இலங்கை-இந்தியப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதுமுடியாதிருப்பினும்,அவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் பாரிய மனித அவலம்,பிராந்தியப் பொருளாதார மற்றும் கேந்திர அரசியல் இலக்குகளின் வழிப்பட்டதே. "மக்கள் நலன்,மனிதாபிமானம்,மனிதவுரிமை,ஜனநாயகம்-பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக இவர்களின் ஊடாக நமக்குள் வந்துகொண்டபின், யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும்,பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை-பிராந்திய நலன்களை எட்டுகின்றன.யுத்தத்துக்குள் மூழ்கிய தமிழ் மக்களின் அழிவைத் திட்டமிட்டு நகர்த்திய இந்திய அரசு, இப்போது ஒன்றுந்தெரியாத பாப்பாவாக நடிக்கிறது.
வாய்ச் சவடால் விட்ட புலிகளோ மரணத்தின் விளிம்பில் மக்களைத் தள்ளிவிட்டுத் தாமும் அழியும் அரசியலைக்கொண்டியங்கித் தமிழ் நாட்டிடம் உதவி கேட்கும் போராட்டத்தோடு தமது கதையை மெல்ல முடித்துவருகிறார்கள்.தேசியத் தலைவர்,தளபதிகள்,அரசியல் ஆலோசகர்கள்,அரசியல் பொறுப்பாளர்கள் எல்லோரும் தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் மண்டியிட்டுத் தமது உயிர்வாழ்வுக்காக உயிர்பிச்சை எடுக்கும் ஒருமுகமாகச் சினிமாக்கூட்டத்திடம் "இனவுணர்வுப் போராட்டம்"செய்யத் தூண்டுகின்றனர்.புரட்சி,விடுதலை,சுயநிர்ணயப்போராட்டம் குறித்துப் புலிகள் போட்ட முடிச்சுகள் யாவும் படுபிழையானதென்பதை எப்பவோ விமர்சித்து முடித்தாகிவிட்டது.மீண்டும், இந்தப் புலிகளின் கடைக்கோடிப் போராட்டச் செல்நெறி குறித்துப் புலம்பத் தேவையில்லை!ஆனால்,மக்களின் அழிவைக்கொண்டு தமது இருப்பின்வழி மீளவும் புரட்சிகரமான அணித் திரட்சிகளைப் புலிகள் இல்லாதாக்கும் அரசியலுக்குப் பலர் முண்டுகொடுப்பது சுத்தக் கபடத்தனமானது.இதற்காகவேனும் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் குறித்துப் பக்கச் சார்பு(புலி-இலங்கை)இன்றி மக்களின் நலனிலிருந்து கருத்துக்களை முன்வைத்தாகவேண்டும்.புலிகள் இதுவரை செய்த போராட்டம் தமிழ் மக்களை அந்நியச் சக்திகளிடம் அடைவு வைக்கும் சூழ்ச்சிமிக்க போராட்டமாகும்.இது, தமது அரசியல்-போராட்ட நெறிமுறைகள்தாம் மக்களின் விடுதலைக்குச் சரியான தெரிவு என்று மாற்றுக் கருத்துக்கு மரணத்தண்டனையோடு மக்கள் விரோத அரசியலைச் செய்து, இலங்கையில் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு-சோற்றுக்குப் பலியாக்கியது.இலட்சக்கணக்கான மக்கயைப் பலியெடுத்த இப்போராட்டம்,இன்றோ இருந்த இடத்துக்கே மேலுஞ்சரிந்து வீழ்ந்துள்ளது.சகிக்க முடியாது வஞ்சனை அரசியல் இது.கண்மண் தெரியாத கற்றுக்குட்டிகளால் கடுகளவுகூட நாணயமற்ற கொலைகள் நடந்தேறியது.இதையும் விடுதலை எனும்பெயரால் நடாத்தியவொரு பாசிச இயக்கம் இன்று தமிழ்பேசும் முழு மக்களையும் அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.தூ...
நிலவும் சிங்கள அரச ஆதிக்கத்தை முறியடிக்காமல் புலிகள் பெரும் பரப்பளவுகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அது தோல்வியில் முடியுமென்பதை நாம் அன்றே கூறிக்கொண்டோம்.புலிகளின்போராட்டத்தைப் பெரிதாக்கி ஊத வைத்த சக்திகள் அதைப் பூண்டோடு அழிக்கும் அரசலையும் கொண்டியங்குவதையும் நாம் அன்று சொல்லியுள்ளோம்.இன்றைய புலிகளது படுதோல்வி,தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளின் அரசியல் சூதாட்டமாகவேறு இயங்குகிறது.அழிவது மக்கள் என்பதையும்பாராது,இந்திய மத்திய அரசும் அதன் எஜமான இந்திய ஆளும் வர்க்கமும் இலங்கை இராணுவத்தை ஏவித் தனது அறுவடையைச் செய்ய முனைவது மிகவும் கண்டிக்கத்தக்கது.இதை அம்பலப்படுத்தி இந்திய ஆளும் வர்க்கத்தைத் தனிமைபடுத்தி நமது மக்களின் விடுதலைக்கு வழிசமைக்கத் தெரியாதவொரு மூடத்தலைமையை நம்பிக் காவடி தூக்கும் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி அழிவில் முடிகிறது.தேசியத் தலைவரை இதுவரை நம்பச் சொன்ன புலிப் பினாமிகள் இப்போது தமிழ் நாட்டுச் சினமாக்கூட்டத்தையும் அந்த மாநிலத்தின் ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது தயவையும் நம்பும்படி மக்களைப் பேயர்களாக்குகிறார்கள்.சொந்த மக்களின் பலத்தை நம்பாத புலிகள்,தமது எஜமானர்களின் அரசியல் சதுரங்கத்துக்குத் தம்மைப் பலியாக்கியதை எத்தனை பக்கங்களில் நியாயப்படுத்தினார்கள்?அதை நியாயப்படுத்த எத்தனை "டாக்டர்கள்"பாலசிங்கங்கள் நமுக்குள் முளைத்தார்கள்!கேடுகெட்ட இந்த இயக்கவாதத் தனிநபர்வாத மாயை நமது வாழ்வைக் குட்டிச் சுவாராக்கியதை மறுத்து இனியும் தம்மால் நமக்கு விடுதலை சாத்தியமெனக் கதைவிடுவது உலகத்தின் முன் பெரும் சமூக விரோதமாகும்.போராட்டத்தை முட்டுச் சந்தியில் நிறுத்தியுள்ள புலிகளால் எழிச்சியடைந்த சிங்களக்கூலிப்படையோ இப்போது சிங்களத் தேசியப்படையாக மாறிவிட்டது.இதையெல்லாம் செய்வதில் புலிகளின் இயக்கம் காரணமாகப் போகிறதென்ற அன்றைய விவாதங்களை எள்ளி நகையாடிய மேட்டுக்குடி ஈழஅரசியல் "துரோகி"சொல்லி பலரைப் போட்டது.தெருவில்-லைட்கம்பத்தில் பொட்டு வைத்துத் தமது அரசியலை நியாயப்படுத்தியது.இன்றோ பெருங் கூச்சலிட்டுத் தமிழ் பேசும் மக்களைக் காக்கத் தமிழகத்தை உருகி அழைக்கிறது-அல்லது அவர்களிடம் ஏதோவொரு எதிர்பார்பைச் செய்யும்படி மக்களைத் தூண்டுகிறது.
பெரும் படையணிகளோடு ஈழ மண்ணைக் காப்பதாக்க் கயிறு திரித்த புலிகள் மக்களைக் கொல்வதற்குத் தளபதிகளைத் தயார்படுத்தியளவுக்குச் சிங்கள மேலாதிக்கத்தை-அரச ஆதிக்கத்தை உடைத்துப் போராட்டத்தை முன்னெடுக்கத் தக்கபடி மக்களை அணிதிரட்டிப் பெரும் படையணியாகக் கட்சியை-இயகத்தைக் கட்டமுடியாது தேசியத் தலைவரைச் சுற்றி ஒளிவட்டம் அமைத்தார்கள்.இதற்கெல்லாம் தான் அருகதையானவனா என்றுகூட எண்ணாத பிரபாகரன் இன்று தமிழ்பேசும் மக்களை மரணப்பொறிக்குள் தள்ளி இலட்சக்கணக்கானவர்களின் அழிவில் தனது கதையை முடிக்கும் போர்க்கைதியாக வன்னிக்குள் முடங்கிக்கிடக்கச் சிங்கள ஆளும் வர்க்கம் இந்தியத் தயவோடு தமிழ் பேசும் மக்களை வேட்டையாடி வருகிறது.
பெரும்பகுதி மக்களால் ஏற்கப்படும் ஒரு நிகழ்வில்(புரட்சி) புலிகள் பெரும் பங்கை அந்த மக்களுக்கு எதிராகவே ஆற்றும் யுத்தக் கூறுகளாக விரித்து வைக்கிறது.நமது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று எவராவது கூறுமிடத்து அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.இது வன்னியில் (இப்போது) நிசமாகி வருகிறது.
எமது சமுதாயத்துள் இந்த நிலைமை இப்போதைய சூழலாகி வருகிறது.சிங்கள இனவாத அரசு அதை நோக்கியே நம்மைத் தள்ளி நமது முழு வலுவையும் சிதைப்பதில் உலக உதவியையும் நாடியுள்ளது.இதன் தொடர் நிகழ்வில் நிர்பந்தமாக முன்வைக்கப்படும் பாரிய யுத்த முன்னெடுப்புகள் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிவிட்டது.இன்றைக்குப் புலிகளுக்கும்,இலங்கைப்பாசிச சிங்கள அரசுக்குமான போராட்டம்,புதிய வியூகத்தோடு முன்னெடுக்கப்பட்டுச் சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டுவருகிறது.புலிகளுக்கு எதிரானதெனவும்-பயங்கரவாதத்தை முறியடிப்பதெனுவுஞ் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழுத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது.இந்தியாவின் பொருட்டு எவரும் இலங்கையில் சாகமுடியாது.ஆனால், தமிழ்த் தரப்பிலும்,சிங்களத் தரப்பிலும் அது நடந்தேறுகிறது.இந்தச் சழற்சியுள் இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தியாவினூடாகத் தனது இருப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கைத் தமிழ் மக்களை வெறும் யுத்தத்தால் கொன்றழித்துவருவதுமட்டுமின்றி,அவர்களைப் பொருளாதாரத்தாக்குதலால் மெல்ல அழித்து அகதிகளாக்கிவருகிறது.பண்டுதொட்டு வாழ்ந்த நிலப்பிரதேசங்களை இழப்பதற்குரிய முன்னெடுப்போடு செய்யப்படும் இந்த யுத்த-இராணுவவாத முன்னெடுப்பு தமிழ் பேசும் மக்களுக்கான பாரம்பரிய நிலப்பரப்பின் அடையாளங்களை மெல்லத் தடயமின்றி அழித்து அவர்களைப் புதிய புதிய இடங்களுக்கு இடம்மாற்றிச் சாவின் விளிம்பில் தள்ளுவதற்கான மிகப் பெரிய யுத்தத்தைச் செய்வதற்குப் "புலிப்பயங்கரவாதம்"உடந்தையாகி வருகிறது.
எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.புலிகளுக்கும்,சிங்கள இராணுவத்துக்குமான போராட்டம் சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி தொழில் நுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகினாலும் இவைகளால் மட்டுமல்ல சிங்கள இராணுவத்துக்கான வெற்றி நிச்சியமானது.மாறாகப் புலிகளின் மக்கள் விரோத அரசியல் மற்றும் இயக்க நலனே இதை வெகுவாகச் செய்து முடித்தது.இன்றோ யார் யாரிடமோ தமிழ் மக்களைப் பிச்சையெடுக்கப் புலிகள் தூண்டுகிறார்கள்.எத்தனையோ கதைகளினூடாக மக்களை வேட்டையாடிய அரசியலிருந்து கற்றுக்கொண்ட சிங்கள ஆளும் வர்க்கத்துக்குப் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி அழிப்பது மிக இலகுவான காரியமாச்சு.இப்போது மக்கள் தமது உயிர்வாழ்வுக்காகச் சோற்றை மட்டுமே நம்பும் நிலையைச் செய்ததில் புலிகளின் போராட்டம் புதுமை செய்துவிட்டது.இதையிட்டுப் பிரபாகரனும் அவரது தளபதிகளும் பெருமையடையலாம்!
பிரபாகரனின் அரசியல் வியூகமோ தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி"புலிகளை எதிர்பவர்கள் தமிழர்களை எதிர்பவர்கள்"என்றும் கருத்துக் கட்டுகிறது புலி விசுவாசம்.இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.இங்கே,மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும் புலிகளுக்கும் மற்றும் குழுக்களுக்கும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் இதே கதைதாம்.
ஆனால்,தொடரும் யுத்தங்களின் பின்னே ஏற்படும்"வெற்றி-தோல்விகள்"இலங்கையின் இராணுவப் பிடியிலிருந்து தமிழ் பேசும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்காது தமது விடுதலை குறித்த கற்பனைகளை வளர்த்துள்ளார்கள்.ஓட்டுக் கட்சிகளின் அற்பத் தனமான பரப்புரைகளால் இந்த மக்களின் விடுதலையென்பது வெறும் வடிகட்டிய முட்டாள் தனமான யுத்தங்களால் பெற்றுவிட முடியுமெனுங் கருத்தோங்கியுள்ளது.இதையே தமிழகத்து ஓட்டுக் கட்சிகள் வாய்ச் சவடாலூடாகவும்வேறு வழி மொழிகிறார்கள்.
புலிகள் தமது நலனை அடைவதற்காகத் தமக்கும் சிங்கள அரசுக்கும்-இந்தியாவுக்கும் இடையிலான முரண்பாட்டை முழு மொத்த மக்களினதும் முரண்பாடாக்கி வைத்திருக்கும் இந்த அரசியலில்-யுத்தத்தில் மக்களுக்கு விடிவு உண்டா?இங்கே, தேசிய விடுதலை என்பது இருப்புக்கான-மக்களை அணி திரட்டுவதற்கான கோசமாகவே இருக்கிறது.ஆனால்,இதைச் சாட்டாக வைத்துச் சிங்கள இனவாத அரசு தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து அழித்து வருகிறது.இது மக்களை காலவோட்டத்தில் சிங்கள அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் யுத்தாமாகச் சீரழிந்து போகிறது-போய்விட்டது!
புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது உணர்வினது மட்டுப்படுத்தப்பட்ட "அறிதிறனால்"செயலூக்கமாக விரிகிறது.வாழ்வாதரமற்ற பகுதிகளைவிட்டகலும் உயிரியானது தனது இருப்புக்காக இன்னொரு பகுதியைக் கண்டடையவேண்டிய நிர்பந்தம் யுத்தசூழலால் தீர்மானிக்கப்படுகிறது.இந்தயுத்த சூழலலைத் தீர்மானித்த பொருளாதார முரண்பாடானது வரலாற்றுப்போக்கில் வெகுவாக முழுமொத்த மனித சமுதாயத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிறது.இந்நிலையில்,மனிதரின் உயிர்வாழ்வுக்கான புவிமீதான இடைச்செயல் அத்தியவசியத்துக்கு மீறிய மட்டுப்படுத்தமுடியாத குவிப்புறுதிய+க்கத்தால் தொடர்ந்து இயற்கை வளம்,மனித வளம் அழிக்கப்படுகிறது.இதன் உச்சபச்ச நுகர்வ+க்கம் மக்களின் உயிhவாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிடுகிறது.இத்தகைய நிலைமையில் இன்றைய மக்கள் சமுதயாங்களின் இருப்பானது எதுவரை சாத்தியமாகும்?தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் தொடரும் யுத்தம் திருடிக்கொண்டிருக்கிறது.இது தேசத்தின் பெயராலும்,தேசியத்தின் பெயராலும் அனைத்தையும் ஓப்பேற்றி முடிக்கும் கருத்துக்களை மிக அராஜமாக விதைக்கிறது.இதற்கெதிரான பார்வைகளைத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானதாகச் சொல்லித் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது புலித் தேசியம்.
இன்றைய யுத்த முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,யுத்தத்துள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது.நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் யுத்த முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.
இப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது.சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது.வலுகட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் புலிகள் அதன் வாயிலாகப் "புலிகள் என்றால் தமிழர்கள்,தமிழர்களென்றால் புலிகளெனும்" புதிய தத்துவத்தைச் சொல்லிக் கொள்ளும் கருத்துக்கு வலுச் சேர்க்கத் தமது பரப்புரைப் பீரங்கிகளையும் தயாராக்கி வைத்துள்ளார்கள்.இதையே வாந்தியெடுக்கும் புலிவால்களுக்கு மக்களின் அழிவை புலியின் இருப்புக்கான பிரச்சாரமாக்க முடிகிறது!இதையேதோம் சிங்கள இராணுவமும் பயங்கரவாத முத்திரையாக்கி இலங்கையில் மனித அழிவைத்தடுக்கப் புலிப்பயங்கரவாதம் அழிவது அவசியமென்று தொடர்ந்து இந்தியாவின் கட்டளையோடு போரை இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் விஸ்தரித்துவிட்டுள்ளது.
இந்தக்கேடுகெட்ட சமூக யதார்தமானது மனிதவுயிர்களைப் பலியெடுத்து எதிர்காலத்தை நாசமாக்கி வரும்போது தனித்த தேசங்களும் ,மக்களினங்களும் தமது சுயநிர்ணயமான அரசை,வாழ்வை,பொருள் உற்பத்தியைக் கொண்டிருக்க முடியுமா?தொடர்கின்ற இனங்களுக்கிடையிலான யுத்தங்கள் இறுதி இலட்சியத்தை அடைந்து மக்களை நிம்தியோடு வாழும் அரசியல்,பொருளியல் வாழ்வைத் தருமா? இது சார்ந்து நாம் சிந்திக்கிறோமா?கற்பனைகளில் எவரும் அரசியல்,பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது.அல்லது தேசியத் தலைவர் திடீர் அதிரடி கொடுத்துச் சிங்கள இராணுவத்தை வென்று தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தருவாரென நம்பவும் முடியாது.அப்படி நம்பிகையோடு சிறுபிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்வது மிக இலகுவானது.இந்தப் பாடத்தின் இன்றைய பலாபலன் வாழும் இடங்களையும்,இலட்சக்கணக்கான உயிர்களையும் நாம் தொலைத்ததில் முடிந்துள்ளது.
பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக்காயாக்கியபடி புரட்சி முன்நகர்வதல்ல.புலிகளின் போராட்டம் புரட்சியை நிபந்தனையாக்கியபடி இத்தகைய மக்களின் முன்னணிப்படையைக் கொண்டிருப்பவர்களும் அல்ல.எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகினடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி யுத்தத்துக்குள் திணிப்பது இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தேசத்தை விடுவிக்க முடியாது.இது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.
சமூக முரண்பாடுகளை வெறும் மொழிவழிக் காரணியளாகக் கருதும் தமிழ்மனம்-சிங்களமனம் எங்ஙனம் உருவாக்கப்படுகிறது?இந்த மனம் கட்டவிழ்த்துவிடும் உளவியற்பயங்கரம் மற்றைய மனிதர்களைக் கொல்வதில் எதேச்;சையாக முடிவுகளை எடுக்கிறது!
இந்தச் சமூகத்தில் ஒடுக்குமுறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,வன்னியில் கொட்டும் சிங்கள விமானங்களின் ஒவ்வொரு குண்டிலும் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அதை உணருமுடியாதளவுக்குப் "புலிப் பயரங்வாதத்தை" முன் நிறுத்தி வருகிறது தமிழ்ர்களுக்குள் இருக்கும் பதவி வெறிபிடித்த குழுக்களும்,இலங்கை அரசும்.
தொடர்கிற யுத்தங்களால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்!
நமது சமூக சீவியம் உடைந்து,நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.இந்தக் கொடிய யுத்தங்கள் எமது தேசத்துள் எமக்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுத் தருவதற்கில்லை.
மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை.
மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கிக்கொண்டு, சிங்கள இராணுவ ஆட்சியாளர்கள் மற்றும் இந்தியாவோடு நடாத்திய பேரங்கள் யாவும் இனி முடிவுக்கு வந்தால், அவர்களுக்குள் இன்னுமொரு உடைவும்,வன்னிக்கான ஒரு கருணாவும் பிறக்கப்போவது நிச்சியம்.அப்போது,பிரபாகரனின் தேசிய விளையாட்டுக்கான மைதானம் சுருங்கிவிடும்.அங்கே, அவரது காலடிச் சுவடும் அப்போது சேர்ந்தழியும்.இதையேதாம் இன்றைய இந்திய ஆளும் வர்க்கம் கனவுகாணுகிறது.இதற்காகத் தமிழகமும் அதன் ஓட்டுக்கட்சிகளும்,சினிமாக்கூட்டமும் போடுகின்ற கூச்சல்கள் யாவும் நமக்கான விடுதலைக்கு மாறாக இந்திய ஆளும் வர்க்கத்தின் கனவுகளுக்கு மறைமுக ஆதரவாக்கப்படும் நெடிய வியூகம் இந்தியாவிடம் உண்டு.
ப.வி.ஸ்ரீரங்கன்
02.11.2008
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
2 comments:
அன்புள்ள எழுத்தாளருக்கு, வணக்கம் தங்களின் இந்த கட்டுரையை படித்தபின், உங்களின் மேலும் சில கட்டுரைகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது...ஆனால் நடுநிலையில் நின்று நீங்கள் பிரச்சினையை நோக்குவது ஆரோக்கியமான விடயம்..அதோசமயம் இந்த இனப்பிரச்சினைக்கு தாங்கள் விரும்பும் தீர்வு என்ன? தாங்கள் விரும்பும் தீர்வு என்பது.... மக்கள் சமாதானமாக, அமைதியாக, தங்களின் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து கடமைகளை செய்யும் விதமாக இலங்கை தீவை மாற்ற என்ன விதமான முடிவை உலகநாடுகள், ஐ.நா சபை. ஆகியவை பரிந்துரைக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்கள்....--- ஒரு தமிழனாக பிறந்த மனிதன்.
//அன்புள்ள எழுத்தாளருக்கு, வணக்கம் தங்களின் இந்த கட்டுரையை படித்தபின், உங்களின் மேலும் சில கட்டுரைகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது...ஆனால் நடுநிலையில் நின்று நீங்கள் பிரச்சினையை நோக்குவது ஆரோக்கியமான விடயம்..அதோசமயம் இந்த இனப்பிரச்சினைக்கு தாங்கள் விரும்பும் தீர்வு என்ன? தாங்கள் விரும்பும் தீர்வு என்பது.... மக்கள் சமாதானமாக, அமைதியாக, தங்களின் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து கடமைகளை செய்யும் விதமாக இலங்கை தீவை மாற்ற என்ன விதமான முடிவை உலகநாடுகள், ஐ.நா சபை. ஆகியவை பரிந்துரைக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்கள்....//--- ஒரு தமிழனாக பிறந்த மனிதன்.
அன்புடையீர்,வணக்கம்!
தாங்கள் என்னை"எழுத்தாளன்"என்கிறீர்கள்!ஐயோ-ஐயோ,அவ்வளவு பெரிய ஆளில்லை நான்.சமூகஞ்சார்ந்து சிந்திப்பவர்களைக் கற்றதன் பயனாய் எமது நெருக்கடிகளை அத்தகைய கண்ணோட்டங்கள்-ஆய்வுகள் அடிப்படையில் உடைத்துப் பார்க்கிறேன்,அவ்வளவுதாம்!
அடுத்து-
இனப்பிரச்சனைக்குத்"தீர்வை"முன்வைத்தல் எனது வேலையல்ல.அதை முன்வைக்க வேண்டியவர்கள் மக்களை மேய்ப்பவர்கள்.
இவர்களால் நடாத்தப்படும் யுத்தம் மக்களுக்கு எதிரானது.இதையே அம்பலப்படுத்துகிறேன்.
இன்றைய உலகத்தின் பிரச்சனைகளுக்கே மூலகாரணமானவர்கள் யாரென்றால்,நீங்கள் குறிப்பிட்ட"உலக நாடுகள்,ஐ.நா சபை"கள்தான் காரணமாகின்றன.இந்த நிலையில் நான் இவர்களைப் பிரச்சனைகளை-இனப்பிரச்சனைகளை உலகத்தில் தீர்ப்பதற்கு அழைக்கவில்லை.மாறாகப் போராடும் இனங்கள் தம்மைத்தாமே விடுவிக்கும்போரைத் தமது கால்களில் தங்கிப் போராடும்படியேதாம் கூறுகிறேன்.அத்தகைய போராட்டத்தை மக்களே(இயக்க-குழு நிலை தவிர்த்து)முன்னின்று தமது தலைமைக்குத்தாமே பொறுப்பாகப் போராடுவதென்று கடந்தகால விடுதலைப் போராட்ட வரலாறுரைக்கிறது.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி.
தொடர்ந்து விவாதிப்போம்.
ஸ்ரீரங்கன்
Post a Comment