கட்டுரைத்தொடர்: (1)
தனிநபர்கள் அணியுறும் தருணங்கள்:
இலங்கையில் இனங்களுக்கிடையிலான மூலதன வளர்ச்சியானது பெரும்பாலும் ஒரு பெரும் வரலாற்று அழிவை இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் ஏற்படுத்தி மேலும் தகவமைக்கும் அரசியல் நெருக்கடிகள், மெல்ல உயர்த்தும் முரண்பாடுகள் , இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் குரோதத்தை வளர்த்து இரத்தங்குடிக்கக் காத்திருக்கிறது.இதை ஊக்குவிக்கப் பல தளங்களில் உசாராகும் அந்நிய நலன்கள், இலங்கை மக்களது ஜனநாயக விழுமியங்களைக் காலிற்போட்டுமிதிக்கும் சர்வதேசச் சதிகளை இனங்களுக்குள் இருக்கும் கட்சிகள்-குழுக்களைப் பயன்படுத்திச் செல்லும் அரசியல் திசைவழியானது புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு வகையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
அஃது, இது காலவரையான அனைத்து அரசியல் நடாத்தைகளையும் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயம் முன்னெடுத்த பெரும்பகுதி ஆதரவுக்கான புலிகளது அரசியல் கூச்சல்"தமிழீழத்தை"க் கனவுக்குட்படுத்தியபோது,அதை நோக்கிய எதிர்பார்ப்பு பொருட் செலவில் மையங்கொண்டிருக்க இப்போது, அதன் தொடர் நிகழ்வுகள் அதே"தமிழீழத்தை" ஏலம் போட்டுப் "புரட்சி-கட்சி"என அந்நியத் தெரிவுகளில் இருப்புக்கான போராக விரிகிறது.இது குறித்த சரியான புரிதலின்றி "பேராசிரியர்" சண்முகரெத்தினம்,மற்றும் "புகலிடச் சிந்தனை" மையத்தின் தொடரான புதிய புரட்டுக் குறித்துவொரு தெளிவான நோக்கு நிலைகளை நாம் பெறவே முடியாது.சம்பந்தப்பட்ட நபர்கள்-குழுக்களுக்கான அந்நியத் தெரிவுகள்"விடுதலை-புரட்சி"எனத் தொடராகப் புனையும் கருத்தியல் யுத்தத்தில் மக்களது அடிமை வாழ்வு மேலும் இருப்புக் குள்ளாகிறது.
இதுவரை, இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களது எந்த வாழ்வியற்றேவைகளையும் நிறைவு செய்ய முடியாத தமிழ் அதிகார மையங்கள் அம் மக்களது உயிர்வாழ்வைக் குறித்துப் புதிய புனைவுகளது தெரிவில் பேசுகிறார்கள்.இவர்களது சுய தெரிவு அவ் மக்களது எதிர்ப்புக் கூறுகளைத் தமது வரும்படிக்கான-பதவிக்கான உந்துதலாகக் கனவு காண்கிறது.
இது குறித்து நாம் நிறையக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்.
பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.புலிகள் அழிந்த கையோடு அவர்களது உப பிரிவுகள் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டு,புலிகளது தொடர் இருப்புக்கான பல் முனை நகர்வுகள் ஒழுங்கு படுத்தப்படுகிறது.அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது .இது,புதிய இலங்கையின் புரட்சிக்கு எதிரான கூறுகளைக் கொண்டியங்குகிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இதன், மறு விளைவாகத் தமிழ்க் குறுந்தேசியவாதம் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் நிரந்தரமாகப்படுகிறது. புலிகள் அழிந்தாலும் அவர்களது எச்சங்கள் பல வடிவங்களில் புதிய மாதிரிகளை உருவாக்கிக் கட்சி-அமைப்பாகுதலெனக் குமுறுகின்றனர். இவர்களில் பற்பல குள்ள நரிகள் "பேராசிரியர்களாகவும்-போராசிரியர்களாகவும்" ஏலவே அறியப்பட்ட தமது பிம்பங்களுக்கு நடுவே கோலமிடும் அரசியல் நகர்வானது, எமது மக்களுக்கு மேலும் அரசியல் நெரிக்கடிகளைச் செய்யக் கூடியவை.இந்தப் புள்ளியை இலக்குப் படுத்தும் இக் கூட்டம் பரந்துபட்ட மக்களது எதிரிகளாக இனங்காணப்படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.இது தொடராக என்னால் வலயுறுத்தப்படும் வெகுஜனக் கருத்தின் தெரிவாகவே இருக்கிறதென நம்பிக் கொள்வதில் எந்தக் குறைபாடும் இருக்க முடியாது.
மக்கள்:
ஒருகட்டத்தில் மக்கள் இனங்களாகவும்-மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் பொருளாதார ஆர்வங்களுக்காகக் கூறுபடும்போது, அத்தகைய முகமூடிகளுக்குள் ஒளிந்துள்ள மேட்டுக்குடிகள்(ஓடுக்குபவர்கள்) தமக்குள் நடந்தேறும் அதிகாரத்துக்கான பங்குச் சண்டையில், இனத்தை,மதத்தை,மொழியை முதன்மைப்படுத்திப் போராட்டத்துக்குப் போராளிகளை அப்பாவி மக்களிடமிருந்து தட்டிப் பறித்தெடுக்கின்றார்கள். இதன் தர்க்கால நடாத்தையைப் புலிகளது போராட்டத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்த குடும்பங்கள் மிக நன்றாகவே அறியும்-புலம் பெயர்ந்த தமிழர்களை மேலும் இது குறித்துச் சிந்திப்பாயாகவென எவரும் வற்புறுத்த அவசியமில்லை.தற்போதைய கட்சிகட்டும் கிறுக்குப் புத்திக்கு ஒப்பாரி வைக்க தெரியுமளவுக்கு உலக அரசியல் வியூகம் தெரிந்திருக்கவில்லை! அதைத் தெரியவேண்டுமென எவரும் வற்புறுத்தத் தேவையில்லை.ஏனெனில்,"ஏன்-எதற்கு"என்ற கேள்விகளைக் கேட்காது தலைமை வழிபாட்டில் புலியைப் பீடத்தில் ஏற்றிய தமிழ் மனதுக்கு எல்லாஞ் சரிதாம்."ஆரு குத்தியும் அரிசி ஆனால் சரிதாம்"என்ற மிகக் கெடுதியான சுய நலப் புத்திக்கு இன்றைய அரசியலையும் அதுசார்ந்து இயங்கும் தமிழ் கபடவாதிகளையும் அறிய முடியாதுதாம்.இந்த நிலையில் அன்றைய சரித்திரம் மீள முடிகிறது...
இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று, ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள் இன்று!. இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புலம்பெயர் "புரட்சி"க் குழுக்கள் தமது இருப்புக்காக-அந்நியத் தொழுகைக்காக நம்மை ஏமாற்றச் சமர்ப்பிக்கும் கட்சி-அமைப்பாகும் ஆலோசனைகள் அதுசார்ந்த அலகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம். இதைப் பேதமையான புரிதல் "புரட்சியின்"இடி முழக்கமாக இனங்கண்டால் அது,புலித் தலைமைக்குக் கட்டிய ஒளிவட்டத்தின் தொடர்ச்சியாகவே வரலாற்றில் பதியப்படும்.
கட்சி கட்டும் அவசரம்:
இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான "கட்சி"கட்டுவதற்கான ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.பிணம் தின்னிகளான இந்த மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, தம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.நமது மக்களது உரிமைசார் கோரிக்கைகளைக் குலைக்க முனையும் சக்திகள், எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு ஐக்கிய இலங்கைப் புரட்சிகர அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில்,இலங்கையில் இனங்களுக்குள்பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி ,நமது இறைமையைச் சிதைப்பதில்இலங்கை மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.
ஐக்கிய இலங்கை, புரட்சிகரமாக மாற்றப்பட்டு மக்களுக்கான அரசு-கட்சி ,அதிகாரத்துக்கு வருவதற்கான தொடர் நிகழ்வுகள் இலங்கைப் பொருளாதார நகர்வுகளோடு தன்னை இணைப்பதென்பது இந்திய-சீன மற்றும் மேற்குலக அரசுகளுக்குக் காவடி தூக்குவதென்ற அர்த்தமாக முடியாது!இது வழமையான பூர்ச்சுவா அரசு குறித்த புரிதலை விட்டகன்று , புதிய தெரிவுகளின்வழி இன்றைய பொருளாதாரவியக்கத்தில் அரசுக்கும் மக்களுக்குமான பங்கு என்னவென்ற புரிதலின்வழி ,அவ்வரசைத் தூக்கியெறியும் மக்களது தர்க்காலிகச் சமூகவியக்கம் தன்னையொரு மக்கள்சார் அலகாகக் கண்டு,அரசுக்குரிய பண்பை கருத்தளவில் வைத்து முன்னெடுக்கப்படவேண்டும்.இதுவே, இன்றைய பூர்ச்சுவாக் கட்சிகள்-அரசுகளுக்கான மாற்றாக மக்கள் தமது உரிமைகளைக் கையிலெடுப்பதென்பதன் நோக்காகும்.இந்த நோக்கே புரட்சகரகட்சியின் தெரிவில் ஒருகட்டத்தின் முன் நிபந்தனையாகும்.இது,முழுக்க-முற்றாக, மக்களது சுய ஆளுமையில், அவர்களது மண்ணிலிருந்தே எழ முடியும்.இதைப் புலம் பெயர் மண்ணில் பெயர்த்தெடுக்க விரும்புபவர்கள் அன்றைய இந்திய மண்ணிலிருந்து இயக்கங்கட்டிப் போரிட்டவர்களது கால் அடிகளை மறந்துவிட முடியுமா?
ஆழ்ந்து யோசித்தால்,இவர்களின் வரலாறு நமக்கு எதிரானதாகவே இருக்கிறது!தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.இத்தகைய வரலாற்றுத் தொடர்ச்சி இன்னொரு முனையில் புரட்சிகர வேடம் பூணும்போது, அதையும் மக்கள் நலனினது தெரிவில்"புரட்சிகரக் கட்சி"யாக எவரும் குறித்துரைக்கலாம். எனினும்,அது கெடுதியான முகவுரை எழுதும்போது புலிகளது அழிவுக்குக் கூறிய காரணத்தால் மீள நம்மைத் தேற்றியுங் கொள்ளலாம்.
இலங்கையில் கட்சி-இயக்க அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
25.06.2010
No comments:
Post a Comment