சபா நாவலனின் கட்டுரையை முன்வைத்துச் சில குறிப்புகள்.
ஒரு முறைமையின்(உதாரணத்துக்கு:முதலாளிய உற்பத்திப் பொறிமுறை) கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் பொருள் உற்பத்தி-வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது உற்பத்தி முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது- அழிக்கப்பட்ட புலிகளது போராட்டத்தை,அவர்களது பாத்திரத்தை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.
இது பல "ஈழ"புரட்சிகரக் குழுகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.
இதைப் புரிந்துகொள்ள முனையும்போது,ஒரு குறிப்பிட்ட வலயத்திலள்ள மக்கட்டொகையானதின் சமூக வளர்ச்சியானது, தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்னைக் கொண்டிருக்கும்போது(திடீர் ஏற்றுமதி முதலாளியம்.பாதி அரச முதலாளியம் மீதி,தரகு முதலாளியம்)மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக அந்தப் பிராந்தியத்து மக்களது அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.
அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள் மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை"பொருளாதார அபிவிருத்தி"என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது.இத்தகைய பொருளாதார நோக்குள் உந்தித் தள்ளும் ஈழமென்றும் அதற்கு மாற்றான தீர்வு எனுங் கோசங்கள் யாவும் தமிழ் பேசும் மக்களை மிகக் கேவலமாகத் தகவமைத்துக் கொண்ட வரலாறானது அந்த மக்களையே காவு கொள்ளும் இன்றைய அரசியலாக விடிந்துள்ளது.
இந்தப் புள்ளியில் நடந்து முடிந்த புலிவழிப்போராட்டமும்,அதன் பாத்திரமும் பற்பல படிப்பினைகளைத் தரமுடியும்.எனினும்,அது குறித்துச் சரியான ஆய்வு அவசியமானது.நாவலன் இது குறித்து இனியொருவில் எழுதிய வர்க்கச் சார்பு-தளம் குறித்த பார்வையில் புலிகளது இயக்கத்தை ஒரு விடுதலை அமைப்பாக்கும் அபாயமுள்ளது.இது குறித்த அறிதலென்பது அவசியமானது.புலிகளது பாத்திரமென்பதைப் புரிவதற்கான புள்ளியைத் தேடியே நகர்வது போராட்டத்தின் பிழைகளைக் கண்டடைவதும்,மீளப் புரிவதற்குமாக இருக்கட்டும்.
நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்இலங்கையின் தரகு முதலாளிய வர்க்கம்,மத்தியதரவர்க்கம் குறித்த புரிதலைக் குறித்து உணர்வு ரீதியாக ஆய்வதையுந்தாண்டிப்புலிகள் அமைப்பின்மீதான புரிதல் அநுதாபம் எனும் கருத்தியலைப் பலமாக்கி வருகிறது.புலிகளது வரலாற்றுப் பாத்திரம்,அவர்களது போராட்டம் உண்மையில் தமிழ்மத்தியதரவர்க்கத்தினதும் அதன் மேலணிகளதும் தளத்தைத் தாங்கி நகர்ந்ததா?
இற்றுவரை "ஈழத்தில்":
1): ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் சாதரண மக்கள் உயிர் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டும்,
2): சுமார் 2.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,
3): முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,
4):கிட்டத்தட்ட 20 ஆயிரம்சிறுவர்கள் முடமாக்கப்பட்டும்,
5): இறுதி வன்னி யுத்தத்தத்தில் ஆயுதப் பயிற்சியுடைய 20 ஆயிரம்போராளிகள் படுகொலை செய்யப்பட்டும்,
6): புலிகளெனும் போர்வையில் சில ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்கள்இலங்கை அரசினது சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டும்,
இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குச் சிங்கள அதிகார வர்க்கத்தத்துத் திமிரும்(இனரீதியான ஒடுக்குமுறையுடன் வர்க்கவொடுக்குமுறை), பிரபாகரனது-புலிகளது அடியாட்பாத்திரமும் மற்றும் வெளியுலகப் புலித் தலைமையது வலதுசாரி விசுவாசமே காரணமாகிறது.இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமினலாக இருக்கும் மேற்கூறிய கூறுகள்மக்களிடம் எந்தவழியிலும் உணர்வு ரீதியாக ப் புரியப்படவுமில்லை.இது, இடை நிலை வியூகமாக முன் தள்ளும் அரசியல் பெரும்பாலும் என்னவென்பது புரியப்பட வேண்டும்.
முட்டிமோதும் அரசியல் வியூகம்:
உலகத்தை இன்று பற்பல நலன்களே தமக்கு ஏற்ற தெரிவோடு இணைத்தும்,பிரித்து வைத்துக் கொண்டிருக்கின்றன.இந்தச் சூழலிற்றாம் தமிழ்ச் சமூகத்தின்மீதான அனைத்து அரசியல் வாழ்வும் ஏதோவொரு நலனுக்கேற்ற வகைகளில் அணுகப்படுகிறது.அந்த நலன்கள் முட்டிமோதும் முற்றமாகத் தமிழ்த் தேசியவாத அரசியல்கட்சிகளும்,இடதுசாரிய அரசியலும் ஒருங்கே இணையுஞ் சந்தர்ப்பம் தமிழ்பேசும் மக்களது அரசியல் உரிமை குறித்த போராட்டத் திசையில் என்று எடுத்துக் கொள்ளலாம். எனினும்,இரு தரப்புஞ் சொல்லும் சுயநிர்ணயவுரிமை என்பது இதுவரை சிங்கள அரசாலோ அல்லது அவர்களது எஜமான சிங்கள ஆளும் வர்க்கத்தாலோ கவனிக்கப்படவுமில்லை அதுகுறித்து அவர்கள் எதையுமே அலட்டவுமில்லை. இந்தத் திசையில் அள்ளி வைக்கப்படும் கட்சி நலன்களோ திடீரெனக் கட்சிதாவுவதும், அணிமாறுவதுமாக நிகழ்கிறது.அதையும் மக்களது நலனுக்கெனச் சொல்கின்றார்கள்.இலங்கையில் 18 வது அரசியல் யாப்பு மாற்றத்துக்கான வாக்கெடுப்பில் இதை நேரடியாகக் காண முடியும்.
இந்த நிலைமையைக் குறித்துக் கவனித்தோமானால் இதுவரையான இலங்கை இடதுசாரிய அரசியலது சந்தர்ப்பவாதம் கட்சிசார் நலன்களது அடிப்படையில் இருந்தே எழுகிறது.கட்சியின் நலன்களானது பாராளுமன்றச் சாக்கடையில் மக்கள் விரோதமாக மாறுவது கவலைக் குரியது.ஆளும் மகிந்தா அரசுக்கெதிரான அரசியலானது வெறுமனவே மேற்குலகுக்குச் சாதகமாகத் தமிழ் தேசியவாதத்தலைமைகளால் முன்னெடுக்கும்போது,இடதுசாரியக் கட்சிகளோ வாக்கெடுப்புக்கு ஆதரவின்றியும்,எதிர்ப்பின்றியும் நடுநிலை வகிக்கின்றன.
இன்றைய ஜேர்மனிய இடதுசாரிய அரசியலில் தி.லிங்க எனும் இடதுசாரியக் கட்சியானது பாராளுமன்ற அரசியலை மக்களது-பெரும்பான்மை மக்களது அரசியற் குரலாக ஒலிப்பதையுந்தாண்டி பெரும் நிதி மூலதனத்துக்கெதிரான வர்க்கப்போரைத் தகவமைக்கிறது.அதன் அனைத்து உறுப்பினர்களும் புலனாய்வுத்துறைகளால் கண்காணிப்புக் உள்ளானாலும் ஒரு அங்குலம்கூடத் தமது போராட்டத்திலிருந்து விலத்தவில்லை!
நாம் நமது அரசியல் நடாத்தையைக் கேள்விக்கு உட்படுத்தாமால் நமது விலங்கை ஒடித்துவிட முடியாது!இலங்கையில் இடதுசாரிய அரசியலென்பது பாராளுமன்றத்துள் ஓட்டுக்கட்சிகளைவிட மோசமாகச் சீரழிந்துகிடக்கின்றன.இன்றைய நிலையில், "வர்க்கங்களாகப் பிளவுப்பட்டுள்ள மக்கள் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறதென்று" இலகுவாகச் சொல்லிக்கொண்டு இந்த இடதுசாரிகள் அரசியற்பலமின்றி பாராளுமன்ற அரசியலில் அடியுண்டு போவது எதன் பண்பினது தொடர்ச்சியாகும்?
இலங்கையின் இடதுசாரிகள் மாறிவரும் உலக அரசியல் வியூகங்களைச் சரியாகப் புரிந்திருக்கின்றனரா?அவர்களது அரசியலானது சீன மூலதனத்தின் இலங்கை நோக்கிய வரவில் மேற்குலகத்துக்கான எதிர்ப்பு முகாமொன்றைத் தகவமைக்க முடியுமெனப் புரிந்துகொண்டிருக்குமோவென அஞ்சத்தக்க நடவடிக்கையாகவே இடதுசாரியக் கட்சி அரசியல் நடந்தேறுகிறது.ஒருபக்கம் தேசியவாதத் தமிழ்த் தலைமைகள் மேற்கைத் தாங்கும் யூ.என்.பி.போன்ற கட்சிகளுக்குப் பின்னாலும்,நேரடியாகவும் மேற்கைச் சார்ந்தியங்க முனையும்போது,இலங்கையின் இடதுசாரிய அரசியல் சீனவினது இன்றைய பிராந்திய மேலாதிக்க அரசியலை மெல்ல ஆதரித்து இயக்கும்போக்கில் நிலைதடுமாறுகிறது.இது,இலங்கையினது சுய வளர்ச்சியை மறுத்தொதுக்கும் நடுத்தரவர்க்கத்தின் அபிலாசைகளோடு சமரசஞ்செயு;யும் போக்கின் பிரதான காரணியாகவிருக்கிறது.
இதனால், இலங்கையினது ஓரவஞ்சகமான இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப் படுகிறது. என்பதை இடதுசாரிகள் மறுத்தொதுக்கிவருவதில் முடிவடைகிறது.
இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின்புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டனர். இலங்கையின் நடந்துமுடிந்த உள்நாட்டுப் போரில் அதன்பங்கு(தரகு முதலாளியத்தின் பங்கு) மெல்லத் தகர்ந்து விட்டது. என்றபோதும், இலங்கைச் சிங்களத் தரகு முதலாளியமானது இன அழிப்பு வியூகத்தை அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான இன-வர்க்கவொடுக்குமுறையாக செய்கிறது. இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது.இதற்குப் புலிகளது அழிவுக்குப் பின்பான தமிழ்ப் பிரதேசங்களது நிலைமைகள் சாட்சியாகிவருகிறது.ஊர்களது பெயர் மாற்றந் தொட்டுப் புத்தவிகாரைகளது வருகையும் இந்தப் போக்கினது மிகக் கெடுதியான பக்கத்தைப் புரிந்து கொள்ளத் தக்கதாகவிருக்கிறது.
மேல் காணும் வியூகங்களது தெரிவில் ஒரு இனத்தைச் சிதைப்பதற்கான அல்லது கலந்து காணாமற் செய்வதற்கான தெரிவுகள் குறித்து இலங்கையின் இடதுசாரிகள்"கம்"என்று கிடக்கிறார்கள்.
புலிகளும்,முள்ளிவாய்க்காலும்:
இனியொரு தளத்தில் நாவலன் அவர்கள் எழுதுகிறார்:"தமிழ்த் தேசியத்தின் தோல்வி-மாற்று அரசியலின் ஆரம்பப் புள்ளி" என்று.
இக்கட்டுரை பேசும் இலங்கை வர்க்க முரண்பாடு,வர்க்கவுருவாக்கம் குறித்து முரண்படுவதற்கு ஒன்றுமில்லை.இலங்கையில் தேசிய முதலாளிய வர்க்கமென்பதைக் கடந்த காலத்துள் நாம் இலங்கையின் அரசவுடமையாக்கப் புரிதலிலிருந்து சுதந்திரக்கட்சி தேசிய முதலாளியத்தின் தலைமையாகப் பண்டார நாயக்காவைப் புரிந்தோம்.தரகு முதலாளியத்தைக் கடந்து அப்படியானவொரு வர்க்கத் தட்டுக்கான பொருளாதாரம் சுயசார்பாக வளரக்கூடாதென்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது.இதன்பொருட்டுச் சி.ஐ.ஏ. பண்டார நாயக்காவை முடித்து இலங்கையின் தேசிய முதலாளியத்துக்கான சுயசார்பை உடைத்தெறிந்திருக்கிறது. இந்தவுண்மையும் பேசப்பட வேண்டும்-அணுகப்படவேண்டும்.
இன்று தேசங்கடந்து நிதிமூலதனம் பாய்கிறது.கூடவே,ஐரோப்பியத் பெருந்தொழிற்கழகங்கள் மூன்றாம் உலகத்தில் தமது கிளைகளை நேரடியாகவே நிறுவி நிர்வாகிக்கின்றன.இதுவரையான தரகு முதலாளியம் குறித்த புரிதலிலும் இது தோற்றுவிக்கும் பண்புரீதியான அக-புற மாற்றங்கள் ஆய்வுக்குரியன.புலிகளது தோல்வி குறித்தும்,"தேசிய விடுதலைக்கானதும்-தேசங்களது விடுதலைகானதுமான போராட்டங்கள் மத்தியதர வர்க்கத்தையும் அதன் மேலணிகளையும் தளமாக வைத்து உருவாகமுடியாதென்றும்,அத்தகையதைத் தளமாக வைத்துப் போராடிய இயக்கத்துக்குப் புலிகளது முள்ளி வாய்க்கால் பாடமாக இருக்க முடியுமென்கிறார்", நாவலன்.இது சரியானதுதாம்.எனினும்,இதனூடாகப் புலிகளது உண்மையான பாத்திரம் மறைக்கப்படும் அபாயமொன்றுள்ளது. புலிகளைச் சரியாக மதிப்பிட நாவலன் முன்வைக்கும் கருத்துக் குறுக்கே நிற்கிறது.
தமிழ் மக்களுக்குத் தேசிவிடுதலைப் போராட்டமெனப் பகரப்பட்டுச் சரமாரியாக அவர்களைக் கொலை செய்த இந்தப் புலிவழிப்பட்ட அழிவு யுத்தமும் அதன் பாத்திரமும் சரியாகப் புரியப்படவேண்டும்.புலிகளது வரலாற்றுப் பாத்திரங்குறித்துச் சரியான ஆய்வை முன்வைக்கவேண்டியது காலத்தின் அவசியம்.புலிகள்தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமோ அல்லது மத்தியதரவர்க்கமோ அதன் மேலணிகளோ தலைமைதாங்கிய இயக்கமல்ல.அன்றி இவர்களைத் தளமாகவும் புலிகள் வைத்திருந்தவர்களில்லை.
புலிகள் முழுக்கமுழுக்க ஒரு அழிவுயுத்தத்தை இவர்களிடம் வலுகட்டாயமாகத் திணித்த அந்நியத் தேசத்து அடியாள் இயக்கம்.இந்த இயக்கமானது தமிழ்தேசியக் கட்சிகளது மேற்குலகச் சார்பிலிருந்து ஆயுதரீதியாக அந்நியச் சக்திகளால் கையகப்படுத்தி உருவாக்கப்பட்டவொரு மாப்பியாக்குழு.இந்த இயக்கத்திடம் இனவாத இலங்கை அரசுக்கெதிரான போராட்டத்தை மனவளவில் கற்பனை செய்த மத்தியதர வர்க்கமானது மிக வேகமாக உந்தப்பட்டு அநுதாபிகளாக மாறும்போது, இலங்கைத் தமிழ்பேசும் மக்களனைவரும் ஆயுதரீதியாக வலு கட்டாயாமாகப் புலிகளை ஆதரிக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதிலிருந்து புலிகளானது சாரம்சத்தில் பரந்தபட்ட மத்தியதரவர்க்கத்தினதும் அதன் மேலணிகளதும் தளத்தைக்கொண்ட இயக்கமாகக் காட்டப்பட்டிருப்பினும் அதன் எஜமானர்களும், தளமும் முற்றுமுழுதாக அந்நியச் சக்திகளது முகாமாகவே இருந்தது.எனவே,புலிகளது தோல்வியானது அதன் அடியாட்பாத்திரத்தின் தேவையும்-தேவையற்றதுமான புரிதலிலிருந்து ஆரம்பமாகிறது.இதைக் கணிப்பதில் மத்தியதர வர்க்கத்து ஊசலாட்டம் மற்றும் வர்க்கவுணர்வு தரகு முதலாளியத்தின் பின் நகர்தலெனும் கூற்றோடு அணுகும்போது புலிகளுக்கொரு அரசியலும்,மக்கள்சார் குறைந்தபட்ச நலனும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இது அபாயகரமானது.
புலிகளது வருகையானது ஒரு திடீர் வருகையாகும்.இதன் வருகைக்கு எந்த வரலாற்றுப் பாத்திரமும் இல்லை.இலங்கை அரசினது இனவொடுக்குமுறைக்கெதிரான பரந்துபட்ட மத்தியதர மக்களது சமூக ஆவேசமோ அன்றி அவர்களது போராட்ட ஸ்தாபனவுருவாக்கமோ புலிகளைத் தோற்றுவிக்கவில்லை!புலிகளென்பது அழிவுயுத்தத்தைத் திணித்த அந்நிய நலனது அரசியல் வியூகத்தில் அவதரித்தவர்கள்.புலிகளைத் தூக்கி மக்கள் மத்தியில் நிறுத்திய தேசியவாதக் கட்சிகளே இறுதியில் இவர்களால் அழிக்கப்பட்டதும்,நிர்மூலமாக்கப்பட்டதும் ஒரு தற்செயல் நிகழ்வல்ல.புலியினது போராட்டமானது அரசியல் ரீதியான கோரிக்கைகளை முற்றுமுழுதாக மறுத்து ஒரு இராணுவவாத அமைப்பாக மாற்றுவதற்கான முன் பாதுகாப்பே தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அழிக்கப்பட்டதன் தொடர் கொலைகளாகும்.எதுவெப்படியோ புலிகளானர்வகளை தமிழ்ச் சமூகத்தின் எந்த வர்க்கமும் தளத்தைக்கொடுத்துத் தலைமைதாங்கியதல்ல.புலிகளுக்கு இவர்கள் அநுதாபிகளாகவும்-ஆயுதரீதியாகக் கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களுமே.எனவே,புலிகள் மத்தியதர வர்க்கத்தையோ அன்றி அதன் மேலணிகளையோ தளமாக வைத்துப் போராடியவர்கள் என்பது சரியானதாக.இத்தகைய மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் தமது நலன்களைப் புலிகளுடாக அறுவடைசெய்வதற்காக அதன் அடியாட்பாத்திரத்தை மறைத்துத் தேசியவிடுதலைக்கான இயக்கமாக நீட்டிக்கொண்டே சென்றனர்.புலிகளது போராட்டமானது இந்த இலட்சணத்தலேயே பரந்துபட்ட தமிழ்மக்களிடம் அநுதாபம் பெறும் ஒரு நிலையில் 2000 க்கு பின்பான காலங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
அடுத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நாவலன் குறித்துச் சொன்ன சிந்தனையின் தொடர்ச்சியாக அறிமுகப்படுவதுவதென்பதும் சரியானதே.என்றபோதும்,அதன் தற்காலப்பாத்திரமானது புலிகளது இராணுவ அடியாட்பாத்திரம் அவசியமின்றிப்போனதன் தெரிவில் அரசியல்ரீதியானவொரு பாத்திரத்தை முன் நகர்த்தும்போது,அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தமிழரசுக் கட்சியினது அந்நியச் சார்பிலிருந்தே மேலெழுகிறது.இவர்களது கட்சிக்கு நிதியிடுபவர்களில் உலகத்து முன்னணி ஒடுக்குமுறையாளர்கள்கூட இருக்கமுடியும்.
புலி அழிப்புக்குப் பின்பான யதார்த்தம்:
தமிழ் மேட்டுக்குடியின் வர்க்க நலன்சார்ந்து அந்நிய நலனுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட புலிகள்வழித்(அந்நியச் சக்திகளது அடியாட்பாத்திரம்) "தமிழீழப்போராட்டம்" தமிழ்பேசும் மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றுகுவித்து,அவர்களது சமூக சீவியத்தையே சிதைத்துவிட்டது.இன்று, அகதிகளாகவும்,இலங்கைப் பாசிச இராணுவத்தின் மனோவியல் யுத்தத்துக்குள் அள்ளுண்டுபோயும், திறந்த வெளிச் சிறைச் சாலைகளுக்குள்ளேயேதாம் நமது மக்களது வாழ்வும்-சாவும் நிகழ்கிறது.
இஃது, எதன்பொருட்டு நிகழ்ந்ததென்பதைக்குறித்துச் சரியான தெரிவற்ற தமிழ்ச்சமுதாயம், வெற்றிகரமாக அரசியலை முன்னெடுக்க முடியாது.மக்கள் இதுகுறித்துத் தெரிந்துகொள்வதற்கான எந்த அரசியலும் வெறுமனவே சிங்கள அரசின் பக்கமே குற்றமுள்ளதாகச் சொல்லி உண்மைகளை மறைப்பதில் தமிழ்த் தேசிய வாதக் கட்சிகள் முனைப்பாக இருக்கின்றன.அதுபோன்று, புலம் பெயர் தளத்தில் மீளத் தகவமைக்கப்படும் விதேசியக் கருத்தியற்றளத்தை ஜீ.ரீ.வி.முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.இது,புலியினது எச்சமாகவிரிந்துகொண்டாலும் இவர்கள் முன் தள்ளும் வரலாற்று மோசடிகள் தமிழ்பேசும் மக்களை உண்மைகளைக் கண்டடiயும் அனைத்து வழிகளிலிருந்தும் ஓடோடத் துரத்துகிறது.அவர்கள்,மீளவும் குறைவிருத்திக் குட்பட்ட கருத்துக்களால் மிகவும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இந்தப் புள்ளியை எவருமே கவனிப்பாரில்லை!இணையங்களைவிட,ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து விளையாடும் ஜீ.ரி.வி.ஆனாது மக்களிடம் உண்மைகளைச் சொல்லத் தவறுகிறது.அது,தொடர்ந்து புலிவழிப்பட்ட கருத்துக்களோடு இனவாதத்தைத் தொடர்ந்து தமது தேவைக்குட்பட்ட வகையில் தெரிவாக்கி விதைத்து வருகிறது.இடதுசாரிகள் என்பவர்கள் இந்தக் கருத்தியல் யுத்தங் குறித்து மௌனித்தே வருகின்றனர்.அவர்கள் தனிநபர்களது தவறுகளைத் தூக்கி விமர்சிக்கமுனையும் சந்தர்ப்பத்துக்குக்கொடுக்கும் கவனத்தை இந்த அழிவுகரமான கருத்தியலை எதிர்கொள்ளக்கொடுக்கவில்லை!
இலங்கையின் இடதுசாரியக் கட்சிகளில் லங்கா சமசமாயக் கட்சி மிகவும் பிற்போக்குக் கட்சியாக மாறிவிடுகிறது.வாசுதேவ நாணயக்காரவினது அரசியலானது இன்று இலங்கை அரசினது பாசிச அபாயத்தைக் குறித்து மௌனிக்கிறது.தமிழ்ச் சூழலில் புதிய ஜனநாயகக் கட்சியோ பெயர்ப்பலகைக் கட்சியாகச் சில "புத்திஜீவிகள்"பேருக்கு மார்க்சிசம் பேசும் கட்சியாகக் கிடந்து இன்றைய சூழலை எதிர்கொள்ள முடியாத அரசியல் வியூகத்தில் சுழல்கிறது. இந்தச் சூழலிலும்,"புலிகளை விட்டுவிடுங்கள்"என்ற மிகவும் அபாயகரமான சந்தர்ப்பவாத அரசியலை முன்தள்ளி, அதையே அரசியல் தெரிவாகவும் வற்புறுத்தும் நபர்கள்,புலிகளது அநுதாபிகள், மக்களது இன்றைய நிலைக்கான அரசியலானது புலியினதும்,பிற்போகுத் தமிழ்த் தலைமையினதும் தாந்தோன்றித்தனமான அரசியலது விளைவென்பதைக் குறித்து உணர்வுரீதியாக புரிவதற்கு முன்வரவில்லை.
மக்கள்-தமிழ்பேசும் மக்களது வாழ்வியல் யதார்த்தமானது இன்னொரு இனத்துக்குச் சேவகஞ் செய்வதற்கான தயாரிப்புகளால் பெருகி விரிகிறது.இந்த மக்கள்கூட்டத்தை ஏமாற்றும் திசைகளில் ஓட்டுக்கட்சிகள் நகர்கின்றன.இவர்களே இன்று"படிப்பினைகளும் மற்றும் நல்லிணுக்க ஆணைக்குழுவுக்கு"முன் வாக்குமூலம் கொடுத்து உரையாற்றுகின்றனர்.இதுவரை மக்களைக் கொன்றுகுவித்த இத் தலைவர்கள்-தலைமைகள் இதுவரைத் தமிழ் தேசியவினத்தின் சுயநிர்ணயவுரிமை குறித்தும் எந்தப் புரிதலையும் சிங்களத் தேசியவாதத்திடமோ அல்லது சிங்கள ஆளும் வர்கத்திடமோ கோரவில்லை.இது இன்றைய யதார்த்தம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.09.2010