Saturday, July 17, 2010

எதிர்நிலைகளை முன்வைத்து...

கட்டுரைத்தொடர்: (3)

எதிர்நிலைகளை முன்வைத்து...
"புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,
அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"

மிழ் பேசும் மக்களாகிய நாமோ இன்று தமிழின் பெயராலும்,தேசவிடுதலையின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டும், எந்தப் பிடிமானமும் அற்ற வெறும் ஓடுகாலி இனமாக உருவாகப்பட்டு நாடோடிகளாகியுள்ளோம். நமது சமூக சீவியம் வலுவாக அழிந்தபின் நம்மிடம் எஞ்சியிருக்கும் வாழ்வானது காத்திரமான சமூக ஆண்மையாக இருக்க முடியாது! நாம் மெலினப்பட்ட இனமாக,பொருளாதாரப் பலமற்ற சிறு குழுவாகச் சிதைக்கப்பட்டு,உலக இனங்களுக்குச் சேவகஞ் செய்யும் நாடோடிகளாக்கப்படும் அரசியலைச் செய்து முடித்த ஆயுதக்குழுக்களது எச்சங்கள் இன்று போடும் அரசியல் கணக்கானது அவர்களது இருப்பைக் குறித்தான தெரிவென்பது நாம் இனங்காணத்தக்கது.இது,ஒருபோதும் நமது மக்களது அரசியல் நெருக்கடிக்கு எந்தவிதத்திலும்ஆரோக்கியமாகச் செயற்படாதென்பதைக் குறித்தே நாம் இப்போது பேச முற்படுகிறோம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான புலியற்ற சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.இயக்க நலனுக்கான தெரிவும்,தலைமைத்துவத்தின் இருப்புக்கான அரசியற்றொடர்ச்சியுங்கொண்டியங்கிய புலியினது அழிவுக்குப் பின்பான இலங்கையின் சிறுபான்மையினங்களது அரசியல் நகர்வில், இன்றுவரை தொடரும் நயவஞ்சகமான அரசியலானது புலத்திலும்,நிலத்திலும்(இலங்கையில்)தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்துள்ளது.கூடவே,இந்த வகைக்குட்பட்ட அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள் இன்று மிக வேகமாகக் காரியமாற்றுகின்றன.

இவை நமது மக்களது எதிர்காலவாழ்வு குறித்துப் புதுவகைக் கருத்துக்களைத் தமது எதிர்கால இலங்கை அரச வியூகத்திலிருந்து தொடரும் புதிய தெரிவுகளில், புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் அரசியல்ரீதியாக அணிதிரள்வது புரட்சியெனப் பரப்புரைக்குள்ளாக்கப்படும் தருணத்தில் பக்கம் பக்கமாகப் புதிய தொடர்கள் ஏதோவொரு மூலையில் இருப்பெடுக்கிறது.மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.இவை நமது மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே தத்தமது எஜமானர்களது தேவைகளைக் கையிலெடுத்துள்ளது.

பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இந்தப் புரிதலோடு இன்றைய புலம்பெயர் தமிழ்க் குழுமத்தின் அரசியல் நகர்வைப் புரிய முனைந்தால்அந்நியத் தேசங்களது கனவானது தமிழ் மக்களைப் பிரதேச ரீதியாக எங்ஙனம் பிளந்துள்ளதென்றும்,அதன் தொடர்விருத்தியாக முன் தள்ளப்படும் கட்சிகள்-குழுக்களது மாதிரிக் குட்பட்ட அரசியல் அமுக்கமும் புலியினது போராட்டப் பாதையின் எச்சமாக நகர்வதை இனங்காணமுடியும்.

இதன் தொடரில் நாம் பற்பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறோம்.எனினும், புலிவழி இயக்கவாதம் மீளக் கோலாச்சுகிறது.

அந்நியச் சக்திகளுக்குக் கூஜாத் தூக்கும்"போராட்டம்" தொடர்கிறது.

அஃது, ஈழத்தை-சுயநிர்ணயவுரிமையைப் பெற்றுத் தருமெனப் பல"தோழர்கள்" நம்பிக்கிடக்கிறார்கள்!இங்கே, அன்றைக்குப் புலிகள் சொல்லிய பாசிசக் கருத்து நிலை(மொழிக்காக, இனத்துக்காக, தேசத்துக்காக "உயிர்ப்பலிகொள்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு, மனித ஆளுமையைக் காவு கொள்வது) மக்களுக்காகப் போராடுவதற்கு,அவர்களுக்கான அரசியலைத் தொடர்வர்தற்கு அணிச் சேர்க்கை அவசியமென்கிறது.அதைக் குறித்து எந்தக் கேள்வியுமின்றித் "தாம் உரைக்கும்போது "கட்சி"கட்டுவதும்,போராடுவதும்" சரியெனப் பரப்புரை செய்கிறது.இதன் வன்மமான கருத்துநிலையானது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிலவும் சூழலுக்கேற்ற எதிர்-நியாயவாதத்தை மக்களுக்கான நலனின் தெரிவனச் சொல்லியே தமது "நியாயவாத்தை"த் தொடர்கிறது.

இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது இன்று புலம்பெயர் தளத்தில் ஊடகவன்மமாகவும்-கட்சிகட்டும் பெரிய போர்வினை நுட்பமாகவும் ஒருங்கே தமிழ்மக்களது விடிவு குறித்து வகுப்பெடுக்கின்றனர்.ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களைப் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது.

அதே புலிப்பாணி "அணிதிரள்வு-ஒத்து வடம் பிடித்தலெனும் வகைமாதிரிப் புனைவுகள்" ஏதோ எழுந்தமானமாக வாசிக்கப்படுகின்றன.இது,எந்த நிலையிலும் மகள் அரசியலறஞ்சார்ந்து சிந்திப்பதில்லை. இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத்தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட "நிகழ்வுகள்"சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.

இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த"புரட்சிக் குழுக்களின்"குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த "தார்ப்பார்களை" உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.

புலிகளது ஈழப்போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ்ச் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்வதற்கானதும்,சமூகமாக ஒருகிணைவதற்கானதானதுமான பெருவிருப்பம் முதற்றெரிவாக முன்னெடுக்கும் இருத்தலுக்கான ஆதாரத்தை உரிமையெனக்கொள்வதற்கில்லை.அது,தனது இழந்துபோன அடிப்படைத் தேவைகளையொட்டிச் சிங்கள அரசுடன் செய்யும் சமரசம் முற்றுமுழுதாக வாழ்வதற்கான தெரிவே அன்றிப் போரிட்டுத் தமது உரிமைகளைவென்றெடுப்பதென்றில்லை!

இதுசார்ந்த அவர்களது சிந்தனா முறை ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.இது தமிழ்ச் சமுதாயத்தின் இனிவரும் அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும். இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியலானது மக்களது சுயதெரிவான அரசியலூக்கத்திலிருந்த அவர்களது சுயாதீனச் செயற்பாட்டின்வாயிலாக எழவேண்டுமெயொழிய எந்தக் கொம்பரும் அதைப் புலத்திலிருந்து ஏற்றுமதி செய்யமுடியாது!அப்படிச் செய்வதென்பது மீளவும்,அந்நியச் சக்திகளது அரசியலை முன்னெடுப்பதன் தொடர்ச்சியாகவே பார்த்தாகவேண்டும்.கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது பின்போராட்சச் சூழலில் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.

தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர்நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல் சேட்டைகள்"கூட்டங்களாக-நிகழ்வுகளாக-நினைவுக் கொண்டாட்டங்களாக-விழா எடுப்புகளாக"புலம் பெயர் வாழ்சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் "மாற்றுக் கருத்து-புரட்சிகரக் கட்சிகட்டல்"எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணக் கருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது, நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, அறிக்கைப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது.கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் புலத்தில் இருக்கப்போவதில்லை.

நிலத்தில்(இலங்கை)அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு, அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.இதைத் திட்டமிட்டே கணித்துச் செயற்படும் அந்நிய நலன்கள் தமிழ் மக்களுக்குள் மீளவும் சதி அரசியலைத் தொடர்கிறது.அதற்குத் தோதான கூட்டத்தை முன்னாளத் தமிழ் இயக்களது மாபியாக் குழுக்களுக்குள் இருந்து தெரிந்தெடுக்க முனைகிறது.அதன் தொடரில் சிக்கியுள்ள பலர் மக்களுக்காகப் போராட அணி திரள்வதாகப் புலம்புவது மக்களைக் கருவறுக்கவே என்பது மிகக் கறாராக விளங்க வேண்டிய உண்மை.

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"மாற்றுக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய நிலையில், இத்தகைய "மாற்றுக் கருத்துக்களை"முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச் சென்றுவிடுகிறதென்ற உண்மையில் அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.அந்நியச் சேவையின் பொருட்டு ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.

நாம் எந்தவொரு சூழ்நிலையிலும் விழித்துவிட முடியாதபடி அன்று பாசிசப் புலிகளுக்கூடாகக் காரியமாற்றிய உலக அந்நிய நலன்கள் இன்றொரு முக்கியமான கட்டத்தில் நம்மைத் தொடர்ந்து ஏமாற்றிவரப் புலிகளுக்கு மாற்றானவொரு சக்திகளை முன்னிறுத்திப் புலிகளின் இருப்பை மேலும் நிலைப்படுத்தித் தமது ஆர்வங்களை,பொருளாதாரப் பிராந்திய நலன்களைக் காத்துவருகிறார்கள். இத்தகைய நலன்களுக்குத் துணைபோகும் புலத்துப்புலிகளும்"புரட்சி"க் குழுக்களும் நம்மை இன்னும் ஏமாற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சிகளோடு புலிகளைக் குறைகூறியபடியே அவர்களின் எஜமானகளுக்கிசைவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.இவர்களே புதிய திரட்சியை வலியுறுத்துவதில் தமது பழைய பெறுமானங்களைப் புதிப்பிக்கின்றனர்.இந்தப் பெறுமானத்தின் அறுவடை தமிழ்ச் சமுதாயத்தின் முதுகெலும்பையே முறித்துவிட்டுள்ளதைக் கிஞ்சித்தும் சிந்திக்கமறுத்துப் புதிய பாணியில் அதே தொடர்ச்சியை வற்புறுத்துவது எதனால்?

இது குறித்துப் பேசுவது அவசியம்.

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.07.2010

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...