Sunday, July 03, 2005

தானாடாது போயினும் தசையாடும்!



தானாடாது போயினும் தசையாடும்!


இந்த நிமிஷத்தில்
நெருப்பவன் உடலை உண்டுகொள்ளும்!
தொப்புள் கொடியாய் தொடர்ந்த உறவு
ஒரே கருப்பையுள் மலர்ந்த சொந்தம்
ஒரு துளி விசத்தினதும்
ஒருசிறு உளத்தூண்டலாலும்
நெருப்புக்கு இரையாகிறது


இது நீண்ட கதையின் தொடர்ச்சி...
என்வீட்டின் சுவர்களில் மோதித் தெறித்த இந்தக் கணத்தில்
தவித்தெரியும் உளமோடு
தசையாடும் தவிப்போடு
இயலாமையின் உச்சம் கண்களில் வெடிக்கும் நீர்த்துளியாய்


புகையிலைச் செடிகளுள் மலர்ந்துகொண்ட பாசம்
பாய்ந்து பாய்ந்து 'கணு முறித்து' பெருமிதப்பட எதுவுமற்ற அந்தக் காலத்தில்
சிறு விவசாயின் குழந்தைகளுக்கு
தோட்டத்துச் செடிகள் ஆயிரம் கதைபேசியும்
அழகாய்த் தோன்றி வாழ்வாய்ப்போனது


புகையிலைப்பாணி தலைகளில்பட்டுக் கொள்ளும்
ஒருவர் தலையையொருவர் தடவிக்கொள்வோம்
தலைமுடி கம்பிகளாகக் கைகளில் தட்டிக்கொள்ளும்
ரவியும்
ஜெயாவும்
கருணாவும்
'சின்னண்ணா,சின்னண்ணா தலையைப் பார்!' என்பார்கள்


நினைவின் கனத்த பொழுதாய்ப்போனதந்தக் காலம்


பூப்பறித்துச் சாமிப்பூஜை விளையாடியும்
எட்டு மூலைப் பட்டம் கட்டி
காற்றிலேற்றி நிலாப்போன நம் மலர்ச்சியெல்லாம் தொடர்ந்து துயர் எறிகிறது


ஏன் இந்த ரவி எமைவிட்டகன்றான்?


மும்மாரி தொலைந்த பயிர்ச்செய்கைப் போகத்தில்
நடு இரவுகளில் ஊற்றெடுத்தூற்றெடுத்து நீரிறைப்பதும்
ஒளிர்ந்து முகம்விரிக்கும் நிலவினில்
தோட்டத்துள் ஆடிக்களித்ததும் இந்த ரவி, ஜெயா,கருணாவோடுதாம்!


விடியலில் தூற்றும் மழையினில் நனைந்தபடி
சாரத்தை அவிழ்த்து ஆமத்தூறுகளாய் மொட்டாக்கிட்டு
தென்னை வளவுக்குள் ஓடுவதும்
உதிர்ந்து கிடக்கும் தேங்காய்களைப் பொறுக்குவதும்
தேக்கம் பழங்களை பகிர்வதில் அடிபடுவதும் நம் நால்வரின் தினக்கூத்து


விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம்
பாவப்பட்ட என் தேசத்தைப்போல கொலுவின்றிக்கிடக்கிறது
மாரியில் குளமாகும் சின்னமடுமாதா வளவும்
மாரித் தவளைகளும் நம்மை நீந்த அழைத்துக்கொள்ளும்
அம்மாவின் அடியில் ஒருவரையொருவர் தேற்றுவதும்
புளியம் பழம்
இலந்தைப் பழம் பொறுக்கி
கோவில் கணக்கரிடம் ஏச்சும்
அவர் நாயிடம் கடியும் வேண்டுவதும் கனவுத் தடத்தில் பதியமாகி
நேற்றிரவு விழித்திரையை முட்டியது.


ஆல மரத்தில் பால் குற்றிச் சுவிங்கம் செய்வதும்
பூவரசில் ஊஞ்சல் கட்டி நாளெல்லாம் ஆடுவதும்
ஆடு மாடுகளுக்குப் புல் செருக்குவதும்
தொடரூந்தாய்த் தொடருமிந்த நாலவரும்தாம்


'மங்கலாகக் கப்பல் கடலினில் தெரிகிறது'என்பதை
'மங்கோலக்கா கப்பல்...' என வாசித்து, வீட்டுப் பாடத்தில் அத்தாரிடம் வேண்டிய அடியும்
தம்பிமாரின் சிரிப்பும் அலையலையாய் வலியைத் தந்தபடி...


எல்லாம் தொலைத்த அகதி வாழ்வில்
அன்புத் தம்பியின் உடலத்தைக் காணமுடியாது போயிற்று!
நஞ்சருந்திய உடலம் நீண்ட நாட்தாங்காது தகனமாகிறது
என் வலியைத் தடுப்பதற்கு நீண்ட மையில் தொலைவுகூட
தோற்றுப் போகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
03.07.05

2 comments:

குழலி / Kuzhali said...

புரிகின்றது...

ஈழநாதன்(Eelanathan) said...

என்ன சிறீரங்கன் உங்களுக்கும் பொடிச்சிக்கும் ஒரே உணர்வலைகள்

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...