பு(எ)லிகளது ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் வீடு கட்கிறார்.குகநாதன் கோடிக் கணக்கில் தொலைக்காட்சி வர்த்தகஞ் செய்கிறார். கே.பி.புனர்வாழ்வு அ(ழி)ளிக்கிறார்.எல்லாம் மக்களுக்கு. உருத்திர குமார் தேசங்கடந்து தமிழீழம் புரட்டி வைத்துக் கூத்தாடுகிறார்.நெடியவன் புலம்பெயர்ந்து பெரும் நிதிநிதியந் திறந்து நடாத்துகிறார்.புரட்சிக்கான குத்தகையை எனக்குத் தரமாட்டீர்களா-ஜெயபாலன்?அதையாவது மட்டும் என்னிடம்விட்டுவிடுங்களேன். வயதாகிறது.அதிலிருந்துகொண்டாவது நாலு பேரைச் சேர்த்துக் கொடுத்தாலாவது எனக்குப் படியளக்கக் காத்திருப்பவர்கள் கவனமாக என்னைக் கையாளுவினம்.எல்லாத்துக்கும் நீங்கள் ஆப்பு வைப்பதாகத் தேசம் வாசகர்கள் பூரிப்படைகின்றனர்.இது,ஆப்பா அல்லது எவருக்குமான காப்பா என்று காலம் பதிலுரைக்கும்.
அதுவரையும், மீண்டும்,மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன். முடியவில்லை!
புலிகளும்,தமிழ்த் தேசியம் பேசியவர்களும், அனைவரையும்,அவர்களது இன்றைய நிதி மோசடிகள்-அரசியல் நகர்வைக் குறித்து யோசிக்க முடியவில்லை!இவ்வளவு கொடியவர்களா இவர்கள்?ஒரு மக்கள் கூட்டத்தைக் கொன்று குவித்த கையோடு தமது நல்வாழ்வுக்காக அவர்களது கண்ணீரில் காசு பார்க்கும் இவ்வளவு கேடுள்ளவர்களா நாம்?
ஒரு பக்கம் வானொலி,தொலைக்காட்சி, ஊடகமெனத் தமிழ்பேசும் மக்களை"உறவுகள்-சொந்தங்கள்"என்று மொட்டையடிக்கும் கூட்டம்,மறுபுறம் தமிழீழம்-உரிமை,தமிழ்-தேசியம் என்று மொட்டையடிக்கும் கூட்டம்.இடையினில் புரட்சி என்று நடுரோட்டில் அடிபடும் நாம்.இங்கே,மக்களுக்கு எதைத்தாம் ஒழுங்காகச் செய்தோம்?அல்லது, அந்த மக்களுந்தாம் தமக்கேற்பட்ட அழிவுகள் குறித்துச் சிந்திக்கிறார்களா?
நல்லூர் கந்தனுக்குத் தெருவெல்லாந் தோரணங்கட்டித் தேரிழுக்கும் தமிழர்களுக்கு வீடு கட்டுவதும்,காணி வேண்டுவதும் அவசியந்தாம்.குடியிருக்க அது அவசியம்தாம்.ஆனால்,முன்னாள் புலிகள் மில்லியன் கணக்கில் வீடுகள் வேண்டவும்,கட்டவும் முடியுமானால் அவர்களது போராட்டத்தால் அழிவுக்குள்ளான மக்களுக்கு எவர், எந்த நஷ்ட ஈடு வழங்கினர்?
"எல்லோரும் போராட வாங்கோ"என்று ஏ.கே.47 ஐ பிடரியில் வைத்து அழைத்தவர்கள் புலிகள், அவர்களே இப்போது தமது வாரீசுகளுக்காகத் தமிழீழத்தைக் குத்தகைக்குவிட்டுப் பிழைக்கின்றபோது, இந்தக் குகநாதன்(டான் தொலைக்காட்சி அதிபர்) அவர்களும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்தானே?
அவருக்கும் வாரீசுகள் இருக்கின்றது.வாழும்-வளரும் பிள்ளைகள் பிழைச்சுப் போகட்டுமே!என்னத்தைப் பெரிதாகச் செய்தார்கள்-ஒரு இரண்டு இலட்சம் மக்களைப் புலிகள் அழிக்கத் தோதாகக் கருத்தைக்கட்டியதைத் தவிர வேறென்ன செய்தார்கள்?இரண்டு இலட்சம் உயிர்கள்தானே-போனாற் போகட்டும்!அவர்களாவது தமது பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழட்டும்.அதுக்காகவாது படுகொலை செய்யப்பட்ட இரண்டு இலட்சம் மக்களது அழிவு பயன்படட்டும்!
இப்போதெல்லாம்,தமிழ்பேசும் மக்களுக்கான நீதிக்கான குரல்கள் மெல்ல ஓய்ந்துபோக,பணப்பசையுடையவர்களது முரண்பாடுகள்,கடத்தல்,கப்பம்,என்று தொடரும்போது அதற்காகவே பேட்டியெடுத்து,அவர்களது நியாயத்துக்காக நாம் பேச வெளிக்கிடுவது புரட்சி,ஈழவிடுதலையின் அடுத்த பரிணாமமாகிறது.இது,நல்ல முன்னேற்றந்தாம்.எதுவெப்படியோ நாம் குகநாதனுக்கான நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.அப்படிக் கொடுப்பது அவசியம் ஆகும்!
ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்துக்கும் நீதிக்கான ஊடகவியலாளர் டான் தொலைக்காட்சி அதிபர் குகநாதன்.அன்னாருக்கு நிகழ்ந்த பாதகங்கள் குறித்து அவரது பேட்டியைச் சூட்டோடு சூடாகத் தேசம் வாசகர்களுக்கு வழங்கியதென்பது ஒரு பெரும் சமூகக் கடமையானதென நம்பலாம்.
டக்ளஸ் தேவனந்தா அமைச்சராக இருந்து சாதிப்பதுபோன்று இன்றைக்குத் தமிழ்பேசும் மக்களுக்காக இந்தவூடகவியலாளர்கள்,குறைந்தபட்சமாவது ஐ.பி.சீ. வானொலியில் 12 மணிக்கு ஓலமிடும் யசோதா மித்திரதாஸ்போன்று ஒப்பாரியாவது வைத்துத்"தமிழர்கள் வெட்டுண்டு துண்டுகளானார்கள்"என்று சொல்லிச் சொல்லியே தமிழர்களது ஈரற் குலையைப் பிடுங்குவதுபோன்று எல்லோருஞ் செய்தேயாக வேண்டும். இல்லையென்றால், நமது"கல் தோன்றி மான் தோன்றாக் காலத்து வாளொடு முன் தோன்றிய"வரலாறு என்னவாகும்? எல்லோரும் வாங்கோ-வந்து குகநாதனுக்கேற்பட்ட வரலாற்றுக் கொடுமைக்கெதிராக வழக்காடு மன்றைத் திறவுங்கள்!ஜெயபாலன் மிகச் சிறப்பாகப் பேட்டி கண்டதன் பயன் எத்தனையோ முறைகளில் பயன்படுவதையிட்டுப் புரட்சிக் கொடி வானுயரக் கோட்டையில் பறக்கிறதே,அதுவொன்று போதாதா-என்ன?
இருந்தும்,படிப்படியாக மக்களுக்கு உண்மையை உரைப்பதற்காகவேதாம் நாம் பொதுச் சமூகச் சூழலுக்கு வெளியில் தனிநபர்களது அநுபவத்தைப் பிரித்துப் பார்பதில்லை!அது,தப்புத்தப்பாகப் புரியிறபோதுதாம் பிரிப்பது-பறிப்பது...
வாழ்நிலைதான் சமூக உணர்வைத் தீர்மானிப்பதாக வரலாற்று ஆசான்கள் சொல்வதால்,உங்களுக்கென்ற எந்தத் தனிப்பட்ட துரும்பும் இருக்கப்படாது.அனைத்தும் கட்சிக்கும்,புரட்சிகர நிலைவரத்துக்கும் உட்பட்டதே!இந்த விஷயத்தாற்றாம் குகநாதனது நீலிக் கண்ணீர் :
"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் பெற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்."
என்று அவ்வயையுந்தாண்டித் தேசம் நெற் நெற்றியடி ஆப்பாக வைத்ததாகரெவரெவெரோ கூத்தாடிக்கொண்டிருக்க நாமும் தாந்தோன்றித்தனமாகக் கலையெடுத்துக் கருக்கலைப்பதென்று இதுவரை முக்கி,முக்கி தட்டித் தாலாட்டிக்கொள்கிறோம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
13.09.2010
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment