Wednesday, December 19, 2007

கிட்லர்!

சின்னக் கனவின்
செல்லக்கை கொடுப்பு
.


தின்பது அவிப்பது,அவிப்பது தின்பது...என்னவொரு வாழ்க்கையடா!


"தம்பி படிப்பை மட்டும் பாத்துக்கொண்டு பேசாமப் போங்கோ உங்கட பாட்டுக்கு,இதை விட்டுட்டு காதல் கத்தரிக்காய் என்றால்...வீட்டுப்பக்கம் தலை வைக்கமுடியாது சரியோ!."என்றோ ஓர் நாள் அமாவாசைத் தினத்தன்று என்ர அத்தான் முகடு பிடுங்க வார்த்தைகளோடு விளையாடினான்.அவன் ரொம்பவும் கெட்டியான தமிழ் ஆசான்.அதையவன் அடிக்கடி உறுதி செய்வதும் வழக்கமாக இருந்தது.


"மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயுமோ?"


பாயாது.அப்படிப் பாய்ந்தால் அது மந்தியாக இருப்பதற்கில்லை.


இப்படித்தான் நானும் பலவற்றைப் புரிந்து கொள்வது.


"தான் தின்னி பிள்ளை வளவாள்,தவிடு தின்னி கோழி வளவாள்" என்று வளர்ப்பை நாமளே பெண்ணின்ர பொறுப்பில கொடுத்துவிட்ட பின்பு, நம்மட வம்சங்கள் வலு கறாராகக் காதலிக்கத் தெரிந்தளவுக்குத் தலைக்குள்ள எதையாவது சம்பாதிக்கத் தெரியுறதாயில்லை.


"அட போடா புண்ணாக்கா"எண்ட மாதிரி நான் அத்தானை அடிக்கடி சபிப்பது இந்த இலவச ஆத்திர மூட்டல்களால்தான்.


பத்து வயதில் அவன்ர மடியிலிருந்து கொண்டு அடிக்கடி நான் செவி வழி கேட்டு மகிழ்ந்த மகா பாரதத்தில் எனக்குப் பிடித்த பாத்திரம் கர்ணன்தான்.என்னவோ தெரியாது அவன் கொல்லப்பட்ட விதம் எனக்குள் பாரிய பாதிப்பைச் செய்தது.


இப்படி அவன்ர சாவு- எனக்கு வாழ்க்கையில் அர்த்தமில்லையென்றபோது- "அவனே நட்புக்குச் செத்தபோது நான் ஏன் என்ர கவிதைக்குச் சாகக்கூடாது" என்ற பச்சோதாபத்தில்,அன்றைக்குத் தெரிந்த உறவுகளிடமெல்லாம் போய் "அம்மா இருபது ரூபாய் கடன் வேண்டியரட்டாம்" என்றபோது,எவரும் தராதபோது, நான் இப்போது ஒருத்திக்குத் துணைவனாக இருக்கும் பாக்கியத்தோடு பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் இருக்கிறன்.அன்றைக்கு இருபது ரூபாவால் உயிர் மாய்க்க முடிந்திருந்தது.இதுதான் காலம் என்பதா?கடவுளே!அம்மாவை நம்பி இருபதைத் தந்திருக்கும் ஒரு உறவு என்னைக் கொன்றிருக்கும்!எந்தவுறவும் காசைக் கறக்காத கசவாரங்களாக இருந்ததும் நல்லதுக்குத்தான்.

வில்லுக்கு விஜயன்,மல்லுக்கு வீமன்.சொல்லுக்குச் சகாதேவன்,பொறுமைக்குத் தர்மன்,வாளுக்கு நகுலன்,நட்புக்கு கர்ணன் திரியோதனன்... இப்படி அடுக்கியபடி அத்தான் அவிட்டுவிட்ட மகாபாரதம் சின்ன வயதில் சின்னக் கனவுகளுக்குள் ஏதோவொன்றைத் திணித்து, மனத்திரையில் வலியைத் தந்தது.எதற்காக இந்தக் கர்ணனைக் குந்தி தள்ளி வைத்தாள்.கர்ணனைப் பழிவாங்கும் கண்ணனுக்கு நேர்வழி தோணாது போனதைக் கர்ணனின் மரிப்புச் சொல்கிறதே!


"நண்பா எடுக்கவாடா கோர்க்கவாடா?"


நட்புத்தான்.எம்மாத்திரமான நட்பு!


எனக்கும் என்ர அத்தானுக்கும் இத்தகைய நட்பு நாட்பட நாட்பட உண்டானது.அத்தான் பீஷ்மருக்கு நிகரான பண்டிதன் என்பதை எனது உயர்கல்விக் கேள்விகளில் நான் புரிந்தது.


சின்ன வயதுக்கு அத்தான் கிட்லராகவே இருந்தவன்.அவன்ர கண்டிப்பு அத்துமீறின அதிகாரத்தைப் பிரகடனஞ் செய்வது.எனக்குத் தெரிந்த சின்ன வயது அத்தான் பாரதத்தைச் சொல்லுவதில் இனித்தான்.படிப்புக்கு அடித்தான்.பாழாப் போனவனுக்குப் பாம்பு கடிக்காதோவெண்டு நான் நினைத்த பதின்ம வயது, பின்னாளில் அவனைப் போற்றுவதா அல்லது ஆசான் என்று அடங்குவதா என்று அடிக்கடி அச்சப்பட்டது.


பத்தைக்குள் நின்று வீடி குடித்த சின்னப் பையனுக்கு,"வாடா மைச்சான்,வந்து இந்தக்காசுக்கு பில்டர் சிகரட்டு வேண்டிக் குடியடா"எண்டவன் பேச்சைக் கேட்டு,நானும் அந்தச் சில்லறைக்கு நாலு பிறிஸ்ட்டல் சிகரட்டை வேண்டிக் கொண்டு வந்து,சொண்டில் வைத்துச் சுதியாய் புகைத்தபோது,"எப்பிடிச் சிகரட்டு,ருசியாய் இருக்கோ?"எண்டவனிடம்,"ஓஓஓஓஓஓஓஓஓ....அச்சா."என்ற மறு நிமிடம் உடம்பின் அத்தனை பாகத்திலும் பதிந்த புல்லாந்திக் கம்பு,புரட்டிப்போட்ட கதைகள்தான் எத்தனை!


இவனெல்லாம் ஆரூ?அம்மா எதுக்காக இவனிடம் வீட்டுப் பொறுப்பை விட்டுட்டாள்,இவன் ஆரூ எனக்கு அடிக்க?மனமெல்லாம் இப்படிப் புண்ணாக-ரணமாக மாறிக் கொண்டபோதும்,அத்தானின் பாரதம் இனித்தது.அவனது கம்பீரமான தமிழ் என்னைத் தாலாட்டியது.மகாபாரதம் சொல்லும்போது அவன் அடிக்கடி கேட்கும் கேள்வி"அதன் சாரமென்ன?"என்பதுதான்.அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த சாரம் தமிழ்நாட்டுச் சங்கு மார்க் சாரம்தான்.இவன் இப்படிக் கேட்கிறபோது,நான் கதையை மாத்துவதற்காகவே"ஏனங்க அர்ச்சுனனுக்குக் கர்ணனைப்போல நாகாஷ்த்திரம் விடத் தெரியாது"என்பதே!தொடர்ந்து இப்படிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் நானும் அவன்ர கேள்விகளைக் கடந்திருக்கிறேன்.


பத்து வயதில்எனக்குப் பாட்டியாக வாய்த்தவன்.பொல்லாத அடிகளுக்குச் சொந்தக்காரன்.புளித்துப்போகாதபடி புகட்டுவதில் ஆசானாய் இருந்திருக்கிறான்.


இப்போதெல்லாம் கண் பார்வை அறவே இல்லாமல் அடியெடுத்து வைப்பதற்கு அக்காளின் தயவு அவனுக்கு அவசியம்.எத்தனை பெரிய பண்டிதர்களையெல்லாம் ஓரங்கட்டினவன் அத்தான்.ஊருக்கு உபதேசத்தை மட்டுமல்ல பிணக்குகளைக்கூடத் தீர்த்துவைப்பவன்,ஆனால் என்னோடு அடிக்கடி பிணக்குப்பட்டான்.


கிட்லர்!


சின்ன வயது.சிரிக்கின்ற பெண்களையெல்லாம் தாமரையில இருக்கிற சரஸ்வதியென்று ஆசைப்பட்ட காலத்தில்தான் எனக்கு கவிதாஞ்சலி எதிர்ப்பட்டாள்.

"கொடியே!
இழைவான் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்,எனது ஆவி குழைக் குதியோ?"

இல்லை,

"மயிலே எனை நீ வலி ஆடுதியோ?"


ஆசைக்கொரு அழகென்றால் அவள்தான் அழகு என்னும்படி அவள் இருந்திருக்கிறாள்.அந்தப் பருவத்தில் சேராத தாம்பாத்தியம் தாம்பாத்தியமாக இருப்பதில்லை.வேண்டுமானால் சமூகக் கடமைக்காக இனப் பெருகஞ் செய்வதென்று எடுத்துக் கொள்ளலாம்.அவளை நான் சேருவதற்கு அவளோ அல்லது நானோ இடைஞ்சல் படவில்லை.அவள் அழகு என்னைப் படாதபாடு படுத்தியது.அத்தான் அந்த அழகை அழித்தானென்றே சொல்லவேண்டும்.


"இந்த வயதில் முருக்கஞ் செத்தலிலும் சேலைகட்டினால் அது உங்களுக்கு அழகுதான்" எண்டான்."முளைத்து மூண்டிலை விடுவதற்குள் பெட்டை வேணுமோ?நாலு வார்த்தை தமிழில எழுத வருவதற்குள்ளேயே நாய்குக் கல்யாணம் தேவையாய் இருக்கு!பிஞ்சில முத்தின மூதேவி."இப்படித்தான் என்ர முதற் காதலைப் போட்டுடைத்தான்.


அத்தான்-ஆசான்!


இப்பவெல்லாம் பார்க்கிறன்.மேற்கத்தைய உலகத்தில் பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளின் முதற் காதலை எவ்வளவு கவனத்தோடு,அன்பாக அணுகிறார்கள்!எனக்கு இந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை.என்ர கவிதைக்கு நிகராக எந்தச் சனியனும் வரமுடியாது.நான் அவசரப்பட்டு அவள் அழுக்குப்பட நேரவில்லை.அது ஏதோவொரு கனவு.அன்புக்கானதாக இருந்தாலும் சரி,இல்லைக் காமத் தீயில் கரிக்கட்டையாக இருந்தாலும் சரி,அவள் நெஞ்சுக்குள் கூடமைத்துக்கொண்ட அந்தக் காலத்தைக் குலைத்தெறிந்த என்ர அத்தான் ஒரு கிட்லர்தான்.கொடியவன்.


ஆசானாய் வந்தவன்,ஆசைக்கு ஆப்பு வைத்தவன்.அவளைத் தாண்டிய அழகி ஆருமில்லை எனக்கு!அற்புதங்களைச் சொரிந்தவள்,ஆராரோ பாடிய அம்மாவுக்கு நிகராக உணரப்பட்டவள்.அரி நெல்லிக்காய் பொறுக்கித் தந்தவள்,ஒரு மாங்காயில் இருவரும் இதழ்பதித்து ஆசைக் கடிகள் பகிர்ந்தவர்கள் நாங்கள்.அப்பப்பா இதுவொரு வாழ்வு.இதயத்தைத் துளைத்த ஓரம்பு ஆயிரம் துளைகளை எங்கள் கனவுகளுக்குள் இட்டபோது,இடையில் குட்டூறாய்க் குடியைக் கெடுத்தவன் இந்த அத்தான்.


ஆசைப்பட்ட நாங்கள் அடுக்களைக்குள் முடங்கியதுபோல அமிழ்ந்தபோது,படிப்பும் போச்சு,பிடிப்பும் போச்சு வாழ்வில்.இதன் பின்னான சில வருடங்களில்,ஏதோ பொதுவாழ்வில் போய்ச் சேர்ந்து புண்களை ஆற்றியது தேசத்துக்குப் போராடியதாகக் காலத்தால் சொல்லிக் கொள்ளும் தகமையில் அத்தானின் பங்கு மிகுதியாக இருந்தது.


இப்போதெல்லாம் ஆசையோடு பார்க்கும் பருவம் இந்தப் பதினைந்து வயதுப் பதின்மப் பருவமே.பாவாடையில் பாத்தவுருவம் "டங்கா தெரியும் கட்டை ரவுசரில்" கற்பனைக்குள் குதிரை ஓட்டும் கவிதாஞ்சலிகள் ஏராளம்.இந்தப் பருவத்தைத் துரத்திப்போட்டு,முப்பதில் மூன்று முடிச்சிட்டு என்னத்த முக்கினாலும் முழுதாய் வாழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.


"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இப்படித்தான் வாழ்வு நகருகிறது.


"தானுண்டது போயுண்டது,பிறருண்டது சிவனுண்டது."அம்மா அடிக்கடி சொன்னதுபோல இப்போதெல்லாம் அத்தானுக்கு உதவிக்கொள்ள முடியுறபோதெல்லாம் என்ர கவிதைக்கு நான் துணைவர முடியாத ஏமாற்றம் அத்தானை ஆசான் என்றபோதும் அடிக்கத்தான் தோணுது.


எனினும்,அத்தான் மனத்தளவில் அனுமான்தான்!


"மாருதி வலித்தகைமை பேசி மறவோரும்
பாரிடை நடந்து,பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடைய நெடுந்தகையும் மேலைமலை சென்றான்..."


இதுதான் என் நிலையும்.



1 comment:

Anonymous said...

watch this dance

http://www.tubetamil.com/view_video.php?viewkey=2a5515c19fd72b6f4819&page=&viewtype=&category=

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...