ஈழவர் வாழ்வு...
எப்பொழுதினும்
எந்தக் கனவைக் காண நேரிடினும்
அவை குருதிகொட்டும்
சிதறிய சதைப் பிண்டத்தோடு
சொல்லும் சேதிகள் தூக்கத்தைக் கெடுத்த
அதே பொழுதுகளாய்
தமிழர்களின் முற்றத்தில்
வந்து உறுமும் தீர்வுப் பருவக்காற்று
பாடை கட்டியே
வெறுத்துப்போன கரங்களோடு நமது பெரிசுகள் ;
பல்லைக் கடிப்பது தினமும் தொடர்ந்தபடி
எத்தனை நாளைக்குத்தாம்
இது வாழ்வாய்?...
வட்டமேசையிலிருந்து
திம்புபோய் பின்பு
நோர்வே தாய்லாந்து
சுவிட்ஸ்சர்லாந்து என்று தீர்வுதாம்
கட்டாக்காலி எருமையாக அலைகிறது
இந்தத் தேசங்களில்
செம்பு நீரில் வயிறு நிறைத்தவர்களும்
அன்று செத்துக் கிடப்பதற்கே
செல்லடி பட்டுக் கொண்டதும்
சொல்லாத அந்தத்"தர்மங்களால்"தாம்!
இவற்றையெல்லாம் சகசமாக்கிய
சொத்துக் கூட்டம் சொல்லும் கதைகளும்
போடும்"தர்மங்களும்"இந்தத் தேசத்தில் நிரந்தரமாய்
குடிசைகளின் கூரை ஒழுக்காய்
அதிகாரத்தைக் கொட்டித் தீர்க்க
ஆத்தைக்கும்
அவள் மடியுள் கிடக்கும்
"சாணைச் சேலைக்கும் "அடுப் பெரிக்க
அஞ்சு வயதில் ஆனாவுக்கு விடுப்பு வைத்து
அள்ளிய கல்லுகள் கஞ்சியக் கான காலமாச்சு -ஈழ மண்ணுள்!
கொஞ்சிய ஆத்தையின்
எச்சில் ஈரலிப்பு உலர்வதற்குள்
கொள்ளி வைத்த பிஞ்சுகளது கனவுகளுக்கு
தேச விடுதலைக் கோவணங் கட்டிக் கொண்டோம்
தெருக் கோடிகளில்
அவர்களைப் பேப்பர் பொறுக்க வைத்து!;
வயல் வனாந்தரத்துள் சல்லிக் கற்கள் பொறுக்க வைத்தும்
ஈன்ற சாணம் காய்வதற்குள்
எடுத்துச் செல்லும் சில்லறையாய்
ஈரச் சாணத்துள்ளும் ஈழவர் வாழ்வு...
எல்லாந் தொலையினும்
எவருக்கும் உணர்வு மரத்தறியாதவொரு
உலகம் இன்னும் வசப்படவில்லையடி பாப்பா!
உருவங்களுக்குள் செதுக்கப்பட்ட
எல்லாத் தர்மமும்
இருந்த தடயம் விலத்திக் கொண்டிருப்பினும்
யுத்தத்தின் கொடும் முகங்களைத்
தரித்திருக்கும் தேசத்தின் உயிர்ப் பொதிகளை
எவரும்
திருடிவிட முடியாத வன்னிமண்!
மனிதக் கலையுண்ட
அந்நியத் தேசங்களது யுத்த அரசியலோ
அள்ளிய உயிர்களையும்
அரிவரிக் கணக்கு வைத்து
ஐ.நா.வுக்கு ஐந்தொகை தயாரிக்கும் காலமடா
இஃது தம்பி!
ஶ்ரீரங்கன்
10.03.2013
No comments:
Post a Comment