Tuesday, October 09, 2007

பாரீஸ் தலித் மகாநாட்டை முன்வைத்துச் சில...

பாரீஸ் தலித் மகாநாட்டை முன்வைத்துச் சில...


"துப்பாக்கி நிழலில் உறங்கும் சாதியம்: ஈழத்துக்கானதாகவே
இருக்கிறது."

லங்கையில் சாதியக் கொடுமையானது எப்படி நிகழ்கிறதென்பதற்கான சில தரவுகளை இக்கட்டுரை பேசுகிறது.இக்கட்டுரை ஆசிரியர் தரும் தரவுகளுக்கு எந்தச் சுட்டியையும் நாம் முன் வைக்கப் போவதில்லை.ஏனெனில், வரலாற்று ரீதியாகச் சாதியம் ஏற்படுத்திய வடுக்களை நாம் சுமப்பதால் அது குறித்து எவரும் பொய்யுரைப்பதற்கல்ல.ஆனால், ஈழத் தமிழ் மக்கள் குறித்தான பற்பல இட்டுக்கட்டல்களுக்கூடாக ஒரு இனத்துக்குள் நிலவும் எந்த முரண்பாட்டையும் நாம் களைந்து விட முடியாது.தமிழ் பேசும் இலங்கை மக்களில் கணிசமானோர் சாதிரீதியப் பிளந்து கிடக்கிறர்hகள்.இவர்களின் வாழ்வாதாரமோ கூலிக்கு அடிமைத் தொழில் புரிவதால் பெறப்படுபவையாக இருக்கிறது.இத்தகைய மக்களின் சமூக வாழ்வானது அவர்களை எப்பவும் மேல் சாதிய வேளாள ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாதவொரு பொருளாதார மற்றும் கருத்தியல் பலாத்தகாரச் அரசியல் சூழலை அவர்கள் முன் இட்டுள்ளதால்,இன்றைய தேசியவிடுதலைப் போராட்டதை(அப்படிச் சொல்லப்படுவது)இத்தகைய சாதிய ஒடுக்குமுறைப் பாதிப்பதாலும் அதன் உள்ளார்ந்த நலன்களாலும் மறைப்பிட்டுத் துப்பாக்கி நிழலில் சாதியக் களைவு நிகழ்ந்திருப்பினும், அது அப்பட்டமான சாதிய ஒடுக்கு முறையின் இன்னொரு விளைவைத்(தாழ்த்தப்பட்ட மக்களின் அணித் திரள்வு) தந்து கொண்டிருக்கிறது.


இந்த வினையின் தொடர்ச்சியாகப் பாதிகப்பட்ட"தாழ்த்தப்பட்ட தமிழ் பேசும்மக்கள்" தங்களுக்குள் விவாதங்களைத் தொடர்ச்சியாகச் செய்வதும்,அதன் வாயிலாகச் சாதியக் கட்டமைவின் சமூக உளவியலைப் புரிந்து கொள்வதும் தத்துவார்த்தத் தளத்தில் மிக அவசியமாக இருக்கிறது.இத்தகைய புரிதலின் தொடர் நிகழ்வில் சாதியத்தால் பிரித்தொதுக்கப்பட்ட மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்கான அரசியல் பலத்தை-சமூகக் காப்புறுதியைத் தக்கவைப்பதற்கும் அதன் வாயிலாகத் தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் பண்பாட்டு மாற்றைக் கோரி வர்க்கவுணர்வைப் பெறுவதும் ஒருகிணைந்த புரட்சிக்கு அவசியமான முன் நிபந்தனையில் ஒன்றாகவே இருக்கிறது.இங்கே புரட்சியென்பதன் வரைவிலக்கணம் படும்பாடு வேறுவகையானது.எனினும்,புரட்சி சர்வ நியாயமானது-நிட்சியமானது,விஞ்ஞானப+ர்வமானது.எனினும்,அதற்கான தோல்வி அதை மட்டுப்படுத்தலாமேயொழிய தடுத்துவிட முடியாது.இது, சமூக யதார்த்தம்-இயங்கியல் விதியுங்கூட!

இன்றைய"தமிழ்த் தேசியவாதமும்"சாதியமும்:

இது இப்படியிருக்கும்போது,யாழ்ப்பாணிய மையவாதச் சித்தாந்தப் போக்குள் மையங்கொண்ட "தனித் தமிழீழம்"வலிந்து தாழ்த்தப்பட்ட மக்கள்மீது ஒரு வகைமாதிரியான "தேசிய அடையாளத்தைச்"செய்வதும்,அதையே தேசத்துக்கு அவசியமானதுமான மிக முக்கிய அலகாகவும் தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களிடம் தொடர்ந்து திணிக்க முனைகிறது.அதைத் துப்பாக்கியின் துணையோடு ஈழத்தில் செய்து முடிக்கும் புலிகள்,இணைய-மற்றும் ஊடகங்களிலும் கருத்துகட்டும் "கயமை அரசியல்"தமிழ்பேசும் மக்களின்"தேசிய விடுதலை-சுயநிர்ணயம்"போன்ற அரசியல் ஆதிக்கத்தின் முன் நிபந்தனைகளால் தமிழர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் என்கிறது.சிங்களப் பெருந்தேசிய இன ஒடுக்குறையானது தமிழ்பேசும் மக்களைச் சாதிரீதியகப் பார்த்து ஒடுக்குவதில்லையென்றாலும்,தமிழைப் பேசுவதால் தமிழர்கள் எல்லோரும் ஒழுங்கமைந்தவொரு தேசிய இனவுருவாக்கத்துள் இதுவரை வரவுமில்லை.அதை உந்தித் தள்ளும் மிக உயர்ந்த உற்பத்திச் சக்திகள் மற்றும் அதனூடாக உறவுறும் உற்பத் உறவுகளும் நமக்குள்-இலங்கையில் கிடையாதவொரு சூழலில் மிக யதார்த்தமாக இருக்கும் சாதிய ஒடுக்குமுறையை- குறைவிருத்திச் சமூகங்களுக்கே இருக்கும் சகல ஏற்ற இறக்ககங்களும்"குழும வாழ்வு" கூட்டு,மற்றம் சாதியச் சமூக வாழ்நிலைகளை எந்தவொரு புரிதலுமின்றி மறுதலிக்க முனையும் கதையாடல்களை இணையப் பதிவுகளில் "தேசிய விடுதலைப் போரை"சொல்லி அதுள் கனவுகளை வளர்துள்ள இளைஞர்கள் செய்துவருகிறார்கள்.அனால்,இத்தகையவொரு இறுகிய சமூகப் புரிதலுக்கு எந்தப் புறநிலைக் காரணங்களும் தோதாக இருக்காத போதும், இவர்கள் தமது அகவிருப்பின் மாயைத் தோற்றத்தால் சாதியத்தின் கொடுமைகளுக்கெதிரான சின்னக் கருத்தாடலையோ அன்றி அதை மையப்படுத்திய சந்திப்புக்களையோ சகித்துக்கொள்ளாமல் அவற்றைச் சிங்கள அரசின் சதி,தமிழ் தேசியத்துக்கு எதிரானதென்ற அபாயகரமான அரசியலால் ஒடுக்கும் சூழ்நிலைகளையும் அதன் பக்க நிகழ்வாகப் புதிய மாதிரியானவொரு சாதிய ஒடுக்கு முறையையும் அப்பாவித் தாழ்தப்பட்ட மக்களிடம் அன்றாட அரசியல் வாழ்வாக நிறுவ முனைகிறார்கள்.

இது மிகவுமொரு கொடுமையான சமூக ஒடுக்குமுறை.இதை மேல்சாதிய வேளாள அரசியல் அனுமதிப்பதிலிருந்து தொடரும் தேசிய விடுதலைப் பரப்புரைகள் தம்மை முன்னிலைப்படுத்தும் மேல்சாதிய சமூக ஆதிக்கத்தை மிகவும் நரித்தனமாக நகர்த்தி வருகிறார்கள்.இது, மிகவும் இக்கட்டான சிக்கலாகவே மூன்றாமுலகச் சமுதாயங்களுக்குள் நிலவி வருகிறது.இத்தகைய சமுதாயங்கள் தமக்குள்ளேயேவொரு "உள்ளகக் காலனித்துவத்தை"கட்டி வைத்திருக்கும் பண்பாட்டைக் கேள்விக்குட்படுத்தாமல்-தம்மால் அனுஷ்ட்டிக்கப்படும் மத அனுஷ்டானங்களை மறுத்தொதுக்காமல் நிலவி வரும் ஆதிக்க-அடக்குமுறைக் கருத்தியலுக்கு "தேசிய விடுதலை"ச் சாயம் ப+சி மெழுகுவதைத் தொடர்கிறார்கள்.இத்தகைய அறிவு நாணயமற்ற இத்தொடர் நிகழ்வுகளால்-திட்டமிட்ட சதி மற்றும் இயலாமைகளால் ஏலவே வர்க்கங்களாகப் பிளவுபட்டக்கிடக்கும் இலங்கை அரை அரச முதலாளிய-தரகு முதலாளியப் பொருளாதார ஆதிகத்தால் அல்லது பலவந்தத்தால் ஒடுக்கப்படும் தாழ்தப்பட்ட மக்களின் வாழ்வைப் பறித்தெடுத்து தேசிய விடுதலைப்போரெனப் புலிகள் செய்யும் ஏதோவொரு வகைப் "விடுதலைப்போருக்கு"அவர்களைப் பலியிட முனைவதை இன்று வரை அனுமதிக்கும் கருத்தியலே வெற்றி பெறுகிறது.இது மிகவும் கபடத்தனமானது.சமூகமட்டத்தில் தீர்மானகரமான பொருளாதார நிகழ்வுப் போக்குகள் இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்பில் இன்னுஞ் சிக்கலான கட்டத்தைத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பகடைக் காயாக வைத்துத் தமிழ் தேசியத்தின் கையாலாகாத போராட்டத்தை; துடைத்தெறிவதில் இப்போது மிகவும் நரித்தனமாக முயற்சிகளை முடக்கி விட்டுள்ளது.இந்த முயற்சியின் அல்லது அரசியல் சதங்ரங்க விiயாட்டுக்குப் பறிகொடுக்கும் நிலையாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூவாழ்வு உள்ளது.இதை அம்பலப்படுத்தி அந்த மக்களின் உண்மையான பிரச்சளைகளை எதன் பொருட்டும் காயடிக்காத-கயமை அற்ற அரசியல் பண்பாட்டு முன்னெடுப்புகளால் தீர்க்கப்பட வேண்டிய மிகப் பெரும் பளு நம்மத்தியிலுள்ளது.இது எந்தவிதக் குழறுபடியுமற்ற-அரசியல் மற்றும் வர்க்க நலன்களையுங் கடந்து அவர்களின் அன்றாட வாழ்நிலையிலிருந்து அணுகப்பட வேண்டும்.

ஆனால்,இன்று வரை நடக்கும் படுபிற்போக்கான இயக்கவாத மற்றும் ஓட்டுக்கட்சி மனப்பாண்மையானது "தமிழர்கள் அனைவரும் ஒன்றே"என்பதாகத் தாம் விரித்து வைத்திருக்கும் வலையுள் இந்த மக்களைத் தமிழால் வீழ்த்துவது மிகப் பெரும் கொடுமை.இதைப் புரிந்தகொண்ட தாழ்தப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்குள் உள்ள புத்திஜீவிகள் தம்மால் இனம் காணப்பட்ட இக் கொடுமைகளுக்கெதிரான அரசியல் விழிப்புணர்வுக் கருத்தாடலையும் தமது சமூக விடுதலையையுங் குறித்த நிகழ்வுகளை செய்யும்போது,இதைத் தமது அரசியல் இலாபங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் எதிரிகள் தமக்குள் உள்வாங்கிச் சிதைக்க முனைகிறார்கள்.இவர்களே ஆயிரம் தடவைகள், தாழ்தப்பட்ட மக்கள் தமக்குள் இணையும் முகமாக அடையாளப்படுத்தப்படும் பொது சமூக உளவியற் கருத்தாகத்தை இந்தியாவிடமிருந்த உள்வாங்கி இணையும்போது-சந்திப்புக்களை அதன் வடிவத்தினூடாக முன் தள்ளும்போது சகிக்க முடியாது "துரோகம்"தமிழ்தேசியத்துக்கு ஆபத்து என்ற ஓலத்தில் மூழ்கித் தமது பக்க நியாயங்களை எந்தவித்தச் சமூக விஞ்ஞான அடிப்படைகளையுங் கருத்திலெடுக்காமல் கக்கி வைப்பதற்குப் பெயர் விவாதமாக இருக்காது.இதைத்"தடீர்(நிதி வலு-யாருடையது?...) கட்சிகட்டிய"(கால் நூற்றாண்டாய் நாம் கருத்தாடியும் இன்னுமொரு புரட்சிகரக் கட்சி கட்டும் சூழல் இல்லை.அவ்வளவுக்கு அது பெரிய விசயமென்பதைச் சொல்கிறேன்) புரட்சிகர(...) பெரியார் கழக நிறுவனர் திரு.சபேசன் முதல் புரிந்தாலே நமக்கு நிம்மதிதான்.


இந்தவகை எதிர்ச் செயற்பாடுகளுக்கு(இந்திய-இலங்கை அரச-ஆதிக்க நலன்கள் மற்றும் தேசிய விடுதலைச் செல் நெறிக்கு...) இலக்காகியுள்ள தொடரப்போகும் பிரான்ஸ் தலித் மாநாடும் அதன் நோக்கமும் வெற்றியடைய வாய்புகள் இல்லை.ஏனெனில்,ஓட்டுமொத்தத் தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதாரங்களையும்,உரிமைகளையும் மட்டப்படுத்தித் தமது அரசியல் ஆதிகத்துக்குள் வைத்திருக்க முனையும் தென்னாசியப் பராந்தியப் ப+கோள நலன்கள் முழு மூச்சாகத் தமிழ் பேசும் மக்களுக்குள் இருக்கும் உயர் சாதிய வேளாள அறிவு ஜீவிகளைத் தமது அடியாளாக-ஏஜென்டுகளாகத் தொடரப்போகும் தலித் மாநாட்டுக்குள் அனுப்பி வைக்கிறது(இதனாற்றாம் இதைத் தலித் மநாடென்பதாகச் சொல்வதில் எனக்கு உடன்பாடலில்லை.இதன் காரணத்தை வார இறுதியில் முன் வைக்கும் சாதியம் தொடர்பான எனது கருத்தாடலில் தருவேன்).

இதை மிகவும் கவனத்தோடு அணுகாத பாரீஸ் தலித் மாநாடு நிச்சியம் தலித் மக்களின் விடுதலைக்கு எந்தவிதத்திலும் வீரியமோ அன்றித் தலித் மக்களின் சமூக முன்னேற்றத்தையோ செய்வதற்கான முன் நிபந்தனைகளைச் செய்வதற்கில்லை.எனவே, பாரீஸ் தலித் மாநாடெனும் இந்த முதற் பெரும் சந்திப்பே தோல்வியில் முடியும் ஒரு கசப்பான உண்மையை இவர்கள்(குறிப்பாக மாநாட்டுத் தலைவர் தேவதாசன் கவனத்தில் எடுக்கவும்) புரிந்து கொண்டாலே புலிகளின் பரப்புரையாளர்கள் குவித்து வைத்திரும் ஓராயிரம் சேறடிப்புக்களுக்குப் பதிலை மிக நேர்த்தியாகவும்,இலங்கை மண்ணில் சாதியம் எப்படி மக்களை அடக்கியொடுக்கி வருவதென்பதையும் உலகுக்கு அம்பலப்படுத்தலாம்.

அவ்வண்ணமே "தேசிய விடுதலை"எனும் பேரால் நசுக்கப்படும் தாழ்த்தப் பட்ட மக்களின் அடிபடை அரசியல்-சமூக வாழ்வில் சில முன்னேற்றகரமான நகர்வுகளைச் செய்யும் தகமை இந்த மாநாட்டுக்குள் இணையும் தலித்துவக் குரல்களுக்கு உண்டாகும்.இல்லையேல் கிடந்த நீரையும் வந்த வெள்ளம் அடித்துச் சென்றதாக முடியும் இந்த மநாட்டில்.இதுவே இன்றைய மிக அவசியமானவொரு உந்துதலை இலங்கை அரசியலுக்குள் செய்யும்.

இலங்கைச் சிங்கள-மற்றும் தமிழ்- புலிகள்,இந்திய நலன்கள் யாவும் தாழ்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையோடு நடாத்தும் கயமைமிகு அரசியற் சாணாக்கியத்தை ஓரளவு புரிவதற்கு நாம் முனைவது அவசியம்.அதன் தொடர்ச்சியாக வேறு சில கட்டுரையையும் இத்தோடு இணைக்கிறோம்.கீழ் வரும் கட்டுரையை தேசம் சஞ்சிகையில் நண்பர் பாலச்சந்திரன் எழுதியுள்ளார்.அக்கட்டுரையை அவசியம் கருதி இத்துடன் இணைக்கிறோம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.10.2007.


துப்பாக்கி நிழலில் உறங்கும் சாதியம்


இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலவும் சாதிப் பிரச்சனை தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுத திட்டமிட்டு, யாழ் உயர் சாதி தமிழர் ஒருவரிடம் கருத்துக் கேட்டேன். உடனே அவர் "சாதி குறித்து எழுதாதே. மீறி எழுதினால் நீ ஒரு தமிழ்த் தேசியத் துரோகியாவாய்" என்றார். இதைக் கேட்டதும் ஒரு கணம் திடுக்கிட்டேன். ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் நான் இதுவரை ஸ்டாலின் குறித்து எழுதினேன். மாஓ சேதுங் பற்றி எழுதினேன். புத்தர் பற்றி எழுதினேன். சிறப்புமுகாம் சித்திரவதைகள் குறித்து எழுதினேன். அப்போதெல்லாம் பாராட்டி தொடர்ந்து எழுதும்படி உற்சாகம் ஊட்டியவர் சாதியைப் பற்றி எழுதப்போகிறேன் என்றதும் "எழுதாதே. எழுதினால் தமிழ்த் தேசியத் துரோகி" என்று சாபம் இடுகின்றார். உண்மைதான். சாதீயம் அந்தளவிற்கு ஆழவேரூன்றி விருட்சமாக வளர்ந்துள்ளது. அதன் ஆணிவேரை அசைக்க முற்பட்டால் துரோகி என்ற பட்டம் மட்டுமல்ல தோட்டாவையும் யாழ் மேலாதிக்க வாதம் பரிசாக வழங்கும்.


1983 கலவரத்தின் போது தென்னிலங்கைப் பகுதியிலிருந்த தமிழர்கள் சிங்களக்காடையினரால் தாக்கப்பட்;ட நிலையில், உடைமைகளைப் பறிகொடுத்த நிலையில் பரிதாபகரமான நிலையில் பஸ்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். இவ்வாறு நெல்லியடி என்னும் பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் வந்து இறங்கியபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்த ‘கனப்பொல’ கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த சிலர் இதனை வெள்ளாளர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சண்டையாம் என்று கூறினார்கள். இதைக் கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அன்றைய நிலை அதுதான். அவர்களையும் தமிழர்களாக உயர் சாதியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அவர்கள் உயர் சாதியினரின் சாதீயக் கொடுமைகளில் இருந்து விடுதலை பெற தங்கள் கிராமத்திற்கு ‘கனப்பொல’ என சிங்களப் பெயர் சூட்டி புத்த பிக்கு ஒருவரை வரவழைத்து புத்த ஆலயம் ஒன்றையும் உருவாக்கினார்கள். நல்ல வேளையாக சிங்கள இராணுவம் சாதி வேறுபாடு இன்றி, பிரதேச வேறுபாடு இன்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தாக்கியதால் அதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் திரட்டுவது இயக்கங்களுக்கு இலகுவாக அமைந்தது. இன்று அதன் மேல் தமிழ்த் தேசியம் கட்ட முனைகின்றனர். ஆனால் அதன் அடித் தளத்தில் உள்ள சாதீயப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படாமல் அவ்வாறே உள்ளது என்பதே உண்மையாகும்.

1989ம் ஆண்டுப் பகுதியில் இந்திய இராணுவத் திற்கெதிராக புலிகள் இயக்கம் போராடிக் கொண்டிருந்த போது கரவெட்டிப் பகுதியில் அதன் ஒரு பிரிவுக்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பு வகித்தார். அவருடன் அவருடைய சாதியைச் சேர்ந்த இளைஞர்களே பெரும்பாலும் இருந்தனர். அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடினாலும் கூட அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் அவருடைய சக போராளி களுக்கும் உயர் சாதியினர் உணவு வழங்க மறுத்தனர். தங்குமிடம் கொடுக்க மறுத்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்க தயங்கினர். இதனால் அவர் பல தடவை இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளானார். தனது போராளிகள் பலரை இழந்தார். அப்போது அவரிடம் ஒருவர் "தமிழ் ஈழம் கிடைத்தால் என்னவாகும்" என்று கேட்டார். அதற்கு அப்பொறுப்பாளர் எவ்வித தயக்கமும் இன்றி "என் சாதி மக்கள் அகதிகளாக அநுராதபுரம் செல்ல நேரிடும்" என்று கூறினார். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அந்தளவுக்கு சாதியக் கொடுமைகளை அவர் அனுபவித்திருந்தார். அன்று மட்டுமல்ல இன்றும் கூட இந்த நிலைமைதான் உள்ளது. மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இந்நிலை குறித்து லண்டனுக்கு வருகை தந்த மதிப்புக்குரிய தங்கவடிவேல் மாஸ்டரிடம் கேட்டபோது அவர் "சாதீயம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. அது என்றாவது ஒருநாள் மீண்டும் பற்றி எரியும்" என்றார். இவருடைய இக் கூற்று மறுக்க முடியாத உண்மையாகும். எனவே உண்மையாகவே தமிழ் தேசியத்தை விரும்புவோர் முதலில் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து சாதீயத்தை ஒழிப்பதற்கு முன் வரவேண்டும். அவ்வழியிலேயே தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்ப முயலவேண்டும். மாறாக அடக்கி ஒடுக்கி பல வந்தமாக அவர்கள் கூறும் தமிழ் தேசியத்தைக் கட்டியெழுப்பினால் அது என்றாவது ஒருநாள் பீறிட்டு வெடித்துக் கிளம்பி போலியாக கட்டி எழுப்பிய தமிழ் தேசியத்தை சுக்கு நூறாக்கும்.

புலிகள் இயக்கத்தில் உப தளபதியாக இருந்த ராகவன் அவர்களும் "வடக்கில் நிகழும் இச் சாதிப்பிரச்சனை தீர்க்கப்படாவிடின் தமிழ் மக்கள் விடுதலை பெறமுடியாது" என்று கூறினார். (இவர் இச்சாதீயப் பிரச்சனை குறித்து ஒரு சிறந்த ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். இதனை அவர் விரைவில் பிரசுரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.)
இலங்கையில் குறிப்பாக வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் சாதி முறையும் தீண்டாமையும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. சாதி அமைப்பு என்பது இலங்கை முழுவதிலும் சிங்களவர் தமிழர் இருசாரார் மத்தியிலும் இருந்து வருகின்றது. ஆனால் வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீண்டாமை என்ற நாசமும் சேர்ந்து இருக்கின்றது. நளவர், பள்ளர், பறையர் போன்ற சில சாதிகள் தீண்டப்படாத சாதிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் தமிழர்களாக மட்டுமன்றி மனிதர்களாகவும் கருதப்படவில்லை. இது மனிதன் மனிதனுக்குச் செய்யும் மிக மோசமான கொடுமை என்றே கூறவேண்டும்.


சாதி அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தின் ஒரு மிச்ச சொச்சமாகும். இலங்கையில் முதலாளித் துவம் ஒழுங்காக இல்லாமல் ஏற்ற இறக்கமாக வளர்ந்துள்ள படியால்தான் சாதி அமைப்பு இன்னமும் நின்று பிடிக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அரசு இயந்திரம் அது அழியாமல் இருப்பதற்கு துணைபுரிகிறது. எனவே சாதீயத்திற்கு எதிரான போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தங்களைத் தாங்களே முற்போக்கு சக்திகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் இதனைப் பார்க்கவோ புரிந்து கொள்ளவோ மறுக்கின்றனர். இப் போராட்டத்தை முன்னெடுக்க தயங்குகின்றனர். இதுவே இன்றைய யதார்த்த நிலையாகும்.


இந்தியாவில் உயர்சாதியினரான பிராமணர் வெறும் மூன்று வீதமே சனத்தொகையில் உள்ளனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினர் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால் பாராளுமன்ற அரசியலில் சில சலுகைகளை பெறமுடிகிறது. ஆனால் இலங்கையில் வடக்குப் பகுதியில் உயர் சாதியினர் பெரும்பான்மையினராகவும் தாழ்த் தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக சிறுபான்மையினராக இருப்பதனால் எந்தப் பாராளுமன்றக் கட்சியும் உயர் சாதியினரைப் பகைத்துக் கொள்ளவோ, புண்படுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக இருந்தும் கூட அவர்கள் எந்தத் தேர்தல் தொகுதியிலும் பெரும்பான்மையைப் பெறமுடியாத விதத்தில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல்கமிஸன் மற்றும் அதிகாரவர்க்கம் அனைத் திலும் உயர்சாதியினர் இருப்பதால் அவர்களால் இவ்வாறு தந்திரமாக செய்ய முடிந்தது.

ஆனால் இந்த நிலைமை தோழர்.சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன் மாறியது. ஏனெனில் அவருடைய கட்சியானது பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை முன்வைத்தது. அது தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சலான தலைமையைக் கொடுக்க முன்வந்தது.

1966ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன இயக்கம் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் சுன்னாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்குபடுத்தியது. பொலிசாரும் உயர் சாதியினரும் இவ்ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடுத்த நிறுத்த எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் தடைகளை உடைத்தெறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் முற்றவெளியில் திரண்டார்கள். அங்கு அம்மக்கள் மத்தியில் உரையாற்றிய தோழர்.சண்முகதாசன் அமெரிக்க நீக்ரோ பாடகர் போல் போப்சனுக்கு அவருடைய சகோதரர் கூறிய புத்தி மதியை மேற்கோள் காட்டினார். "ஒரு போதும் அடி பணிந்து போகாதே. எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி. அவர்கள் படிப்பினையைப் பெற்றதும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கும்"
இதன்பின் நிலைமை மாறியது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தோன்றினார்கள். புதிய உணர்வு கொண்ட இப்போராளிகள் அடிக்கு அடி கொடுத்தார்கள். இவர்களுடைய போராட்டம் ஆலயப்பிரவேசம், தேனீர் கடைப் பிரவேசம், பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல் ஆகியவற்றைச் சுற்றி நடைபெற்றது. ஆனால் இன்னும் வேறு வடிவங்களில் இப் போராட்டம் நடைபெற்றது. சில போராட்டங்கள் வன்முறையான வடிவத்தில் நடைபெற்றன.

தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீய ஒடுக்கு முறைக்கு எதிரான இப்போராட்டத்தில் பொலிசார், நீதிமன்றங்கள், அதிகாரிகள் ஆகிய முழு அரசு இயந்திரமும் உயர் சாதியினருக்கு ஆதரவாக செயற்பட்டன. மாஜி மந்திரியாகிய சுந்தரலிங்கம் போன்றவர்கள் வெளிப்படையாக உயர் சாதியினருக்கு ஆலோசகர்களாக செயற் பட்டனர். இவ்வேளையில் சங்கானை என்னும் கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் சவ ஊர்வலத்தின் பாதையை மறித்து அவ் ஊர்வலத்தின் மீது சுட்டார். இத் துப்பாக்கிச் சூட்டிற்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கண்துடைப்பிற்காக சுட்டவரைக் கைது செய்த பொலிஸ் அவரை வெறும் 250 ரூபா பிணையில் பிணையில் விடுவித்தது. நீதிமன்றம் அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது. போலிஸ், நீதிபதி எல்லாம் உயர் சாதியினருக்கு ஆதரவாக இருந்தமையினால் இவ்வாறு நடந்தது. எனவே இவ் அமைப்பில் தமக்கு நீதி கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போராளிகள் அன்று மாலை சங்கானைச் சந்தையில் வைத்து அக் குற்றவாளியைச் சுட்டுக்கொன்றனர்.

இதே போன்று இந்தியாவில் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி என்னும் இடத்தில் கூலி உயர்வு கேட்ட தாழ்த்தப்பட்ட சாதிக் கூலித் தொழிலாளர்களை குடிசைக்குள் பூட்டி வைத்து எரித்துக் கொன்றனர் உயர் சாதியினர். இதற்கு காரணமான பண்ணையாரை "அப்பாவி" என்று கூறி இந்திய நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் அவரை கம்யுனிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொன்றனர். இது தான் சாதிப் போராட்டத்தின் இயல்பு. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தம் கன்னத்தில் அறை விழுந்த போது மறு கன்னத் தைக்காட்டாமல் அடிக்கு அடி கொடுக்கக் கற்றுக்கொண்டார்கள். இந்த மாற்றத்திற்கு காரணம் கம்யுனிஸ்ட் கட்சிகள் இப் போராட்டத்திற்கு தலைமை அளித்ததாகும்.

இலங்கையில் கம்யுனிஸ்ட் கட்சியானது இப்போராட்டத்தை ஆதரிக்கக்கூடிய உயர்சாதி மக்களின் முற்போக்கான பகுதி களை அணி திரட்டியது. இக்கட்சியின் யாழ்ப்பாணக் கிளையின் தலைமைத் தோழர்களில் சிலர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் அளித்த தலைமையினால் இந்தப் போராட்டத்தின் நோக்கங்கள் சகல பகுதி மக்கள் மத்தியிலும் பரவலாயின. சிங்கள மக்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை அறிமுகம் செய்ய கட்சி பெரும் நடவடிக்கை எடுத்தது. பல தேசிய தின நாளிதழ்கள் இப்போராட்டத்தைப் பற்றிய பல செய்திகளை வெளியிட்டன. சீனாவின் பீக்கிங் வானொலி அதன் ஆதரவை இதற்குத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பல வடிவக் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன என்பதைக் குறிப்பிடவேண்டும். அற்புதமான கவிதைகள் பாடல்கள் தோன்றின. நூற்றுக்கு மேலான தடவை அரங்கேற்றப்பட்ட ‘கந்தன் கருணை’ என்னும் சிறப்பான நாடகமும் தயாரித்தளித்தார்கள். இந்து மதத்தின் படி கந்தபெருமானுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி வள்ளி ‘குறவர்’ என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இதனால் நாரதர் கந்த பெருமானிடம் சென்று இலங்கையில் வடக்குப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் உயர் சாதியினரால் இம்சிக்கப்படுவதாக முறையிடுவதுடன் இந்நாடகம் ஆரம்பிக்கின்றது. இதைக் கேட்ட கந்த பெருமான் கோபம் கொண்டு இதற்கு தண்டனை வழங்க பூமிக்கு வருகிறார். அவரின் பெயர் கந்தன் என்பதால் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொண்ட உயர்சாதியினர் அவரை முருகன் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட கந்த பெருமான் உயர் சாதியினர் மீது எறிவதற்காக தனது ஆயுதமாகிய ‘வேல்’ ஜ உயர்த்தினார். அப்போது நாரதர் இடைமறித்து ‘இந்த ஆயுதத்தை மக்களிடம் கொடுங்கள்.அவர்கள் பாவிக்கட்டும்’ என்று கூறுகின்றார். இந்த மாவோயிச அரசியல் தத்துவத்துடன் அந் நாடகம் முடிவடைகின்றது.

புரட்சிகர கலை எப்படி புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளிவிடமுடியும் என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும். புரட்சிகர நடைமுறையின்றி புரட்சிகரக்கலை பிறக்காது என்பதையும் அது தெளிவாக்கிறது. நடைமுறைதான் பிரதானமா னது. ஆனால் புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும் புரட்சிகரக் கலை புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்தள்ளி விட உதவுகின்றது. சூன்யத்தில் நாம் புரட்சிகரக் கலையை உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின் அங்கமாக அது உருவாகின்றது

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...