ஊடக வலுவும்,மக்கள் தோல்வியும்.
தற்போதைய இலிபிய யுத்தத்தில் அந்நியச் சக்திகள் யாவும் அறம் பற்றியும்,மக்களால் தோர்ந்தெடுத்த ஜனநாயகம் குறித்தும் தர்மம் பேசியபடி, உடனடி சமாதானம்-ஒப்பந்தமென அரசியல் அரங்கைக்கூட்டிப் பேசுவதன் தொடர் நிகழ்வில் அரங்கேறும் பூகோள வியூகம் என்பது தத்தமது தேசங்களுக்கான மூலவளங்களைக் கொண்டிருக்கும் தேசங்களையும், அதன் ஆட்சியையும் தமக்குச் சார்பானதாக மாற்றவும் அதன் வாயிலாக மூலவளத்தைத் தங்குதடையின்றி பெறுவதற்குமான அரசியல் நாடகத்தில், அப்பாவி மக்களை அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் யுத்தத்தைத் தொடக்கிக் குருதியாறைத் திறந்தபின்பு உணவுப் பொட்டலத்துடன் தமது நோக்கங்களைப் பெறுவதற்காக இயங்கும் தேசங்களையும் நாம் இலகுவாகப் பார்க்கின்றோம்.இவற்றையெல்லாம் மக்களுக்கான ஜனநாயகப்படுத்தலெனப் பெரும் ஊடகங்கள் தினமும் சொல்கின்றன.
என்றபோதும், அமெரிக்க அரசியலானது மிகவும் இக்கட்டானவொரு சூழலுக்குள் வந்துவிட்டது.இதன் ஆதிக்கம் தொடர்ந்து நிலவுவதற் கானவொரு உலக அரசியல் பதட்டம் மிக அவசியமானது. இதன் தொடர் நிகழ்வார்ந்த வியூகத்தில் அமெரிக்க அரசானது புதிய,புதிய யுத்தக் களங்களைத் திறக்கிறது.இந்த யுத்தக் களங்களை நியாப்படுத்தும் துறைசார் கல்வியாளர்களும்,பெரும் ஊடக நிறுவனங்களும் அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளது லொபிகளாக மாற்றப்பட்டுக் கல்வி துறையே பெரும் ஊழற்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
தொடரும் அரபுலக மற்றும் ஆபிரிக்கக் கண்ட யுத்த முகாம் அனைத்தும் மூன்றாவது உலக யுத்த வடிவமாகும்.வடிவத்தில் புதிய வகை உலக யுத்தமாகும்.இவ் யுத்தமானது கடந்த முதலாவது,இரண்டாவது யுத்த வடிவதைத் தகர்த்து இன்றைய நிதி மூலதனத்துக்குத் தலைமைதாங்கும் பெரு வங்கிகளது தலைவர்களது புதிய வடிவமாகும்.இதைப் பழைய பாணியில் புரிந்து கொள்ளவே முடியாது.
இங்கே புதிய வகை யுத்தக் கூட்டணியானது நேட்டோ தலைமையில் இயங்கும்போது அது உலகு தழுவிய யுத்தக் கூட்டணியை மேற்குலகத்துக்கு வழங்கியுள்ளபோது,சுயாதீனமான சிறிய தேசிய அரசுகள் இத்தகைய கூட்டணியால் நிர்மூலமாக்கப்பட்டுக் கொள்ளை யிடப்படுகிறது.இந்த யுத்தங்களுக்குப் பின்னால் மேற்கு மூலதனத்தின் இன்றைய சரிவுகளைத் திட்டமிட்டுச் சரி செய்வதற்கான உலகக் கொள்ளையில் அடுத்துப் பலியாகப்போகும் ஈரான் தேசத்தை அம்போவெனக் கைவிடப்போகும் சீன-இருஷ்சிய வியூகம் ,மேலும் வலுவான பொருளாதார ஒப்பந்தகங்களை மேற்கிடமிருந்தும், அமெரிக்காவிடம் இருந்தும் எதிர்பார்க்கும்போது,இருவேறு துருவமாக இருந்த மூலதன வர்க்கமானது கூட்டாகக் கொள்ளையிடும் குவிப்புறுதியீனூடாகச் சிறிய தேசங்களைப் பலியிட்டுத் தமது நலன்களை அடைவதாகவே நான் கணித்துக் கொள்கிறேன்.
இன்றைய பொருட் குவிப்பின் தொடர்ச்சியில் ,உலகத்துள் நிலவும் எரிபொருள் இருப்பைத் தமதாக்கும் முழுமுயற்சியில் அமெரிக்க வல்லாதிக்கும் முனையும் ஒவ்வொரு நகர்விலும் ஐரோப்பாவினதும், குறிப்பாக ஜேர்மனியினதும் ஒத்துழைப்பு அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கிசைவாகவே இருந்துவருகிறது. இதன் தொடர்ச்சியான உலகப் பங்கீட்டு அரசியல்-போர் வியூகங்களுக்கு மேற்கு ஐரோப்பிய எரிபொருள் தேவையும் மிக அவசியமான அமெரிக்க சார்பு அரசியலை மிகக் கண்ணியமானவொரு மக்கள் நல அரசியலாக ஐரோப்பாவுக்குள்ளும் அதன் மக்கள் கூட்டத்துள்ளும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் திணித்து வருகின்றன.இவை, மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் குழிதோண்டிப்புதைக்கின்றது.ஒரு புறம் வளர்ச்சியடையும் தேசங்களை யுத்த்தால் கொள்ளையிட்டுச் சிதைப்பதும்,அதேபோன்றல்லாது தமது தேசத்து மக்களை நிதி மூலதனதிரட்சியின் வழியாக எழும் சட்டங்களால் கட்டுப்படுத்தி, அனைத்து வகைகளிலும் மூலதனத்துக்கீழ் அடிமையாக்குவதாகும்.அதன் தொடர்ச்சியே கிரேக்க அரசுக்கு உதவி-ஐரோப்பியக் கூட்டமைப்புக்கும், யுரோ நாணயத்துக்கும் அமைக்கப்பட்ட நிதிக்காப்பு[Euro-Stabilitätspakt ] குடையாகும்.
உலகத்தில் சமாதானம்,அமைதி,ஜனநாயகம் மற்றும் ஸ்திரமான அரசியல் நிலவும்போது அமெரிக்கப் பூகோள வியூகமும் அதன் வாயிலான அதன் கேந்தர அரசியல் ஆதிக்கமும் இல்லாது போகும் என்பது உலகறிந்த அரசியல் அறிவாகும்.
இன்று, இடம் பெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் [அரபுத் தேசங்களிலும்,ஆபிரிக்காவிலும் ] மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் அடாவடித்தனமான ஆட்சி மாற்றங்கள், நாடு பிடித்தல்கள் யாவும் உலகத்தில் அதீதமாகத் தேவைப்படும் மூலப்பொருள்களுக்கான அரசியலாக விரிகிறது.இதன் தொடர்ச்சியாக நாம் பல் வகையான யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.
அமெரிக்க இராணுவவாதம் மேலும் விரிவடைய-விரிவடைய அதன் ஆதிக்கம் தொடர்ந்து அந்தத் தேசத்தை கடன் நிலைக்குள் தள்ளும். இது, உலகத்தை இன்னும் வேட்டைக்குட்படுத்தும் அரசியலையே அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு வழங்கும்.எண்ணைவளத் தேசங்களைக் கொள்ளையடிப்பதால் வரும் உபரியைக்கொண்டு தனது இராணுவத்துக்குத் தீனீபோடும் அமெரிக்க அரசானது, உலகத்தைத் தனது ஆதிகத்துக்குள் இருத்தும் குறைந்த காலவகாசத்தையாவது இந்த இலியக் கொள்ளையால் அதன் ஆளும் வர்க்கத்துக்கும் வழங்கிவிடுகிறது.
இனிவரும் காலங்களில் அமெரிகத்தலைமையில் இஸ்ரேலிய அரசின்வழி நடை பெறப்போகும் ஈரான்மீது நடாத்தப்படும் யுத்தமானது,பிறிதொரு தடைவையில் அணுயுத்தமாகச் சீனாவை அண்டும்போது, இந்த உலகத்தின் இறுதிக்கட்டம் நெருங்கி விடுவதற்கான புள்ளிகளே தென்படுகின்றன.
இதைத் தடுக்கும் எந்த அரசியல் ஆற்றலும் பொருளாதாரக் கூட்டு ஒத்துழைப்பால் வல்லரசென இருக்கும் மாற்று முகாம்(சீனா-இருஷ்சியா)போன்ற தேசங்களுக்கு இல்லாதாகப்பட்டு, கடந்த இலிபிய யுத்தத்தில் இது உறுதிப்பட்டுள்ளது.
இத்தகைய புள்ளியை உள்வாங்குவதே கஷ்டமாக இருக்கும்போது இந்தப் பலாத்தகார யுத்தக் கூட்டணிக்கு எதிராக உலக மக்கள் அணி திரள்வதைத் தவிர வேறெந்தத் தேச அரசும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாதென்பதற்கு இலிபியாவே ஒரு சாட்சியாக இருக்கிறது.
ஆனால்,உலக மக்களைக் கட்டிப் போடும் மாபெரும் ஊடக வலுவைக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் மூலதனக் கும்பலிடம் தோல்வியுற்றது உலக மக்களைத் தவிர வேறெந்தத் தேசமும் இல்லை!
மக்களே தோல்வியில் நிற்கிறார்கள்.அவர்களை மீட்பதென்பது இன்றைய நவீன ஊடக வலுவை எவர்கள் கைப்பற்றுகிறார்களோ, அவ் வர்க்கமே இறுதியில் வென்றவர்கள் ஆவர்.
வர்க்கங்களைக் கடந்து, உலக மக்கள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.உலகப் பெரும் மூலதனமானது ஒரு சில பெருவங்கித் தலைவர்களது கட்டுப்பாட்டில் ஒரு சிறிய சேவைத் துறையைக்கொண்டு இயக்கப்படுகிறது.இங்கே, வர்க்கப் போராட்டம் என்பது மீள் பார்வைக்குட்படுத்தப்பட்டு,மூலதனத்தாற் பலாத்தகாரப்படுத்தப்படும் தேசிய மூலதனமுடையவர்களும் [ இன்று கிரேக்கத்தில் பழிவாங்கப்பட்ட உடமை வர்க்கத்தைக் கவனிக்க ] பழிவாங்கப்பட்ட உழைப்பாளருடம் கை கோற்பதைத்தவிர வேறு வழியில்லை. வங்கிகளைச் சோவியற்றாக்க வேண்டும்.இல்லையேல் அவை முழுமொத்த மக்களையும் வேட்டையாடிவிடும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.11.2011
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment