Thursday, June 30, 2011

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்

நிலையெடுக்கும் அரச ஆதிக்கமும் அதன்வழி அரங்கேறும் இனவொதுக்கற் குடிப் பரம்பலும்.

-சில கருத்துக்கள்


வரலாற்றில் புலிப்போராட்டம்:

புரட்சி,விடுதலை,சோசலிசம்-சுயநிர்ணயப்போராட்டம் குறித்துப் புலிகள் போட்ட முடிச்சுகள் யாவும் படுபிழையானதென்பதை எப்பவோ விமர்சித்து முடித்தாகிவிட்டது.மீண்டும், இந்தப் புலிகளின் கடைக்கோடிப் போராட்டச் செல்நெறி குறித்துப் புலம்பத் தேவையில்லை!ஆனால்,மக்களின் அழிவைக்கொண்டு தமது இருப்பின்வழி மீளவும் புரட்சிகரமான அணித் திரட்சிகளைப் ப(பி)ணப்புலிகள் இல்லாதாக்கும் அரசியலுக்குப் பலர் முண்டுகொடுப்பது சுத்தக் கபடத்தனமானது.

இதற்காகவேனும் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் குறித்துப் பக்கச் சார்பு(புலி-இலங்கை)இன்றி மக்களின் நலனிலிருந்து கருத்துக்களை முன்வைத்தாகவேண்டும்(இனியொருவில் அத்தகைய கருத்தாடலுக்கான வெளியைக் கோருவதிலிருந்து புதியதிசைகள் நோக்கிய பாதையை மெல்ல உருவாக்கிக்கொள்ள முடியும்).

புலிகள், இதுவரை செய்த போராட்டம் தமிழ் மக்களை அந்நியச் சக்திகளிடம் அடைவு வைக்கும் சூழ்ச்சிமிக்க போராட்டமாகும்.இது, தமது அரசியல்-போராட்ட நெறிமுறைகள்தாம் "மக்களின் விடுதலைக்குச் சரியான தெரிவு" என்று "மாற்றுக் கருத்துக்கு" மரணத்தண்டனையோடு மக்கள் விரோத அரசியலைச் செய்து, இலங்கையில் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு-சோற்றுக்குப் பலியாக்கியது புலி அமைப்பு!

இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்த முள்ளிவாய்க்கால்வரையிலான புலிப்போராட்ட இரகசியப் பேரங்கள்-சரணடைவுகள்,வரலாற்றில் புலிகள் குறித்த மர்மத்தை மட்டும் விட்டுச் சென்றுள்ளது.இந்த மர்மத்தின் மறு விளைவு தமிழ்பேசும் மக்களை இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்துகு அடிமையாக்கியது மட்டுமல்ல சிங்கள மக்களின் சாதாரணக் குணாம்சத்திலும் தமிழ்பேசும் மக்கள் குறித்து ,ஏளனமான பார்வையைத் தோற்றுவித்திருக்கிறது.



தமிழ்பேசும் அடிமைகள்?:

அடிமைகளைக் கைக்கொள்ளும் நிலைகளில், சிங்கள இராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விவகாரங்களும் நமது மக்களைக் காலவோட்டத்தில் மனத் தாழ்ச்சிக்கும் அடிமைத்தனத்துக்குமான சூழலுக்குள் தள்ளிவிடப்போகிறது.இதிலிருந்து மனவூக்கத்தைச் செய்யும் திறவுகோல் புலம்பெயர் தமிழ்பேசும் மக்களது கைகளிலேயே தங்கியிருந்தும் அப்படியானவொரு செயற்பாட்டை-முன்னெடுப்புகளை இந்த மக்கள் செய்வதற்கேற்ற ஒழுங்கமைந்த தலைமைக்குள் ஒருமைப்பட முடியவில்லை.புலிக்கு மாற்றானவொரு புரட்சிகரக் கட்சி எந்தவகையிலும் உருவாகிவிட இயலாதளவுக்குச் சிக்கலானவொரு சூழல் தளத்திலும்,புலத்திலும் நிலவுகிறது.

புலியினது (வி)தேசிய விடுதலைப் போராட்டம்இன்றோ இருந்த இடம் தெரியாது பூண்டோடு அழிக்கப்பட்டு வருடம் இரண்டாகிறது!எனினும்,தமிழ்பேசும் மக்களது விடுதலைகுறித்த இயக்கப்பாடு,ஒருகிணைவு,மக்களை ஸ்தாபனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் ஒரு ஒழுங்கமைந்த புரட்சிகரக் கட்சியால் இலங்கையில் மேற்கொள்ள முடியாதிருக்கிறது. பேருக்கு மார்க்சிய-லெனியக் கட்சிகள்-புதியஜனநாகக் கட்சிகளென"அப்பன் கொல்லைக்குள் இல்லை"என்றபாட்டில் தளத்திலும்-புலத்திலும் முன்னணிகள் முளைக்கின்றன. இந்தச் சூழலிற்றாம் புதியதிசைகளை நோக்கிய கருத்தாடல்களும்-செயற்பாடுகளும் அவசியமாகி நம்முன் சூழல் எழுகிறது.இதை,எங்ஙனம் எதிர்கொண்டு காரியமாற்றுவது?

மேலுஞ்சரிந்து வீழ்ந்துள்ள தமிழ்பேசும் மக்களது ஆண்மை,அவர்களது எதிர்கால வாழ்வுக்கு நெருப்பை அள்ளித் தலையிற்போட்டபாடாய் புலிகளது மர்ம அரசியலது தொடர் நடவடிக்கைகள்"நாடுகடந்து அரசாங்கம்"அந்தக் குழு இந்தக் குழுவென மீளத் தகவமைக்கும் அதே மர்ம அரசியலை என்னவென்பது? இந்த அரசியலை வரலாற்றில் தொடைத்தெறிந்து புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பது நம்மால் முடியாததா?



அதே புலிவழியான அராஜக அரசியல்:

சகிக்க முடியாது வஞ்சனை அரசியல் இது.கண்மண் தெரியாத கற்றுக்குட்டிகளால் கடுகளவுகூட நாணயமற்ற கொலைகள் நடந்தேறியது.இதையும் விடுதலை எனும்பெயரால் நடாத்தியவொரு பாசிச இயக்கம் இன்று தமிழ்பேசும் முழு மக்களையும் அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள நிலையில் முளையரும்பும் அனைத்துப் புரட்சிகர முன்னெடுப்பையும்"புலி-புலி"எனக் கை காட்டும் அரசியலை முன்னெடுக்கும் போலிப் புரட்சிகர சக்திகள்மீது நாம் கோபங்கொள்வதோடு நமது முயற்சியும் சரியாகி விடுமா?

புலிகளின்போராட்டத்தைப் பெரிதாக்கி ஊத வைத்த சக்திகள் அதைப் பூண்டோடு அழிக்கும் அரசலையும் கொண்டியங்கியதையும் நாம் இன்று புரிந்துணரும்போதுகூட,இன்றைய மர்மப் பணப்புலிகளது (நாடு கடந்த அரசாங்கம்,நெடியவன்-கே.பீ.குழு வென இன்னபிற...)தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளின் அரசியல் சூதாட்டத்தை ஜெயலலிதாவடிவில் அரவணைக்கின்றன.

அழிவது மக்கள் என்பதையும்பாராது,இந்திய மத்திய அரசும் அதன் எஜமான இந்திய ஆளும் வர்க்கமும் இலங்கை இராணுவத்தை ஏவித் தனது அறுவடைச் செய்ய முனையும் இந்தச் சூழலிற்கூட புலிகள் குறித்த சீரிய பகிரங்க விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை!

"தலைவர் வருவார்,வரலாறு விடுதலை செய்யுமென"ப் போலி வாதங்களுக்குள் மக்களை கட்டிப்போடும் இந்தப் போக்குகள் ஜெயலலிதாமீது நம்பிக்கையைக்கொள்ளும்படியும் நமது மக்களை முட்டாளாக்குகிறது.

மிகவும் கண்டிக்கத்தக்கது இது.இதை அம்பலப்படுத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்தைத் தனிமைபடுத்தி, நமது மக்களின் விடுதலைக்கு வழிசமைக்கத் தெரியாதவொரு தமிழ்க் கட்சிகளது மூடத்தலைமைகளை நம்பிக் காவடி தூக்கும் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி அழிவில் முடியப்போகிறது.

தேசியத் தலைவரை இதுவரை நம்பச் சொன்ன பணப்புலிப் பினாமிகள் இப்போது தமிழ் நாட்டுச் சினமாக்கூட்டத்தையும் அந்த மாநிலத்தின் ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது தயவைiயும் நம்பும்படி மக்களைப் பேயர்களாக்குகிறார்கள்.





அழிவு அரசியலை நியாயப்படுத்தும் போக்கு:

சொந்த மக்களின் பலத்தை நம்பாத புலிகள்,தமது எஜமானர்களின் அரசியல் சதுரங்கத்துக்குத் தம்மைப் பலியாக்கியதை எத்தனை பக்கங்களில் நியாயப்படுத்தினார்கள் -படுத்துகிறார்கள்?அதை நியாயப்படுத்த எத்தனை சேரன்கள்-உருத்திருகுமார்கள் இன்னும் நமுக்குள் முளைத்துக்கொள்வார்கள்?

கேடுகெட்ட இந்த இயக்கவாதத் தனிநபர்வாத மாயை நமது வாழ்வைக் குட்டிச் சுவாராக்கியதை மறுத்து இனியும் தம்மால் நமக்கு விடுதலை சாத்தியமெனக் கதைவிடுவது உலகத்தின் முன் பெரும் சமூக விரோதமாகும்.

போராட்டத்தை முட்டுச் சந்தியில் நிறுத்திவிட்டுச் சரணடைந்த புலிகளால் எழிச்சியடைந்த சிங்களக்கூலிப்படையோ இப்போது சிங்களத் தேசியப்படையாக மாறிவிட்டது.இதையெல்லாம் செய்வதில் புலிகளின் இயக்கம் காரணமாகப் போகிறதென்ற அன்றைய விவாதங்களை எள்ளி நகையாடிய மேட்டுக்குடி ஈழஅரசியல் "துரோகி" சொல்லி பலரைப் போட்டது.தெருவில்-லைட்கம்பத்தில் பொட்டு வைத்துத் தமது அரசியலை நியாயப்படுத்தியது.

இன்றோ பெருங் கூச்சலிட்டுத் தமிழ் பேசும் மக்களைக் காக்கத் தமிழகத்தை உருகி அழைக்கிறது-அல்லது அவர்களிடம் ஏதோவொரு எதிர்பார்பைச் செய்யும்படி மக்களைத் தூண்டுகிறது.இங்கே, ஜெயலலிதா அம்மையார் தமிழ் பேசும் மக்களது விடுதலைத் தேவதையாக ஒளிவட்டம் கட்டப்படுகிறது.இன்னும் சிறிது காலத்தில் ஜெயலலிதா தேசியத் தலைவியாகவும் போற்றப்படலாம்.இந்த விவஸ்த்தையற்ற கருத்து வெளிக்குள் நாம் மீளவுஞ் சரிந்துவிடுவோமா அல்லது உண்மையான விடுதலைக்கு பங்களிக்கப் போகிறோமா?பெரும் படையணிகளோடு ஈழ மண்ணைக் காப்பதாகக் கயிறு திரித்த ப(பி)ணப்புலிகள் மக்களைக் கொல்வதற்குத் தளபதிகளைத் தயார்படுத்தியளவுக்குச் சிங்கள மேலாதிக்தை-அரச ஆதிக்கத்தை உடைத்துப் போராட்டத்தை முன்னெடுக்கத் தக்கபடி மக்களை அணிதிரட்டிப் பெரும் படையணியாகக் கட்சியை- இயக்கத்தைக் கட்டமுடியாது, தேசியத் தலைவரைச் சுற்றி ஒளிவட்டம் அமைத்தார்கள்.இப்போது, அதே பாணியில் ஜெய லலிதாவையும் நோக்கி மக்களைத் தள்ளித் தமது பிழைப்பை மேலும் மெருக்கேற்றுவதற்கும்,இருப்பை வலுப்படுத்தவும் ஒரு ஆயுதமாகப் பார்க்கும் பணப் புலிகளுக்கு விடுதலை-தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமை குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது.இதை நிர்மலன்போன்ற புலிப் பினாமிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.


புலிகளது தவறுகள்,சிங்களமயப்படும் எதிர்காலம்:

புலிகள் இயக்கம் தனது வர்க்கத் தளத்துக்கு-குணாம்சத்துக்கேற்ப எப்போதும் தவறிழைத்தவர்களல்ல!தமது வர்க்கத்து இசைவாகவும்-நியாயமாகவே தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காய் அடித்தார்கள்-காட்டிக் கொடுத்தார்கள்.அவர்கள் தவறிழைத்தது பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது நலனின்மீதே.அத்தகைய இலக்கில் புலிகள் செய்தது பாரிய வரலாற்றுப் பழி!

இந்தப் புரிதலோடு முரண்பட்டவர்கள்,புலிகளது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று கூறுமிடத்து, அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது, உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.இது, வன்னியில் (இப்போது) நிசமாகி வருகிறது.வன்னி நிலப் பரப்பெங்கும் புதிய குடியேற்றத் திட்டங்கள் மெல்லச் சிங்கள அரசால் ஏற்படுத்தப்படுகிறது.இதையெல்லாம் நியாயப்படுத்த கே.பி.போன்ற பணப் புலிகள் புலத்திலும் உண்டு-தளத்திலும் உண்டு!

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த "தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென"ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.



தமிழ்பேசும் மக்கள்பண்டுதொட்டு வாழ்ந்த நிலப்பிரதேசங்களை இழப்பதற்குரிய முன்னெடுப்போடு செய்யப்படும் இந்த இராணுவவாத முன்னெடுப்பு, முதலில்தமிழ் பேசும் மக்களுக்கான பாரம்பரிய நிலப்பரப்பின் அடையாளங்களை மெல்லத் தடயமின்றி அழித்து(புத்த விகாரை ஒரு சிறிய உதாரணம்), அவர்களைப் புதிய புதிய இடங்களுக்கு இடம்மாற்றிச் சாவின் விளிம்பில் தள்ளுவதற்கான மிகப் பெரிய அரசியல் வியூகத்தைச் செய்வதற்குப் பணப் புலிகளது மர்மமும்,நமது கட்சி அரசியல்வாதிகளது சுய இலாபங்களும் முக்கிய வகிபாகத்தை இந்த முள்ளி வாய்க்காற் தோல்வியின் பின் சாத்தியமாக்கிறது.மக்களை எதை நோக்கியும் சிந்திக்க விடாது,தனியே உணவுக்காகக் கையேந்தும் பிரதேசிகளாக்கியபடி ஓட்டுக் கட்சிகள் மெல்ல முன்னெடுக்கும் இந்த நரித்தனமான அரசியலை அம்பலப்படுத்தி, மக்களை விளிப்புணர்வுகொள்ள வைக்கும் எந்த முயற்சிக்கும் தடையாக,சிங்கள இராணுவத்தின் கண்காணிப்பும்,ஓட்டுக் கட்சிகளது ஏமாற்று அரசியலும் ஒரே தளத்தில் இருவேறு வியூகமாக விரிகிறது!இதுவே,இன்றைய நவலிபரல் கொள்கையின் இன்னொரு முகமாகும்!இதைப் புரிவதற்கு நோமிக் கிளைன் எழுதிய[The Shock Doctrine-By Naomi Klein ] எனும் நூலில்சில பக்கங்களைப் புரட்டினாலே போதும்!

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்:

புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு "மாற்றுக் கருத்து மந்தைகள்"(தேசம் ஜெயபாலன்,தேனி ஜெமினி-கங்காதரன்,கீரன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்,சுகன்,தேவதாசன்,சோபாசக்தி,நிர்மலா-இராகவன்,சுசீந்திரன் இன்னபிற...) கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.


யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதியைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரச சார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு"ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்"எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன மந்தைகள்வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் சில கீரன்களை-கொன்ஸ்சன்ஸ்ரையன்களை, நம்முன் உலாவிடுகிறது.இது ஆபத்தானது-அனைத்தைக்காட்டிலும்!


புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.


பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக்காயாக்கியபடி புரட்சி முன்நகர்வதல்ல.


சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் "போராட்டம் புரட்சியை நிபந்தனையாக்கியபடி" இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிப்படையைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.


நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும் சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் கீரன்போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க முடியுமா?


முள்ளி வாய்க்காலில் அழிந்துபோன புலிகளோடு புலிச் சித்தாந்தமென்பது தமிழ் மேட்டுக்குடியினது சித்தாந்தமேயென்பதும் மிக இலகுவாகப் புரிந்து போச்சுதா? இதிலிருந்து மீள்வதற்குத் தயக்கமென்ன?புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஆற்றலை இளைய தலைமுறையினருக்குக்கற்றுக்கொடுப்பதென்பது காலத்தின் கடமையாக இருக்கும்போது அதை இத்தகைய லொபிக் குழுக்களோடிணைந்து உரையாடுவதால் சாதிக்க முடியுமா? சஞ்சீவ் ராஜ் போன்றோர் இது குறித்து பதில் கூறவேண்டும்.


இலங்கைப் பாசிச இனவொடுக்குமுறை அரசியலால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்!இதை மறுத்து மகிந்தாவுக்குக் கூஜாத் தூக்குவது மக்களுக்கு எதிரானது.


இன்றுவரை,நமது சமூக சீவியம் உடைந்து,நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.இந்தக் கொடிய இலங்கை-இந்திய அரசுகளால் எமது வாழ்வாதாரங்களை இழந்த நாமே,அதைப் பெற்றுத் தருவது-காப்பது இத்தகைய அரசுகள்தாமென வாதாடும்போது நாம் யார்? கீரன்-கொன்சன்ஸ்ரையன்,தலித்துவ மேம்பாட்டு முன்னணி,இராகவன்-நிர்மலா,எனத் தொடரும் இந்த நீண்ட லொபிக் குழுக்களால் நிகழப்போகும் அபாயம் புலிப்பாசிசத்தைவிடப் பன்மடங்கானதென்பதே எனது கணிப்பு!புலிகள் நேரடியாகவே மக்களது எதிரிகளென மக்களுக்குத் தெரிந்தளவுக்கு இந்த மர்ம மனிதர்களை இலகுவாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை!இனவாத ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்பேசும் மக்கள் அன்று போராடியபோது-புரட்சிகரமாக அணிதிரண்டபோது,பாசிசப் புலிகள் மூலமாக அனைத்தையுஞ் சிதறடித்த அந்நிய-இந்திய நலனானது இப்போது அதே பாணியில் இத்தகைய லொபிக் குழுக்களை வைத்து மீளவுருவாகும் புரட்சிகரமான அணித்திரட்சியை-உணர்வை உடைப்பதில் கவனமாக இருக்கிறது.இவர்களே அனைத்து வழி முறைகளையும் கைப்பற்றி அதைச் சிதைப்பதில் திறம்பட இயங்குகிறார்கள்.


தேசிய விடுதலையை நேசிக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் இனிமேல் கவனப்பட வேண்டிய முக்கிய போக்கானது இது :


" முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.அது,நமது அடிமை விலங்குங்கூட என்பதே!"


எனவே,நாம் புரட்சிகரமான அணுகுமுறையைத் தொடர்ந்து உள்வாங்குவதும் அதன் வழி அணித் திரட்சியடைவதும், இலங்கையில் சிறுபான்மை இனங்களின் விடுதலையை-செல் நெறியை திறம்படச் சாத்தியமாக்குவதற்கும், இத்தகைய லொபிக் குழுக்களை ஓட விரட்டவும், புரட்சிகரமாக இயங்குவதே அவசியமான காலக் கடமை.இனவாத ஒடுக்குமுறைக்குள் தமது அடையாளங்களைத் தொலைக்கும் ஒரு தேசிய இனத்துக்கு இதைவிட வேறு வழியிருக்கா?



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.06.2011

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...