வப்போது ஸ்பீகல் ஒன் லையின் சஞ்சிகை கட்டுரை போட்டதைத் தவிர வேறெதும் நடக்கவில்லை!

இரண்டாம் உலகயுத்தத்துக்கு முதலே நர வேட்டையாடப்பட்ட சிந்தி-ரோமா மக்கள் அவர்கள்!அன்று,ஜேர்மன் கைசர்,துருக்கிய ஒஸ்மானியப் பேரரசு முதல் கிட்லர்வரை அவர்களை வேட்டையாடியபோது,இப்போது, பிரான்ஸ்,கங்கேரி அரசுகளென அவர்களை நரவேட்டையாடும்இந்த இனத்துவச் சுத்திகரிப்புக் குறித்து எவருக்குப் புரியும் அவர்களது வலி?

[மேதின ஊர்வலத்துள்...]

சிந்தி-ரோமா மக்கள் இந்தியாவின் தலையில் உதித்தவர்கள்.நாமோ பாதத்தில்.இருந்தும் எமது மக்களெனக்கொண்டு நாலுவார்த்தை சொல்ல எவருமே இன்றிக்கிடந்த இந்த மேதினத்தில் நான் கவனயீர்ப்பாகக் கருத்துக்களை வைத்தேன்!

லிபியாவில் இருபது மக்கள் கொல்லப்பட்டபோது, அந்த அரசையே கலைப்பதற்கும்,ஆட்சி மாற்றஞ் செய்யவும்,ஐ.நா.1973 சாசனமிட்டுப் படையனுப்பிக் குண்டெறிந்து, "மனிதாபிமான"ப் போர் செய்வதும்,கங்கேரியில்-பிரான்சில் பலாத்தகாரப்படுத்தப்பட்டுக் கொன்றும், தேசம்விட்டு நாடு கடத்தியும் நாளும் அவலப்படும் இந்த மக்கட் கூட்டத்தை எவருமே கவனங்கொள்ளவில்லையென்றும்,ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட நவ பாசிச அரசான கங்கேரியின் ஆட்சி அதிகாரத்தைப் பார்வையாளராகக் கண்டிக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்பின் அயோக்கியத் தனத்தை அம்பலப்படுத்தியும், நான் கவனயீர்ப்பு உரையைச் செய்தேன்.வீதியெங்கும் எனது உரைக்குப் பின்பாகப் பலர் அந்த மக்களுக்காவும் குரல் கொடுத்தபோது எனது நோக்கத்தின் நிலை வெற்றியடைந்தது.

ஊர்வலமாகச் சென்ற எனது தேசத்தவர்கள் வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.மூன்று புலிக்கொடியும்,முப்பது பேர்களுமாகச் சுருங்கிய எனது தேசத்தவர்களது ஊர்வலம் இறுதியில்,புரியாணி,அப்பம் சுட்டு விற்கும் கடையில் மையங்கொண்டது.

ஈ.ஜீ மெற்றால் [IG Metall]தொழிற் சங்கத் தலைவரது (Klaus Reuter
Vorsitzender DGB-Region)வாயிலிருந்து வழமைபோலவே "தமிழர்களுக்கு நன்றி" என்ற வார்த்தை மட்டும் வந்தது.இந்த நன்றி எதற்கானதென நான் அறியேன்.

சிந்தி-ரோமா மக்களது நிலைக்கொப்பவே நாம் சென்றாலும் நம்மை வழி நடாத்துபவர்கள் வர்த்தகஞ் செய்வதிலேயே கவனப்பட்டுக் கிடப்பதை நான் பலமுறை கண்ணாற் பார்க்கிறேன்.இந்த மேதினத்திலும் இதுவே கதை!

[Sahra Wagenknecht]

இந்த ஊர்வலத்திலும்,இறுதித் தட்டி-தள[Die Linke-Stand] விளம்பரத்திலும் நான் மிக முக்கிய இடதுசாரித் தோழர் சாரா வாகன்கினெக்ற்றைச் [ Sahra Wagenknecht ]சந்தித்தேன்.அம்மணியைப் பார்த்துக் கண்கலங்கியும்,"நீ ரோசா லுக்சம்பேர்க்காக மாறவேண்டும்,ஏனெனில், நாம்(உலகத் தொழிலாள வர்க்கம்)தாயை இழந்த குழந்தைகளாக இருக்கிறோம்,எமது போராட்டத்தை ஒரு ஒழுங்கமைந்த கட்சி வழி நடாத்தத் தவறிவிடுகிறது சாரா,நீ,ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அதிர்வுகளைச் செய்வதில் வல்லவள்.உனது காலத்தில் நீ,எனக்கு ரோசா லுக்சம்பேர்க்" என்றேன்.தன்னை நிதானப்படுத்திய சாராவோ, "தோழனே,நான் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.என்மீது வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றி" என்றாள்!இன்றைய ஜேர்மனியில் சாரா வாகன்கினேக்ற் மிக நிதானமான அறிவாளி.அவர் தி.லிங்க [ Die Linke]கட்சியின் உப தலைவர்.ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர்.தலைசிறந்த பொருளாதார நூல்களை எழுதியவள்,மிகச் சிறந்த மார்க்சியரைச் சந்தித்துக் கரங் குலக்கும்போது எமது அரசியல் நிலவரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.

இப்படியாக,இன்றைய மேதின ஊர்வலம் சில நோக்கத்தை மீள வலுப்படுத்தியது.இது,எனது செயற்பாட்டின் இன்னொரு முனை வெற்றியாகவே நான் பார்ப்பதில்,ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சிக்கே[ MLPD] அனைத்து மாண்பும் சேரும்.அவர்களே,வருடா வருடம் தெருமுனை உரையாடலுக்கு எனக்கு ஒலிவாங்கி தருவதும்,என்னை ஜேர்மனிய மக்கட் குழாத்தோடு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அனுமதிப்பவர்கள். சர்வதேசியத்தை உயர்த்திப்பிடிப்பதில் அந்தத் தோழர்களது மனவுறுதிக்கு முன் நான் கூனிக் குறுகுகிறேன்! ஏனெனில்,நாம் தமிழர்கள்,எந்த மக்களுக்காவும் இதுவரை குரல் கொடுக்கவும் இல்லை! எவருடனும் தோழமையையும் கொண்டு உரையாடுவதும் இல்லை! இதுவே,இன்றைய டுசில்டோர்ப் [Düsseldorf ] மேதின ஊர்வலத்திலும் தொடர்கதையானது.

என்னே நம் போராட்டப் பாசறை அனுபவம்!புலிகளுக்குக் காவடி எடுத்தவர்கள் இறுதியில் மூன்றே மூன்று புலிக்கொடியுடன் சங்கமமானார்கள். முன்னூறிலிருந்து முப்பதாகவதைக்கூடக் காணத் தவறும் நம்மவர்கள்,அப்பம் சுட்டு விற்பதில் தமிழீழத்தைக் கண்டடைந்தனர் இன்று.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
01.05.2011

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...