Monday, December 05, 2011

பிச்சை வேண்டாம்...

பிச்சை வேண்டாம்,நாயைப்பிடி:புலிகளது போராட்டஞ் சரியானது!

" மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாகத்தாமிருந்திருக்கிறது.இதைப் புரியாதிருக்கும் ஒரு காலத்தை இனிமேலும் தக்கவைப்பதற்கு எல்லாத் தரப்பும் அதி சிரத்தையெடுத்தபடி "தேசிய உரிமை"பேசுகின்றன."


னவொதுக்குதலுக்கும்-ஒடுக்குமுறைக்குள்ளாகுமொரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் எதிர்ப்புப்போராட்டமென்பது, அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருதே முன்னெடுக்கப்பட வேண்டும். சுயநிர்ணய-விடுதலைப் போராட்டமென்பதைத் தவறான வகையில் "தமிழீழ விடுதலை"என்ற கோசத்துக்குள் உட்படுத்தித் தமிழர்களது சுயநிர்ணயவுரிமையையே அழித்த அந்நியத் தேசங்கள் புலிகளது வரவினூடாகச் சாதித்த இந்த த் திட்டமிடப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கெதிரான வரலாற்றுப் பழியானது நமது மக்களையும் இளைய தலைமுறையையும் மீளவும் ஏமாற்றிவிடும் சூழலொன்றைத் திட்டமிட்டுவுருவாக்குகிறது.இன்றைய ஆளும் வர்க்க-அதிகார நிறுவனங்களது கருத்தியல் தளத்தை உருவாக்கும் ஊடகங்களை மெல்லக் கவனிப்பவர்களுக்கு இந்தவுண்மை எப்போதும் முகத்தில் ஓங்கி அடித்தே தீரும்! முள்ளி வாய்க்காலுக்குப் பின்பு புலிகளது விசுவாசிகளில் பலர் போதகர்களானார்கள்.அவர்களுக்குத் தலைமைகொண்ட கே.பி. மக்களுக்குச் சாப்பாடு போதுமெனவும்"அபிவிருத்தி"யே சுயநிர்ணயமென்றும் வகுப்பெடுக்கும்போது,அவரது தலைமைக்குட்பட்ட கருத்துக் குட்டிகள் சொல்வதென்னவாக இருக்கும்?

இதில் நிலாந்தன் விதிவிலக்காக முடியுமா,அல்லது தமிழ்ச் செல்வன் துணைவி விதிவிலக்காக முடியுமா?ஏன் முக நூல் வட்டத்துத் தேசிய ஆர்வலர்கள் விதிவிலக்காக முடியுமா?இந்த விதிவிலக்கு மக்களுக்கான அரசியலைப் பேசுவதென்பதில் மையங்கொள்கிறது!

சில வியூகங்களும், அந்நிய லொபிகளும்:

1: புலிகளது தவறுகளை,போராட்டச் செல்நெறியின் பாரிய ஊசலாட்டத்தைச் சரியானதெனவும்,மக்களை வன்னியில் கட்டாயமாக மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதும்,பலம் பொருந்திய இலங்கைப் பாசிச இராணுவத்துக்கு எதிராகப் போராடும்படி முன் நிறுத்திப் பலிகொடுத்ததும்,முகம்கொடுக்க முடியாது பின் வாங்கியவர்களைப் புலிகள் தண்டித்துச் சுட்டுக்கொன்றதும்,விடுதலைப்போராட்டத்தில்-தேசத்தைக் காக்கச் சரியானதென விவாதிக்கும் கருத்தை உருவாக்கல்.பிரபாகரனைத் தொடர்ந்து உயிர்வாழுவதாகவும்,அவர் ஒரு மகத்தான மனிதரெனவும்,தேசிய விடுதலையைத்தப்புத் தவறுமற்று முன்னெடுத்தவராகவும்,தமிழ்த் தேசியத்தின் குறியீடாகி வைத்துக்கொள்வதும்,

2:அக்கருத்துக்கு நியாயமாக,பாசிசக் கிட்டலரை எதிர்த்துப் போராடிய இருஷ்சியச் செம்படைகளை ஒப்பீடு செய்து,புலிகளது தவறுகளையும்,மக்கள் விரோதத்தையும் நியாப்படுத்துதல்.புலிகள் சரியான பாதைகளின்வழியேதாம் போராடியதாகக் கருத்துக்கட்டி, மீள ,மீள நம்மை ஏமாற்றுதல்,தவறான பாதையின்வழியே நமக்குப் போராடக் கற்றுக்கொடுத்து இறுதியில் தோற்கடிக்கத்தக்க சூழலை உருவாக்கிக்கொள்ளல்.


மேற்கூறிய வியூகத்துக்கிணைவாக,பல்கலைக்கழக மாணவர்களை,உசுப்பேத்தித் தமிழ்பேசும் மக்களை மேலும் ஒட்ட மொட்டையடிக்கும் அந்நியச் சக்திகளது வியூகமானது நிரந்தரமாகத் தமிழ்பேசும் மக்களை உணர்ச்சி அரசியலுக்குள் கட்டிப்போடுவதில் மிக விவேகமாக முன்னேறுகிறது.இது முள்ளி வாய்காற் படுகொலைகளுக்குப் பின் மிகச் சாதுரியமாகக் கருத்தியலை முன்வைத்து நகர்கிறது.இதன் பின்னே யார் இருக்கிறார்கள்,இதைத் உந்தித் தள்ளும் பொருளாதார ஆர்வமென்ன?சிந்திக்க வேண்டும்!

இதைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களை நாம் உருவாக்க வேண்டும்.

புலிகளது தவறுகளைச் சரியானதென நிறுவிக்கொள்வதால் என்ன நிகழும்?

இந்தக் கேள்விக்குப் பெரிதாகச் சிந்திக்க தேவையில்லை.தவறுகளைத் திருத்திக்கொள்ளாதவரை நமது தேர்வுகள் தப்பாகவே இருக்கும்.சதா படிக்காமல் ரோட்டுச் சுத்திவிட்டுத் தேர்வில் தோற்ற மாணவர்களை"இல்லை நீ செய்தது சரி"உனக்கு எதிராகப் பரிசோதகர் மார்க்ஸ் போட்டுவிட்டான் என்ற கதையாகவே புலிகளது தவறுகளைச் சொல்லிக்கொடுக்கும் இன்றைய தலைமுறைக்கு, உலகப் போராட்டங்கள், விடுதலை-புரட்சியின் புறநிலைமைகள் குறித்து எந்தவிதப் புரிதலும் அவசியமில்லாதபடி "ஒரு பொறி"க்காக மக்கள் காத்திருப் பதாகவும்"திடீர்ப் புரட்சி"ரெடி எனும்படி உலகம் புரிந்து போகிறது. இதுதாம் ஆபத்தானது!

புலிகளது தவறுகளைக் கண்டுகொள்ளாதிருக்கவும்,அவர்களது தியாகங்களை மகத்துவப் படுத்தலூடாகவும்,போராட்டத் தவறுகள் மறைக்கப்படுகின்றன.இந்த வரலாற்றுத் தவறுகளை நியாயப்படுத்துவதனூடாக மீளவும் புலிவழிப் போராட்டச் செல்நெறியும் மக்களைப் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தி இயக்கவாத மாயைக்குள் கட்டிப்போடுவதால் புலிகள் அழிந்த இந்த வெற்றிடத்தில் உருவாகப்போகும் புரட்சிகர அணிதிரட்சிக்கெதிராக மக்களைத் திசை திருப்புவதும்,தொடர்ந்தும் உணர்ச்சி வழிப்பட்ட தேசியப் பெருமிதத்தைப் புலிக்களுக்கூடாகக்கட்டி, அவர்களை அதன்வழி சிந்திக்க வைப்பதுமே அந்நியச் சக்திகளுக்கு அவசியமாகவிருக்கிறது.குறிப்பாக இந்திய ரோ இங்ஙனமே செய்யத் தூண்டுகிறது.

இதனால்,அந்நியச் சக்திகள் அடையும் பலன், பல வடிவங்களிலானது.அவர்கள் இருவிதமான தந்திரத்தில் இளைய தலைமுறையைத் தகவமைத்து வருகிறார்கள்.அவை கீழ்வரும்படி அமைகிறதென அண்மைய முகநூல்-இணைய ஊடகக்கருத்தாடற் போக்குகள் நிரூபிக்கின்றன.

முதலாவது வகை:

1: புலி அற்ற தமிழ் அரசியற்பரப்பில் ஜனநாயக நீரோட்டம் அரும்புவதை(பல்தரக்கருத்தாடல்,வெளிப்படையான பொதுத் தள அரசியல்,குடிசார் அமைப்புகளது முகிழ்ப்பு,மக்கள் பல் முனைக் கருத்தாக்கங்களால் உந்தப்படல்,உளரீதியாகச் சமூகவுணர்வை புறநிலையில் இருந்து பெற்று அதையே மீளத் தகவமைத்தல் போன்றவை)தடுத்தல்,

2:போராட்டவுணர்வுமிக்க தலைமுறைகளது சிந்தையில் புலிகளது கருத்தியலை மீளத் தகவமைத்துத் தேசத்தைக் கட்டும் அபிலாசையை சுயமாகத் தீர்மானிக்கும் உணர்வை அடியோடழித்தல்,

3:நண்பர்கள் யார்-எதிரிகள் யார் என்ற கேள்விக்கு விடை தெரியாதிருப்பதும்,தேசிய விடுதலையை ஏகாதிபத்தியத் தயவில் வென்றெடுக்கும் லொபி அரசியலைத் திட்டமிட்டு விதைப்பதற்காகவேனும் புலிகளது தோல்விகளைத் தப்பான போராட்டச் செல்நெறியைச் சரியானதெனக் கட்டியமைத்துக் கருத்தாட வைத்தல்,இதன்வழியாக இளைஞர்களை மீளவும் புரட்சிகரமான உணர்விலிருந்து அந்நியப்படுத்தித் தலைமை வழிபாடுடையவொரு தலைமுறையாக்கிக் கொள்ளல்(இது பெரும்பாலும் ஓட்டுரகச் சிந்தனையின் மறுவடிவமான இயக்கவாதக் கட்டுமானமே),இதற்குத்தோதாக அந்நியச் சக்திகள் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல்.இதைத் தேசிய விடுதலை,தமிழ்பேசும் மக்களுக்கான நியாயம் கிடைப்பதற்கான வழிமுறையென வகுப்பெடுத்துக்கொள்ளல்,இதன்வழி அந்நியச் சேவைக்குத் தகுந்த அடியாட் படைகளை மீளத் தகவமைத்துக் கொள்ளல்,

4:பலதரப்பட்ட தளத்திலிருந்து புலிக்கு ஆதரவான சக்திகளைத் தொடர்ந்து உருவாக்குதல்,இது பல்கலைக்கழக மாணவர்களிலிருந்து பாட்டாளிவர்க்கம்வரை திட்டமிடப்பட்ட சுழற்சி ரீதியான கருத்தியல் உருவாக்க நிகழ்ச்சி நிரலைத் தயார்ப்படுத்திக்கொள்ளல்,வர்க்க உணர்வு பெறும் சமூக வேலைத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்காதிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதும்,புரட்சிகரமானவொரு கட்சியின் உருவாக்கத்தைத் தொடர்ந்து சிதறிடிப்பதற்கான புலிவழித் தேசியத்தைப் பரப்புதல்-புலிகளைத் தியாகிகளாக்கி மக்களிடம் ஒருவித மாயையைக் கட்டியமைத்து,உரிமைகளை மழுங்கடித்தல்,

இதன்வழியாக ஒரு தேசிய இனத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியான உணர்வைச் சிதைத்து, அவர்களை வெறும் இனக் குழுவாக்கும் வன்மையான போக்கை,மென்மையான முறையில் நிறுவிக்கொள்ளல்.

இரண்டாவது வகை:

இந்த இரண்டாவது வகையானது எப்பவுமே,புலிகளை விமர்சித்தபடி,போராட்டம் என்பது இனிமேல் சரிவாரதென்ற தோரணையில் "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி",என்ற கோசங்களுக்கமையக் கருத்தியலைப் பின்னிக்கொள்ளும்.

இன்று நிலாந்தன் போன்றவர்களது கருத்தானது இங்ஙனமே கட்டியமைக்கப்பட்டுவருவதில் அந்நியச் சக்திகளது இராண்டாவது வகையான அணுகுமுறை இங்கு மையங்கொள்கிறது.இதுதாம் சாணாக்கிய தந்திரமாகும்.இதை உரைத்துப்பார்ப்போமா?

1:புலிகளது முன்னால் உறுப்பினர்கள்,விசுவாசிகள்,அவர்களது அரசியல்-பிரச்சாரகப் பரிவுகளிலிருந்து தெரிந்தெடுத்த நபர்களைவைத்து இத்தகைய போக்குக்குச் சார்பான கருத்தியலை உருவாக்குதல்,

2: மாற்றுக் குழுக்களுக்குள் இருந்து மலினப்பட்ட சக்திகளை(வருவாய்க்கேற்ப இயங்கிக்கொள்ள முனையும் போலி-பினாமிக் குழுக்கள்.முன்னாள் இயக்கங்களிலிருந்து புலிக்குப் பினாமியாக இயங்கிய என்.எல்.எப்.ரீ யின் பிளவுக்குழுக்கள்வரை) திடீர் புரட்சி,கட்சிகளெனக் கட்டவைத்தலும்,ஆட்களைக் காட்டிக் கொடுத்துப் புரட்சிகரச் சக்திகளை அழித்தலும்,

3: புலிகளது மேல் நிலைக் கைகாட்டிகளை வைத்து, இலங்கை அரசினூடாக மக்களை அண்மித்தல். போராட்டமானது பிழையானது,மக்களை அழித்த அந்தத் திசைவழி தேவையற்றதெனக் கருத்துக்கட்டி, மக்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தி அடிமையாக்குவது.அதிகாரங்களுக்குப் பணிந்து போகவைக்கும் வியூகத்தை இதன் போக்கில் தகமைத்து, மக்களை வெறும் நுகர்வடிமைக் கூட்டமாக்கிக்கொள்ளல்.

இதை,இங்ஙனம் புரிந்துகொள்ளவேண்டும்:அதாவது,

1: புலிகளது போராட்டஞ்சரியானதெனக் கட்டியமைப்பதால்,நேர்த்தியான புரட்சிகரமான மக்களது பாத்திரத்தை இல்லாதாக்கல்,சரியான செல்நெறியை மழுங்கடித்தல்,மீளவும் போராடும் மக்களை புலிவழி செலுத்தித் தோற்கடித்தல்,

2: புலிகளது போராட்டம்,மக்களைக் கொன்று குவித்ததன் விளைவாக,எதுவுமே சரிவரவில்லை,போராட்டம்-விடுதலை என்பது அழிவு அரசியலானது,எனவே,புரட்சி-விடுதலை என்பதெல்லாம் மக்கள் விரோதமானதெனக் கட்டியமைக்கும் கருத்தியலை உருவாக்கி, அதேயே பெரும்பகுதி மக்களது சமூக உளவியலாக்கிக்கொண்டு அவர்களது சமுதாய ஆவேசத்தைத் தணித்தல்,அனைத்துத் தவறுகளையும் பிரபாகரனது தலையில் பொறித்துத் தேசியவிடுதலையென்பது இனிமேல் சரிவராது,அது தவறானதென உருவாக்கிக்கொள்ளல்,

இந்த இருவகையான அணுகுமுறையில் மக்களில் பெரும்பாலரைத் தொடர்ந்து இரண்டு இலாடனில் பிணைக்க முடியும்.

ஒன்று: புலிவழிப் போராட்டத்தைச் செய்ய வைத்துக்கொள்வதன் முலமாக(போராட்டவுணர்வுமிக்க இளைஞர்களை,தேசியவிடுதலையை உணர்வு பூர்வமாக அணுகும் பெரும்பகுதிப் புலம்பெயர் இளைஞர்களை) இனவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை மழுங்கடித்தல் அல்லது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லல்.இதன்வழியாக முற்போக்கு அரசியலை நீர்த்துப்போக வைத்தலும்,இளைஞர்களைப் புரட்சிகரமாக அணிதிரளுஞ் சந்தர்ப்பத்திலிருந்து தடுத்துக்கொள்னலும் நிகழ்ந்துவிடுகிறது.இதற்காகத் தொடர்ந்து புலிகளை நியாயப்படுத்தல்.

இரண்டு: புலிகளது போராட்டத்தால் மக்களது கெடுதியான பக்ககங்களைக் காட்டிக்கொள்வதும்,அதன்வழியாக நிலத்தில் இருப்பவர்களது போராட்டவுணர்வை,இலங்கைப் பாசிச அரசின் இனவொதுக்கலை மெல்ல உணர்வுரீதியாக உள்வாங்காதிருக்கும் சந்தர்ப்பத்தைப் புலிகளது கொடுமையின்வழி உணர்த்தித் தடுத்தல்,அழிவு அரசியலது பக்கங்களைப் பேசுவதும்,அதனூடாக மக்களுக்குப் போதித்தல்"பிச்சை வேண்டாம் நாயைப்பிடி"எனும் முதுவாக்கினூடாகப் போராடுவது தவறு என்ற கருத்தியலைத் தொடர்ந்து வளர்த்தெடுத்தல்,போராட்டம் தவறானவர்களால்,தவறான ஆர்வங்களுக்காகத் தவறாக நடாத்தப்பட்டுத் தோல்வியில் முடித்து வைக்கப்பட்டதை, விமர்சனரீதியாக உள்வாங்கிச் சரியான தெரிவுகளை கண்டடைவதற்குக் குறுக்கே இந்தப் போக்கைக் கட்டியமைத்தலே இதன் உட்பரிணாமம்.

இவ்விரு போக்கையும் இனம் காண்பது அவசியம்.இதிலிருந்து புலிகளது தவறான போராட்டத்தை விளங்கிக்கொண்டு சரியான தெரிவுகளினூடாக இலங்கைப் பாசிச அரசுக்கெதிரான,தென்னாசியப் பிராந்திய மற்றும் உலக வல்லாதிக்க ஏகாதிபத்தியங் களுக் கெதிரான ஸ்தானத்தில் மக்கள் புரட்சிகரமாக இயங்குவது எங்ஙனம் சாத்தியமாகும்,இதைச் சாத்தியப்படுத்தும் புரட்சிகரமான புரட்சியின் நிலவரங்கள் என்ன? மக்கள்யாரோடு தோள்சேர்ந்து இவற்றைச் சாதிக்கமுடியும்?

புரட்சிகரமானவொரு அரசியலை எப்படித் தகவமைப்பது? இது பாரியகேள்வியாகும்.மிக இலகுவாக விடை கிடைக்கவில்லை!இந்தச் சூழலை இனம் காண்கின்றோம்.ஆனால்,தடுக்க முடியவில்லை!ஏனெனில், எவர்-எந்த முகாமுக்குள் இருக்கிறாரென்பது இன்னுமே வெட்ட வெளிச்சமாவில்லை!


இந்த நிலையில் என்ன செய்வது?

தமிழ்த் தேசத்தின் நேர் எதிர் மறையான முரண்களாக இருப்பவை பதவிக்கான வேட்கையுடைய தமிழ்க் கைக்கூலிக் குழுக்களின் இன்றைய செயற்பாடாகும்!நமது தேசத்தின்-மக்களின் அபிலாசைகளை வேட்டையாடும் நிலைக்குப் போய்விட்ட கூலிக்குழுக்கள் ஒருபுறமும்,மறுபுறம் ஜனநாயக வேடம் தரித்த குள்ள நரிப் புலிக் கூட்டம்(கே.பி.உருத்திரகுமார்,கருணா-பிள்ளையான்,நெடியவன் மசிர்மட்டை...)வகையறாக்கள் ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டும் வார்த்தை ஜாலக் கதைகளுடன் ஒருபுறமும், அன்னிய சக்திகளைப் பலப்படுத்துவதில்...

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அது அரங்கேற்றி வருகிறது.பேராசை,பதவி வெறி பிடித்த தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள்.இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது.ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.

நமது உரிமையென்பது வெறும் அரசியல் கோசமல்ல.

எங்கள் பாரம்பரிய நிலப்பரம்பல் குறுகுகிறது.நாம் நமது தாயத்தை மெல்ல இழந்து போகிறோம்.நமது உரிமைகள் வெற்று வார்த்தையாகவும்,ஒரு குழுவின் வேண்டாத கோரிக்கையுமாகச் சீரழிந்து போகிறது.இது திட்டமிட்ட சிங்கள அரசியலின் சதிக்கு மிக அண்மையில் இருக்கிறது.எனவே, சிங்களப் பாசிசம் தன் வெற்றியைக் கொண்டாடுவதும்,அதைப் புலிப்பினாமிகள் ஜனநாயகத்தின் பேரால் வாழ்த்தி வரவேற்பதும்கெடுதியான அரசியலின் வெளிப்பாடாகமட்டும் பார்ப்பதற்கில்லை.மாறாக, எஜமான் இந்தியாவின் வற்புறுத்தலாகவும் இருக்கிறது.இது அகண்ட இந்தியாவைத் தக்கவைக்கும் வியூகத்தோடு முடிச்சிடுவது.

மிக நேர்த்தியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் நமது மக்கள் தமது உரிமைகளை வெறும் சலுகைகளுக்காக விட்டுவிடுவதற்கான சமூக உளவியலை ஏற்படுத்தும் நரித்தனமான அரசியலை மேற்முசொன்ன இருவகையான போக்குகள் செய்துவரும்போது இந்தக் "கேடுகெட்ட புலம்பெயர் புலித் தமிழர்கள்"எந்த அரசியல் வியூகமுமற்றச் செத்துக்கிடக்கிறார்கள்!

இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய விய+கத்தைக் கொண்டிருக்கிறது.இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே கிடையாதென்கிறது சிங்களம்.இலங்கையர்கள் எனும் அரசியல் கருத்தாக்கத்தின் மறுவடிவம் சிங்களம் என்பதன் நீட்சியாகும்!நாம் தமிழ் பேசுபவர்கள்.நமது தேசம் பாரம்பரியமாக நமது மக்களின் வாழ்வோடும்,வரலாற்றோடும் தொடர்புடைய தமிழ் மண்ணே.அது வெகு இலகுவாகச் சிங்களமாகிவிட முடியாது.

நமது மக்களை வெறும் பேயர்களாக்கும் அரசியலை மேற்கு கூறிய இரண்டு தரப்புமே செய்துவரும்போது நாம் மௌனித்திருக்க முடியாது!

இந்தத் தருணம் பொல்லாத தருணமாகும்.தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இது அரசியல் வியூகமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.இது ஏற்புடையதல்ல.இதைத்தாம் இதுவரை புலிகளைக்கொண்டு அந்நியச் சக்திகள் செய்து முடித்துக்கொண்டன.தொடர்ந்தும், அவை மாற்று வியூகங்களை நான் மேலே குறிப்பிட்ட வகைகளில் தகவமைத்து வருகின்றன.

நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.

எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.


எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.இதற்குள்தாம் புலிகள் செய்த போராட்டம் சரியானது-தவறற்ற நேரானதெனவும்,பிச்சைவேண்டாம் நாயைப்பிடி,பங்கர்வேண்டாம் படும் கொலைகள் வேண்டாம்,யுத்தம்வேண்டாம் ஒரு சிறுபிடி சாதமே விடுதலை என வகுப்பெடுக்கும் அந்நிய வியூகங்கள்.இதை இனம் கண்டு எதிர்க்காமல் நமது மக்களது உண்மையான விடுதலைக்கான பாதை திறந்துகொள்ளது!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி,

06.12.11

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...