Saturday, November 15, 2008

புலிகளின் புதிய பிறப்பு என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய பிறப்பு என்ன?


"இயக்கவாத மாயை உருவாக்கிய "விடுதலைப் போராட்டம்"முடிவுக்கு
வருகிறது,அதன் மீட்சியாக இன்னொரு வகையிலான புதிய அரசியல் கோரிக்கை
முன்னெழும்.அது,முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும்,இலங்கைச் சிறுபான்மை
இனங்களுக்கும் எதிராக இருக்கும்.தென்கிழக்காசியிவில் நிலவிய புரட்சிகர
அபாயத்திலிருந்து கிழக்காசிய ஆளும் வர்க்கங்கள் தற்காலிகமாக விடுபடுகின்றன.இனி
நிகழப்போகும் புலிகளின் மீள் உருவாக்கத்திலிருந்து,புதிய தெரிவுகள்-புதிய பாணிலிலான
இயக்க அமைப்பாண்மையைக் கோரிக் கொள்ளும்?."

இன்றைய ஈழப்போராட்டச் சூழலில் களத்தில் போராடுவதாகச் சொல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமகாலத்தினதும்-இன்றையதுமான இராணுவ-அரசியல் தோல்விகள் உண்மையில் தவிர்க்கமுடியாத ஒன்றா?,புலிகளின் கட்டமைப்புச் சிதைந்து,அந்த இயக்கம் உண்மையிலேயே அழிந்துவிடுமா?

இவர்கள் எந்த வகையில் இத்தகைய நிலைமைக்கு உள்ளானார்கள்?

இத்தகைய கேள்விகள் நமக்குள் தொடர்ந்து எழுகிறது அல்லவா,இவைகள் உண்மையில் நமது மக்களின்மீதான கரிசனையின் வெளிப்பாடுகளால் மட்டுமல்ல எழுகிறது.மாறாககச் சிங்கள வன் கொடுமை இராணுவத்தின்மீதான கடந்தகால அநுபவத்தினதும் உணர்வுகளிலிருந்தும் எழுகிறது!


தமிழ்பேசும் மக்களின் விடுதலைகுறித்துச் சிந்திப்பவர்கள் தவிர்க்கமுடியாது இத்தகைய கேள்விகளைக் காவித்திரிகிறோம்.இத்தகைய கேள்விகளுக்கு ஓரளவு பதில்களைத் தோழர் இரஜாகரன் பல கட்டுரைகளுடாகச் சொல்லிவருகிறார்.இது உண்மையில் புலிகளின் வீழ்ச்சியைக் குறித்த சரியான மதிப்பீடாகுமா?


புலிகள் சாரம்சத்தில் ஒரு விடுதலை அமைப்பாக இருக்கும்போது நிச்சியம் தோழர் இரஜாகரனின் கருத்துப் பொருந்தாதுபோகிறது!இங்கேதாம் ஒரு உண்மை நமக்குள் புரிவதற்குக் கஷ்டமாக இருக்கிறது.
அந்த உண்மை எதுவாக இருக்கும்?


ஆம்,புலிகள் உண்மையில் புரட்கர விடுதலைப் படையாக என்றுமே இருக்கவில்லை! இது கசப்பானவுண்மை வாசகர்களே.இனியொரு சூழலில் புலிகள் குறித்த மீள் மதிப்பீடுகளே ஆய்வுக்குரிய களமாகத் தென்கிழக்காசியப் புரட்சிகர அமைப்புகளிடம் மாறப்போகிறது.புலிகள் ஒடுக்குமுறைக்கெதிராகப் படைகட்டித் தமிழ்பேசும் மக்களின் ஆதரவோடு போராட்டத்தைக் கைப்பற்றினார்களேயொழியத் தமிழ்பேசும் மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டி அவர்களிடம் போராட்டத்தைக் கையளிக்கத் தவறினார்கள்.இது எதனால் நிகழ்ந்தது?


எம்மிடம் மிக விவேகமான மக்கள் சமுதாயமிருக்கிறது.துடிப்புடைய சிந்தனை மரபிருக்கிறது,எனினும்,நாம் தோற்கடிக்கப்பட்டோம்.


ஏன்-எதற்காக?

நமக்குள் தோன்றிய அமைப்புகள் யாவும், நமக்கு எதிராகவே செயலாற்றத்தக்கபடி அத்தகைய அமைப்புகளின் செல்நெறி உருவாகியது தற்செயலானதாக இருக்க முடியுமா?இக்கேள்விக்கு நியாயமாகப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்!ஆனால்,பதில் கானல் நீராகவே புலப்படுகிறது.எனவே,கேள்விகள்-கேள்விகளாகவே இருக்கிறது.
இந்தக் கேள்விகள் மிக வேகமாக நம்மைத் தாக்கிக் கவலையுற வைக்கின்றன!


நாம் எங்ஙனம் ஏமாற்றப்பட்டோம்? இத்தகைய ஏமாற்று அரசியலுக்குத் தமிழ் இளைஞர்கள் எங்ஙனம் பலியாகினார்கள்?இன்றைய நமது போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புலிகள்தான் காரணம் என்ற ஒற்றைப் பதில் நியாயமாகத் தெரியவில்லை.எனவே,புலிகளை முன்னே தள்ளியபடி அவர்களின் பின்னே மறைந்திருக்கும் சக்தி எது-ஏன் எம்மைப் புலிகளினூடாகத் தோற்கடித்தார்கள்-கொன்றொழித்தார்கள்?


இக் கேள்விகளுக்கு நாம் பல்வேறு கட்டுரைகளுடாகப் பதில் கூறியிருக்கிறோம்.

ஆனால்,அதைவிட,இன்றைக்கு அனைவரும் சுயமாகப் பதில்களைத் தேடி நமது போராட்டம்குறித்து மீள் மதிப்பீடுகள் செய்வது அவசியம்.நம்மைப் புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் ஏமாற்றிவிட்டார்கள்.இவர்களை வைத்து நம்மை வேரோடு மொட்டையடித்த அந்நியச் சக்திகள் இன்று நமக்காக உணவுப் பொட்டலங்களை அனுப்புகிறார்கள்.சினிமாவுக்கு விசில் அடிக்கும் இன்னொரு கூட்டத்தைத் தயார்ப்படுத்த இந்த நாடகம் அரங்குக்கு வருகிறது.


இங்கே ஒன்றைச் சுட்டுவது அவசியம்!அதாவது,நாம்,சுயநிர்ணய உரிமைக்காக மட்டும் போராடவில்லை.அன்றாட வாழ்வில் மிகச் சாதாரணமாக நிகழ்ந்த இனவாத அரசியல் போக்குகளின்வழி அதை மறுத்து, எமது மனித கௌரவத்துக்காகவும் போராடினோம்.

இலங்கைச் சிங்கள அரசின் அனைத்துவகையான இனவொதுக்கற் செயற்பாட்டுக்கும் முகம்கொடுக்க முடியாது, வாழ்வுக்காக-உயிர்த்திருப்பதற்காகப் போராடினோம்.இன்று,நமது உயிர்கள் இலட்சக்கணக்காகப் பறிக்கப்பட்டபின் பிளேனிலிருந்து உணவுப்பொட்டலம் போட்டவர்கள்,கப்பலில் உணவுப்பொட்டலம் அனுப்புகிறார்கள்.இதற்காகவா நாம் இலட்சக்கணக்காக நமது உறவுகளைப் பலி கொடுத்தோம்?,(இந்தியா பல்வேறு ஆயுதக் குழுக்களுக்குப் பின்னால் நின்று நம்மை இத்தகைய நிலைக்குள் தள்ளிவிட்டு,இப்போது நல்ல மனிதர் வேடம் போடுகிறது.இப்போது நமது மக்களின் மனங்கள் அதற்கு அவசியமானது!).


இந்த இலட்சணத்தில்,சிங்கள இனவாதப் பாசிச அரசும் அதன் இராணுவமும் நம்மை நன்றாகவே இதுநாள்வரை ஏமாற்றுகிறது.

இந்த அரசு,கணிசமான தமிழ்பேசும் மக்களைக் கொன்றுகுவித்துவிட்டு,அவர்களது பாரம்பரிய நிலத்தை அபகரித்துவைத்தபடி,களத்தில் உயிரோடு பிடிபட்ட புலிப்போராளிப் பெண்களை மிகக் கௌரவமாக நடாத்துவதாக வீடியோப் படங்காட்டுகிறது.விருந்துபசாரஞ் செய்து,போராளிப் பெண்களை வரவேற்று மருத்துவஞ் செய்வதாக வும் இன்று பரப்புரை செய்கிறது.சிங்கள அரசும்,அதன் இராணுவமும்!


விடுதலைப் புலிப்போராளிகள் உயிரோடும் பிடிபட்டுப் போகிறார்கள் இன்று!

அவர்கள் மகிழ்வாகச் சிங்கள அரசோடு உரையாடுவதாகவும்-உணவருந்துவதாகவும் இருக்கிறது.

மட்டக்களப்பில் தமிழ்ப் பெண்ணான கோணேஸ்வரி என்ற தாயை பாலியற்பலாத்தகாரத்துக்குட்படுத்தி, அவளது பிறப்புறுப்புள் குண்டுவைத்துக் குதறிய இராணுவச் சிப்பாய்கள்,இங்கே புலிப் பெண் போராளிகளிடம் மிகவும் கௌரவமாக நடக்கின்றார்கள்!(இதை எழுதும்போது,யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வு கண்முன்னே நிழலாடுகிறது,ரெலோப் போராளிகளைக் கொன்றொழித்து,இரயர் போட்டெரித்த சம்பவங்கள் விரிந்தும் மேவுகிறது!)ஆனால்,இதே இராணுவத்தின் தலைமையாக இருக்கும் சிங்கள அரசு அப்பாவி ஊடகவியலாளர்களைக் கொடுஞ் சிறைக்குள் தள்ளிச் சித்திரவதை செய்கிறது(இதை எழுதும்போது,புலிகளின் இருண்ட நிலத்தடி அகழிகளில் உதைபடும்,அப்பாவித் தமிழர்கள் விழிமுன்னே வருகிறார்கள்,மாத்தையாவும்,அவரோடு சாம்பலாகிய நூற்றுக்கணக்கான போராளிகளும்கூடவே நியாயம் கேட்கிறார்கள்),அப்பாவித் தமிழர்களை நாயிலும் கேவலமாகக் கொழும்பில் நடாத்துகிறது.தமிழ்பேசுபவர்களை அவமானப்படுத்துகிறது!வேற்று நாட்டவர்களை நடாத்துவதுபோன்று தனது சொந்த இனத்தைப் பொலிஸ்-இராணுவக் கண்காணிப்பின்கீழ் திறந்தவெளிச் சிறைச்சாலை வாழ்வை வாழ வைத்தபடி உலகுக்கு இரட்டை வேடம் போடுகிறது மகிந்த அரசு!


ஒருவர் ஆயுதும் எடுத்து ஒடுக்கு முறை அரசுக்கெதிராகப் போராடியவர்.

மற்றவர்,பேனை எடுத்து ஒடுக்குமுறை அரசுக்கெதிராகப் போராடியவர்.
பேனைக்குக் கஸ்ரடி-அடி உதை!
துப்பாக்கிக்குக் கௌரவ விருந்து,மருத்துவம்.
இது உண்மையில் எதை எடுத்துரைக்கிறது?

நாடகம்? புலிகளின் பின்னே நிற்கும் போராளிகளைத் தூண்டிலிட்டு வென்றெடுக்கிறது.அது,வென்றுவிடுகிறது பல தருணத்தில்.புலிகளின் கதை முடிக்கப்படுவதற்குமுன்,இன்னொரு புதிய அணி அதற்குள் உருவாகிறது.மெல்ல உருவாகும் இந்த அணிக்கு மீளவும் தேசியத் தலைவரே,தலைவராகிறார்-ஆனால்,இன்னொரு முகமூடியோடு!அந்த முகமூடி எத்தகையதென்பதில்தாம் இப்போது வன்னிக்குள் போராட்டம்!

ஆம்!
சிங்கள அரசு இந்திய வியூகத்தின் துணையோடு திட்டமிட்டுச் செயலாற்றுகிறதென்பதை இந்தச் சின்ன நிகழ்வுகள் குறித்துரைக்கிறதுதானே?

காலம் பூராகவும் நம்மை ஒடுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கங்கள் ஏதோவொரு முறையில் ஒடுக்குதலையே தத்தம் தலைமைக்குள் ஆதிக்கமாக-அதிகாரமாக நிகழ்த்திய வரலாற்றுப் போக்கில் அதைச் சட்டபூர்வமாக்கிய சிங்கள-தமிழரசாகப் பங்கு போடுவதற்கான போட்டியில் புலிகள் இப்போது இராணுவ ரீதியாக ஓரங்கட்டப்படுகிறார்கள்.கடந்த சமாதானக்காலத்திலிருந்து புலிகளின் வீழ்ச்சி ஆரம்பமாகிறதாகச் சிலர் கூறுவது உண்மையில்லை!

புலிகள் தமிழ்பேசும் மக்களை ஏமாற்றி விட்டார்கள்.

சிங்கள அரசு எங்ஙனம் நம்மை ஏமாற்றியதோ அதே பாணியில் புலிகள் நம்மை அந்நிய ஆர்வங்களின்வழி ஏமாற்றியுள்ளார்கள்.இவர்களால் தோற்கடிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்துக்கான போராட்டம் இனியும் திடமோடு எழுந்து நிற்க்கும் ஆற்றலோடில்லை!இது,சிங்கள-இந்திய அரசுகளுக்கு அடிமையாகக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயமாக மாற்றப்பட்டு,காட்டிக்கொடுக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சமுதாயமாகக் கிடக்கிறது.


எங்கு நோக்கினும்,பணம் பண்ணும் ஒரே நோக்கு மலிந்து கிடக்கிறது!
ஈழத்தைச் சொல்லி,போராட்டத்தைச் சொல்லி,அகதிகளைச் சொல்லிப் பிழைப்பு நடந்தேறுகிறது.


புலிகளின் இருப்புக்கான போராட்டமல்ல இது.வன்னிக்குள் நடக்கும் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்து வைத்த இந்தயச் சாணாக்கியம் வெற்றிமேல் வெற்றியை மகிந்தா இராஜபக்ஷ வடிவில் பறிக்கிறது.


இந்திய வியூகத்தைத் தோற்கடிக்கும் ஆற்றல் இலங்கையின் எந்தச் சமுதாயத்திடமுமில்லை!நாம்,இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்காகச் சிங்கள இனவாத அரசுக்கும் அதன் இராணுவத்துக்கும் கொத்தடிமைகள்.இந்தக் கொத்தடிமை வாழ்வுக்கு முதலில் பயிற்றப்பட்டவர்கள் யாழ்பாண மாவட்ட மக்கள்.பின்பு,கிழக்கு மாகாண மக்கள்,இப்போது வன்னி மக்கள்.

இதைவிட வேறொரு விடிவும் எமக்கு இனிமேல் எட்டாது!தோழர் இரஜாகரன் கூறுவது சாத்தியமாகி வருகிறது!


"நாம்,நமது ஆயுதக் குழுக்களாலும்,புலிகளாலும் தோற்கடிக்கப்பட்டோம்-கொல்லப்பட்டோம்!" என்பதைவிட,இந்திய-உலக மேலாதிக்கங்களால் பழிவாங்கப்பட்டோம் என்பதே சரி!
எமக்கினி விடிவு இல்லை!


அடிமை வாழ்வு,உணவுக்காக,உடைக்காகக் கையேந்தும் சிறுமை வாழ்வைத் தந்ததைவிட எதையுமே இந்தப் புலிப்பாணிப் போராட்டம் நமக்குத் தரவில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்.
15.11.2008

2 comments:

Anonymous said...

அடுத்து நடக்கப்போவது?
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுப்பது என்பதாகும்.
இன்று வன்னி மீது தொடுக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தினை புலிக்கெதிரானது எனக் கருதிக் கொள்கின்ற புலியெதிர்ப்பாளர்களும் அங்கு மக்கள் படும் துன்பத்தினை வெளிக்கொணர்வதில் திட்டமிட்டே தவிர்க்கின்றனர். புலிகளின் அழிவில் மூலம் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்று அரசபயங்கரவாததிகளுக்கு ஈடாக புலியெதிப்பாளர்கள் கருதுகின்றனர். புலியை அழித்து விட்டால் எல்லாம் தமிழ் மக்களுக்கு கிடைத்துத் தான் விடுமா?
புலிகள் மக்களை அடக்கி ஆழ்கின்றனர் இவைகள் எல்லாம் உண்மைதான் அதற்காக புலிகளின் தலைமைதான் நாம் பொறுப்பாளிகள் ஆக்க வேண்டும். அதனை விடுத்து புலிகளில் உள்ள உண்மையான தேசபக்கதர்களை அழிக்க வேண்டும் என எண்ணிச் செயற்படும் புலியெதிர்ப்பாளர்கள் எவ்வாறுதான் அனைத்து இனங்களுக்குமான உரிமையை உறுதி செய்யும் தீர்வினை முன்வைப்பார்கள்.

கிழக்கின் விடிவெள்ளிகள் ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்டிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களின் பொறுப்பில் இருக்கும் மாகாணசபையில் ஒரு பொலிசைக் கூற மாற்ற தமக்கு உரிமை இல்லாத மாகாணசபை என அதன் உறுப்பினர்கள் கூறுகின்றனர். இவ்வாறாக எதுவுமற்ற ஒரு தீர்வையாக இவர்கள் மக்களுக்கு கொடுக்கப் போகின்றார்கள்.
புpராந்தியத்தில் மக்களின் உரிமையை நிலைநாட்டக் கூடிய சக்திகளை (புலிகளின் தலைமையைக் கொள்ளாதீர்) இல்லாது ஒழிப்பதே இன்றைய நிலையில் அனைத்து ஒடுக்குமுறையாளர்களும் தமக்கிடையே கூட்டிணைவுடன் செயற்படுகின்றனர். இவ்வாறிருக்கையில் புலியெதிர்ப்பாளர்கள் புலிஎதிர்ப்புக்கோசம் போட்டுக்கொண்டே அனைத்து இனமக்களின் உரிமையை நசுக்குவதற்கு ஒடுக்குமுறையாளர்களுக்கு துணைபோகின்றனர்.

சொந்த மக்களின் அழிவில் அக்கறையற்றிருக்கும் இந்தச் சக்திகளின் நிதர்சனமற்ற செயற்பாட்டால் " இன்னொரு புதிய அணி அதற்குள் உருவாகிறது. மெல்ல உருவாகும் இந்த அணிக்கு மீளவும் தேசியத் தலைவரேஇதலைவராகிறார்-ஆனால்இஇன்னொரு முகமூடியோட அந்த முகமூடி எத்தகையதென்பதில்தாம் இப்போது வன்னிக்குள் போராட்டம்!" நீங்கள் கூறுவதைப் போன்றுதான் உருவாகச் சந்தர்ப்பம் இருக்கின்றது. புலிகளின் வரலாறே மக்களின் இரத்தைத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டதாகும்.
புலியெதிர்ப்பாளர்களின்; இவ்வாறான அரசியல் நடடிக்கைகள் பிற்போக்குத் தலைமை மறுபடியும் வேறுவடிவில் மறுவார்ப்பு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியாததாகும்.
அதேபோல மக்களுக்கான உரிமையை உறுதிப்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதனை புலியெதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ளப்போவதில்லை.

"நாம்இநமது ஆயுதக் குழுக்களாலும்இபுலிகளாலும் தோற்கடிக்கப்பட்டோம் -கொல்லப்பட்டோம்!" என்பதைவிடஇ இந்திய-உலக மேலாதிக்கங்களால் பழிவாங்கப்பட்டோம் என்பதே சரி! எமக்கினி விடிவு இல்லை!
இவை உண்மையானதே ஆனால் அடுத்த கட்டம் என்னவென்று சிந்திப்பதும் அதனை செயற்படுத்துவதும் தான் இன்றுள்ள முக்கிய பணியாகும். உண்மையான தேசபக்தர்கள் எதிரிகளுக்கு மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இதனை நிரூபிக்கின்ற வகையிலான பல விமர்சனங்களை தோழர்கள் சிறிரங்கன் மற்றும் ரயாகரன் எப்பொழுதும் திடமாக முன்வைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்வதில்லை.
குறிப்பாக இன்றைய இணைய தளம் நடத்தும் சமூக ஜனநாயகவாதிகள் திட்டமிட்டே தோழர்ரயா மற்றும் சிறிரங்கனின் விமர்சனங்களை கருத்துக்களை இருட்டடிப்புச் செய்து கொண்டே போகின்றனர்.
புலிகள் என்ற அதிகாரவர்க்கதின் வீழ்ச்சி பற்றி அதிகம் பேசவேண்டியதில்லை. புலிகளில்; உள்ள தேசபக்தர்களை எவ்வாறு தொடர்ச்சியாக மக்களின் முன்னணிப்படையாக அவர்களை உள்வாங்கிச் செயற்படுவது என்பதான விமர்சனங்களும் வழிகாட்டல்களும் இன்றைக்குச் தேவையானதாகும்.
இன்றைய இணையதள எழுத்தாளர்கள் போன்று ஐரோப்பிய வகையில் அமைந்த ஜனநாயகத்தை வலியுறுத்தும் அடிமைச் சிந்தனை ஏற்றுமதி செய்யத்துடித்துக் கொண்டிருக்கும் சக்திகளைப் போல் அல்லாது வறுமையான நாடுகளின் மக்களுக்கு என்ன தேவை என்னபதில் இருந்தே தீர்வுகள் அமைதல் வேண்டும்.
புலிகளின் அழிவில் இருந்து எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு வந்துவிடும் எனக் கொள்கின்ற சக்திகள் மக்களுக்கான தீர்வு என்ன என்பதை முன்வையுங்கள்.

Sri Rangan said...

தங்கள் கருத்துகளுக்கு நன்றி!உங்களால் முன்வைக்கப்பட்டவை மிகவும் பொறுப்புணர்வோடு நோக்கத்தக்க வேண்டுகோள்!இது குறித்து பின்னாளில் விவாதிப்போம்.-கட்டுரையூடாக.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...