இன்றைய இலங்கையின் இனப்பகை அரசியல்-தமிழ்பேசும் மற்றும் சிறுபான்மையினங்களது அனைத்து முரண்பாடுகள்,அரசியல் அபிலாசைகள்அதன் வழியான ஒத்துழையாமை-மறுப்பு அரசியல்,இனவொடுக்குமுறை-பகையெல்லாம் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தும் அரசியலாகப் புத்தபிக்குகள்,மற்றுஞ் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களைத் தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடாத்தும் அரசியல், நிச்சியம் நமது மக்களது நலனின்பாற்பட்டதல்ல!
இது,மீளவும் அந்நிய நலனுக்கானதென்றே கருத வேண்டியிருக்கிறது.
சீன-இலங்கை அரச வியூகத்துள் இனங்களுக்கிடையிலான ஒரு மொன்னைத்தனமான ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் முன்னிலைச் சோசலிசக்கட்சி,மற்றும் அதன் சமவுரிமை இயக்கம் முன்னெடுக்கும் அரசியல் மாறிவரும் பொருளாதாரச் சாய்வில் இலங்கைச் சீன வியூகத்துக்கு அவசியமானது.இதை உடைத்து மேற்குலக நலன்களை அறைவடை செய்யும் ஒரு காட்டுமிராண்டித்தனமான அரசியலை-அமெரிக்கச் சீ.ஐ.ஏ.க்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்கும் தமிழ்நாட்டுச் சீமான் வகைப்பட்ட அரசியலது நோக்கம் மீளச் சுவிட்ச்சர்லாந்தில் மையங்கொள்கிறது.
இது,ஆபத்தான காலம்.
இலங்கையின் அனைத்து மக்களுக்கும்,இறைமைக்கும் சாவால்விடும் அந்நிய லொபிக் கட்சிகளால் இலங்கை மீள இரத்தக்களத்தைக் காணப்போகிறது.
இதுதாம் மேற்குலகத்துக்குத் தோன அரசியல்.
அதைத் தமிழ்நாட்டு சீமான் வகைப்பட்ட அரசியல் மிக நுணுக்கமாக நம்மைச் சொல்லி,நமது பெயரால் அமெரிக்காவுக்கான அரசியலைச் செய்கிறது.
சலிப்புத்தான் வருகிறது.
மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.
இது,சதி நிரம்பிய காலம்.
இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?
தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.
மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது, சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு "சட்டம்-ஒழுங்கு" ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.
இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.
இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.
இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.
ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது.
இலங்கைக்கானவொரு மேட்டிமை அரசானது காலத்துக்கு முந்தியதானதாகவே இருக்கிறது.
இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ்நிலைக்குள்ளிருக்கும்போதே அதைத் துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர். அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.
இதன் தொடர்ச்சியே தமிழகத்தில் தமிழினவாதப் பிழைப்புவாதக் கட்சிகளது வழியில் தொடர்கிறது.இத்தகைய இனவாதக் கட்சிகளை மெல்ல ஊட்டி வளர்க்கும் அமெரிக்கச் சி.ஐ.ஏ.வும் இந்திய அரசும் போடும் நாடகமெல்லாம் எந்த வழியிலும் நமக்கு விமோசனம் தரப்போவதில்லை!இலங்கையின் குடிகள் தமக்குள் மீள, மோதும் காலத்தைத் தீர்மானிக்கும் சதியைத் தயாரிக்கும் அந்நியச் சக்திகளை வெல்லும் புரட்சிகரமான அரசியலை இலங்கை ஏலவே இழந்துவிட்டது.
ப.வி.ஸ்ரீரங்கன்
18.03.2013
1 comment:
ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.
Post a Comment