மலைய மக்கள் முன்னணி அரசியல்வாதியும்,எம்.பி.யுமான மனோ கணோசன் சிங்கள அடிப்படை வாதத்தின் காரண காரியத்தால்"தமிழ்பயங்கர வாதம்" எழுந்ததாதகச் சொல்லியிருக்கிறார்."இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பெளத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும் ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவில்லையே."-நிதர்சனம்-கொம்.ஆக,தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயத்திக்கான போராட்டம்,இலங்கையில் அவர்கள் தமது பாரம்பரியப் பூமியல் சுதந்திரமாக வாழ்வதும்,தமது வாழ்வாதாரங்களைத் தம் உழைப்பால் கட்டியொழுப்புவதற்குமான சுய நிர்ணயம்,சுதந்திரம்"தமிழ்ப் பயங்கர வாதம்"எனும் திட்டமிட்ட சிங்கள அரசின் தமிழ் மக்கள்மீதான கருத்தியல் ஒடுக்குமுறையின் தொடர்ச்சி இங்கே விரிகிறது.நமது மக்களின் தார்மீகப் போராட்டம்,அவர்களது இன்னுயிர்களை ஈகை செய்தும்,கொலைகளாகவும் கொடுக்கப்பட்டு,இன்றுவரை தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து, எவரெவர் நலன்களுக்காகவோ சிதைவுற்றுப் போனதன் தொடர்ச்சியாகவின்று இந்தக் கேவலமான நிலைக்குள் வந்து தொலைகிறது.
தமிழர்களின் அடிப்படையுரிமையை இவ்வுளவு தூரம் சிதைப்பதற்குப் புலிகளைவிட வேறெவரும் முனையவில்லையென்பதை மனோகணேசன் சொல்லும் அரசியலே சாட்சியாகிறது.நமது போராட்டத்தில் புலிகளை"இந்தியா,பாகிஸ்த்தான்,சீனா"பாவிப்பதெல்லாம் என்பது புலிகள் எவ்வளவு தூரம் அடி முட்டாள்கள் என்பதையும்,அன்னிய அடிவருடிகள் என்பதையும் மனோகணேசன் நிரூபிக்கின்றார்.அதையும் நிதர்சனம்.கொம் என்ற இணையத்தளம் தனது செய்தியில் முக்கியம் கொடுத்துப் மீள் பிரசுரம் செய்வதென்றால் இவர்கள் யார்? இந்த இலட்சணத்தில் மாற்றுக் கருத்தாளர்களை இவர்கள்"துரோகிகளாம்"-கைக்கூலிகளாம் என்று பரப்புரை வேற செய்து தமது அன்னிய அடிவருடித்தனத்தை மறைக்க முனைகிறார்கள்?
இன்றுவரை தமிழர்களுக்காகப் புலிகள் செய்யும் போராட்டத்தை-கொலைகளை ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள்"தேசிய விடுதலை,சுயநிர்ணய"ப் போராட்டம் என்று தொடர் கூட்டங்கள்,ஊர்வலங்கள் வைத்து உலகத்துக்குச் சொல்லும்போது, ஒரே நொடியில் மனே கணேசன் சிங்கள அரச பாணியில் பயங்கரவாதம் என்று சொல்வதை நிதர்சனம்.கொம் உலகம் பூராகப் பரப்புகிறதென்றால் இந்தவூடகம் எவரது நலன்களைப் பிரதிபலிக்கிறது?
அடிமுட்டாள்களால் நடாத்தப்படும் பத்திரிகைகள் புலிகளின் பெயரைச் சொல்லி நமது விடுதலையைப் பயங்கரவாதமாக்கிவிட்டார்கள்.புலிகளின் தொடர் கொலைகளும்,ஜனநாயக மறுப்பும்,அராஜகமான போராட்டச் செல் நெறியும் நமது விடுதலையைச் சாகடித்து அன்னியர் நலனுக்கு எப்படி உடந்தையாக இருப்பதென்பதை நாம் கூறும்போதெல்லாம் நிராகரித்தவர்கள்,இப்போது புலிகளின் விசுவாசிகள்-ஆதரவாளாகளாலேயே "அது"உண்மைதான் எனும்போது என்ன சொல்கிறார்கள்?
இன்றுவரையும் எமது மக்களின் தார்மீகப் போராட்டத்தை மரணப்படுக்கைவரை அழைத்துச் சென்ற புலிகளை, எந்தெந்த வெளியுலகச் சக்திகள் தத்தமது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள்,எவர் இதற்குப் பாத்திரமானவர்,எவர் புலிகளைப் பயன் படுத்த வேண்டுமென்று மனோகணேசன் இடும் பட்டியலே நாம் சொல்வதை உதாரணப்படுத்தப் போதுமானது.எனவே,எமது மக்களின் சுயநிர்ணயத்துக்கு,சுதந்திரத்துகான போராட்டம் எவருக்கும்,எந்த நாட்டிற்கும் சேவை செய்வதற்கான போராட்டமில்லையென்பதும்,அப்போராட்டம் இதுவரை செய்த தவறுகளையெல்லம் பரிசீலித்து, மக்கள் புலிகளின் அடிவருடிகளை,அடி முட்டாள்களை,கையாலாகாத தலைமையை நிராகரித்துத் தேசத்துக்காப்போராடும் புலிகளின் அடிமட்டப் போராளிகளை புரட்சிகரப் போராட்டப் பாதைகுள் நகர்த்தியாகவேண்டும்.இத் தேவை மிக அவசியமானதாகவே இருக்கிறது.இதை நிராகரித்துவிட்டு,புலித் தலைமையும்,அவர்களின் உலக-உள்ளுர் எஜமானர்களும் சொல்லும்,செய்விக்கும் போராட்டத்துக்காக நமது சிறார்கள் உயிர் விடுவது மிகப் பெரும் "துரோகம்"ஆகும்.இதைத் தடுத்து நிறுத்துவதற்காக நாம் உயிர்கூட இழப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும்.ஏனெனில், நமது மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தைச் சொல்லியே தமது பிழைப்பையும் பண வருவாயையும் மிக வலுவாகச் செழிப்பாக்கி உறுதிப்படுத்திய தமிழ் ஆளும் வர்க்கம், இப்போது நமது போராட்டத்தைச் சிங்களப் பாசிச அரசோடிணைந்து"தமிழ்ப் பயங்கரவாதம்"என்று கொச்சைப்படுத்தி,நமது நியாயத்தன்மையையே கருத்தியல் தளத்தில் உடைத்தெறிந்து, தேசியவிடுதலைப் போராட்டத்தின் தார்மீகத் தேவையையே நிராகரிக்கிறார்கள்.
இந்த அபாயமான சூழலை அனைவருக்கும் போராடுவதாகச் சொல்லும் புலிப் போராட்ட இயக்கமே மெல்ல உருவாக்கிவிட்டுள்ளது.இதைக் கூர்ந்து கவனித்தால் புலிகளின் மக்கள் விரோதத்தன்மையை உணரமுடியும்.புலியின் தலைமைக்கும்,ஆனந்தசங்கரி,டக்ளஸ் தேவானந்தா,மற்றும் உதிரிக் குழுக்களுக்கும் எந்த வகையிலும் வித்தியாசம் கிடையவே கிடையாது!சாரம்சத்தில் இவர்கள் அனைவருமே தமிழ் பேசும் மக்களின் எதிரிகள்தான்.இவர்கள் அன்னிய கைக்கூலிகள்-அன்னிய அரசுகளால் வளர்த்துவிடப்பட்ட மக்கள் விரோதிகள்.நமது மக்களின் உயிர்கள் நாளாந்தம் பறிக்கப்படுகிறது.இதுவரை இலட்சம் பிஞ்சுகளின் இன்னுயிர்கள் பறிக்கப்பட்டு,தமிழர்களின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டும் அன்னியர்களுக்காகவொரு போராட்டம் தேவையா?
எம் மக்களின் இருப்பை அழித்து,உரிமையை அழித்து,அன்னியனின் காலடியில் எம் மக்களை மண்டியிட வைப்பதற்கு நாம் மூடர்களில்லை.எமது அனைத்து வளங்களையும் இதற்காகச் செலவிட்டு இதைத் தடுப்போம்.எம் இனத்தின் பாரம்பரியப் புவிப்பரப்பை எவரும் தத்தமது நலன்களுக்காகச் சுருட்ட முடியாது.இது உழைத்துண்ணட எமது மூதாதையரின் வாழ்வோடும்,வரலாற்றோடும் பிணைந்து உரிமையாககிறது.இந்தவுரிமைக்காகச் செய்யும் இந்தப் போராட்டத்தை எவன் கூறுவான்"தமிழ்ப் பயங்கர வாதம்"என்று?
புலிகளின் தறுதலைத்தனமான அரசியில்-போராட்டச் செல் நெறிக்கொள்கையும்,அவர்களது அன்னிய நலனும்,அடியாள் பாத்திரமும் எங்கள் உரிமையை-உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கிவிட்டுள்ளது.இதைத் தடுப்பதற்குக் குரல் கொடுக்கும் எம்மைத் தம்மைப் போலவே நாம் அன்னியக் கைக்கூலிகள் என்றும்,அடிவருடிகள் என்றும் கதையளக்கும் இந்தப் புலிகளும்,அவர்களது விசுவாசிகளுமே தமிழ் பேசும் மக்களின் முழு மொத்த எதிரிகள் என்பதற்கு இந்த நிதர்சனத்தின் அரசியலே சாட்சி.இவ்வளவு மடையர்களாக இருக்கும் இவர்களே,தம்மைப் போலவே தமிழ் பேசும் மக்களும் இருந்தாக வேண்டுமென்பதற்காக நம் கல்வியாளர்கள் பலரை அழித்துவிட்டார்கள்.இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய இடதுசாரிய அறிவாளிகளையும் கொல்வதற்காக அவர்களையும் அன்னியக் கைக்கூலியென முத்திரைகுத்தி வருகிறார்கள்.கூடவே, நமது மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும் மெல்லப் பயங்கரவாதமாக்கி நம் மக்களின் வரலாற்றையே அழிக்க முனையும் தமிழ் ஆளும் வர்க்கத்தையும், அவர்களுக்குத் தலைமைதாங்க முனையும் அனைத்துக் கயவர்களை அம்பலப்படுத்தி நாம் நமது மக்களின் விலங்கை ஒடிப்போம்.அதற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுக்கவும்,தலைமை தாங்கவும் நாம் எமக்குள் ஒருங்கிணையவேண்டிய காலவர்த்தமானம் எம்மைச் சூழ்ந்துகிடக்கிறது.நாம் மெளனிக்கும் ஒவ்வொரு நிமிடமும்,நம்மை அன்னிய சக்திகளிடம் அடைவு வைப்பதற்குப் புலிகளும்,ஆனந்த சங்கரிகளும்,டக்ளஸ் தேவானந்தாக்களும்,இன்னும் எத்தனையோ குறுங்குழுக்களுமாக இன்று முனையும்போது,இடதுசாரிய உதிரிக் குழுக்களாகக் கிடக்கும் முற்பேர்காளர்களே உங்கள் உயிரைக் கொடுத்தாவது தமிழ்பேசும் மக்களுக்குத் தலைமை கொடுங்கள்.எம்மைத் தவிர இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு எவரும் விமோசனம் செய்யப் போவதில்லை.நாமே, நமது தேசபக்தப் போராளிகளுக்கு முற்போக்குப் போராட்டப்பாதையைக் காண்பித்து நமது மக்களை முழுமையாகப் போராட்டத்தோடு இணைத்து, அவர்களால்மட்டுமே அவர்களது விலங்கை ஒடிக்க முடியுமென்பதாக வரலாற்றை மாற்றியெழுத வேண்டும்.
இதற்காக உலகம் பூராகவும் இருக்கும் முற்போக்குச் சக்திகளோடு கரங்களை இன்னும் வலுவாக இணைப்போம்,புலித் தலைமையையும்,அவர்களது அரசியலையும்.வெளிநாட்டு உறவுகளையும்,நிதர்சனம்.கொம் போன்ற மக்கள் விரோதப் புலி முகவர்களையும் அம்பலப்படுத்தி,மக்கள் அரங்குக்கு இந்த விரோதிகளை இழுத்துவந்து அம்பலப்படுத்வோம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
21.10.2007
நிதர்சனம்.கொம் கட்டுரையைக் கீழே படிக்கலாம்:
சிங்கள அடிப்படைவாதமே தமிழ் பயங்கரவாதத்தை உருவாக்கியதாக மனோ கணேசன் எம்.பி. தெரிவிப்பு!
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 ஒக்ரேபர்
2007 ஸ ஜ நசார் ஸ
இலங்கைக்கு ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வருகின்ற ஊடக செய்திகள் எம்மை வேதனைக்கும், வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன. எமது மூதாதையரின் தாயகமான இந்தியா எப்போது தான் இலங்கை பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது என மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவது தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளையிட்டு மனோ எம்.பி.ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதைத் தடுப்பதற்காகவே இந்தியா இலங்கைக்கு இராணுவ தளபாட உதவி வழங்குவதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நுழைவதை தடுப்பதும், இலங்கையில் தமிழ் தேசியத்தை ஒழிப்பதும் இந்தியாவின் நலன் சார்ந்தது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், இது மீண்டும் இந்தியாவுக்கே பாதகமாக முடியும். இலங்கையில் தமிழ் தேசியம் வளர்ச்சி பெறுவது இந்தியாவுக்குப் பிடிக்காதது என்பதை விரைவில் பாகிஸ்தான் புரிந்து கொள்ளும். அதன் மூலம் பாகிஸ்தானிய உளவுப்பிரிவு விடுதலைப் புலிகளுக்கு இரகசிய உதவிகளை வழங்கும் எதிர்மறை நிலை ஏற்படலாம் என்பதை இந்தியத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியத் தலைவர்கள் வரலாற்றை மீட்டி பார்க்க வேண்டும். இந்தியாவின் சீனா, பாகிஸ்தானிய எல்லை 1960 களில் நெருக்கடியாக இருந்தது. அதனாலேயே தென்புல எல்லை நாடான இலங்கையை நட்பு நாடாக வைத்துக் கொள்வதற்காக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களில் பெருந்தொகையினரை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா இணங்கியது. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் அப்பாவி தொழிலாளர்களின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்காமல் செய்யப்பட்டது. உண்மையில் அவ்வேளையில் இந்தியா இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் மீளப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஒருவரையும் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது.
இதனால் அன்று பல குடும்பங்கள் சிதைந்தன. இதன் மூலம் எமது மக்கள் தொகை குறைந்து விட்டதனால் எமது அரசியல் பலமும் குறைந்து விட்டது. அத்துடன் தற்போது சிங்கள அடிப்படை வாதத்திற்கும் தமிழ் தீவிர வாதத்திற்கும் இடையில் தென்னிலங்கை இந்திய வம்சாவளி மக்கள் சிக்கியுள்ளனர். மறுபக்கத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட எமது மக்கள் அங்கே பரிதாப வாழ்க்கை வாழுகின்றனர். ஆனால், இத்தனைக்கு பிறகும் இலங்கையை உண்மையான நட்பு நாடாக இந்தியாவால் உருவாக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அதேபோல் தமிழ் போராளிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சியளித்தது. 1980 களில் அன்றைய ஜே.ஆரின் அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கை தனக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இவைகளை இந்தியா செய்தது. பிறகு என்ன நடந்தது? இந்தியா ராஜீவ் காந்தியையும் சுமார் 1,500 இந்திய வீரர்களையும் இழந்தது. அதேபோல் இந்திய படையினரால் சுமார் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
இவை கடந்த காலங்களிலே தவறான ஆலோசகர்களின் பேச்சுகளை கேட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட துன்பங்களாகும். தூரப்பார்வை இல்லாத முடிவுகள் ஒருபோதும் தீர்வுகளை தராது. இந்தியாவின் தவறான முடிவுகள் இந்தியா, இலங்கை, தமிழ் மக்கள் ஆகிய எந்தத் தரப்பினருக்கும் நன்மை தரவில்லை. வரலாறு முழுக்க தவறான முடிவுகள் பெரும் துன்பங்களையே தந்துள்ளன. இன்று நாங்கள் இதையிட்டு வெட்கமும் வேதனையும் அடைகின்றோம். இலங்கையில் இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்கு குறுக்கு வழிகள் இல்லை என்பதை இந்திய தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் மலர்வதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாகும். இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும் ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவில்லையே. இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா ஆயிரம் முறை சொல்லியிருக்கின்றது.
இன்னும் ஒரு ஆயிரம் முறை அதே இந்தியா சொல்லட்டும். அது எங்களின் நிலைப்பாடு ஆகும். ஆனால், ஐக்கியம் என்பது சமத்துவத்துடன் சேர்ந்து வரவேண்டும். இனிமேல் இந்தியா இலங்கையின் ஐக்கியத்தையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் சமாந்தரமாக கணித்துப் பார்த்து செயற்பட வேண்டிய வேளை வந்துவிட்டது என எண்ணுகிறேன். இந்தியாவின் மொழிவாரி மாநில கொள்கைகளை பற்றி இலங்கை அரசிற்கு இந்தியா உறுதியாக எடுத்துக்கூற வேண்டும். இதுவே இலங்கை பிரச்சினைக்கு தீர்வுதரும் மருந்தாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டியது உடனடி தேவையாகும். இந்தியாவிலிருந்து எவரோ ஒரு சிலர் எடுக்கும் தவறான முடிவுகள் காரணமாக எமது மக்கள் யுத்தம், கடத்தல், சட்டவிரோத படுகொலைகள் ஆகியவற்றால் தொடர்ந்தும் உயிர் இழப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் புதுடில்லிக்கு எதையும் எடுத்துக்கூறும் நிலைமையில் இல்லை. ஏனென்றால் தமிழகத்து அரசியல்வாதிகள் முழுமையான புலி ஆதரவு, முழுமையான புலி எதிர்ப்பு ஆகிய இரண்டு தீவிர நிலைப்பாடுகளில் இருக்கின்றார்கள். உண்மையில் பிரச்சினை என்பது இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் தான் இருக்கின்றது. இலங்கை தொடர்பிலான கொள்கையில் இந்தியா அடிப்படை மாற்றங்களை செய்யவேண்டும். காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியை இது தொடர்பில் சந்தித்து உரையாட நான் விரும்புகின்றேன். இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment