கட்டுரைத்தொடர் (2):
புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"
குழுவாதம் தரும் புதிய நெருக்கடிகள்:
தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்"தமிழீழப் போராட்டம்"குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.
புலம்பெயர் தமிழர்கள் தமது அடையாளங்களை இதுவரை புலிவழிப் போருக்குள் இனங்காண முனைந்தபோது,புலிகளால் கட்டியமைக்கப்பட்ட போலிக் கோசமான தமிழீழம் அவர்களை வலுவாகப் புலிகளோடும்"தமிழீழ"த்தோடும் பிணைத்துக்கொண்டது ஒரு தற்செயல் நிகழ்வாகும்.இலங்கையைவிட்டு வெளியேறிய தமிழர்கள் யுத்தம்-கொலை அரசியலிலிருந்து தப்பவே முயன்றுகொண்டனர்.இதுள்,அந்நியத் தேசங்களது அகதிகளுக்கான நெருக்குவாரங்கள் சந்தர்ப்ப வாதமாகத் "தேசம்-தேசியம்" எனும் கருத்து நிலைகளுக்கு முக்கியமளிக்கும் அக நெருக்கடிளைத் தமிழ்பேசும் புலம்பெயர் மக்களுக்கு ஏற்படுத்தியபோது அதைப் பலமாகப் பயன்படுத்தியவர்கள் பிழைப்புவாதப் புலிப் பினாமிகளும் அவர்களது பின்னாலிருந்த மேற்குலக-இந்திய எஜமானர்களுமே.
இலங்கையில் தமது அடையாளங்களைத் தேடும்புலம்பெயர் இளைய அகதிகள்தமது பெற்றோர்களது புரிதலிலிருந்து மேல் நோக்கிய புரிதலை மேற்குலகக் கருத்தியற் படிமத்திலிருந்தே பெறுகிறார்கள்.வளர்ச்சியடைந்த சமுதாயங்களது கருத்தியற் படிமத்தில் வந்தமர்ந்த "தமிழீழம்"மேலும் வலுவான அக நெருக்கடியை இளைய தலைமுறைக்கு வழங்கும் பல சந்தர்ப்பங்களை அவர்கள் தமது புற அடையாளங்களை வெள்ளையினத்தவர்கள் எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தமது வேர்கள்"தமிழீழத்தில்"பதியமிடத்தான் முடியுமென எதிர்பார்த்தார்கள்.ஆனால்,அந்தத்"தமிழீழம்"சாத்தியமானதா என்ற ஒரு கேள்வியை அவர்கள் புலி வழியிலேயே புரிந்து கொண்டனர்.
இவர்களை நோக்கியதான இன்றைய அணிச்சேர்க்கைகள்-கட்சி கட்டும் இயக்கவாதக் குறுகல் பார்வைகள் எடுத்தாளும் அரசியலை அம்பலப்படுத்தப்படவேண்டும்! இக்கட்டுரையது உள்ளடக்கம் இந்த நோக்கு நிலையிலிருந்தே எடுத்தாளப்படுகிறது,நிலத்தில் வாழும்மக்கள் இதுவரையான அனைத்துக் கொலைகளுக்கும்,அழிவுகளுக்கும் முகங்கொடுத்தவர்கள்.அவர்களது தலைமுறைசார்ந்த அரசியல் தலைமைகள் இதுவரையான அனைத்துக் கொலைகளிலும் ,அழிவுகளிலும் தமது கரங்களை ஏதோவொரு வகையில் திணித்திருக்கின்றார்கள். இவர்களே,இன்று தமது இருப்பினது தெரிவாகப் புலம்பெயர்ந்த மக்களது குழந்தைகளையும்,அவர்தம் அறிவையும் மேற்குலகத் தேசங்களுக்கேற்ற வகையில் தகவமைக்கின்றனர்.இது,ஆபத்தானது!மீளவும்,தமிழீழஞ் சொல்லி இளைய தலைமுறையின்அக வளர்ச்சியை குறுந்தேசிய இனவாதப் பண்புக்கொப்ப மாற்ற முனையும்.இது,புரட்சிகரமாக சமூகத்தைப் புரிவதற்குக் குறுக்கில் நிற்கும் கருத்தியற்றடையை மேலும் இருப்புகுட்படுத்தும்.இத்தகையவொரு சூழல் வலுத்திருந்தபோதுதாம் புலிகளது பாசிசக்கட்டமைப்பு இலங்கையிலும்,புலத்திலும் தொடர்ந்து நீடித்தது.அதைத் தக்கவைக்க முனையும் இன்றைய அணிச் சேர்கைகளது"புரட்சிகர"வாதங்களும்,தெரிவுகளும் இத்தகைய புலவழிக் கட்டமைப்பைத் தொடர்ந்து தமக்குள் உள்வாங்கிப் புலிகளது அதே பாணித் "தமிழீழம்"சார்ந்த பிரமைகளது அரசியல் பிரகடனங்களது வழியில், மேற்குலகத்தின் இலங்கைக்கான அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைகின்றன.
வரலாற்றுப் பேரிடி:
புலிகளின் தோல்வி-புலிகளின் அழிவுதரும் வலி, ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இந்த வலிமிக்க வரலாற்றுப் பாத்திரத்தில் புலிகள் இல்லாத இன்றைய சூழலில், இன்னும் எத்தனை குழுக்கள்-கட்சிகள்,இயக்கங்கள் "புரட்சி-விடுதலை,சுயநிர்ணயவுரிமை" எனும்பெயர்களால் தமிழ்பேசும் மக்களைக்குட்டியபடி,அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு முண்டுகொடுப்பார்களோ அவ்வளவு பேரும் இனிப் "புரட்சி" பேசுவார்கள். இவர்களை இனங்கண்டு அம்பலப்படுத்தாதுபோனால் தமிழ்பேசும் மக்களைச்சிங்கள-ஆசிய-மேற்குலக மூலதனத்துக்குத் தத்துக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக்குவதில் வெற்றி கண்டுவிடுவார்கள்.தமிழ்பேசும் மக்களுக்கு விடிவுவேண்டிச் சிந்திப்பவர்கள் இவ்வகைப் போராட்டத்தைக் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வது அவசியமான பணி.எனவே,திடீரென முளைவிடும் கூட்டுக்கள்-கழகங்கள்,பொது அமைப்புகளெனும் முகமூடிகளை விலத்தி அவர்தம் உண்மை முகங்களைக் கண்டடையவேண்டும்.
தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான ப+ர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை. ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.இதை மேலும் தொடர்வதற்கான பல் முனைப் போராட்டம் தமிழ்மக்கள் பேரால் நடந்தேறுகிறது.
தமிழ்த் (வி)தேசிய "விடுதலை"ப் போராட்டத்தில் புலித் தலைமை வன்னியில் மக்களது குழந்தைகளைத் துடைத்து அள்ளிப் போருக்குள் திணித்துக் கொன்றதில் இன்றெவர் குற்றவுணர்வோடு இருக்கிறார்?
இது,வரலாற்றுப் பேரிடி அல்லவா?
இந்த அழிவுயுத்தம் செய்த வரலாற்றுத் தவறு ஒரு இனத்தையே அழித்து ஏப்பம் விட்டதல்லவா?
இதைக் குறித்துத் தேடுதலைச் செய்து நமது மக்களை சமூக நெருக்கடியிலிருந்து காப்பதற்கு முனையாத கபோதிகள் கட்சி கட்டுவதில் முனைப்புறும்போது,இந்தச் சொறி அரசியலை"புரட்சி"யின் பெயரால் ஆதரிப்பதென்பது அடி முட்டாள்த் தனமானது.இதைப் புரட்சி என்பவர்கள் மனிதசமுதாயத்தின் அசைவியக்கத்தையே புரியாது, அந்நியச் சதிகளுக்கு உடன்படும் பிழைப்பு வாதிகளென்பதில் எவரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
அது,புகலிடச் சிந்தனை மையத்தின்"புதிய ஜனநாக மக்கள் முன்னணி"ஆகவிருந்தாலென்ன அன்றி மே 18 இயக்கமாக இருந்தாலுஞ்சரி அனைவரதும் தெரிவும் இதிலிருந்து மாறுபடவில்லை.
பம்மாத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழருக்கான அரசியலைச் சொல்லியே கால் நூற்றாண்டாக எத்தனை ஆயிரம் தமிழர்களைப் பலிகொடுத்துள்ளது-எத்தனை ஆயிரம் தமிழர்களைத் துரோகி சொல்லிக் கொன்றிருக்கிறது?இது,வரலாற்று நெருக்கடி.ஒரு இனத்தின் வாழ்வோடு களமாடிய வலாற்றுக் குற்றம் இன்னும் குற்றமாகக்கூட புரிய வைக்கப்படவில்லை!அது,தேச நிர்மாணத்துக்கான-இனவொடுக்குமுறைக்கெதிரானவொரு போராட்டமாகவும்,அதுள் சில தவறுகள் நேர்ந்ததாகவும் கற்பிக்கப்படும் வரலாற்று மோசடிக்கு எதிராகப் புதிய புரிதல்கள் வாசிக்கப்பட வேண்டும்.
தொடரும் இயக்கவாத மாயையின்வழி அந்நியச் சேவை:
படுகொலை அரசியலுக்குள் உந்தப்பட்ட இயக்கவாத மாயை குறித்து எவரும் மீளாய்வு செய்ய வக்கில்லை.எனினும், புலிகளது வரலாறு ஏதோவொரு முனையில் பாமரத்தனமாகச் சொல்லப்படுகிறது.அதுவும் வரலாற்றுக் குறிப்பெனப் பதியப்படும் அபத்தம்வேறு.இந்த நிலையிற்றாம் நாம் இன்றைய திடீர் புரட்சிகரர்களை மதிப்பீடு செய்ய முனைகிறோம்.இது அவசியமான பணி.
புலிகள் செய்த மக்கள் விரோத அழிவுயுத்த அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகளை விமர்சித்தும்-ஆதரித்தும் தம்மைத் தொடர்ந்தும் "புரட்சிக்கரர்" என நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் தமிழ் மக்களின்மனங்களோடு இயக்கவாத அரசியலை மீளக் கட்டுவதென்பது கடைந்தெடுத்த துரோகத்தனமானதாகும்.
இது,அரசியல் மோசடி!
எமது சமூகத்தின் உயிர்த்திருப்பே மாற்று இனத்திடம் அல்லது மாற்றார் தயவில் பொருளாதார நலன்களைக் கனவுகண்டது.இது முற்றிலும் சுய விருத்திக்கான எல்லாவகையான கதவுகளையும் இறுக மூடிவிட்டு மாற்றாரில் தங்கி வாழும் ஒரு உதவாக்கரை,கையாலாகாத இனமாக நமது மக்களை மெல்ல உருவாக்கிய சிங்கள மற்றும் அந்நியச் சக்திகள் இன்று நமது மக்களைப் படு குழியில் தள்ளிவிட்டுப் புலியழிப்புக்குப்பின் புலிகளது உபக் கூறுகளைப் பயன்படுத்தும் இராஜதந்திரத்தில் நோர்வே முதல் பிரித்தானியவரை தனது வலையை விரிக்கிறது.அங்கே,புலிகளது தனிப்பேட்டை ரவுடிசத்துக்கு "தேசயவிடுதலை-சுயநிர்ணயவுரிமை"போராடமெனப் பரப்புரை செய்த சண்முகரெத்தினம் முதல் "புரட்சிகர"க் கட்சி கட்டும் மர்ம மனிதர்கள்வரை ஏதோவொரு வழியில் தத்தமக்கேற்ற திசைவழியில் அந்நியச் சக்திகளோடு இணக்கமுறுகிறார்கள்.
புலிகளது நிறுவனப்பட்ட பாசிச அடக்குமுறையினது தகர்வுக்குப் பின்பான அரசியலில், தமிழ் பேசும்மக்களோ உயிர் வாழ்வுக்கான தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தம் வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக விருத்தியாகும் (தமிழீழ)போராட்டத்துக்கு எதிரான எதிர்ப்பு உளவியல் தோன்றுவது இலங்கையின் இன்றைய குறை ஜனநாயகச் சூழலில்தவிர்க்கமுடியாதவொரு சமூக அசைவியக்கமாகும். இதைத் தடுத்து அவர்களை மீளத் தகவமைக்கும் குழுக்கள், தமது நம்பிக்கைக் குரிய திசைவழியில் புரட்சியோ அன்றித் "தேசிய விடுதலை"யோ பேசி மக்களை அடிமையாக்குவது அந்நிய நலனினது தெரிவின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.இன்றையபொழுதில்,நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த விய+கங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான குழுக்கள், தமது இருப்புக்கும்-அங்கீகரப்புக்கும் அந்நியச் சேவையைத் தொடர்வதே தெரிவாகக்கொண்டியங்குகின்றன.இதன் உச்சபட்ச விருத்தியாக முகிழ்க்கும் தொடர் சந்திப்புகள்-ஆய்வு வட்டம்,கற்கைப் பட்டறைகள் யாவும் ஏதோவொரு அந்நிய தேசத்தின் அனுசாரணையுடன் அதன் நலன்களுக்கமையத் தமிழ்பேசும் மக்களது உரிமையின்-விடுதலையின் பெயரால் நடந்தேறுகிறது.இங்கே,தம்மைப் பேராசிரியர்களாகவும்,புரட்சிகரர்களாகவும் இனங்காட்டிவரும் நபர்கள்-குழுக்கள் தமது எஜமானர்களிடம் தம்மை நிலைப்படுத்த அடிக்கும் குத்துக்கருணங்கள் கட்சி-அமைப்புள்,அரசுசாரா அமைப்பகளெனக் கட்டிடத் துடிப்பதில் முடிகிறது.
எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் இந்த அந்நியச் சேவைக்கான "அதிகாரப் போட்டி அரசியலை",புலியினது அழிவு யுத்தத்துக்குப் பின்பான இன்றைய இலங்கைச்சூழலில் "எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கக்கூடியவொரு மக்கள் கூட்டமாகவே நமது மக்களது வாழ்நிலையிருப்பது இத்தகைய குழுக்களுக்கு நல்ல தருணமாகவும்-சகுனமாகவும் இருக்கிறது.இதை நழுவவிட அவர்கள் விரும்பவே இல்லை.எனவே,திடீர் சந்திப்புக்கள் தேசங்கடந்து,கண்டங்கடந்து நடந்தேறிகிறது.அங்கே,"பேராசிரியர்கள் முதல் புரட்சிக்காரர்கள்"வரை கூடுகிறார்கள்.இவர்களுக்குள் இடம் பெறுகின்ற மோதல்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே நடாத்தப்படுகிறது.அதுவே,இவர்களது எஜமானர்களது இன்றைய வியூகம்.இதன் பயனாக மக்களது பிரச்சனைகளை இவர்களே கையிலெடுத்துத் தாம் அணிதிரள்வதாலும்-கட்சிகட்டுவதாலும் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டிட முடியுமென உரைப்பதில் மக்களைக் கையாலாகாத கூட்டமாக மறுமுனையில் உரைத்தும் விடுகிறார்கள்!
இஃது, முற்று முழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது உரிமைகளையும் சொல்லி அணிதிரளும் அந்நியக் கைக்கூலிகளது காலமாக இன்றைய பின் போராட்டச் சூழல் நிலவுகிறது. கடந்த முப்பதாண்டுகளாகப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள். இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள்புதைகுழிக்குள் மக்கிய எலும்புகளோடு தமது உறவுகளுக்கு வலியைக் கொடுக்கும்போது,எஞ்சியிருக்கும் மக்களோ தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மேற்குலக அரசுகள்,இந்திய-சீன அரசுகள் மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கின்றன. இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் இதை மக்களது பெயரால் நியாயப்படுத்துவதற்குக் கட்சிகள்,குழுக்களெனப் பன்னூறு வடிவங்களில்"புரட்சி-விடுதலை"குறித்து மீளவும் அறைகூவலிடப்படுகிறது.இது,ஒரு கெடுதியான காலம்தாம்.
தகர்க்கப்பட வேண்டிய இயக்கவாதம்:
இனவொடுக்குமுறைக்கெதிரான தேசிய விடுதலைப் போரை பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு சாத்தியமானது. எனினும்,புலிகளது வெற்றிடத்தைக் குறித்துக்கொண்டிருந்த அந்நிய மூலதனம் தனது தேவைக்கேற்ற குழுக்களை அதன் இடத்தில் இருத்துவதே அதன் முதற்பணியாக இப்போதிருப்பதென்பது உண்மையானது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தரங்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதார ஒத்துழைப்புகளையும் குறித்து வகுப்பெடுக்கச் சந்திப்புகளைச் செய்கிறது.இந்தத் திடீர் அரசியற் கருத்தரங்கங்கள்-பட்டறைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது உயிரைக்குடித்த இயக்கங்களது முன்னாள்-இன்னாள் உறுப்பினர்கள்-அரசியல் ஆலோசகர்களை வைத்தே நடைபெறுவதைக்கவனித்தால் இதன் உள்ளடக்கம் புரியத் தக்கது.
இந்தச் சந்தர்ப்பத்தில்மேலுஞ் சிலதைச் சொல்வது பொருத்தம்.அதாவது, இலங்கை அனைத்து இனமக்களின் மொத்த எண்ணவோட்டமானது ஒருகிணைந்த இலங்கைத் தேசத்துக்கு-அதன் பொருளாதார நகர்வுக்கு விசுவாசமாக இருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது.
தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும். இந்தத் தெரிவானது ஆசிய மூலதனத்துக்கான வெற்றியாக இருப்பதால் இதையுடைத்து ஆசிய மூலதனத்துக்கான நெருக்கடிகளை தமிழ் மக்களது விடுதலையின் பெயரால்கொடுப்பதற்குத் தயாராகும் இன்னொரு இயக்கவாத போராட்டமுறைச் சுற்று களத்துக்கு வருவதில் பல நலன்களது தெரிவு இயக்கமுறுகிறது.இந்தவொரு நோக்குள் அமையப்பெற்ற பற்பல அரசியல் சூழ்ச்சிகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பி இலங்கையினது சுய வளர்ச்சியை மட்டுப்படுத்தித் தமது நோக்கங்களுக்கான தொங்கு நிலைத் தேசமாக்குவதில் அதிக அக்கறையுடைய தேசம் இப்போது நோர்வே என்பது தெரியவருகிறது.
அண்மைக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கான இராணுவ அடியாள் இஸ்ரேல் என்பதுபோல ஐரோப்பாவில் நோர்வே அமெரிக்காவினது அரசியல் அடியாள்.இதன்வழி ஆசியாவில் இழந்த தனது வல்லமையைத் தக்கவைக்க நோர்வேயூடாக இலங்கையில் பற்பல நெருக்கடிகளை புதிய குழுக்களின்வழி நோர்வே ஏற்படுத்தும் தெரிவாகவே இந்தப் புதிய கட்சிகள்-குழுக்கள் அணியுறுவதும் புரட்சி பேசுவதும் சாத்தியமாகிறது.
இன்றைய தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளது வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை. கணிசமான பொருளுற்பத்தியானது, இன்று மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன. இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்"மார்க்" வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும். இங்கே, இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது. இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினதும்,இந்தியாவினதும் பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.இதன் பாரிய நெருக்கடியே இன்றைய தமிழ்பேசும் இலங்கை மக்களது அரசியல் நெருக்கடியாக மாற்றப்படுகிறது.இதைக் குறித்து அந்நியத் தேசங்களுக்குக் கூஜாத் தூக்க முந்தும் அவசரமே கட்சிகள் கட்டுவதன் அவசரத்தில் பற்பல புரட்சிக்காரர்களை பற்பல முறைமைகளில் கட்சிகட்டும் நியாயத்தை முன்வைத்து இயங்கக் கோருகிறது.
புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதன் தொன்மையான புரிதலில்"புரட்சிகர"கட்சியென்ற வடிவத்தில் எதிர்புரட்சிகரக் குழுக்களை உருவாக்கும் அந்நிய சக்திகள் அக் குழுக்களை உண்மையில் தமது எதிரிகளாக இயங்கவே அனுமதிக்கிறார்கள்.இதனால்,இவர்கள் சாரம்சத்தில் அந்நியச் சக்திகளை எதிர்ப்பதையும்,மக்களில் பெரும் பகுதியை மயக்கி அவர்களது எதிர்ப்பு அரசியலையே காலத்துக்கு முந்திக் கட்சிகட்டி எதிரிக்கு ஆட்காட்டிச் சிதைப்பதில் சாத்தியமான சமூக அசைவியக்கம் முகிழ்கிறது.இது செயற்கையான -புரட்சிகர நிலவரத்தை-புரட்சிகரச் சூழலை ஒரு சமூகத்துக்குள் உருவாக அனுமதித்து இயங்கிறது.அரை இராணுவத் தன்மையிலான காட்டுமிராண்டிப் பாசிசக் குணம்சமுடைய அரச வடிவத்தை மூன்றாம் மண்டல நாடுகளில் இருத்திவைக்க விரும்பும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் தந்திரோபாயத்தை இப்போது தமிழர்களைப் பயன்படுத்தி இலங்கையில் மீளத் தகவமைக்கும்இயக்ம்- கட்சிகட்டும் அரசியல் பிரவேசத்தில் இனங்காண முடியும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது விடுதலைக்கு எதிரானதும்,அவர்களது உரிமைகளைப் பெறுவதற்கான தடைக் கற்களாகவுமே இருக்கும்.
தொடரும்
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.06.10
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment