Friday, August 06, 2010

வரலாற்று உண்மை:

வரலாறு பூராகவும்மக்கள்
ஏமாற்றப்படுகிறார்கள்ழப்போராட்டத்தின் கறைபடிந்த வரலாறு குருதியினால் எழுதப்பட்டதாகினும்அஃது, ஒரு சில தமிழ்க் குடும்பங்களைச் செல்வந்தர்களாக்கியதில் இலட்சக்கணக்கான மக்களின் தலையைக் கொய்தெறிந்துள்ளதுதாம்.என்றபோதும்,சிங்கள இனவாத அரசு தமிழ்பேசும் மக்களுக்கான அழிவைத் திட்டமிட்டுச் செய்ததன் பலாபலனே இஃதென்பதில் எனக்குச் சந்தேகமெழுகிறது.

இன்றைய பின் போராட்டச் சூழலில் மிக நுணுக்கமாகப் புலிகளது வெளியுலகத் தலைமைகளையும் அதன் அரசியற்றலைமையும் உற்று நோக்கும்போது இவர்தம் போராட்டத்துள்ளும்-அரசியல் நகர்வுக்குள்ளும் மக்களது "விடுதலை"என்பது பெயரளவிலும் இருந்திருக்கவில்லையெனப் பகரமுடியும்.


புலிகளது இராணுவ ஜந்திரம் பிரபாகரனோடு அழித்து முடிக்கப்பட்ட கையோடு புலிகளது வெளியுலகத் தலைமையும் ,அதன் கட்டமைப்பும் இலங்கை அரசோடு மறைமுகமாகவும்-நேரடியாகவும் சேர்ந்து இயங்குகிறது.இவர்கள், நமது சமூகத்தில் எத்தனையோ ஆயிரம் மனிதர்களைத் துரோகி சொல்லிக் கொன்றழித்தவர்கள். இந்தத் "தேசியவாதம்" பேசியவர்கள், எத்தனையோ முறைமைகளில் அரசோடு இணைந்து முன்னெடுக்கப்பட்ட அரசியலை மறுத்துத் தமது அடையாளத்தை முதன்மைப் படுத்தும் அரசியலுக்காக மக்களைத் துரோகியெனக் கொன்றழித்தனர். இப்போது,அதே அரசியலது இருப்பை மெல்ல முன் வைத்தபடி "தமிழீழம்"உருவாக்க அரசியல் ரீதியாகப் போராடுவதாகக் கயிறு பின்னும் இக் கூட்டம் மீளத் தமது கடந்தகாலப் பக்கங்களைத் திரும்பிப் பார்ப்பதற்கில்லை.


தமிழ்ச் சமூகமும் தனது அழிவைக் குறித்து எதுவுமே உணர்வு ரீதியாக உள்வாங்க மறுக்கிறது.அதன் இருப்புக்குச் சவால்விடும் அரசியல்-இனவழிப்பை எதிர்கொள்ள முடியாது அடிமை வாழ்வுக்குள் தனது "தன்மானத்தையே" சிதையவிட்டுள்ள இந்த மக்கள் கூட்டம் இதுவரையும் சுயமான பங்களிப்பிலான அரசியலை முன்னெடுக்காது அன்றைய அப்புக்காத்து அண்ணாமாரிடமும்,பின்னாளில் ஆயுதத் தம்பிமார்களிடமும் "அரசியலை"ஒப்படைத்துவிட்டு,"ஆரு குத்தியும் அரிசி ஆனால் சரி"என இருந்தது.ஆனால்,அவர்கள் அனைவரது உரலிலும் அரிசிக்குப் பதிலாகத் தமிழர்களது குழந்தைகளது தலைகளே கிடந்ததெனப் பின்னாளில் உணர்ந்தகொண்ட இச்சமூகம், தனது அழிவின் இறுதிக் கட்டத்தை அப்போது தாண்டியிருந்தது. எல்லாம் காலங்கடந்தபோது கடவுளாக்கப் பட்ட "தேசிய"த் தலைவரது தலை பிளந்து அவரது அந்தம் வாசிக்கப்பட்டது. கூடவே,பல இலட்சம் மக்களை அந்தக் கடவுளும்,கடவுளை வேட்டையாடிய சிங்கள இனவாத ஆளும் வர்க்கமும் கொன்று குவித்து வரலாறு படைத்துக்கொண்டன.


வரலாற்று உண்மை:


இதுவரையான தமிழ் அரசியல்-போராட்டப் போக்குகள்தமிழ் மக்களது சமுதாயத்தில் ஒரு வரலாற்றுண்மையைச் சொல்லிச் சென்றிருக்கிறதென நாம் உணருகிறோம்.அந்தவுண்மை:"ஒடுக்குபவன் உள்ளேயும்-வெளியேயும் மட்டுமல்ல தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமமும் அழிவை நோக்கிய அரசியலையே தனது விடுதலையென வாரிக்கொண்டது"என்பதே!


இந்தவுண்மையை மேலும் உறுதிப்படுத்தும் இன்றைய தமிழ்த்"தேசிய வாத அரசியலை"உற்றுநோக்கும்போது, இவ்வுண்மை இரட்டிப்பாகிறது. எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடும்,இனவாதத்தைத் தூண்டும் சுய அரசியற்றேவைக்ககான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப் படுகின்றன.


>>புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழர்களை எதிர்ப்பவர்கள்<< என்று அன்று கருத்துக்கட்டிய புலித் தேசியவாதம்,அதைச் சிந்தனா மட்டத்தில் வலுவாக ஊன்றுவதற்குத் தமிழ்ச் சிந்தனாவாதிகளையும்-பல்கலைக்கழகப் பிரமுகர்களையும் பயன்படுத்தியது.இந்தப் பேரிடியான கருத்தியல் வன்முறைக்கு உடந்தையாகவிரிந்த தமிழ்க் கல்வித்துறை பிரபாகரன் அழிக்கப்படும்வரை பிரபாகரனது செல்லப் பிள்ளைகளாகவிருந்து புலி அரசியலை ஒழுக்கமுறக் கடைப்பிடித்திருந்தது.இன்று,முழுமொத்தச் சமுதாயமும் சிதைந்து சீர் குலைந்து சிங்கள இனவாதவொடுக்குமுறைக்குப் பலியாகிவரும் இந்தக் கணம்வரை இவர்கள் தமது கடந்தகாலத் தவறுக்காக மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை.சர்வ அதிகாரமும் கொண்ட புலிகளது பாசிசச் சேட்டைக்குப் பல்லக்குத் தூக்கிய இந்தக் கூட்டம் இப்போது தமிழர்களுக்கு இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்கின்றது. இந்த மடிப்பிச்சைகூட மக்களைச் சொல்லித் தமது இழந்துபோன அதிகாரங்களைத் தமக்காக்கும் முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது.இதை, கே.பி. என்ற கேடியினது அரசியல் நகர்வில் முழுமையாக இனங்காண முடியும்.யாழ்ப்பாணப் பல்கலைகழகமும் அதன்வழி சிந்திக்க முனையும் யாழ் மேலாதிக்கச் சிந்தனைக்கும் இந்தப் போக்கு மிக உவர்ப்பாக இருக்கிறது.அது தனது கடந்தகாலத்தை மீளப் பின்னுவதில் பிரபாவுக்குப்பதில் மகிந்தா வந்தாற்கூட அதை ஏற்பதில் அவாவுறுகிறது.


இன்றிந்தப்போக்குக் கட்டும் கருத்துக்களுக்குப் பலியாகும் இளைய தலைமுறைக்கு எந்தச் சுயதெரிவும் இல்லை!அது,எல்லாவகைக் கருத்துக்களுக்குள்ளும் தம்மை நுழைக்கவிரும்பிக்கொண்டிருக்கும்போதே "புனரமைப்பு-மறுவாழ்வு"என ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.இதன்வழி மேற்கொள்ளப்படும் தமிழ்ச் சிந்தனைமட்டத்தின் ஆக்கபூர்வமற்ற செயற்பாட்டிணக்கம் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கங்களது நலனைப் பரிதியெடுக்கும்துறைசார் மதிப்பீடுகளுக்குள் தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்தை தள்ளிச் சிதைக்கமுனைகிறது.

இத்தகைய துறைசார் ஆய்வுகளின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் இந்திய-இலங்கைப்பாசிசத்திடம் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.


புலிகளது வால்கள்-எச்சங்கள்:


மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும்,வெளியுலகப் புலிகளுக்கும் மற்றும் குழுக்களுக்கும் பதவி மற்றும் பொருள் திரட்டும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.


புலிகளின்இராணுவவாதத்தின் பின்னடைவு-அழிவினது காலவர்த்தமானத்தில், எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமெனும் நிலைக்குப் புலிப் பினாமிகள் வந்துள்ளார்கள்!அவர்கள், இப்போது ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவெங்கும் மக்களை ஊடகங்களுடாக ஏமாற்றிப் பணஞ் சேர்க்க முனைகிறார்கள்.இதுள் முக்கியமாக ஜீ.ரீவீ.போன்ற சதிகார ஊடகங்கள் முதன்மையான பணச் சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.அன்று புலிகள் "தமிழீழத்தை" வைத்துப் பணம் பறித்ததன் தொடரில் இப்போது, தமிழருக்கான ஊடகமெனுங் கருத்தினடிப்படையில் ஊடகங்கள் முன்னுக்குத் தள்ளப்பட்டு அதன் தேவையினது அவசியத்துக்காகப் பணம் சேகரிப்படுகிறது.


இதைத் தவிர வேறெதை ஈழப் போராட்டம் நமக்குத் தந்துள்ளது?


இலட்சக்கணக்கான பிணங்களின் நடுவே பொருள் குவிக்கப்பட்ட வரலாறாக இந்த ஈழப்போராட்டம் இன்னும் சேடம் இழுக்கிறது!அப்பாவிகள் ஏமாறும்போது ஒருசில புலிப்பினாமி மாபியாக்கள் கோடீஸ்வரர்களாக மாறுவது நிகழ்ந்து விடுகிறது!


இன்றைக்கு வன்னியில் செத்து மடியும் மக்கள் ஏதோவொரு விதத்தில் இத்தகைய மக்கள் விரோதிகளுக்குப் பொருள் சேர்க்கும் ஊடகமாக இருக்கிறார்கள்.பிணங்களை வைத்துச் சுனாமி நிதி சேகரித்தவர்கள் எங்கே-எப்படிக் கொழுத்த முதலாளிகளாக மாறினார்களோ அப்படியே இன்னொரு கூட்டம் இந்த வன்னி அவலத்துக்குள் மாறுவதற்கு முனைகிறது!இதுவொரு சாபக்கேடானவொரு இருண்ட சூழல்.தமிழ் பேசும் மக்களின் அனைத்து வகை இருப்பையும் வியாபாரமாக்கும் இந்த மக்கள் விரோதிகள், நமது மக்களின் உண்மையான உரிமைகளுக்காக எப்போதுமே குரல்கொடுக்கவில்லை!மக்களைச் சொல்லிப் பேரம் பேசியவர்கள் இன்று தமது அழிவிலும் தம் விசுவாசிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மௌனமாக ஒப்புதல் கொடுத்துள்ளார்கள்.இது,உண்மையிலேயே ஒரு கிரிமினல் குற்றம்.


மொத்தமாகப் பார்க்கும்போது,தமிழ்ச்சமுதாயத்தின் மொத்த அரசியலே இத்தகைய மோசடிக்காரரிடம் சிக்குண்டு கிடக்கிறது.இந்தச் சிக்கலை எடுத்து, அந்த மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டுவதென்பது பெருஞ் சீரழிவான குழுக்களது அந்நியச் சதியுறவுகளால் திசை தெரியாத இருள் வெளிக்குள் அந்த மக்களது அனைத்து வலுவையும் தள்ளிவிட்டுள்ளது.ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

06.08.10