இராஜன் கூலுக்கு-ஸ்ரீதரனுக்கு மனிதவுரிமைக்கான கௌரவ விருது!
இன்று நமது மக்களின் வாழ் நிலை என்ன?எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் அகதிகளாகவும்,பஞ்சப் பரதேசிகளாகவும் கொலையுண்டோம்-கொலையாகிறோம்?இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது இத்தகைய கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா?விருதை வழங்கும் சர்வதேச மனிதவுரிமை-மன்னிபுச் சபைகள் எந்த நலனுமற்ற-எந்த வர்க்கத்துக்கும் துணைபோகாத முற்றுமுழுதும் மக்கள் நலனில் அக்கறையுடைய அமைப்புத்தாமா? இவைகள் விடைகள் காணவேண்டிய கேள்விகள்.ஏனெனில் நாம் வர்க்கங்களாகப் பிளவுண்டு,வர்க்கச் சமுதாயமாகவுள்ளளோம்.இங்கே வர்க்கங்களைக் கடந்த எல்லா மனிதர்களுக்குமான ஆட்சி என்பது கிடையாது!வர்க்கச் சமுதாயத்தில் வர்க்கஞ்சார்ந்த அரச அமைப்பும் அதன் நிறுவனங்களுமே நிலவ முடியும்.ஒரு ஏகோபித்த-மொத்த இனமோ மொழிசார்ந்த ஏகோபித்த பொருளாதார வாழ்வோ கிடையாது.தமிழைப் பேசினாலும் கூலிக்காரனும் முதலாளியும் ஒரே வர்க்கம் இல்லை.இருவருக்குமான இடைவெளி மொழியைக்கடந்து பொருளாதாரத்தில் உச்சம் பெறுகிறது.
எனினும்,மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்புக்கு 2007 ஆண்டின் மார்ட்டின் என்னல்ஸ் விருது கிடைத்துள்ளது. இந்த அமைப்பின் சார்பில்(இவ்வமைப்புக்கு "இன்றைய நிலையில்" இவர்களைவிட வேறெவரும் உறுப்பினர்களெனக் கூறமுடியாது.மனோரஞ்சன்...வெண்தாமரை...கனடா...கட்சி உருவாக்குதல்...) திரு. கோபாலசிங்கம் ஸ்ரீதரன் அவர்களும் திரு.இராஜன் கூல் அவர்களும் விருதுக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 2007 வருடத்திற்கான இவ்விருதுக்கு மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு(யாழ்பாணம்) உட்பட, உலகளாவிய பதினொரு மனித உரிமை அமைப்புகள் நியமிக்கப்பட்டிருந்தன. இலங்கையைச் சேர்ந்த மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பும் புருண்டியைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமும் 2007 ஆண்டின் மார்ட்டின் என்னல்ஸ் விருதுக்குரியவைகளாக நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளன(ர்). இவ்விருதுக்கான தேர்வு செய்யப்பட்டவர்களில் நமது தேசத்து மனிதர்கள் இருவர்கள் அடங்கும்போது நாம் நமது தேசத்தின் இழி நிலையின் தீர்மானகரமான அழிவுப் பாதையை இந்த விருது சாட்சியம் கூறுவதாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.

இன்றைய நாள் வரை நமது தேசத்தில் மரித்தவர்கள் இலட்சம் தொகை பெறும்.இதுள் மனிதவுரிமைக்காகக் குரல் கொடுத்த சுப்பனும், கந்தனும்,சின்னாச்சியும்,பொன்னாச்சியும் அடக்கம்.இவர்கள் எல்லோரும்தாம் மனிதப்படுகொலைகளுக்கு எதிராகவும்,இயக்கங்களின் மக்கள் விரோதப் போக்குக்கெதிராகவும் அன்று தொட்டுக் குரலெறிந்து, நாளடைவில் இயக்கப் பயங்கரத்துக்கு மரித்திருக்கிறார்கள்!இதுள் ஸ்ரீதரனும்,இராஜன் கூலும் ஒரு சிறு பங்களிப்பை அவர்கள் மூலமாகவே செய்திருக்கிறார்கள்.இவர்கள் செய்த பெரும் காரியமே மக்களின் கொலைகளைப் பட்டியல் போட்டதுதாம்.இதைவிட்டு இயக்கப் பயங்கரவாதத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிடவோ அன்றி மக்களின் தயவில் நின்று காரியமாற்றவோ முடியவில்லை.இத்தகைய எதிர்மறை நிகழ்வுக்குப் புலிகளின் அதிபயங்கரமான கொலைக் கலாச்சாரமே காரணமாக இருப்பினும் அதைச் சாட்டாக வைத்து மற்றைய இயக்கங்களும் இத்தகைய மனிதர்களைப் பலியெடுத்தே இருக்கின்றன.இவர்களின் சக ஓடியான இராஜினி திரணகமவைக் கொன்றபோது புலி தவிர்ந்த மற்றையவர்களின் இயக்கப் பயங்கரவாதமும் அம்பலப்பட்டுப்போனது.இங்கே நாம் இத்தகைய விருதுகளைக் கண்டு-இது மக்களினதும் ஜனநாயகத்தினதும் வெற்றியென்று கூத்தாட முடியாது.அப்படிக் கூத்தாடுபவர்கள் அந்நியச் சக்திகளின் தயவில் மக்களின் உரிமைகளை வென்றிட முடியுமென நம்பும் பேதமையுடையோரே!
நமது மக்களின் உயிர்கள் தினம் அழிப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல் மாறிவிடவில்லை.நமது மக்களின் உரிமைகளை எவரும் இதுவரை தந்துவிடவுமில்லை.நமது மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையே உயிர்வாழும் அடிப்படையுரிமையாக விரிந்து கிடக்கும்போது,எங்கள் மக்களின் கொலைகளைப் பட்டியல்போட்டவர்களுக்கு விருது என்பது என்ன பெறுமானத்தைக் கொண்டிருக்கும்?

மக்கள் கொலையாகும் வழிகளை அடைத்து,அவர்களின் அடிப்படையுரிமைகளை வழங்கி,இயல்பு வாழ்வுக்கு வழிவிட முட்டுக்கட்டைபோடும் அந்நியச் சக்திகள் விருதுகளால் எங்கள் உரிமைகளைச் சமப்படுத்திட முடியாது.நமது உரிமைகளை இந்தியாபோன்ற அயல் நாட்டின் தயவில்தாம் பெறுமுடியுமென அலம்பும் கபோதிகளுக்கு இந்த விருது முக்கியமாகலாம்!ஆனால் நமது மக்களின் உரிமைகளை-நமது மக்களே போராடிப் பெறவேண்டுமென நம்பும் நாம் இத்தகைய விருதுகளைக் கண்டு சந்தேகமே கொள்கிறோம்.
எங்கள் வாழ்வும் அது சார்ந்த வாழ்வாதார உரிமையும் நமது தேசத்தின் விடிவில் மட்டுமே சாத்தியமென நம்பும் சாதரணத் தமிழ் பேசும் மக்களிடம் இத்தகைய விருதுகள் நம்பிக்கையை ஏற்படுத்தாது.மாறாகத் தமது அழிவைச் சொல்லியதற்காக விருதா என்றே நோக்கப்படும்.
இன்றைய கொடிய போர் வாழ்வில் ஒவ்வொரு இயக்கமும் தத்தமது நலனின் பொருட்டு மக்களின் உரிமைகளைக் கையில் எடுத்து அரசியல் பேசும்போது,அங்கே அவர்களின் பதவி ஆசையும்,பொருட் கனவுமே நிலைபெற்றிருக்க முடியும்.
ஸ்ரீலங்கா அரசினது இன ஒதுக்குதலும்,சுத்திகரிப்பும்-சிங்கள மயப்படுத்தலும் என்றுமில்லாதவாறு இன்று துரிதகதியில் இயங்கி வரும்போது,அதையே தமிழ் மக்களின் நலனென்று கூப்பாடுபோடும் தமிழ் இயக்க-அரசியல் தரகர்கள்,இந்த விருது தமிழ்பேசும் மக்களினதும் ஜனநாயகச் சக்திகளினதும் வெற்றியென்கிறார்கள்.இங்கே இவர்கள் கூறும் ஜனநாயகச் சக்தியென்பது தம்மைத்தாம்.இதுவரை தாம்சார்ந்த இயக்கங்களுக்குள் நிலவிய உட்கட்சிக் கொலைகள்-அராஜகங்களைச் சுய விமர்சனஞ் செய்து,தம்மைப் ப+ரணமான மக்கள் போராளிகளாகக் காட்ட முடியாத இந்தக் கபோதிகள்தாம் இன்றைய ஜனநாயகச் சக்திகள்.இவர்கள் இந்தியாவுக்கு விளக்குப் பிடித்து எமது மக்களின் நலனை வென்றுவிடத் துடிக்கிறார்கள்.இது எப்படியிருக்கென்றால் அந்நிய ஏகாதிபத்தியங்களின் தயவில் தமிழ் மக்களின் விடுதலையைச் சாதித்துவிட முடியுமெனும் புலிகளின் இன்னொரு அப்பட்டமான உறுப்புத்தாம்
.
இன்றுவரை ஈழத்தில் ஓடும் இரத்த ஆற்றுக்குக் காரணமான இந்திய மற்றும் அந்நியச் சக்திகளின் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் எந்த மனித விரோதிகளும் தம்மை ஜனநாயக வாதிகளென்று பிதற்றட்டும்,இது புலிகளின் இன்னொரு தரப்புத்தாம்.ஆனால் மக்கள் என்றும் தமது மொழியில் இவர்களனைவருக்கும் பாடம் புகட்டும் ஒரு தரணம் புரட்சியின் பெயரால் மேலெழும்போது,இந்த ஜனநாயகச் சக்திகள், புண்ணிய புலிகள் எல்லோரும் எந்தத் தரப்பில் நிற்பார்களென்று வரலாறு புகட்டும்.அதுவரை மக்களின் கொலைகளைச் சொல்லி விருதுகள் குவியலாம்.ஆனால் அந்தக் கொலைகளை அடைக்கும் வழி கொலையுறும் மக்களால் மட்டுமே முடியும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
08.05.2007
No comments:
Post a Comment