Friday, September 21, 2007

மாலன்களும்,ஊடகச் சுதந்திரமும் சுண்ணாம்புத் தடவல்களும்!

மந்தை இராமின் நிந்தை மாலன்களும்,ஊடகச் சுதந்திரமும் சுண்ணாம்புத் தடவல்களும்!


எந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது வர்க்க விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே. இங்கே, மல்லுக்கட்ட வருபவர்கள் தாம் சார்ந்திருக்கும் வர்க்கஞ்சார்ந்த எண்ணங்களுக்கப்பால் சிந்தனையில்லை என்ற மனோபாவத்தோடு,மற்றவர்களுக்கு முத்திரை குத்தும் சூரத்தனத்தை நல்லது-கெட்டதென்ற கற்பிதங்களால் நெம்பி அளந்து தீர்ப்பிடுதல் மிகத் தீங்கென்றால் மறுத்திட முடியுமோ?

தேசங்கள்-இனங்களுக்கிடையிலான போராட்டங்கள்,விடுதலைகள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்குள்ளே மறைந்திருக்கும் வர்க்க நலன்களின் மோதலே இன்றைய மாலன்கள்-பார்பனர்களின் கூட்டோடு,ஈழ ஆதரவு-எதிர்ப்புக் கருத்தாடல்கள் பரப்புரையாக நம்மை நோக்கித் தள்ளப்படுகிறது.இது, வர்க்க அரசியல்.இங்கே, மனிதர்கள் வர்க்கவுணர்வைக்கடந்து சிந்திப்பது கிடையாது.


ஆனால்,அதைக் குறுக்கித் தனிநபர் விருப்பாகக் காட்டுவதற்கு இந்திய ஆளும் வர்க்கம் முயற்சிக்கிறது.உடனே:"நீ பெரிதா,நான் பெரிதா?"என்ற தாள இலயம் வலைப் பதிவுகளினூடே..."வசவு,வம்பு,தும்பு" என்பதற்கு அப்பால் வரலாறு தொட்டு ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீதான அரசியற்பார்வை என்னவென்பதும்,அந்த மனிதர்களின் அழிவுக்குக் காரணிகளான கண்ணிகள் என்னவென்பதும் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது முக்கியமாகும்.இத்தகைய பார்வையை இந்திய நலனுக்குட்பட்டோ அன்றி உலக நலன்களுக்கிசைவாகவோ-இயக்க,கட்சி நலன்களுக்கிசைவாகவோ எவரும் பார்க்க முடியாது.முற்றுமுழுதும் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கான உந்துதலோடு, அவர்களின் நோக்கு நிலையிலிருந்தே இத்தகைய விமர்சனங்கள் எழுந்தாகவேண்டும்.ஆனால்,இங்கு கருத்தாடும்-கருத்துக்கட்டும் பத்திரிகையாளர்கள் தத்தமது எஜமான விசுவாசத்திற்கான பங்களிப்புக்காக எடுத்தாளப்படும் கருத்துக்கள்,அவை கொண்டிருக்கும் அரசியல் சார்பு நிலை மற்றும் பொருளியல் நலன்களுக்கான காரணிகளைப் பின் தள்ளிவிட்டு,"ஐயோ இவர் வாயிலிருந்து இப்படி வரலாமா?இவர் செய்வது நியாயமா?"என்பதெல்லாம் வெறும் சிறுபிள்ளை விளையாட்டுத்தனமானதாகும்.ஒவ்வொருவருக்கும் மிகத் தெளிவான வர்க்கக் காரணிகள்,உடன்பாடுகள்-உணர்வுகள் உண்டு.இவற்றைக் கடந்து முற்றுமுழுதாக மனிதாபாபிமான வேடம் பூணுவது முடியாத காரியம்.இங்கே, மாலனோ அல்லது புலிகளோ மக்களின் உண்மையான நலன்களோடு உறவுடையவர்கள் அல்ல.புலிகள்மீதான எதிர்ப்புக் கருத்தாடல்கள் எந்தெந்த வர்க்கத்துக்குச் சேவை செய்வதற்கான முன்முயற்சி என்பதைப் பார்த்தோமானால் புலிகள் எவரது நலன்களோடு இதுவரை போராடுகிறார்கள் என்பதை மிக இலகுவாகப் புரிய முடியும்.அங்ஙனம் புரிகிறதரணத்தில் இந்தியப் பார்ப்பனிய-பனியா ஊடகங்கள் எதற்காகப் புலிகளை ஆதரித்தும்-எதிர்த்தும் எழுதுவதென்பதும்,இதுள் மாலன்கள்-சோ இராமசாமிக்கள்,இராம்கள் மற்றும் சுப்பிரமணிய சாமிக்கள் பேசும்,விவாதிக்கும் கருத்துகளின் வேர்கள் எதுவரை ஓடுகின்றதென்பதும் அந்த வேர்கள் எந்த மரத்தைக் காப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் புரிந்து போகும்.

நம்(ஈழத் தமிழர்களின்)பாழாய்ப்போன அரசியலில் புலிகளின் பாத்திரம் மிகச் சிக்கலான இலக்குள் அமைந்ததாகும்.மிகத்திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட இந்த இயக்கம் அதன் உள்ளார்ந்த நலனுக்கும் அப்பால் வெளிப்புறச் சக்திகளின் நலன்களுக்கான தேவைகளோடு இலங்கையில் தோன்றுகிறது.இது, ஒடுக்கப்படும் மக்களின் உரிமையைத் தனது போராட்டத்துக்குள் உள்வாங்குவதற்காகச் செய்த படுகொலைகளும்,செய்யும் கொலைகளும் மிகப்பெரிய பாசிசத் தன்மையிலான ஒடுக்குமுறையோடு சம்பந்தப்பட்டது.எனினும், இந்த இயக்கத்துள் உள்வாங்கப்பட்ட ஒடுக்கப்படும் மக்களின் மிக நேர்த்தியான போராட்டப் பங்களிப்பானது இதுவரை அந்த இயக்கத்தின் தலைமையால் உதாசீனப்படுத்தப்பட்டே வருகிறது.இத்தகைய உதாசீனப்படுத்தல்களைத் தத்தமது வர்க்க நலனுக்காக-சாதியத் தேவைகளுக்காக இந்தியத் துணைக்கண்டத்துள் நிலவும் அரசியல் முன்னெடுப்புகள் பாவித்து வருவதில் பற்பல விமர்சனங்கள்-விவாதங்கள் தொடர்கிறது.இதன் தொடர்ச்சியாகத் தொடரும் இந்து மற்றும் இந்தியா ருடே போன்ற பெரும் பார்ப்பனிய ஊடகங்களும் இராம்,சோ,மாலன் போன்றவர்களின் இந்தியத் தேசத்து எதிர்பார்ப்புகளோடு அந்த அரசியலில் இவர்களுக்கிடப்பட்ட பாத்திரத்தைச் சிரத்தையோடு செய்துவரும் இந்தத் தரத்தில் இவர்களை வெறும் மனிதாபிமானிகளாகவும், இவர்களுக்கும் ஒடுக்குமுறைசார்ந்த அரசியலுக்கும் சம்பந்தமில்லாதமாதிரித் தொடரும் இவர்களுக்கெதிரான விவாதங்கள் தொக்கி வைத்திருக்கும்-நிலைநாட்ட முனையும் கருத்துக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழமக்களுக்கு எதிரானது.புலிகளின் இயக்க நலனையும் தாண்டித் தமிழ்பேசும் மக்களின் நலனை தூக்கிப்பிடிக்க முனையும் ஒருவருக்கு புலிகள் குறித்தான மாலன்கள் கம்பனியின் பிரச்சாரயுக்தி மிகத் தெளிவாகப் புலப்படும்.இதைவிடுத்து மாலனைத் தனிநபராகவுணர்ந்து அவரைக் கருத்தியல் ரீதியாக வென்றெடுக்க முனையலாமென எவராவது கருதினால் அதைப்போன்ற வேறொரு முட்டாள்த்தனம் உலகில் இருப்பதற்கில்லை.

"ஆண்டைகளின் முற்றத்தில் நின்று எங்களுக்கு உயிர்ப் பிச்சைகொடு" என்று அடிமைகள் மன்றாடுவதுபோன்று நாமும் காரியமாற்றமுனைதல் வெறும் பம்மாத்துத்தனமானது.இந்தப் பம்மாத்து அரசியலுக்குக் குஞ்சம் கட்டுவதுபோன்று "வாரீசு அரசியல்- பிரபாகரன்,மகன் சார்ல்ஸ் பயிற்சி எடுத்துப் போராட்டத்தில் இணைவதென்ற "கருத்துகளுக்கும், மக்களுடைய நிர்க்கதியான சமூகச் சூழலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது!புலிகளின் போராட்டத்தோடு தமிழ்பேசுபவரின் நலன்கள் மிகவும் நரித்தனமாகப் பிணைக்கப்பட்டு பின்பு அதையே புலிகளின் பாசிச நடவடிக்கைகளை முன்தள்ளி இந்த நியாயமான சுயநிர்ணயப் போராட்டத்தை ஒடுக்கும் இந்திய சாணாக்கியத்தின் எடுபிடிகளான மாலன் கம்பனிகளைக் கண்ணை மூடிப் பால் குடிப்பது போன்று விமர்சிப்பது படு கேவலமானது.இவர்கள் குறித்த சரியான மதிப்பீட்டைச் சொல்வதற்குப் புலிகள் குறித்த இவர்களின் மதிப்பீடுகளோ அன்றி எதிர்கருத்துக்களோ அவசியமில்லை.இவர்கள் ஈழமக்களின் உரிமைகள் குறித்து எத்தகைய அரசியலோடு இருக்கிறார்களோ அதையும் தாண்டி இவர்களது வர்க்க நிலையிலிருந்தே இவர்களை அணுகியாக வேண்டும்.இதைத் தவிர்த்தபடி மாலன் பெரும் பத்திரிகையாளர்-புளோரிடாவிலோ எலிபிடித்தவர்,இவருக்குத் தெரியாதாவென்பதெல்லாம் மீளவும் இந்தப் பாத்திரத்தின் வர்க்க நிலையையும் இது இயங்கும் அரசியலையும் ஓரங்கட்டிவிட்டுத் தனிநபர் கருத்தாக்கிவிடும் பாரிய அபாயம் நிலவுகிறது.இதை செய்வதற்கு எந்தப் பெரிய படிப்பும் தேவையாக இருக்காது.இங்கே, நாம் செய்ய முனைவதும் இந்தியாவென்பதன் அரசியல் என்ன தொடர்ச்சியை நமக்குள் வற்புறுத்துகிறது என்பதையும்,இதற்கும் புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகள் எங்ஙனம் கையாளப்படுகிறது என்பதும், அது இந்தியாவுக்குள்ளேயே மக்களை ஒடுக்கும் நிலையில் இத்தகைய பத்திரிகைகளின் எலும்புத் துண்டு அரசியல் என்னவென்பதும் முக்கியம் பெறுகிறது.இதைவிட்டுப் புலிகளின் வாரீசு அரசியலோ அல்லது தலைவரின் தன்மானமோ முக்கியமல்ல.புலிகள் என்பவர்களின் கைகளில் இருக்கும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான சுயநிர்ணயப் போராட்டத்தைப் புலிக்களால் முன்னெடுக்க வைத்து அதையே புலிகளின் இருப்போடு சம்பந்தப்படுத்தி அந்த இயக்கத்தைப் பாசிச இயக்கமாக வளர்த்துத் தமிழரின் உரிமையைப் பயங்கரவாதமாக்கிய இலங்கை-இந்தியச் சதியின் தொடர்ச்சிகளை நாம் விபராமாகப் புரிவதே மிகச் சரியான அரசியல்.இதைப் புரியும்போது மாலனின்,இந்து இராமின் பாத்திரங்கள் மிக நேர்த்தியாகப் புரியத்தக்கதாக இருக்கும்.


இதற்கான நல்ல உதாரணம்:கடந்த இருபதாண்டாகப் போராடிய கருணாவின் பாத்திரம் பதிலளிக்கும்.இந்த மனிதரின் பாத்திரமானது தேசிய அலையுள் மூடியிருந்தபோது"கருணா அம்மான்"என்ற செல்ல மொழியோடு பெரும் போராட்டத் தளபதியாகவும்,மக்களின் வீரத் தலைவனாகவும் இருந்தது.இதையே புலிகள் பல தடவைகள் புகழ்ந்து எழுதித் தள்ளியவர்கள்.ஆனால்,அவனது பாத்திரம் அந்நிய நலன்களால் உருவாக்கப்பட்டதென்பதை வெளிச்சமிட்டுக்காட்டிய யதார்த்தத்துள் அவன் கொடியவனாகவும்,மக்கள் விரோதியாகவும்,கைக் கூலியாகவும் இன்று நம்மாலேயே ஏசப்படும்போது,இந்த மாற்றம் எங்ஙனம் நிகழ்ந்ததோ அதே மாற்றம் மற்றைய புலித் தலைமைக்குள் உருவாகும்போது இதே வாய்கள் புலம்பும் நாள் வெகு தூரத்திலிருக்க முடியாது!ஏனெனில், புலிகளின் பாத்திரமானது எப்பவுமே மக்களின் நியாயமான கோரிக்கைகளோடு உரித்துடையதல்ல.அது, அந்நியச் சக்திகளின் காலடியில் நமது உரிமைகளைத் தேடுகிற போராட்டத்தைச் செய்தபடி இருப்புக்கான அனைத்து காரியத்திலும(கொலை-அடக்குமுறை,உட்கட்சி ஜனநாயகமின்மை,ஏகத் தலைமை,வாரீசுக்கவலை-தலைமை இத்யாதி) ஈடுபடும்போது கருணா மட்டுமல்ல இன்னும் எத்தனையோ போராளிகள்-தளபதிகள் கழன்று போகும் சந்தர்ப்பம் வரும்-வருகிறது.இதையேதாம் மாலன் வகையாறாக்கள் மலினப்பட்ட வார்த்தைகளால்,பார்வைகளால் சொல்லும்போது நமக்குள் நிகழும் இரசயானமாற்றமோ நம்மைக் குதிக்க வைக்கிறது.ஆனால்,இது புலிகளுக்கு மிக வருத்தத்தையோ அல்லது காழ்ப்புணர்வையோ கொடுப்பதற்கில்லை.ஏனெனில், புலிகளின் உறவுகள் இவற்றைமீறி வேறுவகைப் புரிதலோடு அரசியல் செய்வது.புலிகள் இந்திய அரசியலில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஏலம் விடும் தகுதிக்காகச் செயற்படுபவர்கள்.அவர்களின் போராட்டச் செல் நெறியில் வாரீசு அரசியல் என்பதல்ல நமக்கு முக்கியம்.மாறாக, இவர்கள் நமது மக்களின் அளப்பெரிய உயிர்களை எங்ஙனம் நமது மக்களின் உரிமைக்காகப் பலி கொடுக்கிறர்கள் என்பதே முக்கியமாகும்.இதிலிருந்து மாலனையும்,இந்து இராமையும் விமர்ச்சிக்கும் தகுதியை நாம் பெறுவதற்கேற்ற சமூகப் பார்வையை உருவாக்கிட முடியும்.இந்த இலக்கில் இன்றைய இந்தியாவின் சமீபத்துச் செயற்பாடுகளைப் பார்க்குமிடத்தில் மாலன்கள்-இராம்களின் பாத்திரம் நேரடியாக நமது விழிகளுக்குமுன் விரிந்து பாரிய தெளிவைத் தரும்.அப்போது, மாலனையோ அல்லது எந்த மண்ணாங்கட்டியையோ நாம் பொருட்படுத்தி"ஐயா நீங்கள் இப்படிச் செய்யலாமா?"எனும் சகோதரப் பாசம் சிதறி,வர்க்க அரசியலில் அந்த மனிதரின் வர்க்க நிலையும்,அவரது நலனும்-அரசியலும் புரியும்.


ஈழத்தின் அரசியல் நகர்விலும்,அம் மக்களின் அரசியல் எதிர்காலத்திலும் மிகவும் பிற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருக்கும் தமிழக-இந்தி இந்தியத் தவப் புதல்வர்கள்-புதல்விகள் எடுத்து வைப்பது புலிப்பயங்கரவாதம் என்பதையே!புலிகள் குறித்து நாம் பற்பல பதிவுகளிட்டாலும் இப்போதைய சூழ்நிலையானது புலிகளின் கைகளில் மிக நேர்த்தியாகக் கையளிக்கப்பட்ட தமிழ் மக்களின் சுய நிர்ணயத்துக்கு-விடுதலைக்கான போராட்டத்துள் உள்ள நியாயத்தைப் புலிகளின் மலினப்பட்ட அரசியல் வியூகத்தால்-வர்க்க நலத்தால் எவருஞ் சிதைத்தெறிந்து நம்மை நடாற்றில் தள்ளுவது மிகக் கொடியதாகும்.இத்தகையவொரு போருக்குத் தயாராகும் இந்திய இலக்குக்கு உடந்தையாக தமிழகத்துப் பார்ப்பனர்கள் தம்மைப் பெரும் பான்மையாக்க முனையும் வியூகத்தோடு காய் நகர்த்துவதற்குத் தயாராகிறார்கள்.இங்கே, இந்தியப் பிராந்திய நலனோடு தமிழகத்து"ஆதரவுத் தளம்" உடைபடுவதற்கான நோக்கம் வெகுவாகியிருப்பதையும் நாம் காணலாம்.இந்த வியூகத்துக்குத் தலைமை தாங்கும் இந்து இராம் முதல் சோ இராமசாமி வரை நம்மைக் கருவறுத்த வரலாறைத் தொடர்ந்து நகர்த்தி வரும் செயலில் இப்போது மாலன் தலைமையில் மடக்கப் போடுகிறாகள் பதிவுகள்-மொழி பெயர்ப்புகள்.

தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பெளத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு(மாலன் கம்பனிக்கு) இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கட்சிகளும்,ஊடகங்களும்-மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டுவதற்குப் பெயர் ஊடகச் சுதந்திரமாம்.மாலன் தடுமாறும் பற்பல இடங்களில் புலிகளின் பாசிச அரசியற் கொலைகள் முன் தள்ளப்படுகிறது.இங்கே, புலிகள் என்பதன் அரசியலில் ஈழத் தமிழ் மக்களின் உரிமையும் சேர்ந்து ஒதுக்கப்படுகிறது.இதை விளங்கிக் கொள்வதற்கு இந்திய அரசியலில் பிற தேசிய இனங்கள் எங்ஙனம் ஒடுக்கி ஒதுக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்போது இவர்களின் குரல்களில் ஒடுக்குமுறைக் காவியங்கள் உலா வருவது கண்டுகொள்ளத் தக்கதாகவிருக்கும்.


1): குஜராத்தில் 3000 இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

2):காஷ்மீரில் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிராக அவர்களைத்தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,


3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்

4):விவசாயிகளின் மீளமுடியாத சமூகப் பிரச்சனைகளுக்காகப் போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகளை சுட்டுத்தள்ளும்போது "நக்லைஸ்ட்டுக்கள்-பயங்கரவாதிகள்"என்றும்,


செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும் ஒருவர்(மாலன் கம்பனி) அதைச் சார்ந்து எது உண்மை எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப்படுதல் அவரது உலகத்தில் மட்டுமே சாத்தியம்! அதை அவர் நம்பும் தளமும் முற்றுமுழுதாக அவரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இங்குதாம் அவரது வர்க்கதளம் மிக இலகுவாக அவரை ஒடுக்குபவர்களின் பக்கம் தள்ளிவிடுகிறது.அப்போ அவரது புலிப் புலம்பல் ஏன் வருகிறதென்றால் அங்கேதாம் தமிழ் மக்களின் உரிமையைப் பூண்டோடு அழிக்கும் பாரததேசத்துச் சாணாக்கியம் தலைகாட்டுகிறது.இதை மேலே பார்த்தோம்.

இத்தகைய பத்திரிகையாளர்களின் படிமத்துள் கூத்தாடும்"உண்மையான தமிழன்"-"உண்மையான இந்தியன்" "இந்தியா எனது தேசம்,அது குறித்தெவர் அவதூறு வைக்கும்போது சும்மா இருக்க முடியுமா?" கருத்தாக்கங்கள்? ஒடுக்குமுறைசார்ந்த இந்தியத் தேசிய வெறியின் குறுகியவடிவிலான ஆதிக்க வெறியே.


"..................." வெட்கித் தலைகுனிவதில் உணர்வு முந்திக்கொண்டாலும் இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம,; உண்டு! ஆனால், அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக்,த இந்து மற்றும் இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரால் இது சாத்தியப் படாது! ஈழத்தில் இயக்கவாத மாயைக்குள்ளிருக்கும் ஒருவர் தாம் சார்ந்த இயகத்துக்கு வக்காலத்து வேண்டுவதுபோற்றாம் இதுவும் ஒரு உளவியல் மயக்கம்-வெறி.இந்தக் கேடுகெட்ட மயக்கத்தையேற்படுத்தும் பாரிய பரப்புரைக் கட்டுமானமும் அதிகார வர்க்கத்திடம் மட்டுமேயுண்டு. இதிலிருந்து விடுபடுதல் அவ்வளவு இலகுவாக இருக்காது! எனவே, இந்த உண்மையான இந்தியர்களும்,தமிழர்களும் நம் மத்தியில் மலினமாகக் காணப்படுவர்.இவர்கள் எப்போது மானுடராவாரென்றால் தத்தமது வீடுகளில் குண்டுகள் வந்து கொலைகளைச் செயயும்போதா?இல்லை.மாறாக மாற்றுக் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதாலும்,விவாதிப்பதாலும் மட்டுமே முடியும்.எனவே, இன்னும் மேலே செல்வோம்.

இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது,கூடவே ஒரே மொழி,மத,பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக் கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும்,கிட்லர் பாணியிலான இனவாத அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.இது, மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இங்குதாம் நிலம் சா¡ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது, மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உளதேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.

எனறுமில்லாதவாறு இனவாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டில் ஏறுவது மேற்குலகில்கூட தொடர்கதையாக இருக்கிறுது.இந்தியாவில் ஆர்.ஏஸ்.எஸ்'க்குப் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த கிடைக்கும் வெற்றி தோல்விகள் இத்தகைய ஊசாலாட்ட ஊஞ்சற் உளவியலே தீர்மானிக்கிறது. இதன் அப்பட்டமான நோயே "உண்மையான இந்தியன்", தமிழன் போக்குகள்.என்றபோதும,; பெரந்தேசிய-ஆளுமையுள்ள இனமாகவிருக்கும் மக்களுக்குள் நிலவும் குட்டி-தரகு முதலாளிய முரண்பாடுகள் தத்தம் நாடுகளுக்குள் நிலவுகின்ற பொருளியற்போக்குக்கேற்றவாறு யுத்தங்கள் மூலம் சில தீர்வுகளுக்கு வருவதை தேசத்தின் நலனின் பெயர் மூலம் சிறிதாக்கின்றனர்.

இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிந்துருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.இங்குதாம் தமிழ்நாட்டு மக்களைச் இந்தியத் தேசியத்தால் சிறையிட்டு வைத்திருக்குஞ் சூழல் ஈழத்தையும் அங்ஙனம் ஆக்குவதில் நீட்சியாகிப் பார்பன-பனியா அரசியலாக விரிகிறது.இதற்கு ஒத்தூதும் இராமும்,மாலனும் இன்னும் எத்தனையோ நாய்களும் நடிக்கின்ற மனிநேயம் பொய்யானது-புரட்டானது.இவர்கள் புலிகளிடம் எதிர்பார்ப்பதைக் கறக்கும் அரசியலில் கைதேர்ந்த கபோதிகள்,சாரி பத்திரிகையாளர்கள்-ஊடகவியலாளர்கள்!

இந்த நிலையில் இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" ஆகிறது!இத்தகைய தேசத்தின் மதிப்பீடுகள் அதையண்டிய தேசங்களையும் காவுகொள்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.இதனாற்றான் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளைக் காலில்போட்டு மிதிக்கும் ஒரு கும்பல் அரசியலாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியலில் விரோதத்தை வளர்க்கும் வன் போக்கைப் பார்ப்பனர்களில் பலர்கள் மனமுவந்து செய்கிறார்கள்.இதற்க்கான காரணம்"தமிழ்"எனும் மொழியின் இன்றைய எழிச்சிகளும்-வீழ்சிகளும் காரணமாகிறது. இத்தகைய மொழியின்மீது காலாகாலமாகக் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அதை"உயிரற்ற மொழி"என்றும் கேலியிடத் தயங்குவதில்லை.


தமிழரின் போராட்டமானது அடிப்படையில் இனவொடுக்குமுறைக்கெதிரானது.இது பொருளாதார,சமூகப்பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாகும்.இப்போராட்டமானது பற்பல வழிகளிலும்,தந்திரத்தாலும் ஏற்றங்களையும்,இறக்கங்களையும் சந்தித்துள்ளது.ஒரு ஒழுங்கமைந்த -நேரிய போராட்டச் செல்நெறியை வகுத்துக் கொள்ளமுடியாத நமது பலவீனமானது, திட்டமிட்ட வெளிப்புறச் சக்திகளால் உள்தள்ளப்பட்ட சீரழிவாகும்.நமது அடிப்படை அரசியல் நிபுணத்துவம் இந்திய அறிவார்ந்த வியூகத்துக்கு முன்னால் பலவீனமானது.இது சமூகமட்டத்தின் வளர்ச்சியோடு பாரியவுறவுடையதென்பதால் அதில் எந்த வெட்கமுமில்லை.எனினும், நாம் நமது நண்பர்கள் வெளியுலகக் கனவான்களாக இருப்பதாக நம்புவதுதாம் நமது பின்னடைவாக வரமுடியும்.நமது மக்களைத் தாண்டிய எந்தவொரு உலக நட்பும் நமக்கு உதவாது.நமது மக்களே நமது பலம்.உலக முற்போக்குச் சக்திகளே நமது தோழமை.

கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள்,ஈழத்து அரசியலில் பெரும் புயல்களையே ஏற்படுத்தி வருகிறார்கள்.காலாகாலத்தில் தமிழ் இயக்கங்களைப் பிளந்தபடி நம்மைப் பலவீனமாக்கும்போது,நமது அரசியலானது வெறுஞ் சில்லறைக்குச் சோரம்போவதாக இருக்கிறது.வரதாரஜப் பெருமாள் முதல் இன்றைய ஆனந்தசங்கரி-புலிகளின் தளபதி கருணா போன்ற சுயநலப் பெரிச்சாளிகளே இன்றைய நல்ல உதாரணமாகும்.


மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது.புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் இவ்வளவு மெளனிகளாகக் கிடப்பதற்கிருக்கும் எல்லை-அரசியல் என்ன?அது புரியத் தக்க அரசியலாக இருக்கும்போது இந்த வாரீசு-தலைமைப் போட்டிக் கதைகளும் முற்று முழுதாக முடிந்து போகும்.மாலனின் பத்திரிகாத் தர்மமும் நமக்கு புரிந்துவிடும்.அதுவரையும்... போட்டுத் தாக்குவதும் பிடரியில் தட்டுவதும் சும்மா,சும்மாத்தாம் கண்ணுகளா!சொறியுங்கோ அரித்தால்!!

ப.வி.ஸ்ரீரங்கன்.

21.09.2007

2 comments:

Anonymous said...

இதுக்கும் ஒப்பாரிக்காண்டம் ஒண்டிருக்குதோ தெரியாது.
நீங்கள் மார்க்ஸிய மசாகிஸ்டிய பொல்பொட்டிஸ்ரோ? :-)

Sri Rangan said...

//இதுக்கும் ஒப்பாரிக்காண்டம் ஒண்டிருக்குதோ தெரியாது.
நீங்கள் மார்க்ஸிய மசாகிஸ்டிய பொல்பொட்டிஸ்ரோ? :-)//

"..........."

If we are looking for something
we long for transformation!:-)))))

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...