புரியுமா உனக்கு?
வடக்குமறியாய்
கிழக்கும் அறியாய்
இருந்தும்
நீயோ
எனைப்பார்த்து
'தமிழர்களின் குருதியைக் குடிக்கப் போ!'என்கிறாய்.
நான் எதற்காம்?
அதுதாம்,நீயும்
உனைச் சேர்ந்தவர்களும் போதுமே!...
அன்று
அல்பிரேட் துரையப்பா,ஆனந்தராஜா
இன்று
இராசதுரை,சிவகடாட்சம் என்று
சன்னங்களால் சதிராடும்...
கவனித்திருக்கிறாயா?
நீ,
நுகத்தில் பூட்டிய எருதாகவே
செக்கைச் சுற்றுகிறாய்,
உன் நுகத்தடி ஒடிப்புக்காய்
நாம் சிலுவை சுமப்பதறியாய்
புரியுமா உனக்கு?
உனது இனத்தின் ஆணிவேர்
அறுபட்டுக் கொண்டிருக்கிறது!
கல்வியாளர்களைக் கொன்றுவிட்டு
துரோகியென்றாய் அன்று,
இன்றோ
கொன்று குவித்த கல்வியாளர்களின் உடல்களின் மீதிருந்து
ஆட்காட்டுகிறாய்,நானில்லை அவனென்று.
அவசரப்படாதே!
'நாம் தமிழரின் குருதியைக் குடிப்பதும்,
இந்தியக் கைக்கூலியாய் மாறுவதும் இருக்கட்டும்.'
நீ,
எப்போது
கொலைஞர்களின் கைக்கூலியானாய்?
சொல்,
உன் மனம் திறந்து!
அறிவைக் கொன்று குவிக்கும் உன் செயல்
தீராத வடுவைச் சுமக்கும் உன் மன வெளியில்
தேசத்தின் நலனைத் தின்றுகொண்டிருக்கிறாய் என்றறிவாயா?
இரணங்களின் மத்தியில் நின்று
புணங்களைக் கருவாடாக்கிக்கொள்
நாளையுந்தன் கொடூரப் பசிக்குக் கூழ் காச்சவுதவும்.
ஓ கொடூரமானவனே!
நீ,
மௌனித்திருக்கும் எங்கள் உணர்வுகளோடு
கோலி விளையாடுகிறாய்
குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!
'மேற்குலகில் நாம் படாடோபமாக வாழ்கின்றோமென்கிறாய்'
அது,
மக்களிடமிருந்து பறித்தெடுத்த பணத்தாலல்ல!
குருதியைக் கொட்டி
முதுகு வளைத்துப் பெற்றவை.
இப்போது சொல்!
தரையில் தெறித்து விழும் தலைகளின்
மெல்லிய கனவுகளைப் பற்றிச் சொல்
அல்லது,அவற்றில் வழியும் குருதியை தேசத்தின் பெயரால்
உன் சிரசில் தடவிக் கொள்ள முனையும்
உன் மனவிருப்பைச் சொல்!
நீ சொல்லாய்!
ஏனெனில்,
அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்
அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய்
அண்ணனைத்
தம்பியை
அக்காளைத் தங்கையை
மாமனை மச்சானை
மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பூட்டனை
குருவை
அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை
இன்னபிறவெல்லாம் கொன்றாய்
தேசத்தின் விடுதலையின் பெயரால்.
அடுத்தவரி ஆனாவில் எழுதவராவுனக்கு
ஆங்கிலமொரு கேடா?,தமிழ் ஈழமொரு கனவா?
கொடியவனே,கோணல் புத்திகட்டையே!
வக்கற்றவனே,வம்புக்கு அம்பு விடாதே!
சமஷ்டியென்கிறாய்,
கூட்டாட்சியென்கிறாய்,மாநிலம் என்கிறாய் பின்பு ஈழமென்கிறாய்
எல்லாவற்றையும் தொலைத்த பொழுதில்
ஊரெல்லாம் செம்புடன் அலைகிறாய் கறப்பதற்கு.
பின்னெதற்கு
அடுத்தவன் தலையில் ஆப்பு வைக்கிறாய்?
இப்போது
எந்தத் திசையில் நிற்கிறாய்?
மீன்பாடும் தேன் நாடும் போய்
மீதமிருந்த யாழ்மண்ணும் இழந்து
ஈழமொன்று
உருவாக்குதல் உனக்கே சாத்தியம்!
கேட்டால்,
'எல்லாம் இராஜதந்திரமென்பாய்!'
ஓ துயரத்தின் புதல்வனே!
இருள் சூழ்ந்த நாளிகையிலே
பலரைத்தின்றுவிட்டு
இயந்திரத்தில் இரை மீட்கிறாய்.
எச்சங்களில்
'எந்த எலும்பு' உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்!
'இவையெல்லாம்
எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப்' பிதற்றுவாய்.
அன்று உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ இல்லாதிருக்கக் காண்பாய்!
இதற்கு முன்
போ,போ,
போய் உன் பெற்றோரைச் சுற்றோரைக் கேள்
சுதந்திரமென்றால் என்னவென்று?
-ப.வி.ஸ்ரீரங்கன்
18.10.2005
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
2 comments:
I heard so far :
" you are a Tiger
and
the bugger not even scared to his wife!"
'''ம்''...''ம்''!!
Post a Comment