Saturday, January 05, 2013

புலத்து இயக்க அராஜக வாதிகளது...

புலத்து "இயக்க" அராஜக வாதிகளது 
உளவியல் சார்ந்த அரசியலும், இலங்கைப் புரட்சியும்(?!)


திரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்தப் புரட்சி-போராட்டம்,புதிய-பழைய ஜனநாயக முன்னணி என்றெல்லாம் திடீர்க் கட்சிகள் கூட்டுகளெல்லாம் புலம்பெயர் தளத்தில் கட்டிப் பத்திரிகை வெளியீடு,புத்தகவெளியீடு செய்து புரட்டு விடுவதில்"தடைகளைத்தாண்டிப் பத்திரிகைகள்" இலங்கையிலிருந்து வருகிறதாம்! கடந்த கார்த்திகை 2012 இல் "மாவீரர்" தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து மாணவர்களைத் தமது அந்நிய எஜமானர்களது வலையில் வீழ்த்தி அப்பாவி மாணவர்களைக் கலகஞ் செய்யத் தூண்டிவித்தவர்கள், அந்தக் கலகத்தை மாணவர் எழுச்சி,மக்கள் எழுச்சியெனக் குரல்கொடுத்து இலங்கையிலொரு சதி அரசியலைக் கட்டவிழ்த்த இந்தக்கூட்டம் அம்பலப்பட்டுப் போனபின் இப்போது அந்தச் சதியின் பலாபலன்களை போலிக்கு மறுத்து ப் "பல்கலைக் கழகங்கள் இராணுவ மயமாகிறதென்று" ஓலமிடுகின்றன. இரணுவவாதத்தைத் தொடர்ந்திருத்தத் தமது எஜமானர்களது கட்டளைக்கிணங்கக் காற்றியமாற்றிய இவர்கள்,தம்மைத் தருணம் பார்த்துத் தொடர்ந்து அம்பலப்படாமற் பார்த்துக்கொள்ளவிப்போது புரட்சிகரப் பத்திரிகை-கட்சி,தடைகளை மீறி வெளிக்கொணர்வதாகச் சுத்திக்கொண்டு புரட்டுப் புரட்சி பேசுகிறது.


இது,ஏலவே எமக்குக் காடாத்திக் கருமாதி செய்த  தமிழீழப் போராட்டத்தின் வியூகத்திலிருந்து பெரும் அராஜகவாதிகளாகிய இயக்கவாத மாபியாக்களின் அதே ஏவற்படைச் செயலாகும். திடீரெனக் கட்சி கட்டி "மத்திய குழு" மண்ணாங்கட்டியெனத் தம்மைத்தாமே மேய்ப்பர்களாக்கும் கடந்தகால உளவியலது தெரிவைவிட்டு, வெளியில் வரமுடியாது மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்கான இயக்கவாத மாயயைத் தொடர்ந்திருத்தி வைத்தபடி கருத்தியல் ரீதியாக மக்களை மொட்டையடிக்கும் இத்தகைய குறுங் குழுக்களது புரட்டுவாதமானது நமது மக்களுக்கெதிரான சக்திகளோடு கைகோர்த்திருக்கிறது. எங்கேயும்-எப்படியும் உருட்டிப் பிரட்டி, இட்டுக் கட்டித் திடீர்க் கட்சி கட்டிக்கொண்டு புரட்சியைப் பேசும் இந்த உதவாக்கரைகளை இனங்கண்டு நிராகரித்துவிடவேண்டும். இவர்களே இலங்கையின் சமூக மாற்றத்துக்குக் குறுக்கே அரசியலொன்றைச் செய்கின்றனர்.அது காலத்துக்கு முந்திய "புரட்சி" பேசி இலங்கைத் தேசத்தின்-பெரும்பகுதி மக்களின் விடுதலையை முளையிலேயே கிள்ளியெறிகின்றனர்.


நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், தமிழீழப் போராட்டஞ் செய்த இந்த இயக்கங்களால்-குழுக்களால், அவர்தம் துப்பாக்கி முனையால்  அச்சத்துக்குள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள்-கொலை செய்யப்பட்டார்கள். இலட்சக் கணக்கில் படுகொலை செய்யப்பட்ட இந்தத் தமிழ்பேசும் மக்களது இன்றைய அவல வாழ்கையை வைத்துப் பிழைக்க முனையும் அனைத்துக் கயவர்களையும் இனங்காண வேண்டும்.இரயாகரன் கும்பல்போன்ற பல நூறு கும்பல்கள் புலத்திலும்-நிலத்திலும் நிறைந்திருக்கிறார்கள்.இவர்களை ஆட்டிப்படைக்கும் அந்நிய-இலங்கை ஆளும் வர்க்கங்களின் நலன்கள் இவர்களை அராஜகவாதிகளாகவும்,இயக்கவாத மாயைக்குட்பட்ட ஆயுததாரிகளாகவும் தொடர்ந்திருத்தி  வைத்துக்கொண்டிருக்கிறது.







இவர்களால் அன்றுமின்றும் தமிழ்பேசும் மக்கள் அந்நியச் சக்திகளுக்கும்,சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்-படுகிறார்கள். இந்த வாய்ப்பைச் சரியாகக் கணித்தியங்கும் சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்த்தெடுத்து வரும்போது, இவர்களோ தமிழர்களை வெறும் உணர்ச்சி வழி சிந்திக்கும் கூட்டமாகிச் சீரழித்தார்கள்.இன்றும் அதிலிருந்து அணுவளவும் பிசகாத கூலிப்பட்டாள வேலையைச் செய்வதில் போட்டியிடுகின்றனர்.இதுள் கடந்த 25 ஆண்டுகால அநுபவத்தையிவர்கள் பெற்றிருக்கின்றனர்!


இன்றைய நிலையிலோ இத்தகைய புலத்து-நிலத்து மாபியாத்தனமான ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டு வருகிறது.


இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் பல இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது! இதுதாம் இலங்கைத் தேசத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும்  கொடுமை! இத்தகைய வாழ்வை நமது மக்களுக்குள் திணித்தவர்கள்,மக்களது சொத்தை-உயிரைப் போராட்டம்-புரட்சி-தமிழீழம் சொல்லிக் கொள்ளையிட்டவர்களேதாம் இன்றும் மக்கள் நலனெனக் கதைவிட்டுச் சுக வாழ்வுக்காகச் சொந்த மக்களையே நீண்ட துயருக்குள் தள்ளுகின்றனர்.இதை மிகக் கறாராகப் பயன்படுத்தும் இலங்கை-இந்திய ஆதிக்க வர்க்கமானது இவர்களால் தூண்டப்படும் அனைத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது.அதன் தேவைக்கேற்ப இத்தகைய குழுக்களைத் தொடர்ந்து நிதியூட்டி வளர்க்கின்றன அந்நியத் தேசங்கள்.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள், புரட்சியை முறியடிக்கும் தந்திரங்களென ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது. இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமது மக்களின் ஆளுமை சிதறி, நாம் அழிவுற்றோம்.அன்று, ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப் படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த  முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள். இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புலத்து ஆயுதக் குழுக்கள்(இரயாகரன் குழுக்களையொத்த பல பிரிவுகள்) தமது சுய நலனுக்காக நம்மை ஏமாற்றப்"போராட்டம்"என்றும்,வெகுஜனப் பத்திரிகையென்றும் அந்நிய வியூகங்களைப் புரட்சியின் பெயரால் நமக்குள் கொண்டு வருகின்றன.இது,நிலத்து மக்களின் அடிமைத்தனத்தைத் தொடர்திருத்தும் சதியரசியலாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
05.01.2013

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...