Sunday, December 02, 2007

நமக்குள் மெல்ல ஊடுருவித் தமது உளவுப்படைகளை வைத்து...

என்னயிது?-குறியீடா?
நடக்கப் போவதன் முன்னெச்சரிக்கையா?


ப்போதெல்லாம் மிகக் கடினமானவொரு சூழலில் மாற்றுக் கருத்துடையோரின் வாழ்நிலை இருக்கிறது."கரணம் தப்பினால் மரணம்" எனும் நிலையில் எமது வாழ்சூழல்.எவரெவரோ எத்தனையோ முறைமைகளில் நம்மை எச்சரிக்கிறார்கள்.
ஜெகோவாவின் சாட்சிகள் நவம்பர் மாதத்துக்கான தமது "காவற் கோபுரத்தையும்,விழித்தெழுவையும்"நம்மைக் கேட்கமாலே நவம்பர் மாதம் தபாற்பெட்டியில் தள்ளிவிட்டார்கள்.


இன்று,02.12.2007 இன்னொரு வேடிக்கையானதும்,
அச்சம் தரும் நிகழ்வொன்று நெருங்குகிறது நமை நோக்கி!


இரண்டு தமிழர்கள் வீட்டின்முன் வந்து கதவைத் திறக்கும்படியும்,தாம் என்னோடு உரையாடவேண்டுமென்கிறார்கள்.


நான் வீட்டில் இல்லையென்று கூறப்பட்டு,
எங்கிருந்து வருகிறீர்கள் என்பது கேள்வியாகிறது.


ஒருவன்: "எசன் நகரத்திலிருந்து வருகிறோமென்கிறான்."


மற்றவனோ: "இல்லை நாங்கள் வூப்பெற்றாலில் இருந்தே வருகிறோமென்கிறான்."


"எதற்காக வந்தீர்கள்?"

"மதம்சார்ந்து உரையாட வந்தோம்!"

"நல்லது கதவைத் திறப்பதற்கில்லை.உங்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை."


"கதவைத் திறவுங்கள் உங்களிடம் எங்கள் பத்திரிகை தரணும்."


"இல்லை."தபாற்பெட்டியில் இட்டுவிடவுமெனச் சொல்லப்படுகிறது.


அவர்கள் வந்துபோவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
அவர்கள் மதம் பரப்பும் பேர்வழிகள் இல்லையென்பதைக்
கிரகிக்கக்கூடியதான அவர்களது நடிவடிக்கை சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.தபாற்பெட்டியிலிடப்பட்ட ஜெகோவாவின் பத்திரிகையானது அக்டோபர் மாதத்துக்கானது.
அதன் அட்டைப்படமும் உள்ளடக்கமும் மரணத்தைப் பற்றியது.

"பிள்ளைகள் பத்திரம்" எனும் அட்டைப்படமும்,"சாகும்போது என்ன நேரிடுகிறது?"எனும் உள்ளடக்கமும் கொண்ட இந்தச் சஞ்சிகை"விழித்தெழு"வாகும்.இது அக்டோபர் கடைசியில் எனக்கு வந்துவிட்டது.
எனது ஏரியாவுக்கு எவர் மதம் பரப்ப வருகிறார்கள்
என்பது மிகவும் தெரிந்தே இருக்கும்போது,
இரண்டு புது முகங்கள்.அதுவும் சந்தேகிக்கும்படி...

இந்தப் பத்திரிகை எதற்காக?

"பிள்ளைகள் பத்திரம்"

என்னயிது?-குறியீடா?
நடக்கப் போவதன் முன்னெச்சரிக்கையா?
சாகும்போது என்ன நிகழ்கிறதென்ற உள்ளடக்கம் உணர்த்தும் நிலை?

"....................."


இதுவொரு பொல்லாத சூழல்.

குண்டுகள் கட்டி வெடிக்கும் காலம்.எல்லாம் தேசியத்துக்காகவா அல்லது இலங்கையின் இறைமைக்காகவா?-மெளனித்திருக்கும்படியானவொரு சூழலுக்குள் உணர்வு.என்றபோதும்,இதிலிருந்து விடுபடும் உணர்வு.எதையும் இழப்பதற்குத் தயாராகும் உணர்வின் உந்துதல் மீளவும் செயற்படத் தூண்டும்.நாம் சிங்களப் பாசிசத்தின் கைக்கூலிகளோ அன்றி இந்தியக் கைக்கூலிகளோ அல்ல!முற்று முழுதாக நாம் மக்களின் விடிவுக்காகவே குரைக்கிறோம்.மக்களின் எதிரிகளை அம்பலப்படுத்துகிறோம்.அந்த எதிரிகளால் என்றோ ஓர் நாள் நாம் மெளனிக்கப்படலாம்.இது தெரிந்தே இருக்கிறோம்.எனினும்,இன்றைய நிகழ்வு எதையாவது முன் குறித்துச் சொல்லும் நிகழ்வா?

"அதிகமான அடக்குமுறையானது புரட்சிக்கு வித்திடும்"என்பது சாணாக்கியனின் ஆலோசனை.

எனவே,புரட்சிக்குரிய அனைத்துக் கூறுகளையும் கண்காணித்து அவற்றைச் சிதை;தபடி அதிகாரத்தைக் கண்காணித்து நடாத்துவதை அவன் அப்பட்டமாகவே சொல்கிறான்.அவனோ பற்றுப் பாசம் அற்ற"ஞானிகளை"ச் சீண்டாதிருக்கும்படியும் சொல்லிச் செல்கிறான்.இங்கே,பற்றுப் பாசத்தைப் பரிசீலித்துப் பார்க்கும் நிலையொன்றுண்டா?அப்படியாயின் நாம் பற்றுப் பாசமுடைய மிக எளிய மனிதர்கள்!நாம் வாழ்வுமீது மிக விருப்புடையவர்கள்.இப்புவிப்பரப்பில் இயற்கை வழங்கிய அனைத்துப் படைப்புகிளிலும் மிளிரும் அழகைத் தரிசிப்பவர்கள்.

அந்தப் படைப்பாற்றலைத் திருடும் கயவர்களை வெறுப்பவர்கள்.

அவர்களின் இருப்பை அசைக்கும் குணமுடையவர்களும் நாமென்றே கூறுகிறோம்.ஆனால்,மக்களின் நல் வாழ்வுக்காக நாம் வாழ்வைத் தொலைப்பதற்கு அவசியமொன்று உருவாகும்போது அவற்றை எதிர்கொள்வதைத் தவிர வேறொரு பாதை கிடையாதென்பதையும் கூறத் தயங்குவதில்லை!

"வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழர் பகை."
-குறள்:872, பக்கம்:347

வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!

சாணாக்கியனின் உலகத்தில் தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.

ஒற்றர்கள் நிறைந்த நாடாக எந்த நாடிருக்கிறதோ அதுவே மிகப்பெரும் வலுவுடைய நாடாகும் என்பது அவனது இராஜதந்திரம்.

அதிகாரத்தைக் கையிற் கொடுத்து அமைச்சனை-போர்த் தளபதியை அளக்கும்படி கட்டளையிடுபவன் சாணாக்கியன்.அத்தகைய தந்திரத்தில்-அளவின் எதிர்மறையில் அத் தளபதியை மிகக் குறைந்த படையுடன் போர்க் களத்துக்கு அனுப்பிக் கொன்றுவிடவும் சொல்கிறான்.நமது போராட்டத்தில் இது நீண்டகாலமாக நாம் காணும் ஒரு நடைமுறை!

உளவுப்படையானவன் எத்தனையோ வேடங்களில்(பைத்தியக் காரனாக,ஞானியாக,மதம் பரப்புபவனாக,மடாதிபதியாக,வணிகனாக,

வழிகாட்டியாக,தெருக்கூட்டுபவனாக,விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களாக,புரோகிதர்களாக-புரோக்கர்களாக...இப்படி எத்தனையோ வேடங்களில்...)மக்களை நெருங்க வேண்டுமாம்.மக்களின் மன நிலையை அறிந்து ஆட்சி நடாத்தும்படி கூறும் சாணாக்கியனின் வாரீசுகள் நம்மை நெருங்கும் நிகழ்வுகளைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஒற்றர்களில்-மிகக் கொடூரமானவர்களை,கல் நெஞ்சம் உடையவர்களை,பற்றுப் பாசம் அற்றவர்களைப் பொறுக்கி எடுத்து,அவர்களைக் கொலை செய்வதற்கே பயன்படுத்துவதற்காக வைத்திருக்கும்படி ஆலோசனை-கட்டளையிடும் சாணாக்கியன் பல இடங்களில் ஒற்றர்கள் அதி தந்திரமுடைய கல்வியாளர்களாகவும் இருக்க வேண்டுமென்கிறான்.

ஒற்றர்கள் எப்பவும் சகலகலா வல்லவர்களாக இருப்பது முக்கியம்.சாத்திரம்,ஆருடம்,மருத்துவம்,அறநூல்,உடல்கூறு நூல்,விஞ்ஞானம்,கணிதம்,என்று எல்லாத்துறையிலும் காத்திரமான பங்களிப்புச் செய்யக்கூடியவர்களாகவும்,சமய சந்தர்ப்பத்துக்கேற்றபடி அவற்றை வெளிப்படுத்தும்படி இருக்கும் ஆளுமையைக் கோருகிறான் சாணாக்கியன்.இங்கே, நாம் அனைத்தையும் காணமுடியும்.நமது அமைப்புகளிடம் இது மிக நேர்த்தியாகச் செயற்படுவதை நாம் இலகுவாக இனங்காண முடியும்.

மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைத் துறையிலிருந்து,கோயில் குளம் வரைத் தொண்டர்கள் என்று இந்த ஒற்றர்களின் கதை நீண்டபடி...

எங்கே நாம் இருக்கிறோம்?

இவையனைத்தும் ஒருங்கே செயற்படுவதை நான் ஒரு மேதின நிகழ்வில் கண்டவன்!தமிழர்களுக்குள் இது மிகவும் வலுவாகி வருவதை நாம் காண்கிறோம்.புகை நுழையாத இடத்துக்குட்கூட ஒற்றர்கள் நுழைவது அவசியம் என்பதே சாணாக்கியனின் கூற்றின் அடிப்படை.

எதிரிகளை வரையறுக்கக் கோருகிறான்.


"பொருளாசை பிடித்தவர்கள்"

"அதிகாரப் பித்துப் பிடித்தவர்கள்"

"அகங்காரத் திமிர் பிடித்தவர்கள்"

"பெண்ணாசை-ஆணாசை பிடித்தவர்கள்"


இத்தகைய மனிதர்களை மிக வேகமாகவும்,நுணுக்கமாகவும் கண்காணிக்க வேண்டுமென்றும்,இவர்கள் மிக இலகுவில் எதிர் திசைக்குச் செல்லக்கூடியவர்கள் என்பதும் சாணாக்கியம்கூறும் ஆலோசனை.

மனிதர்களில் மிக நல்லவர்களாக,எதற்குமே விலை போகாது மக்களின் நலனுக்காகவே குரல் கொடுப்பவர்களை மிகவும் சாதுரியமாக வென்றெடுக்க வேண்டும்.அங்ஙனம் வெல்ல முடியாதுபோனால் மிக இரகசியமாகக் கொன்று"துரோகி"என்று மக்கள் முன் கருத்துக் கட்டச் சொல்கிறான் சாணாக்கியன்.

இப்போது பார்க்கிறோம்,மக்களுக்காகக் கருத்தாடும் மாற்றுக் கருத்தாளர்களை மிக இலகுவாகத்"துரோகிகள்"என்கிறான் மெல்பேர்ன் சபேசன்.



//புலிகளுக்கு எதிரான காட்டிக் கொடுப்பு, தமிழர்களுக்கு எதிரான காட்டிக் கொடுப்பாகும்!


புலிகளுக்கு எதிரான துரோகம் தமிழர்களுக்கு எதிரான துரோகமாகும்!//

"புலியை எதிர்பவர்கள் தமிழரை எதிர்ப்பவர்கள்"என்கிறான்.

ஆகத் தமிழரென்றால் புலி,புலிகள் என்றால் தமிழர்கள்!இந்தக் கணக்கு நல்லாத்தாம் இருக்கு!இது யாழ்பாணத்திலிருந்து வரலாற்று ரீதியாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை இந்தக் கண்ணோட்டத்தால் ஒரே இரவில் அடித்து வெருட்டியது.இதைச் சபேசன் என்ற புலிப்பாசிஸ்டுத் தெரிந்தே இப்போதும் கதைவிடுகிறான்.இங்கே, பாசிசம் நீர்குமிழிதாம்.என்றபோதும், அது கணிசமானவர்களைக் கொன்றுவிட்டே தானும் அழியும்.இதைக் கிட்டலர், முசோலினி,பொல்போர்ட்,இடி அமீன் என்று அன்றும்,இன்று புஷ்,பிளேயர் முதல் இன்றைய நமது இயக்கங்கள்வரை நாம் கண்டு குருதி உறையக்கட்டுண்டு போகலாம்.

வலைப் பதிவுலகத்தில் மக்கள் நலன் சார்ந்தெழுதும் நமக்குள் முரண்பாடுகள் வருவது இயல்பு.நமது கண்ணோட்டம் பரந்துபட்ட மக்களின் நலனிலிருந்து எழுகிறது.இது, இலங்கையின் ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் அவர்களின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது.அராஜகத்தை இனம் காட்டுகிறது.மக்கள் விரோத அரசியலைத் தோலுரித்துக் காட்டுகிறது.

அந்நிய சக்திகளுக்குக் கூஜாத் தூக்கும் இயக்கத் தலைமையையும் அதன் மக்கள் விரோத அரசியலையும் அம்பலப்படுத்துகிறது.இத்தகைய மாற்றுக் கருத்தை வளரவிடுவதை மக்கள் விரோதிகள்,இயக்கங்கள் அனுமதிக்கிறதாவென்பதைவிட நமக்குள் தமது நலன்களை அறுவடை செய்ய முனையும் அந்நிய சக்திகள் அனுமதிப்பதில்லை என்பதை நாம் முதலில் கவனப்படுத்தியாக வேண்டும்.அவர்கள் நமக்குள் மெல்ல ஊடுருவித் தமது உளவுப்படைகளை வைத்து நம்மைத் தொலைத்துக்கட்டப் பார்க்கிறார்கள்.நமது கருத்துக்கள் எங்கே புலிகளின் அடிமட்டப் போராளிகளை புரட்சிப்படையாக மாற்றி மக்களோடு இணைந்து தமது இருப்பை அசைத்து விடுமோவென்று இந்தியா மிக அச்சங்கொள்கிறது.

புலிகளின் அடிமட்டப்போராளிகளே நாளைய விடியலின் கதாநாயகர்கள் என்பதை நாம் அறிந்தளவுக்கு நமது எதிரிகளும் அறிவார்கள்!

எனவே,நமக்குள் முரண்பாடுகளை உருவாக்கத் தம்மைத் தமிழர்களின் ஆதரவாளர்களாகவும்,புலிகளின் விசுவாசிகளாகவும் காட்டி,நம்மைத் தூற்றுவதால் தாம் உண்மையான தமிழ்மக்களின் ஆதரவாளர்களாக்காட்ட முற்பட்டு வருகிறார்கள்.இது சாணாக்கியன் வகுத்த பொறிமுறைதாம்.இதை நாம் மிக நன்றாக அறிவோம்.

புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் இத்தகைய இந்திய உளவுக் கைக்கூலிகள் எமக்குள் ஊடுருவி நம்மை எதிரிகளாக்கித் தம்மைப் புலிகளின் விசுவாசிகளாக்கிக் குருதிப்புனல் கமலகாசன்-அர்ஜுன் விளையாட்டைக் காட்டி வருகிறார்கள்.

இங்கே,வலைப் பதிவுலகத்தில் ஒரு காட்டுமிராண்டி அத்தகைய நிலையை எடுத்திருக்கிறது.இது இந்திய நலனின் உளவுக் கைக்கூலி.இது,மெல்பேர்ணில் சபேசன் என்றும் இன்னும் உலகம் பூராகவும் பரவிக்கிடக்கிறது.

எனது,உயிரிலும் மேலான தேசபக்தர்களே!

புலிகளின் அடிமட்டப் போராளிகளே!!

உங்கள் தியாகத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கித் தமது நலன்களை இலங்கையில் அடைய முனையும் இந்தியாவையும்,அந்நிய மேற்குலகத்தையும் இனம் காணுங்கள்!

நாம் உங்கள் தியாகத்தை எந்தவொரு அந்நிய சக்தியும் பயன்படுத்தாதிருக்கவே எழுதுகிறோம்.

உங்கள் தியாகம் உங்கள் பெற்றோரின் வாழ்வையும்,அவர்களது விலங்கையும் உடைத்தாகவேண்டும்!எங்கள் உயிரிருக்கும்வரை உங்கள் தியாகத்தை மக்களுக்காகவே அர்பணிக்கப் போராடுவோம்!மக்களோடு மக்களாக நீங்கள் இணையும் ஒரு போராட்டத்தில் முதுமை அடைந்த நாங்களும் உங்கள் கூலிகளாகவும்,உங்களைப் பராமரிப்பவர்களாகவும் வந்தே தொலைவோம்.உங்களின் பின்னே நமது வாரீசுகளும் அணி வகுக்கும் புரட்சியைத் தடுக்கும் அந்நியச் சதிகளை இனம் காணுங்கள்!-இதுவே இன்றைய தலையாயக் கடமை!!

ப.வி.ஸ்ரீரங்கன்
02.12.2007

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...