Sunday, January 07, 2007

புலனாகும் பிரபஞ்சம்

புலனாகும் பிரபஞ்சம்

புனைவும்
பிராண்டலும்...

பெருவெடியின் முன்கதை:

இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பின் இன்னொரு யுத்தத் தாண்டவம் வரமுடியாது,அதுவும் மகாயுத்தமாக உலகு தழுவி வரமுடியாது என்பதில் என் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.
இருக்காதா பின்ன?

செல்களும்,குண்டுகளும்,தோட்டாக்களும் பொலு பொலுவென்று உடம்பெல்லாம் பட்டுத் தெறித்து, உயிர் குடிக்கும்போதும்,அந்த இயக்கம் துரோகிகள்-இந்த இயக்கம் துரோகிகள் என்று எல்லாத் தமிழ்ப் பாலகர்களுக்கும் சாவோலையெழுதித் "தமிழ் வீரர்கள்" மண்ணெண்ணையும்,இரயரும் கொண்டலைந்தபோது"ஐயோ கடவுளே வரந்தரமாட்டீயா உயிர் தப்ப?" என்று பெருமூச்சு விட்டெல்லே அகதியாக ஜேர்மனிக்குள் கால் பதித்தது!(இப்படித்தாம் யாழ்ப்பாணப் பிரபஞ்சப் பந்து இறுகி-அமுங்கி"Big Bang"கண்டது.)

இந்த யுத்த சாட்சியங்களிலும்,ஈழவிடுதலைப் போராட்டத்திலும் கொலைக்களத்தைத் தவிர எந்தச் சாரமும் இல்லாது போனதாக நான் உணர்ந்தபோது-அட கடவுளே! என்னால் ரொம்பக் காலத்துக்கு உயிர் வாழமுடியாது என்பதில் ஒருவிதக் கோபமும் இருந்து கொண்டே வந்தது.

(1)

அம்மாவுக்கு இருத்திவைச்சுச் சோறு போடவேணுமெண்டு அடிக்கடி யோசிப்பதில்,என்னைவிட வேறொருவரும் இருக்க முடியாது.அப்பன்தாம் எனக்குப் பதினொரு வயதாகும்போது-ஒரு நாள் காய்ச்சல்,மறு நாள் மஞ்சள் படர்ந்த உடம்பாய் மாறி,அடுத்த நாள் உடல் வீங்கி,யாரும் யோசிப்பதற்குள் பொதுக்கென நாற்பத்தியொன்பதே வயதோடு"வேண்டாமடா சிவனே இந்தச் சீவியம்"எண்ட கதையாய்ச் செத்துப் போக... கஷ்ட்டப்பட்டு உழைச்சுத் தந்த மனுசனுக்குச் சோறு போட முடியேல்ல-அம்மாவுக்காவது சோறு போட வேணுமெண்டு யோசிச்சதுதாம் நிசமாய்ப் போனது...

"அட ராசா,என்ர செல்ல ராசா,எப்படியடி இருக்கிறாய்?"என்றெழுதிய அம்மா,ஒரு நாள்:"சோத்துக்கு வழியில்லை ராசா.யாழ்ப்பாணத்துக்க ஆமி வந்து கொடியேற்றி,விலையெல்லாம் கொடி உயரத்தில் பறக்குது ராசா,பாதையையும் திறக்கப் போறதில்லையெண்டுது அரசு.இந்தியாவும் வேடிக்கை பாக்குது.பிளேனால சாப்பாடு போட்ட இந்தியா இப்ப கண்ணைக் கட்டிக்கொண்டிருக்குது ராசா,கப்பலாலையும் சாமன்களைக் கொண்டுவரப் புலியளும் விடுகிறான்களில்லை.எண்ணைக்கும்,தண்ணிக்கும்,
சவுக்காரத்துக்குமே பிரச்சனையெண்டால் மனுசர் வாழுமுடியுமா தம்பி?உன்னால காசு அனுப்பமுடியாதெண்டால் நாங்கள் தற்கொலை பண்ணத்தான் வேணும்.நீயாவது கொஞ்சமேதன் அனுப்பு குஞ்சு..."என்று ரெலிபோனில் அழுது மன்றாடப்போய், நானும் நரம்பு புடைக்க உணர்ச்சி வசப்பட்டு-அடடா அம்மா பாவம்,கொஞ்சம் அனுப்புவமெண்டால்"இந்த நாயள் தாற சம்பளம் வீட்டு வாடகைக்கே போதுதில்லை,இந்த இலட்சணத்தில்...சோசல்ல1 போய் பிச்சை எடுத்து வந்ததில் ஒரு கொஞ்சம்"அம்மாவுக்கு ஏதாவது அனுப்புவோமாப்பா"...எண்டு இழுக்க,"இரண்டைப் பெத்துப்போட்டு,அதுகளுக்கு ஒழுங்கான துணிமணி இருக்கா? வெளியில நாய்க் கோலத்தில போறம்.வாறா மாதம் கிண்டர் கார்டன்2 பெரியவனுக்கு,அவனை ஒழுங்கா அனுப்ப வேண்டாமோ?"எண்ட எதிர்ப்பாட்டில்,சரியான சங்கீதம் முறைப்படி கற்றது தெரிய...

பெருவெடியின் முன் கதைத் தொடர்ச்சி:

பெட்டிச் சாப்பாடும்,கூழ்,கஞ்சி, என்றபடி ஜேர்மனிய அகதியக் கோல அடையாளங்களுடன் உலக நாடுகளெல்லாம் அலையோ அலையென்றலைந்து(துகள்கள் விரிவடைவதாக எடுக்கவும்),சுவரிலடித்த பந்தாய் மீளவந்து(பிரபஞ்சம் இதற்குள் சுருங்கி விடுகிறதா?)ஜேர்மனிக்குள் குந்திக்கொண்டு,உலக மகா மார்க்கம் தேடிய பெரு மூச்சில் நசிந்து போன ஆசைகளோடு (நிறையீர்ப்பு)-"அம்மாடி ஒரு பெட்டை சுகம் கிடைக்க மார்க்கமுண்டா கந்தா!"என்ற கும்மியடிப்போடு அங்குமிங்கும் அலைந்து,அரியோ அரியென்று அரிந்து...(என்னத்தை அரிந்திருப்பேனென்று நீங்கள் யோசிப்பீர்கள்,அதற்காக நானே சொல்லியும் போடவேணுமில்லையா? மற்றவர்களின் தொண்டைகளை அல்ல,பொறுமையைத்தாம்!,வேலை கேட்டுத் துளைப்பதும் மறுபுறும்...),ஒரு மாதிரியாகச் சுப்பற்ற கொல்லைக்குள்ள தூண்டில் போட்டு ஒட்டி மீனொன்டை பிடிச்சுப் போட்டதற்கு...
(2)

"... அம்மாவும் ஆட்டுக் குட்டியும்,தன்ர சொந்த நாட்டு மக்களுக்கே சோறுபோட முடியாத நாட்டுக்கொரு பெயர் "ஸ்ரீலங்காவும்,மசிரும்"என்ற என்னியல்புக்குள்
எல்லையில்லாத் திருப்தி முட்டிமோத,அம்மா எப்பவோ மறந்துபோய்..."கழுதைக்கு உபதேசம் காதிலுரைத்தாலும் "அது"அபயக் குலென்றெண்ணியாவ துண்டோ?"என்ற போக்கில் அம்மா மூன்றுமாத இடைவெளிக்குப் பின் ஞாபகத்தோடு...

"இனியும் உன்ர கதையைக் கேட்டால் அங்கயிருந்து கடிதமில்லை காடாத்தி வரும்"என்ற என் குரைப்பில்-சோளப் பொரியாய் நானிருப்பதில்,அவள் அச்சமோ இல்லை எதுவோ பெற்றாளோ தெரியாது.மறைந்திருந்து தாக்கும் பாணியில் பின் வாங்க,"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிக்கு ஏற்பட்ட மகிழ்வை விட(அதை நானெங்கே பார்த்தேன்?)என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாதிருக்க,ஓடோடிப்போய் முன்னூறு யுரோ அனுப்பி வைத்துவிட்டு"அப்பாடா என்ன பெரிய சாதனை!-இதைவிடவுலகத்தில் என்ன பெரிய சாதனையுண்டு?-இவான் (இ)லென்டிலும் விம்பிள்டோன் வென்றால்கூட என்ர மகிழ்ச்சிக்கு-சாதனைக்கு,ஈடாகமுடியாததுபோல் ஒரு நினைப்பில் வீடு வந்து மீண்டபோதுதாம்"ஆடினாள், பாடினாள்,பாடிப் பழமுறத்தால் சாடினாள் ஓடோடத்தான்"என்ற கதையாய்...

பெருவெடியின் முன் கதைத் தொடர்ச்சி:

"என்னடாப்பா இந்த பஸ் இல்லாட்டி இன்னொரு பஸ்சில ஏறிப்போட்டு போவன்ரா!"என்றுரைத்த என்ர கூட்டாளி,"இவன் போட்ட தூண்டிலில நல்ல புழு இருக்கு,நீ தின்றுவிட்டால்-கொழுவோ,கொழுவெண்டு கொழுப்பாய்,கூடவே நல்ல நல்ல கலர்க் கனவுகள் நித்திரையில் வருமெண்டு சொன்னதாலோவென்னவோ ஒட்டி மீனும் வலு குசாலாய் வந்து மாட்டிப்போட்டு,எவ்வளவு போராடியும் தன்னை விடுவிக்க முடியாது திண்டாடியபடி...

இந்தச் சரியான விடாப்பிடியில்,நியூட்டன் போட்டவிதியாய் ஒன்றும்,ஐயன் ஸ்ரைன் போட்டவிதியாய் ஒன்றும் உருவாகிச் சிக்கலிட்ட சமாச்சாரத்தைஎன்று குவன்ரன் பிசிக்ஸ் சொறுடிங்கர் விளக்குகிற பாணியில் சொல்லிப்போடுவதற்குப் பதில் பிரபஞ்சமாம்-அறிக:புலனாகும் பிரபஞ்சம் என்று!

வீறுகொண்ட என்ர ஆண் மனசு"சாண் பிள்ளையெண்டாலும் ஆண் பிள்ளை"என்று அம்மா சொல்லி வளர்த்த வார்த்தை கண்முன் விரிய,"அடியேய் இனியும் பொறுக்க மாட்டேன்"என்று நான் கருணாநிதிப் பாணியில் வீரவசனம் பேசித் தொலைக்க,அவள் ஜெயலலிதா பாணியில் கலைகொள்ள,இறுதியில்சட்டசபை-பாரளுமன்றப் பாணியில் உருண்டு,புரண்டு எழும்ப,நாங்கள் உருவாக்கிய விதிகள் இரண்டும் கூடியிருந்து பார்த்துப் பார்த்து அழுத காலம் தொட்டு தூக்கியதைத் தூக்கியதாய்த் தொடர"நாசமறுப்பான்,நல்ல வளர்ப்பில் வளரேல்ல,வங்கோலை,ராஸ்க்கோல்"என்று பாடிக்கொண்டிருந்தவளை"குஞ்சு,குட்டி,என்ர செல்லம்"என்று நல்லவொரு பப்பாமரமாகப் பார்த்து ஏற்றிவிட, அடுத்த அரை மணி நேரத்துக்குள் "குஞ்சுகள் நீங்கள் போய் ரீ.வீ.பாருங்கோ,பாருங்கோ"என்றென் "விதிகளுக்கு"க் கூற,அவர்களும் அப்பனிட்ட கட்டளையை செப்பனிட்டபடி செய்யக் கட்டிலும் "கிறீச் கிறீச்" என்று ஆடி ஓய்ந்துவிட...
"என்னப்பா இந்த பெட்சீட்டெல்லாம்...ச்சீ..."

"அதை மாத்தினால் போச்சு"என்று நான் ஏப்பமிட"தோய்க்க நானொருத்தி இருக்கிறேன்தானே?"என்றவள் செல்லம் பொழிய"நீ எங்கே தோய்க்கிறாய்?அது வோஷிங் மெசின்தானே?..."என்பாட்டுக்கு வாயை வைத்திருக்கத் தெரியாமல் வைத்திருக்க,"இனிமேல் வருவாயா பாப்பம்"என்ற பாணியில் அவள்.
இந்தவிடத்தில் பெருவெடியின் அனைத்து ஈர்ப்புகளும் வலுவிழக்க தனக்குள் சுருங்கும் பிரபஞ்சம்.

(3)

இன்னெர்ரு அமுக்கம் மறுவெடிப்போடு வெளியொன்று தோன்றவும்,அங்கே சில துகள் இடமெடுத்து ஒன்று கூடவும் விரியவும்,மறுக்கவும் ஏற்கவும்,சுழரவும் சுற்றவுமாய் காலம் தோன்ற...

இன்றைக்குச் சுமார் பதினொரு ஆண்டுகளுக்கு முன் எந்தத் தோற்பையோடு அவனிடம்(எனக்குத் தெரிந்தவன்) போனேனோ,அதே தோற்பையோடு(கைபிடி அறுந்த வித்தியாசம் மட்டும்) சில ஆவணங்களுமாக(இன்னும் கொஞ்சம் வித்தியாசம் சொந்தமாய் ஒரு ஓட்டைக் காரும் இருக்க)அவன் முன் போய் நின்றேன்.

அவனுக்குத் தெரிந்திருக்கும்-புரிந்திருக்கும் என் வருகையின் காரணம்.மதியமே கோல் போட்ட ஆட்டத்தை அவனுக்குச் சொன்னதன் பொருட்டு "என் விஜயம் அவனுக்குப் புதிராக இருக்கவில்லை"என்பதை அவன் விழிகளிலிருந்து நான் தெரிந்து கொண்ட விதமொன்றும் கோவூரின் மனோதத்துவக் கலைமாதிரி இல்லை.

"இனிமேல் சரிப்பட்டு வராது நான் பிரியப் போறன்,Seidung 3 செய்யப் போறன்" என்று சொல்லியும் அவன் எந்தச் சலனமுமின்றி,விசுவாமித்திரன் தவக்கோலம் பூண்டு இருந்தான்.நான் இரதியாக மாறி வித்தைகள் போட்டாலும் அவன் கிறுங்கமாட்டான்.அப்படி அவன் ரொம்பப் பழுத்த ஞானப்பழம்.என் தரப்பு நியாயங்களை அடுக்கிப் போட்டுவிட்டால்"நல்ல பிள்ளை இவன்,ஒன்றும் மோசமானவன் இல்லை"என்று நினைப்பானவன் என்பதற்கும் எந்த உறுதிப்பாடும் இல்லை...என்றாலும்...
(4)

"பிரச்சனை ஒரு சின்ன விசயம்."உப்புச் சப்பு இல்லாத பிரச்சனைதாம்.உருப்படியாய்ச் சொன்னால் ஒரு சிகரட்டு(நான் புகைத்தது சிகரட்டல்ல,சுருட்டு-வனிலாப் போட்ட சுருட்டு.சிகரட்டென்பதில் ஒரு கெளரவம் இருக்கிற மாதிரி...)புகைத்தலின் வினை.அம்மாவுக்கு அரிசி வேண்டுவதற்கும்,யாழ்ப்பாணத்துக்கு வரும் கப்பல் ஒரு பயணத்தில் ஒரு கோடி இலாபம் தேடவும் நம்ம கடிதப் பொருளாதாரக் கடமையின் உள் புகைவு உருமாற்றம் பெற்றதின் வெளிப்படைக் காரணம் சுருட்டில் போய்முடிந்து யுத்த நிறுத்த மீறல் இரு தரப்பாலும்(எனக்கும்,மனைவிக்குமிடையில்) செய்யப்படுகிறது.

எல்லோரும் தூங்கப் போய்(கழு மரத்தில் அல்ல)நடு இரவு தாண்டிய பின்னிரவுப் பொழுதில் யன்னலைத் திறுந்து புகையை வெளியில் ஊதிக் கொண்டிருக்க,ஈழத்துக் கொலைக்காரப் போராட்டத்தை வரலாற்றிலிருந்து மறைக்க முனையும் தேசியம் அம்பலமாவது போல... அவளுக்குப் பாழாய்ப் போன மூத்திரம் முடுக்க,வந்தது வினை.காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதையாய்...

"என்ன சுருட்டும் பத்திறியோ?பரதேசி.(அப்பாடா என்ன புருஷ கரிசனை!) நல்ல வளர்ப்பில வளர்ந்திருந்தால் சுருட்டுப் பத்துவியோ?-நாய்.விடியட்டும் பாப்பம,,உன்னை ரெண்டில ஒண்டு பார்க்கிறன்."சொல்லிக்கொண்டே கட்டிலுக்குப் போனவளை இடைமறித்து,"நானென்ன பில் கிளின்டன் மாதிரியா சுருட்டை அமுக்கியெடுத்துப் பத்தினனான்?இல்லையே?இதுக்குப்போய்..."என்றிழுக்க "நீ,பேசாதே நாயே"என்று என்னிருப்புக்குச் சான்றிதழ் தந்து படுத்துக் கொள்ள விடுவேனா¡? இருக்குத்தானே கைவசம் நல்ல கசாயம்!எடுத்துக் கலந்து கொடுத்தால் எல்லா வகை விசமும் இறங்கி விடுமே.

"என்ர குட்டி,குஞ்சு, அம்மா,ஏனிப்படித் துள்ளுறாய்?"வாயால் சவாடால் போட்டு,கையால் தடவிக்கொள்ள"எடடா நாயே கையை."இதற்கு மேலும் இந்தப் பருப்பு அவியாது.இது இரு நீர்க் கலப்புத் தண்ணீர்.
இதற்கு வேறு வகை மருந்தைத் தேடிக் கொண்டேன்.
(5)

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒரு இலங்கையும்,ஈழமும் இருக்கு.புலியாகப் புருஷன்கள் மாறும்போது,பெண்டுகள் சிங்கமாக மாறுகிறார்கள்.ஆள் அணி திரட்டிய பூரிப்போடு"ஏதோ செய்வது போல்" குசினிக்குள் அவள் பாசாங்கு செய்ய-அவள் அப்பன்"என்ன நீங்கள் சுருட்டும் பத்திறீர்களாம்?"(யார் கொடுத்த உரிமையோ? நாற்பது வயது முழுகிய எனக்கு எஜமான் கோலத்திலொரு மாமா!)

"ஆரு சொன்னது?,அவள் கண்டவளே?"எடுத்த எடுப்பிலேயே துக்ளக் சோ இராமசாமியாய் மாறியிருந்தேன்.

"நீர்(நீங்கள் இப்போ நீர் ஆகிறது) எப்படி அவளுக்கு அடிப்பீர்?"
"அடிப்பேன்.இப்ப உங்களுக்கு முன்னாலும் அடிப்பேன்.நீர்(என் தரப்பும் நீங்களைச் சுருக்கி நீர் ஆகிறது) முதலில் இடத்தைக் காலிபண்ணும்.இது என்ர வீடு(வரலாற்றுத் தாயகம்)."இப்படி உறுமிக் கொள்ளும்போதும் எஜமான் விடுவதாகவில்லை."எங்கே முடிஞ்சால் அடியும் பார்ப்பம்"என்றபடி எஜமான்...

"என்ன செய்ய அடிக்கிறது என்ர தொழிலாய்ப் போச்சு(இல்லாதுபோனால் என் இருப்பு நிலைக்காது.என் தலையைக் கொய்தும் போடுவார்கள் என்னால் உருவாக்கப்பட்ட என்ர எதிரிகள்).இந்தக் கொலைக் கூத்தை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என் "விதிகளுக்கு"த் தொழிலாய்ப்போச்சு.இப்பவே கண்ணில் போட்டு வதைத்தால்தாம் அவர்களும் நாளைக்கு "ஆண்"பிள்ளையாக இருப்பார்கள்!

இறுதியில் சூரியக் கதிருக்குப் பின்னான யாழ்ப்பாணமாய்ப் போனது வீடு.

(6)

"நிச்சியமாகப் பொம்பிளையளுக்கு அடிக்கிறதை நான் ஏற்கமாட்டன்" அவன்-என்ர கூட்டாளி கூறிக் கொண்டான்.ஆனால் இந்த விசயத்தில் சண்டை தொடங்கிறபோது நாங்க போடுகிற "புரிந்துணர்வு ஒப்பந்தங்களெல்லாம"; ஐயன் ஸ்ரையினின் "On a Stationary System with Spherical Symmetry Consisting of Many Gravitating Masses"எண்ட நிகழ்வுகள் போல ஒண்டுக்கொண்டு எங்கோ ஈர்ப்பதிகமாகிச் சண்டை வலுக்குதோ?

"இண்டைக்கு இந்த இரவை இஞ்ச கழிசுப்போட்டு விடியச் Seidung செய்ய இறாத்கவுசுக்குப் (Rathaus 4) போகப் போறேன்.எங்கட முடிவை நாங்கள்தாம் தீர்மானிப்பது."என்ற என் கருத்தை அவன் இந்தியாவின் நிலையிலிருந்து கொண்டு பார்க்காமல்,"சரி"என்று தலையாட்டினான்.

இரவும் விடிந்தது,நானும் தூக்கம் விட்டெழுந்ததும் உண்மை.


பிற்குறிப்பாய்ச் சில:

1:ஓரிரவு புருஷன் இல்லாத சூழல் அவளை வாட்டியிருக்கும்,பிள்ளைகள் "அப்பா"பாட்டு நன்றாகப் பாடியுள்ளார்கள்.

2:வெளி நாட்டுச் சக்திகள்(ஆள் அணிகள்: அண்ணன்,தம்பி,அக்கா, தங்கை,தகப்பன்,தாய் அத்தான்...)தத்தம் ஆர்வங்களால் வந்த பிழைகளெனச் சிலவற்றைக் கொட்டியுள்ளார்கள்(நானில்லாதா வீட்டின் சூழல் நல்ல காரியம் செய்திருக்கு).

3:மீண்டும் வீடுமீண்ட நான் முதல் செய்த வேலை: வக்கீலுக்குப் போன் செய்து"விவாக ஒப்பந்தத்தை"(புரிந்துணர்வு ஒப்பந்தத்தை) இரத்து செய்ய நேரம் குறித்தெடுதது,இதற்குப் பின்பு ஒரு விவாதம்(பேச்சு வார்த்தை)வந்து வடிவாய்க் கதைத்து,அவரவர் உரிமையை(சுய நிர்ணயவுரிமையை)மதிக்கத் தக்கபடி பிரிந்துபோகும் உரிமையுடன் வாழ்வது அல்லது மறுபடியும் சண்டை போடுவது என்ற நோக்கு எனக்கு.

4:இறுதியில் நடந்தது: கொஞ்சம்,கொஞ்சமாகக் கிட்டே நெருங்கி"பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு பிரிந்து போ,நான் என்ர வாழ்வை முடிக்கிறன்"என்ற பச்சோதாபத்தைப் படர விட்டு,"உரசல்,கிள்ளல்,முத்தம்"பின் நானே தொடங்கி,நானே முடித்து வைக்க-தொடர்ந்தும்:மீள்வதும், குலைவதும்,கூடுவதும்,தொடர்வதுமாய்
யுத்தம்...


1=சமூக உதவிக் காரியாலயம்.
2=பாலர் பாடசாலை.
3=மணமுறிவு.
4=பதிவுக்காரியாலயம் அல்லது கச்சேரி.




ப.வி.ஸ்ரீரங்கன்

(எல்லாக் காலத்துக்குமானவொரு புனைவு.)

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...