>>>தமிழகத்தில் தமது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும்,கேடுகெட்ட அதி வலதுசாரிய அரசியற் கருத்துக்களையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பிக்கொள்வது கேவலமானது.<<<
மண்ணின் மக்களுக்கே வேலை
ஈரோட்டில் எழுச்சி மாநாடு
வெளியாரை வெளியேற்றுவோம், மண்ணின் மக்களுக்கே வேலை என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையத்தில் 21.05.2005 அன்று பேரணியும், மாநாடும் நடைபெற்றன.
இராசேந்திர சோழன் தலைமையில் நடைபெற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
மாலை நடைபெற்ற மாநாட்டிற்கு ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். மாநாட்டில் பெ.மணியரசன், தியாகு, கி.வெங்கட்ராமன், கண.குறிஞ்சி, கோவை ஞானி, நாவைகறை, அ.பத்மநாபன், ஈகி.பெரியசாமி, சா.பேகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
மாநாட்டில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொழி வழி மாநலமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1956க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்த வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்பது முதல் தீர்மானமாகும்.
வேலை இல்லாத தமிழ் இளைஞர்கள் வீதிகளில் நிற்க, மார்வாடிகளும், சேட்டுகளும், மலையாளிகளும் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதைத் தடுக்கும் வகையிலேயே மேற்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும் என்னும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருநாடகத்தில் விளை நிலங்களைப் பிற மாநிலத்தவர் வாங்குவதற்கும், அடமானம் வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல, காசுமீரீல் பிறர் சொத்து வாங்க ஏற்கனவே தடை விதிக்கப் பட்டுள்ளதைப் போல, தமிழ் நாட்டிலும் நிலை மாற வேண்டும் என்பதே மாநாட்டின் நோக்கமாக உள்ளது.
தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்பதும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதும் மற்ற தீர்மானங்களாகும்.
கருப்பு நாசிகளும்,தமிழகமும்...
நாம் இன்றைய பொழுதில் உலகெங்கும் பரந்து வாழும் நிலைமைகளுக்குள்-சூழலுக்குள் இருக்கிறோம்.அமெரிக்காவிலும் மற்றைய கண்டங்களுக்குள்ளும் நமது கல்வியாளர்கள் வேலைவாய்ப்புப்பெற்றுத் தமது தொழிலில் வருவாயைப் பெற்று வாழவேண்டிய நிலையில், நமது நாடுகளின் பொருளியல் நலனுண்டு.இதைவிட அந்நிய மூலதனத்தையும்,அவர்களது தொழிற் கழகங்களின் சுரண்டலையும் கைலாகு கொடுத்து வரவேற்கும் இந்த அரசியற் கட்சிகளும்,அக்கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தில் தமது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும்,கேடுகெட்ட அதி வலதுசாரிய அரசியற் கருத்துக்களையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பிக்கொள்வது கேவலமானது.
வெள்ளையின நாடுகளில் அதியுச்சம்பெற்றுவிட்ட நாசிகளுக்கொப்ப- அவர்தம் அரசியற் பிரச்சாரக் கருத்துக்களைப் பரப்பும் இந்தக் கேடுகெட்ட பிழைப்புவாதிகள் தமிழர்களின் வாழ்வில் மண்ணையள்ளித் தூவும் கபடதாரிகள்.இவர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் யாவும், ஜேர்மனிய நாசியக் கட்சிகளின் பாணியிலான வெற்று உள்ளடக்கத்தையும்,மாற்றினத்தைத் தூசிக்கும் கயமையையும் உடையது.இத்தகைய கடைந்தெடுத்த இனவாதச் சாக்கடையில் தியாகு,சுப.வீரபாண்டியன் போன்றோர் கிடந்துருள்வதுதாம் இன்னும் கேவலமானது.இப்போது இவர்களும் 'கருப்பு நாசிகளே'.
முன்பொரு காலத்தில் பேராசியர் சுப.வீ. இடதுசாரி வட்டத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவர்.தியாகுவோ தோழரென அழைக்கத்தக்க தியாகத்துக்குச் சொந்தக்காரர்,இவரது பங்களிப்பால் மூலதனம் தமிழாக்கம் பெற்று, தமிழ் வலிவடைந்துள்ளது.
இத்தகையவர்களை உந்தித் தள்ளிய இந்த இனவாத அரசியலின் கருத்துப் பரப்புத்தாம் என்ன?
இவர்கள்தம் கருத்தழிவு எங்ஙனம் நிகழ்ந்தது?
இன்றைய நிலைமைகளில் தமிழ்பேசும் மக்களின் வாழ்வில் இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் இத்தகைய கட்சிகள்-தலைவர்களின் நோக்கமானது வெறும் அரசியல் இலாபமாக இருக்கமுடியாது.இவர்கள் புரட்சிக்கெதிரான சக்திகளாக உருவாகிப் புரட்சிகர அரசியலை இனவாதச் சகதிக்குள் தள்ளிவிடுவது-தொழிலாளர்களுக்குச் செய்யும் துரோகம்.அந்நிய மூலதனத்தின் கைக்கூலிகளாக மாறும் இந்தக் கட்சித் தலைவர்களை தமிழர்களின் உரிமைவாதிகளாக நாம் இனம்காண முடியாது.இவர்கள் மாற்றினத்தைத் தமிழகத்தைவிட்டு வெளியேறென்பதும்,அவர்தம் கட்டுமானத்தைச் சிதைத்துவிடு என்பதும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.வேலைவாய்பே அற்ற தமிழகத்தில் 'மண்ணின் மைந்தருக்கே வேலை' என்பது ஐரோப்பிய நாசிகளின் குரலை தமிழகச் சூழலுக்குள் இடம் பெயர்த்தல்தாம்.
இன்றைய சூழல் மிகக் கேவலமானவொரு அரசியற் சூழலை உலகெங்கும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.இது இனவாதமாகச் சீரழிந்து மக்கள் நல அரசியல் முன்னெடுப்புகளுக்கு ஆப்பு வைக்கிறது.இத்துப்போன நாடாளுமன்ற அரசியலுக்குள் இந்த இனவாத அரசியல் செல்லப் பிள்ளையாக வளர்ந்து மக்களையின்னும் அடிமையாக்கும்.இத்தகைய அதிதீவிர வலசாரி அரசியலில் முத்தெடுக்கும் பலாபலன் அந்நிய மூலதனத்துக்கே கிட்டும்.அதற்காகத் தமிழகத்தில் பெயர்பலகைக் கட்சிகளும்,பெரும் கட்சிகளும் கங்கணம் கட்டிக் காரியத்தில் இறங்கும்போது-கைதுகளும்,போராட்டங்களும் மக்களைத் திசை திருப்பி வேறுவகைகளின் அரசியல் இலாபம் பெறுவதில் கவனத்தைக் குறித்துள்ளது.
அப்பாவி மக்களை மண்ணின் மைந்தர்களென்று பிரித்தாளும் கபட அரசியலுக்கு உடந்தையாகிய தியாகு,சுப.வீ.போன்றோர் மனிதவுருவிலுள்ள வெடிக் குண்டுகளே!மண்ணின் மைந்தர்கள்(!?),இன்றைய நிலையில் மனிதரெவரும் சொந்த இடங்களில் வரலாறு பூராகவும் வாழவில்லை.எல்லோரும் அந்நியர்களே!நமது மூலத்தைத் தேடும்போது அஃது ஆபிரிக்காநோக்கி இரத்தவுறவைக் கூட்டிவரும்.
அற்ப பிழைப்புவாத அரசியலுக்கு திரு.நெடுமாறன் ஐயாவும் பலியாகியது துர்வதிஷ்டமே.
இவர்களை இனியும் மௌனமாக அங்கீகரித்தால் தமிழர்களின் தேசிய அடையாளமே கேலிக்கூத்தாகும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
31.05.05