தமிழரின் வானாதிக்கம்.
இந்தச் சங்கதி குறித்துப் பல்வேறுதரப்பட்ட பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.தமிழ்ச் சமூகத்தில் மிகவும் தீவிர அரசியல் அறிவுடையவர்கள்கூடப் புலிகளின் "வான் தாக்குதல்" குறித்துக் கருத்துப் பகிர்கின்றபோது,அதை வெறும் ஹீரோயிசத் தாக்குதலாக வர்ணித்துக் குறுக்கி விடுகிறார்கள்.ஆனால் இது வெறும் தனி நபர் வாதப் பெருவிருப்பின் முன்னெடுப்பில்லை-இது வெறுமனவே அரசியலற்ற தாக்குதல் அல்ல.இதற்குள் வரப்போகும் தென்னாசியப் பிராந்திய ஆதிக்கப் பலப்பரீட்சைப் பெறுபேறுகள் அடங்கியுள்ளன.இதில் எந்த ஆதிக்கம் வெற்றி கொள்ளும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாதிருப்பினும் இந்தத் தாக்குதல் மிகவும் பாரிய பின்னடைவை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கும், அதன் தென்னாசிய ஆதிக்கத்துக்கும் பெரும் அதிர்வையும் அடியையும் கொடுத்திருக்கிறது.இத் தாக்குதலுக்கு ஒரு திட்டமிட்ட ஒத்தாசை இருக்கிறது.அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்குக்கு"ஒரு 11 செம்ரெம்பர் தாக்குதல் அவசியமாக இருந்தது.அவ்வண்ணமே தென்னாசியப் பிராந்தியத்தில் இலங்கையை இந்தியாவின் ஆதிகத்திலிருந்து மீட்டெடுப்பதற்குப் புலிகளின் வான் தாக்குதல் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு அவசியமாக இருக்கிறது.இத்தகைய அரசியல் நலன்களின் அடிப்படையைப் புரியாதிருப்பதற்கான வெளித் தோற்றங்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.இதைச் சாத்தியப்படுத்திய விதமானது முற்றிலும் சுய முன்னெடுப்பைக் காட்சிப்படுத்தும் நுணுக்கத்தோடு செயற்படுத்தப்பட்டுள்ளது.
புலிகளின் போராட்டப் பாதையில் இன்னொரு பாய்ச்சலாக வர்ணிக்கப்படும் "வான்தாக்குதல்"வகுத்திருக்கும் அரசியல் மொத்த இலங்கை மக்களையும் பேயர்களாக்கி அவர்களது உரிமைகளை அந்நியர்களுக்கு அடைவு வைக்கும் பொறி வகைப்பட்டதென்பது உண்மையானதாகும்.இதைப் புரிந்துகொள்ள மறுக்கும் "தேசிய" வாதக் கண்ணோட்டங்கள் எம் மக்களை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது.நாம் வெறும் கனவுகளுக்குள் காலத்தைத் தேடும் கொடிய ஏமாற்று வித்தைக்குள் சிக்கியுள்ளோம்.இது நமது எதிர்கால இருப்பை அசைக்குமொரு அப்பட்டமான அரசியல் மோசடியாகும்.இந்த அரசியலை முனைப்புடன் முன்னெடுக்கும் பொறுப்பைப் புலிகளுக்குப் பட்டையமெழுதிக் கொடுத்த அந்நிய சக்திகள் இலங்கை அரசியலில் தமது வலுக் கரங்களை மிக நுணுக்கமாகப் பதிக்கின்றன!இத்தகைய மிகக் கொடுமையானவொரு தந்திரத்தை நாம்,எமது விடுதலையின் பேரால் மகிழ்ந்து கண்மூடித்தனமாகக் கொண்டாடுவாமானால் நமது விடுதலையென்பது கானல் நீராகவே மாறிப் போகும்.இந்தவொரு இடத்தில் நாம் இத்தகைய தாக்குதலின் மட்டுப்படுத்தப்பட்ட அநுமதிப்புகளையும் அதைத் தந்திரமாக அரசியலாக்கும் அந்நிய சக்திகளின் வேட்கையும் அதன் உட்காரணங்களை மிகப் பவ்வியமாக ஏற்று இத்தகைய சக்திகளுக்கு உடந்தையாகச் செயற்பட்ட சிங்கள ஆளும் வர்கத்தையும் நாம் தோலுரிப்போம்.
விமானத்தாக்குதலும் புலிகள்மீதான மக்களின் எதிர்பார்ப்பும்:
இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதிமூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் நடைபெறும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினு}டாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி(இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.
கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை "நமது அரசியல்" இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது.இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதகள்தாம்.எனினும் இன்றைய புலிகளின் போராட்டச் செல் நெறி மீளவும் நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு உத்தியாகவே இந்த விமானத் தாக்குதலும் அமைகிறது.இந்தவொரு நோக்குள் அமையப்பெற்ற பற்பல அரசியல் சூழ்ச்சிகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பி, அதை வெறும் இனவாத முரண்பாடாக்கி இலங்கையை ஒட்டச் சுரண்டுவதற்கும் அதன் கடல் வளத்தையும்,இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களையும் அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்காகப் பயன்படுத்துவதையும் இலக்காகக் கொண்டே வளர்த்தெடுக்கப்படுகிறது.ஆனால் இந்த இலக்கைத் திட்டமிட்டு மறைத்து வரும் ஊடகங்கள,; நம் மக்களை நம்ப வைத்து நலம் அடிக்கும் அரசியலைத் "தமிழனின் வீரத்தைப் பேசியும்-எழுதியும்" செய்து தமது எஜமான விசுவாசத்தைச் செய்கின்றன.
நமது மக்களோ இந்த விமானத்தாக்குதலால் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.கூடவே புலிகள் தமிழீழத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிவிட்டதாகவும் நம்புகிறார்கள்.இத்தகைய நம்பிக்கை வெறும் மனவிருப்பாகவும்-இலங்கைப் பாசிச இராணுவத்தினதும்-விமானப்படையினதும் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலை பெறுகிறது.இது ஒருவகையில் தற்பெருமை கொள்ளுமொரு பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள்.இவையெல்லாம் புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.
எனவே மீளவும் புலிகள்மீதான உணர்வுபூர்வமான அனுதாபமும் நம்பிக்கையும் மெல்ல வளர்கிற நிலைக்கு இந்த் தாக்குதல் வழி சமைக்கிறது.தமிழர்களின் இது நாள் வரையான கையறு நிலைக்கு இந்த வான் தாக்குதல் பலம் முற்றுப் புள்ளி வைத்துச் சிங்கள இராணுவத்தைத் தோற்கடிக்கும் போர்க்கள வலு தமிழ் மக்களுக்கு வந்துவிட்டதாக உணர்வு வழிப்பட்டுச் சிந்தித்தும்,எழுதியும் வருகிறோம்.என்றபோதும் இந்தத் தாக்குதலுக்குப் பின் குவிந்திருக்கும் அரசியல் நலன்கள் என்ன?அவை எவருக்கு அவசியமான நலன்களாக இருந்தன என்பதையும் நாங்கள் பார்க்க மறந்துவிடுகிறோம்.
இலங்கையில் அமெரிக்க மற்றும் மேற்குலக நலன்கள்:
இலங்கைத் தீவில் எண்ணை வளமோ அன்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குக் கனிப் பொருள் வளமோ கிடையாது.எனினும் இலங்கையின்மீது அமெரிக்காவுக்கும்,சீனாவுக்கும் நீண்ட நாள் கனவொன்றிருக்கிறது.அது இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த துறைமுகங்களும் இலங்கையின் புவிகோள இருப்புமேயாகும்.இந்தக் கனவில் அமெரிக்காவுக்கான நலனை முதன்மைப்படுத்தும் அந்தக் காரியம்(அமெரிக்க ஆதிக்கம் வலுத்த இலங்கையும் அதன் துறைமுகங்கள் அமெரிக்கக் கடற்படைத் தளங்களாவதும்) நிகழ்ந்துவிட்டால் அமெரிக்காவினதும் மற்றும் மேற்கு ஐரோப்பாவினதும் வணிகத்துக்கு இன்னும் வலுக்கூடிவிடும்.இந்த வலு இலங்கையின் இராணுவ முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்கள்மீதான ஆதிகத்தைச் சார்ந்தே இருக்கிறது.இன்றைய வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை.உற்பத்தியானது இப்போது மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறையூதியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன.இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்"மார்க்" வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும்.இங்கே இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது.இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினது பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் தாண்டி அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் அந்நிய அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.என்றபோதும் இந்தியாவுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்குமான இலங்கை மீதான அரசியல் இலாபங்கள்-எதிர்பார்ப்புகள் முற்றிலும் முரண்பாடானது.இதில் இத்தகைய நாடுகள் முரண்படும்போது புலிகளினதோ அல்ல இலங்கை அரசினதோ வலுக்கள் கூடும் குறையும்.இதை நாம் பற்பல வடிவங்களில் கடந்த காலத்துள் எதிர் கொண்டோம்.இந்தியா இலங்கையைத் தனது வழிக்குள் கொண்டுவருவதற்காக விடுதலை இயக்கங்களைத் தனக்காகப் பயன்படுத்தியதும் பின்பு இலங்கையோடு ஏற்பட்ட உடன்பாடுகள்-தேன் நிலவோடு இயக்கங்களை நிராயுதபாணிகள் ஆக்கியதும்,இதுபோலவே புலிகளை மேற்குலகமும் அமெரிக்காவும் நிதி கொடுத்து வளர்த்ததும்-வளர்ப்பதும் பின்பு முதுகை உடைப்பதும் முற்றிலும் அழிந்து போகாதிருக்க அப்பப்ப குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட யுத்த வெற்றிகளுக்குள் மிதக்க வைப்பதும் கூடவே இலங்கையில் இராணவச் சமமின்மையை ஏற்படுத்துவதும் அதையே சாக்காக வைத்துத் தனது ஒத்துழைப்போடு இந்தியாவைக் கை கழுவ வைப்பதுமாக இந்த ஆர்வங்கள் இருக்கின்றன.
புலிகள் என்றவொரு அதி தீவிர வலதுசாரியப் பாசிச இயக்கமொன்று அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.எனவே புலிகள் இல்லாத தமிழ் அரசியலை ஒருபோதும் அமெரிக்க நலன்-ஐரோப்பிய நலன் அனுமதிக்காது.அப்படி அனுமதிக்கும்போது இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சிங்கள மக்களோடு ஐக்கியம் பெறும் சாதாரண ஜனநாயகத் தன்மையிலான உணர்வும் சமூக அவசியமும் ஏற்படும்.இது இனங் கடந்தவொரு உழைப்பாளர் அணித்திரட்சிக்கும் அது சார்ந்த விடுதலையுணர்வுக்கும் இலங்கைத் தீவில் களம் அமைப்பதை நேபாளத்திலிருந்து பாடங் கற்ற மேற்குலகமும் அமெரிக்காவும் விரும்பவில்லை.புலியை நிரந்தரமாக இந்தியாவுக்கு எதிரான திசைவழியில் இருத்தி வைக்க முனைவதும் இத்தகைய நாடுகளுக்கு அவசியமானதாகவே இருக்கிறது.இதைப் புரிந்துள்ள புலிகளும் அதிலிருந்துவிடபட முடியாத சிக்கலில் தமது இந்திய விசுவாசத்தை ஒவ்வொரு மாவீரர் தினவுரையிலும் வெளிப்படுத்துவதில் கவனஞ் செய்தார்கள்.என்றபோதும் அமெரிக்காவின் பிடியிலிருந்து புலிகள் மீளமுடியாத வகையில் நோர்வே அமெரிக்காவின் வேண்டுதலில் புலிகளுக்குப் படியளந்து அவர்களை முழுமையாக விழுங்கி ஏப்பமிட்டு வருகிறது.இது பாகிஸ்தானில் இந்துநேசியாவில் தாய்லாந்தில் எப்படி இராணவ ஆட்சிகள் நடக்கிறதோ அவ்வகைப் பாணியிலான அரை இராணுவத் தன்மையிலான காட்டுமிராண்டிப் பாசிசக் குணம்சமுடைய அரச வடிவத்தை மூன்றாம் மண்டல நாடுகளில் இருத்திவைக்க விரும்பும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் தந்திரோபாயமாகும்.
கண்டம்விட்டுக் கண்டம் பாயும் மூலதனமானது மத்திய ஆசியாவின் எரிவாயு-மற்றும் மசகு எண்ணையோடும் மற்றும் கனி வளங்களோடும் சம்பந்தப்பட்ட இராணுவக் கேந்திர வலயமொன்றை இலங்கையைச் சுற்றி பின்னிவைத்திருக்க விரும்புகிறது.இது வளர்ந்துவரும் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தித் தமது உற்பத்திக்கு எதிரான போட்டியிலிருந்து தோற்கடிக்கப்பட வேண்டிய அரசியலோடு பின்னப்பட்ட வியூகமாகும்.இதற்காக இலங்கையை முற்று முழுதாக இந்தியாவின் ஆதிகத்திலிருந்து விடுபட வைத்தாகவேண்டும்.அதற்கானவொரு அருமையான தாக்குதல் இந்தப் புலிகளின்"வான் தாக்குதல்"ஆகும்!
இந்தியாவும் புலிகளின் வானாதிக்கமும்:
பீ.பீ.சீ.தமிழ்ச் சேவைக்குப் பதிலளித்த இந்தியப் பத்திரிகையாளர் ராம்"புலிகளின் வான் தாக்குதல் இந்தியாவுக்குப் பாதகமானது.அதுவொரு பாரிய பயங்கரவாத அமைப்பு.எனவே அதனிடமுள்ள இந்த வலு இந்தியாவுக்குப் பாதகமானதென்றார்."இதை மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் கேலிக்கிடமாகத் தெரியும்.இவ்வளவு பெரும் பிராந்திய வல்லரசு சிறிய விமானத்தைக் கண்டு அஞ்சுவதா?தெரு நாயைச் சுடுவதைப்போல் இருந்த இடத்திலிருந்கொண்டே இவ் விமானத்தை அது வீழ்த்த முடியும்.ஆனால் அவர் வெளிப்படுத்திய அந்த மனம்,இந்திய ஆளும் வர்க்கத்தின் மனக் குமைச்சலாகும்.இது இலங்கை அரசின்மீதான இந்திய ஆதிகத்துக்கு விழுந்த பாரிய அடியென்பதை இந்திய ஆளும் வர்க்கம் உடனடியாகவே புரிந்து கொண்டது.தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து இந்தியாவைத் தனிமைப்படுத்தும் அரசியலை அமெரிக்காவும் மேற்குலகமும் முழு முயற்சியாகச் செய்து வருகிறது.இந்தியாவின் சந்தையை வெற்றிகொண்ட மேற்குலகமும் அமெரிக்காவும் அதன் அரசியல் ஆதிகத்தையும் பொருளாதாரச் சந்தையையும் மெல்ல உடைப்பதின் ஒரு அங்கமே புலிகளின் விமானத்தாக்குதலுக்கான ஒப்புதல் அல்லது ஒத்தாசை.இலங்கையில் இந்தியா அதிகமாக ஆதிகத்தைச் செலுத்தி, இலங்கையை இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடாகவே பஞ்ச சீலக் கொள்கையாக வகுத்தது.இங்கு செல்வாக்கு என்பதன் மறுவடிவம் இந்திய ஆதிகத்துக்கு உட்பட்ட நாடு என்பதன் பொருளைக் குறித்து நிற்பதென்பதை இந்த மேற்குலகம் நன்றாகவே புரிந்து கொண்டது.
இந்தியா இலங்கைக்கு இராணுவத் தளபாடங்களையையும் நிதியையும் சும்மாவா வழங்கியது?அல்லது தமிழர்கள்மீதான வெறுப்பினாலா வழங்கியது?
இரண்டுமில்லை!
இந்தியாவின் ஆதிக்கத்துள் தொடர்ந்து இலங்கையை இருத்தி வைக்க வேண்டுமானால் அதற்கு நிச்சியமாக இந்த உதவிகளைச் செய்தே ஆகவேண்டும்.இல்லையானால் அதை மேற்குலகமும் அமெரிக்காவும் செய்வதைத் தான் பார்த்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை வந்துவிடுமென்பது அதற்கு நன்கு தெரியும்.தான் இவ்வளவு உதவிகள் புரிந்தும் சீனாவும் அமெரிக்காவும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்வதைக் கண்டு அஞ்சிவரும் இந்தியா தனது பங்குக்கு இதைச் செய்வது தவிர்க்க முடியாத இந்திய ஆளும் வர்க்க நலனோடு சம்பந்தப்பட்டது.இங்கே இந்தியாவானது இலங்கையின் பாரிய பாதுகாப்பு அரணாகவும் அதன் இராணுவத் தளபாடத் தேவைகளையும் தொழிநுட்பத்தையும் வழங்கி, இலங்கையைத் தனது கைக்குள் வைத்திருந்தது.திரிகோணமலைத் துறைமுகத்தில் தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் எண்ணைக் குத வாடகை-குத்தகை மற்றும் சம்பூர் அனல் மின் நிலையை முயற்சிகள் என்று தொடர்ந்தபோது, "இந்தியத் தொழில் நுட்பத்தை இலங்கை நம்பினால் புலிகளின் விமானங்கள் இன்னும் பலபாகங்களில் குண்டுகளைப் போடும்" என்பதாக இப்போது இந்தியாவின் மீதும் அதன் இராணுவத் தொழில் நுட்பத்தின்மீதும் அமெரிக்கா கரியைப் பூசித் தனது நெடு நாளைய ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதற்கும், இந்தியாவை ஓரங்கட்டுவதற்கும் ஒரு அரிய வாய்ப்பாகத் "தமிழரின் பறப்பு"முயற்சியைப் பயன்படுத்தும் வெள்ளை மாளிகைக்கு இது(புலிகள் ஊடாக விமானத் தாக்குதல்) அவசியமாக இருந்ததை எந்தத் தமிழர் ஒத்துக் கொள்வார்?
இதைப் புரிந்த இந்தியா புலிகளின் வான் தாக்குதலுக்குப் பயங் கொண்டதாகக் கருத்திடுவது ஒருவகை இராணுவ யுக்தி. அமெரிக்காவின் புதிய பாய்ச்சலை எதிர்கொள்ளும் அரசியலை மட்டுப்படுத்திய சூழலுக்குள் தள்ளிவிடும் விமானத் தாக்குதல்-தனது தொழில் நுட்பத்தின்மீதான இலங்கையின் அதிருப்தி என்பனபோன்ற காரணங்களால் இலங்கையை ஏப்பமிட முனையும் அமெரிக்காவின் அரசியலை எதிர்கொள்வதற்கான முன் நிபந்தனையாக ஈரை(புலிகளை)பேனாக்கிப் பின் பெருமாளாக்கும் முயற்சியாகத் கருத்திட்டுத் தனது வயற்றெரிச்சலை வெளிப்படுத்தியது.
அமெரிக்காவின் அரசியல் கனவு புலிகளின் ஒவ்வொரு நகர்விலும் உறுதியாகி வருகிறது.இந்தக் காரணத்துக்காகப் புலிகள் தமிழரின் புரட்சிப்படையாக-தேசமீட்புப்படையாக-தேசியச் சக்தியாக இருத்தி வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு,கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுத் தமிழர்களுக்குள் முளையெறியும் முற்போக்குச் சக்திகளைத் தமிழ்த் தேச நலனின் முகமூடியோடு கொன்று குவித்து வருகிறது.கூடவே இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை மெல்ல மீட்டெடுத்துத் தனது கைக்குள் இறுகப் பொத்தி வருகிறது.
இத்தகைய நாய்ச் சண்டையில் அடியாளாக இருக்கும் ஒவ்வொரு தமிழ் இயக்கங்கங்களும் தத்தமக்குரிய வேலைகளைத் தமது எஜமானர்களுக்காச் செயற்படுத்தும்போது"தமிழீழம்,தேசியம்,தமிழ்,ஜனநாயகம்,மக்கள் நலன்,பசிபோக்குதல்,நிவாரணம்,மீள்கட்டுமானம்,பேச்சுரிமை,வாழ்வாதாரம்"என்று பற்பல முகமூடிகளைப் போட்டுக் கொள்கின்றன.பாவம் மக்கள்.
ப.வி.ஸ்ரீரங்கன்
04.04.2007
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
2 comments:
கட்டுரையின் பலகருத்துக்களோடு (அமெரிக்காவின் இலங்கயின் மீதான நுழைவுக்கான ஆயத்தம், இந்தியாவின் ஆதிக்கத்தினை குறைத்தல்) ஒத்துப்போனாலும்,
1.// புதிய உலக ஒழுங்குக்கு"ஒரு 11 செம்ரெம்பர் தாக்குதல் அவசியமாக இருந்தது.அவ்வண்ணமே தென்னாசியப் பிராந்தியத்தில் இலங்கையை இந்தியாவின் ஆதிகத்திலிருந்து மீட்டெடுப்பதற்குப் புலிகளின் வான் தாக்குதல் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு அவசியமாக இருக்கிறது.இத்தகைய அரசியல் நலன்களின் அடிப்படையைப் புரியாதிருப்பதற்கான வெளித் தோற்றங்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.இதைச் சாத்தியப்படுத்திய விதமானது முற்றிலும் சுய முன்னெடுப்பைக் காட்சிப்படுத்தும் நுணுக்கத்தோடு செயற்படுத்தப்பட்டுள்ளது. //
இதுவும்
2. //இதுபோலவே புலிகளை மேற்குலகமும் அமெரிக்காவும் நிதி கொடுத்து வளர்த்ததும்-வளர்ப்பதும் பின்பு முதுகை உடைப்பதும் முற்றிலும் அழிந்து போகாதிருக்க அப்பப்ப குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட யுத்த வெற்றிகளுக்குள் மிதக்க வைப்பதும் கூடவே இலங்கையில் இராணவச் சமமின்மையை ஏற்படுத்துவதும் அதையே சாக்காக வைத்துத் தனது ஒத்துழைப்போடு இந்தியாவைக் கை கழுவ வைப்பதுமாக இந்த ஆர்வங்கள் இருக்கின்றன.//
இதுவும் கொஞ்சம் அதிகப்பட்ச வலிந்தெழுதுவதாகப்படுகிறது. எல்லாவற்றையும் சி.ஐ.ஏ வின் மீது இட்டுக்கட்டுவது எந்த அளவுக்கு சரி? என்பது புரியவில்லை? இலங்கையின் ஆனாலும், கட்டுரையின் மாற்று ஒலிப்புக்கு நன்றி.
//எல்லாவற்றையும் சி.ஐ.ஏ வின் மீது இட்டுக்கட்டுவது எந்த அளவுக்கு சரி? என்பது புரியவில்லை? //
கார்த்திக் வணக்கம்!
முதலில் தங்கள் கருத்துக்கு நன்றி!
சி.ஐ.ஏ. குறித்தும் அதன் வேர் எங்கெங்கெந்தரூபத்தில் படர்ந்துள்ளதென்பதை நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.இருந்தும் சில வேளைகளில் நாம் இன்றைய பல்தேசியமயத்தில் நடந்தேறும் அரசியலை கவனயீனத்தாலும்,அதிக அக்கறையற்றதாலும் பொருட்படுத்துவதில்லை!
இன்றைய சூழலில் மூன்றாமுலக நாடுகளின் கட்சிகளையும்(ஆளும்-எதிர் கட்சிகளைக்கூட)பெரும் ஊடகங்களையும் சீ.ஐ.ஏ கைப்பற்றித் தனது முகவர்களால் நிர்வகித்து வருகிறது.உதாரணத்துக்கு நம்ம மான்மோகன் சிங் அவர்கள் கூட இந்த வகைப்பட்ட முகவர்களுள் ஒருவர்தாம்!இது மிகையல்ல.
எனவே இன்றைய சூழலில் புலிகளை மட்டுமல்ல உலகத்துப் போராட்டக் குழுக்கள் பலவற்றை அமெரிக்க-ஐரோப்பிய உளவுப்படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்திருக்கின்றன.சி.ஐ.ஏ.பல தளங்களில் செயற்படுகிறது.அது எமது தலைவர்கள் வடிவினில்தாம் எம்மை மிக அண்மையாக நெருங்கி வருகிறது.என்ன செய்ய?
மூலதனத்தின் இருப்புக்காக வருடமொன்றுக்கு 1.2றில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க-ஐரோப்பியக்கூட்டுச் செலவு செய்கிறது.இதை அபிவிரித்தி வடிவிலும்,போராட்டக் குழுக்களை-எதிர்ப் புரட்சிக் குழுக்களைப் பராமரிப்பதிலும்,ஆயுதத் தளபாடங்கள் வழங்குவதிலும் மற்றும் மிஷனரி முன்னெடுப்புகளிலும் இன்னும் எத்தனையோ குடிசார் முன்னெடுப்புகளாகச் செயற்படுகிறது இந்தச் சீ.ஐ.ஏ.எனும் ஏகாதிபத்திய ஏவல் நாய்!வற்றிக்கான் கூட இந்த வகையில் அதன் ஒரு உறுப்புத்தாம்.
இவையெல்லாம் மிகையல்ல.வற்றிக்கானின் செயற்பாட்டை கிழக்கு ஐரோப்பிய வீழ்ச்சியில் உரைத்துப் பார்க்கலாம்.
இதுமாதிரித்தாம் நம்ம நாடுகளில் பற்பல வடிவங்களில் செயற்படுகிறது இந்த ஏவல் நாய்.
இன்றைக்கு மிக நுணுக்கமாக இது செயற்படுகிறது.
அது செய்யும் மிக நுணுக்கம் மூன்றாம் மண்டல நாடுகளின் ஊடாகத்துறையையும்,கல்விசார் நிறுவனங்களையும் நாட்டின் பெரும் கட்சிகளையும் அதன் தலைமையையும் கைப்பற்றித் தனக்கு ஏவலாளர்களாக மாற்றியதே.இந்த வகையில் ஈழப்போராட்ட அமைப்புகள் பலவற்றை இந்திய ரோவும்(ரா),அமெரிக்ச் சி.ஐ.ஏ. மற்றும் மொசாட்டும் இன்ன பிற உளவு நிறுவனங்களும் மிக இலகுவாகக் கைப்பற்றித் தமக்கு இசைவாக வழி நடாத்துகின்றன.புலிகளை அமெரிக்க நிதியின் மூலம் நோர்வே வழி நடாத்துகிறது.இது நமது விடுதலைக்கு எவ்வளவு தூரம் பாதகமானதென்பதை நாம் அறிவோம்.
புலிகள் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள முற்போக்குச் சக்திகளை அன்றிலிருந்து அழிப்பதற்கு கருப்புத் தோலில் இயங்கும் சி.ஐ.ஏ.ஏஜென்டுகளே காரணமாகவிருந்தார்கள்.இப்போதும் அத்தகையவர்களே நம்மை அழிப்பதில் மிகக் கவனமாகக் கன்னக் கோல் வைக்கின்றனர்-இது மிகையல்லக் கார்த்திக்!
இந்த நிலையில் இலங்கையின் இன முரண்பாட்டைத் தமது நலன்களுக்கான-அதைப் பெறுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்த அழிவு சக்தி நம்மை மிக இலகுவாக விலைக்கு வேண்டித் தனது நலனை அறுவடை செய்கிறது.புலிகள் அறுத்துச் சூடடித்து,தானியத்தை அவர்களுக்குக் கையளிக்கும் கூலிக்காரர்கள்தாம்.
Post a Comment