கரும் புலித்தாக்குதலுக்குப் பின்பான சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு(2)
"...ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியைச் சுமந்தபடியே
தனது ஒவ்வொரு வேளை
உணவையும் உண்கிறான்
தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையுங்கூட
இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது..." -சிவரமணி.
(2)
எந்த வகைகளில் நாம் இன்றெமது நாட்டின் அரசியல் போக்குக் குறித்துப் பேசமுடியும்?நாட்டில் நிகழ்கின்ற இருவேறு அரச ஜந்திரக்களுக்குள் நிலவும் மனித விரோதப் போக்குகளின் வாயிலாகத் தினமும் மனிதப் படுகொலைகளும்,மனித வருத்தல்களும் நடைபெறும்போது, இலங்கை இராணுவ ஆட்சிக்குள் மெல்ல நகர்ந்தபடி கட்சியாதிக்கத்திலுள்ள முக்கிய குடும்பங்களின் காட்டாட்சிக்குள் வந்துவிடுகிறது.அங்கே, எல்லாளன்களும்,துட்டக் கைமுனுக்களும் மக்களின்-இளைஞர்களின் உயிரோடு தமது முரண்பாடுகளைப் பொருத்தி இலங்கையில் அறுவடை செய்யும் கொலை அரசியலில் இன்னும் எத்தனை அநுராதபுரங்கள்,குடும்பிமுனைகள் நடந்தேறுமோ தெரியாது.என்றபோதும,; இத்தகைய அரசியலின் முகிழ்ப்புக்கு வித்திட்ட புறச் சூழலை மிகத் தெளிவாக நாம் இனம்காணவேண்டும்.ஈழப்போராட்டத்திலுள்ள தெளிவின்மையான உலக அரசியல் அறிவானது நமக்குள் கற்பனைகளை மனம்போன போக்கில் விதைத்தது.இதன்வாயிலாகப் போராட்டத்தில் புரட்சிக்கட்சியின் பங்கு,அதன் வெளிப்புற மற்றும் உள் தோழமைகள் மற்றும் போராட்டச் செல்நெறி பற்றிய சரியான விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் நமக்குள் வசமாகவில்லை. ஒரு கட்சியின் பண்புகளில் முக்கியமான சுய விமர்சனம்,உட்கட்சி ஜனநாயகம் போன்ற முக்கியமான அறிவு-பண்பு நமக்குள் இல்லாமற்போனதுமின்றி இயக்கங்களுக்குள் தனிநபர் வழிபாடும்,கண்மூடித்தனமான விசுவாசம்,நம்பிக்கையென்று உணர்ச்சி வழி அரசியலாக நமது போராட்டத்தைக் கீழ்மைப்படுத்தியதில் இந்தியாவுக்கு அதீத பங்குண்டு!
எமது மக்களின் விலங்கையொடிப்பதற்காகப் புறப்பட்ட இளைஞர்களை தகுந்த வழிகளில் அரசியல் மயப்படுத்தி,அவர்களைப் புரட்சிகரப் படையணியாகத் திரட்ட வக்கற்ற மேட்டுக்குடி வேளாளத் தமிழ்ச் சிந்தனா முறையானது வெறும் பித்தலாட்டமாக இந்தியா குறித்துக் கருத்துக்களை 80 களில் வெளிப்படுத்தியது."இந்தியா என்பது உலகத்துக்கு முற்போக்கு நாடாகக் காட்டுவதால் அது தமிழீழக் கோரிக்கையை-தமிழீழத்தை தவிர்க்க முடியாது அங்கீகரித்துத் தன்னை முற்போக்காக உலகினில் காட்டும்,இது இந்தியாவுக்கு மிக அவசியம்,இல்லையேல் உலகில் மாபெரும் ஜனநாயக நாடுவென்ற பெயர் அடிபட்டுப் போகும்"என்று நமது அரசியல் வல்லுநர்கள் அன்று புலம்பிச் சொதப்பினார்கள்.பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா, எனவே ஈழத்தையும் அங்கீகரித்துத் தமிழர்களுக்குச் சாதகமான நாடாக இருக்குமென்றும் மனப்பால் குடித்த ஈழத் தமிழ் அரசியல்"வல்லுநகர்களை" அன்றே எள்ளி நகையாடிய சிங்கள அரசியல் தந்திரம் இன்று மிக அற்புதமாகத் தமிழர்களின் உரிமைகளை மறுத்தொதுக்கிவிட்டுப் "புலிப் பயங்கரவாதம்"குறித்து அரசியல் நடாத்த முடிகிறது.இது எவ்வளவு தூரம் நமது முட்டாள்தனத்தைப் பறைசாற்றி வருகிறது!
யுத்தம் செய்யும் சமுதாயம் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை.இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் "எந்தச் சுயாண்மையும்" நிலவ முடியாது.இதுதாம் இன்றைய இலங்கையில் யுத்தத்தை குத்தகைக்கு எடுத்த அந்நிய சக்திகள் தமது வலுவுக்கேற்ற வடிவில் இலங்கைச் சிங்கள-தமிழ் அடியாட்படைகளைத் தகவமைத்து யுத்தத்தைச் செய்து வருகிறார்கள்.தமது சந்தையில் தேங்கிக்கிடக்கும் சிறு இரக ஆயுதங்களை விற்றுத் தொலைப்பதும் அதன் வருமானத்தில் புதிய கனரக ஆயுதங்களின் ஆய்வுகளுக்கு நிதி முதலிடவும் அவசியமாக இருக்கிறது.இது ஒரு பகுதியுண்மை என்பதும் மற்றைய பகுதியுண்மை தொழிற்சாலைகளின் எதிர்காலப் பொருள் உற்பத்திக்கான மூலவளத் தேவையை மையப்படுத்தியதாகவும் விரிகிறது.இந்தநிலையில் இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிகத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு"உலகின் பாரிய ஜனநாயக நாடு"என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே நமது போராட்டச் செல் நெறியில்-தந்திரோபாயத்தில் மாபெரும் தவறையேற்படுத்தியது.
உதாரணமாக இந்தப் போராட்டம்,அதாவது ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள் புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இ·து பாத்திரமாகிறது.
இலங்கையின் அரசமைப்பில் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்களப் தரப்பில் 40.000. அப்பாவி இளைஞர்களையும்,தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 90.000. அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.இன்றுவரையும் இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய போரினால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது.இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறது.இங்கே, எல்லாளன்களும்,துட்டக்கைமுனுக்களும் தத்தமது கெளரவத்துக்கான போராட்டமாக இலங்கை இனப்பிரச்சனைக்கான முரண்பாடுகளைக் குறுக்குவதுகூட இந்தியாவின் சாணாக்கியத்தின் வெளிப்பாடே!இலங்கை அரசென்பது சாரம்சத்தில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒடுக்கி இனச் சுத்திகரிப்பைச் செய்யுமொரு பாசிச அரசாக இருக்கும்போது,இத்தகைய "துட்டக் கைமுனு-எல்லாளன்" வடிவங்களுடாகக் கருத்தைக்கட்டி,இதை வெறும் தனிநபர்களுக்கிடையிலான கெளரவப் பிரச்சனையாக வலாற்றில் குறுக்கிவிட முனையும் இந்தியச் சதி புலிகளின் ஆலோசகர்கள் ஊடாகப் பிரபாகரனை அடைகிறது.இத்தகைய வார்த்தைகளின் பின்னே என்ன சதியுண்டென்பதை அறிந்துணர முடியாத தலைமைதாம் புலிகளின் தலைமை என்பதை நாம் சொல்லித்தாம் வாசகர்கள் அறியும் நிலையில்லை.எனினும், புலி அநுதாபிகளுக்கு இதைத் திரும்பத் திரும்பச் சொல்லியாகவே வேண்டும்.
நண்பர்கள் யார்?
எதிரிகள் யார்?
என்ற குறைந்தபட்ச மதிப்பீடுகூடக் கிடையாத புலியரசியலால் தமிழ் ஆளும் வர்க்கம் தன் இருப்பைத் தக்க வைக்க முனைகிறது.இது மக்களின் சகல உரிமைகளையும் தமது இருப்புக்கும்,பேரத்துக்கும் தக்கபடி தகவமைத்துப் போராடிக்கொண்டபோது தமிழ் மக்கள் அதைத் தமது வாழ்வு மேம்பாட்டுக்கானதென எண்ணிக் கொண்டதும் உண்மை.இலங்கைச் சிங்களப் பேரினவாதம் ஒருபுறம் தமிழ் மக்களைக் கருவறுக்கும்போது புலிகள் மக்களின் மீட்பர்களாகக் கணிக்கப்பட்டார்கள்.ஆனால், புலிகளின் வர்க்க நலனானது மக்களின் நலனோடு நேரடியாக மோதியபோது அது தமிழ் மக்களின் கணிசமான பகுதியைத் துரோகிகளாக்கிப் போட்டுத் தள்ளியதும், எதிர் நிலைக்குள் தள்ளியதும் தற்செயல் நிகழ்வல்ல.இத்தகைய தரணத்தில்தாம் நமது எதிரியான பெளத்த பேரினவாதச் சிங்கள ஆளும் வர்க்கம் தம்மை எமது மக்களின் மீட்பர்களாக்கிக் கொண்டுள்ளார்கள்.இத்தகைய அரசியல் சூழ்ச்சிக்கு உடந்தையான ஒருபிரிவு(ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா,புளட்,மற்றும் இன்னபிறக் குறுங் குழுக்கள்) புலிகளின் காட்டாட்சியால் உருவாக்கப்பட்டவர்கள்,இத்தகைய உருவாக்கத்தை மிக விரைவாக்கியவர்கள் இந்தியச் சாணாக்கியர்கள்தாம் என்ப¨தையும் இதுள் குறித்துக் கொள்ளுங்கள்.இந்த நிலையில் நமது இளைஞர்கள் நமது மக்களின் விடிவுக்காகவே இன்னும் உயிர் நீத்துவருகிறார்கள்.அநுராதபுரத் தாக்குதலிருந்து இந்த அரசியல் போக்கை மதிப்பிடுவது மிகவும் அவசியமானது.ஏனெனில், புலிகள் இவ்வளவு பெருந்தொகையான கரும் புலிகளை எங்கும் பயன் படுத்தியது கிடையாது.இத்தகைய தாக்குதலால் நிகழ்த்தப்படவுள்ள அரசியல் பேரமானது இந்தியாவின் தயவில் புலிகள் குறித்தவொரு இலக்கை அடைவதற்குள் அதன் அரசியல் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும்.சிங்கள-இந்தியக் கொடிய அரசுகள் தமிழ்மக்களின் ஜீவாதாரப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கான முகாந்திரத்தைப் புலிகளே ஏற்படுத்தியவர்கள்.எனினும், புலித்தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தேசபக்த இளைஞர்கள் தமது தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகஞ் செய்வது உண்மை!அவர்கள் தமது தாயகத்தைக் காப்பதற்கும்,விடுதலையடைவதற்குமென்றே மரணித்துப் போகிறார்கள்.அவர்களது உயிர்த்தியாகத்தைத் தமிழ் ஆளும் வர்க்கம் தனக்கிசைவாகக் கையாளும்போது தவிர்க்கமுடியாது முட்டுச்சந்தியில் தனது அரசியலோடு கையாலாகாத பிராணியாக நிற்கிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் விரோதிகளான சிங்கள ஆளும் வர்க்கமும்,இந்திய ஆளும் வாக்கமும் மிகத் தெளிவாக நம்மை ஒடுக்குவதற்கு நமக்குள்ளேயே தமது அடிவருடிகளைத் தயார் செய்கிறது.
ஓடுகாலிகளான மார்க்சிய விரோதிகள் தம்மைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக முன் நிறுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும்.ரீ.பீ.சீ. வானொலியின் பிரதான அரசியல் ஆய்வாளரான சிவலிங்கம் குறித்துரைக்கும் "ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு" என்ற மொழியூடாக எதைக் கூற முனைகிறார்?இலங்கையரசு மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து ஒடுக்குமுறை அரசுகளும் போலித்தனமான பித்தலாட்ட பாராளுமன்ற ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தாம்.கிட்லரையும்,முசோலினியையும் ஏன் இன்றைய புஷ்-பிளேயர் கொடுங்கோன்மையாளரையும் இதே மக்கள்தாம் தேர்ந்தெடுத்தார்கள்.அதற்காக இவர்களெல்லோருமே மக்களின் நலத்தில் அக்கறையுடையவர்களும்,மனிதவுரிமைவாதிகளுமாக மாறிடமுடியுமா?;!இவர்கள் தூக்கி நிறுத்தும் இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில் தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்பவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?இங்கேதாம் இந்தியாவின் அதீத சாணாக்கியம் புலப்படுகிறது.
அன்று,அதிகாரப் பகிர்வில் இதே அரசியலைக் கையாண்ட இந்தியா இப்போது அதையே செய்து வருகிறது.அன்று அதிகாரப்பகிர்வில் ஏற்பட்ட தகராறில் புலிகள் இந்திய இராணுவத்தோடு திட்டமிட்டுத் தகராறை ஏற்படுத்தி யுத்தஞ் செய்தபோது இந்தியா எதிர்பார்த்த அரசியல் இலாபம் உறுதிப்பட்டது.அதாவது,தான் அதிகாரத்தைப் பகிர்ந்த மாற்றியக்கங்களைத் தானே அழிப்பதைவிட-மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதைவிடப் புலிகளினால் மிக இலகுவாக அழிப்பதற்கும்,மக்களிடம் அதிவலதுசாரியப் பாசிச இயக்கமான புலிகளை வளர்ப்பதால் மிக நேர்த்தியாகத் தமிழ் பேசும் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தைச் சிதைக்க முடியுமென்று அன்றே இந்தியப் புலனாய்வுப்பிரிவு கருதியது.இதற்கு உடந்தையாக இருந்தவர் தமிழ்நாட்டரசியலில்பாரிய தாக்கஞ் செய்த எம்.ஜீ.ஆரும் அவருது அமைச்சருமான பண்டூருட்டி இராமச்சந்திரனும் என்பது உலகம் அறிந்ததே.
இந்தியத் தயவில் மாகாண ஆட்சியில் அதிகார வெறியோடு பதவியேற்ற ஈ.பீ.ஆர்.எல்.எப் போன்ற இயக்கம் மக்களிடம் புலிகளைவிடப் பன்மடங்கு செல்வாக்குச் செலுத்தியது.அதுவும் தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களிடம் அந்த அமைப்புக்கு மிகவும் செல்வாக்கிருந்தபோது,அத்தகைய அமைப்பைவிட்டுவைப்பது காலவோட்டத்தில் உழைக்கும் மக்களிடம் பாரிய விழிப்புணர்வை அது ஏற்படுத்தலாமென்ற இந்தியாவின் அச்சம், புலிகளால் செய்யப்பட்ட படுகொலை அரசியலினு}டே பிரதிப்பலப்பதாகும்.எனவேதாம் புலிகளைத் திட்டமிட்டே இந்தியா இந்த வியூகத்துள் தள்ளி மாற்றியக்கங்களை வேட்டையாடியது.இதன் உச்சக்கட்டம் இந்தியக் கட்சியரசியலில் ஏற்பட்ட ஆதிக்க முரண்பாடுகளில் இராஜீவ் காந்தியை அழிப்பதற்கும் புலிகளின் பெயரைப்பயன்படுத்தும் சாணாக்கியத்தோடு இந்திய உளவுப்படை காரியமாற்றியது.இங்கே தமிழ்பேசும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இவ்வளவுதூரம் அழித்தொழிப்பதற்குக் காரணமானவர்கள் புலிகள் என்பதைத் தவிர வேறெதைக் கூறமுடியும்?
இந்தியாவின் மிகச் சாதுரியமான சாணாக்கியத்துக்குப் பலியான புலிகளின் தலைமைக்கு மிக நேர்த்தியான புரட்சிகர அரசியலைப் புகட்டும் திறன்மிக்க ஆலோசகர்கள் வாய்க்கப் பெறவில்லை.ஆன்டன் பாலசிங்கம்போன்ற அரைவேக்காட்டு அரசியல் ஆலோசகர்கள் இந்தியாவின் அதி முக்கியமான அடிவருடிகளில் முக்கியமானவொரு நபராக இருப்பதற்குச் சம்மதம் தெரிவித்த ஒப்புதலுக்குப் பின் பிரபாகரன் வெறும் பொம்மையாகவே இந்திய வியூகத்துள் செயற்பட்டார்.அவரிடம் இருந்த மிகத் தீவிரமான தனிநபர் வாதம் இதற்குத் தோதாக இருந்தது.அவர் புரட்சிகரமான அரசியலை கற்க வேண்டிய பணி இந்த வகைக் காரணத்தால் தடைப்பட்டு வெறும் பூஜைக்குரிய நபராக மாற்றப்பட்டார்.இங்கேதாம் புலிகளின் அடிமைச் சேவகம் அடிமட்டப் புலிப் போராளிகளின் தியாகத்தை அந்நிய நலனுக்காகத் திசை திருப்பி இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் இரண்டாவது வெற்றியாக நம் எல்லோராலும் அறியக்கூடியது தமிழ்ச் சமுதாயத்தின் கருத்தியற்றளத்தில் புலிகளையும்,அவர்களது தத்துவார்த்தப் போக்குகளையும் நிலைப்படுத்திச் சிந்தனா முறையில் புலிகளுக்கான இருப்பிடத்தைக் கைப்பற்றிக் கொடுத்ததாகும்.
இந்திய இராணுவத்தோடான மோதலில் மிகச் செயற்கைத் தனமாகப் பிரபாகரன் உயிருடன் விடப்பட்டார்.அவரது உயிர்த்திருப்பில் இன்னொரு அதியசம் நடக்குமென இந்திய முதலாளிகள் அறிந்தே இருந்தார்கள்.அந்த அதிசயம் இன்று நம்முன் எந்த ரூபத்திலிருக்கிறதென்பதை நாம் சொல்லத்தேவையில்லை.பிரபாகரனின் காலடி மண்ணெடுத்து நெற்றியிலிட்டுக் கொள்வதற்குத் தமிழர்களில் பலர் இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.உலகத்தின் நான்காவது பெரிய இராணுவத்தோடு போரிட்டு மீண்டான் தமிழன்-வீராதிவீரன் எங்கள் விடுதலைப் புலித் தலைவன் என்ற கோசங்களோடு கட்டி வளர்க்கப்பட்ட கருத்தியல் மனதுதாம் இன்று புலிகளை விட்டால் நமக்கு யாருமே இல்லையென்றவொரு வெற்றிடத்தைக் குறிவைத்துரைக்கிறதா?அங்கேதாம் இந்தியாவின் இரண்டாவது வெற்றி பட்டவர்த்தனமாக இருக்கிறது.புலிகளால் நலமடைய விரும்பும் இந்தியப் பிராந்திய நலனானது எப்பவும் இலங்கை அரசியலில் இடதுசாரிய மரபை உடைப்பதற்குத் தனது மூக்கை நுழைத்தபடியே இருந்திருக்கிறது.இலங்கையிலோ-தென்னாசியப் பிராந்திய நாடுகளுக்குள் இந்த இலங்கைதாம் அண்ணளவாகவொரு இடதுசாரியசார்பு அரசியலையும் குறைந்தளவான ஜனநாயக விழுமியத்தையும் கொண்டிருந்திருக்கிறதென்றும் நாம் கருத்துரைக்கும் அளவுக்கு இந்திய உளவு நடவடிக்கை நமக்குச் சில வெளிகளைத் திறந்து விட்டிருக்கிறது.இங்கே,இலங்கையென்பது வெறும் கைப்பொம்மையான அரசைக் கொண்டிருப்பதும் அதன் உண்மையான எஜமானாக இந்திய ஆளும் வர்க்கம் இருந்துவருகிறது.இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தியத் தரகு முதலாளிய ஆளும் வர்க்கத்தோடு இணையும் தரணங்கள் வெறும் புவிகோள அரசியல் மதிப்பீடுகளால் நடந்தேறுவதில்லை.இந்தியச் சந்தையாக இலங்கை இருக்கும் ஒப்புதலில் இலங்கையென்பது இந்தியாவின் பாதுகாப்போடு மிகவும் சம்பந்தப்பட்டதென்ற கோமாளித்தனமான புரிதலைத்தாண்டித் தென்னாசியத் தொழிலாள வர்க்கத்தின் இணைவில் இலங்கைத் தமிழர்களின் தேசிய இன முரண்பாடு பாரிய விளைவுகளைச் செய்யுமென்ற பாரிய அச்சமே இந்தியாவைப் புலிகளோடும்,இலங்கை ஆளும் வர்க்கத்தோடுமான அரசியல் சதுரங்கத்தில் பாரிய சாணாக்கியத்தைச் செய்து காட்ட வைத்தது.
இந்திய நலன்களோடு,பொருளாதார உறவுகளோடு கிஞ்சித்தும் இசைந்து போகாத புலிகள்,தமிழ் பேசும் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவே போராடுவதாகக் காட்டப்படும் அரசியலானது தற் செயலானதல்ல.இதுதாம் இந்தியாவின் அரசியல் தந்திரமாகும்.இங்கே புலிகள்போன்றவொரு அமைப்பைத் தவிர வேறெந்தவொரு அமைப்பாவது போராட்டத்தில் இராணுவப் பலமடைய இந்தியா அநுமதிக்கவேயில்லை.அதற்கான காரணமாக இந்தியவுக்குள் நிலவிய அச்சமானது மற்றைய குழுக்களிடமிருந்து ஓரளவு சுயவறிவுபடைத்த தலைமையும்,அவர்களின் இடதுசாரியச்சாயலுமே(இங்கே அவர்கள் இடதுசாரியத்தை பகிடிக்குக் கையாண்டதைக்கூட இந்தியா அநுமதிக்கவில்லை என்பதை நோக்குக)காரணமாக இருக்க வெளிப்படலாயிற்று.பிரபாகரனைத் தவிர வேறெந்தவொரு மனிதரும் தமிழர்களுக்கு எதிரியாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்.கல்வி,கேள்வி,அநுபவம் என்பதெல்லாம் தனிநபர்வாதம்,கொலை,கொடும் அடக்கு முறை என்றான புரிதலுக்குப் பிரபாகரனே சரியானவொரு நபராக இருந்திருக்கிறார்.இவருக்கு ஆலோசகர்களாக இருந்தவரும் இத்தகைய பண்பை ஒரளவு கொண்டரென்பதும் புரியத் தக்கது.
இந்தியாவானது இன்று செய்துவரும் மிகப் பெரிய இராஜதந்திரமானது அன்றைக்கே அடிகோலிய சாணாக்கியத்திலிருந்து வளாத்தெடுக்கப்பட்ட தந்திரமே.அதாவது புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்துவது.பின்பு தமிழ்பேசும் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகப் பலப்படுத்தி அவர்களுடாகச் சில அரசியல் தீர்வைத் திணிப்பது.இந்தத் தந்திரத்துக்காக ஆனந்த சங்கரி,டக்ளஸ்,கருணா போன்றவர்கள் எங்கே நிற்கிறார்ளென்றால் யுத்தத்தின்மீது வெறுப்புடைய மக்களின் மனங்களை அரைகுறைத் தீர்வுக்குள் திணிப்பதற்கானவொரு மனதைத் தயார்ப்படுத்தும் மனோநிலையைப் படைப்பதற்கான"ஜனநாய"அரசியலைப் பேசி மக்களை ஏமாற்றும்போது, அங்கே வரப்போகும் தீர்வை"இதோ கருணாவிடம்,ஆனந்த சங்கரியிடம் கையளிக்கிறது இலங்கை-இந்தியா"என்று மக்களைக் குழப்பிப்பின் புலிகளிடம் இதைத் தாரவார்க்கும்போது,"புலிகள் சொன்னால் அது சரி" என்ற மக்களின் மனோநிலையை ஏற்படுத்தவே!ஏனெனில்,இன்றைய இலங்கையின் இனப்பிரச்சனைக்குப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடையவே கிடையாது!இதுவரை பலியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகத்துக்குப் பின் பேச்சு வார்த்தை மூலம் தமிழீழம் பிரிப்பதென்றால் மட்டுமே,பேச்சுவார்த்தைக்கு வலு உண்டாகும்.ஆக,எல்லைகளைப் பற்றிய பேச்சாக மட்டுமே இவை இருக்க முடியும்.எனவே,பேச்சு வார்த்தையென்பது புலிகளிடம் வழங்கப்பட இருக்கும் இந்த அரைகுறைத் தீர்வுக்காக மக்களை ஏமாற்றிப் போட்டுப் புலிகள் சொன்னால் சரி என்று அமைதிப்படுத்தவே.
இதை இங்ஙனம் புரிவோம்.
அதாவது, இந்திய ஆளும் வர்க்கமானது புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தியுள்ளது.அதன் போராட்டவலுச் சிதைந்துள்ளது.அநுராதபுரத்தாக்குதலே அதை நிருபித்திருக்கிறது.புலிகளால் மரபு ரீதியானவொரு யுத்தம் நடாத்த முடியாது.புலிகளை மெல்ல இராணுவரிதியாகப் பலவீனமாக்கிய இந்தியா இலங்கை இராணுவத்தின் மூலமாக அதை மெல்லப் பரீட்சித்துப் பார்க்கிறார்கள்.இதற்கான மூல காரணம் புலிகளுக்கும் மேற்குலகுக்குமான தொடர்புகளால் புலிகளிடம் இன்னும் என்ன வலுவுண்டு.என்ன ஆயுதம் உண்டு?என்று இந்திய மிக நேர்த்தியாக அறிய விரும்புகிறது.எனவே, தொடர் யுத்தங்களை ஒவ்வொரு பாகமாகச் செய்து புலிகளின் போரிடும் வலுவைக் கண்காணிக்கிறது.இந்தியாவின் இந்த அறிதல் சாத்தியமானால்-அது நம்பும் நிலையில் புலிகள் இராணுவ ரீதியாகப் பின்னடைவில் இருக்கிறார்களென்றால் பேச்சு வார்த்தை தயார்,"தீர்வுப் பொதியை"புலிகளிடம் வழங்கித் தமிழர்களின் நெற்றியில் பென்னாம்பெரிய நாம் இழுத்து அதைத் திருப்பதிவரைக் கொண்டு செல்லலாம்.எனவே,புலிகள் பற்றிய புரிதலுக்கான இலங்கை இராணுவப் படையெடுப்புகள் ஒரு பரிட்சார்த்தமே.இங்ஙனம் புலிகள் இராணுவரீதியாகப் பலவீனம் அடைந்து விட்டால்,அரசியல் ரீதியாகப் பலப்படுத்தித் தமிழர்களை-உழைப்பவர்களை ஒடுக்குவதற்கான புலிகளின் ஒடுக்கு முறைக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க இந்தியாவும்,இலங்கையும் உடன்பட முனைகின்றன.இங்கே,இந்தியாவின் இந்த இரண்டாவது வெற்றி பெரும்பாலும் நிதர்சனமாகி வருகிறது.
இன்றைய நிலையில் தமிழ் பேசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளைக் கண்டறிய முடியாதவரையில் "வம்ச அரசியில்" நடந்தேறுகிறது.இங்கே, துட்டக் கைமுனு மற்றும் எல்லாளன்களின் மீள் வருகை மக்களை அடிமுட்டாளாக்கும் அரசியலை அவர்களுக்குள் திணிக்கிறது.இது எப்படிப் "புலிகள்தாம் நின்று போராடுகிறார்கள்,புலிகளை விட்டால் வேறெவருண்டு?"; என்ற கருத்தியல் மனதுக்கு மாற்றாக மேலெழுப்பப்டும் கருத்தியலை உருவாக்க முனைகிறது.இந்தத் தளத்திலிருந்தபடி தமிழ் பேசும் மக்களையும்,அவர்களின் உரிமையையும் தனிமைப்படுத்தி ஒடுக்கு முறைக்கான சட்ட அங்கீககாரத்தைப் புலிகளிடம் கச்சிதமாகக் கையளிக்க முனையும் அரசியலைப் புரிந்தாகவேண்டும்.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
01.11.2007
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment