Friday, April 29, 2011

ஐ.நா. அறிக்கையைவிட...

ஐ.நா. அறிக்கையைவிட
இக் கேள்களுக்கு விடையே முக்கியமானது.



முள்ளி வாய்க்காலது பாடத்துக்கு முன்பிருந்தே (இதுவரையான) நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன?


சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??


இனவொடுக்கு முறைக்கு எதிரான கோரிக்கைகள்(...)கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது???


இவை கேள்கள் மட்டுமல்ல.வரலாற்று முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கான தேடுதலுமாகிறது! ஐ.நா.அறிக்கைக்குப் பின்பான தமிழ்ச் சிந்தனை முறையானது மீளத் திட்டித்தீர்ப்பதிலும்,ஒருவரையொருவர் தாக்குவதிலும் காலத்தைக் கடத்திட முடியாது.புலிகளது இயக்கவாதக் கருத்தியலை மீளத் தகவமைக்கும் "புரட்சி"க்காரர்களிடையே நிலவுகின்ற இனஞ்சார் குறுகிய அரசியற் பார்வைகளை இனிமேலும் விருத்தியாக்கி மக்களைக் குறித்து அரசியல் செய்வது இயலாது காரியமெனும் ஆரம்பப் புரிதல்கூட விசும்பு நிலையிலேகூட புலம் பெயர் தளத்தில உருவாக முடியாது கருகிவிடுகிறது-இஃது,ஆபத்தானது!


நமது "தேசிய"விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும், இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இன்றும் இருந்தே வருகிறது.இஃது, நம்மை அந்நிய சக்திகளின் வலையில் வீழ்த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தியும், நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டியும், நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டிருந்தது.இந்தச் சூழலுக்கு அடிநாதமான போராட்டத் தளத்தையும் கருத்தியற்றளத்தையும் போட்டுக் கொடுத்தவர்கள் எந்தெந்து இரூபத்தில் இப்போதும் நமது மக்களுக்குள் இருக்கின்றார்கள்-இறந்தார்கள் என்பதைத் துல்லியமாகப் புரிந்தாலேயொழிய மறுவாழ்வு, தமிழ் மக்களது உரிமைசார் கோரிக்கைகளுக்கு இனிமெற்கொண்டிருக்க முடியாது.


இன்றைய புலம்பெயர் தமிழ் குழுமத்திடம் நிலவும் பாரிய பலவீனமானது இவர்களது பார்வையின் மையப் புரிதலைக்கொண்டே அளவிடக்கூடியதாகவும் இருக்கிறது. ஐ.நா. அறிக்கையிலிருந்து மீளத் தொடரும் "பட்டாசு கொளுத்தும் மனோபாவம்" ஆசிய மூலதனத்துக்கு இசைவாக நகரும் இலங்கையினது அரசியலைப் புரிவதிலும்,காலந் தாழ்த்திய வியூகச் சிக்கலைக்கொணருகிறது.


நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்கவாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான இந்தத் தமிழ் உளவியலை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாதிருக்கிறது!புலிகள் குறித்த சரியான புரிதலும்,அவர்களது போராட்டத்தின் திசைவழியில் தமிழ் மக்கள் இன்று படும் வரலாறறியா வேதனைக்கும் சரியான ஆய்வுகள் எதையும் எவரும் இதுவரை முன்வைக்கவில்லை!


முன் வைக்கத் தக்க தகமையோடு முன்னெழும் எழுத்துக்களும் இலங்கை அரசினது எல்லைக்குட்பட்ட வியூகங்களுக்கிசைவாகச் சரிகின்றன.அது,நாடுகடந்த அரசினது பொறிமுறைமைகளானலுஞ்சரி அல்லது மிதவாதத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினது "கோரிக்கைகள்"ஆனாலுஞ்சரி, இவைகளுக்கான பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்தடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்த சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப் பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு ஐ.நா. அறிக்கைமீது நம்பிக்கிடக்கும் கனவோ மேற்குலக அரசுகளது பித்தலாட்டத்துக்கு நேரடியாக மொழியாக்கஞ்செய்யும்"தமிழ் மக்களுக்கு நியாயம்" கேட்பது,என்பதை எப்படித்தாம் புரிய வைப்பது?


ஈராக்,அவ்கான்,லிபியா கண்முன்ன தொடரும் மேற்குலகப் பயங்கரவாத யுத்தங்கள் கொட்டிச் சிந்தும் குருதியும்,உடலங்களும் நமக்கு "நியாயம்"கேட்கும் நிலைமைகளுக்கு ஏதுவாக இருக்கின்றதா?


தமிழ் மக்களது உரிமைகள்-நியாயங்கள் ஐ.நா.வுக்குள்ளோ அல்லது பாராளுமன்றங்களுக்குள்ளோ இல்லை என்பதை மேற்குத் தேசங்களால் உதைபடும் குர்தீஸ் மக்கள்-பாலஸ்த்தீன மக்களது பாடத்திலிருந்து பெற முடியாதோ? பலம்பெற்று,நிலைபெறும்எதிர்ப்புப் போராட்டங்களது திசைவழியில் அந்த மக்களோடும்-போராட்டங்களோடும் தோழமை பேணிச் சென்று "நியாயம்"கோரவேண்டிய நாமோ, நடுத்தெருவில் ஐ.நா. அறிக்கை வாசித்து வருவதில் திருப்பதி அடைகிறோம்.


குறைந்த பட்சமாவது நாம் மேற்கேட்ட மூன்று கேள்விகளுக்கும் பதில் கண்டாக வேண்டும்.


அதாவது,


1: நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணிகள் என்ன?


2: சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??


3: இனவொடுக்கு முறைக்கு எதிரான கோரிக்கைகள்(...)கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது???


இந்தக் கேள்விகளுக்குச் சரியான முறைகளில் விடை தேடாதவரை நாம் இழந்த இரண்டு இலட்சம் மக்களதும் உயிருக்கும் எந்த மரியாதையுஞ் செய்யத் தகமையற்றவர்கள்நாம்.அவர்களது அழிவுக்கு இலங்கை அரசே காரணமென்பதைக்கூடச் சொல்ல முடியாதளவுக்கு நமது நியாயங்கள் வலுவிழந்தே கிடக்க முடியும்.இந்தப் புள்ளிற்றாம் கீரன்களோ அல்லது எந்த வீரன்களோ இலங்கை அரசுக்கு புதிய ஜனநாயக வரைவிலக்கணஞ் சொல்ல முடிகிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.11

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...