Thursday, May 17, 2007

ஆறிய கஞ்சி

ஆறிய கஞ்சி


(புனைவு)


மதியம் மணி இரண்டு.

வன்னிக் கிராமத்தின் எழில்கொஞ்சும் அழகிய வீதி வெறிச்சோடிக் கிடக்க, அந்த வீதியில் அவ்வப்போது தான்தாம் இராஜாவென்றெண்ணும் நன்றியுள்ள நாலுகால் பிராணியொன்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

"வொவ்,வொவ்..."

குரைத்தலுக்குக் குறைச்சலில்லை பசித்திருக்க முடியாதபோதெல்லாம்.

வீதியின் இடது புறமாக ஐந்தாவதாக அமைந்த ஒரு வீடு அதற்குச் சொந்தம்.

வீடென்று சொன்னாற் போதுமா?

இல்லை...

மாளிகை,குடிசை?

எதுவாக இருந்தலென்ன?,அது மனிதர்கள் வாழும் ஒரு இருப்பிடம்.

அங்கே...

"கவிதா,அம்மா கவிதா"பூபாள இராகத்தில் தொடங்கிய மீனாட்சியின் குரல் முகாரியில் முடிந்தது.

"என்னம்மா?,கொஞ்சம் பொறுங்கோ.கையில வேலையாய் இருக்கிறன்."கவிதாஞ்சலி,பதிற் குரலை அஞ்சலிட்டாள் அன்னையை நோக்கி.

காலையிலிருந்து நான்கு சுவருக்குள் முடங்கிக்கொண்டு,பேனையுடனும் வெற்றுத் தாள்களுடனும் போராடிய கவிதாஞ்சலிக்கு எந்தக் கற்பனையும் வடிவமுறாது வம்பு பண்ண,"சீ...இண்டைக்கு எதுவுமே எழுத வருகுதில்லை,என்ன இண்டைக்கு எனக்கு நடந்தது?"யோசித்தபடி அண்மித்தாள் அன்னையை.

"என்னடியம்மா?கூப்பிடக் கூப்பிட உள்ளயிருந்து என்ன செய்தனீ,பள்ளிக்கூடத்தால தம்பியவங்கள் பசியோட வருவாங்கள் தெரியுந்தானே?,இந்தா,இந்த அரிசியை கழுவி உலையில போடு.நான் தோட்டப் பக்கமாப் போய் கீரை புடுங்கிக்கொண்டு வாறன்."கூப்பன் கடையிலிருந்த அரிசி இடம் மாறியபடி மீனாட்சியைக் கீரைத் தோட்டப்பக்கம் அலையவிட்டது.


கவிதாஞ்சலிக்கோ காலையிலிருந்து மனம் ஒரு நிலையில் இல்லை.அவளது மனம் ஒருவயப்பட்டிருக்கும் பட்சத்தில் எப்போதும் எழுதிக் குவிப்பது இயல்பாக இருந்தது.தான் எழுதுவது இலக்கியமென்று சிலர் சொல்வதை உறுதிப்படுத்தப் போராடுவது அவளுக்குத் தொழிலாகியது.

இப்போதும் சமயலறையுள் இருந்து அரசியோடு அவளும் வெந்தாள்.

"என்ன இந்த வாழ்க்கை?என்றைக்குமே நமக்குப் பஞ்சம்தானா?ஏனிப்படி நமக்கு மட்டும்?ஐயா இறந்த பின்னாலே வந்ததுதானே இந்தப் பஞ்சப்பாடு?"கேள்விகளோடு அடுப்படியில் அமர்ந்தவளோ தன்னை மறந்த நிலையைக் கலைத்து உலையிலிருந்த அரிசியை அகப்பையில் எடுத்துப் பதம் பார்த்தபோது,"அக்கோய்,அக்கோய்"என்ற குரலில் அவசரமடைந்தாள்.

பள்ளியிலிருந்து வசந்தனும்,குமணனும் வந்தகையோடு அக்காப் பாட்டோடு புத்தகங்களை மூலையில் எறிந்து குசினுக்குள் முற்றுகையிட்டார்கள்.

"அக்கா கஞ்சி வடிச்சிட்டியா?"இது வசந்தன்.

"அக்கா அம்மா எங்க?"குமணனுக்கு அம்மாப் பாசம்.

"போங்கடா,போய் கால் முகம் கழுவிக்கொண்டு வாங்கோ, நான் கஞ்சி வடிச்சுத்தாறன்."என்றவள் பானையைச் சரித்து அரசி வெந்த நீரை சட்டிக்குள் வார்த்தாள்.

"அக்கோய்,அம்மா எங்கை போயிட்டா?"குமணனின் கேள்வியை வசந்தன் ஞாபக மூட்டினான்.

"தோட்டப்பக்கம் போனவா கீரை புடுங்க.வசந்தன்,நீ ஒருக்கால் அம்மாவைப் பார்த்துக்கொண்டு வாறியா தம்பி?"

"கஞ்சி குடிச்சிட்டுப் போறனக்கா!"வசந்தனுக்குப் பசி பாசத்தையுங் கடந்து.

முதல்ப் போய் பார்த்துக்கொண்டு வாடா,கிழவி எங்க விழுந்து கிடக்கோ தெரியாது."அலுத்துக்கொண்டாள்.

வசந்தனின் குடலோ அவனை அழ வைத்தபடி தாயைத் தேடித் துரத்தியது.

கவிதாஞ்சலி வடித்த கஞ்சியைக் குமணனுக்குப் பங்கிட்டுக் கொடுத்து மீதியை வசந்தனுக்கு வார்த்து வைக்கும்போது,"பிள்ள!பிள்ள கவிதா?தம்பியவங்கள் வந்திட்டாங்களாடி?"என்றபடி மீனாட்சி கீரையுடன் தாய்மையைக் கொட்டினாள்.

வீட்டினுள்ளேயிருந்து பதில் வராமற்போக"என்னடி குசுனிக்குள்ளவே நித்திரையா,கூப்பிடுறது கேக்குதா?"அவசரப்பட்டாள் அந்த அன்னை.

"என்னண,கத்தி ஏன் ஊரைக் கூட்டுறாய்?,அவங்கள் இப்ப கொஞ்சத்துக்கு முன்தான் வந்தவங்கள்.அந்தா குமணன் குசுனிக்குள்ளயிருந்து கஞ்சி மண்டுறான்.மற்றவன் உன்னைத் தேடித்தான் தோட்டப்பக்கம் வந்தவன்.ஏனண நீ காணயில்லையா?"



"என்னடி பிள்ளை சொல்லுறாய்?அவன் தோட்டப் பக்கம் வரவேயில்லையே.நீ எதுக்கு அவ்வளவு தூரம் அனுப்பினாய்?,ஐயோ பெருமானே நான் என்ன செய்வேன்?ஊர் கெட்டுப்போய்க் கிடக்கு.எந்தக் கும்பல் இவனைப் புடிச்சுக்கொண்டு போச்சுதோ தெரியாது சிவனே."மீனாட்சி மிரண்டபோது"சும்மா கத்தாதையண.வசந்தன் பெரிய பெடியன்.ஊருலகம் தெரிஞ்சவன்.எங்கயாவது சுத்திப்போட்டு வருவான்."என்றபடி தாயை ஆறுதல்ப்படுத்த முனைந்தாள் மகள்.

"ஓமடி,ஓமடி.உனக்கு எல்லாம் தெரியும்.வாயை வைச்சுக்கொண்டு வக்கணையாகப் பேசு.றோட்டால கண்ட கண்ட குத்தியன்கள் துவக்கோட போறதை குசினுக்குள்ள இருந்தபடி உனக்குத் தெரியுமே?நான் கூப்பன் கடைக்குப் போயிட்டு வரேக்க என்னை உரசிக்கொண்டு போறான்கள்.ஐயோ,கடவுளே!"மீனாட்சி ஒப்பாரி வைத்தாள்.

தாயும் மகளும் நீண்ட நேரம் வாக்குவாதப்பட்டபின் மீனாட்சி மட்டும் மகனைத் தேடி தெருக்கள்,கோவில்கள்,பள்ளிக் கூடம்,அயலட்டமென்று அலைந்தாள்.

நீண்ட நேரமாகத் தாயும் திரும்பாதது கவிதாஞ்சலிக்கு அச்சத்தைக் கூட்ட குமணனுக்குப் பயத்தை இரட்டிப்பாக்கியது அந்தச் சூழல்.

"அக்கோய், அண்ணையத் தேடிக்கொண்டு போனா அம்மா.இப்ப ரெண்டுபேரையுங் காணேல்ல.இருட்டப்போகுது.வா அக்கா.நீயும்,நானும் தேடிப் பாப்பம்."கால்கள் நடுங்கியபடி அக்காளும் தம்பியும் அவசரமாகப் புறப்பட்டார்கள்.

பொழுது இருண்டுவிட்டது.

இரை தேடிய பறவைகளோ கூடுகளை அண்மிக்கப் பறந்தபடி.

குரைத்துக்கொண்டிருந்த நாயோ நிறுத்தியபாடில்லை.அதன் குரைப்பு இப்போது ஊளையாக மாறியது.காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருக்க ஆங்காங்கே மழைத் துளிகள் நிலம் நோக்கி வீழ்ந்தன.

கவிதாஞ்சலியும்,குமணனும் போகாத இடமெல்லாம் போயும் வசந்தனையும்,தாயையும் நெருங்க முடியாது சோர்ந்த மனத்துடன் வயிறுகாய வீடு திரும்பினார்கள்.
அங்கு மீனாட்சி மட்டும் ஓப்பாரி வைத்தபடி வீட்டு முற்றத்தில் மண்ணோடு மண்ணாகக் கிடக்க"அம்மோய்,வசந்தனைக் காணயில்லையண.நீ எங்கேயெல்லாம் பார்த்தாய்?"என்று கவிதாஞ்சலியும் குமணனும் ஒருங்கே குரல் கொடுத்தார்கள்.

"நான் சொன்னது சரியாய்ப் போச்சடி.என்ரை பிள்ளையை பாழாய்ப்போன இயக்கங்கள் கடத்திக்கொண்டு போயிட்டுது.ஐயோ கடவுளே நான் பெத்த குஞ்சு!,என்ரை குஞ்சைக் காப்பாத்து அம்மாளே."பெற்ற மனமோ நொந்து போய்க கிடக்க,பிறந்ததுகளும் நொந்துகொண்டிருக்கத் தேசம் மாவீரர்களைத் தின்று கொண்டிருந்தது.

காலம் சென்றுகொண்டிருந்த சாமத்தில் வெளியே இருந்து ஒரு குரல் கவிதாஞ்சலியை அதிர வைத்தது.

"வீட்டுக்காறர்"

"வீட்டுக்காறர்"

அமைதியான குரலில் அந்த "வீட்டுக்காறர்"அழைப்பு இருந்தது.

"அம்மோய்,அம்மோய் ஆரவோ படலையடியில் நிண்டு கூப்பிடுகினம்"நடுங்கியபடி தாயை அழைத்துத் தைரியம் பெற்றாள் கவிதாஞ்சலி.குமணன் தமக்கையின் பின்னால் மறைந்தான்.

கவிதாஞ்சலியும்,மீனாட்சியும் அரிக்கன் லாம்புடன்"ஆரு தம்பி"என்றபடி படலைக்கு வந்தார்கள்.

"ஆரது தம்பி?"இருட்டில ஒருத்தரையும் தெரியேல்ல.வசந்தன்ர நண்பர்களோ நீங்கள்?எங்க என்ர பெடி?"கேள்விகளைக் கொட்டியபடி இருட்டில் நின்ற தலைகளை அண்மித்தாள் மீனாட்சி,தாய்மை ஏக்கத்துடன்.

"அது நாங்கள்தான்.லாம்பை அங்கால வைச்சிட்டு வாருங்கோ."அதிகாரத்துடன் ஒரு குரல்.

"ஆரு தம்பி,வசந்தன்ர சிநேகிதர்மாரே?"

"நாங்கள் தமிழர்கள் எல்லாருக்கும் சிநேகிதர்கள்தான்."வந்தவர்களில் ஒருவர் சொல்ல மற்றவர் தொடர்ந்தார்,"இங்க பாருங்கோ அம்மா,உங்கட மகன் வசந்தனை நாங்கள் நாட்டுக்காக உழைக்கச் சேர்த்துக்கொண்டு விட்டோம்.இப்படி எல்லா வீடுகளிலையும் நாட்டுக்காக உழைக்க ஒருவரை நாங்கள் அழைக்கிறோம்.இப்ப உங்களுக்கு இந்தத் தகவலைச் சொல்லிப்போட்டுப் போகத்தான் தலைமை உத்தரவு.வேறு மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.ஆனால் நாங்கள் சொன்ன இந்த விடயம் ரகசியம்.சத்தம்போட்டுக் குழறினால் பின் விளைவுகளைப்பற்றி உங்களுக்கே தெரியும்.நாங்கள் வாறம்."


மீனாட்சியின் பதிலை எதிர் பார்க்காதவர்களாய்,வந்ததும் போனதும் தெரியாமலே அவர்கள் போய் விட்டார்கள்.

மீனாட்சியோ பேய் அறைந்த மாதிரி சிலையாக நின்றாள்.வந்தவர்கள் சொன்னவை அவள் வாயைக்கட்டிப் போட்டிருப்பினும் பெற்ற வயிறு படபடத்திட மனது பொங்கிப் புலம்பலாய் மாறியது.

"ஐயோ என்ர ராசா!என்ரை குங்சு.உன்னை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபட்டன்.ஐயா செத்தபிறகு உங்களை வளர்க்கத்தானே நான் உயிரோடு இருக்கிறன்?என்ர ராசா நீ பள்ளிக் கூடத்தால பசியோடு வருவாய் எண்டடி அரசி வேண்டி...கீரை புடுங்கிச் சமைக்க...ஐயோ என்ரை தாயே!என்ரை பிள்ளையைக் கடத்திக் கொண்டு போட்டான்களே...நானும் என்ர குஞ்சுகளும் பசியால வாடேக்க,எங்கட பட்டுணிக்கு ஆர் உதவினவை?,இண்டைக்கு வந்து நாட்டுக்கு உழைக்கச் சேர்த்திட்டினமாம்.ஆர் நாட்டுக்கு உழைக்கினம்?ஆளை ஆள் பழிவாங்க உன்னைப் பலிக்கடாவாக்கிப் போட்டான்களே என்ர குங்சு!,பாடையில போவாங்கள்.பெத்தமனதை தவிக்க வைச்சிட்டான்களே...ஐயோ..."


மீனாட்சியின் மனம் தவிக்க அவள் உடலோ மண்ணில் சரிந்தது.காலம் விலகிக்கொண்டிருக்க அவள் கண்ணீர் தரையை ஈரமாக்கியது.உளையிடும் நாயோ அவளை நக்கி மெளனித்தது.வசந்தனின் கஞ்சியோ ஆடைகட்டி ஆறிப்போய் அநாதையாகக் கிடந்தது,மீனாட்சியைப்போல்.


ப.வி.ஸ்ரீரங்கன்

No comments:

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...