Monday, July 11, 2005

வாழ்வு நமக்கருகினில்...

வாழ்வு நமக்கருகினில்...

எந்தப் பதிலுமின்றி ஓரிரு தினங்களாக நான் மௌனித்திருந்தேன்.காலத்தில் வாழ்கிறேனாவென்பதும்,வரலாற்றின் வெளியில் என் பாத்திரமென்னவென்பதும்,எனக்குக் குழப்பமானதாகவே இருக்கிறது.இதுதாம் ஒரு நிலை.புரிந்துகொள்வதும்-புரிவதிலும்,புரியப்படாததற்கும் முந்திய நிலை முழுமைத்துவ முனகலாகவும்,அறிவின்மீதான-அறிதலின்மீதான நெருக்கடியாகவும் இருந்திருக்கிறது.நான் இருக்கிறேன்.ஆனால் இல்லாதிருப்பதால் மட்டுமே இந்த 'நான்'இருந்தாகவேண்டும்.இது சிக்கலை மீளவும் தந்துகொண்டேயிருக்கிறது.முழுவதுமான மனிதத்துவ மாட்சிமைகள் மனத்தின் வெளியிலுலாவும் மென்மைமறுத்த உணர்வுக்கோர்வையில் வேறொரு மனிதனைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்க ,இந்த 'நான்'இருக்கிறேன்.முடியுந்தறுவாயில் 'நான்'எனக்கு முன் அழிந்து-என் இருப்பை அசைத்திடும்போதும் 'நான்' இருந்தபடியேதாம்.

எனக்குள் நான் எடுக்கும் சுதந்திரத்துக்கான முடிவானது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்குமா?வாழ்வின் தேர்வுகளுக்கும் சுதந்திரத்துக்குமான 'வாழ்வுக் கடைந்தேற்றத்துக்கும்' தொடுப்புத்தாம் என்ன?சரியாகச் சொன்னால் மனிதவாழ்வானது மனிதரைக் கடந்துவிட்டது.காவுகொள்ளத்தக்க கனவுகளுக்கும்,வளமற்ற விருப்புக்களுக்கும்'தோற்றுவாய்'வேறொரு வகையினில் என்னுள்ளே தோன்றி மறையும்போது எனது இருப்பினது அத்தியாவசியமற்ற மனிதத் தேர்வானது என்னை முழுமையாக விழுங்கி விடுகிறது.எனக்கு முன் இருப்பதெல்லாம் திமிர்த்தனங்களின் கூட்டுக் கலைவைதாம்.இது என் மனதைக் காவுகொள்வதால் 'நான்' அழிந்து போவதும்-முகிழ்ப்பதும் வரலாற்று மாய்மாலம்.

அறிவின் பிரச்சனையே தற்கொலைதாம்!

என்னைவிட்டுப் பிரிந்த என் தம்பிக்காக...

எதைப்பற்றிக்கொண்டு எழுந்து நிற்பது.திமிர்த்தனமான-எதேர்ச்சையான இந்தப் பேரண்டம் எந்த உறுதிப்பாட்டைத் தந்தது- இந்த ஊனப்பிறவிக்கு தந்துகொண்டது? தயங்கிக்கொண்ட மனமும்,தவித்துத் திரியும் உணர்வுத் தொடர்ச்சியும் வரலாற்றோட்டத்தில் எந்தப் பாத்திரத்தை எய்கிறது? நிலவுகின்ற மலட்டுத்தனமான இந்தப் படுபயங்கர'விருப்புறுதி' வெறும் பிம்பத்தை மட்டும் வாழ்வாக்கிவிட்டால் -சுதந்திரமென்பது மரணமா?சடுதியில் முடிகின்ற பயணத் தொடர்ச்சி பண்டுதொட்டு நிலவுகின்ற ஊழீயாகும்போது 'நான்'என்பதன் சுட்டலுக்கு ,இருப்புண்டா-பொருளுண்டா?

என்னை உருவாக்க 'நான்'துணையின்றி முடிந்திருக்காது.என்னுள் அமுங்கும் 'நானை' நானே தீர்மானிப்பதால் உணர்வுத் தடத்தில் புதியவொரு உலகை நானே தயார்படுத்துகிறேன்.இதனால் எனக்குச் சிக்கல்கள் வருவதில் என் இருப்பைக் கவனிக்க 'நான்' வருகிறேன்.இதுவே என்னை அழிப்பதிலும் 'நான்'எனச் செயற்படுகிறது.

இந்தப் புலத்தை எனக்காகச் செய்வதில் என் சுதந்திரமே இயங்கிக் கொள்கிறது.இதன்போது உலகத்தை நான் படைக்கிறேன்.அல்லது தூண்டப் படுகிறேன்!எப்படி உருவாக்கிக் கொண்டாலும் எனக்குமுன் விரிந்துகிடக்கும் அண்டம் வரலாற்றுத் தொடர்ச்சியாக ,என்னைக் கட்டிப்போட்டுள்ளது.பொருள் வாழ்வைப் புலப்படுத்தும்போது 'நான்' நேர்மாறாகக் காரியஞ் செய்கிறதே,இதுதாம் என்னை உருப்படவிடுகிறதில்லை.

புறவுலகில் ஒரு அங்கமாக உலாவரும் எனக்குச் சுதந்திரமுண்டா?

சூழ்நிலைகளால் உண்டாக்கப்படும் பொருளுலகமும்,அதன் சமூகக்காரணிகளும் தீர்மானிக்கின்ற உணர்வுக்கூட்டத்தால் 'நான்'முடிவற்ற சூறாவளியாகிறது.இந்தப் நெருக்குதலில் எஞ்சிக்கொள்வதற்கென்றொரு அனுமானம் புலப்படாதபோது,எனக்கு-நான் தடை.இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தெரிந்த பாதை-என்னளவில் தற்கொலைதாம்.இது எனது சுயத்தின் மதிப்பீடாக இருப்பதில்லை!மாறாக என்னைத் தூண்டுகிற பொருள் வாழ்வும்,புறநிலைகளின் உந்துதலுமே -என்னைத் தீர்மானித்துக்கொள்ள 'நான்'பலவீனமாக இருந்திருக்கிறேன்.

எனக்கு இதன் தாக்கத்தால் விமோசனமில்லை!ஆகையினால் எனது சாரமாக 'நான்' வருவதில் சிக்கல்.நான் அற்ற 'நான்' பொய்யன்.பொய்யானது மெய்மையை அழிக்கிறது.அழிவே இறுதியில் மெய்மையைக் காக்கிறது.

இன்னொரு விதத்தில் கூறினால் மனிதர்களுக்கு(எனக்கு) முந்தியது எதுவுமேயில்லை.வெறுமையேதாம் எனக்குமுன் கருத்தரித்தது.எனது இருப்பே எனக்கு அடிப்டையாக வருவதும்,அதையே 'நான்' அடிப்படையில்லாத அடிப்படையாக்கி விடுகிறேன்.இந்த மகாகெட்டித்தனம் எனக்கு வழிகாட்டாது.நிச்சியமாக என்னைப் படுகுழியில் தள்ளிவிடப்போகுமிந்த 'நான்' சுதந்திரத்தைப் பயன் படுத்தமாட்டேன்.ஏனெனில் அது என்னிடத்தில் இல்லை.எனவே எனக்கு -நான் அடிமைதாம்.இந்த இழி வாழ்வு ஏற்புடையதில்லை.நான் அழிவதை'நான்' தீர்மானிக்க மௌனித்திருங்கள் மற்றைய 'நான்கள்'.

ப.வி.ஸ்ரீரங்கன்
10.07.2005

5 comments:

-/பெயரிலி. said...

?

வசந்தன்(Vasanthan) said...

முந்தைய பதிவும் இதுவும் மறைந்து போன உங்கள் தம்பியோடு சம்பந்தப்பட்டதென்பதைத் தாண்டி ஏதும் மண்டைக்குள் ஏறவில்லை.
ஆனால் ஒன்று, தற்கொலைகளைக் கண்டிக்கும் மனநிலையில் நானில்லை.

Sri Rangan said...

நன்றி,பெயரிலி, எம்.ஆர்,வசந்தன்!சரியாகச் சொன்னீர்கள் வசந்தன்.தற்கொலைகளை ஆய்வுசெய்த துர்க்கைம் பற்பல விளக்கம் கூறுகிறார்.நானும் என்பாட்டுக்கு எனக்குள் எதையெதையோ தேடுகிறேன்.என் தம்பி வெறும் சராசரி மனிதன்தாம்.எனினும் என் தோழன்.சகிக்க முடியாது அப்பப்ப உடைந்து போகிறேன்.

தமிழரங்கம் said...

2003 இல் எனது தங்கை ஒருவர் தனக்கத்தானே மண்ணெண்னையை உற்றி கொழுத்தி தற்கொலை செய்து கொண்டர். குறித்த தற்கொலை துண்டி சூழலை அடிப்படையாக கொண்ட எழுதிய கட்டுரை இ;ந்தக கட்டுரையை முன் கூட்டியே சிறிரங்கனுக்கும்; அனுப்பியிருந்தேன்.

பி.இரயாகரன்
11.07.2005

http://tamilcircle.net/books/book-06/book%20-06-34.htm

பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.


இலங்கையில்; யுத்தத்தின் பின்னான அமைதியும் சமாதானம், பண்பாட்டுச் சிதைவை தமிழ் பிரதேசங்களில தேசிய மயமாக்கியுள்ளது. எங்கும் பணமும், பணப் பண்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. இந்த பணம் உருவாக்கிய ஆடம்பரம், அந்தஸ்த்து, திமிருடன் கூடிய வக்கிரம், சிறுபான்மையினரின் பண்பாக இருந்த போதும், அவர்களே சமூகத்தின் முழுமையையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளனர்.

இந்த பண்பாட்டு கலச்சாரச் சிதைவு தமிழ் பிரதேசங்கள் எங்கும், இலங்கைத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் பொதுவாக நடக்கின்றது. இந்தச் சிதைவு பொருளாதார ரீதியான சமூக எற்றத் தாழ்வின் இடைவெளி அதிகரிப்பால் தேசியமயமாகின்றது. இந்த சமூக எற்றத் தாழ்வு பொதுவாகவே இரண்டு தளத்தில் பிரதானமாக நடக்கின்றது.

1.புலம்பெயர்ந்த மேற்கு நாட்டில் இருந்து, சொந்த மண்ணுக்கு சென்று வரும் ஒரு பிரிவால் நடக்கின்றது.
2.யுத்த பொருளாதரத்தை அடிப்படையாக கொண்டு உருவான தீடிர் பணக்கார கும்பலால் நடக்கின்றது.

இதுவும் மூன்று வகையைக் கொண்டது. இது தமிழ் மக்களை எல்லை இல்லாது வகையில் சுரண்டியதால் உருவானது. மற்றையது புலம் பெயாந்த நாட்டில் வாழ்வோரிடம் உறவை முன்நிறுத்தி வறுகுவதன் மூலம் உருவானது. இறுதியாக புலம் பெயர் சமூகத்துக்கு சேவை செய்வதன் மூலம், உயர் நுகர்வை பூர்த்தி செய்யும் வக்கிரமான நடைமுறை மூலம் உருவாகின்றது.

ஒட்டுமொத்தில் உலகமயமாதல் பண்பாடு இதற்கு அக்கபக்கமாக செயல்படுகின்றது. இலங்கையில் இனவாத யுத்தம் தொடங்க முன் இருந்த சமூகமும், யுத்தம் தொடங்கியவுடன் இருந்த சமூகமும் இன்று இல்லை. சமூகம் மேலும் கீழுமாக பிளந்ததனால், வக்கிரம் பிடித்த வெம்பிக் கிடக்கின்றது.

இந்த சமூகப் பிளவில் போராடிய இயக்கங்களின் பங்கும் பணியும் குறிப்பாக இருந்துள்ளது. இந்த பணப் பண்பாடு போராட்ட அடிப்படையையும், போராட்டத்தில் பங்கு கொள்வோரையும் கூட தகர்க்கின்றது. அவர்களும் இயல்பாகவே அதுவாக மாறிவிடுகின்றனர். பல போராட்ட உணர்வுகள், பணப் பண்பாட்டுக்குள் தேசியமயமாகின்றது. அவற்றை இக் கட்டுரை இதற்குள் ஆராயவில்லை. சமூக அமைப்புகுள் நடக்கும் பணப் பண்பாட்டு மற்றத்தையும், அதன் சமூச் சிதைவையும் பார்ப்போம்.

அமைதி சமாதானம் மேற்கு நோக்கி புலம்பெயர் சமூகத்தின் குசியான உல்லாசப் பயணங்களை உருவாக்கியுள்ளது. சொந்த மண்ணை நோக்கி நகர்ந்துள்ள இந்த உல்லாசம், பணப் பண்பாடாகி தேசிய வக்கிரமாகின்றது. ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்து, இலங்கைக்கான விமானச் சேவையை இலங்கை விமானங்களே நாள்தோறும் நடத்தும் அளவுக்கு, புலம் பெயர் சமூகம் உல்லாச பயணங்கள் விரிவடைந்துள்ளது.

இப்படி இலங்கை விமானம் மூலமும், அன்னிய விமானம் மூலமும் உல்லாசம் செல்லும் தமிழர்கள், ஈரோ நணயங்கiயும், டொலர் நோட்டுகளையும் கொண்டு செல்லுகின்றனர். இந்த பணம் அங்கு 100 மடங்கு பெறுமானமுடையதாக மாறுகின்றனது. இதன் மூலம் அங்குள்ள வாழ்க்கை தரத்தை விட, 100 முதல் 200 மடங்கு நுகரும் ஆற்றலை இயல்பாகவே இவர்கள் அடைகின்றனர். அத்துடன் உல்லாச பயணமாக இருப்பதால், நுகரும் ஆற்றால் 1000 மடங்கு மேலானதாக மாறுகின்றது. இந்த நுகரும் ஆற்றல் ஒரு சமூக அதிர்வை எற்படுத்துகின்றது. பணத் திமிரை எற்படுத்துகின்றது. ஒரு வக்கிரத்தை உருவாக்கின்றது. ஒரு அலட்சியத்தை உருவாக்கின்றது. எடுத்தெறியும் போக்கை உருவாக்கின்றது. சமூகத்தை எறி மிதிப்பதை சமூக அதிந்தஸ்தாக கருதுகின்றது. உயர்மட்டக் கனவுகள் இயல்பாக நனவாக, பண்பாட்டு கலச்சார சிதைவுகள் சர்வ சாதரணமாகியுள்ளது. நுகர்வு சார்ந்த சமூக வாழ்வியல் இருப்பை, தீர்க்க முடியாத மனநோய்க்குள் வடிகாலக்கியுள்ளது. பண்பாட்டு கலாச்சார உறவுகள் லும்பன் குணம்சமடைந்துள்ளது.

பணம் மூலம் கிடைத்த தீடிர் சமூகத் தகுதி, அந்தஸ்த்து மிகவும் தவறான சமூக உறவாக்கங்களை வழிநடத்த துண்டுகின்றது. அலட்சியம், எடுத்தெறிதல், வேண்டவெறுப்பாக அனுகுதல், திமிராக விதாண்டவாதம் செய்தல், சமுக இருப்பையும் அதன் அறிவையும் கேலி செய்தல் என நீளும் பணப்பண்பாடு, எங்கும் சிதைவையும், அவலத்தையும் நிரந்தரமாகியுள்ளது. பணத்தின் மூலம் கிடைத்த சமூகத் தகுதியை கையாளும் போது, அடிப்படையான சமுகப் புரிதல் இன்றி தமிழ் சமூகத்தையே சிதைக்கின்றனர். மேற்கத்தைய பண்பாட்டில் காணப்படும் ஜனநாயக விழுமியங்களை கோட்பாட்டு ரீதியாக எற்றுக் கொள்ளாத புலம்பெயர் தமிழ்ச் சமூகம், நடைமுறையில் அதன் ஒரு பகுதியை அனுபவிக்கின்றது. இப்படி உணர்வுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி சமூகப் பொருளாதார அடிப்படையில் புரிந்து கொள்வதில்லை. அதை இழிவாகவும் கேவலமானதாவும் காட்டி வெறுக்கின்றனர். ஆனால் பணம் மூலம் கிடைத்த தீடிர் சமூகத் தகுதியின் மேல், மேற்கத்தை சமூக உறவுகளை கண் முடித்தனமாக திணிப்பதன் மூலம், பல நிரந்தர மனநோய்யாளர்களையும், நிரந்தர சமூகப் பிளவுகளையும் எற்படுத்துகின்றனர்.

உழைப்பை 100 முதல் 200 மடங்காகி விடும் நுகரும் ஆற்றலுடன் கூடிய பணவெறி, அனைத்தையும் இழிவாக கருதத் தொடங்குகின்றது. தமிழ் மண்ணில் நிகழும் மனித உழைப்பை எள்ளி நகையாடுகின்றது. கடந்த காலத்தில் உழைத்து வாழ்ந்த சொந்தப் பண்பாட்டை எள்ளி நகையாடுகின்றனர். அதை தமது பகட்டு வாழ்க்கையால் மூடி மறைக்கின்றனர். மேற்கத்தை நவீன நகரங்களில் எப்படி ஒரு பணக்கார கும்பல் சொகுசாக வாழ்கின்றதோ, அதே போன்று ஒரு சொகுசு வாழ்வை ஒரு மாதத்துக்குள்ளாகவே வாழ்ந்து வக்கரிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதி இது போன்று ஆர்ப்பட்டமாக ஆடம்பரமாக வாழ்கின்றது. பல பத்து லட்சங்களை செலவு செய்யும் மனநிலையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள், அட்டகசங்கள் புலம்பெயர் நாட்டில் இருந்து உல்லாசம் சென்றவனின் உணர்வாக, அதை வெளியில் இருந்து மக்கள் கூட்டம் அண்ணந்து பார்க்கின்றது.

மக்கள் இந்த பணக்காரக் கும்பலை அண்ணந்து பார்க்கின்றார்கள் என்பதை, இந்தப் பணக்கார கும்பலும் அதன் செல்வாக்கு உட்பட்ட பிரிவும் எற்றுக் கொள்வதில்லை. அப்படி அங்கு வறுமையில் மக்களா என்று விதாண்டவாதம் செய்கின்றனர். ஆனால் உண்மை என்ன. 2003 இன் மார்கழி மாதம் வெளியாகி புள்ளிவிபரம் ஒன்றில்; யாழ் குடாவில் 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் 5 உறுப்பினரைக் கொண்டது என்றால், 4 லட்சம் பேர் வாழ வழியற்ற வறுமைக்குள் சிக்கியுள்ளனர். இது யாழ்குடா நாட்டு மக்கள் தொகையில் பெருபான்மையை இந்த கதிக்குள்ளாக்கியுள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இதை மேலும் உறுதி செய்கின்றது. 80 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாக வடக்கு கிழக்கில் பாடசாலைக்கு செல்லவில்லை. 65 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாக கல்வியை இடையில் கைவிட்டுள்ளனர். இப்படி சமூகத்தின் பெரும் பகுதி வறுமைக்குள் சென்றுள்ளது. இதை எள்ளி நகையாடும் வகையில் மறுபக்கத்தில் அட்டகசமான வாழ்க்கை ஒன்ற அரங்கேறுகின்றது. நிலத்தில் கால் பதிக்காது, வாகனங்களில் பவனி வருகின்றனர். சமூக உறவுகளையும் பண்பாடுகளையும் எடுத்து எறியும் வகையில் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக உறவினரைப் பார்க்க ஆட்டோவில் வந்து, ஆட்டோவை வாசலில் நிறுத்தி விட்டு உறவு கொண்டாடி விட்டு மீளும் தீமிர் பண்பாட்டு வரை அரங்கேறுகின்றது. ஆடம்பரமே வாழ்கையாகிப் போன யாழ்குடா நாட்டில் 35000 வாகனங்கள் இன்று ஒடுகின்றன. மிக நெருங்கிய குடும்ப உறவுகளின் பண்பாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு, பணத்திமிருடன் ஆடம்பரமாக சுற்றி வருவதும், தேவைப்பட்டால் உயர் தரமான ஒட்டல்களில் கூட தாங்கி நின்று தமது பெருமையைப் பீற்றுகின்றனர். இதை மையமாக வைத்து பல நவீன உல்லாச விடுதிகள், ஒட்டல்கள், சூப்பர் மக்கற்றுகள், வெளி நாட்டவருக்கு மேற்கத்தை பொருட்களை கொண்ட நவீன மக்கற்றுகள், சுற்றுலா மையங்கள், விசேட குளிருட்டப்பட்ட வாகனங்கள் என்று விரிந்த அடிப்படையில் ஒரு புல்லுருவி வர்க்கத்துக்காக உருவாகியுள்ளது. விரைவில வடக்கு கிழக்கில்; பெண்களைக் கொண்ட மாசஸ் மையங்கள், முதல் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் எல்லைவரை சூழல் விரைவில் மாறிவிடும். இன்று வெளிநாட்டு தமிழனின் பணத்தை ஆதாரமாக கொண்ட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு, இது ஒரு சேவைத் தொழிலாகிவிட்டது. மேற்கத்தை தமிழனின் தேவையை பூர்த்தி செய்யும் சேவைத் தொழிலை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையும், அவனின் பொருளாதார கட்டமைப்புக்களும் உருவாகின்றது. உற்பத்தியை எடுத்தால் மேற்கு தமிழனின் தேவையை பூர்த்தி செய்யும், எற்றுமதி உற்பத்தியாக தேசிய உற்பத்தி மாறிவிட்டது. இது எகாதிபத்திய உலகமயமாதல் தேவை பூர்த்தி செய்யும் எல்லைவரை விரிவடைகின்றது.

பணம் பண்பாடடை அடிப்படையாக கொண்டு சமூக அந்தஸ்து பெற்ற புலம்பெயர் தமிழன், தமது செல்வாக்கு உட்பட்ட குடும்பங்களுக்குள்ளான சாதாரண பிரச்சனைகளை வெட்டொன்று துண்டொன்றாக கையாண்டு வக்கிரமாகவே பிளக்கின்றனர். சொத்துகளை உரிமை கோரவும், விற்று தின்னவும் நுகர்வு வெறியுடன் சொத்துச் சண்டைகள் குடும்பங்களிடையே தொடங்கி வைக்கின்றனர். அடங்கி கிடந்த சாதிச் ஆதிகத்தைக் கூட கிண்டி கிளறிவிடுகின்றான். எங்கும் எதிலும் தலையிடும் புலம்பெயர் சுற்றலாத் தமிழ் பயணிகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை எட்டாத உயரத்துக்கு மாற்றிவிட்டனர். சந்தையின் விலை எது தீர்மனிக்கின்றது என்ற ஆராய்ந்தால், புலம்பெயர் தமிழனின் வாங்கு திறனுக்கு எற்ப மாறிவிடுகின்றது. எழைகளின் நுகர்வு என்பது முற்றாக அலட்சியமாகியுள்ளது. உதாரணமாக கௌவுனவத்தை வேள்வியின் போது 800 ஆட்டுக் கிடாய் வெட்டப்பட்ட போது, கிடாய் ஒன்றின் குறைந்த விலையாக 20000 ரூபாவுக்கு விற்பனையானது. புலம்பெயா தமிழன் தனது பணப் பலம் மூலம் ஒவ்வொரு கிடாயாக தமக்குள் போட்டியிட்டு வாங்கினர். இறைச்சிப் பங்கின் விலை 1000 ரூபாவாக இருந்தது. ஐரோப்பிய சந்தை விலையை விட அதிகமானதாக இருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. மீன் சந்தையில் மீன்கள் ஏலாம் கூறும் போது, புலம்பெயர் தமிழன் சாதாரண சந்தை விiலையை விட அதிகமாக ஒரே கேள்வியில் வாங்கிவிடுகின்றான்;. அங்கு வாழும் மக்களை எரிச்சல் ஊட்டக் கூடிய வகையில், பண வக்கிரம் தலைவிரித்தாடுகின்றது. இதற்கு எதிரான வெறுப்பு பல தளத்தில் வெளிப்படுகின்றது. உதாரணமாக வீதிகளில் செல்லும் இளைஞர்கள் அக்கபக்கமாக சென்று வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் போது, அவர்கள் கூறும் காரணம் காரில் வருவோரு வெளிநாட்டவர்கள்.

ஒருபுறம் புலம்பெயர் சமுகம் உருவாக்கிய இந்த பகட்டு வாழ்க்கையை மிஞ்சும் வகையில், யுத்த பொருளாதாரத்தை பயன்படுத்தி உருவான திடீர் பணக்கார கோடிஸ்வரர்கள் பல நூறு பேர் வடக்கு கிழக்கில் உருவாகியுள்ளனர். இவர்களின் வாழ்கைத் தரத்துடன் கூடிய ஆடம்பரங்களும் பகட்டுத்தங்களும் புலம்பெயர் தமிழ் சுற்றுலப் பயணிகளால் கூட வாழ முடியாத வகையில் உள்ளது. புலம்பெயர் தமிழன் மூக்கில் கை வைக்கும் அளவுக்கு வெம்பிக் கிடக்கின்றது. அங்கே உள்ளவர்கள் எப்படி வாழ்கின்றனர், நாங்கள் எங்கே ஒரு முலைக்குள் என்று சொல்லி புலம்பும் அளவுக்கு இந்த வெப்பிராயம் வெடிக்கின்றது. அவர்களின் நுகர்வின் அளவு லட்சங்கள், கோடிகளாக மாறிவிட்ட நிலையில், எங்கும் அதை நோக்கிய கனவுடன் தமிழ்ச் சமூகம் எல்லாவிதமான சமூகச் சீரழிவிலும் ஈடுபடுகின்றது. சமூகத்தின் தற்கொலை எதார்த்தமாகியுள்ளது.

இந்த தீடிர் பணக்கார கும்பல் யுத்த நெருக்கடியை தனக்கு சாதகமாக்கி, பல பத்து கோடிகளை தன்னகத்தே குவித்துள்ளது. இராணுவம் மற்றும் புலிகளுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்து பொருட்களை கடத்தி வருவதன் மூலம், அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் மேலான தட்டுப்பாட்டை பணமாக்கினர். லஞ்;சங்கள், வரிகள் எதுவாக இருந்த போதும், அவற்றை மக்களின் தலையில் சுமத்தியதன் மூலம், இலகுவாக லாபங்களை பல மடங்காக்கினர். புலம்பெயர் சுற்றுலாப் பயணிகளின் அற்ப நுகர்வு வக்கிரங்களை பூர்த்தி செய்யும், பணப் பண்பாட்டுக்கு இசைவான சந்தைப் பொருளாதாரத்தை இந்த தீடிர் பணக்காரக் கும்பல் உருவாக்கி அதையும் கட்டுப்படுத்துகின்றது. பணத்தை குவிப்பதில் வெற்றிபெற்றுள்ள இந்தக் கும்பல், தமிழ் பிரதேசங்களின் புதிய சுரண்டும் வர்க்கமாக உருவாகியுள்ளது.

மனித சமூக உறவுகள் சிதைந்து, அதற்கு பதில் பண உறவுகள் முதன்மை அடைந்துள்ளது. அறிவு, முதுமை, சமூக ஆற்றல், அனுபவம், பெரியவர்கள் என்ற வடிவில் நீடித்த சமூக அந்தஸ்தும், சமூக பண்பும் மறுக்கப்படுகின்றது. மாறாக பணம் சார்ந்த அந்தஸ்தும் பண்பும் திணிக்கப்படுகின்றது. சமூக கண்ணோட்டம் சிதைந்து சுயநலம் முதன்மை பெறுகின்றது. லும்பன் வாழ்க்கை முறையுடன் கூடிய பண்பை, இந்தப் பணப் பண்பாடு சமூகப்பண்பாடாக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்றாகியுள்ளது.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல பத்தாயிரம் உயிர் தியகங்களுடன் நடக்கின்ற அதே மண்ணில், நடந்த வரும் பண்பாட்ட கலாச்சார சிதைவு ஒரு இனத்தின் அடிப்படையையே அழிக்கின்றது. பாரிய உளவியல் சிக்கலை இது உருவாக்கின்றது. தற்கொலைகளையும், மன நோய்களையும், குடும்பச் சிதைவுகளையும், சமூகப் பிளவுகளையும் நிரந்தரமாக்கின்றது. அமைதி சமாதானம் என்று தொடாகின்ற சூழல் நிலையில், இது அவலமாக பிரதிபலிக்கின்றது.

Sri Rangan said...

அன்பு இரயா,வணக்கம்! தங்கள் கட்டுரையை மிகவும் கவனத்தோடு படித்தேன்.பயனுள்ள கட்டுரை.என் வரைக்கும் இதை வேறொரு கோணத்தில் பார்க்கவில்லை.எனினும் இப்படியுமொரு அகப்போராட்டம் என்னுள் நடக்கிறது.இதை தவிர்ப்பதற்கு முடியவில்லை.இந்தத் தற்கொலையானது சகோதரன் என்பதால் தாக்கம் தரவில்லை.மாறாக அவன் ஒரு தோழனாக,நட்புக்கு பொருத்தமானவனாக-சிறந்தவொரு தத்துவ விசாரணையுடையவன்.தலைசிறந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரனாக இருக்கவேண்டியவன் ஏனோ எழுதுவதில்லை.அவனே ஒருவகையில் என்னை எழுதத் தூண்டியவன்.எதையெல்லாம் கற்க முயன்றேனோ அதற்கு வழிகாட்டியவன் இவனே.தன்னளவில் சாவைத் தேர்வு செய்வது -செயலில் இறங்குவதற்குத் தகுந்த தேர்வானது ஒரு நொடிப் பொழுதாக இருக்குமாவென நான் தேடிப்பார்த்தேன்.விளைவு இப்படியானவொரு கட்டுரை.தங்கள் கருத்துக்கள் யாவும் மிகவும் நேர்த்தியானது.காரணகாரியத்தை மிகச் சரியான கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளீர்கள்.உங்கள் ஆதரவுக்கு என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...