யாழ்ப்பாணத்தில் தமிழ்நாட்டுச்
சினிமா கலைஞர்கள் !
“எம் காலத்தின் எல்லைகளை நாம் தாண்டிச் செல்ல கலை இலக்கியம் உந்து சக்தியாக இருக்க வேண்டும் “
யாழ்ப்பாணம் : கரிஹரன் இசை நிகழ்ச்சியும் , இளைஞர்கள் திரட்சியும் திறந்த சமுதாயத்துக்கான (Die offene Gesellschaft— Karl Poppers ) „விசும்பு நிலை அரும்புகள்“இவை ?
யாழ்ப்பாணம் /வடமாகாண மக்கள் கிழக்கிலங்கை ; தென்னிலங்கை மக்கள் போன்று திறந்த சமூகத்தவர்கள் அல்ல , என்பது கடந்த 200 ஆண்டுகால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நிச்சியம் புலப்படும் .
இறுகிய பழமைவாதக் கண்ணோட்டம் , பிடிவாதமான சாதிய/மத அடிப்படை வாதங்கள் , சிதறிய சமூகக் குழுக்கள் , பொருளாதார ஏற்ற இறக்கம் , மொழிவாரியான / பிரதேசவாதியான பண்பாட்டுக் கட்டுப்பெட்டி எண்ணங்கள் என்று யாழ்ப்பாணத்துக்கேயான சைவ வேளாள மதவாத நம்பிக்கைகள் (Fideismus) என்று , இறுகிய மூடிய சமுதாயமே யாழ்ப்பாணச் சமுதாயமாகும் .
ஆகவே , ஒரு சமூக அமைப்பு என்பது ஒத்த கருத்துடைய மனிதர்களின் கூட்டாக இருப்பினும் நிலவும் , அதிகாரத்துவத்தின் வழி சட்டவாதமாக எழுந்த அரச பலவந்தத்தின் மூலமே அது சமுதாயமாக நிலைநாட்டப்படுகிறது .
எம் , சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் நாம் கடந்த 50 ஆண்டுகளாக -அதாவது , அரை நூற்றாண்டாக இரண்டு அரச ஜந்திரங்களுக்குள் மாட்டுப்பட்டு இருவேறு நலன்களின் வழி ஒடுக்கப்பட்டவர்கள் . 2009’ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை பல்வேறு இயக்கவாத ஆயுத அழுத்தம் , பு.லி அரசு/இராணுவ ஜந்திரத்தின் கருத்தியல் -ஆயுத ஒடுக்குமுறைக்குள் கட்டாயமாக உந்தித் தள்ளப்பட்டு யுத்தகால அரசியற் பொருளாதாரத் திசைவழியில் இறுக மூடிய திறந்த வெளிச் சிறைக்குள் வாழ்ந்தவர்கள் ஈழமக்கள் .
அவ்வண்ணமே , சிங்கள அரசும் அதன் , வன்முறை ஜந்திரமும் நம்மை வலு கட்டாயமாக குறிப்பிட்ட எல்லைக்குள் , நிலப்பரப்புக்குள் தள்ளிக் குண்டுகள் போட்டு , இன ஒடுக்குமுறையை நம் மக்கள்மீது திணித்தது .
ஒருவகையில் , இஃது, ஆக்கிரமிப்பு இராணுவ ஒடுக்குமுறைக்குட்பட்ட ஈழத்துள் “ஈழமக்களும் , அவர்களது தாயகமும்” சிங்கள அரசின் இராணுவக் கொலனியாக (Sri Lankan Military Colonies) மாற்றப்பட்டு இருவேறு அரசுகளின் வன்முறை ஜந்திரங்களுக்கு முகங் கொடுக்கும் நிர்ப்பந்தத்தை தமிழ்மக்களுக்குக் காலம் வழங்கியது . இது சமூக ஒடுக்குமுறை விலங்காக எழுந்தது .
ஈழமக்களின் சகல வாழ்வுசார்ந்த சமூக அசைவியக்கமும் அரை நூற்றாண்டாக மட்டுப்படுத்தப்பட்டது . இன்று , இது மாற்றுவடிவில் பண்பாட்டு ஒடுக்குமுறையாக மெல்லமெல்ல நகருகிறது .
இதனால் , நம் மக்கள் சமுதாயம் பொருளாதார வளர்ச்சியின்மையால் கல்வி , பண்பாடு , உள வளர்ச்சி குன்றிய மூடிய சமுதாயமாக உருமாறியது .
சனநாயகம் குறுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திடம் ஒருபோதும் அக வளர்ச்சி உச்ச நிலையடையாது . ஒவ்வொரு தனி நபரும் அடுத்த நாள் உயிர் வாழ்வதைத் தீர்மானிக்கும் சகத்திகளாகச் சிங்கள அரசும் ; பு~லி அரசும் கை கோர்த்தன . இதை , நம்மிற் பலர் யோசிக்க மறுக்கும் தருணத்தில் நம்மை நாம் கடந்த ஈழப்போராட்ட வரலாற்றிலிருந்து துண்டித்துக்கொள்கிறொம் . அல்லது , நம் சமூக வாழ்விலிருந்து அந்நியமாகிறோம் .
இதைப் புரிந்து கொள்ளுங்கள் .
ஆக , நம் மக்கள் , கடந்த 2009 ‘ஆம் ஆண்டு வரை யுத்த அழுத்தத்துக்குள் மரணப் பயத்துடன்(Angst und Panik )உயிர் வாழ்ந்தவர்கள்!
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் யுத்தமே விடியலுள் நகர்ந்தது ; சிங்கள இராணுவ ஒடுக்குமுறை / இயக்கங்களது அராஜக ஒடுக்குமுறை என்று பல்வேறு அழுத்துங்களுக்கு (Im Schatten des Kriegstrauma ) முகங் கொடுத்துத் தினமும் கொலைகளையும் , குண்டுத் தாக்குதலையும் ; யுத்தத்தையும் அநுபவித்து முடங்கிக் கிடந்தவர்கள் , ஈழமக்கள் .
இந்த ஈழமக்கள் தோல்வி , இழப்பு , குடும்பங்கள் குலைவு , மரணம் , வலி, காயம் உடல் -உள , பொருளிழப்பு , பொன்னிழப்பு , குடியிழப்பு -ஊரிழப்பு ; உயிரழப்பு என்று வாழ மறுக்கப்பட்ட / மறக்கப்பட்ட எண்ணங்களோடு (Seelische Last) அழிவுகளைச் சந்தித்தவர்கள் .
யுத்தத் தோல்விக்குப் பின்பான காலம் என்பது , பல்வேறு சிதைவுகளுக்கு (die Traumata )ஒத்தடம் போடும் காலம் !
இது , உலகம் பூராகவும் நாம் கண்ட வரலாறு . இன்று , நம் மக்களும் இதற்கு விதி விலக்கல்ல .
இந்த யுத்தத்தின் நிழலுக்குப் பின்பான ஆன்ம/உளக் காயங்களது விலி (Im Schatten des Kriegstrauma) குறித்து நாம் எந்த யோசனையுமின்றி இலங்கையில் / தமிழ் நிலப்பரப்பில் “அது, நடக்குது ; இது நடக்குது “என்று விவாதிக்கின்றோம் !
இங்குதாம் யாழ்ப்பாணத்தில் இன்று பெருவாரியகத் திரண்ட மக்களின் உள அவாவை ; விருப்பை , கேளிக்கை மனதைப் புரிந்தாக வேண்டும் . மக்கள் , கூடிக் களித்துக் கொண்டாடி வலிகலைத்தல் /தணித்தில் என்று இந்த சூழலைப் புரிவதுள் கஷ்ட்டம் என்ன ?
இது , பின்போராட்டக் காலம் .கடந்த 15 ஆண்டுகளாக ஒரு தலைமுறை கனவுகளுடன் வளர்ந்து வருகிறது . அதற்கு , 20 வயது நிறைந்து உலகை மற்றவர்கள் போன்று எதிர் கொள்ள முனைகிறது . இது தமன்னாவிடம் ஈர்ப்புக் கொள்வது எதிர்ப்பால் வினைமட்டுமல்ல . இதுவரை திரையில் பார்த்த பெண்ணுடலைக் கண்ணெதிரே அது காண விரும்புகிறது . தான் கேட்டு இரசித்த பாடல்களது பாடகன் நேரே வருகிறான் என்றால் ஆவல் மேலிட அனைத்தையும் மீறி அவன் முன்னே உந்திச் சென்று விழியெறியும் சுயவிருப்பு எப்படி காட்டுமிராண்டித்தனமாகும் ?
அடக்கி வைக்கப்பட்ட மக்கள் , பல்வேறு பக்கம் அலைவார்கள் , கோயில்கள் ; குளங்கள் பக்கமும் , சிலைகள் கட்டுவதும் கும்பிடுவதும் , புத்த தரிசனத்தை நாடுவதும் , காதல் செய்வதும் , களிப்பதும் , உடைகள் , அலங்காரங்கள் ; ஆடல்கள் , பாடல்கள் என்று , மக்கள் கொண்டாட்ட நிலைக்கு- திசைக்கு நகர்வார்கள் !
இது , அவர்களின் ஆன்மீகத் (இறை நம்பிக்கை அல்ல . மாறாக , இது, மனித வரலாற்று அடிச் சுவட்டில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது இந்த உலகுக்கும் , மானுடனுக்கும் உள்ள உறவு ; உழைப்பு /படைப்பு . படைப்பு என்பதே உலகத்தைப் பற்றிய மனிதர்கள் கொண்டுள்ள சிக்கலான ஆன்மீக உறவுகளின் அதியுச்சப் பிரகடனமாகும் ) தேடல் . எனவே , ஈழமக்கள் தமது மனிதத் தன்மையை இழக்கமால் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டுவர அவர்கள் உழைப்பில் ; படைப்பில் , இரசனையில் , துய்ப்பில் ; கலா தரிசனத்தில் இருந்தே ஆகவேண்டும் . ஏனெனில் , நாம் சமூக மனிதர்கள் என்றுணர இந்தக் கலை உழைப்பு அவசியம் . ஆத்மீகம் , பண்பாடு , கலை வளர்ச்சி , இரசனை , நடனம் , பொழுதுபோக்கு இல்லாத சமுதாயம் தேங்கிய குட்டை . இந்தக் குட்டையில் ஊறிய ஈழமக்கள் இந்தக் குட்டையை விட்டுக் கடலை நோக்கி அருவியாகப் பாய்வதற்கு கலை வாழ்வு அவசியமே ; துய்ப்பு அவசியமே .
ஆக , இந்தக் கலைப் படைப்புகளை கொடுப்பவர்கள் (கலைஞன் /படைப்பாளி) புரட்சிகரமான உத்வேகங் கொண்டவர்களாகவும் , சமூகத்தைப் புரட்சிகரமாக அணுகுபவர்களாவும் இருக்க வேண்டும் . இங்குதாம் , நாம் தமிழ்நாடு /இந்திய சினிமாக் காரர்களை எண்ணி அச்சப்படுகிறோம் ! வர்க்க உணர்வு -போராட்ட உணர்வு சிதைக்கப்பட்டு நம்மை மந்தைகளாக்கி விடுமோ இந்திய அரசு என்று அச்சப்படுகிறோம் . இந்த அச்சம் நியாயமானது . ஏனெனில் , நாம் போராடப் புறப்பட்டபோது நம்மைத் தகவமைத்த இந்திய வியூகம் நம் மக்களில் நான்கு இலட்சம் மக்களை நாம் கொன்றுதள்ள வழி வகுத்தது .
யுத்தம் , இராணுவ ஒடுக்குமுறை , மட்டுப்படுத்துல் ; கட்டுப்பாடு , ஒடுக்குமுறை , சனநாயக மறுப்பு தளரும்போது மக்கள் தம் வரலாற்று மரபார்ந்த உளவியலூக்கம் மீளப்பெறுவார்கள் . இந்த அடிப்படையில் ,ஆண்-பெண் இனம் மாறி , மதம் மாறி , சாதி மாறிக் காதல் வயப்பட்டு , மணங் கொண்டு வாழ்வார்கள் . இராணுவ இளைஞன் தமிழ்ப் பெண்ணைக் காதலிப்பான் , அவனைத் தமிழ்ப் பெண் - முசிலீம் பெண் காதலிப்பாள் ; கல்யாணஞ் செய்வாள் . கூட்டுப் பண்பாட்டை நுகர்வார்கள் ; கலைகளை ; கேளிக்கைகளைத் தேடி ஓடுவார்கள் . இது, மானுட நடாத்தை .
ஆக , “சிங்களப் பெண்ணே வா ; தமிழ்ப் பெண்ணே போ “ என்றெல்லாம் பாடி மாறிக் கல்யாணஞ் செய்து , சமூகம் பன்முகத் தன்மை பெறும் .
ஓர் கலப்பு மக்களினம் என்பது அழகியது . பல்லினப் பண்பாடு (multiculturalism) என்பது யுத்தத்தின் பின்பான காலத்தோடு(Postwar period) அதிகம் ஊக்கமுற்றுச் செயலாக்கம் பெறுவது .
இதுதாம் , சமுதாயத்தின் பிணியகற்றியாக என்றும் மக்களால் உள் வாங்கப்படுவது .
இதைப் புரிந்தால் , “எந்தச் சிலைகள் ; மதங்கள் , இனங்கள் -சாதிகள் ; பிரதேசங்கள் எங்கு கலந்தால் உனக்கு என்ன-எனக்கு என்ன ?” என்ற உலகப் புரிதல் , உழைப்பால் ஒன்றுபடுதல் புரியும் .
தனித்த குட்டைகள் , இனிமேல் எங்கும் கிடையாது . கிணற்றுத் தவளைகள் அனைத்தும் மேல் நோக்கி நகர்ந்து வெளியேறும் . இதுவே , சமூக அசைவியக்கம் .எல்லாம் , மாறும் ; மாற்றப்படும் . இது, காலத்தின் விதி ! எனவே , கலை இலக்கியம் ; சினிமா , ஆடால் பாடல் எல்லாம் , எங்கும் பரவட்டும் ,மக்கள் மகிழ்ந்திருக்கட்டும் . அதுவே , ஆற்றலுள்ள சமூதாயத்தைப் படைக்கும் . ஏனெனில் , இலக்கியம் என்பது „ Second Nature of life „ ஆக , இரண்டாவது இயற்கையைக் காப்போம் ; வாழ்வோம் .
—ப.வி.ஶ்ரீரங்கன் 10.02.2024
1 comment:
உங்கள் கட்டுரையின் உள்ளடக்கத்தை வரவேற்கிறேன். ஆனால்...இன்றைய ஈழமக்களின் உண்மையான மன ஓட்ட்ங்களையும்...அவர்களது இழப்புகளையும் புரிந்து செயலாற்றும் எண்ணங் கொண்டவர்களால் மட்டுமே..அவர்களுக்கு உளம் மற்றும் பொருளாதார வழிகளில் உதவ முடியும் என்பது என் எண்ணம். ஆனால்..இன்று அங்குள்ள நிலையோ வேறாக உள்ளது... அதிலும் குறிப்பாக... கோத்தபாய அரசு வீழ்ச்சி கண்டா பின்னர்...எமது புலம் பெயர் குழுக்களின் மனங்களில்...கூர்மை பெற்றிருப்பது....எப்படியேனும்...எதனைக் 'காட்டியாவது'... அந்த மண்ணில் அநாதரவாக நிற்கும் அபலைகளின் மனங்களைக் கவர்வது...அதே நேரம் தங்களை மீண்டும் சொந்த மண்ணில் பலப்படுத்துவது...இந்த இரு வழிச் சித்தாந்தத்தோடு தான் இப்போதைய நிகழ்வுகள் நடை பெற்றுவருகின்றன. இதய பூர்வமாக அல்ல... அதற்கு...அவர்களது 'பொருள்' தேடிய வழிகளும்...அதனை இப்போது -அதாவது 2009 முதல் அல்லலுற்று வாடும் மக்களின் துயர் குறித்து இப்போதுதான் அறிந்தவர் போல் அவர்கள் 'அடிக்கும் ஆரியக் கூத்துகள்' புலப்படுத்தி நிற்பதாகவே படுகிறது.எனவேதான் .... அவற்றால் ..சிலருக்கு ஓரளவுநன்மைகளேற்படலாம் என்னும் நிலை உள்ள போதும்...சிலரது கண்டனங்களும்...எதிர்ப்புகளுக்கு உள்ளாவதாக நினைக்கத் தூண்டுகிறது..
கரை படிந்த கரங்களுக்குரியவர்களால் தங்கள் 'கண்ணீர்' துடைக்கப்படுவதைக் கூட ஈழ மக்கள் விரும்புவதில்லை போலும்.!
Post a Comment