எனது குவளையுள்
நுரையெழுப்பும் பியரைப் போல்
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!
அம்மன் தாலாட்டை
அடியெடுத்துப் பாடி
என் நோய் மறக்க வைத்த அன்னை
மெல்லத் தலை கோதி
அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய கிழவி
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர
கொள்ளிக் குடமுடைத்த
அப்பனின் இழவு சொல்லி
மிச்ச சொச்சக் கனவையும் சிதைக்க
அன்றைய பொழுதில்
பிணைத்த கரங்களோடு அப்பனின் பிணத்தில்
விழுந்தழுத என் தம்பிகளின் முகங்கள் வந்து...
பிஞ்சுக் கரங்கள் இடித்த சுண்ணம்
நினைவில் குத்தும் இழப்பின் வலியாய்!
சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
அன்னையும்
அவள் கைப் பிடிச் சோறும்
காணமற்போன ஒவ்வொரு பொழுதுகளும்
பொல்லாத உலகத்தின்
பொருளில்லா வாழ்வுத் தடமாய் அகதி வாழ்வு
முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல
கள்ள நித்திரையில்
கண் துயில மறுக்கும் கோடி பொழுதுகள்
இரண்டுங் கெட்டான் உணர்வை
உடலெங்கும் விதைக்க
அம்மாக் கனவு மெல்ல விரியும் கொடிய இரவில்
அன்னை இனி வரமாட்டாள்.
அவளுக்கு வயசாகி விட்டது!
தரையில் பட்டுத் தெறிக்கும்
ஒளி முறிவுகளில்
ஒரு கணமேனும் தேக்கமிருப்பதற்குச் சாத்தியமுண்டா?
ஆத்தையின்
தெம்பூட்டல்கள் இனியெதற்கும் வரப்போவதில்லை.
இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்த்த
அப்பனும் இல்லை.
அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த
மந்தை மனிதனாய்
நுரை வெடித்த வெற்றுக் கிளாசில்
வந்தமர்ந்த தேனீயின் இருப்பில்
என்னை இழந்தேன்!
ப.வி.ஸ்ரீரங்கன்
No comments:
Post a Comment