கனவுகளோடு காலாற நடத்தலென்பது எனக்கென்றும் விருப்புடையது,அல்லது இன்பமயமானது.
இயற்கை அள்ளித் தந்த சுகங்களைச் சுவைப்பதில் எனக்கு அலாதிபிரியம்.அவசரமாக எதையும் செய்வதும்-செய்தபின் கோணலானால் அது குறித்துக் கவலையுறுவது எனக்குக் கிடையாது.
எப்படியும் இந்தக் கானல் நீராகவிருக்கும் இந்தத் தேசத்தோடு(ஜேர்மனியோடு) ஒன்றித்தல் கைகூடுவதில்லை.எனினும், என்வரைக்கும்- இந்த அற்புதமான வளர்ச்சியால் நிறைந்த வளங்களைப் பெற்றுவிட்ட தேசத்தை வெறுமனவே வெறுத்தொதுக்குவது மிகவும் கோணல்த்தனமானது.எனவே அப்பப்ப ஆசைகொள்வதும்-வேலைசெய்யும்போது வரும் பிணக்கினால் வெறுப்பதும்,இத்தேசத்தின் பூர்வீகக் குடிகளின் குறிதவறிய கூற்றுக்களால் அடியோடு இவ்மண்ணை மறக்க முனைவதுமாக ,நான் என் தேசத்தில் ஒரு காலும்,இம்மண்ணில் இன்னொரு காலுமாகக் கனவுகளோடு வாழ்கிறேன்.
இன்று அற்புதமாக நிலா வானத்தில் ஊஞ்சலாடுகிறது.

ஒளித்தெறிப்பு அற்புதமாய் மனதில் மிளிர்ச்சியை மிகுதியாக்கியபடி.
வூப்பெற்றால் மலைகளின் ஒரு பகுதி எனது இருப்பிடத்தில் கரையொதுங்கி கவனிப்பாரற்று விரிகிறது.நிலவினது ஒளித்தரிசனம் அற்புதமாக உரசப்படும் மலைகளின் சரிவுகள் மங்கையின் உச்சிப் பொட்டின் அற்புதத் தரிசனத்தை மனமெங்கும் விரிக்க, எனது உணர்வின் உச்சமோ எம்.3'இன் தடையை அழுத்தி இசையை உறிஞ்சத் தயாராகிறது.
இசை.அற்புதமான மருந்து!
அழககென்பது ஒரு வகைக்காட்சி,இசையோ ஒரு வகை அழகை உணர்வாக்கிறதே!
என்னதாம் சொல்கிறது?
நிறைந்த கனவுகளைத் தரிசிப்பதற்கு அச்சொட்டாக இசை அழைத்துச் செல்கிறதே!கரடுமுரடான ஜேர்மன் மொழிக்கு வார்த்தைசேர்த்த இசையென்பது அவ்வளவாக வெற்றி தரவில்லை-சிம்பொனியின் சிகரங்கள் மலர்ந்த நாட்டினது மொழியின் இயலாமையை நினைத்தபோது,இந் நாட்டின் அனைத்து ஊடகங்களையும் கைப்பற்றிய ஆங்கிலப் பாடகர்கள் ஞாபகம் வந்தார்கள்.
நிலவு இப்போது கவிஞர் அறிவுமதியூடாக எனது மொழியில் இன்னும் அழகாய்த் தெறித்தது.
சிறைச்சாலையென்ற படப்பாடலானது கவித்துவமானது.
அறிவுமதிக்குள் கிடக்கும் தமிழ் இலக்கண-இலக்கிய அறிவு உச்சமானது.
'தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டுமிட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு...'
மனது கர்வமடைகிறது.
என்னவென்பேன்!
தமிழன் பாட்டுக்கட்டுவதில் மிக உச்சத்திலிருக்கிறான்.அதைத் திருடிய இசை மெட்டுகளில்கூட அற்புதமாகப் பாடுகிறான்(ள்).
எனக்குள் ஒருவிதத் திருப்தியும் அதைத்தொட்டுப் பாரிய உற்சாகமும் நிலவின் பொட்டில் பார்வையைக் குவித்தது.
'யாதும் ஊரே யாவரும் கேளீர்'
பூங்குன்றன் என் பாட்டன்.
பெருமிதம் இன்னுமதிகமாகியது.
நிலவோடு நினைந்துருகிய உணர்வை நிலாவருகோடு பறந்தவொரு பாரிய விமானம் உடைத்தெறிய முற்பட்டது.கம்பரே கம்பரே புஷ்ப விமானமா?அது எங்கே?இப்போ நிஷ விமானத்துக்கு மேற்கெல்லோ சொந்தம்.நான் தரையில் விழுந்து நொருங்கினேன்.
வீடுமீளும் எண்ணமரும்பிப் பிள்ளைகள் மனதில் விரிந்தார்கள்.இருக்கையின் சுகத்திலொரு உன்னதம் மீளவும் பெருக்கெடுத்தது.எண்ணச் சுகம் கண்வருத்திக் கனவைத் தந்தது.காலத்தில் வாழு பின் கதைகளென்ன ,கற்பனைகளென்ன இதைத் தாண்டி தரணியெங்கும் தமிழ்,விஞ்ஞானப் பறவையாகச் சிறகடிக்குமென்றது.
என்னமாதிரியொரு மென்னுணர்வு!
இது மேனியெங்கும் பரவ எனது பிள்ளைப் பருவம் எனது மகன்களின் உருவங்களில் பட்டுத் தெறித்தது.
சித்திரை நிலவு,கொட்டும் பனி,கொஞ்சம் பயம் கலந்த இரவு.தோட்டத்துப் பயிர்கள்,நீர் இறைக்கும் ஜந்திரம்,தம்பி மார்கள்...
சொல்லிக் கொள்ளவொரு வாழ்வு அன்றிருந்தது.
சுகம் என்றும் அநாதியாகவே இருப்புக் கொண்டதாகக் கனவு சொல்கிறது.இராணுவங்களின் வெடிச் சத்தங்கள்கூட இரண்டாம் பட்சமான அதிர்வையே விதைத்தது.அற்புதமென்பது,அன்னையும்-அன்னை மண்ணுமென்பதாய் எனது அறிவு சொன்னது.
இப்போது அறிவு மதியைக் கடந்து கண்ணதாசனின் இறுதி மூச்சு:'கண்ணே கலைமானே'என்று தமிழை எம்3 ஊடாகத் தாலாட்டியது.நான் வீடுமீண்டேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
13.10.2005
4 comments:
முதலில் - நீங்கள் விழையும் வாழ்க்கை விரைவில் கைப்பட வாழ்த்துக்கள். ஆயினும்,..........மீதியைத் தனிமடலில் தான் எழுத முடியுமென நினைக்கிறேன். அதுவே சரியாகவும் இருக்கும்.
தருமி ஐயா,வணக்கம்!தங்கள் அன்பு மடல் கண்டு ஆனந்தம் கொண்டேன்.அனைத்துக்கும் நன்றி!
நிறைந்த நேசத்தடன்
ஸ்ரீரங்கன்
நீங்கள் விழையும் வாழ்க்கை விரைவில் கைப்பட வாழ்த்துக்கள்.
ஐயோ,ஐயோ!தங்கமணி என்னங்க இது?நான் மனதிலுணர்வதை உங்களோடு பகிர்கிறேன்.இதைத் தவிர எந்த எதிர்பார்ப்பும் இன்றைய உலக நடப்பில் வைக்க முடியுமா தங்கமணி?மனிதர்கள் சாவுக்காகக் காத்திருக்கும் கணங்களாகவே அனைத்து நடவடிக்கைகளும் நகரும்போது எமக் கென்றொரு எதிர்பார்ப்புக்கு அர்த்தமுண்டா?இதுவரையான மனித மேம்பாடு மனிதுவத்தைச் சிதைத்துவிட்டு வேறு திசையிற் செல்கையில் என்னிடம் இருப்பதெல்லாம் இந்த அவஸ்த்தையை வெவ்வேறு கோணத்தில் குறிப்பதுதாம்.என்றும் நன்றியை சொல்வேன்.
அன்புடன்
ஸ்ரீரங்கன்
Post a Comment