Wednesday, May 24, 2006

அறுபடும் சிரசுகளும்...

அறுபடும் சிரசுகளும்,
அல்லைப்பிட்டிகளும்!


வறுமைப்பட்ட குடிகள்
விடிய மறுக்கும் தேசம்
கொடிய சுனாமி காவுகொண்ட
மழலையுடல்கள் மக்காத மண்!
நெடிய போரில் குஞ்சுகளின் குரல்வளைகள் அறுபட
வலிய பொழுதில் வந்துபோகும் சூரியன்


இந்நிலையிலும்,
ஒப்புக்கு வாழ்ந்த வெற்றுடல்களையும்
ஒருநேரக் கஞ்சிக்கு உழைக்க வக்கற்ற
உப்பு மண்ணில்
உயிரோடு புதைக்கும் ஒரு கூட்டம்!


சின்னவிழியெறிந்து
சித்திரையில் மண்ணள்ளி வந்த
சோழகத்தைச்
சற்றே பயந்தொதுங்கிப் பார்த்து
மகிழ்ந்திட்ட பாலகரும் குருதி சிந்தப்
பாதகர்கள் பாடைகட்டி
போர்தொடுத்தார் அப்பாவிகள்மீது!



எத்தனையோ இரவுகளில்
நித்திரையை வெறுத்தொதுக்கி வழிமேல் விழிதுரத்தி
விறைத்த மனத்திரையில்
விடியலுக்காய் மூச்செறிந்த
முதுமையும் குதறப்பட்டது!


குற்றுயிரும்
குறையுடலுமாய்
அறுத்துப் போட்ட
வெற்றுத் தேச மனிதர்களுக்கு
உப்பு மண்ணும் உரித்தாகவில்லை.


"வாளையுருவு,
வாழும் மனிதர்கள்தம்
தலையைக் கொய்" என்பதல்ல
இறப்பவர் அரசியல்-கனவு!


ஒரு குவளை சோறும்
ஒரு சொட்டுத் தண்ணீரும்
ஓய்வுகுச் சிறு குடிசையும்
உழைப்பதற்குக் கடலும்,கைத் தொழிலும்
இதைமறுத்து
எவர் கேட்டார் எதை?


அல்லைப்பிட்டியென்ன
புளியங்கூடலென்ன
காத்தான்குடியென்ன இல்லை அநுராதபுரமென்ன
அறுத்துப் போடும் மனிதவுடல்கள்
பாக்தாத்வரையும் பரந்தபடி...

ஆனாலும்...


அதிகாரமோ
பின்பக்கச் சுவரேறிப் பொடி வைத்துப்
பேரங்கள் செய்ய
"போர்,போர்"என்று பொழுதெல்லாம் போட்டார்
கொலைகளுக்கு முக்காடு நம்மவர்.


எதிரியின் வாசலில்
சொந்த மக்கள்தம் சிரசுகளால் கோலி
விளையாட்டு!
"தூ...மறத் தமிழரின் குறைக் கொழுந்துகளே!"
விடியாதோ உங்கள் மனதுகளில்?


தமிழ்-சிங்களத்துக் கனவுகளுக்கு
சோத்துப்போடும்
வெள்ளாடுகளாய்
மனிதவுடல்கள்.


தேசமோ
துயரச் சுமை காவி
தின்னக் கையேந்தி
தெருவெங்கும் வாழ்வு தொலைத்து
போருக்குள் புதையும்!

சிலருக்கு...

கட்டில் சுகமும்
கை நிறையப் பொன்னும்
கண்ட இடத்தில் கண்ணி வெடியும்
கக்கத்தில் துப்பாக்கியும்
ஆட்சிக்கட்டின்
அடிப் பொடிகளோடு!


எல்லோருக்கும் எல்லாம்
வேண்டுமென்றெவனோ சூளுரைக்க
எம்மவருக்குக்
கொலைகளைப் பொதுமையாக்குவதில்
பொழுதெல்லாம் கண்.


பள்ளி வாசலிலும் படுகொலை
படுக்கைப்பாயிலும் படுகொலை
கந்தனைக் கத்தரை அல்லாவை
அநுதினம் புத்தரைப் புலம்பும்
பிணக்குவியல்கள்.


இதற்காக,
அநுராதபுரத்திலும்
காத்தான்குடியிலும்
அல்லைப்பிட்டிகளை ஏலவே செய்தவர்கள்
கொள்பிட்டியில் குண்டு வைக்கலாமேதவிர
கொடி பிடித்துக் கத்தவா முடியும்?


வல்ல சிங்களத்துக்கு
வாய்த்தது தரணம்
வக்கணையாக வாருகிறது தமிழர் தலையை!
இத்தனைக்கும்
எங்கள்
இரங்கற் பாக்களும்
எடுத்துவைக்கும்...
எல்லாம் மக்கள் தலையில் நெருப்பாக!


எனினும்...

வறுமைப்பட்ட குடிகள்
விடிய மறுக்கும் தேசம்
கொடிய சுனாமி காவுகொண்ட
மழலையுடல்கள் மக்காத மண்!
நெடிய போரில் குஞ்சுகளின் குரல்வளைகள் அறுபட
வலிய பொழுதில் வந்துபோகும் சூரியன்!!!


ப.வி.ஸ்ரீரங்கன்
24.05.06

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...