Monday, December 31, 2007

திசையெல்லாம் கேளீர்

வா, புத்தாண்டே
ஈழ மண்ணில்
போர் தொலைத்து!


குறுவிழி காண் மரணம்
கருமனங் கொண்ட இருள்
சுருங்கு நட்பறியா இதயம்
மூன்றுங் காணிடம் மறைக

பூவும் புகையும் பிணைவுறும்
நோவும் சாவும் கொண்ட ஈழம்
போரிடை கருகும் நெஞ்சும் நிலமும்
பாரிடை இனியும் வேண்டாம்!

தேரும் திரி வடமும்
மோரும் முது கையும்
பாலும் பசுவும்
மண்ணும் நெல்லுமாக பொலிக ஈழம்

செம்பு நீரும் செம் மண்ணும்
கோலந் தரும் முற்றமும்
பொங்கற் பானையும்
திசை பார்த்த சரிவும் நிறைக தமிழர் இல்லம்


மைவிழி மகளிர் நீராடி
தாவிக் கூத்தாடித் தமிழ்பாட
நிலமகள் மதித்து நிமிர
வா புத்தாண்டே ஈழ மண்ணில் போர் தொலைத்து

குலமுதற் கிழத்தி
குடிமுதல் உழவன்
மண் வளத் தேட்டம்
மலர்ந்த பொழுதாய் வா புத்தாண்டே

பாற் சோறு வேகும்
தரும் கைகள் வலுக்கும்
கொடுங் கோன் மறையும்
வான் கொடை வளரும்

கண்மாய் நிறையும்
மண்வாய் திறந்து
மணிமுத்துப் பெருகும்
மழலைகள் தவழும்

மண் வினைப் பயனால்
மண்ணுடையான் தழைக்க
நெடுமாரி சூடி
குக்கிராமம் கூடிய பொலிவில் சிறக்க

தெருவெல்லாம் கூடும்
திசையெல்லாம் கேளீர்
நமக்கு இனி அழிவு இல்லை
வா புத்தாண்டே வயலும் வயிறும் வாழ்த்த!


ப.வி.ஸ்ரீரங்கன்
01.01.2008
பின்னிரவு:0,35

Friday, December 28, 2007

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ...

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ...



ஆவீன மழை பொழிய இல்லம் வீழ....
இங்கு எதுவும் ஈனவில்லை. கடும் மழையும் பொழியவில்லை. எனினும்
என் வீடு வீழ்ந்தது. சிதறுதேங்காய் போன்று சிதறியபடியே கற்கள்
உருண்டன.
கூடவே கோதாரி புடிச்ச உடம்பும் சிதறிப் பிய்ந்தது.
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ...
நாசியேவ குண்டு பொழிய இல்லம் வீழ மெய் சிதற
அகத்தடியாள் விம்மியழ வாரிசு வதங்கித் துவள....
இருப்பைக் காக்கத்தான் யாவும்.



ஈழத்தை விட்டு ஜேர்மனியில் வாழ்வதும் சாவதும் இருப்பைப் பற்றிய
கனவின் உந்துதலால்தாம்.
நீண்டு வளையும் உணர்வுகளுக்கு குறியீடு எதுவுமில்லை.
சிதறிய கற்களுக்குள் சின்னதாய் முனகல்.


மனைவி.
ஒலி.
எதிரொலி!


என் செவிப்பறை இரைச்சலில் வலுவிழந்தது.
பிரபஞ்ச இரைச்சல்.
ஒலியைத் தவிர வேறெதுவுமில்லை. அத்வைதம் மனதில் விரிந்தது.
ஒலியே அநாதி!
சற்றுமுன் வெடித்த குண்டின் ஒலி எனக்கு அநாதியாகவே பட்டது.
ஈழத்துப் பிரஜை என்ற உந்துதலோ என்னவோ!


அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக....


என் அகத்தடியாள் அழுதாள்.
மெய் நோக நோக விம்மி விம்மியழுதாள்.
அடிமை?
இவ் லோகத்தின் அடிமை??
தான் அடிமையென்று உணர்வதற்குள்ளேயே அடிமை செத்தது.
என் வீரியத்தின் மகுடம் துவண்டு கிடந்தது. மூச்சில்லை.
முகங்கற்குவியலுக்குள்.
நாடி நரம்புகள் வலுவிழக்க என்னால் அவனைப் பார்க்க
முடியவில்லை.
உச்சியிலிருந்து குருதி கசிந்தது.



அவன்மீது கட்டப்பட்ட கனவுகள் கோடி. தவிடுபொடி யாவும்.
என் மீது நான் கொள்ளும் பச்சாதாபம் அவனுருவில் வலிமை சேரும்.
எனக்காக எதிர்காலம் முற்றுப்புள்ளியாய் போனபோது, அவன் எனக்கு
ஆரம்பத் தொடரானான். இதற்குக் குண்டு முற்றுப்புள்ளி வடிவில்
வந்து சேர்ந்தது.
இயலாமை மீண்டும் உச்சியில் ஏறியமர்ந்து ஊனப்படுத்தியது
என்னை.
அவன் மனிதத்தை(சஞ்சிகை) இறுகப்பற்றியிருந்தான்.
குருதியினால் அiதைத் தூய்மைப்படுத்தவா...?
போன கிழமைதாம் அது தபாலில் வந்தது. சுவிசிலிருக்கும் சில தமிழ்
நண்பர்களின் முயற்சி அது.
மனிதம் மீது கவிந்த வெறுப்புத்தானே குண்டுகள் வடிவில்
குடிகளுக்குள் வருகின்றன?
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள....
இருப்பதே வாடகைக்குடியில் இதற்குள் விளைவிப்பதற்கேது நிலம்?



ஒரு
நாளைக்கு உடம்புக்கு முடியாது போனால் வாடகைவீட்டு ஞாபகம்.
கிருஷ;ணனின் பிரமாண்ட காட்சியில் வாயில் விரியும் கோறையாக....,
அதற்குள் மானுடம் புழுவாக நெளியும் காட்சியாக விரியும்.
நேற்றும் வேலைக்குப் போனபோது என்னுடன் வேலைபார்க்கும் என்
நண்பன் ஞானத்தின் பெயரை நேர அட்டவணையில் இருந்து
நீக்கியிருந்தார்கள். போனமாதம் வேறொரு தொழிலாளியை வீட்டுக்கு
அனுப்பியபோது தட்டந்தனியனாக நின்று எதிர்த்தவன்.
டொச்சில்'Ausbeutung Systeme" (சுரண்டல் பொறிமுறை)
என்று கோசம் போட்டவன்.
நேற்று....
இன்று நான், என் குடும்பம் வெடிகுண்டுப் புகைக்குள் குருதி சிந்தி....
உயிர் கொடுத்து....



இடிபாடுகளுக்குள் இருந்து என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.
வேலைக்குப்போக முடியாமல் நேர்ந்ததையெண்ண அது பயமாகி என்
வீட்டு இழப்பைக்கூட மறக்கடிக்கிறது சில விநாடிகள்.
டொச்லாண்ட் புகைகளின் பின்னே...
எனக்கு ஈழம் இப்போ சிறப்பானதாகப்பட்டது.
யுத்தத்தை மறுத்து,



தூக்கம் வரும்போது தூங்கி, பசி வரும்போது
கொட்டாவி விட்டு மிஞ்சினால் மூக்கறச்சிக் கீரையுடன்
காலந்தள்ளி.... அமைதியாய் உடல் அசைந்து உயிர்தாங்கும்.



டொச்லாண்ட் எனக்கு எல்லாம் வழங்கி இருந்தது. ஆனால் குண்டை
எப்போது வழங்குமென்று தெரியாமற்போய்விட்டது! தெரிந்திருந்தால்....
என்வீரியம்.... என் கனவு.... என் மனைவி....
நான் அகோர இடிபாடுகளுக்கிடையில் இருந்து என்னை விடுவித்து, என்
மனைவியை.... என் மழலையை அண்மிக்க முயற்சித்து தோற்றேன்.
சில நிமிடங்கள் கழிய.... கீக், கீக் ஒலி செவிகளில் பட்டுத்
தெறித்தன.
இது எனக்கு அதே குண்டு வெடிப்பின் ஒலியை ஞாபகமூட்டியது.
நான் பிரபஞ்ச இரைச்சலுக்குள்....
இப்போது அத்வைதம் அம்மணமாய் எனக்குள் சதிராடியது.
சிவப்பு வான்களில் வந்தவர்கள் ஓடியடித்து எமை அண்மித்தனர்.
அவர்கள் Notruf காரர்கள் (அவசர அழைப்புக்காரர்கள்)
கற்குவியல்களுக்குள்ளிருந்து என் மழலையை இழுத்தெடுத்தார்கள்.
அது துவண்டுவிட்டது.



நான் அப்பன் என்று கூறிக்கொள்ள இயலவில்லை. அப்பனுக்குரிய
முறையில் அவனைப் பார்க்கவில்லை. அவன் வாழ்நாளில் பல மணி
நேரங்களை நான் அவனுக்காகச் செலுத்தாமல் புத்தகங்களுடன்
செலுத்தினேன். மழலையொலி கேட்டு ஆனந்தமடையாமல் நூ
ல்களுக்குள் புழுவாகிப் போனதாலேயோ என்னவோ அவன்
என்னைவிட்டு இப்போது வெகுதூரம் சென்றுவிட்டான். நான் எனக்குள்
நொந்து வெதும்பினேன்.
இனி இங்கு எந்த சவக்காலையில் நிம்மதியைத் தேடுமோ?
நான் இதையறியேன்.
ஏதோவொரு மூலையில் உணர்வு மரத்தவளாய் மனைவி.
அவள் விழிகள் வீங்கி நீர் சுரந்து.... அகோரமான வாழ்வுப் படலத்தை
சொல்லாமற் சொன்னது.



இருவிழி சிந்தும் நீரைப் பாராதே என்
இதயம் மகிழ்வதைப்பார்! என்று அவைகள் கூறவில்லை.
இயற்கை வலிமையுடையது.
சூட்சுமமாக சிலவற்றைச் சொல்லும்.



மனைவியின் விழிகள் எனக்கு இப்படியே பட்டது.
தன் தொப்புள் கொடியுடன் இணைத்து வைத்த இயற்கை, தற்போது
தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகப் பிதற்றினாள். துவண்டதை
அணைத்து மூர்ச்சையானாள்.
அவள் உடலெங்கும் இரத்தக் காயங்கள். தலையிலிருந்து குருதி
வடிந்து அவள் கூந்தலை சிவப்பாக்கியது.
என் குழந்தையின் பால்போச்சி ஒரு மூலையில் சிதறாமல் கிடந்தது.
என் குழந்தையும் இப்படி....
என் விழிகள் பனித்து மீசை வழியாக உதட்டை அடைந்தது.
உப்புநீர், சீதை சிந்திய கண்ணீர் மலைபோன்ற எதனூடோ சென்று
எங்கோ அடைந்ததாம். எனக்குள் ஒரு கம்பன் இருந்தால் எப்படி
வர்ணிப்பானோ தெரியாது.
ராமாயணத்தை சுவைபட விளக்கிய ஆசிரியர் சபாரட்ணம் என்
விழிமுன் வந்து போனார்.



எல்லாம் கனவுபோல் விரிந்து கொண்டன.



என் மனைவியையும் என் மழலையையும் கிடத்தியும் எடுத்தும்
சென்றார்கள். என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிச் சென்றார்கள்.
நேரம், அதிகாலை நான்கை நகர வைத்தியசாலை காட்டியது.
எனக்கு மருத்துவ விடுப்புத்துண்டு பத்து நாளைக்கு எழுதப்பட்டது.
கூடவே உடற் சிராய்ப்புக்கு பத்துக்கள் போடப்பட்டது.
மனைவியை விபத்து வாட்டில் போட்டு குருதியேற்றினார்கள். அவள்
கடுமையாகக் குண்டடிபட்டுவிட்டாள்.
நான் என் பிள்ளையை எங்கு எடுத்துச் சென்றார்களோ என்று
ஏங்கித் தவித்தேன்.
மனைவியின் உடல்நிலை இன்னும் பெரிய பேரிடியை எனக்கு
வழங்கிற்று. இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள எனக்கு
உணர்வும் உடல் இயக்கமும் இருந்தது.
என்ன பாவம் செய்தேனோ தெரியாது!
புண்ணியம் செய்திருந்தால் நானும் கூடவே போயிருப்பேன். இப்போது
நான்...



இருள் விடிந்து காலை மணி ஏழாகியது.



என் உடலில் வலுவிருந்தது.
வேலை ஞாபகத்திற்கு வர மருத்துவ விடுப்புத் துண்டு
வழி வகுத்தது.
அத்துடன் வேலைத்தலம் நோக்கிப் போவதாக டாக்டரிடம் கூறி,
மனைவியைப் பார்த்து மனம் நொந்து வேலைத்தலத்திற்குச்
செல்லக் கிளம்பினேன். வழியில் ஞானம் எதிர்ப்பட்டான்.
என்ன மச்சான் உடம்பெல்லாம் கட்டுக்கள்
நான் மௌனமாகியிருந்தேன்.
மச்சான் போன மாதம் வேண்டிய ஆயிரத்தையும் தாவன்ராப்பா.
வீட்டுக்காரர் கொழும்பிலை வந்து நிற்கினம். இப்ப அவையளோடை
ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கைதான் நீயும் கடவுளேயெண்டு
நேரிலை வாறாய். காசைத் தாவன்ரா.



ஆவீன மழை பொழிய இல்லாம் வீழ
அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள....
வேலை போகுதென்று மருத்துவ விடுப்புக் கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ளச்
சாவீடு என் வீட்டில் நிகழ
நான் விழி பிதுங்கி நிற்க...



ஞானம் என் நிலைமைகளை அறியும் நிலையிலில்லை.
பத்தாண்டுகளுக்குப்பின் பெற்றோர்களுடன் உறவாடிய நினைவில்
அவன் தன்னை மறந்திருந்தான்.
பின்னேரம் உம்மைச் சந்திக்கிறேன் என்றேன்.
சரி மச்சான்' ஏதோ சிந்தனைவயப்பட்டவனாய் விடைபெற்றான்.
அவனைப் பிரிந்து கிளம்பினேன்.



வானம் அழத்தொடங்கியது.
எனக்காக...?



குண்டுச்சிராய்ப்பினால் ஏற்பட்ட காயங்கள் வலியை அதிகமாக்கின
எனக்கு.


நிம்மதி இல்லை.


என் மழலை பற்றிய கனவுகள்.
வாழ்வின்மீது வெறுமை கவ்வியது.
வேலை ஏன்?
மருந்து விடுப்பேன்?
எல்லாம் போனபின் இவையிருந்து இலாபமென்ன?
பொன் எழில்கொள் மேனியைக்
கண்ணீரினால் கழுவி ஆறுவேனோ?
மீண்டும் வைத்தியசாலை நோக்கி ஓடினேன்.
இடையில் விம்மி விம்மி அழுது வீங்கினேன்.
என் செல்வத்தின் எழில் முகத்தைப் பார்க்க மனம் அவாப்பட்டது.
அவன் பொங்கி எழும் முழுநிலவுக்கு ஒப்பானவன். ஆனால் அகதி.
கண்கள் மீண்டும் பனித்தன.



விழிநீரினூடே அவன் மலர்ந்தான்.
விழி நீரிலாட அவன் மலர்ந்தான்.
குயிலும் கரும்பும் செழுந்தேனும்
குயிலும் யாழும் கொழும்பாகும்
அயிலும் அமுதம் சுவைதீர்த்த
மொழியைப் பிரிந்தான் அழியானோ...!



சீதைக்கும் ராமனுக்குமா இது பொருந்தும்....?
எனக்கும் தாம்!
என் மழலையை எந்தச் சவக்காலைக்கு
எடுத்துச்
சென்றிருப்பார்கள்...?
மனைவியின் நிலை எப்படியோ? கேள்விகள் நீண்டன.
இரத்தம் ஏற்றினார்கள். எய்ட்ஸ் இரத்தம் வேண்டாம். பிளாஸ்மா மூ
லம் வைத்தியம் பார்க்கச் சொன்னேன்.
டாக்டர்கள் கேட்கவில்லை.
அவள் நிலைமையை நானறியேன்.
ஓடினேன். ஓடினேன். என் குழந்தை நினைவால்.
அவள் நினைவால். வைத்தியசாலை அண்மித்தது.
என்னவளின் கட்டிலைச் சுற்றி பத்துக்கு மேற்பட்ட கருப்புத்
தலைகள் தென்பட்டன.



என்ன தம்பி உமக்கு இப்படி...? பெரியவர் ஒருவர் நா தளதளக்க
கேள்விக்குறியால் ஆறுதல்படுத்தினார்.
ஞானமும் மௌனமாகித் தலைகுனிந்து அவர்களுள் நின்றான்.
மனைவி கோமாவில் இருந்தாள்.
நான தலைமை வைத்தியரிடம் என் மழலைபற்றிய விபரம் அறியச்
செல்வதாய் அவர்களனைவருக்கும் கூறிச் சென்றேன்.
என் மழலையைப் பார்க்க யாவரும் வருவதாய்ச் சொன்னார்கள்.
பதில் கிடைத்தது.
தென் சவக்காலையில் மழலையின் உடலிருப்பதாய் பதில் வந்தது.
ஓடினேன் மீண்டும்.
அவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
பஸ், டிராம், கார் யாவுமே மெதுவாகச் செல்வதாய் உணர்ந்தேன்.
இதனாற் கால்களினால் ஓடினேன். ஓடினேன்.
பின் தொடர்ந்தவர்கள் எவரையும் திரும்பியபோது காணவில்லை.
இடைவழியில் களைப்புற்று வீதியோரம் வீழ்ந்தேன்.
இதயம் பலமாக அடித்தது. நெஞ்சு வலியெடுத்தது.



'மண் சுழன்றது. மால்வரை சுழன்றது,
மதியோர் எண் சுழன்றது, சுழன்றது
அவ்வெறி கடல் ஏழும்
விண் சுழன்றது ,விரிஞ்சன்
கண் சுழன்றது,சுழன்றது
கதிரொடு மதியும்.... 'என்று கம்பன் சொன்னதுபோல் நான் சுழன்றேன்.


வாய்மட்டும் அசைந்தது.



ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்து வர சர்ப்பந்தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே எனப் புலம்பினேன்.



எனக்கு நீர்த்தாகம் எடுத்தது. நா வரண்டு கண்கள் இருண்டன.
சாவோலை கொண்டு யாரும் எதிரே தோன்றவில்லை. அது என்
வீட்டிலேயே நிகழ்ந்தது.
அகதி வாழ்வில் விருந்துக்கு வர யாருமில்லை.
கோவேந்தர்கள் கடமை கேட்க வந்தார்கள் குருக்கள் வடிவில் போன
கிழமை.
அவர்கள் அவசரகால யுத்தநிதி என்
விருப்பை அறியாமலே ஐந்நூறு
மார்க் என எழுதி ரசீது தந்து பணம் அபகரித்தார்கள்.
இவை யாவும் காட்சியுருவாகின.
கண்களை இருள் முழுமையாக கவ்வியது.
நான் மூர்ச்சையானேன்.
நினைவு திரும்பியபோது ஒரு வைத்திய சாலைக்கட்டிலில் கிடப்பது
புரிந்தது.


கண்ணெதிரே என் மழலை ஓடியாடுவது புலப்பட்டது.
விழிகளைக் கசக்கி மீண்டும் பார்வையைக் குவித்தேன்.
கண்ணீர் மட்டும் நிஜமாகிது.
விழிகளை இறுக மூடினேன்.
மனைவியின் ஞாபகம் பின் தொடர்ந்தது.
அகத்தடியாள் மெய்நோக...
அவள் இறக்கமாட்டாள் தன் மழலையின் உடலைப் பார்க்கும்வரை.
வைத்தியசாலைக் கட்டிலைவிட்டு எழ முயன்றேன். முடியவில்லை.
உடல் பலவீனப்பட்டுப் போய்விட்டது.
மீண்டும் என் மழலையின் பேச்சொலி செவிகளிற் பட்டுத் தெறித்தது.
இப்பேது கண்களில் இருந்து நீர் வரவில்லை.
வரண்ட பார்வையை சாளரத்துக்கூடாக வெளியில் செலுத்தினேன்.
வானத்தில் முழுநிலவு வட்டமிட்;டது. அது என் மழலையின்
நிர்மலமான தோற்றத்தை உரித்து வைத்தாற்போல காட்டி நிற்க.
என் வாய்மட்டும் ஆவீன மழை பொழிய இல்லம் வீழ...? என
முணுமுணுக்க விழிகள் பனித்தன.



ப.வி.ஸ்ரீரங்கன்

இயற்கையெய்திய சிந்தனைப் பராவின் இறுதி அஞ்சலி...

இயற்கையெய்திய
சிந்தனைப் பராவின்
இறுதி அஞ்சலி...



மனம் பரதவிக்கத் தாங்காத அழுகையில் மண்டபம் அலற அகம் உடைந்து போனது.சிந்தனைப் பரா அவர்களின் மரண இறுதி அஞ்சலி நிகழ்வில் மண்டபம் நிறைந்த அவரது உறவு வட்டத்தோடே இறுதிப் பந்திகொண்டார் பரா அவர்கள்.நெஞ்சை உடைத்தெறியும் துக்கம்.மரணவீட்டில் அவர் துணைக்கு ஆறுதல் சொல்லியபோது மல்லிகா அம்மா விக்கியடி மெளனமானார்.


மரணம்,கொடியதுதாம்!எனினும்,தவிர்க்க முடியாதது.


மண்டபம் நிறைந்தவர்களின் மனங்களிலெல்லாம் மரணத்தின் வலி தெரிந்திருந்தது.


பரா அவர்கள் நீண்ட பெருவாழ்வு வாழ்ந்து ஆயுளை நிறைவு செய்துள்ளார்.
இது, நேருகின்ற தரணத்தை எதிர்கொள்வது அவசியமே.


திரண்ட மக்களின் திறந்த வாய்களில் மரணத்தின் வலியைவிடத் தாம் கொண்ட அரசியலை முன்னிலைப்படுத்தும் ஒரு எண்ணப் பாங்கு இவ்வஞ்சலி நிகழ்வில் விரிந்துமேவியது.ஒரு நிமிடம் பேசுபவர்கள் ஒன்பது நிமிடமென்ன அது தாண்டி, மணிநேரம் உரை சொல்லும் நிலையை அடைந்தனர்.சிலர் மேடைப் பேச்சை உருப்போட்டபடி முஷ்டியை மேல் நோக்கி உயர்த்தி நுனி நாவு ஆங்கிலத்தில் அரசியல் விரிவுரை வைத்தார்கள்.


ஆனால்,குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்த கவலை பரா மாஸ்ரரின் குடும்பத்துக்கு!


இதைப் புரிந்தவர் எவர்?


அகமொப்பி,வலியின் சுமைகாவி,இழப்பால் மனம் பொருமியபடி நாம் கொண்ட பஞ்சத்திலும் அவரது துயர நிகழ்வில் பங்குறுவதும்,உடைந்துபோன அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலான மெளன அஞ்சலிக்கும் உணர்வை அஞ்சல் செய்வதைவிட்டு,ஆர்ப்பரித்து அறைகூவலிடுவதற்கு, இந்நிகழ்வு கட்சியின் அரசியல் மேடையல்ல.என்றபோதும்,பரா அவர்களைச் சிறப்புச் செய்யும் உணர்வுகளின் மெளன அஞ்சலிகளையும் நாம் காணத் தக்கதாகவே இருந்தது.



தந்தையை இழந்த பிள்ளைகளும்,கணவனையிழந்த துணைவியுமாக வலிகளைச் சுமந்து மெளனித்திருந்தார்கள்.


நாம் கண்ட பூரிப்பான குடும்பம் ஒளியிழந்துபோய் இருண்டு கிடக்க இதயம் வலிக்க ஆரம்பித்தது.


பரா அவர்களின் இந்த மரண நிலை மனதுக்குள் பொதுமையானவொரு வலியை ஊன்றி விதைக்க, எனது மனது ஊரைக் காணப் புறப்பட்டது.நடுத்தெருவில் நாய் சுடுவதைப்போல் மனிதர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்!கொட்டிலில் பசியோடு மல்லுக்கட்டிக் குறைத் தூக்கம் செய்யும் அப்பாவிகளின் தலையில் பாரிய குண்டுகளை வானத்திலிருந்து உருட்டுகிறது சிங்கள அரசு.இங்கே, வாழவேண்டியவர்கள் இடை வழியில் தொலைந்து போகிறார்கள்!மரணங்கள் வலிக்கிறது.

இழப்புகள் நாளாந்தம் தொடர்கதையாகும் சூழலின் மனிதர்கள் நாம்.

அஞ்சலி செலுத்துபவர்களுக்கு தாம்சார்ந்த அரசியலை முன்னிலைப் படுத்துவது பெருநோக்கு.

பரா செயற்பாட்டிலிருந்தவர்.அவரோடு இணைந்தவர்களே கூடியிருக்கிறோம்.இருந்தும் பரா அவர்களின் வரலாறு விரிந்தது.

வலியைப்பேசுவதிலும் தாம்கொண்ட அரசியல் முன்னிலையெடுக்க நாம் கூடிய நோக்கம் சிதைகிறது.

இது, மரணவீடு.நாம் கூடியிருப்பது துயரில் பங்குற்று அஞ்சலிப்பதற்கு.


நாம்கொண்ட இயக்க-கட்சி வாழ்வானது மரணங்கள்மீது அரசியலைச் செய்து பழக்கமானது!

போராட்ட வாழ்வுக்குப் பின்பு மக்களின் சமூகவுணர்வுத் தளமானது மரணத்தின் வலியை மறந்த மனோபாவத்தை எமக்குள் வலிதாகவே விதைத்தெறிந்துவிட்டது.இந்த விதை மரமாகி வருகிறது.மரணங்கள்மீதும்,அந்த வலியின்மீதும் நாம் வீரகாவியம் படைக்கிறோம் அல்லது, சமய மனதுகொண்டு புனித காவியம் செய்கிறோம்.மரணத்தின் சமூகத் தன்மை இயல்பானது.இயற்கையானது.இதனால் விரிந்துவரும் வலி-இழப்பின்பால் தோன்றும் மிகையுணர்வின் தாக்குதலில் பாசம் கையறு நிலையெடுக்கிறது.இந்நிலையிலிருந்து தேறுவதற்கான தேற்றம் இன்றி,போற்றுதலும் புகழுதலும் வலியைக் கொச்சைப்படுத்துவதாகும்.

எங்கே,எது பேசுவதென்பது எல்லோருக்கும் புரிவதில்லை!


இன்றைய இலங்கை நிலவரத்தில்,கொடூரமான சிங்களப் பாசிசத்தாலும்,அந்நிய ஏவல் நாய்களாலும்,புலிகளாலும் பொதுமக்கள் வாழும் வலயத்தில் குண்டடிபட்டு மக்கள் பெருந்தொகையாக மரிக்கிறார்கள்.சிறார்கள் செல் தாக்கிச் சிதைகிறார்கள்.துரோகி சொல்லிக் கொல்வதும் எல்லைமீறி வகைதொகையின்றி நடந்தேறுகிறது.இங்கே மரணமென்பதும்,அதன் வலியும் பொதுமையாகிறது.குண்டுகளைக்கட்டி தற்கொலைக் குண்டுதாரிகள் கண்முன்னே வெடித்துச் சாகிறார்கள்.


குருதியாற்றில் மிதக்கும் மரணத்தின் வலி வலியது!அந்த வலியை உணருகின்ற மனமானது மனித கணங்களுக்குள் மெளனத்தால் ஒன்றிப்பது மகத்தானது.கொடிய இழப்பில் தேற்றுதலுக்குப் பதில் மேடை அரசியல் ஒப்பேறுகிறது.துயருறும் தரணங்களுக்குள் துன்பத்தை மேலும் விருத்தியாக்கும் இத்தகைய வெற்றுக்கூச்சல் இறுதி அஞ்சலி நிகழ்வை இன்னும் தாழ்த்திச் செல்கிறது.மரணவீட்டில் மடைதிறந்த வாய்வேஷம் அவசியமற்றது.இத்தகைய வாய் வேஷங்களை இயக்க-கட்சி அரசியலுக்குள் வழக்கமாகப் பார்த்த நமது மனங்கள், அத்தகைய போலிக் காட்சியின் பின்னே மெய்மை வலியை உருவகப்படுத்துகிறது.இங்கே, அது மலினப்பட்ட செயலை எம் முன் தள்ளி எம்மைக் கொச்சைப் படுத்துகிறது.மரணித்தவரின் குடும்பத்தின் வலியைக் கேலிக் குள்ளாக்கிறது.


தமிழ் பேசும் மக்களின் எந்த இழப்பிலும் தன்னை முன்னிலைப்படுத்தும் ரீ.பீ.சீ(T.B.C) வானொலியானது எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமாகப் பரா அவர்களின் இறுதி நிகழ்வையும் விட்டு வைக்கவில்லை.தன்னை முற்போக்கு வட்டத்துக்குள் திணித்துத் தன் இந்தியக் கைக்கூலித்தனத்தை மூடி மறைக்கும் தேவையில் அந்த வானொலி தலைகால் புரியாதபடி அலைகிறது.இந்திய மத்திய அரசின் விசமிகள் எங்கும் கால்பரப்ப முனைகிறார்கள்!-கூடவே, மரணவீட்டில் தன் பத்திரிகையை "இலண்டன் குரல்" அறிமுகப்படுத்தியது.எல்லாம் உள் நோக்கத்தின் தொடர்கதையாக...



பரா அவர்களின் இழப்பில் துயருற்ற அவரது குடும்பமும் இந்தவலியை அநுபவித்தாலும் மரணத்தின் தடம் நம்மிடம் பெரும் வலியைப் பொதுமைப்படுத்திச் செல்கிறது.


இதன் சொல்லமுடியாத உணர்வை-உள்வலியை எந்த மொழியாலும் வெளிச் சொல்ல முடிவதில்லை.இருந்தும் கூச்சல் தொடர்கதையாக...அதையும் ரீ.பீ.சீ.யும் இராமராஜனும் விட்டபாடில்லை!



நாம் மெளனித்த கணங்களுக்குள் பரா குடும்பத்தின் வலி உணர்வலைகளில் ஓயாதவொரு அதிர்வைச் செய்கிறது.இந்த அதிர்வு இலங்கையெங்கும் பலி கொடுக்கப்பட்ட குடும்பங்களோடு பொதுமையாகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
27.12.2007

Wednesday, December 26, 2007

தனிநாட்டுப் பிரகடனம்(2)

ஈழம், கொசோவோ,குர்தீஸ் போராட்டங்கள் (2)


"Der Feind meines Feindes ist mein Freund". "எனது எதிரியின் எதிரி எனக்கு நண்பன்"என்றபடி நமது அரசியலில் இப்போது காய்கள் நகருகின்றன.இலங்கையில் நிகழும் அரசியல் சித்துவிளையாட்டில் தமிழக-இலங்கைத் தமிழ் பாராளுமன்றச் சகதிகளின் குழிப்பறிப்போ சொல்லி மாளாதது.எனினும், நாம் மேலே செல்வோம்.
இன்றைய தரணத்தில் தமிழீழ அரசு உருவாகுவதற்கும்,அது தமிழ் பேசும் மக்களுக்குமட்டுமல்லாது அனைத்துச் சிறுபான்மை மக்களுக்குமானவொரு அரசாக அமையுங் காரணத்தில் ஒரு முற்போக்கான தேசிய விடுதலைப் போரை முன்வைத்திருக்க முடியும்.பேரினவாதச் சிங்கள அரசுக்கும் அதன் பாசிசக்கட்டமைப்புக்கும் அந்தக் கட்டமைப்பால் முன்தள்ளப்பட்ட சிங்களவெறி இராணுவத்துக்குமான மாற்றீடாக-முன்னுதாரணமாக ஈழம் மக்களை நேசிக்கும்,உழைக்கும் மக்களைக்கூறுபோடதாவொரு முற்போக்கான நாடாக உருவாதற்கான பெரும் சாத்தியப்பாடுகள் இலங்கையில் இருந்தது.இத்தகையவொரு சாத்தியப்பாடானது உலக அரங்கில் எமக்கான பாரிய அநுதாபத்தையும்,நம் மக்களின் நியாயத்தையும் நிலைப்படுத்தியிருக்கககூடிய சாத்தியப்பாடே அன்றிருந்து.இத்தகைவொரு அரசியல் சாதகமான சூழலில் எமது மக்களின் தேசம் உருவாக்கும் அபிலாசை வெறும் கனவாக இருந்திருக்க முடியாது.ஏனெனில்,நாம் சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறைக்குள் தினமும் நசிபட்டுவரும்போது நம்மிடம் பிரிந்து போகும் நிலையைத் தவிர வேறொரு முடிவு இருந்திருக்க முடியாது.

இத்தகைய சூழலை மிக இலகுவாகக் கணக்குப்போட்ட இந்தியா அன்று தனது முற்போக்கு முகமூடியோடு நம்மை அணைத்தபடி நமது முதுகில் குற்றுவதற்காக நமக்குள்ளே பற்பல ஆயுதக்குழுக்களை உருவாக்கிப் புலிகளை வளர்த்து எமது அரசியல் எதிர்காலத்தையே நாசம் செய்து,உலக அரங்கில் நம்மையும்,நமது ஜீவாதாரவுரிமையான சுயநிர்ணய உரிமையை வெறும் கேலிக்கிடமாக மாற்றியமைத்து தனது நோக்கில் வெற்றியீட்டியது.

இன்று,நமது மக்கள் படும் மிகக்கொடுமையான அடக்குமுறை உலகுக்குத் தெரிவதற்குப் பதிலாக புலிகள் செய்யும் பயங்கரவாதத் தாக்குதல்களே பூதாகரமாகத் தெரிகிறது.உலகத்தின் பார்வையில் நமது போராட்டம் தேவையற்ற ஒன்றாகவும்,ஒரு பயங்கரவாதக் குழுவால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதப் போராட்டமாக மாறியதற்கு யார் காரணம்?

பதில் மிக இலகுவானது.ஆனால், அதன் உண்மையை ஏற்பது கடினமானது.

தமிழ் ஓட்டுக் கட்சி அரசியலிலிருந்து முன் தள்ளப்பட்ட அரசியலும் அதன் வாயிலாகத் திட்டமிட்டு இந்தியாவால்-உலக ஏகாதிபத்திய அமெரிக்காவால் கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதக் குழுக்களே இத்தகைய நிலைக்குக் காரணமாகும்.இன்றைய புலிகளின் பரிதாபகரமான நிலை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.தம் மக்களையே வேட்டையாடிக்கொண்டு,அந்த மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகச் சொன்னவொரு பாசிச இயகத்தின் அழிவு இன்று நெருங்கி வருகிறது.அது தன் இருப்புக்காகத் தனது எஜமானர்களோடு நடாத்தும் பேரம் உலகப் பிரசித்தி பெற்றது.அது எங்கெங்கே பேரங்களைச் செய்ததென்று கூறுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம்.மாறாகக் கொசோவோ,குர்தீஸ் இன மக்களின் போராட்டத்தோடு நமது மக்களின் நியாயமான உணர்வு-ஒரு தேசம் உருவாக்கும் கனவு ஏன் வீணானது என்பதை ஒத்துப் பார்ப்பதே இதன் நோக்காக இருக்கிறது.

இலங்கையின் இனவாதச் சிங்கள அரசு தமிழ் பேசும் மக்களுக்கிழைத்த அரசியற் துரோகங்கள் பெரும் சமூகக் குற்றமானது.அது யுத்தகாலத்தில் செய்த மனிதவிரோதக் கொலைகளானது பெரும் இனவழிப்பானது.அது, கொசோவோ மக்களுக்கு,குர்தீஸ் மக்களுக்கு நேர்ந்ததைவிடப் பன்மடங்கு பெரிதானதாகும்.என்றபோதும், நமது அரசியல் தோல்வியில் முடிந்து,இந்தியக் கயமைவாத அரசிடம் தஞ்சம் கோரும் நிலைக்கு எமது போராட்டச் சக்தியைப் பலவீனமாக்கியது வரலாறு.நாம் எதற்காக நமது மக்களின் சுயவெழிச்சியை முடக்கினோம்?நமது மக்களின் தயவில் நிற்காது இந்தியாவை-ஏகாதிபத்திய மேற்குலகை எங்ஙனம் நம்பினோம்?

இங்கேதாம் வர்க்க நலனும்,அதன் இருப்பும் நம் அரசியல் அபிலாசையைச் சிதைத்து வந்திருப்பதைக் கட்டுரைகளுடாகச் சொன்னோம்.எமது மக்கள் இயல்பாக ஒரு தேசத்தை நிர்மாணிக்கும் நிலைக்குள் உள்வாங்கப்பட முன்னமே அப்படியொன்று நிகழும் தரணத்தைப் புரிந்த அந்நியச் சக்திகள் மிக அவசரமாக முன் தள்ளிய "தமிழீழக்"கோரிக்கையானது நம்மைக் கெலிக்க வைத்து, நமது கால்களில் ஊன்றி நிற்கும் பக்குவத்தை உடைத்து நம்மைக் கோமாளிகளாக்கிப் பாசிசச் செயற்பாட்டை நோக்கித் தள்ளிப் பல பத்தாயிரம் நமது மக்களையே வேட்டையாடியது.இது ஒருகட்டத்தில் இந்திய உளவுப்படையானது புலிகளை வைத்து அப்பாவிச் சிங்கள மக்களை அநுராதபுரத்தில் வேட்டையாடி எமது போராட்டத்தை மிகவும் சூழ்ச்சியோடு முறியடிக்கும் காயை நகர்த்தியபோது, இதற்கும் புலிகள் உடந்தையாக இருந்தார்கள்.இதையும் அவர்களின்(புலிகளின்)அரசியல் ஆலோசகர் அடியெடுத்துக் கொடுத்தபோது,அந்தத் துரோகி யார்?அந்நிய நலனை முன் நிறுத்தியவொரு கைக்கூலியென நாம் பதினைந்தாண்டுகளுக்கு முன்னுரைத்தோம்.இன்று,எமது போராட்டத்தின் செல்நெறியூடாக மிகவொடுங்கிய தாழ்நிலைப் போராட்டமே செய்ய முடியாதவொரு நிலையில் எங்கள் மக்களின் உரிமைகள்,வாழ்வாதாரங்கள் அனைத்தும் நிர்மூலமாகிப் போயுள்ளது.நாம் தலை தூக்கமுடியாதவொரு சூழலுக்குள் மிகத் தந்திரமாகத் தள்ளப்பட்டுள்ளோம்.இதிலிருந்து எமது மீட்சி எந்த வகையில் நிகழ முடியும்?

இலங்கை அரசானது எமது மக்கள்மீது மிகத் திட்டமிட்ட வகையில் இனவழிப்பைச் செய்தது.இது யுக்கோஸ்லோவிய இன அழிப்புப்போன்றே நமக்குள் நடந்தேறியது.ஆபத்துக்குள் வாழும் மக்களுக்கான அமைப்பு என்றவொரு அமைப்பு யுக்கோஸ்லோவியாவின் கொசோவோ மக்களுக்கெதிரான இனவழிப்புப்பற்றி எழுதுகிறது"Die Angriffe folgen einer Systematik, die an jene aus dem Bosnien-Krieg erinnert. Sie beginnen häufig mit Überraschungsangriffen im Morgengrauen, die teils mit schweren Waffen wie Boden-Boden-Raketen und raketengetriebenen Granaten geführt werden. Dann werden Scharfschützen postiert, die der Zivilbevölkerung die Bewegungsfreiheit nehmen. Viele Zivilisten verbergen sich deshalb tagsüber im Wald und kehren nachts in ihre Häuser zurück, um sich mit dem Nötigsten zu versorgen. Schließlich ziehen schwer bewaffnete Truppen auf, die tagsüber alle Straßenverbindungen blockieren. Unter ihrem Schutz kommen Spezialeinheiten in dunklen Uniformen mit Macheten und "Skorpion"-Gewehren tschechischer Produktion in die jeweilige Ortschaft. Diese Truppen sollen Massaker begangen haben. Nach Tagen oder Wochen des Terrors werden die Bombardierungen wieder gesteigert und auch in der Nacht fortgesetzt, bis die Bevölkerung den Ort verläßt. Es folgen Plünderungen im großen Stil. Die Häuser werden niedergebrannt. Das Vieh bleibt unversorgt oder wird getötet.
Nach einer Statistik der GfbV wurden zwischen Anfang März und Ende Juli 1998 mehr als 250 albanische Dörfer von den serbischen Truppen angegriffen, mit schwerer Artillerie bombardiert und ganz oder teilweise zerstört. Laut der US-amerikanischen Menschenrechtsorganisation Physicians for Human Rights wurden Frauen festgenommen und vergewaltigt. Einige der Frauen seien anschließend "verschwunden". Nach Schätzungen der GfbV kamen bis Ende Juli mindestens 1.000 Zivilisten ums Leben. "
பொஸ்னிய யுத்தம்பற்றி நினைக்கும்போது திட்டமிட்ட வகையில் தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதே ஞாபகத்தில் வருகிறது. அடிக்கடி ஆச்சரியப்படக்கூடியதாக்குதல் வைக்கறைக்குள் ஆரம்பிக்கும்.ஒருபகுதி ஆயுதங்கள் தரைக்குத் தரை தாவும் ரொக்கட்டுக்கள்,ரொக்கட்டுக்களால் இயக்கமுறும் கிரனைட்டுக்கள் உள்வாங்கப்பட்டும்,அத்தோடு மிகவும் பாதுகாப்பு வலயப்படுத்தி குடிமக்களின் சுதந்திரமான நடமாட்டம்வேள்வியாகப்படும்.இதிலிருந்து தப்புவதற்காகவே மக்கள் தங்களுக்கு அவசியமான உணவாதாரத்தை எடுத்துகொண்டு பகலில் காடுகளுக்குள் ஒழிந்திருந்துவிட்டு இரவில் வீடு மீள்வார்கள்.பயங்கர ஆயுதம் தரித்து துருப்புகள் பகற்பொழுதினூடாக வீதிகளை மூடித் தடை செய்தவாறு தமது பாதுகாப்பு அரண்களை நிலையெடுத்தபடி சிறப்புப்படையணிகள் மங்கலான இராணுவயுடையுடனும், கையில் மெக்கனற்-ஸ்கொறோப்பியின் வகை ஆயுதங்களின் நுட்பத்தோடு அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தியபடி இருப்பார்கள்.இந்தத் துரப்புகளே நரவேட்டையை நடாத்தியவர்கள்.நாட்கணக்காகவும் சிலவேளை கிழமைக்கணக்காவும் வான் தாக்குதல்கள் நடக்கும்,பின்பு மீளவும் இரவு நேரத்தில் தாக்குதல் முன்னெடுக்கப்படும். அந்தப் பகுதி மக்கள் இடம் பெயரும் வரைத் தாக்கல் நிகழும்.தீயிட்டுக் கொளுத்தும் விளைவுகள் ஆரம்பிக்கும்.வீடுகள் தீக்கரையாக்கப்படும்,கால் நடைகள் பராமரிபற்று நிற்கும் அல்லது கொல்லப்பட்டிருக்கும்.ஆபத்துக்குள் வாழும் மக்களுக்கான அமைப்பின் கணிப்பீட்டின்படி 1998 ஆம் ஆண்டு மாச் ஆரம்பம் முதல் யூலை இறுதிவரை அல்பானியர்களின் 250 கிராமங்கள் செர்பிய இராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. கடினமான ஆட்டிலெறிகளால் முற்று முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அக் கிராமங்கள் தாக்கியழிக்கப்பட்டன.அமெரிக்காவின் மனிதவுரிமை அமைப்பான Physicians for Human Rights சொல்வதன்படிப் பெண்கள் கைது செய்பட்டுப் பாலியற் பலாத்தகாரப்படுத்தப்பட்டுள்ளார்கள்.இதுள் சிலர் இறுதியிற் காணாதே போயினர்.ஆபத்துக்குள் வாழும் மக்களுக்கான அமைப்பினது கணிப்பீட்டின்படி யூலை இறுதிக்குள் 1000 பொதுமக்கள் பலி கொள்ளப்பட்டார்கள்."- http://www.bndlg.de/~wplarre/gfbv-03.htm


இவ் வகையான எத்தனை தாக்குதல்களை இலங்கைப் பாசிச அரசு நம்மீது நடாத்தியது.இதைவிடக் கொடிய பெரும் இடப்பெயர்வையெல்லாம் ஈழமக்கள் கண்டார்கள்.பெருந்தொகையான மக்கள் சில தினங்களுக்குள் கொல்லப்பட்டார்கள்.பெண்களின் பெண்ணுறுப்பில் குண்டு புதைத்துக் கொல்லப்பட்டார்கள்.எனினும்,உலகம் திரும்பிப் பார்க்காத நிலைமையில் நமது"தடுப்பு யுத்தம்"நடந்தேறியது.இன்றுவரை சிங்கள மேலாதிக்க அரசின் கொடிய இராணுவமானது தமிழ்பேசும் மக்களைப் பயங்கரவாதத்துக்கெதிரான புலிவேட்டையென்ற போர்வையில் பல்லாயிரக்கணக்காக வருத்தி அவர்களின் வாழ்விடங்களை அபகரித்தும்,கொன்றும் மக்களை அடிமைப்படுத்தி வருகிறது.என்றபோதும்,புலிகளின் தவறான யுத்தச் செல்நெறியால் நம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.இந்திய வல்லாதிக்கம் நம் மக்களை இலங்கை நரவேட்டையாட ஒப்புதல் அளித்தபடி நம்மைப் படுகுழியில் தள்ளுவதற்காகப் புலிகளைப் பயன்படுத்துகிறது.இந்த இலட்சணத்தில் தமிழ்ப் பாரளுமன்றப் பண்டியள் இந்தியாவால்தாம் தீர்வு சாத்தியமாம்-மயிர்!

இதுவொரு உதாரணம்தாம்.

ஆனால்,கொசொவோவின்மீதான இவ்வளவு கரிசனை-ஓராயிரம் குறிப்புகள்,எழுத்து வடிவங்களெனக் குவிந்துகிடக்கும் சூழலில் அந்தத் தேசத்தின்மீதான ஆர்வம் என்ன?பொருளாதார ஆர்வங்கள் அங்கே நிலைபெறவில்லையா?உண்டு.இதுவொரு பகுதி நலனே.கொசொவோவானது கனிப் பொருளுடையது.அதன் மூலப்பொருள்கள்மீதான பெரும் தொழில் நிறுவனங்களின் மிகையார்வானமானதும் இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்துக்கான அங்கீகரிப்புக்கு உடந்தையாக இருக்கிறது.கொசொவோ யுக்கோஸ்லோவியாவின் கனிவளம் நிரம்பிய பகுதியாகும்.எனவே, இதை அன்றைய ஜனதிபதியான மிலோசேவிச்(Milosevic) இழக்க விரும்பவில்லை(Im Kosovo befinden sich große Vorkommen an Nickel, Kupfer, Blei und enorme Vorkommen an Chromerzen. (Mit Albanien zusammen verfügt das Gebiet über die zweitgrößten Chromerzvorkommen der Welt). Es ist klar, daß dieser Gegensatz, riesiger Reichtum an Bodenschätzen auf der einen Seite und soziale, sowie nationale Unterdrückung auf der anderen ).இன்றோ மேற்குலகப் பெரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கண்களில் அதன் உலோகம்,செம்பு,ஈயம்,ஈயக் குரோமியம் போன்ற முலவளத்தைத் திருடுவதற்காகவே இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்துக்கான ஒத்துழைப்பு நகருகிறது.அல்பானியர்கள் வாழும் கொசோவோவில் உலகத்திலேயே இரண்டவது பெரும் ஈயக் குரோமிய இருப்பு இருக்கிறது.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2007.

Sunday, December 23, 2007

தனிநாட்டுப் பிரகடனம்

ஈழம், கொசோவோ,குர்தீஸ் போராட்டங்கள்


திரு.பிரபாகரனின் கடந்த மாவீரர்தினவுரையில் கொசோவோ குறித்தவொரு மேற்கோள் காட்டப்படுகிறது.கொசோவோ யுத்தஞ் செய்வதற்கானவொரு சூழலை அன்றைய ஒன்றிணைந்த யுக்கோஸ்லோவிய அரசியல் மற்றும் பொருளியல் ஆர்வங்கள்மட்டும் ஏற்படுத்தியிருக்கவில்லையென்பதும் அது வரலாற்று ரீதியாகத் தாக்கி அழிக்கப்பட்ட வரலாறானது துருக்கிய ஒஸ்மானியச் சாம்ராஜ்ஜியத்திலிருந்து தொடர்வதும் நாம் அறிந்த வரலாறுதாம்.முதலாம் இரண்டாம் மகாயுத்தங்களும் அதற்குப் பின்பான சோசலிசத்துக்கெதிரான பனிப்போர்கள்-சூழ்ச்சிகளும் கிழக்கைரோப்பாவின் பொருளாதாரச் சமூக வளர்ச்சிகளைத் திட்டுமிட்டுத் தாக்கி அழித்த வரலாறும் இந்த மேற்குலக மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குமான தொடர்புகள் அதிகமாகவே இருக்கிறது.

இந்த வகையானவொரு அரசியல்,இனவொதுக்கல்-அழிப்புகளுக்கும் நிகராகத் தமிழ் பேசும் மக்களும் (ஒத்ததன்மையோடே) இலங்கையில் முகங்கொடுக்கிறார்கள்.எனினும்,எமது போராட்டத்தைப் பயங்கரவாதமெனச் சொல்வதற்கான அரசியற்காரணங்களுக்கும் இன்றைய கொசோவோ அரசியல் தீர்வுக்கான அரசியில் பரிந்துரைப்புகளுக்குமான மேற்குலக ஆர்வங்கள் வெவ்வேறான திசைவழிகளில் நகரும் தரணத்தில்,நம்மைப் பயங்கரவாத முத்திரைக்குள் அடக்க முனையும் அரசியலைப் புலிகளுடாகச் செய்வித்த மேற்குலகமானது, இன்று கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் அங்கீகரிக்க முனைகிறது.வரும் பெப்பரவரிமாதம் 2008 இல் கொசோவின் சுதந்திரப் பிரகடனம் அறைகூவலிடப்படுகிறது.இங்கே, அவற்றை ஏற்பதற்கான-அங்கீகரித்து ஆதரிப்பதற்கான முறைமைகளில் உலக ஆர்வங்கள் அரசியல் முன்னெடுப்பைச் செய்கின்றன.

கொசோவோ தனிநாடாவதற்கான பரிந்துரைப்புகள் ஐ.நா.வரை பேசப்படுகிறது.ஆர்வமுள்ள நாடுகளாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே அதை முன்னின்று செயற்படுத்தும் வகைகளிலான அழுத்தத்தைக் கொடுத்தபடி கொசோவோவின் பிரச்சனைகளைத் தீர்பதற்காக முனைந்து வருவதும்,இந்த அதீத விருப்புக்குள் ஐரோப்பாவின் கட்டம் கட்டமான ஆர்வங்கள் மிக நேர்த்தியாக இருக்கின்றன.வளர்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய உள்ளிணைவுகளும் அதுசார்ந்த பொருளாதார மற்றும் கட்டுமானக்காரணங்களும் புதிய ஐரோப்பாவின் தலைமையைச் சில வளர்ந்த ஐரோப்பாவுக்கு(ஜேர்மனி,பிரான்ஸ்) வழங்கிய கையோடு,இத்தகைய நாடுகள் மிக ஆழமாகச் செரித்துவரும் பொருளியல் இலாபங்களை மேலும் நிலைப்படுத்தி வருவதற்கு, கொசோவோவின் இனப்பிரச்சனை முட்டுக்கட்டை இடுகிறது.

கொசோவோ முஸ்லீம்மக்கள் வளர்ந்துவரும் இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்குள் உள்வாங்கப்படும் ஒவ்வொரு நிலைமைகளும் அகன்ற ஐரோப்பாவுக்கு எதிரானதாகவே இருக்குமென்பதை ஐரோப்பியப் பொருளியல் வல்லுநகர்கள் குறித்தே வருகிறார்கள்.இது கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்துக்கூடாக அந்த மக்களை ஏமாற்றிவிடத்துடிக்கும்(தனிநாடுண்டு விலங்குடன்) அரசியலைக் கொண்டிருப்பினும் அகன்ற ஐரோப்பிய இணைவுகளுக்கும் மற்றும் ஐரோப்பிய செங்கன் ஒப்பந்தக் காரணங்களுக்கும்-நலன்களுக்கும் மிகக் கெடுதியாக இருக்குமென்பதும் மிக முக்கிய காரணமாகிறது.

ஐரோப்பியப் பொருளாதார வலையமானது மிக இலகுவாகத் தங்கு தடங்கலின்றி முழுமொத்த ஐரோப்பாவையும் கட்டிப்போடுவதற்கு எல்லைகள் தகர்வது மிக அவசியமாக இருக்கிறது.இத்தகைய காரணத்தால் செங்கன் ஒப்பந்தம் அமூலக்கு வந்து தற்போது எல்லைகள் தகர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கூடாக இஸ்லாமியக் குண்டுகள் வருவதற்கான தளமாகக் கொசோவோ இருப்பதற்கான சில அசமாத்தங்களை முன்கூட்டியறிந்த ஜேர்மனிய மற்றும் ஐரோப்பியப் புலனாய்வுத்துறை மிகவும் நேர்த்தியாகச் சொல்லும் அறிவுரை:"அகன்ற ஐரோப்பாவில் எதிரிகளற்ற அரசியல்நகர்வு".இந்தப் பொறிக்குள் நிலவும் பாரிய ஒடுக்குமுறையானது அரசியல் மற்றும் சட்டங்களால்மட்டும் நிலை நாட்டத்தக்க பாதுகாப்புக் கிடையாது.எனவே, தேசங்களையும் அந்தந்த மக்களையும் உள்ளிருந்து கண்காணிப்பதற்கான குறைந்தபட்ச ஜனநாயக அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அவசியமாகிறது. கொசோவோ தினிநாடாவதும் அதன் பிறப்பில் அந்த நாட்டில் புதிதாகப் பிறந்த குழந்தையை ஐரோப்பியத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி"தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் குட்டி"வருவதற்கும் முழுப்பாத்திரையும் ஐரோப்பியத் துருப்புகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான ஒரு அரசியல் சூதாட்டம் ஆரம்பமாகிறது.

Am 19. Dezember 2007 befasst sich zum wiederholten Mal der UN-Sicherheitsrat mit dem zukünftigen Status der serbischen Provinz Kosovo. Grundlage aller Überlegungen müssen das geltende Völkerrecht (Art. 2 der UN-Charta) und die Resolution 1244 (1999) sein: Danach ist und bleibt das Kosovo so lange Bestandteil des souveränen Staates Serbien, solange dieser selbst einer Abtrennung nicht zugestimmt hat. Die Kosovo-Albaner, die USA und eine Reihe von EU-Staaten wollen die Unabhängigkeit des Kosovo und nehmen dafür die Risiken, die damit verbunden sind, in Kauf.Im Folgenden dokumentieren wir zwei Artikel, die vor der Sitzung des UN-Sicherheitsrats erschienen sind. Zuvor aber die Agenturmeldung vom Scheitern der Verhandlungen im UN-Sicherheitsrat.


மக்கள் உரிமை-இனங்களின் உரிமை ஆர்டிக்கல் 2 ஐ.நா-சபைச் சாசனம் கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தையும் அந்த நாடு செர்பியாவிலிருந்து பிரிந்த சுதந்திரமான தேசமாக ஏற்றுக்கொள்ளுமானால் இலங்கையிலும் மூன்று தசாப்பதாக நடக்கும் போரில் இலட்சம் மக்கள் அழிந்து,தமிழ் பேசும் மக்களின் தேசம் சுடுகாடாகியுள்ள இன்றைய நிலையில் தமிழ்பேசும் மக்களால் ஈழம் பிரகடனப்படுத்தப்பட்டால்,அதாவது கொசோவோ பிரகடனப்படுத்திய ஒருசில மணி நேரத்தில் ஈழம் தன்னைப் பிரகடனப்படுத்தினால் இதை இந்த ஐ.நா.வவின் சாசனமும்,ஐரோப்பாவும் ஏற்கும் நிலை உள்ளதா?

இங்கேதாம் வருகிறது எது பயங்கரவாதமென்று.

இதுவொரு தரணம்.

இங்கே, நமது அரசியல் வெற்றிபெறும் ஒரு தரணம் வருகிறது.

இதைச் சாதகமாக நிலைப்படுத்தும் இராஜ தந்திரம் தமிழர்கள் தரப்பிடம் இருக்கிறதா?

கிறிஸ்த்துவுக்கு முன் 1000 ஆண்டளவில் கொசோவோவின் மக்கள் குடியேறிதற்கான தரவுகள் கிடைக்கின்றன.எனினும், அவர்களை ஐரோப்பியச் சில வரலாற்றாளர்கள் தனித்துவமான இனமில்லையென்றும் வாதாடுகிறார்கள்;(1000 v. Chr.: Verschiedene Stämme der Illyrer bewohnen die westliche Hälfte der Balkanhalbinsel vom Norden des heutigen Griechenlands bis nach Pannonien. Die albanische Forschung sieht die Albaner als Nachfahren der alten Illyrer. Westliche Forscher gehen davon aus, dass die Albaner aus einem altbalkanischen Volk hervorgingen, welches die Romanisierung im unzugänglichen Berggebiet Nordalbaniens überdauerte. )இரண்டு மில்லியன்கள் மக்கள் தொகையுடைய கொசோவோவின் மக்கள்தொகையில் 50 வீதமானவர்கள் எந்த வேலைவெட்டியுமற்ற வெறும் ஊர் சுற்றிகளாகவும் ,கிரிமினல்களாகவுமே இருப்பதாகக் குறிப்புகள் உண்டு.அதுவும் அவர்களின் சனத் தொகையில் எழுபது வீதமானவர்கள் 15-30 வயதுக்கு உட்டபட்ட குடிகள்.கொசோவோவர்கள் தம்மைப் பிரிந்து செல்லக்கூடியவொரு இனமாகப் பிரகடனப்படுத்து ஒத்திசைவாக இருக்கும் ஐரோப்பா மற்றும் அமெரிகா நமது மக்கள் இலங்கையில் மூன்று மில்லியன் இருந்தும் கொசோவோவைவிடப் பன்மடங்கு பொருளாதாரப்பலத்தைக் கொண்டவொரு இனமான ஈழத்தமிழரையும் அவர்களின் போராட்டத்தையும் எங்ஙனம் பயங்கர வாதப் போராட்டமென்கிறது?


இங்கேதாம் நமது புலிகளின் உலகத் தொடர்பு,பின்புலம் அவர்களின் தோற்றம் தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் புலிகளின் பாத்திரம் குறித்த அரசியல் ஆய்வு வருகிறது.அங்கே, புலிகள் தமிழ் இனவிடுதலைக்கு எதிரானவொரு பாத்திரத்தைக் கொண்டிருப்பதை நாம் பல்வேறு கட்டுரைகளுடாகப் பேசியுள்ளோம்.எனவே, இதை நீட்டிமுடக்காது மேலே தொடர்வோம்.

இன்றைய ஐரோப்பாவானது கொசோவோவை வேட்டையாடி போர்கள் எத்தனையோ செய்தது.

இது, உலகில் நிகழும் தேசிய விடுதலைப் போராட்டங்களைத் தடுத்தபடி இப்போது கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை ஊக்குவித்து அங்கீகரிக்கக் காத்திருக்கும் தரணத்தில் ஐரோப்பாவின் முகப்பில்-வாசலில் இனவொடுக்குதலுக்கு முகங்கொடுக்கும் பெருந்தொகையான மக்களினம் குர்தீஸ் மக்களாகவே இருக்கிறார்கள்.குர்திஸ் இனமானது ஐரோப்பாவின் காற்பந்தாக இருக்கும் இன்றைய நிலையில், அவர்களின் சனத்தொகையானது 26 மில்லியன்களாகும்.இவர்கள் துருக்கி,ஈராக்,சிரியா என்று பற்பல எல்லைகளில் கிடந்து தமது தேசத்துக்காப் போராடும்போது, பதின்நான்கு மில்லியன்கள் குர்தீஸ் மக்களைத் துருக்கியில் ஓடுக்கும் துருக்கி அரசோ நாடுவிட்டு நாடு தாண்டி ஈராக்கில் குர்த்தீஸ் வலயத்தில் அமெரிக்க ஒப்புதலோடு வான் தாக்குதல் செய்து வருகிறது.இங்கே, இந்த ஐரோப்பிய மனிதாபிமானம் கிழிந்த கதையாகவே இருக்கிறது.

இக்கட்டுரை தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
23.12.2007


Wednesday, December 19, 2007

கிட்லர்!

சின்னக் கனவின்
செல்லக்கை கொடுப்பு
.


தின்பது அவிப்பது,அவிப்பது தின்பது...என்னவொரு வாழ்க்கையடா!


"தம்பி படிப்பை மட்டும் பாத்துக்கொண்டு பேசாமப் போங்கோ உங்கட பாட்டுக்கு,இதை விட்டுட்டு காதல் கத்தரிக்காய் என்றால்...வீட்டுப்பக்கம் தலை வைக்கமுடியாது சரியோ!."என்றோ ஓர் நாள் அமாவாசைத் தினத்தன்று என்ர அத்தான் முகடு பிடுங்க வார்த்தைகளோடு விளையாடினான்.அவன் ரொம்பவும் கெட்டியான தமிழ் ஆசான்.அதையவன் அடிக்கடி உறுதி செய்வதும் வழக்கமாக இருந்தது.


"மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயுமோ?"


பாயாது.அப்படிப் பாய்ந்தால் அது மந்தியாக இருப்பதற்கில்லை.


இப்படித்தான் நானும் பலவற்றைப் புரிந்து கொள்வது.


"தான் தின்னி பிள்ளை வளவாள்,தவிடு தின்னி கோழி வளவாள்" என்று வளர்ப்பை நாமளே பெண்ணின்ர பொறுப்பில கொடுத்துவிட்ட பின்பு, நம்மட வம்சங்கள் வலு கறாராகக் காதலிக்கத் தெரிந்தளவுக்குத் தலைக்குள்ள எதையாவது சம்பாதிக்கத் தெரியுறதாயில்லை.


"அட போடா புண்ணாக்கா"எண்ட மாதிரி நான் அத்தானை அடிக்கடி சபிப்பது இந்த இலவச ஆத்திர மூட்டல்களால்தான்.


பத்து வயதில் அவன்ர மடியிலிருந்து கொண்டு அடிக்கடி நான் செவி வழி கேட்டு மகிழ்ந்த மகா பாரதத்தில் எனக்குப் பிடித்த பாத்திரம் கர்ணன்தான்.என்னவோ தெரியாது அவன் கொல்லப்பட்ட விதம் எனக்குள் பாரிய பாதிப்பைச் செய்தது.


இப்படி அவன்ர சாவு- எனக்கு வாழ்க்கையில் அர்த்தமில்லையென்றபோது- "அவனே நட்புக்குச் செத்தபோது நான் ஏன் என்ர கவிதைக்குச் சாகக்கூடாது" என்ற பச்சோதாபத்தில்,அன்றைக்குத் தெரிந்த உறவுகளிடமெல்லாம் போய் "அம்மா இருபது ரூபாய் கடன் வேண்டியரட்டாம்" என்றபோது,எவரும் தராதபோது, நான் இப்போது ஒருத்திக்குத் துணைவனாக இருக்கும் பாக்கியத்தோடு பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் இருக்கிறன்.அன்றைக்கு இருபது ரூபாவால் உயிர் மாய்க்க முடிந்திருந்தது.இதுதான் காலம் என்பதா?கடவுளே!அம்மாவை நம்பி இருபதைத் தந்திருக்கும் ஒரு உறவு என்னைக் கொன்றிருக்கும்!எந்தவுறவும் காசைக் கறக்காத கசவாரங்களாக இருந்ததும் நல்லதுக்குத்தான்.

வில்லுக்கு விஜயன்,மல்லுக்கு வீமன்.சொல்லுக்குச் சகாதேவன்,பொறுமைக்குத் தர்மன்,வாளுக்கு நகுலன்,நட்புக்கு கர்ணன் திரியோதனன்... இப்படி அடுக்கியபடி அத்தான் அவிட்டுவிட்ட மகாபாரதம் சின்ன வயதில் சின்னக் கனவுகளுக்குள் ஏதோவொன்றைத் திணித்து, மனத்திரையில் வலியைத் தந்தது.எதற்காக இந்தக் கர்ணனைக் குந்தி தள்ளி வைத்தாள்.கர்ணனைப் பழிவாங்கும் கண்ணனுக்கு நேர்வழி தோணாது போனதைக் கர்ணனின் மரிப்புச் சொல்கிறதே!


"நண்பா எடுக்கவாடா கோர்க்கவாடா?"


நட்புத்தான்.எம்மாத்திரமான நட்பு!


எனக்கும் என்ர அத்தானுக்கும் இத்தகைய நட்பு நாட்பட நாட்பட உண்டானது.அத்தான் பீஷ்மருக்கு நிகரான பண்டிதன் என்பதை எனது உயர்கல்விக் கேள்விகளில் நான் புரிந்தது.


சின்ன வயதுக்கு அத்தான் கிட்லராகவே இருந்தவன்.அவன்ர கண்டிப்பு அத்துமீறின அதிகாரத்தைப் பிரகடனஞ் செய்வது.எனக்குத் தெரிந்த சின்ன வயது அத்தான் பாரதத்தைச் சொல்லுவதில் இனித்தான்.படிப்புக்கு அடித்தான்.பாழாப் போனவனுக்குப் பாம்பு கடிக்காதோவெண்டு நான் நினைத்த பதின்ம வயது, பின்னாளில் அவனைப் போற்றுவதா அல்லது ஆசான் என்று அடங்குவதா என்று அடிக்கடி அச்சப்பட்டது.


பத்தைக்குள் நின்று வீடி குடித்த சின்னப் பையனுக்கு,"வாடா மைச்சான்,வந்து இந்தக்காசுக்கு பில்டர் சிகரட்டு வேண்டிக் குடியடா"எண்டவன் பேச்சைக் கேட்டு,நானும் அந்தச் சில்லறைக்கு நாலு பிறிஸ்ட்டல் சிகரட்டை வேண்டிக் கொண்டு வந்து,சொண்டில் வைத்துச் சுதியாய் புகைத்தபோது,"எப்பிடிச் சிகரட்டு,ருசியாய் இருக்கோ?"எண்டவனிடம்,"ஓஓஓஓஓஓஓஓஓ....அச்சா."என்ற மறு நிமிடம் உடம்பின் அத்தனை பாகத்திலும் பதிந்த புல்லாந்திக் கம்பு,புரட்டிப்போட்ட கதைகள்தான் எத்தனை!


இவனெல்லாம் ஆரூ?அம்மா எதுக்காக இவனிடம் வீட்டுப் பொறுப்பை விட்டுட்டாள்,இவன் ஆரூ எனக்கு அடிக்க?மனமெல்லாம் இப்படிப் புண்ணாக-ரணமாக மாறிக் கொண்டபோதும்,அத்தானின் பாரதம் இனித்தது.அவனது கம்பீரமான தமிழ் என்னைத் தாலாட்டியது.மகாபாரதம் சொல்லும்போது அவன் அடிக்கடி கேட்கும் கேள்வி"அதன் சாரமென்ன?"என்பதுதான்.அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த சாரம் தமிழ்நாட்டுச் சங்கு மார்க் சாரம்தான்.இவன் இப்படிக் கேட்கிறபோது,நான் கதையை மாத்துவதற்காகவே"ஏனங்க அர்ச்சுனனுக்குக் கர்ணனைப்போல நாகாஷ்த்திரம் விடத் தெரியாது"என்பதே!தொடர்ந்து இப்படிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் நானும் அவன்ர கேள்விகளைக் கடந்திருக்கிறேன்.


பத்து வயதில்எனக்குப் பாட்டியாக வாய்த்தவன்.பொல்லாத அடிகளுக்குச் சொந்தக்காரன்.புளித்துப்போகாதபடி புகட்டுவதில் ஆசானாய் இருந்திருக்கிறான்.


இப்போதெல்லாம் கண் பார்வை அறவே இல்லாமல் அடியெடுத்து வைப்பதற்கு அக்காளின் தயவு அவனுக்கு அவசியம்.எத்தனை பெரிய பண்டிதர்களையெல்லாம் ஓரங்கட்டினவன் அத்தான்.ஊருக்கு உபதேசத்தை மட்டுமல்ல பிணக்குகளைக்கூடத் தீர்த்துவைப்பவன்,ஆனால் என்னோடு அடிக்கடி பிணக்குப்பட்டான்.


கிட்லர்!


சின்ன வயது.சிரிக்கின்ற பெண்களையெல்லாம் தாமரையில இருக்கிற சரஸ்வதியென்று ஆசைப்பட்ட காலத்தில்தான் எனக்கு கவிதாஞ்சலி எதிர்ப்பட்டாள்.

"கொடியே!
இழைவான் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்,எனது ஆவி குழைக் குதியோ?"

இல்லை,

"மயிலே எனை நீ வலி ஆடுதியோ?"


ஆசைக்கொரு அழகென்றால் அவள்தான் அழகு என்னும்படி அவள் இருந்திருக்கிறாள்.அந்தப் பருவத்தில் சேராத தாம்பாத்தியம் தாம்பாத்தியமாக இருப்பதில்லை.வேண்டுமானால் சமூகக் கடமைக்காக இனப் பெருகஞ் செய்வதென்று எடுத்துக் கொள்ளலாம்.அவளை நான் சேருவதற்கு அவளோ அல்லது நானோ இடைஞ்சல் படவில்லை.அவள் அழகு என்னைப் படாதபாடு படுத்தியது.அத்தான் அந்த அழகை அழித்தானென்றே சொல்லவேண்டும்.


"இந்த வயதில் முருக்கஞ் செத்தலிலும் சேலைகட்டினால் அது உங்களுக்கு அழகுதான்" எண்டான்."முளைத்து மூண்டிலை விடுவதற்குள் பெட்டை வேணுமோ?நாலு வார்த்தை தமிழில எழுத வருவதற்குள்ளேயே நாய்குக் கல்யாணம் தேவையாய் இருக்கு!பிஞ்சில முத்தின மூதேவி."இப்படித்தான் என்ர முதற் காதலைப் போட்டுடைத்தான்.


அத்தான்-ஆசான்!


இப்பவெல்லாம் பார்க்கிறன்.மேற்கத்தைய உலகத்தில் பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளின் முதற் காதலை எவ்வளவு கவனத்தோடு,அன்பாக அணுகிறார்கள்!எனக்கு இந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை.என்ர கவிதைக்கு நிகராக எந்தச் சனியனும் வரமுடியாது.நான் அவசரப்பட்டு அவள் அழுக்குப்பட நேரவில்லை.அது ஏதோவொரு கனவு.அன்புக்கானதாக இருந்தாலும் சரி,இல்லைக் காமத் தீயில் கரிக்கட்டையாக இருந்தாலும் சரி,அவள் நெஞ்சுக்குள் கூடமைத்துக்கொண்ட அந்தக் காலத்தைக் குலைத்தெறிந்த என்ர அத்தான் ஒரு கிட்லர்தான்.கொடியவன்.


ஆசானாய் வந்தவன்,ஆசைக்கு ஆப்பு வைத்தவன்.அவளைத் தாண்டிய அழகி ஆருமில்லை எனக்கு!அற்புதங்களைச் சொரிந்தவள்,ஆராரோ பாடிய அம்மாவுக்கு நிகராக உணரப்பட்டவள்.அரி நெல்லிக்காய் பொறுக்கித் தந்தவள்,ஒரு மாங்காயில் இருவரும் இதழ்பதித்து ஆசைக் கடிகள் பகிர்ந்தவர்கள் நாங்கள்.அப்பப்பா இதுவொரு வாழ்வு.இதயத்தைத் துளைத்த ஓரம்பு ஆயிரம் துளைகளை எங்கள் கனவுகளுக்குள் இட்டபோது,இடையில் குட்டூறாய்க் குடியைக் கெடுத்தவன் இந்த அத்தான்.


ஆசைப்பட்ட நாங்கள் அடுக்களைக்குள் முடங்கியதுபோல அமிழ்ந்தபோது,படிப்பும் போச்சு,பிடிப்பும் போச்சு வாழ்வில்.இதன் பின்னான சில வருடங்களில்,ஏதோ பொதுவாழ்வில் போய்ச் சேர்ந்து புண்களை ஆற்றியது தேசத்துக்குப் போராடியதாகக் காலத்தால் சொல்லிக் கொள்ளும் தகமையில் அத்தானின் பங்கு மிகுதியாக இருந்தது.


இப்போதெல்லாம் ஆசையோடு பார்க்கும் பருவம் இந்தப் பதினைந்து வயதுப் பதின்மப் பருவமே.பாவாடையில் பாத்தவுருவம் "டங்கா தெரியும் கட்டை ரவுசரில்" கற்பனைக்குள் குதிரை ஓட்டும் கவிதாஞ்சலிகள் ஏராளம்.இந்தப் பருவத்தைத் துரத்திப்போட்டு,முப்பதில் மூன்று முடிச்சிட்டு என்னத்த முக்கினாலும் முழுதாய் வாழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.


"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இப்படித்தான் வாழ்வு நகருகிறது.


"தானுண்டது போயுண்டது,பிறருண்டது சிவனுண்டது."அம்மா அடிக்கடி சொன்னதுபோல இப்போதெல்லாம் அத்தானுக்கு உதவிக்கொள்ள முடியுறபோதெல்லாம் என்ர கவிதைக்கு நான் துணைவர முடியாத ஏமாற்றம் அத்தானை ஆசான் என்றபோதும் அடிக்கத்தான் தோணுது.


எனினும்,அத்தான் மனத்தளவில் அனுமான்தான்!


"மாருதி வலித்தகைமை பேசி மறவோரும்
பாரிடை நடந்து,பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடைய நெடுந்தகையும் மேலைமலை சென்றான்..."


இதுதான் என் நிலையும்.



Tuesday, December 18, 2007

சிந்தனைப் பரா அவர்களுக்காக நெஞ்சோடு நெருங்கி...


சிந்தனைப் பரா அவர்களுக்காக நெஞ்சோடு நெருங்கி...



தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை, எவரெவரோ தீர்மானிக்கும் அரசியலாக முன்னெடுக்கப்படுவதில் அந்தக் குறிப்பிட்ட மக்களே இப்போது பலியாகி வருகிறார்கள்.மக்களின் அதீத வாழ்வாதாரத் தேவைகளுக்காக-இலங்கையில் யுத்தத்தை நிறுத்து என்று ஓங்கியொலித்த ஒரு குரல் ஓய்ந்து-பந்திகொள்கிறது!,தோழர் புஷ்பராஜாவுக்குப் பின் புலம் பெயர் சூழலில் இன்னொரு ஆளுமையை நாம் இழக்கிறோம்! மிக அமைதியான மனிதரும்,கருத்தாளுமை மிக்க சிந்தனையாளருமான தோழர், சிந்தனைப் பரராஜசிங்கம் அவர்கள் 16.12.2007 காலமாகியதைத் தோழர் இரயாவின் மூலமாகவே நான் முதலில் தெரிந்து,அறியக்கூடியதாக இருந்தது.


எனக்கும் சிந்தனை ஆசிரியருக்குமான தொடர்பு 1989ஆம் வருடமே ஆரம்பமாகிறது.தெரியாதவரைக்கூடத் தெரிந்தவராகக் கருதிப் பழகும் அவரது முதற் சந்திப்பே எனக்குச் சுகமான அநுபவமாக இருந்தது.அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் காரணமாக நான் அவரை"ஐயா"என்றே அழைப்பதுண்டு!எனது தந்தையாரைப் பார்ப்பதுபோன்றவொரு உணர்வு அவ்வப்போது எழுவதுண்டு.மல்லிகா அம்மாவையும்,பரா மாஸ்டரையும் 89 ஆம் ஆண்டு அவர்களது (முன்னர் வதிந்த) ஸ்ரூட்கார்ட் வீட்டினில் சந்தித்த காலம் கண் முன் விரிகிறது!


எந்த வயது வித்தியாசமுமின்றி அந்த அறிஞர் என்னோடு உலக சோசலிசப் போக்குகள்-விஞ்ஞானத்தின் இருப்போடு நிலைபெறும் முதலாளிய வியூகம் குறித்தெல்லாம் நீண்ட நேரம் விவாதித்தார்.மிக எளிமையான மனிதர்.இறுதியாக அந்த மனிதனை கலைச் செல்வனின் மரண இறுதி நிகழ்வில் பாசத்தோடு முத்தமிட்டேன்.அதன் பிறகு அவரைக் காணேன்!


இப்போது, நம்மிடமிருந்து பரிபூரணமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார்!


நான், அவரோடு இலக்கியச் சந்திப்பு நிகழ்வைக் குறித்த அவரது பார்வைகளோடு முரண்பட்டிருக்கிறேன்.எனினும்,அவர்மீதும்,அவரது நாணயத்தின்மீதும் மிகவும் மதிப்பை என்றும் வைத்திருந்தே வந்திருக்கிறேன்.தான் கொண்ட அரசியல் வாழ்வுக்கு மிக உண்மையாகவும்-மக்களின் உரிமைகளைத் தனது வாழ்வுக்காக வளம் சேர்க்கும் மூலதனமாக்காது என்றும் மக்கள் நலப் போராளியாகவே பரா அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.


மகத்தான பணிகள் நம் முன் கிடக்கிறது.இதை மிக நேர்த்தியாக அறிந்தவர் பரா அவர்கள்!

எனவே,அதுள் தன்னால் முடிந்தவரை-தனது எல்லைக்குட்பட்டவரை பரா அவர்கள் பணியைத் தொடர்ந்திருக்கிறார்கள்.இந்தப் பணியின் தொடராக அவர் புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் "பெருந்தாக்கஞ் செய்த எண்ணங்கள் சஞ்சிகை" நின்ற பின் சிந்தனை எனும் சஞ்சிகையைத் தொடராக வெளிக்கொணர்ந்து, நம் எழுத்துகளுக்கெல்லாம் களம் அமைத்தார்.நான் அறியப் படைப்பாளிகளை முழுமையாக வெளிப்படுத்தியவர் சிந்தனைப் பரா அவர்கள் மட்டுமே.தனக்கு முரண்பாடாக அல்லது உடன்படாதவற்றைக்கூடத் தனது பத்திரிகையில் கத்திரிவைக்காது பிரசுரித்தவர் அவர்மட்டுமே.

பெரும் ஜனநாயகப் பண்புமிக்க நாணயமான மனிதர் என்பதற்கு அவரது அணுகு முறையே சாட்சிபகர்பவை.


ஆனால்,இலக்கியச் சந்திப்பில் அவரது போக்குகள்,ஆளுமைகள் குறித்து விமர்சனங்கள் எனக்குள் உண்டு.அது கடந்த அவரது அரசியல் நிலைப்பாட்டிலும் இருக்கிறது.என்றபோதும், ஒரு அற்புதமான நட்புள்ளங்கொண்ட நல்ல பெரியவரை இழந்தது மனதுக்குக் கஷ்டமாகவே இருக்கிறது.அவரோடான உளப்பூர்வமான உறவுற்ற தரணங்கள் நெஞ்சில் விரிகிறது.அந்த நெஞ்சோடு நல்ல மனிதரைக் குறித்த நிறைந்த ஞாபகங்கள் உணர்வைப் பிழிந்து,விழிகளைக் கசக்கவைக்கின்ற இந்த அவரது மரணம் மிகவும் வலிக்கிறது.


இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் தமது சமூக சீவியத்தைப் பெரிதும் அழியவிட்டுத் தகர்ந்த சமூக வாழ்வை அரைகுறையாக மீட்டு வாழ்ந்து,உயிரைப் பிடித்திருக்கும் இந்தச் சூழலில், அவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்கும்,அதை மீளக்கட்டியொழுப்பி அவர்களின் உயிர் வாழ்வை உறுதிப்படுத்தும் ஜனநாயகப் பண்புகளைக் கோரிக் கொள்ளவும்- குடிசார் மதிப்பீடுகளை நிறுவிக் கொள்ளும் குடியியல் முறைமைகளை நோக்கிய- இராணுவ,பொலிஸ் முகாம்கள் அகற்றப்பட்டு, வாழ்விடங்கள் மறுபடி மக்கள் வாழும் ஆதாரங்களாக நிறுவிக் கொள்ளும் முன் நிபந்தனைகளை வைத்துத் தினமும் கருத்தாடியவர் சிந்தனை ஆசிரியர் பரா அவர்கள்.யுத்தைத் நிறுத்தக் கோரித் தன் வலுவுக்கு உட்பட்டவரைத் தன் துணைவி மல்லிகா அம்மாவோடு இணைந்து படைப்புகள் கருத்துக்கள் எனத் தொடர்ந்து எழுதியும் உரையாடியும் வந்தவர்.இவரது பிரிவில் நானும் துயருறுகிறேன்,அவர்களது குடும்பத்தவர்களைப் போலவே!


மல்லிகா அம்மாவுக்கும்
அவர்களின் குழந்தைகளான உமா சானிகா
சந்துஷ் ஆயோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம் உண்டு!


மக்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.இதனால் யுத்தத்துக்குள் வாழும் தமிழ் பேசும் மக்களின் அதீத மனிதாயத் தேவையாக இருப்பது அவர்களது உயிர்வாழும் வாழ்வாதாரங்களே என்று அடிக்கடி கூறிக் கொண்டவரும்,தனது அரசியல் வாழ்வை உலகத் தொழிலாளவர்க்கத்துக்குள் இறுகப் புதைத்தவரும் தோழர் பரா அவர்கள்.எமது சமுதாயத்தில் நிலவும் மிகக் கொடூரமான கருத்தியல் ஒடுக்குமுறைக்கு-ஜனநாயக மறுப்புக்கெதிராகத் தொடர்ந்து போராடிய,மறுத்தோடிப் போராளியின் வாழ்வு நிறைவு-உலகத்தின் மூலத்தோடான இணைவு எம்மை மிகவும் பிரமிக்க வைப்பது.அந்த வகையில் சிந்தனைப் பரா வெற்றியாளனே!


அவரோடு கருத்தாடி,முரண்பட்டு,"ஐயா"என்று உறவுற்று வந்திருக்கிறேனென எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது.


"வாருங்கள்"

"இருங்கள்"

"சுகமாக இருக்கிறீர்களா?" -

என்று மிகப் பெரிய மனிதருக்குக் கொடுக்கும் மரியாதையை எனக்கு-எமக்குத் தந்தவர் பரா அவர்கள்.எந்தப் பொழுதிலும் புன்னகை குவிந்த முகத்தோடு தந்தையாக எனக்கு முன் விரிந்த அவரது உடல் இன்று இயங்காது பேழையுள் உறங்குகிறது!

அவருக்கு எனது செவ்வஞ்சலி!


ஆழ்ந்த கவலையோடு,

ப.வி.ஸ்ரீரங்கன்
18.12.2007

Monday, December 03, 2007

புலிகளின் தரப்பில் யுத்தமென்பது...

இனவாத அரசின்
யுத்த முனைப்பு
அதற்குச் சாதகமாகவே இருக்கும்.

உலகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் நலன்,மனிதாபிமானம்,மனிதவுரிமை,ஜனநாயகம்"எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக நமக்குள் வந்துகொண்டபின் யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும்,பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை எட்டுகின்றன.

பெரும்பகுதி மக்களால் ஏற்கப்படும் ஒரு நிகழ்வில் அது பெரும் பங்கை அந்த மக்களுக்கு எதிராகவே ஆற்றும் யுத்தக் கூறுகளாக விரித்து வைக்கிறது.நமது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று எவராவது கூறுமிடத்து அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.எமது சமுதாயத்துள் இந்த நிலைமை இப்போதைய சூழலாகி வருகிறது.சிங்கள இனவாத அரசு அதை நோக்கியே நம்மைத் தள்ளி நமது முழு வலுவையும் சிதைப்பதில் உலக உதவியையும் நாடியுள்ளது.இதன் தொடர் நிகழ்வில் நிர்பந்தமாக முன்வைக்கப்படும் பாரிய யுத்த முன்னெடுப்புகள் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளப் போகிறது.

எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தரணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.

இதைக் கடந்தவொரு மாற்றுக்கருத்தெழுவதற்கானவொரு சூழல் வலுமூர்க்கமாக அழித்தொழிக்கப்படுகிறது.இது தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி"புலிகளை எதிர்பவர்கள் தமிழர்களை எதிர்பவர்கள்"என்றும் கருத்துக் கட்டுகிறது.

இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.இங்கே,மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும், புலிகளுக்கும் மற்றும் (...) குழுக்கழுக்கும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.


அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.

ஆனால்,தொடரும் யுத்தங்களின் பின்னே ஏற்படும்"வெற்றி-தோல்விகள்"இலங்கையின் இராணுவப் பிடியிலிருந்து தமிழ் பேசும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்காது தமது விடுதலை குறித்த கற்பனைகளை வளர்த்துள்ளார்கள்.ஓட்டுக் கட்சிகளின் அற்பத் தனமான பரப்புரைகளால் இந்த மக்களின் விடுதலையென்பது வெறும் வடிகட்டிய முட்டாள் தனமான யுத்தங்களால் பெற்றுவிட முடியுமெனுங் கருத்தோங்கியுள்ளது.


பொதுவாக ஒரு யுத்த வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க
முடியுமா?

திணிக்கப்படும் யுத்தால் முழுமொத்த மக்களின் விடுதலை
சாத்தியப்படமுடியுமா?

இங்கே, எந்த வர்க்கம் யுத்தத்தில் நலமடைய முனைகிறது?

அந்த நலனை அடைவதற்காகத் தன் முரண்பாட்டை முழு மொத்த மக்களினதும் முரண்பாடாக்கி வைத்திருக்கும் இந்த அரசியலில் புலிகளின் பங்கு எத்தகையது?

சுருங்கக் கூறினால்: இது தமிழ் மக்களை ஆளத்துடிக்கும் தமிழ் மூலதனத்தின் முன்னெடுப்பு.அது மக்களின் அனைத்து வளங்களையும் மூலதனமாக்கி வைத்து யுத்த்தில் தன்னை முதன்மைப் படுத்தி வருகிறது!


இங்கே, தேசிய விடுதலை என்பது இருப்புக்கான-மக்களை அணி திரட்டுவதற்கான கோசமாகவே இருக்கிறது.ஆனால்,இதைச் சாட்டாக வைத்துச் சிங்கள இனவாத அரசு தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து அழித்து வருகிறது.இது மக்களை காலவோட்டத்தில் சிங்கள அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் யுத்தாமாகச் சீரழிந்து போகிறது.

புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது உணர்வினது மட்டுப்படுத்தப்பட்ட "அறிதிறனால்"செயலூக்கமாக விரிகிறது.வாழ்வாதரமற்ற பகுதிகளைவிட்டகலும் உயிரியானது தனது இருப்புக்காக இன்னொரு பகுதியைக் கண்டடையவேண்டிய நிர்பந்தம் யுத்தசூழலால் தீர்மானிக்கப்படுகிறது.இந்தயுத்த சூழலலைத் தீர்மானித்த பொருளாதார முரண்பாடானது வரலாற்றுப்போக்கில் வெகுவாக முழுமொத்த மனித சமுதாயத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிறது.இந்நிலையில்,மனிதரின் உயிர்வாழ்வுக்கான புவிமீதான இடைச்செயல் அத்தியவசியத்துக்கு மீறிய மட்டுப்படுத்தமுடியாத குவிப்புறுதியூக்கத்தால் தொடர்ந்து இயற்கை வளம்,மனித வளம் அழிக்கப்படுகிறது.

இதன் உச்சபச்ச நுகர்வூக்கம் மக்களின் உயிர்வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிடுகிறது.இத்தகைய நிலைமையில் இன்றைய மக்கள் சமுதயாங்களின் இருப்பானது எதுவரை சாத்தியமாகும்?தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் தொடரும் யுத்தம் திருடிக்கொண்டிருக்கிறது.இது தேசத்தின் பெயராலும்,தேசியத்தின் பெயராலும் அனைத்தையும் ஓப்பேற்றி முடிக்கும் கருத்துக்களை மிக அராஜமாக விதைக்கிறது.இதற்கெதிரான பார்வைகளைத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானதாகச் சொல்லித் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய யுத்த முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,யுத்தத்துள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது.

நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் யுத்த முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.

இப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது.சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது.வலுகட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் புலிகள் அதன் வாயிலாகப் "புலிகள் என்றால் தமிழர்கள்,தமிழர்களென்றால் புலிகளெனும்" புதிய தத்துவத்தைச் சொல்லிக் கொள்ளும் கருத்துக்கு வலுச் சேர்க்கத் தமது பரப்புரைப் பீரங்கிகளையும் தயாராக்கி வைத்துள்ளார்கள்.

இந்தக்கேடுகெட்ட சமூக யதார்தமானது மனிதவுயிர்களைப் பலியெடுத்து எதிர்காலத்தை நாசமாக்கி வரும்போது தனித்த தேசங்களும் ,மக்களினங்களும் தமது சுயநிர்ணயமான அரசை,வாழ்வை,பொருள் உற்பத்தியைக் கொண்டிருக்க முடியுமா?

தொடர்கின்ற இனங்களுக்கிடையிலான யுத்தங்கள் இறுதி இலட்சியத்தை அடைந்து மக்களை நிம்தியோடு வாழும் அரசியல்,பொருளியல் வாழ்வைத் தருமா? இது சார்ந்து நாம் சிந்திக்கிறோமா?கற்பனைகளில் எவரும் அரசியல்,பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது.

இத்தகைய கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டுப் புலிகள் செய்யும் யுத்தம் தமிழ்பேசும் மக்களுக்கு விடுதலையளிக்க முடியாது!பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக்காயாக்கியபடி புரட்சி முன்நகர்வதல்ல.புலிகளின் போராட்டம் புரட்சியை நிபந்தனையாக்கியபடி இத்தகைய மக்களின் முன்னணிப்படையைக் கொண்டிருப்பவர்களும் அல்ல.எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகினடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி யுத்தத்துக்குள் திணிப்பது இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தேசத்தை விடுவிக்க முடியாது.இது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.

சமூக முரண்பாடுகளை வெறும் மொழிவழிக் காரணியளாகக் கருதும் தமிழ்மனம்-சிங்களமனம் எங்ஙனம் உருவாக்கப்படுகிறது?இந்த மனம் கட்டவிழ்த்துவிடும் உளவியற்பயங்கரம் மற்றைய மனிதர்களைக் கொல்வதில் எதேச்;சையாக முடிவுகளை எடுக்கிறது.இது குண்டுகளைக்கட்டித் தலைமையை ஒழிப்பதால் அந்த அமைப்பையே அழித்துவிடலமென மனப்பால் குடிக்கிறது.நிலவுகின்ற அமைப்பை அழிப்பதற்கு-உடைப்பதற்கு முனையாமல் தனிநபர்களை அழிப்பதால் விடுதலை வர முடியாது.என்றபோதும், தற்கொலைத் தாக்குதல்களும்,விமானத் தாக்குதல்களுமாக யுத்தம் சூடுபிடித்து மக்களைப் புரட்டியெடுக்கிறது!

இந்தச் சமூகத்தில் ஒடுக்குமுறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.ஆனால், இனவாத்த்தைத் தூண்டும் இத்தகைய தாக்குதல்களால் இன்னும் வலுப்படும் சிங்களப் பேரினவாதமானது இலங்கையில் சிறுபான்மையினங்களைப் பூண்டோடு அழிக்கும் வலுவைச் சிங்களக் கூலிப்படைக்கு வழங்கி,அந்த இராணவத்தை தேசிய இராணுவமாக்கி இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கனவை நிறைவேற்றி விடுகிறது.

வன்னியில் கொட்டும் சிங்கள விமானங்களின் ஒவ்வொரு குண்டிலும் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அதை உணருமுடியாதளவுக்குப் "புலிப் பயரங்வாதத்தை" முன் நிறுத்தி வருகிறது தமிழ்ர்களுக்குள் இருக்கும் பதவி வெறிபிடித்த குழுக்களும்,இலங்கை அரசும்.

தொடர்கிற யுத்தங்களால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்!

நமது சமூக சீவியம் உடைந்து,நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.இந்தக் கொடிய யுத்தங்கள் எமது தேசத்துள் எமக்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுத் தருவதற்கில்லை.

மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை.மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்துள் மக்களை இருத்திவைப்பதைவிட்டு, மக்களின் பிரதான முரண்பாட்டைக் கையிலெடுத்து,அவர்களை அதன்வாயிலாக அணி திரட்டிக் கொண்டு புரட்சிகரமான போராட்டத்தைப் புலிகள் செய்யாத வரை,புலிகள் யுத்த்தில் பெறும் வெற்றிகள் நிலைத்த வரலாறாக இருக்கமுடியாதென்பதற்குக் கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆதிக்கம் உடைந்தது நல்ல உதாரணம்.

எனவே,புலிகளின் போராட்டச் செல்நெறியானது தொடர் தோல்விகளைத் தந்திருக்கும் இன்றைய சூழலில் இலங்கை இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும்.இதைப் புலிகள் அறிவார்களா?


ப.வி.ஸ்ரீரங்கன்
04.12.2007

Sunday, December 02, 2007

நமக்குள் மெல்ல ஊடுருவித் தமது உளவுப்படைகளை வைத்து...

என்னயிது?-குறியீடா?
நடக்கப் போவதன் முன்னெச்சரிக்கையா?


ப்போதெல்லாம் மிகக் கடினமானவொரு சூழலில் மாற்றுக் கருத்துடையோரின் வாழ்நிலை இருக்கிறது."கரணம் தப்பினால் மரணம்" எனும் நிலையில் எமது வாழ்சூழல்.எவரெவரோ எத்தனையோ முறைமைகளில் நம்மை எச்சரிக்கிறார்கள்.
ஜெகோவாவின் சாட்சிகள் நவம்பர் மாதத்துக்கான தமது "காவற் கோபுரத்தையும்,விழித்தெழுவையும்"நம்மைக் கேட்கமாலே நவம்பர் மாதம் தபாற்பெட்டியில் தள்ளிவிட்டார்கள்.


இன்று,02.12.2007 இன்னொரு வேடிக்கையானதும்,
அச்சம் தரும் நிகழ்வொன்று நெருங்குகிறது நமை நோக்கி!


இரண்டு தமிழர்கள் வீட்டின்முன் வந்து கதவைத் திறக்கும்படியும்,தாம் என்னோடு உரையாடவேண்டுமென்கிறார்கள்.


நான் வீட்டில் இல்லையென்று கூறப்பட்டு,
எங்கிருந்து வருகிறீர்கள் என்பது கேள்வியாகிறது.


ஒருவன்: "எசன் நகரத்திலிருந்து வருகிறோமென்கிறான்."


மற்றவனோ: "இல்லை நாங்கள் வூப்பெற்றாலில் இருந்தே வருகிறோமென்கிறான்."


"எதற்காக வந்தீர்கள்?"

"மதம்சார்ந்து உரையாட வந்தோம்!"

"நல்லது கதவைத் திறப்பதற்கில்லை.உங்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை."


"கதவைத் திறவுங்கள் உங்களிடம் எங்கள் பத்திரிகை தரணும்."


"இல்லை."தபாற்பெட்டியில் இட்டுவிடவுமெனச் சொல்லப்படுகிறது.


அவர்கள் வந்துபோவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
அவர்கள் மதம் பரப்பும் பேர்வழிகள் இல்லையென்பதைக்
கிரகிக்கக்கூடியதான அவர்களது நடிவடிக்கை சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.தபாற்பெட்டியிலிடப்பட்ட ஜெகோவாவின் பத்திரிகையானது அக்டோபர் மாதத்துக்கானது.
அதன் அட்டைப்படமும் உள்ளடக்கமும் மரணத்தைப் பற்றியது.

"பிள்ளைகள் பத்திரம்" எனும் அட்டைப்படமும்,"சாகும்போது என்ன நேரிடுகிறது?"எனும் உள்ளடக்கமும் கொண்ட இந்தச் சஞ்சிகை"விழித்தெழு"வாகும்.இது அக்டோபர் கடைசியில் எனக்கு வந்துவிட்டது.
எனது ஏரியாவுக்கு எவர் மதம் பரப்ப வருகிறார்கள்
என்பது மிகவும் தெரிந்தே இருக்கும்போது,
இரண்டு புது முகங்கள்.அதுவும் சந்தேகிக்கும்படி...

இந்தப் பத்திரிகை எதற்காக?

"பிள்ளைகள் பத்திரம்"

என்னயிது?-குறியீடா?
நடக்கப் போவதன் முன்னெச்சரிக்கையா?
சாகும்போது என்ன நிகழ்கிறதென்ற உள்ளடக்கம் உணர்த்தும் நிலை?

"....................."


இதுவொரு பொல்லாத சூழல்.

குண்டுகள் கட்டி வெடிக்கும் காலம்.எல்லாம் தேசியத்துக்காகவா அல்லது இலங்கையின் இறைமைக்காகவா?-மெளனித்திருக்கும்படியானவொரு சூழலுக்குள் உணர்வு.என்றபோதும்,இதிலிருந்து விடுபடும் உணர்வு.எதையும் இழப்பதற்குத் தயாராகும் உணர்வின் உந்துதல் மீளவும் செயற்படத் தூண்டும்.நாம் சிங்களப் பாசிசத்தின் கைக்கூலிகளோ அன்றி இந்தியக் கைக்கூலிகளோ அல்ல!முற்று முழுதாக நாம் மக்களின் விடிவுக்காகவே குரைக்கிறோம்.மக்களின் எதிரிகளை அம்பலப்படுத்துகிறோம்.அந்த எதிரிகளால் என்றோ ஓர் நாள் நாம் மெளனிக்கப்படலாம்.இது தெரிந்தே இருக்கிறோம்.எனினும்,இன்றைய நிகழ்வு எதையாவது முன் குறித்துச் சொல்லும் நிகழ்வா?

"அதிகமான அடக்குமுறையானது புரட்சிக்கு வித்திடும்"என்பது சாணாக்கியனின் ஆலோசனை.

எனவே,புரட்சிக்குரிய அனைத்துக் கூறுகளையும் கண்காணித்து அவற்றைச் சிதை;தபடி அதிகாரத்தைக் கண்காணித்து நடாத்துவதை அவன் அப்பட்டமாகவே சொல்கிறான்.அவனோ பற்றுப் பாசம் அற்ற"ஞானிகளை"ச் சீண்டாதிருக்கும்படியும் சொல்லிச் செல்கிறான்.இங்கே,பற்றுப் பாசத்தைப் பரிசீலித்துப் பார்க்கும் நிலையொன்றுண்டா?அப்படியாயின் நாம் பற்றுப் பாசமுடைய மிக எளிய மனிதர்கள்!நாம் வாழ்வுமீது மிக விருப்புடையவர்கள்.இப்புவிப்பரப்பில் இயற்கை வழங்கிய அனைத்துப் படைப்புகிளிலும் மிளிரும் அழகைத் தரிசிப்பவர்கள்.

அந்தப் படைப்பாற்றலைத் திருடும் கயவர்களை வெறுப்பவர்கள்.

அவர்களின் இருப்பை அசைக்கும் குணமுடையவர்களும் நாமென்றே கூறுகிறோம்.ஆனால்,மக்களின் நல் வாழ்வுக்காக நாம் வாழ்வைத் தொலைப்பதற்கு அவசியமொன்று உருவாகும்போது அவற்றை எதிர்கொள்வதைத் தவிர வேறொரு பாதை கிடையாதென்பதையும் கூறத் தயங்குவதில்லை!

"வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழர் பகை."
-குறள்:872, பக்கம்:347

வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!

சாணாக்கியனின் உலகத்தில் தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.

ஒற்றர்கள் நிறைந்த நாடாக எந்த நாடிருக்கிறதோ அதுவே மிகப்பெரும் வலுவுடைய நாடாகும் என்பது அவனது இராஜதந்திரம்.

அதிகாரத்தைக் கையிற் கொடுத்து அமைச்சனை-போர்த் தளபதியை அளக்கும்படி கட்டளையிடுபவன் சாணாக்கியன்.அத்தகைய தந்திரத்தில்-அளவின் எதிர்மறையில் அத் தளபதியை மிகக் குறைந்த படையுடன் போர்க் களத்துக்கு அனுப்பிக் கொன்றுவிடவும் சொல்கிறான்.நமது போராட்டத்தில் இது நீண்டகாலமாக நாம் காணும் ஒரு நடைமுறை!

உளவுப்படையானவன் எத்தனையோ வேடங்களில்(பைத்தியக் காரனாக,ஞானியாக,மதம் பரப்புபவனாக,மடாதிபதியாக,வணிகனாக,

வழிகாட்டியாக,தெருக்கூட்டுபவனாக,விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களாக,புரோகிதர்களாக-புரோக்கர்களாக...இப்படி எத்தனையோ வேடங்களில்...)மக்களை நெருங்க வேண்டுமாம்.மக்களின் மன நிலையை அறிந்து ஆட்சி நடாத்தும்படி கூறும் சாணாக்கியனின் வாரீசுகள் நம்மை நெருங்கும் நிகழ்வுகளைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஒற்றர்களில்-மிகக் கொடூரமானவர்களை,கல் நெஞ்சம் உடையவர்களை,பற்றுப் பாசம் அற்றவர்களைப் பொறுக்கி எடுத்து,அவர்களைக் கொலை செய்வதற்கே பயன்படுத்துவதற்காக வைத்திருக்கும்படி ஆலோசனை-கட்டளையிடும் சாணாக்கியன் பல இடங்களில் ஒற்றர்கள் அதி தந்திரமுடைய கல்வியாளர்களாகவும் இருக்க வேண்டுமென்கிறான்.

ஒற்றர்கள் எப்பவும் சகலகலா வல்லவர்களாக இருப்பது முக்கியம்.சாத்திரம்,ஆருடம்,மருத்துவம்,அறநூல்,உடல்கூறு நூல்,விஞ்ஞானம்,கணிதம்,என்று எல்லாத்துறையிலும் காத்திரமான பங்களிப்புச் செய்யக்கூடியவர்களாகவும்,சமய சந்தர்ப்பத்துக்கேற்றபடி அவற்றை வெளிப்படுத்தும்படி இருக்கும் ஆளுமையைக் கோருகிறான் சாணாக்கியன்.இங்கே, நாம் அனைத்தையும் காணமுடியும்.நமது அமைப்புகளிடம் இது மிக நேர்த்தியாகச் செயற்படுவதை நாம் இலகுவாக இனங்காண முடியும்.

மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைத் துறையிலிருந்து,கோயில் குளம் வரைத் தொண்டர்கள் என்று இந்த ஒற்றர்களின் கதை நீண்டபடி...

எங்கே நாம் இருக்கிறோம்?

இவையனைத்தும் ஒருங்கே செயற்படுவதை நான் ஒரு மேதின நிகழ்வில் கண்டவன்!தமிழர்களுக்குள் இது மிகவும் வலுவாகி வருவதை நாம் காண்கிறோம்.புகை நுழையாத இடத்துக்குட்கூட ஒற்றர்கள் நுழைவது அவசியம் என்பதே சாணாக்கியனின் கூற்றின் அடிப்படை.

எதிரிகளை வரையறுக்கக் கோருகிறான்.


"பொருளாசை பிடித்தவர்கள்"

"அதிகாரப் பித்துப் பிடித்தவர்கள்"

"அகங்காரத் திமிர் பிடித்தவர்கள்"

"பெண்ணாசை-ஆணாசை பிடித்தவர்கள்"


இத்தகைய மனிதர்களை மிக வேகமாகவும்,நுணுக்கமாகவும் கண்காணிக்க வேண்டுமென்றும்,இவர்கள் மிக இலகுவில் எதிர் திசைக்குச் செல்லக்கூடியவர்கள் என்பதும் சாணாக்கியம்கூறும் ஆலோசனை.

மனிதர்களில் மிக நல்லவர்களாக,எதற்குமே விலை போகாது மக்களின் நலனுக்காகவே குரல் கொடுப்பவர்களை மிகவும் சாதுரியமாக வென்றெடுக்க வேண்டும்.அங்ஙனம் வெல்ல முடியாதுபோனால் மிக இரகசியமாகக் கொன்று"துரோகி"என்று மக்கள் முன் கருத்துக் கட்டச் சொல்கிறான் சாணாக்கியன்.

இப்போது பார்க்கிறோம்,மக்களுக்காகக் கருத்தாடும் மாற்றுக் கருத்தாளர்களை மிக இலகுவாகத்"துரோகிகள்"என்கிறான் மெல்பேர்ன் சபேசன்.



//புலிகளுக்கு எதிரான காட்டிக் கொடுப்பு, தமிழர்களுக்கு எதிரான காட்டிக் கொடுப்பாகும்!


புலிகளுக்கு எதிரான துரோகம் தமிழர்களுக்கு எதிரான துரோகமாகும்!//

"புலியை எதிர்பவர்கள் தமிழரை எதிர்ப்பவர்கள்"என்கிறான்.

ஆகத் தமிழரென்றால் புலி,புலிகள் என்றால் தமிழர்கள்!இந்தக் கணக்கு நல்லாத்தாம் இருக்கு!இது யாழ்பாணத்திலிருந்து வரலாற்று ரீதியாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை இந்தக் கண்ணோட்டத்தால் ஒரே இரவில் அடித்து வெருட்டியது.இதைச் சபேசன் என்ற புலிப்பாசிஸ்டுத் தெரிந்தே இப்போதும் கதைவிடுகிறான்.இங்கே, பாசிசம் நீர்குமிழிதாம்.என்றபோதும், அது கணிசமானவர்களைக் கொன்றுவிட்டே தானும் அழியும்.இதைக் கிட்டலர், முசோலினி,பொல்போர்ட்,இடி அமீன் என்று அன்றும்,இன்று புஷ்,பிளேயர் முதல் இன்றைய நமது இயக்கங்கள்வரை நாம் கண்டு குருதி உறையக்கட்டுண்டு போகலாம்.

வலைப் பதிவுலகத்தில் மக்கள் நலன் சார்ந்தெழுதும் நமக்குள் முரண்பாடுகள் வருவது இயல்பு.நமது கண்ணோட்டம் பரந்துபட்ட மக்களின் நலனிலிருந்து எழுகிறது.இது, இலங்கையின் ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் அவர்களின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது.அராஜகத்தை இனம் காட்டுகிறது.மக்கள் விரோத அரசியலைத் தோலுரித்துக் காட்டுகிறது.

அந்நிய சக்திகளுக்குக் கூஜாத் தூக்கும் இயக்கத் தலைமையையும் அதன் மக்கள் விரோத அரசியலையும் அம்பலப்படுத்துகிறது.இத்தகைய மாற்றுக் கருத்தை வளரவிடுவதை மக்கள் விரோதிகள்,இயக்கங்கள் அனுமதிக்கிறதாவென்பதைவிட நமக்குள் தமது நலன்களை அறுவடை செய்ய முனையும் அந்நிய சக்திகள் அனுமதிப்பதில்லை என்பதை நாம் முதலில் கவனப்படுத்தியாக வேண்டும்.அவர்கள் நமக்குள் மெல்ல ஊடுருவித் தமது உளவுப்படைகளை வைத்து நம்மைத் தொலைத்துக்கட்டப் பார்க்கிறார்கள்.நமது கருத்துக்கள் எங்கே புலிகளின் அடிமட்டப் போராளிகளை புரட்சிப்படையாக மாற்றி மக்களோடு இணைந்து தமது இருப்பை அசைத்து விடுமோவென்று இந்தியா மிக அச்சங்கொள்கிறது.

புலிகளின் அடிமட்டப்போராளிகளே நாளைய விடியலின் கதாநாயகர்கள் என்பதை நாம் அறிந்தளவுக்கு நமது எதிரிகளும் அறிவார்கள்!

எனவே,நமக்குள் முரண்பாடுகளை உருவாக்கத் தம்மைத் தமிழர்களின் ஆதரவாளர்களாகவும்,புலிகளின் விசுவாசிகளாகவும் காட்டி,நம்மைத் தூற்றுவதால் தாம் உண்மையான தமிழ்மக்களின் ஆதரவாளர்களாக்காட்ட முற்பட்டு வருகிறார்கள்.இது சாணாக்கியன் வகுத்த பொறிமுறைதாம்.இதை நாம் மிக நன்றாக அறிவோம்.

புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் இத்தகைய இந்திய உளவுக் கைக்கூலிகள் எமக்குள் ஊடுருவி நம்மை எதிரிகளாக்கித் தம்மைப் புலிகளின் விசுவாசிகளாக்கிக் குருதிப்புனல் கமலகாசன்-அர்ஜுன் விளையாட்டைக் காட்டி வருகிறார்கள்.

இங்கே,வலைப் பதிவுலகத்தில் ஒரு காட்டுமிராண்டி அத்தகைய நிலையை எடுத்திருக்கிறது.இது இந்திய நலனின் உளவுக் கைக்கூலி.இது,மெல்பேர்ணில் சபேசன் என்றும் இன்னும் உலகம் பூராகவும் பரவிக்கிடக்கிறது.

எனது,உயிரிலும் மேலான தேசபக்தர்களே!

புலிகளின் அடிமட்டப் போராளிகளே!!

உங்கள் தியாகத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கித் தமது நலன்களை இலங்கையில் அடைய முனையும் இந்தியாவையும்,அந்நிய மேற்குலகத்தையும் இனம் காணுங்கள்!

நாம் உங்கள் தியாகத்தை எந்தவொரு அந்நிய சக்தியும் பயன்படுத்தாதிருக்கவே எழுதுகிறோம்.

உங்கள் தியாகம் உங்கள் பெற்றோரின் வாழ்வையும்,அவர்களது விலங்கையும் உடைத்தாகவேண்டும்!எங்கள் உயிரிருக்கும்வரை உங்கள் தியாகத்தை மக்களுக்காகவே அர்பணிக்கப் போராடுவோம்!மக்களோடு மக்களாக நீங்கள் இணையும் ஒரு போராட்டத்தில் முதுமை அடைந்த நாங்களும் உங்கள் கூலிகளாகவும்,உங்களைப் பராமரிப்பவர்களாகவும் வந்தே தொலைவோம்.உங்களின் பின்னே நமது வாரீசுகளும் அணி வகுக்கும் புரட்சியைத் தடுக்கும் அந்நியச் சதிகளை இனம் காணுங்கள்!-இதுவே இன்றைய தலையாயக் கடமை!!

ப.வி.ஸ்ரீரங்கன்
02.12.2007

Friday, November 30, 2007

அன்னை!

அன்னை!

எனது குவளையுள்
நுரையெழுப்பும் பியரைப் போல்
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

அம்மன் தாலாட்டை
அடியெடுத்துப் பாடி
என் நோய் மறக்க வைத்த அன்னை

மெல்லத் தலை கோதி
அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய கிழவி


உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர
கொள்ளிக் குடமுடைத்த
அப்பனின் இழவு சொல்லி

மிச்ச சொச்சக் கனவையும் சிதைக்க
அன்றைய பொழுதில்
பிணைத்த கரங்களோடு அப்பனின் பிணத்தில்
விழுந்தழுத என் தம்பிகளின் முகங்கள் வந்து...

பிஞ்சுக் கரங்கள் இடித்த சுண்ணம்
நினைவில் குத்தும் இழப்பின் வலியாய்!
சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்


அன்னையும்
அவள் கைப் பிடிச் சோறும்
காணமற்போன ஒவ்வொரு பொழுதுகளும்
பொல்லாத உலகத்தின்
பொருளில்லா வாழ்வுத் தடமாய் அகதி வாழ்வு


முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல


கள்ள நித்திரையில்
கண் துயில மறுக்கும் கோடி பொழுதுகள்
இரண்டுங் கெட்டான் உணர்வை
உடலெங்கும் விதைக்க
அம்மாக் கனவு மெல்ல விரியும் கொடிய இரவில்


அன்னை இனி வரமாட்டாள்.

அவளுக்கு வயசாகி விட்டது!

தரையில் பட்டுத் தெறிக்கும்
ஒளி முறிவுகளில்
ஒரு கணமேனும் தேக்கமிருப்பதற்குச் சாத்தியமுண்டா?
ஆத்தையின்
தெம்பூட்டல்கள் இனியெதற்கும் வரப்போவதில்லை.

இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்த்த
அப்பனும் இல்லை.

அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த
மந்தை மனிதனாய்
நுரை வெடித்த வெற்றுக் கிளாசில்
வந்தமர்ந்த தேனீயின் இருப்பில்
என்னை இழந்தேன்!

ப.வி.ஸ்ரீரங்கன்




Thursday, November 29, 2007

ஈழத்தை ஆதரிப் போரும்,ஆதரிக்காதோரும்...

அதிகாரங்களை எதிர்க்காத அரசியல்:


யாரும் பொதுப்படையான அதிகாரங்களை,ஆதிக்கத்தை,இதன் வாயிலாக எழ முனையும் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை.மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற "தேர்வுகளோடு" கருத்தாடுகிறார்கள்.இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய "புலியெதிர்ப்பு,புலி ஆதரவு-சிங்களப்பாசிச அரச எதிர்ப்பு,ஆதரவு" என்ற நிலையிலுள்ளது.


நாம் ஒரு அரச வடிவத்துக்குள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டென.இன்றைய காலங்கள் "அரசுகள்"என்ற அமைப்பின் காலமாகும்.நம்மைப் படாதபாடு படுத்தும் "அரசியல்" தனியொரு தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் தேர்வு இல்லை.அது தேசங்களின் தேர்வுகள்,தெரிவுகள்,திட்டங்களால் உருவாகப்பட்டுள்ளது.
இங்கே நடக்கின்ற "அரசியலானது"தமிழ் மக்களின் எந்த நலனிலும் அக்கறையற்ற படு கேவலமான அரசியலே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப் படுகிறது.புலிகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் செல்வங்களும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.


இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது.அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது.இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.இது தனது மகளைத் தானே புணரும் அப்பனின் மனப்பாண்மை போன்று நமது அரசியல்-இயக்கவாதிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது.


இத்தகைய சமூகச் சூழலில்; புலம்பெயர் மக்களில் பலர் தத்தமது நோக்கு நிலையிலிருந்து இந்த அதிகார மையங்களில் "நன்மை தீமை" என்பவற்றை நோக்குகிறார்கள்.இலங்கையில் வாழும் தமிழ்பேசும் அப்பாவி மக்கள் எந்தவுரிமையுமின்றி இத்தகைய அதிகாரங்களுக்குள் கட்டுண்டு தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு மௌனித்துள்ளார்கள்.


இந்த இழி நிலையில் மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,இயக்கங்களின் அராஜகத்துக்கு இரையாக்க வேண்டியுள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?இதற்குத் துணையாக மக்களை அணிதிரட்டி அவர்களின் நலனை முதன்மைப் படுத்தும் புதிய ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்புமில்லை.இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம் எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது.எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.


மாற்றுக் கருத்தாளர்களும்,அவர்களின் குழி பறிப்பும்:


மேற்குலகுக்கு வரும் தமிழ் வானொலி,தொலைக்காட்சிகளானலும் சரி,அல்லது மாற்றுக் கருத்தாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பழைய பெரிச்சாளிகளும்சரி தமது அரசியல் இலாபங்களுக்காகப் பதவிகளுக்காக மக்களை ஏமாற்றும் புதிய புதிய கூட்டுகளுடன் அணிசேர்ந்து தமிழரின் சுயநிர்ணயவுரிமைப் போராட்டத்தை(இதைப் புலியிடமிருந்து புரிந்து கொண்ட மூளையால் பார்க்கவேண்டாம்!புலிகளுக்கும் இதுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது)நசுக்கித் தமது வாழ்வை மேம்படுத்தத் திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.இதைக் கவனிக்கும் புலம் பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழர்கள் "இயக்க வாத மாயையுடன்"எதிர்த்துக் கருத்திட்டு, அறிவால் வெல்ல முடியாது- அறிவின்றித் தவிக்கிறார்கள்.இவர்களிடம் இறுதியில் உணர்ச்சி வசப்பட்ட தூஷண வார்த்தையே ஆயுதமாகிறது.அப்பாவி மக்களை வழிப்படுத்தி,அவர்களிடமிருக்கும் போராட்டவுணர்வை,இயக்கவாத மாயையிடமிருந்து காத்து இந்த மக்கள் விரோத அரசியலை வென்றாக வேண்டும்.


ஆனால், இங்கு நடப்பதோ வேறான நிலை.நம்மில் பலரிடமுள்ள"Tamil mind"செயற்படாமல் இருக்கிறது.இது உயிருக்குப் பயந்து நடுங்கி ஒடுங்கிப்போயுள்ளது.இவர்கள் "We are the Free"என்று தப்பித்துக்கொள்வதற்குப் புலிகளின் மக்கள் விரோத அரசியலே காரணமாகிறது.இதனால் பதவிக்காக இனத்தையே பலியிடும் மூன்றாம்தர அரசியலை ரீ.பீ.சி. வானொலிக் குழு முன்னெடுக்கிறது.இத்தகைய சூழலில் மக்கள் சார்ந்த நலன்களைத் தமது பதவிக்காகப் பொருள்தேடும் நோக்குக்காக இந்தக் கேடுகெட்ட அயோக்கியர்கள் பயன் படுத்தி வெற்றி பெறுவதை இனியும் பார்த்திருக்க முடியாது.


பண்பாட்டு மௌனமும்,பண்பாட்டு இடைவெளியும்:


ஈழத்தை ஆதரிப் போரும்,ஆதரிக்காதோரும் தமிழ் மக்கள் சமூகத்துள் காலாகாலமாக நிலவிய-நிலவும் பண்பாட்டு இடைவெளிக்குள்(;Cultural distance)சிக்குண்டுபோய் இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் பண்பாட்டு மௌனத்தை(Cultural silence)கொண்டுள்ளார்கள்.இது எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டுத் தமது இருப்பை அசைக்கின்றபோது(Identity crisis) கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த நபரைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிறது.இதுவே இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகத்தைப் புதிதாக நடைபெறும் செயலாக வர்ணிக்க முனைகிறது.இங்கே இதன் தோற்றுவாயும் வர்க்க நலனும் திறம்படப் புரியவில்லை.இன்றைய வர்க்க அரசியலில் வர்க்கத்தைத் தாண்டிய எந்த மக்கள் நலனும் கிடையாதென்ற அடிப்படை அரசியல் அரிவரிப் பாடம்கூடப் புரியாது தம்மை மக்கள் நலன்சார்ந்து சிந்திப்பவர்களாகவும் மற்றவர்களைச் சாடவும் உரிமையை எடுத்துவிடுகிறார்கள்.".Microphysics is feeling its way into the unknown side of matter,just as complex psychology is pushing forward into the unknown side of matter,just as complex psychology is pushing forward into the unknown side of the Psyche!"-G.G.Jung இதுதாம் யுங்கின் கூற்றிலிருந்து இவர்களைப் பற்றி நான் புரிவது. இந்தப் புள்ளியே மிக மோசமானது.இது புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுகிறதென்பதை மறந்துவிட்டுப் புது பாக்களைத் தொகுத்துவிடுகிறது.இல்லாதுபோனால் மற்றவர்களுக்குப் புதுப் புதுத் தொப்பியைத் தைத்து அழகு பார்க்கிறது.


நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், கூட்டணிபோன்ற உலக ஏகாதிபத்தியத்துக் ஆதரவான கட்சியால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.


இதனால் சிங்கள அரசு இந்தியாவோடு சேர்ந்து காய் நகர்த்தும் அரசியல்-ஆதிக்கப் போரை எதிர் கொண்டு தோற்கடிக்க முடியாத வெறும் கையாலாகாத இனமாகத் தமிழ் மக்கள் சீரழிந்துள்ளார்கள்.இந்த நிலையில் ஆயுதக் குழுக்களின் தோற்றத்தின் பின் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பறிக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை கொலைகளும்,பாலியல் வல்லுறவும் எமது மக்களின் ஆன்ம பலத்தையே காவு கொண்டுவருகிறது.


இங்கே நேர்ந்தது என்னவென்றால்"ஆரு குத்தியும் அரிசியானால் சரி" என்ற தனிமனிதத் திருப்தியுறும் மனதின் பண்பாடே!இதுவேதாம் பண்பாட்டு மௌனத்தின் ஊற்றுமூலமாகும்.இதன் தொடர்ச்சியானது ஆயுதக் குழுக்களால் வன்முறை சார்ந்த சமூக ஒடுக்குமுறையாக விரிந்தபோது அதுவே பண்பாட்டு இடைவெளியை இன்னும் அதிகமாக்கியது.இதனால் நாம் உயிர் தப்பிவிடுவதே தனிமனித விருப்பாக நமது சமூகத்துள் முகிழ்த்தது.இந்த விருப்புறுதியின் தேர்வே இன்றைய படுகொலைகளின் நீட்சியாகும்.இதுதாம் நமது பண்பாட்டு மௌனம் தந்த அரசியலாகும்.


பண்பாட்டு இடைவெளியை, மௌனத்தை உடைக்கும் எழுத்து இயக்கம்:
இந்தச் சமூக அவலத்தின் காரணமாக எழுந்த எதிர்ப்பியக்கமாக நமது கல்வியாளர்களில் அற்பமான பகுதியினர் செயற்பட்டபோது அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.எங்கள் கவிஞர்கள் சிவரமணி தன்னையே அழித்தாள் இதைக் கண்ணுற்று,கவிஞர் செல்வியோ கடத்தப்பட்டுக் காணாதுபோனாள்.இருளின் தூதர்களான ஆயுதக் குழுக்கள் இந்த் தமிழினத்தின் ஆன்ம பலத்தையே உடைத்தெறிந்து அவர்களின் போராட்ட மனதைத் தகர்த்தபோது இதை எதிர்த்துக் கவிதை எழுதிய ஜெயபாலன்,சேரன் போன்றவர்கள் இறுதியல் ஆயுத தாரிகளின் அற்ப சலுகைகளுக்காகப் பண்பாட்டு மௌனத்தைக் கடைப்பிடித்து,அந்தவகை அரசியலுக்குள் அமிழ்ந்துபோயினர்.செழியனின் அற்புத மான கவிதை வரிகள் இந்த மௌனத்தை உடைக்கப் போரிட்டுக் கொண்டது.



"யேசுவே! நீர் தேடப்படுகிறீர். யேசுவே எங்கள் தேசத்தில் நீர் தேடப் படுகிறீர்.கிறிஸ்த்துவ தேவாலயமொன்றில்உமது சீடர்களுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கவோ,மாட்டுக் கொட்டிலொன்றில் வைத்தோ,மரித்துப் போன மனிதன் எவனாவது மரண ஊர்வலத்திலோ நீர் காணப்படுவீராயின் கைது செய்யப் படுவீர்..."என்றும்,



"விசாரணையின் முடிவில் சிலுவையிலல்ல தேசத் துரோகியாக மின் கம்பத்தில் அறையப் படுவீர்" என்றும் செழியனின் எழுத்துக்கள் இந்த மௌனத்தை உடைக்கப்பாடுபட்டது.


அந்தச் செழியன் கனடாவில் இன்று மௌனமானார்!


வனத்தின் அழைப்பை எழுதி என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரமணீஸ் என்ற இயற் பெயருடைய அஸ்வக் கோஸ்இன்று தினக்குரலில் பனுவல் பக்கத்தின் பொறுப்பைக் கவ்விக்கொண்டு மௌனமானார். எங்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பி,சிவசேகரம்,கணேசலிங்கம்...இத்தகைய சூரர்களுக்கும் மத்தியல் தொடர்ந்து குரல் எறிந்து இந்த மௌனத்தை உடைப்பதிலும் மக்கள் நலன் அரசியலுக்குமாக நாம் போரிட்டு வருகிறோம்.


உதிரிப் புலி எதிர்ப்பு:


இப்போது நடைபெறும் வானொலி விவாதங்களும் அதுசார்ந்த அரசியல் காய் நகர்த்தலும் தமிழ்மொழி, இனம்,அரசியல்,சுயநிர்ணயவுரிமை,தமிழ்மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய வாழ்வை,தமிழ்ப் பண்பாட்டை,வரலாற்றை அனைத்தையும் எதிரானவோர் அரசியல் முன்னெடுப்பாகக் காண்கிறது.இந்தத் தமிழ் உதிரிப் பதிப்புகள் அல்லது விவாதங்கள் நமது வாழ்வுரிமையை எப்போதும் தமது வருவாய்க்காக விற்கத் தயாராகிறது.இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும் ,திராவிட முன்னெடுப்புக்கும் உள்ள அதே நோக்கில் செல்லுகிறது.திராவிட இயக்கங்கள் இன்று சீரழிந்த இயக்கங்களாக மூலதனத்துக்குள் முடங்கிய மாதிரித்தாம் புலிகள் முடங்கியுள்ளார்கள்.


பிராமணர்கள்போலதாம் இன்றைய புலி எதிர்ப்புக் குழுக்களுக்குள் உள்ள இலங்கையரச சார்பாளர்கள் தமது நலனுக்காக மேற்கூறிய தமிழ் மக்களின் கலாச்சார வாழ்வுக் கூறுகளையே அந்நியர்களுக்கு விற்கிறார்கள். இந்த நிலையிலும் இலங்கைத் தமிழினம் தனது அரிசியல் அபிலாசைகளை இன்னும் நம்பிக்கையோடு கனவு காணுகிறது.


சங்க காலத்திற்குப் பின் தொடர்ந்து பல அந்நிய ஆட்சிகளின் கீழ் தனது அடிமை விலங்கைப் புதுபித்துவரும் தமிழினம் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் விடுதலை,சமத்துவம்,சகோதரத்துவம்,ஜனநாயகம் என்று முழங்கிய ஆயுதக் குழுக்களாலும்,அரசுகளாலும் ஏமாற்றப்படுவது நிசமாகி வருகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்

Friday, November 23, 2007

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:5

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:5



"...பாருங்கள்!
எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று.
நான் பொய்யுரைக்கின்றேனா?
நீங்களே காண்கின்றீர்கள்.
உழவனின் மகனும்,அந்தச்
செம்படவனின் மகனும்
எங்கோ கண்காணாத இடத்திற்கு
ஓடிப்போனார்கள்.
கிழவிகள்
அவர்களைப்பற்றிக் கிசுகிசுத்துக் கதைக்கிறார்கள்:
"அவர்கள் துப்பாக்கியால் சுடுவார்களாம்!"
துப்பாக்கிகள்...!
துப்பாக்கிகளுக்கு மூளையே கிடையாது."
-இரஞ்சகுமார்.(மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு,பக்கம்:138)



சிங்கள பெளத்த சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவும்,அன்நிய மூலதனத்துக்கும் அதன் எஜமானர்களுக்கும் கூஜாத் தூக்கிகளாக மாறிய அனைத்து இயக்கங்களும், ஒருபோதும் நமது மக்களுக்கு விடுதலைக்குரிய போராட்ட வடிவங்களைத் தரப்போவதில்லை.இவர்கள் தமது நலனுக்கேற்றவாறு நம்மைப் பயன்படுத்தும் வியூகத்தோடு ஊடகவன்முறையிலீடுபடுவதை, நாம் இனம் கண்டு,;நமது வாழ்வு இனியும் அழிந்து போகாதிருக்கவும்,நமது சமூக உயிர்வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகாதிருக்கவும், நாம் யுத்தங்களையும்,ஏமாற்று அரசியலையும் மறுப்போம்.அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும்,ஜனநாயகத்துக்காகவும் மக்களாகிய நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்துவது அவசியம்.இல்லையேல், பெரிச்சாளிகள், மானுடவிரோதிகள்-யுத்த தாசர்கள்,அரசியல் கிரிமினல்கள்,இன்னபிற பிழைப்புவாதிகள்-கொலைகாரர்களால் பரப்புரையாக்கப்படும் அரிசியல் கருத்துரைகள், எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இந்தக் கொலைக்காரர்கள் ஜனநாயகம்,பன்முக அமைப்புகள்,மனிதவுரிமைகள் என்ற மிக,மிக அழகான முகமூடிகளோடு நம்மையணுகிறார்கள்,இது நம்மையின்னும் ஏமாற்றிக்கொள்வதற்கே!இங்கே, இராஜபக்ஷ முதல் பிரபாகரன்வரை நம்மைக் கருவறுப்பதைப்பார்ப்போம்.


நமது வேதனைகள் இவர்களுக்குப் பணம் ,பதவி தரும் பெரும் அரசியல் வியூகமாக மாறுகிறது.இவர்களது அரசியலில் நாம் மந்தைகளாக மாறுவதும்,அவர்களை"மாட்சிமைதாங்கிய" மனிதர்களாக மதித்துக் காவடியெடுப்பதையும் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது.இத்தகைய பரப்புரைகளை நாம் ஜனநாயகத்தின் குரெலென்று கூறிக்கொள்வோமென்றால், நம்மை நாமே புதைகுழிக்குள் புதைப்பதாகும்.எந்தவொரு அமைப்பும் நமது மக்களின் சுய அமைப்பாண்மையை விரும்பவில்லை.இவர்களெமை ஆணிவேறு அக்குவேறாகப் பிரித்தெடுத்து, தத்தமது நலனுக்காய்ப் பயன்படுத்தத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்தத் தரணத்தில் தமிழ்பேசும் மக்களின் நலன் என்பதெல்லாம் தத்தமது அரசியல் இருப்பையும்,பதவிகளையும் நோக்கிய வாதங்களாகும்.


நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்துவது அவசியம்.எனினும்,இதுவரை இந்த முயற்சி கைகூடாதிருப்பதற்கான காரணிகள் என்ன?இத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்க முடியாதபடி அனைத்துக் கட்சிகளும் முடங்கிக் கிடக்கும் அரசியல்தாம் என்ன?நிலவுகின்ற அமைப்பை மாற்றி,அதன் இடத்தில் புரட்சிகரமான அமைப்பை நிறுவும் போராட்ட இலக்கற்ற ஆளும் வர்க்கச் சார்புடைய கட்சிகளால்-இயக்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டது போதும்.இது குறித்துச் சற்றுக் குறுகிய வடிவில் பார்ப்போம்.ஏனெனில் இத்தகைய பார்வைகளை போராட்ட ஆரம்பக் காலத்திலேயே நாம் முன் வைத்தவர்கள்.இன்றைய இளைய தலைமுறைக்காவும், போராட்டத்தில் தமது உயிரையே தேசவிடுதலைக்கென்று நம்பித் தியாகஞ் செய்யும் தேச பக்த நமது சிறார்களுக்காவும் நாம் இதை மீளப் பார்ப்போம்.


இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடும் அதன் இன்றைய நிலையும்:

முதலாளித்துவ வளர்ச்சியானது மிகவும் நேரான பாதையிற் சென்றுகொண்டிருப்பதில்லை.அது பாரிய முரண்பாடுகளோடு தினமும் முட்டிமோதியே தன்னை வளர்த்துக்கொள்கிறது.இதன் வளர்சியானது தவிர்க்கமுடியாத ஒற்றைத் தேச உருவாக்கத்திற்கான முன் நிபந்தனைகளை உற்பத்திச் சக்திகள் சார்ந்து வெளிப் படுத்துகிறது.இந்த மையச்சிகக்லானது குறிப்பிட்ட எல்லை நோக்கி மிகக்காட்டமாகத் தன்னை வளர்த்துவிட முனைகையில் ஒருதேசத்துக்குள் பற்பல சிறிய நிலப்பரப்புகள் இணைக்கப் படுகிறது.இந்த இணைப்பானது முதலாளிய இராணுவப் பலத்துடன் மட்டுமல்ல பாதுகாக்கப்படுகிறது.மாறாக அதன் பொருளியல் நலனைக் காக்கும் மேல்மட்ட அமைப்பான கருத்தியற்றளத்தின் பலத்தோடுதாம் யாவும் கட்டிக் காக்கப்படுகிறது.


வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளிலுள்ள பல் தேசிய அடையாளங்கள் எல்லாம் பெருந்தேசக் கட்டமைப்பின் உந்துதலோடும்-போர்களினாலும் உள்வாங்கப்பட்டு அழிக்கப் பட்டுள்ளது.இது ஒரே தேசம்-ஒரே மொழி-மதம் என்று தேசிய வாதத்துக்குள் உழைப்பவரைத் தள்ளி அவர்களை ஏமாற்றிக் கொண்டு தன் நலனை மக்களின் பால் திருப்பிவிடுகிறது. உழைப்பவரை ஒட்டச் சுரண்டவும் -தமது தொழிற்றுறைக்கேற்ற கனிவளங்களைக் கட்டப்படுத்தவும்-தனது உற்பத்திகளின் பண்டத்தை விற்பதற்கான சந்தையை பெருப்பிக்கவும் முதலாளியத்திற்கு பாரிய மக்கட்கூட்டமும்,ஒரேதேசமும் தவிர்க்க முடியாத தேவையாகிவீடுகிறது.இலங்கையின் முதலாளியச் சமுதாயமானது எமது தனித்துவமான உற்பத்திவளர்ச்சியினாற் தோன்றிய முதலாளியச் சமூதாயமில்லை. நாமின்னுமொரு ஒழுங்கமைந்த உற்பத்திப் பொறிமுறையைக்கொண்டிருக்கவில்லை.இது எமக்கு காலனித்தவ அரசுகளால் புகுத்தப்பட்ட திடீர் சமூக மாற்றாய் தோன்றியது.நம்மிடமிருந்த நிலப்பிரபுத்தவ முறமையை எமது முரண் பாடுகள் வெற்றிகொள்ளும் முன் காலனித்துவ வாதத்தின் கொள்ளைக்கேற்ற வாறு நமக்கு இந்த அமைப்வடிவம் தோற்றுவிக்கப்பட்டது.காலனித்தவத்திற்குப் பின்னான இன்றைய நவ காலனித்துவம் தனது அன்றைய காலனித்தவ நாடுகளை புதிய காலனித்துவ நாடுகளாக- இன்னும் இறுக்கமாகக் கட்டிப்போட்டுள்ளது.இது நமது முரண்பாடுகளைத் திசை திருப்பி நமது நாட்டினது சமூகமாற்றத்தைத் தடுத்து வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. ஒமுங்கமைந்த உற்பத்திச் சக்திகளினும்-உறுவுகளதும் வளர்ச்சியற்ற குறைவீருத்திச் சமுதாயத்திடம் பாரியத் தேசிய முதலாளியம் வளர்வதுகிடையாது.மாறாகத் தரகு முதலாளியமே தோற்றுவிக்கப்படுகிறது.இதுகூட நமது இலங்கைத்தீவுக்குள் அரச முதலாளியமாகக் கட்டியமைக்கப் பட்ட வரலாறாகத்தாம் உள்ளது.இங்கேதாம், இனங்களுக்கிடையிலான பகை முரண்பாடாகப் பொருளாதார வளர்ச்சிகளின் வாயிலாகப் பங்குச் சண்டைகள் வருகின்றன(இத்தகைய பங்குச் சண்டை வரும்போதுகூடத் தமிழ் மக்கள் பக்கத்தில் தமிழ் பேசும் மக்கள் கணிசமானர்வர்கள் சாதிரீதியகத் தாழ்த்தி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாகச் சொல்கிறேன்).பங்குகள் பொருளாதாரப் போட்டிகளோடும்,அத்தகைய பொருளாதாரத்தால் நிலைபெறும் அரசில் அதிகாரத்துக்கான போட்டிகள் இனங்களுக்கிடையில் முட்டிமோதும் போது இலங்கையில் இனமுரண்பாடாக இவை எட்டுகிறது.


இத்தகைய பொருளாதார முரண்பாடுகள் கூர்மையடைந்தபோது யாழ்வேளாள மேட்டுக்குடிகளின் மேலாதிக்கத் தளத்தில் பாரிய தாக்கம் முன்னிலைக்கு வருகிறது.இவர்கள் இலங்கைப் பொருளாதாரத்தில்(இங்கே பொருள்சார்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குமே சேர்க்கப்படுகிறது.அந்தப் பங்கில்,நிதி,நிர்வாகம்,அரச பதவி,அமைச்சு,கல்வி,அதிகாரம் என்றபடி விரியும்) பெற்றிருந்த அசுரப்பலம் உடைபடுவதற்கான சிங்கள முதலாளிய வர்க்கத்தின் வியூகம் சிங்களப் பேரினவாதமாக விரிகிறது(இது பெரும் விருட்ஷமாக விரிந்து இன்று வளர்ந்து இலங்கைச் சமுதாயத்தையே படுகுழியில் தள்ளியிருக்கிறது).அது,இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில் இலங்கையின் சிறுபான்மை இனங்களைத் தலைவெட்ட எடுத்த முயற்சியில் முதலாவது பலி இலங்கை முஸ்லீம்கள்.இந்தச் சிங்களப் பேரினவாதம் ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசிய இனத்தை,அதன் தேசிய அடையாளங்களை சிதைப்பதன் மூலமாகத் தமது முரண்பாடுகளை தீர்க்க முனைந்த இலங்கை இனமுரண்பாட்¡னது முற்றிலும் பொருளாதார நலன்களின் வழியே எட்டியவை.


இத்தகைய இனவாதச் செயற்பாட்டுக்கு முகங்கொடுத்த தமிழ்த் தரகு முதலாளிய ஓட்டுக் கட்சிகளின் தலைவர்கள் தமது வர்க்க நலன்களின் அடிப்படையிலேயேதாம் சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொண்ட வரலாறு பலருக்குப் புரிந்திருக்கும்.அதாவது, இலங்கைச் சிங்கள இனவாத முரண்பாட்டிற்கு ஏதாவது சமரசம் செய்து,தாம் தொடர்ந்தும் தமது பழைய நிலைகளைத் தக்கவைக்க முனைந்தார்கள்.இது சிங்கள அரசை நிர்ப்பந்திக்கும்-அடிபணிய வைக்கும் வியூகமாகவே இருந்தது.மற்றும்படித் தமிழ் பேசும் மக்களினதோ அல்லது வறுமைக் கோட்டுக்குள் இருக்கும் பெருந்தொகையான சிங்கள-முஸ்லீம்,மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சனையை முடிவுக்குக் கொணரும் புரட்சிகர நடவடிக்கையையோ முன் தள்ளவில்லை.சாரம்சத்தில் தமது வர்க்க முரண்பாட்டைத் தீர்ப்பதற்கானவொரு நிர்ப்பந்தம் தமக்குப் பின்னால் கோசமிடும் பெரும் மக்கள் கூட்டத்தை இலக்கு வைத்து,இலங்கை அரசை ஏமாற்றத் தமக்குப் பின்னால் பெரும் பகுதி தமிழ்பேசும் மக்கள் நிற்பதாகக்காட்டி அரசைப் பணிய வைக்க முனைந்தார்கள்.இதற்காகப் பரந்து பட்ட மக்கள் சக்தியென்ற ஒரு கானால் நீரை உண்டு பண்ணவே"தமிழீழம்"தமிழருக்கான கோசமாக முன் தள்ளப்படகிறது.இத்தகைய தலைமையிடம் பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை என்பதைக் கருத்தளவில்கூட இனம்காணமுடியாதிருந்தபோது, அதன் பேத்தலான இடத்துக்கு ஆயுதக் குழுக்கள் வருகின்றன(இதை மிக நேர்த்தியாகச் செய்த முடிக்க இந்தியா அனைவரையும் உள்வாங்கிச் சாணாக்கிய தந்திரத்தை இயக்கங்களுக்கிடையில் நிலைப்படுத்தியது).

இப்போது பாரிய வலுவொன்று சிங்களப் பெருந்தேசிய வாதத்துக்கு உந்து சக்தியாக வருகிறது.தமிழீழக் கோசமானது சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் கதையாகச் சிங்கள உழைக்கும் வர்க்கத்தை ஆளும் சிங்கள பெளத்த வெறியர்களிடம் தஞ்சம் கொள்ள வைக்கிறது.இங்கே,சிங்களப் பேரினவாத அரசின் இருப்புக்கு மிக ஒழுங்கானவொரு வீச்சைத் தமிழ்த் தலைமைகளும் அதன் பின் புலிகளும் ஒத்திசைவாக இருக்கின்ற தரணங்களை இந்தியா வலுவாக்கிச் செய்து முடித்தது.சிங்களப் பேரினவாத அரசோ மிக இலாவகமாக எல்லோருக்கும் தண்ணிகாட்டும் அரச வியூகத்தைச் செய்தது.தனது இருப்புக்காகப் பெளத்த சிங்களப் பேரினவாத்த்தை அடிப்படையாகக்கொண்ட பழைய பொற்காலத்தைப் பேசியது.இது, காலவோட்டத்தில் படிப்படியாக வளர்ந்து இன்று தகர்க்கப்பட முடியாதவொரு மிகப் பலம் பொருத்திய கருத்தியல் மனதைச் சிங்களத் தரப்பில் ஏற்படுத்தியிருக்கிறது.

நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாதமாக இது உருப்பெற்றுபோது அது முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒடுக்கும் போராட்டத்தை விரிவுப்படுத்தி, உலக அரங்கில் நியாயப்படுத்தியது-படுத்துகிறது.இந்தத் தரத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடாக முன்னேறிய இவ்முரண்பாடானது இலங்கையையும் இனங்களையும் இன்றைய நிலைக்குக் கொணர்ந்துள்ளது.இந்தத் தரணத்தில் இலங்கையில் நடைபெறும் எந்தத்தரப்பு யுத்தத்தையும் எதிர்த்துக் குரல் எழாதபடி அரசும் புலிகளும் மிக நேர்த்தியாகக் காய்களை நகர்த்த இப்போதும் இந்தியா வழி காட்டுகிறது.


இங்கே, இராஜபக்ஷ அன்ட் பிரபாகரன் கொம்பனிக்கு நல்ல வாய்ப்புகள் இந்திய-உலக நலன்களால் முன் தள்ளப்படுகிறது.ஆக,இலங்கைப் பெரும்பான்மை மக்கள் சமூகத்தில்,பெளத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையின் கீழ் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு கிடக்கிறார்கள்.இங்கே,தமிழ்பேசும் மக்கள் யுத்தத்தால்படும் வேதனைகளை,இன்னல்களை,அவர்களது நியாயத்தன்மையின் வாயிலாக எழும் கண்ணோட்டத்தைக்கூட புரிந்துகொண்டு முற்போக்காய்ச் சிந்திக்கும் ஒரு சக்தியாக எழுவேண்டியச் சிங்களத் தொழிலாளவர்க்கம் பேரினவாதத்தால் முடமாக்கப்பட்டார்கள்.


இது யாரால்?


நமக்குள் இருக்கும் தமிழ் ஆளும் வர்க்கத்தால்-ஏகாதிபத்தியத் தரகர்களால்-இந்தியக் கைக்கூலிகளால் நிகழ்ந்த கொடுமை இது!



தனிநாடும்,தேசியத் தலைவரும்:



இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.புணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.இணையம் முதல் வானொலி, தொலைக்காட்சிவரை இவர்களின் ஆதிக்கம் விரிந்தபடி.இத்தகைய பிரச்சாரத்தின் உச்சபச்சக் குரலோ சொல்கிறது தமிழீழப்போராட்டத்தை-புலிகளைக் குறைந்தபட்சம் எதிர்காத நிலையில் கருத்தாடுவது அவசியமாம்.


"அனைத்தையும் தேசியத் தலைவர் வெல்வார்-அவர்காலத்தில் தமிழர்களுகுத் தனிநாடு கிடைத்துவிடும்,அவரது கையைப் பலப்படுத்தத் தமிழர்கள் எல்லோரும் முன் வரவேண்டும்" இத்தகைய வாதங்களின் பின்னே மறைந்துகிடக்கும் சமூ உளவியல் என்ன?ஒரு தனிமனிதனைச்சார்ந்து முழு மொத்தத் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் மையப்படுத்தி, அந்தத் தலைவனைச் சுற்றி மண்டியிட வைக்கும் இந்தக் காரியமானது என்ன?இது ஒரு வகையில் மக்கள் விடுதலையைக் காவு கொள்ளும் கருத்தியல் மனதை எமக்குத் தரவில்லையா?இத்தகைய குழிபறிப்புகஇகு எந்த அந்நியச் சக்தி தூண்டுகோலாக இருக்கிறது?இதன் பின்னாலுள்ள தொடர்வினை தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே "தான்" எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும்,சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது இல்லையா?. இதன் வெளிப்பாடு சமுதாயமட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காததாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம்.குறிப்பாகத் தமிழ்ச் செல்வனின் மரணத்தில் இத்தகைய கட்டங்களை நாம் கண்டோம்.இது திட்டமிட்ட பாசிசத்தின் வெளிப்பாடாகும்.


இன்று தமிழ் நிலத்துள் நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது.இதன் இன்றைய நிலை தமிழகத்தின் கடைந்தெடுத்த துரோகக் கட்சி அரசியல் தலைவர்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி "தலைவரே,தலைவரே" போடவைத்திருப்பதை நாம் காணலாம்.சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் "சுப்பர் மேன்" கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது.இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது.இப்படித்தாம் இந்தியாவால் நமக்குத் தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.


பல வருடங்களாக உலகம் பரவலாக தமிழ் தேசியத்தால் உந்தப்பட்ட மனிதர்களால் "தமிழ்தேசியத்தை"விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்,சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.இது மிகவும் மெளனிக்கத்தக்க செயலில்லை.இப்போதோ தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் நடாத்திமுடிக்க முனையும் தமிழ் ஆளும் வர்க்கமானது இந்திய உலகக் கைக்கூலியாகத் தானே முழு அளவிலாக உருவாக வேண்டுமென்பதற்காகவும்,தனது அழிவு நெருங்கினால் அதில் தோன்றும் வெற்றிடத்தில் புரட்சிக்கான விசும்பு நிலை உருவாகுமென்ற தமது எஜமான அறிவுக்கொப்ப மனிதவுரிமை வாதிகளை-முற்போக்குவாதிகளைத்"துரோகி",இந்திய-உலகக் கைக்கூலியாக மக்கள் முன் கருத்திட்டுத் தமது இந்திய-உலக எஜமானர்களைக் காத்துவருகிறது.இந்தப் பிற்போக்குச் சக்திகள்.நமது இன்றைய அரசியல் போக்கானது மிகவும் கெடுதியான-மக்கள் விரோதமானதாகவே இருக்கிறது.எவர் எந்தப் புற்றிலிருக்கின்றார்கள் என்பதே அறியமுடியாதளவுக்கு உலக நலன்களின் வேட்டைக்காடாக நமது தேசம் மாறியுள்ளது.பழைய-புதிய இயக்க வாதிகள் எல்லோரும் தத்தமது பழைய பகைமைகளைத் தத்தமக்கு வழங்கும் பங்கில்-பாகத்தில் கடைந்தேற்றக் காத்திருந்து அதை நாடிய அரசியலில் நமது மக்களின் அனைத்து உரிமைகளையும் வேட்டையாடுகிறார்கள்.இதுள் முதலிடத்தில் இருக்கவும்,பாரிய பாகத்தைத் தமதுதாக்கவும் புலிகள் செய்யும் போராட்டமோ மிகக் கெடுதியான அழிவை நமக்குத் தந்துள்ளது.இந்தக் கெடுதியான போருக்குப் பெயர்"தமிழீழ விடுதலை"ப் போர்!-பாருங்கள் இது எவ்வளவு மோசடியானது,சமூகக் குற்றமானது!!



இலங்கையின் அரசியல் போக்கு:


இலங்கையின் இன்றைய அரசியல் போக்குகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?


மேற்க்காணும் கேள்விக்கு விடை மிக எளிதானதும்,தர்க்கமானதாகும்.எங்கள் தேசத்து(ஈழம்) உரிமைகளை நிலைப்படுத்துவதற்கு-தக்கவைப்பதற்கு இந்தியாவென்ற சகுனித் தேசம் ஒருபோதும் விட்டுவைக்காது என்பதாகும்.இதற்கான பல உதாரணங்களை நாம் சுட்ட முடியும்.எனினும், உதாரணங்களைத் தள்ளி வைத்துவிட்டு நமது இனத்துக்குள்ளேயே இருக்கும் அரசியற் கைகூலிகளை இனம் காணும்போது இந்திய மேலாதிக்கத்தினதும்-மேற்குலக நலத்தினதும் முரண்கள் எங்ஙனம் நமது தேசத்துக்குள் முட்டிமோதுகின்றன என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடியும்.


தென்னாசியப் பிராந்தியத்தின் புவிசார் கேந்திர அரசியலில் கடந்த முப்பதாண்டாகக் கட்டி வளர்க்கப்பட்ட நமது குழந்தைகளின் தியாகம் சிதறிடிக்கப்பட்டு வருகிறது.எங்கள் குழந்தைகளால் நிர்மூலமாகப்பட்ட இலங்கைச் சிங்களப் பாசிச இராணவத்தின் இன்றைய வெற்றிக்குப் பின்னால் தென்னாசியப் பிராந்தியப் புவிசார் அரசியலின் உந்துதலும்,பொருளாதார ஆர்வங்களும் இருக்கின்றன.இதன் தொடர்ச்சியில் தமிழ்நாட்டினது விடுதலையின் பின்னடைவும் இருக்கிறது.


நமது விடுதலைக் கோசமானது(சுயநிர்ணயவுரிமை) சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும், இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படியாக இழந்து வருகிறது.இதை உலகச் சதி இலங்கை ஆளும் தரகு முதலாளிய ஆட்சியூடாய் கச்சிதமாகச் செய்து முடிக்கிறது.இந்தத் தொடர்ச்சியாகச் சமீபகாலமாக தமிழ் பேசும் மக்களின் இன்னல்களை இரட்டிப்பாக மாற்றிவரும் அந்நிய நலன்கள் இலங்கைச் சிங்கள அரசினூடாக ஒரு புறமும் மறுபுறம் புலிகளை முதற்கொண்டு அனைத்துச் சிறு குழுக்களையும் பயன்டுத்தித் தமிழ் பேசும் மக்களின் சுயவெளிச்சியை முடக்கிவருகிறது.எந்தக் காரணமாயினும் நமது சமுதாய வாழ்வு சின்னாபின்னப்படுத்தப்படும் கொடுமைகளை யாரும் பழிவாங்கும் அரசியலாகக் குறுக்க முடியாது.இது நம்மை அன்நிய மூலதனத்திடம் கூலிபெற்று வாழும் இழிநிலைக்குத் தள்ளிவிடும்.

நமது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சிதைத்துவிடுதலும்,அவர்களையும் வெறும் இயக்க நலனோடு பேரம்பேசத் தக்க பலவீனக்காரர்களாக்கித் தமிழர் நலனை முதன்மைப் படுத்த இலாயக்கற்ற குறுங்குழுவாகச் சிதைப்பதில் இந்திய வியூகம் மையங்கொள்கிறது.இங்கே தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கையின் முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியா ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன் படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக்காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.

இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தகவற்றொடர்புச் சாதனங்களுடாக நமது வீட்டிற்குள் வந்து வேதாந்தம் பேசுகிறார்கள்.

இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது?

பதில் மிக இலகுவானதாகும்.தமிழ்த் தலைமைக்குள் இருந்த அந்நிய ஏகாதிபத்தியங்களின் சார்பு நிலையும் அதன் வாயிலாக எழுந்த ஆயுதப் போராட்டமும்,அந்தப் போராட்டத்தைப் பயன்படுத்த முனைந்த இந்திய மற்றும் அமெரிக்க ஆர்வங்களே நமது உரிமைகளுக்கு இன்று வேட்டு வைத்துள்ளது.இதுதாம் நாம் இலங்கை அரசியல் போகக்கிலிந்ருது கற்கும் பாடம்.இங்கே புரட்சிக்குரிய சூழலைத் தடுத்தபடி அராஜகத்தைக் காத்து நிலைப்படுத்த இருவேறு அரசஜந்திரங்கள் உண்டு.அதிலொன்று புலிகள் மற்றது இலங்கைப் பாசிச இராணுவம்.இவர்களிடத்தில் எந்தத் தரப்பு மக்களினதும் நலன் ஒருபோதும் இல்லை.மாறாகத் தத்தமது எஜமானர்களின் நலனைக் காப்பதற்கான சட்டவுரிமையுடைவொரு இராணுவமாக இலங்கை இராணுவமும்,இதேயிடத்தைத் தமிழ் மக்களின் மண்ணில் கேட்டுப் பேரஞ் செய்யப் புலிகளும் யுத்தத்தில் மூழ்க, ஆயுதங்களின் பெரு விற்பனையில் சில நிறுவனங்கள் தொடர்ந்து உயிர்வாழ்கின்றன-நாமும்,நமது மக்களும் அழிவது தொடர்கிறது.



ஆளும் வர்க்க-அந்நிய யுத்தத்தை அம்பலப்படுத்தல்-எதிர்த்தல்:



இந்த வர்த்தகச் சமுதாயம் இதுவரை செய்துவரும் வன்முறைசார் போர்கள்,மென்மைசார் கருத்தியற் போர்கள் யாவும், பொருளாதார ஆர்வங்களினது வெளிப்பாடே!இவர்கள்தாம் இன்றைய சமூக உளவிலைத் தமக்கேற்றவாறு கல்விவழித் தோற்றிவைத்துள்ளார்கள்.நமது கல்விமுறையானது பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியப் பாணியிலான முறைமைகளைக் கொண்டவை.இது கொலனிய-நவகொலனியப் பொருளாதாரத்துக்கேற்றவாறியங்கும் சதியுடைய முறைமையாகும். இதன் வழி கல்வியூட்டப்பட்ட இன்றைய கல்வியாளர்களுக்குப் புலிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல் வாதிகள்,குறிப்பாக கருணாநிதி மற்றும் வை.கோபாலசாமி போன்ற அரசியல் பெரிச்சாளிகள்கூடத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக் குரல் கொடுக்கும் மக்கள் நலன்சார்ந்தவர்களே!அட மரமண்டைகளே,இத்தகைய அரசியல்வாதிகள்-இயக்கங்களின் பின்னே மறைந்திருக்கும் இரத்தக் கறையை எந்த வர்ணாத்தால் அழித்துள்ளீர்கள்?நீங்கள் எல்லோரும் படித்தவர்கள்?காலம்தாம்!இந்த நிலையில் ,உலக மூலதனத் திரட்சியானது தனது உற்பத்திச் செலவை மிக மிகக் குறைப்பதற்காகவும்,மூலவளத் திருட்டுக்காகவும் நமது நாடுகளின் இறைமைகளைக் காவுகொள்ள, நம் நாடுகளில் தோன்றியுள்ள அதிகார வர்க்கத்தைப் பயன் படுத்துவதால்,அவர்கள் தமது எஜமானுக்கேற்றுவாறு நமது மனங்களைப் பண்படுத்தப் படாதபாடு படுகிறார்கள்.இதுள் நமது கல்வியாளர்கள்கூட ஒத்தூதுகிறார்கள்.மனிதர்கள் முதலாளித்தவச் சந்தைப் பொருளாதாரத்தில் வர்க்கங்களாகப் பிளவு பட்டுக்கிடக்கிறார்கள்,இந்த வர்க்கத்தோற்றமானது ஏற்ற தாழ்வான பொருட் குவிப்பாலும், உற்பத்திச்சக்திகளின் தனியுடமையாலும் நிகழ்கிறது.இந்த நிகழ்வுப்போக்கானது மக்களை வெறும் கூலியுழைப்பு நல்கும் கருவியாக்கிவிடுகிறது.முதலாளிய அமைப்பில் உழைப்பாளர்களும் ஒருவகைப் பண்டமாகவே கருதப்படுகிறுது.இதை மனித மூலதனமாகவே பொருளாதாரத்தில் கற்பிக்கப்படுகிறது.


இந்த நிலையில் ஈழப்பிரதேசமெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் ஒழுங்கமைந்தவொரு பொருளாதாரச் சம வாழ்வைக் கொண்ட வர்க்க பேதமற்ற சமுதாயமாக இருக்கின்றார்களாவென்றால் இல்லையென்பதே பதில்.அப்போ இங்கு உழைப்பவருக்கும்,உடமையாளருக்குமான முரண்பாடுகளுண்டு.அவை குறித்தான தீர்வுக்கு தேசியப் போராட்டத்தில் என்ன திட்டவாக்கம் உண்டு?உழைப்பவர்கள் சிங்கள முதலாளிய அரசால் ஒடுக்கப்பட்ட மாதிரி ஏன் தமிழ் முதலாளியத்தால் ஒடுக்கப் பட மாட்டார்களா? எமக்குள் நிலவும் சாதியவொடுக்குமுறையை ஊட்டி வளர்த்த அடிப்படை சமூகக் காரணி என்னவாக இருக்க முடியும்? இதன் தோற்றவாய் குறித்த தேடுதலல்ல எமது நோக்கம்.காரணமேயின்றி மானுடர்களை அழித்து ஏப்பமிடும் இன்றைய போர்களெதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரண காரியத் தன்மையுண்டு. இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வரலாற்றுத் துரோம் நிகழ்கிறது.இது அன்நிய சக்திகளின் அளவுக்கதிகமான வற்புறுத்தலகளினால் இலங்கை வாழ் உழைப்பவரின் உரிமைகள் முடமாக்கப் படுகிறது.அவர்தம் வாழ்வாதார ஜனநாகயத் தன்மை இல்லாதொழிக்கப்பட்ட சூழலைத் தோற்று விக்க இந்த யுத்தம் கருவியாகப் பட்டள்ளது.



இலங்கை இனப் பிரச்சனை குறித்தோ அன்றிப் புலிகளின் மக்கள் விரோத முகத்தை இனம் காட்டிக் கருத்திட்டாலோ அத்தகைய கருத்தை முன்வைப்பவர் இனத் துரோகியாகிக் கொல்லப்படுவார்.இல்லைச் சிறையில்-பாதளா உலகத்தில் சிறை வைக்கப்படுவார்.இத்தகையவொரு சூழலை மறைத்தபடி இன விடுதலைக்காக ஏலம் விடும் அரசியல்-போராட்டம்,யுத்தம் மிகத் தந்திரமானது.இதை மறுத்து, இது மக்களின் உரிமைக்காக நடக்கின்ற தேசிய விடுதலைப் போராட்டம்,தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கான போராட்டம்-யுத்தம் என்று எந்தப் பேமானியாவது ஒரு பல்கலைக் கழகத்துக்குள்ளிருந்து வாந்தியெடுத்தால் அது ஜனநாயக நோக்குடையதாக இந்த மனித விரோத அரசுகள்-இயக்கங்களிடம் கருத்து நிலைபெறுகிறது.அவர்களது ஒத்திசைவான உச்சிமோந்த வரவேற்கும் அரசியல் நிலையாகவும்,தொடர் நிகழ்வாகும் இடம் பெறுகிறது.இது இலங்கைக்கே மட்டுமான சூழல் இல்லையெனினும்,இலங்கையில் இத்தகைய கருத்து நிலையே மிகவும் ஆதிக்கஞ் செய்கிறது.


விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் மண்ணுக்காக மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும்,தியாகமாகவும்,மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது.தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.வலாற்றில் வாழ்ந்த படுபிற்போக்கான மன்னர் ஆட்சிக் காலக்கட்டமாகட்டும்(எல்லாளன் வகையறாக்கள்) அல்லது வரலாற்றால் புறந்தள்ளப்பட்ட மத இழிவாடல் கருத்துக்களாகட்டும் அனைத்தும் புலிகளின் வம்புத்தனமான அரசியலுக்கு அவசியாமக இருக்கிறது.இது உலகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் உறவைவிட உலகப் பிற்போக்குச் சக்திகளோடு கூடிக் குலாவும்போது,நாம் இத்தகைய அமைப்பை விடுதலைக்கானவொரு அமைக்காக எண்ணிக்கொள்ளக் கருத்துக்கள் மிகவும் கவனமாக வைக்கப்படுகின்றன.அதற்காக ஆங்காங்கே தேசிய வெறிக்கூச்சலின் தொடர்ச்சியாகப் புலிக் கைக்கூலிகள் இருக்கிறார்கள்.எப்படிச் சிங்கள அரசுக்கு-இந்திய அரசுக்கு கூஜாத் தூக்கிகள்-கைக்கூலிகள் இருக்கிறார்களோ அதே பாணியில் புலிகளும் தனது பராக்கிரமத்தை இப்படிச் செய்திருக்கிறது.மொத்தத்தில் அதிகாரமையம் தனது இருப்புக்காக மனித உயிரோடு விளையாடுகிறது.அந்த விளையாட்டுக்குப் பெயர் தேசிய விடுதலை சுயநிர்ணயம் தமிழர்கள் பக்கம்.சிங்களவர் பக்கம் தேச ஒருமைப்பாடு-ஜனநாயகத்துக்கான போராட்டம்!


அரசியலில் எந்தெந்த வர்க்கங்கள் தத்தமது இலாபத்துக்காக அணி சேர்கின்றன,அவை எங்ஙனம் பொதுமக்களின் நலன்களைச் சுமந்து தமது நலன்களை உறுதிப்படுத்துகின்றன என்ற மிக இலகுவான புரிதல்கூட அற்ற சில மந்தைகளின் கருத்துகளைக்கடந்து, இலங்கையின்-தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்-போராட்ட முன்னெடுப்பில் எந்த அந்நிய நலன்களை இவர்கள் பிரதிபலிக்கின்றார்கள் என்பதிலிருந்து நமது விடுதலையை நாம் சாத்தியப்படுத்தும் நேரிய வழிகள் கண்டடைய முடியும்!ஆனால்,தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் இது கைப்பற்றிவிட்டது.கல்வி,கலை இலக்கிய,பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.



மானுட நேசிப்பும்,மாற்றுக்கருத்தும்:



மானுட நேசிப்பென்பது வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது.அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும்,மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது. இது கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று.இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும்.நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது,மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது.உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது.இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது.இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது,இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது. அதுவே மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது.இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது.இங்கு அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது. இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச்; செல்கிறது.இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது.


மாற்றுக் கருத்தாளர்கள் -தமிழ்த் தேசியத்தை விமர்சிப்பவர்கள் சிறுசஞ்சிகைகளோடு நின்றபோதே சகிக்க முடியாத இந்தத்"தேசியமயப்படுத்தப்பட்ட மனிதர்கள்,இணையத்தில் கருத்தாடிப் பல பகுதி மக்களுக்குப் புலிகளின்-சிங்கள அரசின் மக்கள் விராத அராஜகத்தை வெளிப்படுத்தும் இன்றைய இந்த நிலையை உடைப்பதற்காகப் படாதுபாடு படுகிறார்கள்.சிங்களத் தரப்பும்,புலிகளும் பழிவாங்கும் போராட்டத்தை முன்னெடுத்துத் தமிழர்தம் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கர வாதமாக-தனிநபர் பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள்.இதனால் தமிழ் மக்களின் உண்மையான "சுயநிர்ணயவுரிமை" அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது. இது எந்தவொரு ஜனநாயகப் பண்பையும்,மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது.இத்தகைய செயற்பாட்டால்-வாழ் சூழலில் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.இதை உறுதிப்படுத்தும் காரியங்களில் தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் முன்னெடுப்பாளர்களும் செயற்படுவது மிக,மிக வேதனையானது.


தமிழ்பேசும் மக்கள் இந்தவகைப் போராட்டங்களையும்,கபட அரசியல் முன்னெடுப்புகளையும் இனம் கண்டு, மக்கள் சார்ந்த போராட்டங்களைக் இயக்கவாத-கட்சியரசியலிலிருந்து பிரித்தெடுத்துப் நாமே முன்னின்று போராடும் அமைப்பு மன்றங்களைக் கட்டவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் இருக்கிறோம்.தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புதிய வடிவங்களில் அந்நிய நலன்களுக்கான யுத்தங்கள் தேசத்தினது இறைமையின் பெயராலும்,ஒரு இனத்தின் விடுதலையின் பேராலும் நடந்து,மக்களைப் பலியெடுக்கும் இந்த வகைப் போராட்ட உளவியல் ஊடுருவியிருப்பது மிக,மிக வஞ்சகத்தனமானது.இந்தச் சதிவலையை இனம் காண்பதும்,நாம் நமது தேசியவாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்வதும்-அதனு}டே நமக்கான இருப்பை நிலைப்படுத்தும் சுயநிர்ணயத்தை மீட்டெடுப்பதும் நமது ஜீவாதாரவுரிமைகளிலொன்றுதாம்.


தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்

23.11.2007

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...