இயற்கையெய்திய
சிந்தனைப் பராவின்
இறுதி அஞ்சலி...
மனம் பரதவிக்கத் தாங்காத அழுகையில் மண்டபம் அலற அகம் உடைந்து போனது.சிந்தனைப் பரா அவர்களின் மரண இறுதி அஞ்சலி நிகழ்வில் மண்டபம் நிறைந்த அவரது உறவு வட்டத்தோடே இறுதிப் பந்திகொண்டார் பரா அவர்கள்.நெஞ்சை உடைத்தெறியும் துக்கம்.மரணவீட்டில் அவர் துணைக்கு ஆறுதல் சொல்லியபோது மல்லிகா அம்மா விக்கியடி மெளனமானார்.
மரணம்,கொடியதுதாம்!எனினும்,தவிர்க்க முடியாதது.
மண்டபம் நிறைந்தவர்களின் மனங்களிலெல்லாம் மரணத்தின் வலி தெரிந்திருந்தது.
பரா அவர்கள் நீண்ட பெருவாழ்வு வாழ்ந்து ஆயுளை நிறைவு செய்துள்ளார்.
இது, நேருகின்ற தரணத்தை எதிர்கொள்வது அவசியமே.
திரண்ட மக்களின் திறந்த வாய்களில் மரணத்தின் வலியைவிடத் தாம் கொண்ட அரசியலை முன்னிலைப்படுத்தும் ஒரு எண்ணப் பாங்கு இவ்வஞ்சலி நிகழ்வில் விரிந்துமேவியது.ஒரு நிமிடம் பேசுபவர்கள் ஒன்பது நிமிடமென்ன அது தாண்டி, மணிநேரம் உரை சொல்லும் நிலையை அடைந்தனர்.சிலர் மேடைப் பேச்சை உருப்போட்டபடி முஷ்டியை மேல் நோக்கி உயர்த்தி நுனி நாவு ஆங்கிலத்தில் அரசியல் விரிவுரை வைத்தார்கள்.
ஆனால்,குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்த கவலை பரா மாஸ்ரரின் குடும்பத்துக்கு!
இதைப் புரிந்தவர் எவர்?
அகமொப்பி,வலியின் சுமைகாவி,இழப்பால் மனம் பொருமியபடி நாம் கொண்ட பஞ்சத்திலும் அவரது துயர நிகழ்வில் பங்குறுவதும்,உடைந்துபோன அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலான மெளன அஞ்சலிக்கும் உணர்வை அஞ்சல் செய்வதைவிட்டு,ஆர்ப்பரித்து அறைகூவலிடுவதற்கு, இந்நிகழ்வு கட்சியின் அரசியல் மேடையல்ல.என்றபோதும்,பரா அவர்களைச் சிறப்புச் செய்யும் உணர்வுகளின் மெளன அஞ்சலிகளையும் நாம் காணத் தக்கதாகவே இருந்தது.
தந்தையை இழந்த பிள்ளைகளும்,கணவனையிழந்த துணைவியுமாக வலிகளைச் சுமந்து மெளனித்திருந்தார்கள்.
நாம் கண்ட பூரிப்பான குடும்பம் ஒளியிழந்துபோய் இருண்டு கிடக்க இதயம் வலிக்க ஆரம்பித்தது.
பரா அவர்களின் இந்த மரண நிலை மனதுக்குள் பொதுமையானவொரு வலியை ஊன்றி விதைக்க, எனது மனது ஊரைக் காணப் புறப்பட்டது.நடுத்தெருவில் நாய் சுடுவதைப்போல் மனிதர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்!கொட்டிலில் பசியோடு மல்லுக்கட்டிக் குறைத் தூக்கம் செய்யும் அப்பாவிகளின் தலையில் பாரிய குண்டுகளை வானத்திலிருந்து உருட்டுகிறது சிங்கள அரசு.இங்கே, வாழவேண்டியவர்கள் இடை வழியில் தொலைந்து போகிறார்கள்!மரணங்கள் வலிக்கிறது.
இழப்புகள் நாளாந்தம் தொடர்கதையாகும் சூழலின் மனிதர்கள் நாம்.
அஞ்சலி செலுத்துபவர்களுக்கு தாம்சார்ந்த அரசியலை முன்னிலைப் படுத்துவது பெருநோக்கு.
பரா செயற்பாட்டிலிருந்தவர்.அவரோடு இணைந்தவர்களே கூடியிருக்கிறோம்.இருந்தும் பரா அவர்களின் வரலாறு விரிந்தது.
வலியைப்பேசுவதிலும் தாம்கொண்ட அரசியல் முன்னிலையெடுக்க நாம் கூடிய நோக்கம் சிதைகிறது.
இது, மரணவீடு.நாம் கூடியிருப்பது துயரில் பங்குற்று அஞ்சலிப்பதற்கு.
நாம்கொண்ட இயக்க-கட்சி வாழ்வானது மரணங்கள்மீது அரசியலைச் செய்து பழக்கமானது!
போராட்ட வாழ்வுக்குப் பின்பு மக்களின் சமூகவுணர்வுத் தளமானது மரணத்தின் வலியை மறந்த மனோபாவத்தை எமக்குள் வலிதாகவே விதைத்தெறிந்துவிட்டது.இந்த விதை மரமாகி வருகிறது.மரணங்கள்மீதும்,அந்த வலியின்மீதும் நாம் வீரகாவியம் படைக்கிறோம் அல்லது, சமய மனதுகொண்டு புனித காவியம் செய்கிறோம்.மரணத்தின் சமூகத் தன்மை இயல்பானது.இயற்கையானது.இதனால் விரிந்துவரும் வலி-இழப்பின்பால் தோன்றும் மிகையுணர்வின் தாக்குதலில் பாசம் கையறு நிலையெடுக்கிறது.இந்நிலையிலிருந்து தேறுவதற்கான தேற்றம் இன்றி,போற்றுதலும் புகழுதலும் வலியைக் கொச்சைப்படுத்துவதாகும்.
எங்கே,எது பேசுவதென்பது எல்லோருக்கும் புரிவதில்லை!
இன்றைய இலங்கை நிலவரத்தில்,கொடூரமான சிங்களப் பாசிசத்தாலும்,அந்நிய ஏவல் நாய்களாலும்,புலிகளாலும் பொதுமக்கள் வாழும் வலயத்தில் குண்டடிபட்டு மக்கள் பெருந்தொகையாக மரிக்கிறார்கள்.சிறார்கள் செல் தாக்கிச் சிதைகிறார்கள்.துரோகி சொல்லிக் கொல்வதும் எல்லைமீறி வகைதொகையின்றி நடந்தேறுகிறது.இங்கே மரணமென்பதும்,அதன் வலியும் பொதுமையாகிறது.குண்டுகளைக்கட்டி தற்கொலைக் குண்டுதாரிகள் கண்முன்னே வெடித்துச் சாகிறார்கள்.
குருதியாற்றில் மிதக்கும் மரணத்தின் வலி வலியது!அந்த வலியை உணருகின்ற மனமானது மனித கணங்களுக்குள் மெளனத்தால் ஒன்றிப்பது மகத்தானது.கொடிய இழப்பில் தேற்றுதலுக்குப் பதில் மேடை அரசியல் ஒப்பேறுகிறது.துயருறும் தரணங்களுக்குள் துன்பத்தை மேலும் விருத்தியாக்கும் இத்தகைய வெற்றுக்கூச்சல் இறுதி அஞ்சலி நிகழ்வை இன்னும் தாழ்த்திச் செல்கிறது.மரணவீட்டில் மடைதிறந்த வாய்வேஷம் அவசியமற்றது.இத்தகைய வாய் வேஷங்களை இயக்க-கட்சி அரசியலுக்குள் வழக்கமாகப் பார்த்த நமது மனங்கள், அத்தகைய போலிக் காட்சியின் பின்னே மெய்மை வலியை உருவகப்படுத்துகிறது.இங்கே, அது மலினப்பட்ட செயலை எம் முன் தள்ளி எம்மைக் கொச்சைப் படுத்துகிறது.மரணித்தவரின் குடும்பத்தின் வலியைக் கேலிக் குள்ளாக்கிறது.
தமிழ் பேசும் மக்களின் எந்த இழப்பிலும் தன்னை முன்னிலைப்படுத்தும் ரீ.பீ.சீ(T.B.C) வானொலியானது எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமாகப் பரா அவர்களின் இறுதி நிகழ்வையும் விட்டு வைக்கவில்லை.தன்னை முற்போக்கு வட்டத்துக்குள் திணித்துத் தன் இந்தியக் கைக்கூலித்தனத்தை மூடி மறைக்கும் தேவையில் அந்த வானொலி தலைகால் புரியாதபடி அலைகிறது.இந்திய மத்திய அரசின் விசமிகள் எங்கும் கால்பரப்ப முனைகிறார்கள்!-கூடவே, மரணவீட்டில் தன் பத்திரிகையை "இலண்டன் குரல்" அறிமுகப்படுத்தியது.எல்லாம் உள் நோக்கத்தின் தொடர்கதையாக...
பரா அவர்களின் இழப்பில் துயருற்ற அவரது குடும்பமும் இந்தவலியை அநுபவித்தாலும் மரணத்தின் தடம் நம்மிடம் பெரும் வலியைப் பொதுமைப்படுத்திச் செல்கிறது.
இதன் சொல்லமுடியாத உணர்வை-உள்வலியை எந்த மொழியாலும் வெளிச் சொல்ல முடிவதில்லை.இருந்தும் கூச்சல் தொடர்கதையாக...அதையும் ரீ.பீ.சீ.யும் இராமராஜனும் விட்டபாடில்லை!
நாம் மெளனித்த கணங்களுக்குள் பரா குடும்பத்தின் வலி உணர்வலைகளில் ஓயாதவொரு அதிர்வைச் செய்கிறது.இந்த அதிர்வு இலங்கையெங்கும் பலி கொடுக்கப்பட்ட குடும்பங்களோடு பொதுமையாகிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
27.12.2007
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
1 comment:
உங்கட கூட்டம் செத்தவீட்டிலதான் கூத்துக்காட்டிறது.உது பழக்க தோசம் :-(
Post a Comment