Tuesday, August 31, 2010

அம்பலமாகும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கப் பாசிசத் திமிர்!

"இரண்டாவது செய்தி எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.ஈ ஐ சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துப்போன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு சிரேஷ்ட தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் இதற்காக

இலங்கையர்களை எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன். தயவு செய்து எம்மை மன்னித்து சகல இலங்கையருக்குமாக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதில் முன்னிற்க எமக்கு உதவுங்கள்." By Kumaran Pathmanathan(LTTE)

http://thesamnet.co.uk/?p=22010#comment-177539

அம்பலமாகும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கப் பாசிசத் திமிர்!


புலிகள் சார்பாக மன்னிப்புக் கேட்கும் இந்நாள் புலித்தலைவர் கே.பத்மநாதன்மிகச் சிறப்பாக மேற்காணும் பரந்த மனப்பாண்மையோடு புலிகளது அழிவு யுத்தத்தை உலகுக்குப் பிரகடனப் படுத்துகிறார்.இதன் மூலம் தமிழ் ஆளும் வர்க்கத்தின் பாசிசப்பயங்கரவாதத் திமிரை தமிழ்பேசும் மக்களுக்கு ஒழுங்குறச் சொல்லியுள்ளார்.

இதுவரை நாம் இது குறித்து நிறைய எழுதினோம்.

புலிகள் அழிவுவாதிகளென்றும்,தமிழ்ச் சமுதாயத்தையே முழுமையாக அழித்துவிட்டு அவர்களது அனைத்துவுரிமையையும் அந்நியச் சக்திகளுக்கு விற்பவர்களென்றும் கூறியிருந்தோம்.கூடவே,புலிகள் அந்நியச் சகத்திகளது அடியாட்களே தவிர, விடுதலைப் போராளிகளல்ல என்றுஞ் சொன்னோம்.இதைத் தவிர்த்துப் புலிகள் இறுதிவரைப் போராடி மரணிப்பதாகவும்,அது வீரஞ் செறிந்ததுமாகப் புலிகளே தமக்கு மகுடஞ் சூட்டியபோது அதையும் அம்பலப் படுத்தினோம்!



இப்போது, புலித் தலைவர்களில் ஒருவரான கே.பி.என்ற கேடியே தமது அடியாட் பாத்திரத்தையும் மனித விரோத்த்தையும் ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.அது,பெரும் பாலும் சிங்கள மக்களை நோக்கிய மன்னிப்பு.இது வரவேற்கத் தக்கது!


என்றபோதும்,பிரத்தியேகமாக அவர்களது தமிழீழத்தமிழ் பேசும் மக்களிடம் இந்த மன்னிப்புக் கேட்கப்பட்டாதாக இல்லை!அவர் தமது அண்மைய நாடான இலங்கை மக்களிடமேதாம் மன்னிப்புக் கோருகிறார்.எனவே,தமிழீழம் என்பது அடிப்படையில் அவரது கருத்தின்படி இன்னும் இருப்புக்குடையதாகவே இருக்கிறது.அவர் தமிழீழத்தை உத்தியோக பூர்வமாக நிராகரிக்காதவரை இதுவே உண்மை! என்றபோதும்,இந்த அழிவுவாத புலி அடியாட்படையின் தலைவரது மன்னிப்பானது சிங்களச் சமுதாயத்தை நோக்கியதாகவிருப்பதால் அவர் இன்னொரு விஷயத்தையும் மிக அவசியமாக இலங்கை அரசுக்குப் புரிய வைக்கிறார்.


அதாவது,"இவ்வளவு அழிவை நாம் செய்திருப்பினும், இந்த அழிவைச் செய்வதற்கான இயக்கம்-போராட்டம் ஆரம்பிப்பதற்கான சூழலை ஏற்படுத்தியவர்களும்,அத்தகைய மாதிரியானவொரு மன்னிப்பைத்தமிழீழத் தேசத் தமிழ் பேசும் மக்களிடம் செய்தே தீரவேண்டும்" எனப் புறநிலையில் கருத்துக் கட்டுகிறார்.


மறைமுகமான இந்தக் கருத்தானது அவரது மன்னிப்போடு நமக்குள் புலனாவது.எனவே,புலியின் தோற்றத்துக்கும், அத்தகைய சமூகவிரோதச் சூழல் தோன்றுவதற்கும் காரணமான சிங்கள ஆளும் வர்க்கமானது நேரடியாகத் தன்னாலும்-தனது ஒடுக்குமுறையாலும் எழுந்த புலிகளாலும் பழிவாங்கப்பட்ட தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டுமென்பதே கே.பி.யின் இந்த மன்னிப்பின் அர்த்தமாகும்.


இலங்கைச் சிங்கள இனவாத அரசின் தலைவரெனும் முறையில் மகிந்தா கடந்தகாலுத்துக்கும் , நிகழ் காலத்தும் பொறுப்புடையவரென்பதால் தனது அரசுசார்பாகத் தமிழ்-சிங்கள மக்களிடமும்,குறிப்பாக முஸ்லீம் மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்!

அப்படிக் கோரும் போது,இலங்கை அரசானது தனது இனவழிப்பு அரசியலை ஒத்துக்கொண்டாக வேண்டும்.இலங்கைச் சிங்கள இனவாதத்துக்கு முகங்கொடுத்த ஒரு இயக்கமே அவ்வளவு அழிவை இலங்கைக்கு ஏற்படுத்தியதென்றால், இத்தகைய இயக்கம் தோன்றக் காரணமான அரசியலானது அதைவிட மோசமாகவே இருந்திருக்கும். எனவே,தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும் இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள ஆளும் வர்க்கம் எப்போது மன்னிப்புக் கோரும்?


எப்போது தமிழ்-முஸ்லீம் மக்களுக்கு நஷ்டவீடு கொடுக்கும்?


நியாயம் வழங்கும்-நீதி உரைக்கும்?


இதன் வாயிலாக அடிப்படையுரிமைகளை இனங்களிடம் கையளிக்கும்?


கே.பி.யின் அரசியலானது பாசிசத்தை அம்பலப்படுத்தி மன்னிப்புக் கேட்டதென்றால் இந்தப் பாசிச இயக்கத்தின் இருப்புக்கு வித்திட்ட சிங்களப் பாசிச அரசின் இனவழிப்பு-சுத்திகரிப் எப்படித் தமிழ் பேசும் மக்களை வேட்டையாடியதென எவரும் குறித்துணர முடியும்.இதன் வாயிலாகச் சிங்கள ஆளும் வர்க்கமானது இனவழிப்புச் செய்த யுத்தக் கிரிமனல் என்பது மீளப் புலனாக்கப்பட்டுள்ளது.சட்ரீதியான நடவடிக்கையானது உலக நீதி-நியாயங்களுக்கொப்ப மகிந்தாவையும் அவருக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தையும் குற்றக் கூண்டில் ஏற்றியாக வேண்டும்.இதற்கான சாட்சியே கே.பி.தான்!


அந்த வகையில் கே.பி.க்கு ஒரு தோப்புக் கரணமிட்ட நன்றி.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.09.2010

Saturday, August 28, 2010

இலங்கையின்அரசியலமைப்புச் சட்ட மாற்றம்:

இலங்கையின்அரசியலமைப்புச் சட்ட மாற்றம்:

முழுமையான சர்வதிகாரத்துக்கான தெரிவு.



சிங்களத் தேசியவாத்தைத் தூண்டியபடியே தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து மொட்டையடித்து வரும் தமிழ் தேசியத்தால் நிகழும்-நிகழ்ந்த அழிவுகளுக்கான காரணத்தையும் அதன் வாயிலாக இன்று நமது அரசியல் முன்னெடுப்பாளர்கள் வந்தடைந்திருக்கும் நிலையையும் விஞ்ஞானரீதியாகச சிந்திப்பதும்-ஆய்வதும் அவசியமாக இருக்கிறது.எனினும்,இது குறித்த ஆய்வு நிலை அநாதவராகக் கிடக்கிறது. அரசியல் யாப்புச் சட்ட மாற்றங்களைக் கோரும் மகிந்தாவின் கட்சியாதிக்கமானது பாசிசத்திற்கான திறவுகோலைச் சிறுபான்மை இனங்களைக்கொண்டே செய்து முடிக்கிறது.

மக்களது மேன்மைக்கான அரசியலை எந்தக் கட்சியும் முன்னெடுக்க முடியாதென்பதற்கு இலங்கை மிக உதாரணமான தேசமாகவும்,அதன் அரசியல் தெரிவும் கட்சிகளது சந்தர்ப்பவாதமும் மக்களை வேட்டையாடுவதற்கேற்ற பொறி முறைகளை மகிந்தாவுக்கு மாலையாக்கும்போது, சிறுபான்மை இனங்களது எதிர்காலமென்பது ஓட்டுக் கட்சி அரசியலை நம்பிக் கிடக்க முடியாதென்பதை முஸ்லீம் காங்கிரஸ் புலிகள்போன்றே நிரூபித்து வருகிறது.

சிங்களப் பேரினவாத அரசோ மிக இலாவகமாக எல்லோருக்கும் தண்ணிகாட்டும் அரச வியூகத்தைப் புலிகளைப் படுகொலை செய்து-பூண்டோடு அழித்துச் செய்தது.தனது இருப்புக்காகப் பௌத்த சிங்களப் பேரினவாத்த்தை அடிப்படையாகக்கொண்ட பழைய பொற்காலத்தை அது தொடர்ந்து பேசியபடி இன்னும், எத்தனையோ அழுத்தங்களைச் சிறுபான்மை மக்கள்மீது திணித்து வரும் மகிந்தாவின் அரசு,எப்படித்தாம் இந்தக் கே.பீ.கோஷ்டிக்கும்,முஸ்லீம் காங்கிரசுக்கும் மற்றும் கூட்டமைப்புக்கும் மனிதாபிமானமிக்க அரசாகவும்,தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமின்றிச் சிறுபான்மை இனங்கள் யாவுக்கும் தோழனாக இருக்க முடியும்?

ஜனநாயகம் என்பது வெறும் பூச்சுற்றல்தாமெனச் சொல்லும் மேற்குலகத் தேசங்களது அதே தெரிவில் ,மகிந்தாவின் இன்றைய ஆட்சி தன்னைத் தகவமைக்கும்போது பூர்ச்சுவாக் கட்சிகளுக்கேயுரிய பித்தலாட்டம் பாசிசத்தின் உச்சக்கட்டமாக அரசியல் யாப்புக்களை மாற்றுவதும், கொடிய சட்டங்கள்கொண்டு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதுமாக இருக்கிறது.இது,உலகுக்குப் புதிதாக எதையும் சொல்வதில்லை.இன்றைய மூலதன நகர்வானது மக்கள் விரோத அடக்குமுறைகளைக் கட்சியாதிக்கத்தின் மூலமே பலமாகக் கடைப்பிடிக்கிறது.



இது, காலவோட்டத்தில் படிப்படியாக வளர்ந்து சிறுபான்மை இனங்களை ஒடுக்கும்-அவமதிக்கும் ,தகர்க்கப்பட முடியாதவொரு மிகப் பலம் பொருத்திய பாசிசச் சூழலை இலங்கைச் சிவில் சமூகத்துள் ஏற்படுத்தப்போகிறது!

அன்றிலிருந்தின்றுவரை பாசிசம் நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாதமாக உருப்பெற்றபோது ,அது முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒடுக்கும் போராட்டத்தை விரிவுப்படுத்தி, உலக அரங்கில் நியாயப்படுத்தியது.இந்தத் தரத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடாக முன்னேறிய இவ்முரண்பாடானது இலங்கையையும், இனங்களையும் இன்றைய நிலைக்குக் கொணர்ந்துள்ளது.இந்தச் சிக்கலைத் தீர்க்கக் கோர முடியாத கட்சி நலன்,கட்சியுடைய தலைவர்களது செல்வத்தைப் பாதுகாப்பதிலிருந்து அதிகாரத்தைக் கோருவதால் பாசிசத்தை இரு கரங்கொண்டு வரவேற்கின்றனர்.இதற்கொரு பூச்சுற்றல் "சிறுபான்மை இனங்களது அரசியல் தலைமை மகிந்தாவுக்கு ஆதரவுசெய்து சிறுபான்மை இனங்களுக்குத் தீர்வு தேடுவதென்பது".இதைத்தாம் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமென்பது.இதைப் புலிகள் முதல் அனைவருமே செய்து முடிக்கும்போது எந்தக் கட்சியையும்-இயக்கத்தையும் எவரும் நம்பக் கூடாதென்பதும்,மக்கள் தமது அதிகாரங்களைத் தாமே கையிலெடுக்கவேண்டிய தேவையோடு அணிதிரள்வது அவசியமாக இருக்கிறது.

கடந்தகால இயக்கவாத மாயையானது எப்பவும் நமது மக்களைப் பலியிடுவதற்கானவொரு உளவியலைத் தக்கவைக்கிறது தமிழ்ச் சமுதாயத்துள். அதை, இனம் காட்டும்போது நமது மக்களின் தியாகமானது எவரது நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறதென்பதையும் இனம்காட்டி,மக்களின் இதுவரையான இன்னல்களுக்கு நேரிய முறையில் போராடாதுபோனால் நாம் அந்நியர்களின் நலனுக்காக நமது சுதந்திரத்தை-விடுதலையைத் தொடர்ந்தும் சாகடிப்போம் புலிகள் அழிந்த பின்பும். இதையேதாம் கே.பீ. கோஷ்டி மிக இலகுவாகச் செய்யத் துடிக்கின்றனர்-செய்துவருகின்றனர்.இந்த வகை அரசியல் தெரிவையேதாம் இப்போது முஸ்லீம் காங்கிரசும் செய்து ,முஸ்லீம் மக்களை மொட்டையடிக்க முனைகிறது.இந்த அரசியல் சூதாட்டத்தின் வர்க்க நலன்கள் வெவ்வேறு வடிவங்களில் முட்டி மோதுகிறது.அந்த நலன்களது தெரிவை மக்களது நலனெனச் சுட்டும் ஓட்டுக்கட்சி நலன், இலங்கைச் சிறுபான்மையினங்களை மட்டுமல்ல இலங்கையின் முழுமொத்த மக்களையும் வேட்டையாடும்.

தொடர்ந்து காலாகாலமாக இனவாதச் செயற்பாட்டுக்கு முகங்கொடுத்த தமிழ்த் தரகு முதலாளிய ஓட்டுக் கட்சிகளின் தலைவர்கள், தமது வர்க்க நலன்களின் அடிப்படையிலேயேதாம் சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொண்ட வரலாறு பலருக்குப் புரிந்திருக்கும்.புலியழிப்புக்குப் பின்பான இந்தச் சூழலில் புதிய தரகு முதலாளிகளாக மாறிவரும் புலிகளது பினாமிகளும் மற்றும் நிலத்திலுள்ள நகர்ப்புற சிறு வியாபாரிகளும் தமிழ் பேசும் மக்களது உடமைகளை யுத்தத்திலும்,யுத்தத்துக்குப் பின்னும் கொள்ளையிட்டு மூலதனத்தைப் பெருக்கியுள்ளனர் இன்று.

ஒரு அழிவு யுத்தத்தின் பின்பான இன்று ,சமூக சீவியத்தின் குலைவைச் சரி செய்யமுடியாது நமது மக்கள் சமுதாயம் வெறும் நுகர்வாளர்களாகவே இருத்தி வைக்கப்பட்டபோதும்,அவர்களுக்குள் அரசியல்-இயக்கம் செய்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் சொத்தைக் கொள்ளையிட்டு இப்போது புதிய தரகு மூலதன இயக்கத்தின் வாரீசுகளாக மாறியுள்ளார்கள்.இவர்களேதாம் மகிந்தாவின் சர்வதிகாரத்துக்கு-கட்சியாதிக்கத்துக்கு மாலை போட்டு வரவேற்கின்றனர். அதாவது, புலி மரித்துக்கொண்டிருக்கும்போதே இலங்கைச் சிங்கள இனவாத முரண்பாட்டிற்கு ஏதாவது சமரசம் செய்து,தாம் தொடர்ந்தும் தமது பழைய நிலைகளைத் தக்கவைக்க முனைந்தார்கள் இவர்கள், என்பதே உண்மையானது.

இன்றைய இலங்கையானது ஆசிய மூலதனத்துக்கேற்ற கட்சி-அதிகாரத்தைத் தொடர்ந்து இருத்த முனையும் பொருளாதார-நிதியீடுகளால் நிர்வாகிக்கப்படுகிறது. ஊசலாட்டமற்ற அதிகாரமும்,கட்சி ஆதிக்கமும் நீண்டகாலத்துக்கான தேவையாக இருக்கும் ஆசிய முதலீட்டாளர்களுக்கு ஓட்டுக்கட்சிகளைத் தமக்கேற்றபடி மாற்றியமைத்துக்கொள்வதன் தொடரில் இலங்கையின் சட்டயாப்பு மாற்றப்படும்போது, சிறுபான்மை இனங்களது உரிமைகளைக் காப்பதற்கேற்ற சட்ட மாற்றங்களைச் செய்வதில் மட்டும் சிங்கள ஆதிக்கம் பின் நிற்கிறது. இந்த முரண் நகையை என்னவென்று யோசித்தால் இதுதாம் வர்க்க நலன் என்பது.

ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றிய ஓட்டுக்கட்சிகள் இப்போது மாறிவரும் நிதிமூலதனத்தின் பிளவுபட்ட முகாங்களது தெரிவில் முழுமையான பாசிசத்தைத் தமது இருப்புக்காக ஒத்தூதி வளர்த்து வருகிறார்கள். இது, இலங்கையைமட்டும் குறித்து இயங்கவில்லை.முழுவுலகத்தின் அரசியல் கதியும் இதுவே! இதை மாற்றியமைப்பதற்கான எந்த உரிமையையும் ஆளும் வர்க்கங்கள் விட்டு வைக்கவில்லை.இதுகுறித்துப் பொதுத்தளத்தில் மிக அவசியமான உரையாடல்களை நடாத்துவது மிக அவசியமான பணி. மற்றும்படி கட்சிகட்டிப் போராடுவதென்பது கடந்த காலத்தில் குருதி குடித்த அதே கரங்களுக்கே முழுமையான தேவையாக இருக்க முடியும். மக்கள் தமது நிலைமைகளைப் புரிந்துகொண்டு, தமக்குள் அணியாவதும்,பொது எதிரிகளது உலகத் தொடர்புகளையும் அவர்களது நிகழ்ச்சி நிரல்களையும் புரிவதே இந்தக் கட்சியாதிக்கத்தையும்,அதன் பொய்மையையும் உடைத்தெறியும் முதல் வழி.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
28.08.2010

Thursday, August 26, 2010

மாண்ட புலியும்,மீண்ட புலியும்...

மாண்ட புலியும்,மீண்ட புலியும்...


-கே.பி.இன்பேட்டியும்,பேடிகளது போட்டியும் சிறு நோக்கு.



"இலங்கை அரசு காட்டும் சரணடைந்த புலிகள் எலிகளென்பதும்,உண்மைப் புலிகள் சரணடைந்த கையோடே படுகொலைப்பட்டதும் வரலாறாக இருக்கிறது."


மிழ்பேசும் மக்களும்,உலகமும் நன்றாகவே ஏமாற்றப்படுகிறார்கள். இலங்கையினது யுத்தக் குற்றங்கள் யாவும் மிகவும் நுணுக்கமாக மறைக்கப்பட்டு வருவதற்குப் புலிகளது "துரோகிகளே"உடந்தையாக இருக்கின்றனர். இன்று, புலிகளது தரப்பாக நின்று நமக்கு வகுப்பெடுக்கும் கே.பி. உலக உளவு அமைப்புகளதும், இலங்கை-இந்தியச் சீன அரசுகளது நேரடியான எடுபிடிதாமெனச் சொல்ல முடியும். உள்ளிருந்து கருவறுக்கும் தந்திரத்தில் நவீன எல்லாளப் பிரபாகரனது மண்டையைச்சிங்களது நவீனத் துட்டக்கைமுனு கோத்தபாய பிளந்தபோது, அந்தச் சரித்திரத்தோடு பிரபாகரனது அனைத்துச் சேனைகளும் படுகொலை செய்யப்பட்டனர்.


இன்று,புலிகளின் இராணுவப் பிரிவில் எவருமே இலங்கையில் மிச்சம் இல்லை என்பது வரலாறு.


இதன் உண்மையைத் திட்டமிட்டு மறைக்கும் கே.பி. தமிழ்பேசும் மக்களை நடுச் சந்தியில் வைத்து ஏமாற்றப் பேட்டிகளாக நீட்டி வருகிறார். அதையும் முக்கியமெனப் புரட்டும் தமிழ் அறிவோ வரலாற்றுக் கொடுமையை மறைத்து இலங்கை அரசினது போர்க் குற்றங்களை உலகறிச் செய்யாது மூடி வைத்து அழகு பார்க்கிறது.இது குறித்து மிக நீண்ட ஆய்வுகள் அவசியம்.


கே.பி.போன்ற சதிகாரர்களையும்,நெடியவன்,உருத்திரகுமார் போன்ற கயவர்களையுங் குறித்து சரியான புரிதலை முன்வைத்தாகவேண்டும்.



இவர்களது துணையின்றிப் புலிகள் முழுமையாக அழிந்து போயிருக்க முடியாது.பல்லாயிரம் போராளிகள் படுகொலைப்பட்டனர். "பிடிபட்டவர்கள் என்பதும்-சரணடைந்தவர்கள் என்பதும";,அவர்களுக்கு "மறு வாழ்வு-புனர்வாழ்வு" கொடுப்பதென்பதும் ஒரு ஒத்திகை நாடாகமாக அரங்கேறுகிறது.


இதை உண்மையாக்கும் கயவர்களை என்னவென்பது?

அரசுசார வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வுப் புனரமைப்புக் கழகம்:

அன்றும்-இன்றும்,உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் "அரசுசாரா"அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கையோ புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய "அரசுசாரா" அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது. இது, மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.இதன் பாய்ச்சல் சாதரண மனிதர்களைக்கூட விட்டு வைக்கவில்லை.தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் அகலக் கால் பதித்து வருகிறது.பற்பல வடிவங்களில் அதன் வேர் பரவுகிறது.


இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இன்று, இலங்கையிலும்,புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.கல்விக் கழகங்கள்-பாடசாலைகள்,அபிவிருத்தி அமைப்புகள்,கட்சிகள்-இயக்கங்கள்,குழுக்கள்,அமைச்சுகள்-நிறுவனங்கள்,சிரமதான மையங்கள்-சர்வோதயங்கள் என்று பற்பல வடிவங்கள்.அதுள் முன்னணி ஊடகங்கள்கூட இலங்கை அரசினது நிகழ்ச்சி நிரலுக்கமைய மக்களை ஏமாற்றுகிறது.



இதுள்"முன்னாள் புலிப் போராளிகளுக்கு" மறுவாழ்வுக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கத்தற்கான பண்பைக் கொண்டியங்குகின்றன. சாகடிக்கப்பட்ட முன்னாள் புலித் தலைவர் அமரகதி பெற்ற கையோடு, அவரது வாய் மொழியூடாகப் புலித்தலைமைக்கான புதிய தலைமைத் தகுதி பெற்ற கே.பீ.என்ற இலங்கை இனவாத அரசின் ஆசி பெற்ற அரசியற் சாணாக்கியன் போடும் புள்ளிகள்,எமது மக்களது எதிர்காலத்தைக் குறித்துச் சிரிப்புக்கிடமான கருத்துக்களை விதைக்கிறது.


டி.பீ.எஸ்.ஜெயராஜ்க்கு வழங்கும் பேட்டியின் தெரிவாக அவரது மொழிவுகள் யாவும் இதுவரையான தேசிய இனப் பிரச்சனைக்கான நெம்பு கோலாக இருப்புக்குள்ளான இனவொடுக்குமுறை குறித்த சிங்கள அரசுகளது இனவொடுக்குமுறைசார் அரசியலைப் பேசுவதற்கான எந்தத் தார்மீகப் பண்பையும் புலித்துவ அரசியலது "உண்மை" பேசுதலிலிருந்து மறுப்பதில் முடிவுறுகிறது.இதன் உள்ளார்ந்த அர்த்தம்ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது ஆகுமா?


ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை மறைத்துவிட்டு மறுகூறைத்(யுத்தத்தில் பாதிப்படைந்த தமிழ்பேசும் மக்களது மறுவாழ்வு) தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.சிங்கள-பௌத்த மையவாதத்தின் தெரிவுகளிலொன்றான"இலங்கையர்கள்"எனும் அடையாளத்துக்கூடாக இயங்கும் அரசியலை முன்னெடுக்கும் இந்த ஓடுகாலிக் கூட்டங்கள் (புலிகளது பிரிவுகள்) இலங்கை அரசினது கைக்கூலிகளானவர்கள் என்பதை நாம் புரிந்தாகவேண்டும்.இவர்களுக்கு முகமூடி தயாரித்து,வால்கட்டி இயக்கும் இலங்கையின் இன்றைய தெரிவுக்கு உலக ஏகாதிபத்தியங்களது அதே பிழைப்புவாத அரச தந்திரமே வழிகாட்டுகிறது.


ஆசிய மூலதனத்தின் வருகையின் பலத்தோடு புரளும் பணத்தை வைத்து இத்தகைய அமைப்புகளையும் வளர்த்து, இதன் பக்கத்துணையோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பித் தமது அதிகாரத்தைத் தொடர்ந்து பேணும் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கமானது மிகவும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியல் சிறுபான்மை இனங்களை வீழ்த்தி வேட்டையாடுகிறது.இதன் தெரிவிலிருந்தே கே.பீ.இன் "வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வுப் புனரமைப்புக் கழகம்" புலிகளின் "முன்னாள் போராளிகளது" மறுவாழ்வு-மன்னிப்பு எனப் பேசுகிறது. இந்தத் தொடரில் மக்களது உரிமைகளை வேட்டையாடுவதில் நெடியவனும்சரி இல்லைக் கொடியவனும்சரி எந்த மக்களது தலையில் எதைப் போட்டாவது தமது எஜமானர்களுக்குத் தமிழ்பேசும் மக்களை இரையாக்குவதில் மிகக் கவனமாகக் காய்களை நகர்த்துகின்றனர்.


இலங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக ப் புலிகளை வளர்த்தவர்களே அப் புலியை அழித்துவிட்டு,இப்போது "எஞ்சிய-மிஞ்சிய புலிகளுக்கு" மறுவாழ்வு கொடுப்பதாக நடிப்பதைத் திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.

இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவால்,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு விட்டுவைக்கும்.உழைப்பவர்களது போராட்டங்களை இனவாத அரசியலின் தெரிவோடு மட்டுப்படுத்தும் மக்கள் விரோதச் சட்டங்களோடு நகரப்போகும் ஆசிய மூலதன "அபிவிருத்தி-வேலைவாய்ப்பு"என்ற நச்சுப் பொருண்மிய அசைவாக்கம் இன்னொரு முறை இலங்கையில் அவசரகாலச் சட்டவரைவுக்குப் புதிய சாதகங்களைத் திறந்துவிடலாம்.


சிறையிலுள்ள "புலிகளுக்கு" மறுவாழ்வு:

இது குறித்து நிறைய ஐயங்களுள்ளன.வன்னிப் பேரழிவு யுத்தத்தில் அழிக்கப்பட்ட மக்களும்,போராளிகளும் ஏராளம்.உண்மையில் களத்தில் பயிற்சியுடன் நின்ற அனைத்துப் புலிகளும் அழிக்கப்பட்டே விட்டார்கள்.புலிகளது போராளிகளில் கிட்டத்தட்ட அனைவரும் பாதகச் சிங்களவரசால் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர் என்பது, சில ஆய்வுகளது தரவுகளிலிருந்து அறியக் கூடியதாகவுள்ளது.இந்தப் புள்ளியிலிருந்து செய்யப்பட்டும் ஆய்வும்,அதன் தெரிவும் இன்னொரு பொய்யை அம்பலத்துக்குக் கொணருகிறது.



கடந்த வன்னி அழிவு யுத்தத்தை ஆரம்பித்த அரசு.அதைச் செய்யும்போது தம்மால் முழுமையாக அழிக்கப்படப்போகும் புலிகளது உடல்களுக்கு பல்லாயிரம் உறைகளை வெளிநாடுகளிலிருந்து தருவிக்க முனைந்து அம்பலப்பட்டது ஞாபகம் இருக்கட்டும்.


உலகச் சட்ட நியாயங்கள்-யுத்த தார்மீகக் கடப்பாடுகளையெல்லாம் அமெரிக்கப் பாணியில் கடாசிவிட்டுப் புலியழிப்பை முழுமையாகச் செய்துவிட்ட இலங்கை அரசானது உலகை ஏமாற்றுமொரு பெரிய நாடகத்தைச் செய்திருக்கிறதென்பது இப்போது மெல்லக் கசிகிறது.


யுத்தத்தில் புலிகள் சரணடைந்தபோது அவர்களைக் கௌரவமாக நடாத்தியதாகவும்,அவர்கள் இப்போது பத்தாயிரத்துக்குமேல் புனர் வாழ்வுச் சிறையில் இருப்பதாகவும் உலகுக்குக் காட்டுவது தனது கொலைக்கரத்தை மறைப்பதற்கானவொரு சதுரங்க விளையாட்டே.


இதை கே.பீ போன்ற கொடிய மனிதர்களது தயவோடு அரங்கேற்றும் கோத்தபாயக் கூட்டம் மிக நேர்த்தியாகப் புலிகள் அனைவரையும் பூண்டோடு அழித்துள்ளது.சரணடைந்த எவரையுமே அது விட்டு வைக்கவில்லை!


இப்போது"மறுவாழ்வு-புனர் வாழ்வு "கொடுக்கப்பட்ட"புலிகள்" என்பவர்களும்,இன்னும் புனர்வாழ்வுக்காகச் சிறையில் அடைத்து வைத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களும் வெறும் அப்பாவி இளைஞர்களே.வன்னியில் அப்பாவி இளைஞர்களை முகாங்களிலிருந்து தூக்கி வந்து உலகை ஏமாற்றும் இலங்கைப் பாசிச அரசோ தனது கொலைப் பாதக யுத்தத்தை மிக அழகாகவே மறைக்கிறது.


கோத்தபாயவின் அகராதியில் புலிகளது உண்மையான எந்தப் போராளியும் உயிருடன் இருக்கப்படாது.இதை மிகக் கறாராகக் கடப்பிடித்து புலிகள் எவரையும் உயிர் தப்பவிடாது கொலைசெய்து புதைத்த இக் கூட்டம் இப்போது, மறுவாழ்வு கொடுக்கும் "புலிகள்" என்பவர்கள் வெறும் எலிகள் என்பது அம்பலத்துக்கு வருகிறது.


யுத்த மரபுகளை மீறித்தாம் இலங்கை மண்ணிலிருந்து புலிகளை அழித்துத் துடைத்தெறிந்தது இலங்கைப் பாசிச அரசு.அது,கடைப்பிடித்த இராஜ தந்திரம் முழுமையாக ஈராக்கில் நடந்த தந்திரத்துக்கு ஒப்பானது.இந்திய-சீன உளவுப்படைகளது நேரடியான வழிகாட்டலது தயவோடுதாம் புலிப் போராளிகள் அனைவரையும் ஒன்றும் விடாது கொன்றழித்தவர்கள். சரணடைந்த அனைவரையும் மண்டையில்போட்டுக் கொன்ற ஒருசில வீடியோக்கள்தான் அதன் உண்மையான கோரமுகத்தின் சிறுவொழுக்கு!


இத்தகைய பாரிய மோசடியை அரங்கேற்றத் துணை நின்ற கேடியான கே.பி. இப்போது வித்தைகாட்டும் "மறுவாழ்வு-புனர்வாழ்வு" என்பது அப்பாவி இளைஞர்களை வைத்து நடாத்தப்படும் நாடகமே.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.08.2010

Friday, August 06, 2010

வரலாற்று உண்மை:

வரலாறு பூராகவும்மக்கள்
ஏமாற்றப்படுகிறார்கள்



ழப்போராட்டத்தின் கறைபடிந்த வரலாறு குருதியினால் எழுதப்பட்டதாகினும்அஃது, ஒரு சில தமிழ்க் குடும்பங்களைச் செல்வந்தர்களாக்கியதில் இலட்சக்கணக்கான மக்களின் தலையைக் கொய்தெறிந்துள்ளதுதாம்.என்றபோதும்,சிங்கள இனவாத அரசு தமிழ்பேசும் மக்களுக்கான அழிவைத் திட்டமிட்டுச் செய்ததன் பலாபலனே இஃதென்பதில் எனக்குச் சந்தேகமெழுகிறது.

இன்றைய பின் போராட்டச் சூழலில் மிக நுணுக்கமாகப் புலிகளது வெளியுலகத் தலைமைகளையும் அதன் அரசியற்றலைமையும் உற்று நோக்கும்போது இவர்தம் போராட்டத்துள்ளும்-அரசியல் நகர்வுக்குள்ளும் மக்களது "விடுதலை"என்பது பெயரளவிலும் இருந்திருக்கவில்லையெனப் பகரமுடியும்.


புலிகளது இராணுவ ஜந்திரம் பிரபாகரனோடு அழித்து முடிக்கப்பட்ட கையோடு புலிகளது வெளியுலகத் தலைமையும் ,அதன் கட்டமைப்பும் இலங்கை அரசோடு மறைமுகமாகவும்-நேரடியாகவும் சேர்ந்து இயங்குகிறது.இவர்கள், நமது சமூகத்தில் எத்தனையோ ஆயிரம் மனிதர்களைத் துரோகி சொல்லிக் கொன்றழித்தவர்கள். இந்தத் "தேசியவாதம்" பேசியவர்கள், எத்தனையோ முறைமைகளில் அரசோடு இணைந்து முன்னெடுக்கப்பட்ட அரசியலை மறுத்துத் தமது அடையாளத்தை முதன்மைப் படுத்தும் அரசியலுக்காக மக்களைத் துரோகியெனக் கொன்றழித்தனர். இப்போது,அதே அரசியலது இருப்பை மெல்ல முன் வைத்தபடி "தமிழீழம்"உருவாக்க அரசியல் ரீதியாகப் போராடுவதாகக் கயிறு பின்னும் இக் கூட்டம் மீளத் தமது கடந்தகாலப் பக்கங்களைத் திரும்பிப் பார்ப்பதற்கில்லை.


தமிழ்ச் சமூகமும் தனது அழிவைக் குறித்து எதுவுமே உணர்வு ரீதியாக உள்வாங்க மறுக்கிறது.அதன் இருப்புக்குச் சவால்விடும் அரசியல்-இனவழிப்பை எதிர்கொள்ள முடியாது அடிமை வாழ்வுக்குள் தனது "தன்மானத்தையே" சிதையவிட்டுள்ள இந்த மக்கள் கூட்டம் இதுவரையும் சுயமான பங்களிப்பிலான அரசியலை முன்னெடுக்காது அன்றைய அப்புக்காத்து அண்ணாமாரிடமும்,பின்னாளில் ஆயுதத் தம்பிமார்களிடமும் "அரசியலை"ஒப்படைத்துவிட்டு,"ஆரு குத்தியும் அரிசி ஆனால் சரி"என இருந்தது.ஆனால்,அவர்கள் அனைவரது உரலிலும் அரிசிக்குப் பதிலாகத் தமிழர்களது குழந்தைகளது தலைகளே கிடந்ததெனப் பின்னாளில் உணர்ந்தகொண்ட இச்சமூகம், தனது அழிவின் இறுதிக் கட்டத்தை அப்போது தாண்டியிருந்தது. எல்லாம் காலங்கடந்தபோது கடவுளாக்கப் பட்ட "தேசிய"த் தலைவரது தலை பிளந்து அவரது அந்தம் வாசிக்கப்பட்டது. கூடவே,பல இலட்சம் மக்களை அந்தக் கடவுளும்,கடவுளை வேட்டையாடிய சிங்கள இனவாத ஆளும் வர்க்கமும் கொன்று குவித்து வரலாறு படைத்துக்கொண்டன.


வரலாற்று உண்மை:


இதுவரையான தமிழ் அரசியல்-போராட்டப் போக்குகள்தமிழ் மக்களது சமுதாயத்தில் ஒரு வரலாற்றுண்மையைச் சொல்லிச் சென்றிருக்கிறதென நாம் உணருகிறோம்.அந்தவுண்மை:"ஒடுக்குபவன் உள்ளேயும்-வெளியேயும் மட்டுமல்ல தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமமும் அழிவை நோக்கிய அரசியலையே தனது விடுதலையென வாரிக்கொண்டது"என்பதே!


இந்தவுண்மையை மேலும் உறுதிப்படுத்தும் இன்றைய தமிழ்த்"தேசிய வாத அரசியலை"உற்றுநோக்கும்போது, இவ்வுண்மை இரட்டிப்பாகிறது. எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடும்,இனவாதத்தைத் தூண்டும் சுய அரசியற்றேவைக்ககான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப் படுகின்றன.


>>புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழர்களை எதிர்ப்பவர்கள்<< என்று அன்று கருத்துக்கட்டிய புலித் தேசியவாதம்,அதைச் சிந்தனா மட்டத்தில் வலுவாக ஊன்றுவதற்குத் தமிழ்ச் சிந்தனாவாதிகளையும்-பல்கலைக்கழகப் பிரமுகர்களையும் பயன்படுத்தியது.இந்தப் பேரிடியான கருத்தியல் வன்முறைக்கு உடந்தையாகவிரிந்த தமிழ்க் கல்வித்துறை பிரபாகரன் அழிக்கப்படும்வரை பிரபாகரனது செல்லப் பிள்ளைகளாகவிருந்து புலி அரசியலை ஒழுக்கமுறக் கடைப்பிடித்திருந்தது.இன்று,முழுமொத்தச் சமுதாயமும் சிதைந்து சீர் குலைந்து சிங்கள இனவாதவொடுக்குமுறைக்குப் பலியாகிவரும் இந்தக் கணம்வரை இவர்கள் தமது கடந்தகாலத் தவறுக்காக மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை.சர்வ அதிகாரமும் கொண்ட புலிகளது பாசிசச் சேட்டைக்குப் பல்லக்குத் தூக்கிய இந்தக் கூட்டம் இப்போது தமிழர்களுக்கு இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்கின்றது. இந்த மடிப்பிச்சைகூட மக்களைச் சொல்லித் தமது இழந்துபோன அதிகாரங்களைத் தமக்காக்கும் முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது.இதை, கே.பி. என்ற கேடியினது அரசியல் நகர்வில் முழுமையாக இனங்காண முடியும்.யாழ்ப்பாணப் பல்கலைகழகமும் அதன்வழி சிந்திக்க முனையும் யாழ் மேலாதிக்கச் சிந்தனைக்கும் இந்தப் போக்கு மிக உவர்ப்பாக இருக்கிறது.அது தனது கடந்தகாலத்தை மீளப் பின்னுவதில் பிரபாவுக்குப்பதில் மகிந்தா வந்தாற்கூட அதை ஏற்பதில் அவாவுறுகிறது.


இன்றிந்தப்போக்குக் கட்டும் கருத்துக்களுக்குப் பலியாகும் இளைய தலைமுறைக்கு எந்தச் சுயதெரிவும் இல்லை!அது,எல்லாவகைக் கருத்துக்களுக்குள்ளும் தம்மை நுழைக்கவிரும்பிக்கொண்டிருக்கும்போதே "புனரமைப்பு-மறுவாழ்வு"என ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.இதன்வழி மேற்கொள்ளப்படும் தமிழ்ச் சிந்தனைமட்டத்தின் ஆக்கபூர்வமற்ற செயற்பாட்டிணக்கம் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கங்களது நலனைப் பரிதியெடுக்கும்துறைசார் மதிப்பீடுகளுக்குள் தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்தை தள்ளிச் சிதைக்கமுனைகிறது.

இத்தகைய துறைசார் ஆய்வுகளின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் இந்திய-இலங்கைப்பாசிசத்திடம் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.


புலிகளது வால்கள்-எச்சங்கள்:


மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும்,வெளியுலகப் புலிகளுக்கும் மற்றும் குழுக்களுக்கும் பதவி மற்றும் பொருள் திரட்டும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.


புலிகளின்இராணுவவாதத்தின் பின்னடைவு-அழிவினது காலவர்த்தமானத்தில், எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமெனும் நிலைக்குப் புலிப் பினாமிகள் வந்துள்ளார்கள்!அவர்கள், இப்போது ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவெங்கும் மக்களை ஊடகங்களுடாக ஏமாற்றிப் பணஞ் சேர்க்க முனைகிறார்கள்.இதுள் முக்கியமாக ஜீ.ரீவீ.போன்ற சதிகார ஊடகங்கள் முதன்மையான பணச் சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.அன்று புலிகள் "தமிழீழத்தை" வைத்துப் பணம் பறித்ததன் தொடரில் இப்போது, தமிழருக்கான ஊடகமெனுங் கருத்தினடிப்படையில் ஊடகங்கள் முன்னுக்குத் தள்ளப்பட்டு அதன் தேவையினது அவசியத்துக்காகப் பணம் சேகரிப்படுகிறது.


இதைத் தவிர வேறெதை ஈழப் போராட்டம் நமக்குத் தந்துள்ளது?


இலட்சக்கணக்கான பிணங்களின் நடுவே பொருள் குவிக்கப்பட்ட வரலாறாக இந்த ஈழப்போராட்டம் இன்னும் சேடம் இழுக்கிறது!அப்பாவிகள் ஏமாறும்போது ஒருசில புலிப்பினாமி மாபியாக்கள் கோடீஸ்வரர்களாக மாறுவது நிகழ்ந்து விடுகிறது!


இன்றைக்கு வன்னியில் செத்து மடியும் மக்கள் ஏதோவொரு விதத்தில் இத்தகைய மக்கள் விரோதிகளுக்குப் பொருள் சேர்க்கும் ஊடகமாக இருக்கிறார்கள்.பிணங்களை வைத்துச் சுனாமி நிதி சேகரித்தவர்கள் எங்கே-எப்படிக் கொழுத்த முதலாளிகளாக மாறினார்களோ அப்படியே இன்னொரு கூட்டம் இந்த வன்னி அவலத்துக்குள் மாறுவதற்கு முனைகிறது!இதுவொரு சாபக்கேடானவொரு இருண்ட சூழல்.தமிழ் பேசும் மக்களின் அனைத்து வகை இருப்பையும் வியாபாரமாக்கும் இந்த மக்கள் விரோதிகள், நமது மக்களின் உண்மையான உரிமைகளுக்காக எப்போதுமே குரல்கொடுக்கவில்லை!மக்களைச் சொல்லிப் பேரம் பேசியவர்கள் இன்று தமது அழிவிலும் தம் விசுவாசிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மௌனமாக ஒப்புதல் கொடுத்துள்ளார்கள்.இது,உண்மையிலேயே ஒரு கிரிமினல் குற்றம்.


மொத்தமாகப் பார்க்கும்போது,தமிழ்ச்சமுதாயத்தின் மொத்த அரசியலே இத்தகைய மோசடிக்காரரிடம் சிக்குண்டு கிடக்கிறது.இந்தச் சிக்கலை எடுத்து, அந்த மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டுவதென்பது பெருஞ் சீரழிவான குழுக்களது அந்நியச் சதியுறவுகளால் திசை தெரியாத இருள் வெளிக்குள் அந்த மக்களது அனைத்து வலுவையும் தள்ளிவிட்டுள்ளது.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

06.08.10

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...