Sunday, June 26, 2011

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி?

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி?


" எனக்குத் தேசிய அடையாளங்களது புனித விம்பம் என்பது,நிலவுகின்ற ஆளும்வர்க்க அரசியில் ஆதிக்கத்தினது கருவி என்பதும்,ஒடுக்கு முறைக்குள்ளாகும் ஒரு தேசிய இனத்தின் கோரிக்கைக்குள் கனவாகிக் கிடக்கும் தேசிய விம்பங்கள் அவர்களது இருப்பைக் காக்கும் அலகுகள் என்ற புரிதலும் இருவேற சூழலில் உண்டு! "


தீபம் தொலைக்காட்சியின் புலிக்கொடி பற்றிய உரையாடலின் பின்பு,புலிக்கொடிக்கு எதிராகக் கருத்தாடிய ராஜ் தாக்கப்படுகிறார்.


இலங்கை அரசுக்குச் சார்பான கொன்ஸ்சன்ஸ்ரையின் அருகினில் இருந்து, அவரது கருத்துக்குத்தோதாக உரையாடிய ராஜ், தன்னை இலங்கை அரசினது போக்குக்கு இசைவானவராகக் காட்டப்பட்ட சூழ்நிலையைக்கடந்து, இந்த விவாத்தின் பின் எழுந்த தேசிய அடையாளங்களது புனித விம்பம்,மற்றும் பாசிசக் குறியீடுகளது இருப்பும் அதன் பின்னான சித்தாந்த வலுவும் குறித்து, கவனத்தைக்கொள்வதும் எனது நோக்கு அல்ல!

இது, குறித்து நிறைய விவாதித்தாகிவிட்டது!தேசங்கடந்த ஆய்வாளர்களது புரிதல் நமக்குப் பல புரிதலைத் தந்துவிட முடியும்.எனவே, நாம்,தமிழர்களது அவல நிலையுள் இந்த விடையங் குறித்துச் சில கவனத்தைச் சுட்ட முடியும்-அவ்வளவுதாம் இக் கட்டுரையின் நோக்கம்.



ஓட்டுக்கட்சிகளது கைங்காரியம்:

இலங்கையின் இனப் பிரச்சனை வெறும் இருவேறு இனங்களுக்கிடையிலான சிக்கலல்ல.அது, முழு மொத்த தென்னாசியப் பிராந்தியத்தினதும் பிரச்சனையாகும்.இங்கேதாம் தமிழ் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றித் தத்தமது எஜமானர்களைத் திருப்பத்திபடுத்தும் காரியத்தில் இறங்கி, நமது மக்களை அடியோடு கொன்றடிமையாக்கும் வன்னி யுத்த அரசியலை ஜனநாயகத்தின் பெயராலும்,புலிப் பாசிசத்தின் பெயராலும் ஒப்பேற்றினார்கள்!இனவொடுக்குமுறை நிகழும் ஒரு தேசத்துள் மக்கள் எங்ஙனம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை ஓட்டுக் கட்சிகள் நிலைமைக்கொப்பத் திசை திருப்பி இதைச் சாதித்தனர்.
இது,நமது யுத்தம்-அரசியல் முன்னெடுப்பது வரலாறாக இருக்கிறதா?சரி!

முள்ளிவாய்க்காற் படுகொலை யுத்தத்துக்குப் பின்பான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொரு ஓட்டுக் கட்சியும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப் படுத்துகிறார்கள். இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை.காரணம்: "நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை" என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.


ஓட்டுக் கட்சிகளுக்கு நிதியாதாரம் வழங்கும் வர்க்கத்துக்குத் தமிழர்கள் பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக இருப்பதிலுள்ள தேவை அவசியமாக இருக்கிறது. இந்தத் தேவை அவு; வர்க்கத்தின் அந்நிய வர்க்க நலன்களது தேவையோடு மிக நெருக்கமாக உறுவு பூண்டு,இன்றைய பொருளாதாரப் போக்கில் இவை மிக அவசியமாகி வருகிறது.

இந்த ஓட்டுக் கட்சிகளது தேவையை-நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வலுப்படுத்தும் புலம் பெயர் ஊடகங்கள் தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவருகிறது. இந்த லொபி ஊடகங்கள்,தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை நமக்காகக் காவி வருகிறார்கள்.

அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும் நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் புரட்சிகரக் குரல்,போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து வானொலிகளில் கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!தமது எஜமானர்களுக்கு உகந்த முறையில் அவர்களது நலனை மக்களது நலனாக்க முனையும் இந்த நரித்தனமான அரசியல் எடுத்த எடுப்பில் தமிழ் மக்கள் நலன் மறுத்த அரசியல் பேசமுடியாது,தமிழ் பேசும் மக்களது மனதுக்கேற்றவொரு அரசியலை நமது மக்களது நலனை முதன்மைப்படுத்துவதாகவே உரிமைபாராட்டி விஷ அரசியலை நமக்குள் திணிக்கின்றன.இந்த அரசியலுக்கு உடந்தையாகப் புலம் பெயர்"மாற்று"குழுக்கள் பல அடிமையாகிக்கிக் கிடப்பதையும் இதுள் சுட்டிக்காட்டுவோம்!



புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில், "மாறறுக் கருத்தாளர்கள்,ஜனநாயகவாதிகள்,புரட்சிகரச் சிந்தனையாளர்கள்"எனும் அட்டவணையுள் இலங்கை-இந்திய அரசுகளதும் ஏவற்படைகள்-குழுக்கள் ஓட்டுக் கட்சிகளது பின்னே அணி வகுத்திருப்பதையும் புரிந்துகொண்டோமானால் தேசம் ஜெயபாலன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்,தேனி ஜெமனி, கீரன்,நிர்மலா,இராகவன்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,ரி.பி.சி வானொலி,ஜீ ரிவி,தீபம் ரீவி, ஆகிய அனைவரையும்,அனைத்தையும் புரிவதில் சிக்கல் இருக்க முடியாது!

தமிழ் மக்களது இன்றைய நிலை:

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அந்நியச் சகத்திகளும் இலங்கையும் அரங்கேற்றி வருகின்றன.பேராசை,பதவி வெறி பிடித்த வலதுசாரித் தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள். இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.

நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது. ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவக் காட்டாட்சியே நடந்தேறிவருவது புலியழிப்புக்குப் பின்பான வரலாறு.எந்தக் குடிசார் அமைப்புகளும் இன்னும் முழுமையாக இயங்கவும்-சுயாதீனமாகச் செயற்படவும் அநுமதிக்கப்படவில்லை என்பது இன்னொரு வகை உண்மையாகும்.


மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக யாரும் எடைபோடுவது இயற்கை. ஆனால்,அதன் பின்னால் அந்நிய எஜமானர்களின் அரசியல் மிக நுணக்கமாக விரிகிறது.புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் புலியின் மறுதொடர்ச்சியான "நாடுகடந்து அரசாங்கம்" முன்வைக்கும் ஓட்டுரக அரசியலின் சூழ்ச்சியோ மிகவும் கொடியது. இது சிங்கள இராணுவத்தைவிடப் பன்மடங்கு ஆபத்தானது.உள்ளேயிருந்து கருவறுப்பதுதான் மிக மோசமானது.எதிரி மிகவுந்தெளிவாக இனம்காணப்படுகிறான்.ஆனால், இத்தகைய "நாடுகடந்த அரசாங்கம்"புலிகளது எச்சங்கள்,தமிழ் ஓட்டுக்கட்சிகளோ நம்மை உள்ளேயிருந்து அழிப்பதற்கு உலக ஏகாதிபத்தியங்களது தயவில் அரசியல் செய்கின்றன.

தேசிய அலகுகள்,குறியீடுகள்,தமிழ் மக்களது ஐதீகச் சொத்தாகவும்,அது மக்களது உரிமையினது ஆகக் குறைத்த குறியீடு என்றும் கூறிக்கொண்டு,எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப் படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது (விடுதலையென்பது வெறும் கோசமே!).


இந்த நெருக்கடிக்குள்ளும்புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் மிக இயல்பான வாழ்வுக்குள் தமது பழையபாணி வாழ்வைத் தகவமைத்து வருகிறார்கள்.அவர்களின் பின்னே பாசிச இலங்கையின் அரச ஆதிக்கம் தமிழ்ப் பிரதேசமெங்கும் மிகச் சாதாரணமாக நிலைபெற்று வருகிறது.இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் தமிழ்பேசும் மக்களது அனைத்து முன்னெடுப்பையும் உள்வாங்கிக் கொண்டிருக்கும் இவ் வேளையுள்,தமிழ்க் கட்சிகள் மிகவும் மோசமான-விலாங்குத் தனமான அரசியலைச் செய்து மக்களைத் தமது பங்குக்குச் சீரழிப்பதோடு தமது பதவிகளுக்காக அரசியல் செய்வதாகத் தெரிகிறது.
இலங்கையில் கட்சி அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது எனக்கொள்ளவேண்டும்.

"இந்தியா,ஜெயலலிதா,சீமான் வகையறாக்கள் இன்னும் ஈழமக்களுக்காகப் புடுங்குமென்று இந்த வகைச் சோணகிரிகள் இந்தியாவை நோக்கிப் புறப்படுவதில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் விவேகத்தைச் சிங்கள அரசுக்குப் பறைசாற்றுகிறார்கள். இதுதாம் இன்றைய தமிழ்பேசும் மக்களது அரசியற் சூழல்! "


பாராளுமன்றப் பண்டிகள்:

ஓட்டுக் கட்சி வரலாறு நமக்கு எப்பவும்எதிரானதாகவே இருக்கிறது-இருந்து வருகிறது.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும்,டக்ளஸ்சினதும் அரசியல் இதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது.


ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள, இல்லையா?;


அன்றிலிருந்து இன்றுவரை,இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது என்பதை இலகுவாக நாம் புரிந்துகொள்வோமானால்,இன்றைய நமது மக்களுக்கு எந்த அரசியலை எவர் முன்னெடுக்கிறாரென்று சொல்ல முடியும்.


புலம் பெயர் தளத்துக்கான நயவஞ்சக அரசியல்:

முள்ளி வாய்க்காலுக்குப் பின்இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்ட இலங்கை-இந்தியக்கூட்டு, தமிழ் பேசும் மக்களை இலங்கைக்குள்ளேயே அகதிகளாக்கி அலையவிட்டுள்ளது.




இலங்கையின் பாசிச இராணுவக் கட்டமைப்புக்குள் தமிழ்பேசும் மக்களைக் கட்டாயமாக அடிமைப்படுத்திய மகிந்தாவின் சாணாக்கியம்,புலம் பெயர் தளத்தில் சில திரிவுவாதப் புரட்சியாளர்கiயும்,கைக்கூலி ஊடகங்களையும் தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிறுத்தித் தமிழ்பேசும் மக்களது தேசிய அலகுகளையே கேள்விக்குட்படுத்துகிறது!தமிழ்பேசும் மக்களை வெறும் கையாலாகாத ஒரு இனக் குழுவாக் குறுக்கி வைத்திருக்கும் தந்திரம் இத்துடன் வலுவாக அரங்கேறுகிறது.

தேசியக் கொடியென்பதை,ஓர் அரசாக-இனமாக எழுந்து நிறுவனப்பட்ட ஆனும் வர்க்கத்துத் தமிராக இனம்காணும் அதேவேளை,ஓடுக்கு முறைக்குள் உட்படுத்தப்படும் ஒரு இனம் தன்னை விடுவிப்பதற்கான-பாதுகாப்பதற்கான போராட்டத்தில்,எழிச்சியில் இந்தத் தேசியக் கொடி-அடையாளங்களைக் காவ வேண்டியதாகவே இருக்கிறது.அது,வர்க்கப் போரைச் செய்யும்போதுஞ்சரி,தேசிய விடுதலைப்போரைச் செய்யும்போதுஞ்சரி வர்க்கங்கங்கள் மொழிவாரியகச் சேர்வதில் சில பிரத்தேயகப் பண்புகளை நாம் இனம் கண்டாகவேண்டும்.அந்தப் பண்புகளில் ஒன்றாகப் புலிக்கொடியும் இணைவதில் சிக்கலடையும் சந்தர்ப்பங்கள்கண்டு, "புரட்சியாளர்கள்" ஒடுக்குமுறையாளர்களது திமிரை இரசிக்கின்றனரா?
ராஜ் புலிக்கொடிக்குள் தேங்க,கொன்ஸ்சன்ஸ்ரையன்முழுமையாகத் தமிழ் பேசும் மக்களுக்குப் பண்பாடு,தேசிய அலகுகள்,வரலாறே இல்லை என்கிறார்.இவை, எவருடைய குரல்கள்?இலங்கையின் ஆளும் வர்க்கதின் குரலாக மட்டும் இதைப் பார்க்க முடியுமா?

இத்தொடர் நிகழ்வில்அரசியல் செய்யும் பிராந்தியங்கடந்த-கண்டங் கடந்த ஆளும் வர்க்கங்களது நலனை-அரசியலை யார் என்ன செய்துவிட முடியும்?

இலங்கையின் இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதனாற்றாம் தமிழ்ப் பிரதேசமெங்கும் திடீர் சிங்கக்கொடி பிடித்தலும்,தேசியக் கீதம் சிங்களத்தில் இசைப்பதும் இராணுவக் கண்காணிப்பின்கீழ் நிபந்தனையாக முன்னெடுக்கப்படுகிறது.


சிங்கக்கொடியென்பதன் குறியீடென்ன?


சிங்கள ஆளும் வர்க்கத்துத் திமிராக இல்லையா?


தமிழ் மக்களை வெற்றிகொண்ட அடையாளமாக முன்னிறுத்தப்படவில்லையா?


இத்தகைய உளவொடுக்குமுறைக்குள் திணிக்கப்படும் அராஜகமானது வரலாற்று ரீதியாகத் தமிழ் பேசும் மக்களைக் குரோதத்துடன் தொடர்புப்படுத்தித் சிதைக்கிறது.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இந்தவகைப் புலம்பெயர் இலங்கை-இந்திய லொபிகளுக்கு தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி, அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இந்தப் போக்கு நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக் கீரன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்-இராகவன், நிர்மலா கூட்டம்.


தமிழ் பேசும் மக்களது தேசிய அலகுகள்:


மொழிவாரியாகவும்,இனவாரியாகவும்,சாதிரீதியாகவும் பிளவடைந்த தமிழ் பேசும்மக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.


இந்தத் தோரணையில் தமிழ் பேசும் மக்களது அடையாளங்கள்,தேசிய அலகுகள்மீதும்,வரலாற்று ஐதீக நிலப்பரப்பின்மீதும் தொடர்ந்து தாக்குதல்களைச் செய்யும்போதும் புலிப் பாசிசத் சித்தாந்தமென வாந்தியெடுத்தே இவற்றை நொருக்கி வருகிறார்கள்.பேரினவாத ஒடுக்குமுறையானது என்றைக்குமே இல்லாத வடிவங்களில்தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து ஒடுக்கிவருகிறது. அவர்களது வாழ்விடங்களைத் திருடுவதற்கேற்ற சித்தாந்தங்களை மிக முற்போக்காகச் செய்வதில் புலியினது தவறுகள் ஒத்துழைக்கிறது.


இந்தப் புலித் தவறுகளைத் தூக்கி வைத்து உரையாடும் நபர்கள்,பேரின வாதத்தின் அரசியல் ஆதிக்கத் திமிரையும்,அதன் குறியீடுகளையும் தமிழ் மக்களுக்கான அடையாளமாக்கும்போது மறைமுகமாக இனவழிப்போடு,ஒரு இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்குத் துணை போகின்றனர்.


இனவொடுக்கு முறையைச் செய்யும் இலங்கை ஆளும் வர்க்க நலனானது, தமிழ்பேசும் மக்களை அனைத்து வடிவங்களிலும் ஒடுக்கி அவர்களது வரலாற்றை இல்லாதாக்கும் மகாவம்சத் தொடர் யுத்தத்தைச் செய்யும் இன்றைய சூழலில், தவிர்க்க முடியாது அந்தத் திமிரை எதிர்கொள்ளத் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை முன்நிறுத்தி எதிர்ப்பைக்காட்டுவது அவசியமானது!


அது,நியாயமானதும்கூட.அந்த அடையாளங்கள் எந்த வர்க்கத்தினது என்ற கேள்வி விடுதலையடையும் தறுவாயில் மட்டுமே தமிழ்பேசும் மக்கள் மத்தியில் எழுப்பப்படும்.அதுவரை அது,எந்த அரசியலையுஞ் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டபின்,புரட்சிகரக் கட்சி நிர்மூலமானபின்ஒரு இனம் தனது இயலாமையில் இந்த அடையாளங்களைக் காவுதைத்தவிர வேறென்ன தீர்வு உண்டு?


மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டும் தளத்து நிலை இராணுவக் காட்டாட்சிக்குள்உட்பட்ட நிலையில், புலத்த மக்கள் புலிக்கொடியைப்பிடிப்பதென்பது தமிழ்பேசும் மக்களது வரலாற்று இருத்தலைக் குறித்து அடையாளப்படுத்தபடுவதுதில்தாம் முடிவடைகிறது.புலிகளது பாசிசமும்,அந்தக் கொடியினது வரலாற்று ஐதீகமும் ஒரு தொடர்ச்சியின் இருவேறு நிகழ்வூக்கமோகவே தொடர்கிறது.


புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் மக்களது அரசியல் வாழ்வில்-பிரக்ஜையில் சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் இனவொதுக்கலுக்கு-அழிப்புக்கு எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது எந்தத் தயக்கமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க இன அழிப்பு அரசியலுக்கு எதிராகவே இருக்கும்.


இதைத் தடுப்பதாக இருந்தால்,இலங்கைப் பாசிச அரசு தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் சுய நிர்ணயவுரிமை வழங்க வேண்டும்.அந்தத் தீர்வைச் செய்யாதவரையும் தமிழ்பேசும் மக்கள் தமது தேசிய அலகுகள் எவைகளெனத் தீர்மானிப்பதும், திசையமைத்துக் காப்பதும் எவரையும் கேட்டல்ல-தமது வரலாற்று ஐதீகத்திலிருந்து அது நடைபெறும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
26.06.11

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...