Wednesday, December 21, 2011

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை!

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை!

"சுகந்தி ஆறுமுகமும்,பெண்ணியல் புழுத்தலும்" -சில குறிப்புகள்.


ன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம். இங்கு, அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில்(தமிழீழப் போராட்டத்துள் புலிவழிப் புரிந்துகொண்ட தமிழர்களது சுயநிர்ணயம்) இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது. இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய புலி-சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.

இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரையான எல்லைகள் நீண்டுபோவதற்கான அரசியல்வரை, இவர்களது பணி(புலிகளும்-புலிகளது அழிவுக்குப் பின்னான பினாமிப் புலிகள்-நா(கா)டு கடந்த தமிழீழ அரசு) தொடர்ந்தே இருந்தது.இப்போதும், அதையே இன்னொரு வழியில் பின்பற்றுகிறார்கள்?

தாலித் தானத்துக்கும்,புலிகளது போராட்டத்துக்குமான ஒற்றுமை என்ன?

கடந்த சில தினங்கட்குமுன் பெண்ணொருத்தி மீளத் தாலிக் கொடியைத் "தமிழீழ விடுதலை"குறித்த போராட்டத்துக்கு-விடுதலைக்குத் தானமாக இட்டபோது அதை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் பெற்றுக்கொண்டு,"தாயகத்தில் எமது தாய்மார்களினதும் சகோதிரிகளினதும் கழுத்துக்களில் தொங்கும் தாலிகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியது. ஈழத் தமிழர் தேசம் தனக்கெனச் சுதந்திரமான இறைமையுடைய தமிழீழத் தனியரசினை அமைத்துஇ தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசப் பறக்க வேண்டும் என்பதற்காக – இந்த அமர்வில் நமது தேசத்தின் தாய் ஒருவர் தனது கழுத்திலிருந்த தனது தாலிக்கொடியினை தானே இறக்கி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் இந்த அரங்கில் கண்டோம்.”[ http://inioru.com/?p=25144 ] என்கின்றாராம்.

இங்கு,இந்தத் தாலி அறுப்புச் சம்பந்தமாக நான்: "புலிகள், இப்படி எத்தனை "தமிழிச்சிகளது" தாலியை அறுத்தாங்களோ,அதே பாணியில் தொடர்ந்து தாலியைத் தட்டிப்பறிக்கும் அதே குணம் தொடர்ந்தே வருகிறது.அப்படி என்னதாம் தாலிக்கும்,புலிகளுக்கும் தொடர்பு?;தாலியறுப்பார்! :-( "என்று வாசுதேவனின் நிலைத் தகவற்தொடர்பில் தாலி வழங்கும் நிழற்படத்துக்குக் கருத்திட்டேன்.


அந்தோ,பெண்ணிய சிங்கம் சுகந்தி ஆறுமுகத்துக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கப் பெண்ணியப் புயலாக மெல்லக் கொக்கரிக்கும்போது:
"எனது பெண்ணியல் புரிதலின்படி தாலியை அழித்தல் அல்லது அதை பொதுவெளியில் கழட்டுதல் என்பது ஒரு புரட்சிகர செயல்பாடு. தனது தாலியை கழட்டுவதற்க்குமுன் பெண் பல்வேறு கருத்தியல் உளவியல் மோதல்களுக்கு உள்ளாகிறாள். அதற்கு அபார துணிவு வேண்டும். அவர் அதை ஒரு பொதுப்பணிக்கு கொடுக்கிறார். சிறீ ரங்கன் உமது எழுத்துக்களில் இயங்கில் வேறுமை எப்பவும் தெக்கிநிற்கும். வெறும் வசைபாடும் அரசியலில் இருந்து வெளியேற முயற்சியுங்கள். புகலிடத்தாரிடம் புலிகள்பற்றி இன்னும் ஒரு நேர்மையான விமர்சனம் எழவில்லை. திட்டித்தீர்தலைத்தவிர.."
இப்படியெழுதி விடுகின்றார்.

ஆக,இது:"பொதுப்பணிக்குத் தாலி கழற்றப்படுகிறது.அது அபாரமான துணிபானது-தியாகமானது,புரட்சிகரமானது,பெண்விடுதலைக்கானது-பெண்ணடிமைத்தனத்தைப் போக்க வல்லது"இந்தப் பொதுப் புத்தியைத் தகவமைக்கும் புலிகளது பிரச்சாரத்தின் வலிமையை நாம் சில மாதிரிக்கான தெரிவுகளின்வழி உடைத்தோமானால்,நமது சமுதாயத்தில் பல இலட்சம் சுகந்தி ஆறுமுகங்களை உருவாக்கும் புலிகளது கருத்தியற் கட்டுமானத்தைப் புரிந்துகொள்ள முடியும்.ஏலவே,புலிகள்"உயிராயுதம்"தயாரித்த கதையும் இப்படியே...

இப்போது,இந்தத் தனித்துவமான பெண்ணியப் பனுவலூடாகக் கடத்தப்படும் தாலியின்-கொடியின் தானத்துக்கூடாகக் கட்டப்படும் குறியீடென்ன?

இதுவரை,சுவிசிட்ஸர்லாந்திலிருந்து ,உலகம் பூராகவும் தொடர்ந்த இந்தத் "தாலித் தானத்தின்" வழி, புலிகள் முன்னெடுக்கும் பிராச்சாரம் என்ன?

அதற்கும், சுகந்தி ஆறுமுகம் வகுப்பெடுக்கும்"பெண்ணிய த்துக்கும்" என்ன தொடர்பு என்பதை நாம் சற்று ஆழ்ந்து(கவனிக்க ஆழ்ந்து என்பதை) நோக்குவோம்.

தாலி,தமிழர்களது பண்பாட்டில் அது பெறுமதியான வாழ்வியற் குறியீடாகவும்,பெண்மீதான ஒருவித உளவியற் தாக்குதலாகவும்,அதன் சாரத்துள் சுமத்தப்படும் சமூகப் பெறுமானம்"சுமங்கலி"ச் சுமையெனும் பண்பாட்டுப் படுதாராகவும் நிலைப்படுத்தப்பட்ட பின்,அதன் சமூகவுளவியற் பெறுமானமானது "வாழ்வு" என்பதாகும்.அதன் அறுப்பில்"வாழ்வு" அற்றதன் தளத்தில்"வாழ்விழந்த"நிலைக் களன் மிக விரைவாகச் சுமத்தப்பட்டு,குறியீட்டுத் தாக்குதலில் பெண் சிதைக்கப்பட்டு மூலையுள் இருத்தப்படுகிறாள்,அல்லது "தமிழ் வாழ்வு"(சைவப் பழம்) விழுமியத்திலிருந்து விலக்கப்படுகிறாள்.

புலிகளது பிரச்சாரயுக்தியுள் "தாலித்தானம்" தான் சொல்வதிலிருந்து வேறொன்றையுங் குறித்துரைக்கிறது.இந்த ஆற்றலானது,தாலியின் குறிப்பான் பங்குக்குக் குங்குமம் பிறிது மொழியாகும்போது,அங்கே-"குங்குமம்" ஒரு நிலையில்வாழ்வாகவும்- சிகப்பு நிறம் மட்டுமாகப் பிறத்தியாருக்கும்-தமிழ் மொழிக்கு அந்நியமானவொரு மாற்று மொழியாளுக்கு-குறிப்பாக ஜேர்மனியர்களுக்கு!

அது ஒரு நிறம் மட்டுமே.அதை மொழிப்படுத்தும்போது,அதற்கு அவ்வளவு பெறுமானமான அர்த்தச்செரிவை எம்மால் ஏற்படுத்த முடியாது.ஆனால்,அது ஒரு குறியீடாகவும்,குறிப்பானகவும்,நமது சமுதாயத்துள் இயங்கும்போது,அகவயக் குறைவான மதிப்பீட்டைத் தள்ளி வைத்து வாழ்வொன்று நிலவுகிறது.அது பிற்போக்கானதாக இருந்துங்கூட.இதுதாம் தாலிக்கான மகிமை!

எனவே,தாலி குறியீடாகிக் குறிப்பானாகவும் விரிந்து ஒரு கட்டத்துள் சொன்மை என்பதாக அது விரிகிறதா? "தாயொருத்தி தாலிக்கொடியைத் தானமாக வழங்கினாள்" எனும் சொல்லின்வழி தரும் அர்த்தமும்,குறிப்பால் தரும் அர்த்தமும் ஒன்றல்ல!


"தாலி-குங்குமம்"என்பவை ஒரு தரப்பில் குறியீடாகிக் குறிப்பானாகவும்-சொன்மை ஆகவும் விரிவதில்தாம் புலிகளது"தாலிக் கொடை"விளம்பரம் உச்சம் பெறுகிறது.இதுதாம் எனது"தாலி அறுப்பு"எனும் கருத்துக்கான மூலச் சொன்மை! எனவே,பெயரிடல் அவ்வளவு இலகுவான பொருட்தரவல்ல பிரயோகமல்ல என்பதான புரிதலுள்,உட்புகுத்தப்பட்ட"வடிவம்"அவசியமானவொரு சமூக உளவியலைச் சொல்வதிலிருந்து பின்வாங்கிச் செல்லும் சுகந்தி ஆறுமுகத்துக்குப் "பெண் விடுதலைப் புரட்சியாக" இவை புரிகிறது.அதாவது,புலிக்குத் தானமாக வழங்கும் தாலி புரட்சி-பெண்விடுதலையாகிறது!ஐயோ,அரமே!

சொல் வேறு,சொன்மை வேறென்று உரைக்க, "உ-மக்கு" விற்றின்கன்ஸ்ரைனை அழைத்துவந்து வகுப்பெடுக்க முடியாது.

"தாலி x பொருண்மை-வாழ்வு x சொன்மை" இரண்டுக்கும் அர்த்தங்காண் அறிவு விலக்கிப் பெண் விடுதலைச் சிந்தனையை எவருக்குரைத்து என்ன பயன்? பெண்ணியமெனப் பெயரிட்டுவிடுவதில் அவசரப்படும் அறிவுக்கு, இந்தச் சிந்தனையை ஒரு சூத்திரமாக மாற்றிவிடுவதில் "பெண்விடுதலை-புரட்சி" அறைகூவலாகி விடுகிறது. இதுவே,"இயக்கவியற் வேறுமை"குறித்து வகுப்பெடுக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்னமே நாம் "தாலியறுத்து" இல்வாழ்வில் இணைந்து"குடும்பம்"நடாத்தும் இதுநாள்வரை, எமக்குப் பெண்ணின் உளவியல் மோதலை வகுப்பெடுக்கும் சுகந்தி ஆறுமுகத்துக்குப் புலிகளது போராட்டச் செல் நெறியோ அல்லது அவர்களது உளவியற் தாக்குதலோ புரிந்த மாதிரித்தாம்.

நான்,இத்தகைய தனிப்பெரும் பெண்ணியப் புரட்டுக்கு அப்பாலே புலிகளது தாக்குதலைக் குறித்துக் கவனப்படுத்தவே ஆர்வமாக இருக்கிறேன்.

தாலிக்கும்,புலிகளுக்கும்,தானத்துக்கும்-தியாகத்துக்கும் என்ன விளக்கங் காணமுடியும் புலிவழிக் கருத்தியலுக்குள்?

"தற்கொடை"
"தாலிக்கொடை"
"உயிற்கொடை"
"உயிராயுதம்"

"உளக்கொடை" இப்படிப் புலிகளது மொழிக்குள் நிலவுகின்ற கருத்தியற் கருவூலமானது ஒவ்வொரு கட்டத்துள்ளும் மிக வேகமான சமூகவுளவியலாக ஆக்கமுற வைக்கப்பட்டுள்ளது.வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பதென்பதும்-வாழும் நிலையைக்கடந்து,புற நிலையின் தன்மையே (நிலையே) சிந்தனையைத் தூண்டுவதென்ற உண்மையில், இத்தகைய கருவூலங்களை சமுதாயத்துள் பெரும்பகுதி மக்கள் வாழும் வாழ்நிலைகளாக மாற்றப் புலிகள் செய்து வரும் மிகக் கேவலமான பிரச்சாரங்களே இன்றுவரை மிகப்பெரும் துன்பத்தைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு அள்ளி வழங்கியது.

இதன்,தாக்கமானது ஒரு கட்டத்துள் தேசத்துக்காக"நீ சாவது"அவசியமானது-அர்த்தம் பொதிந்ததெனச் சொல்லப்பட்டதுவரை,சமூகத்துள் மிகவும் பெறுமானமிக்க வாழ்வை-தாலியைத் தியாகஞ் செய்யும் தாயைவிட,"உன்னிடம் இருக்கும் செல்வம் பெரிதில்லை-அதைப் புலிகளாகிய எமக்குத் தந்துவிடு!"எனச் சொல்லும் இந்த உளவியலை வகுப்பெடுக்க எனக்கு ஒரு சுகந்தி ஆறுமுகம் தேவையா?

தாலிக்கொடி வழங்கும் வர்ணப் போட்டோக்கள்-வீடியோக் காட்சியுருவாக்கத்துள்,இத்தகைய பிரச்சார உத்திகள் ஏலவே மலிந்திருந்தவை.கடந்த இரு சகாப்தத்துள் இது நீண்டவொரு பட்டியலைத் தரவல்லது.இதன் வாயிலாகவொரு கீழ்த்தரமான பிரச்சாரத்தை முன்வைத்த புலிகள்,எத்தனையோ தாய்மார்களது கழுத்துள் கை வைக்காமலே தாலிக்கொடிகளை அபகரித்தது மட்டுமல்ல,நிலத்தில் அத்தகைய தாய்மார்களது கணவர்களையுங் களப் பலியாக்கியது வரலாறுதாம்.இதன் தொடராகக் கட்டியமைக்க முனையும் உளவியலானது, தொடர்ந்து மக்களை மொட்டையடிக்கவும்,உணர்ச்சிவயமாகத் "தமிழீழ விடுதலைக்கு" பொருட்கொடை வழங்கும் ஒருவித மனத்தையே அவர்கள் உருவாக்க முனைகிறார்கள்.அந்த மனத்தைத் தொடர்ந்து தகவமைக்கும் இந்தத் "தாலி-கொடி" , சமூகத்துள் அதி வேகமான குறியீடாகி "அனைத்துக்கும் ஈடாகாதவொரு பொதுமைப்பட்ட சொன்மையாக" மாறும் இந்தப் பிரச்சார உத்தி கீழ்த்தரமான காயடிப்பு அரசியலாகும்.

"மனிதர்கள் மொழியினது கைதிகள்"என்பது ரொலான் பார்த்தின் கூற்றுக்களில் அதிகம் முக்கியமானது.உயிர் வாழ்வின்முக்கியமான பரிணாமம் இந்தக் குறிப்புணர்த்தும் உணர்வினது அனுங்கலான மொழியாகும். எனவே,மொழியென்பது என்ன-வாழ்வென்பது என்னவென மிக இலகுவாகப் புரிந்துபோக முடியாத நெருக்கடியுள்தாம் புலிகளது இந்தப் பிரச்சார உத்தி கையாலாகதவொரு இனத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

ஒன்றைக் காட்சிப்படுத்தும்போதே, இன்னொன்றைக் காட்சிப்படுத்தாது விடப்படுகிறது.குறியீடாகச் சொல்லும்போது, இன்னொன்றைக் குறித்துச் சொல்லாமல் விடப்பட்டு, உண்மை மறைக்கப்படுகிறது.

"தாலி" என்ற பொருண்மை தன்னளவில் ஒரு குறியீடாகவும்-குறிப்பானாகவும் இருக்கும் அதே சமயம் அது வாழ்வெனும் தருணத்துள் ஒரு சொன்மையாக விரிகிறது. இங்கே,பொருண்மையும்,சொன்மையும் மெலிதானவொரு நூலிழையால் பிரிக்கப்படுகிறதே இந்தத் தளத்துள்தாம் புலிகளது "தாலி-கொடித் தானம்" மையங்கொண்டு, மக்களை மொட்டையடிப்பதற்கானவொரு உறுதியான பிராச்சர உத்தியை மறைத்து மக்களுக்கான விடுதலை-தேசவிடுதலை எனப் பரப்புரை செய்து மிகவும் இலகுவாக ஊரார் தாலியை அறுத்துக்கொள்கிறது.இது கிடைக்காத சந்தர்ப்பத்துள் துப்பாக்கிக் காட்டித் தாலியறுக்கும் இன்னொரு கூட்டமோ,அறுத்த தாலிகளுடன் பாரீசில் ஒதுங்கும் இடம்,தமிழ் மளிகைக் கடையாகவும்,தமிழ்அச்சுக் கூடமாகவும் இப்போது இருக்கும்போது,தாலி அறுப்புக்கான இந்த நிகழ்வுகள் அனைத்தும் "பெண் விடுதலைக்கான" முன் நிபந்தனைகள்தாம்.

இதையொட்டிச் சுகந்தி ஆறுமுகங்கள் இயங்கியல்"வேறுமை" வகுப்பெடுக்கட்டும்.நல்லதுதானே?-யாரு, "வேண்டாம்" என்றோம்?


ப.வி.ஸ்ரீரங்கன்,
ஜேர்மனி
21.12.2011

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...