வீடெரிகிறது பிடுங்கிக்கொள்வதே மிச்சம்!
இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தகவற்றொடர்புச் சாதனங்களுடாக நமது வீட்டிற்குள் வந்து வேதாந்தம் பேசுகிறார்கள்.இதயவீணை வானொலியும் தன்பங்குக்கு கொழும்பிலிருந்து நம்மை வந்து தாக்குகிறது.
இந்த நிலையில் வலைப்பதிவுகளிலும் பெடியன்கள்வேறு தம்மையுமொரு இயக்கத்தின் பிரதிநிதிகளாகப் பிரகடனஞ் செய்கின்றனர்.இதுகள்(தமிழர் போராட்டம்,அடிப்படையுரிமைகள்,இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறல்) இவர்களுக்கொரு முசுப்பாத்தியாகப்போன விடையமாகிப்போய்விட்டது. இப்போது அனைவரும் போராட்ட வாழ்வையும்,மக்களின் இரண்டும்கெட்டான் சமூகசீவியத்தையும் வெறும் கேலிக்குரிய விடையமாகப் பார்க்கின்ற நிலையை நமது எதிரிகளுடாய்ச் செய்கின்றனர்.இதை யாழ்ப்பாணத்தில் உரசிப்பார்த்த எதிரிகள்,இப்போது பரவலாக நமது மனங்களைச் சிதைப்பதற்கு வந்துவிட்டார்கள்.
மக்கள் சார்ந்த நோக்குநிலையிலிருந்து செயற்படாத தலைவர்கள்களுக்கு, டக்களஸ் தேவாநந்தா மணிமகுடம் சூடுகிறார்.கௌரவ அமைச்சர் மனமிரங்கியிப்போது நம்மிடம் பேசுவதற்காக இதயவீணை வானொலியூடாகத் தினமொரு மடலுன் நம்மைநோக்கி வருகிறார்.நாம் புல்லரிக்கும்படி கருத்தாடுகிறார்.
இந்திய ஆமியோடு சேர்ந்து மண்டையன் குழுவைத் தொடக்கி அப்பாவிகளின் கழுத்தையறுத்துச் சாக்கு மூட்டையில் திணித்த துரோகக் கும்பலெல்லாம், மக்கள் இயக்கங்களாக இப்போது தலைகாட்டுகின்றனர்.நமது மக்களையின்னும் உயிருள்ள ஜீவிகளாகக் கணிக்காத இவர்கள் நம்மையின்னும் இளிச்ச வாயர்களாகவெண்ணிக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்த நோக்கமானது,சமாதானச் சூழலில் புலிகளைப் பலவீனப்படுத்துவதும்,அவர்களிடம் முழு அதிகாரமும் போய்ச்சேருவதைத் தடுத்துத் தமது கைகளுக்குள்ளும் சிலவற்றைப் பங்குபோடவெடுக்கும் நோக்கமும்,கூடவே தமது இருத்தலை ஆபத்தாக்காத-உயிருக்கு உத்தரவாதம்கோரும் தந்திரத்தோடு மக்களையணுகிறார்கள்.
இவர்களேயிப்போது நமது மக்களில் மிக மிகக் கரிசனையான தலைவர்களாகவும்,அமைப்புகளின் செயற்பாட்டாளர்களாகவும் ஒளிவட்டம் கட்டிக்கொண்டு உலாவருகின்றனர்.இந்தத் தளபதிகளையும்,தலைவர்களையும் தத்தெடுத்துக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் தனது பிராந்திய நலனை இலங்கைக்குள் ஏலவே உறுதிப்படுத்திய நிலையில்,இப்போது புதிய தலைமைத்துவத்தை உருவாக்கித் தனது அபிலாசைக்குகந்த ஆட்சியையும் இலங்கையில் ஏற்படுத்தி,அதன் வாயிலாகத் தமிழர்களது உரிமைகளுக்கு அற்ப சலுகைளால் வேட்டுவைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளது.இதற்காகப் பற்பல நிதி உதவிகள்(முதற்கட்டமாக 2500கோடி இந்திய ரூபாய்கள் கைமாறியுள்ளது) மூலம் புதிய புதிய ஊடகங்களுடாய் நமது மூளையைத் தகவமைக்கும் காரியத்துள் அகண்ட பாரதம் இறங்கியுள்ளது.சும்மா கிடப்பதுபோல் பாசாங்கிடும் இந்தியாவின் முழுப்பார்வையும,; நிழலும் இலங்கைமீதே சூழ்ந்திருக்கிறது.இதன் விளைவுக்குப் பிற் பலமாக இந்தியாவின் வெளித்தொடர்புகள் இருக்கிறது.
மாறிவரும் பொருளியற் சூழலை மதிப்பிட்ட ஐரோப்பியஅமெரிக்க ஆட்சியாளர்கள் இந்தியத் துணைக்கண்டத்துக்கான பொது சமூக-அரசியற் கட்டமைப்பையும்,அரசியற் சாசனச் சட்டவிதிகளையும் கூடவே அது சார்ந்த பொது நாணய-பொருளாதார நெறிமுறமைகளையும் உலக வங்கியூடாக வலியுறுத்தி வருகிறது.இதைச் செய்யும் பட்சத்தில் அந்தந்த நாடுகளினது அந்நியக்கடன்களை பாதியாகக் குறைப்பதாக பிரேரிக்கப் பட்டுள்ளது.இதன் உந்துதலானது இந்தியத் துணைக்கண்டமானது இனத்துவ முரண்பாடுகளுக்கு தற்காலிகச் சமாதிகட்டிவிட்டு அந்நிய நிதிமூலதனத்துக்கேற்றவாறான உற்பத்தி மையமாக மாற்றப்பட வேண்டும்.இந்தச் சூழலானது உலகக் கம்பனிகளின் தன்னியல்பான தேவைக்களைப் பூர்த்திசெய்யும் அரசையும்-பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்படி இந்தியா தன்னைப் பலப்படுத்தித் தகவமைத்து,பிராந்திய பொலிஸ்காரனாக இருப்பதை வழிமொழிகிறது.
இது இப்படியிருக்க நமது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சிதைத்துவிடுதலும்,அவர்களையும் வெறும் இயக்க நலனோடு பேரம்பேசத் தக்க பலவீனக்காரர்களாக்கித் தமிழர் நலனை முதன்மைப் படுத்த லாயக்கற்ற குறுங்குழுவாகச் சிதைப்பதில் இந்திய வியூகம் மையங்கொள்கிறது.இங்கே தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கையின் முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியா ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன் படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக்காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.
இந்தச் சமூகக் காலவர்தமானத்துள் நாம் எதைப் பற்றிச் சிந்திக்கிறோம்?
எம் தரப்பில் புதிய ஜனநாயகப் புரட்சி என்கிறோம்,
புலிகள் தரப்பில் தேசிய விடுதலைப் போராட்டம்,தனிநாடு.
குறுங்குழுக்கள் இலங்கைக்குள் தமக்கான பங்கைக் கோருதலும்,அதுவே மக்கள் நலனும் என்பதாக...
ஆனால் உலக அரசியல் நம்மெல்லோருக்கும் ஒரு குறிப்புணர்த்தியுள்ளது.அதாவது தான் தீர்மானிப்பதே சமூகச் சூழலாக உருப்பெறுவதும்,அதுவே தேவையாகவும் மக்களால் உணரப்படுமென்பதும். அதையே பெடியன்களும்,´இதயவீணை-ரீ.பீ.சீ வானொலிகளும் உறுதிப்படுத்துகின்றன.
என்றபோதும் நாம் உதிரிகள்.எம்மிடம் எந்த அமைப்பு வடிவமுமில்லை.எம்நிலை மாரித் தவளைகளின் நிலை.
ஆனால் இதயவீணை,ரீ.பீ.சீ இயக்கங்களின் பிற்பலத்தோடு நம்மையணுகி,நமது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குவேட்டு வைக்கிறது.
எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமாகப் பலர் காரியமாற்றும்போது நாம் புதிய ஜனநாயகப் புரட்சிபேசுவதும்,அது சார்ந்து மக்களை விழிப்படைய வைப்பதும் அவசியமானது.
குறைந்த பட்சமாவது அவர்கள்(மக்கள்) தமது சமூக வாழ்வாதரங்களைக் காக்கும்படியான தேசியத்தையும்,தேசியத் தன்மைகளையும் காக்கவேண்டும்.இதைச் செய்யத் தக்க தேசிய முதலாளியமில்லாத தேசியக் கட்டமைப்பு நிலைக்கமுடியாது.
இறுதிவெற்றி எம்மக்களுக்கானதாக இருக்குமா?
கசப்பான உண்மை: இல்லையென்பதே!
அடுத்த தலைமுறைவரை நாம் விலங்கொடிக்க முடியாத பலவீனத்தோடு இருக்கப்போகிறோமா? தீர்மானிப்பது யார்? மகள் என்று எல்லாவற்றையும் அவர்கள் தலையில் போட்டுவிட்டு நாம் தப்பிக்கிறோம்.வேறு வழி?
ப.வி.ஸ்ரீரங்கன்
21.06.05
21 comments:
நல்ல, அவசியமான பதிவு.
கொஞ்சம் எழுத்துநடையிற் கவனஞ் செலுத்தவும்.
ஸிறிரங்கன், நீண்டநாள்களுக்குபின் நல்லதொரு கட்டுரையோடு வந்திருக்கின்றீர்கள். மக்கள் மீதான் உண்மையான அக்கறை இந்தப்பதிவில் தெரிகின்றது. இந்த இருண்ட நிலை, பாலஸ்தீனியர்களைப் போல அடுத்த தலைமுறை கல்லெறிந்து அப்பாவிகளாய் இறந்துபோகின்ற நிலையை எங்களுக்கு கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை.
........
நிற்க, மயூரனின் பதிவில் உங்களுக்கு சற்று நலமில்லாமல் இருந்தது சில நாளகளுக்கு முன்னர்தான் வாசித்திருந்தேன். இப்போது எப்படி? உடல் நலத்தில் சற்றுக் கவனமெடுங்கள்.
நன்றி,கொழுவி,டி.ஜே! இப்பவும் சரியான நலமில்லை.இந்த உடல் மக்கர் பண்ணும் உடல்.சிறிய வயதில் கவனிக்காத உடல் இப்போது ஒத்துழைக்க மறுக்கிறது.
சிறீரங்கன் கையை நீட்டுங்கள் தழுவிக்கொள்ள.உடல் நலத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்
நல்ல பதிவு ஸ்ரீரங்கன். விடுதலைப்போராட்டம் எவ்வாறாயினும் சிதைக்கப்படவேண்டும் என்பதில் பல சக்திகளும் தங்கள் தங்கள் நலனை முன்னிருத்தி வேலைச் செய்வதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தமிழர்கள் போன்ற ஒற்றுமையற்ற, சாதியாலும், மதத்தாலும், பிரதேசத்தாலும் பிளவுபட்ட, போலிக்கெளரவத்துக்காக பொதுநன்மையை பலிகொடுக்கக்துணிந்த இனம் தனது வாய்ப்புகளை இப்போது தவறவிட்டால் பின் எப்போதும் மீட்டெடுக்க முடியுமா எனத்தெரியவில்லை.
நன்றி.
ஸ்ரீரங்கன்,
ஈழத்தமிழ்மக்களின் சிக்கலே இதுதான். புலிகளின் செயற்பாடுகள் அனைத்தினையும் அவர்களினாலே நியாயப்படுத்தவோ ஒத்துக்கொள்ளவோ முடியாதபோது (கருத்துரீதியிலே, சித்தாந்தரீதியிலே, செயல்ரீதியிலே), மீதி இயங்காததுகளின் செயற்பாடுகளும் புலிகளின் மீதான தம் வன்மத்தினைத் தீர்த்துக்கொள்ளத் தமிழ்மக்களின் நியாயமான உணர்வுகளையும் உரிமைகளையும் நசுக்க முயலும் ஆதிக்கசக்திகளினதும் அந்நியசக்திகளினதும் நேரடியான திமிருக்கும் மறைமுகமான அழித்தற்செயற்பாடுகளுக்கும் எடுபிடிகளாகச் செயற்படும் துஷ்டதனமும் புலிகளைப் பட்டும் படாமலும் சார்ந்திருக்கும் நிலையைத் தமிழ்மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. பொதுவாகவே, சித்தாந்தரீதியிலான போக்குக்கும் நடைமுறைக்கு முகம் கொடுக்கவேண்டிய உபாயத்துக்குமிடையே தவித்துக்கொண்டிருக்கவேண்டிய நிலை. குறைந்தபட்சம், சித்தாந்த ரீதியிலேயும் சமயங்களிலே அணுகுமுறையளவிலும் புலிகள் ஏமாற்றத்தினையும் சோர்வினையும் தந்தாலுங்கூட, ஈழத்தேசியத்தினை தற்காலிகமாகவேனும் முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்மக்களின் இருப்பினை நிர்ணயப்படுத்தவும் அவர்களை விட்டால், எவரையும் காணமுடியவில்லை.
தங்கமணி,பெயரிலி,இருவருக்கும் என் நன்றி.தங்கமணிகூறுவதும் சரியானது.இதுதாம் எமது நிலை.இதைத்தாம் பெயரிலி சுட்டிக்காட்டுகிறார்.இரமணி உங்கள் கருத்துத்தாம் எனக்கும்.நமது கனவுகளைத் தங்கமணி கூறிபடி இப்போது தவறவிடும்போது நாளை பாலஸ்தீனத்தின் நிலைதாம்.அத்தோடு இன்னொன்றும் கூறலாம்:நமது அகதிவாழ்வு தீரப்போகிற காரியமில்லை.அந்நிய நாடுகளில் சருகுகளாகச் சாகப்போகிறோம்.
நட்புடன்
ஸ்ரீரங்கன்
அன்புடைய ஈழநாதன் தங்கள் மேலான அன்புக்கு என்றும் நன்றியுடையேன்.
த்ங்கள் நலன் எப்படி...... விரைவில் நல்ம் பெற்று....புதுத்தெம்போடு வர பிரார்த்திக்கிறேன்.
கொஞ்சம் நலம்தாம்,குழைக்காட்டான்.இன்னும் சரியான நலமில்லை. தங்கள் அன்புக்கு என் நன்றி குழைக்காட்டான்.
அன்போடு
ஸ்ரீரங்கன்
சிறீ,திரும்பத்திரும்பத் தேசியச் சாகடையில் விழுவது ஏன்?இது ஆபத்தான பாதை! நீங்கள் அனைத்தையும் கற்றவர்.என்றாலும் சுட்டிக்காட்டுவது எனது கடமை.
நீயெல்லாம் ஒரு மனுஷன்தானாய்யா?புலிக்குவால் காட்டுறியா? ஒட்ட நறுக்கிப்போடுவம்.
அன்புடன்
டோண்டு.
ஐயா டோண்டு
ஒழுங்கான முறையில் வாதத்தைத வையும் . அதனை விடுத்து இவ்வாறான மலின சொற்களில் தாங்கள் பதில் கொடுப்பது ஆய்வினை தொடர வழிவகுக்க முடியாது.
சுதன்
சுதன்,
இது உண்மையான டோண்டு அல்ல. இது ஒரு விஷமியின் வேலை. நீங்கள் டோண்டுவின் வலைப்பதிவுக்குச் சென்று அவரிடமே கேட்டுத் தெளியலாம்.
http://dondu.blogspot.com/
Dear Sri Rangan,
The duplicate Dondu is again at large. It is my humble request to you that you disable anonymous comments and permit only bloggers' comments.
This comment will be copy pasted in my special posting in my blog vide http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
This is the acid test that still is open to me to prove the genuineness of my comments.
Regards,
Dondu Raghavan
any way Sorry dondu
Suthan
ஐயா, நகல் டோண்டு அவர்களே!
எமது பதிவிலும் வந்து காரியஞ் செய்கிறீர்களா? இந்தக்காரியத்திற்குக் கொடுக்கும் நேரத்தை நல்லவொரு படைப்புக்குக் கொடுக்கலாமே? ஓ... நீங்கள்தானே மற்றவர்களின் துயரில் இன்புறும் சோடிஸ வாதியாச்சே! இதன்பின் நாமெதைக்கூறினும் எதுவும் நடப்பதற்கில்லை.நீங்கள் எவ்வளவு முயன்றாலும் டோண்டு என்ற மூல டோண்டு இராகவனை எதுவுஞ் செய்யமுடியாது.அவர்களுக்கான மரியாதையும்-மதிப்பும் இன்னும் உயர்ந்தபடியேதாம் இருக்கிறது.ஒரு தனிமனிதரின் உளப்போராட்டம் உங்களையெல்லாம் உருப்பிட விடாது.இத்தகைய ஈனத்தனங்களால் நீர்,இன்னுமின்னும் அம்பலப்பட்டும்-அருவெறுக்கத்தக்க மனிதஜீவியாக மதிப்பிடப்பட்டும் போகிறீர்.எப்பவுமே இஃதொரு மனோவியாதி.முற்றுவதற்குள் நல்ல வைத்தியரை அணுகவும்.இல்லையேல்-இறுதியில் மரஞ் செடிகளுடன் பேசிக்கொண்டலைவீர்.இதுதேவையா?எல்லோர் நேரத்தையும் வீணடிக்கும் மானிடரே,உமது கைங்காரியத்தால் நீரே சோடிஸவாதியாக் காட்டிக்கொள்கிறீர்.இதைப் புரிந்துகொண்டீர்ரானால் உமது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.
நிறைந்த பரிதாபத்துடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
நன்றி சிறீரங்கன் அவர்களே. இப்போது நிலைமை சற்று பரவாயில்லை. என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயருடன் சேர்ந்தே வரும். என்ன, புகைப்படம் பின்னூட்டங்களை இடும் பக்கத்தில் மட்டும் வரும். மேலும் என் பின்னூட்டங்கள் என் தனிப்பட்டப் பதிவிலும் நகலிடப்படும்.
ஒரு வேளை போலி நபர் என் புகைபடத்தையும் ப்ளாக்கர் எண்ணையும் ஒட்டி நகலெடுத்தால் அவற்றை அவர் ஒரு புது ப்ளாக்கர் பெயரில்தான் போட முடியும். அப்போது எலிக்குட்டி அவ்ர் புது ப்ளாக்கர் எண்ணைக் காட்டிக் கொடுக்கும். இருப்பினும் அந்த மனம் பிறழ்ந்தவன் ஏதாவது செய்து வைப்பான் என்ற பயமும் இருக்கிறது. பார்க்கலாம், எல்லாம் கடவுள் விட்ட வழி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி,டோண்டு அவர்களே!இப்போது புதுப்பூதம் கிளம்பியுள்து.அது பெடியன்களின் பெயரில்.இந்த நிலைமை எங்குபோய் முடிமென்பது எனக்குப் புரிவில்லை.கணினியறிவை இப்படித் துஷ்பிரயோகஞ் செய்கிறார்களே!உலகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் கொட்டிக்கிடக்கின்றன,இவைகள் அந்த மனிதர்களுக்குப் புரியவில்லை!ஏதோ செய்யட்டும்.நாம் என்ன செய்யமுடியும்?இப்போது யாரு மூலம்-யாரு நகல் என்பதே புரியவில்லை.இதற்கொரு வழியை கணனி விற்பனர்களே கண்டு பிடியுங்கள்.பெடியன்களின் மறுப்பை ஏற்றுக் கொள்கிறோம்.
அன்புள்ள வலைப்பதிவாளர்களே,வாசகர்களே!
தோழர் இரயாகரன் அவர்கள் எனக்குக் கீழ்வரும் எதிர்வினையை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்கள்.
அவருக்குப் பின்னூட்டமிடும் பதிவு வலைப்பதிவிலில்லை.
அத்துடன் இதில் நேரத்தைச் செலவுசெய்வதற்கும் அவரால் முடியாது.
தோழர் இரயாகரன் பற்றிய பெடியன்களின் மதிப்பீட்டை நான் மறுக்கிறேன்.
எனக்குத் தெரிந்த வரை புகலிட வாழ்சூழலில் தோழர் இரயாகரன் போன்ற அற்புதமான -சோஷலிசத் தோழமைக்கும்,பாட்டாளியப் பண்புக்கும் நான்கூட பெறுமானமற்றவன்.அவ்வளவு நாணயமான அந்தத் தோழருக்கு எனது தளத்தில் தனது கருத்தை முன் வைக்கும் தேவையிருக்கப்போவதில்லை.
ஏனெனில் அவர் சொந்தமாகத் தளம் வைத்திருப்பவர்.
கடந்த 20 வருடங்களாகப் புலம்பெயர் வாழ்வில்- தமிழர்கள் மத்தியில் 'சமர்' எனும் சஞ்சிகையூடாக ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை எழுதி அறியப் பெற்றவர்.அதுமட்டுமன்றி தமிழ்நாடளவில் பலாராலும் மதிக்கப்பெறும் சமூகவியலாளர்,பல நூற்களை எழுதி வெளியிட்டவர்.
அவரெல்லாம் எனது தளத்திற்கு வருகைதந்து,என்னைக் கௌரவிக்க நான் கொடுத்துவைக்கணும்.
அவ்வளவு தோழமையுணர்வு பொருந்திய அற்புதமான பாட்டாளிய வர்க்கப் பண்புடைய திரு.இரயாகரன் அவர்கள் எனக்கு மின் அஞசல் வழியாகத் தனது எதிர்வினையை சொல்கிறார்.
நான் மதிக்கும் தோழர்களில் திரு.இரயாகரன் முக்கியமானவர்.அவர் எமக்கு கம்யூனிச வாழ்வுக்கு உதாரணமானவரும்கூட.அவரெல்லாம் இவ்வகை அநாமதேய நடவடிக்கைக்கு சம்பந்தம் இல்லாதவர்.
எனவே அவரது கடிதத்தை என்பெயரில் பின்னூட்டத்தில் இணைக்கிறேன்.இத்தகைய சிரமத்தை தோழர் இரயாகரன் அவர்கட்கு வழங்கிய யாரோவுக்காக நான் தாழ்மையாக மன்னிப்புக்கோருகிறேன்.
அத்துடன் அவரது நீண்ட கட்டுரையை பின்னூட்டத்திலிருந்து நீக்கியுள்ளேன்.அது பின்னூட்டத்தை இயங்கவிடாத காரணத்தால்.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
சிறிரங்கனுக்கு
பெடியள் என்ற இணையத்தில் வெளியாகிய ஒரு செய்தியை இதில் இணைத்துள்ளேன்;. இதற்கஎனது பதிலும் இத்தடன் உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.; என்ன நடக்கின்றது. உண்மையில் இதை அவர்களுக்கு தெளிவுபடுத்தவும்.
;.பி.இரயாகரன்
பெடியன்'கள்
ஆழனெயலஇ துரநெ 27இ 2005
// பெயர் மாற்றக் கும்பல் பிடிபட்டது.
ஸ்ரீரங்கனின் பதிவில் பெடியன்களின் பெயரைப் பயன்படுத்தி பின்னூட்டமிடப்படுகிறது. அது தீவிர புலியெதிர்ப்பு வாதமாக இருக்கிறது. எதையும் எழுதிவிட்டுப்போங்கள். ஆனால் ஏன் எமது பெயரைப் பயன்படுத்திப் பின்னூட்டமிட வேண்டும்? இதிலிருந்து ஒன்று தெளிவாகப் புலனாகிறது. அதை சகல வலைப்பதிவருக்கும் தெரிவிக்கிறோம்.
அப்பின்னூட்டம் வெளிவராத இராயகரனின் புத்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே அப்பின்னூட்டம் இராயகரன் கும்பலினால் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களினால் தான் போடப்பட்டிருக்க வேண்டும். இந்த கேடு கெட்ட செயலைச் செய்வது புலியெதிப்பு என்பதை மட்டுமே மனப்பாடமாகக்கொண்ட ஒரு கும்பல் என்பது தெளிவு. எம் பதிவிலும் அவர்கள் பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள். இப்போது எம் பெயரைப் பாவித்து இப்பின்னூட்டம் ஸ்ரீரங்கனின் பதிவில் போடப்பட்டுள்ளது.
டோண்டு மற்றும் சிலரின் பெயர்களில் பின்னூட்டமிட்டவர்களும் இவர்களே என நாம் சந்தேகிக்கும் நிலையுள்ளது. புலியெதிர்ப்பை மட்டுமே கருத்தாக்கமாகக் கொண்ட மனநோய் பிடித்த அக்கும்பலே டோண்டு போன்றவர்களின் பெயர்களிலும் பின்னூட்டமிட்டு இவ்வளவு மன உளைச்சலுக்கும் காரணமாயிருந்தது என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மற்ற வலைப்பதிவாளர்களும் யார் பிறர் பெயரில் பின்னூட்டமிடும் அந்த அநாமத்து என்பதை இனங்கண்டுகொள்ள ஸ்ரீரங்கனின் பதிவில் பெடியன்களின் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளதை வைத்துப் புரிந்து கொள்ள முடியும்.
பெடியன்கள் பதிவில் எழுதும் நாம் அந்தப்பெயர்களில் எந்த வலைப்பதிவிலும் பின்னூட்டமிடுவதில்லையென்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஆகவே பெடியன்கள் பெயரில் எந்தப் பதிவில் பின்னூட்டமிடப்பட்டாலும் அது போலியானதே.இராயகரனுடனோ அவர் சார்ந்த குழுவுடனோ அறிமுகமிருப்பவர்கள்இ (ஸ்ரீரங்கனுக்கு இருக்குமென்று நினைக்கிறோம்.) இந்தப் பின்னூட்ட விசயத்தைத் தெளிவுபடுத்தலாம். வெளிவராத ஒரு புத்தகத்திலிருந்து பத்திகள் பின்னூட்டமாக இடப்படுகிறதென்றால் எப்படி கருத முடியும்?
இதற்குச் சரியான தீர்வு கிடைக்காத வரை இணையத்தில் புலியெதிர்ப்பைச் செய்யும் குறிப்பிட்ட ஒரு கும்பலின் (அவர்களின் மொழியில் சொன்னால்தான் புரியும்) வேலைதான் இந்த பெயர் மாறாட்டம் என்றுதான் நாம் (மற்ற வலைப்பதிவாளர்களும்) நினைக்க வேண்டிய நிலையிலுள்ளோம். எனவே முகமூடி கிழிந்தபின்னும் இந்த வேலை செய்யவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறோம்.//
-உம்மாண்டி-
இரயாகரன் எழுதிக் கொள்வது:
எனது பெயரில் இந்த அவதூறு அவசியமற்றது. நேர்மையற்ற ஒரு அனுகுமுறையும் கூட. உண்மையில் வெளிவாரத எனது கட்டுடுரை எப்போது எங்கே பிரசுரமாகியுள்ளது. வெளிவாரத கட்டுரை என்ற கண்டுபிடிப்பே ஆச்சரியமாகதாக உள்ளது.www.tamilcircle.net இல் எனது அனைத்துக் கட்டுரைகளும் உள்ளன. எனது கட்டுரையை யாரோ எடுத்து ஒட்டுவது இட்டு நான் எதவும் செய்யமுமடியாது. எனது கட்டுரை வெளிவந்த அடுத்த கணமே அதன் மீது கட்டுப்பாட்டை நான் கொண்டிருப்பதில்லை.
நான் எழுதி வெளிவராதக் கட்டரை என்று எதைக் குறிப்பிடுகின்றீர்கள்;. அதை சுட்டிக் காட்டி விமர்சிப்பதே நேர்மை, சிறப்பு.
உங்கள் தளத்தில் எனத பல கட்டுரைகள் ஒட்டப்பட்டு இருந்ததை நான் படித்துள்ளேன்;. இதில் எனக்கு ஆட்செபனைகள் உண்டு
1.எனது பெயரிலும், எனது இணையத்தின் பெயரிலும் அவைப் போடப்படாமை
2.அத போடப்படும் விதம். கருத்துகளை வெறும் கொச்சையாக மாறிவிடுமளவுக்கு பயன்படுத்தும் முறைமை.
இதில் உட்டியள்ள அனைத்து கட்டுரைகளும் www.tamilcircle.net இல்: முன் கூட்டியே பிரசுரமானவை.
இந்த நிலையில் எமது நேர்மையான செயல்பாட்டை ஒரு அனுமானத்தின் பெயரில் கும்பல், என்று தூற்றுவது அப்தமானவை. உண்மையை அறிய விரும்பின் எனது இணையத்தில் அவை உளள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொண்ட பின், பதிலளிப்பது ஒரு விமர்சகரின் அடிப்படைக் கடமை. இல்லாத ஒற்றைவரியில் ஆதாரமின்றி துற்துவது மிகவும் அபத்தமானவை. எனது இணைய ஈமெயில உடன் தொடர்பு கொள்ளமுடியும்;. இதில் எனது முகவரி முதல் சகலதையும் பெறமுடியும்;. நாங்கள் ஒளித்து நின்று தூற்றுவதில்லை. எமது கருத்துகள் எப்போதும் பகிரங்கமாகவே உள்ளது. எதை நாம் நெர்மையாக, நேரரடியாக விவாதிக்க திறந்தமனதடன் உள்ளோம்.
உங்கள் இணையத்தில் எனது கட்டுரையை யாரோ பயன்படுத்தி முடக்குவதையிட்டு, எனது இணைய அறிவு தீர்வுகள் எதையும் வைக்க முடியாத நிலையில் உள்ளேன்.
கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே சிறப்பானது. மாறாக அராஜக வழியால் கையாளும் முறைமை இணையத்தில் செயல்படுத்தும் முறைமையையும் கண்டிக்கின்றென்.
பி.இரயாகரன்
இது தோழர் சுதன் எதிர்வினை.இதையும் இணைக்கிறேன்.அத்தோடு தோழர் சுதன்கூட ஒரு பதிவுப் பெயரை ப்ளக்கரில் ஏற்படுத்தலாம்.அதனால் எந்தப்பிரச்சனையுமில்லை.அநாமதேயப் பின்னூட்டமிடுவதைத் தடுத்துவிட்டேன்.இதுதாம் இப்போதைக்கு நல்லது.
அன்புடன்
ஸ்ரீரங்கன்
வணக்கம் இது பெடியன்கள் பகுதியில் ரயாவைப் மிகத்குறுகிய மனப்போக்கில் எழுதியதற்கு பதிலாக எழுதியது. இதனை உங்கள் பதிவில் போடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்N றன்
எழுதிக் கொள்வது சுதன்
முதலாவது புலியெதிர்ப்புக் குழுவினர் செய்கின்றனர் எனவைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அரசியல் ரீதியாக எதற்கும் சமரசம் கொள்ளாது தனது கருத்தைக் கூறிவருகின்ற ரயாகரனின் மீது குற்றம் சுமத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
அரரைப் பொறுத்தவரை மற்றயவர்களின் பதிவுகளில் இவ்வாறு கீழ்தரமான வேலை செய்ய வேண்டிய கருத்தியல் வறுமை அவரிடம் இல்லை. ரயாகரனை கருத்து ரீதியாக எதிர்க் கொள்ளும் பலம்அற்று இருப்பவர்கள் நீங்கள். அப்படி இருந்து கொண்டு தனது கருத்தை முன்வைப்பவர் மீது சேறடிப்பது உழைக்கும் வர்க்கத்துக்கு நீங்கள் செய்யும் துரோகத்தனமாகும். ரயாகரன் என்பது ஒரு கும்பல்ல அது உழைக்கும் வர்க்த்தின் ஆயுதம். அதனை புரிந்து கொள்ளாதது. உங்கள் அறியாமையிலன் நிலையாகும். அதனை விடுத்து ரயாகரன் கும்பல் என கொச்சைப்டுத்துவது எவ்வகையிலுமம் ஏற்றுக் கொள்ள முடியாது.
அவருடன் முழுமையாக உடன் படாது போகாமலும் இருக்கலாம் ஆனால் அவர் சமூகத்திற்கு கொடுக்கின்ற பல முற்போக்கான கருத்துக்களை உங்களைப் போன்றவர்கள் கொச்சைப்படுத்துவது ஏற்றுக் கொள்ளமுடியாது.
மற்றவர்கள் செய்யும் செயற்பாட்டிற்கு வேறு நபர்களை குற்றச் சுமத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். முடிந்தால் ரயாகரனை கருத்து ரீதியாக எதிர்க் கொள்ளுங்கள்.
அவருடைய தளத்திலேயே வெளிவராத புத்தகத்தில் இருந்து இருந்து பிரசுரிப்பதாக அறிக்குறிப்பிட்டுள்ளார். தேவையாயின் www.tamilcircle.net பகுதியைப் போய் பாருங்கள்.
சுதன்
Post a Comment