// இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!)
அரங்கனார் சொன்ன மேற்கோள்
Die Welt ist viel zu gefährlich, um darin zu leben – nicht wegen der Menschen, die Böses tun, sondern wegen der Menschen, die daneben stehen und sie gewähren lassen
The world is far too dangerous to live in - not because of the people who do evil, but because of the people who stand by and let them
அரங்கனாரின் மொழிபெயர்ப்பு:
“ இவ்வுலகானது வாழவே முடியாத அதிபயங்கரமானது . இந்நிலை தீயவர்களாலோ அன்றி, ஆத்திரக்கார முரடர்களாலோ ஏற்பட்டது அல்ல . மாறாக , இத்தகைய கொடியவர்களுக்கு உடந்தையாக இருந்தபடி அவர்களின் அட்டகாசத்தை அநுமதித்து , அங்கீகரித்துவிடுபவர்களாலேயே இவ்வுலகம் ஆபத்தானதாகின்றது “. -
இவ்வுலகானது வாழவே முடியாத அளவுக்கு பேரளவும் தீயது (ஆபத்தானது, viel zu gefährlich). இந்நிலை தீயது செய்பவர்களால் (ஏற்படுவது) அல்ல ( nicht wegen der Menschen, die Böses tun), மாறாக தீயவை செய்பவர்களுக்கு துணையாக உடன் நிற்பவர்களாலும் (sondern wegen der Menschen, die daneben stehen ) அவர்கள் (தீயவர்கள்) தீமைகள் செய்ய விடுவதாலுமே.
(அரங்கனார் Sri Rangan Vijayaratnam மிகச்சிறந்த இடாய்ச்சு மொழியறிஞர். நானோ வெறும் கற்றுக்குட்டி. ஆனால் அவருடைய மொழிபெயர்ப்பில் " ஆத்திரக்கார முரடர்களாலோ ஏற்பட்டது அல்ல" என்னும் கூற்று எங்கு வருகின்றது என்று தெரியவில்லை. மேலும்
sie gewähren lassen என்பது தீயதைச் செய்ய விடுதல் (தடுக்காமல், வாளவிருந்து செய்ய விடுதல்) என்றுதானே பொருள் தரும் அல்லவா? அரங்கனாரை விலக்கம் தர வேண்டுகின்றேன்)// — பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார்
=============
செல்வா , தங்கள் கருத்துக் நன்றி . தமிழ் இலக்கிய உலகினுள் “இலக்கியம் சார்ந்து சிறந்த மொழிபெயர்ப்பை முன்வைத்த “ பேராசானின் தளத்தில் (முகநூல் முற்றத்துள் ) நான் , மொழி பெயர்ப்புச் சார்ந்து உரையாடுவதில் பெரு மகிழ்வுடன் பங்கெடுக்கிறேன் .
செல்வா , நான் இடொச்சு மொழியில் பாண்டீத்தியம் பெற்றவன் அல்ல . அப்படி , உருவாக முடியாது . டொச்சு மொழியில் சிறப்பாக எழுந்த கோத்தே கூடத் தன்னை ஒருபோதும் டொச்சு மொழி பாண்டிதர் என்று கூறார் .
என்வரை , இம் மொழியை ஓரளவு புரியவும் , எழுதவும் , வாசிக்கவும் தெரியும் . என்றபோதும் , என் புரிதல் டொச்சு மொழியில் பயன்படும் காலம் ; இடம் , பொருள், நிலவிய சமூகச் சூழல் , பண்பாடு , அரசியல் , சமூக நிலவரங்களை அறிந்தே ஒரு சொல்லை மொழியாக்கஞ் செய்வேன் .
ஐயனே , தங்கள் கேள்விகள் , மொழியர்பு வாக்கியங்கள் அனைத்தும் சரியானது . ஆனால், நேரடி மொழி பெயர்பு எனக்கு உகந்தது அல்ல . நான் , மொழியாக்கஞ் செய்பவன் . இது , டொச்சுச் சூழலைத் தமிழிற் சொல்லும் கரிசனையுடையது.
மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை . அதிலும் , டொச்சு மொழியை -வாக்கியத்தை நேரடியாக மொழிபெயர்த்தால் இது, முழுக் கொலையாகிவிடும் .
உதாரணம் : “Regenschirm “ இதை நேரடியாக மொழி பெயர்த்தால் “மழைக் குடை “ தமிழில் அங்ஙனம் உரைக்க முடியாது . எனவே , தமிழுக்குக் குடை , வெய்யிலிலும் , மழையிலும் பிடிக்கும் ஒரு பொருள் . எனவே , மழையை விட்டுக் குடை என்பதே சரி . மேற்குலகில் அது மழைக்கு மட்டும் பிடிக்கும் Regenschirm !
கூடவே , டொச்சு மொழியை பல்வேறு காலக் கட்டங்களில் அதிகாரம் துஷ்பிரயோகஞ் செய்துள்ளது . இது , நேரடியான வார்த்தைகளுக்குள் உள் அர்த்தம் மறைமுகமான எதிர்மறை (Schwarze Rhetorik ) கொண்ட தாக்கத்தைக் குறித்து நிற்பவை . நாசிய காலத்துள் 1920-1945 மூன்றாம் பொற்காலம்(Drittes Reich) என்று வரையறுப்பார்கள் . இக்காலத்துள் டொச்சு மொழியில் அடைப்படை அர்த்த வேறு பாடுகள் திணிக்கப்பட்டன . இது குறித்து „Sprachwandel im Dritten Reich „(Von Seidel, Eugen und Seidel-Slotty, Ingeborg) என்று ஆய்வு நூலே 1961’ஆம் ஆண்டு வெளி வந்தது .
இங்கு , பாசிசவாதிகள் மொழியை எங்ஙனம் தூஷ்பிரயோகஞ் செய்தார்கள் என்று புரிய சில சொற்களைத் தருகிறேன் :
Schwarze Rhetorik im Dritten Reich:
„ Jedem das Seine“ —„Arbeit macht frei“
இதை நேரடியாக மொழி பெயர்ப்பவருக்கு வராலாறு புரியாது போனால் பூர்வீகக் கீரேக்க தத்துவார்த்தக் கருத்தாக அதை “ ஒவ்வொன்றும் அவரவருக்குரியது , வேலை ஒருவரைச் சுதந்திரமாக்கும் “ என்று மொழி பெயர்ப்போம் . ஆனால் , இவ் வார்த்தைகள் டொச்சு மொழிக்குள் , அவர்களது வரலாற்றில் “ யூதர்களிடம் உள்ள சொத்தைப் பறித்து , அவர்களுக்குக் கடூழியம் கொடுத்துக் கொல் ( Vernichtung durch Arbeit) “ என்பதாகும் . Arbeit macht frei என்பது நாசிகளின் மொழியில் “ கூலியின்றி ,?உணவின்றி உன்னால் உடல் உழைப்பை எங்களுக்குத் தரும் வரை நீ, உயிரோடிருப்பாய்” என்பதே பொருள் .
இது , மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்யும் கருப்பு சொல்லாட்சி !
அடுத்து , டொச்சு மொழியிலுள்ள “ஐன்ஸ்ரைன் கருத்து” எப்போது , யாருக்காக சொல்லப்பட்டது ?; எந்தச் சூழ்நிலையில் இக் கருத்தை ஐன்ஸ்ரைன் உபயோகப்படுத்தினார் ? இக் கேள்விக்கு விடை தேடாமல் நேரடி மொழிமாற்று சரியாகாது .
1953’ஆம் ஆண்டு இஸ்பானிய இசைமேதை பவ் காசல் (Pau Casals) அவர்களைக் கொளரவிக்கும் விளா பிரான்சில் நடந்தபோது ஜன்ஸ்ரைன் எழுதிய குறிப்பில் இந்த வாசகத்தை எழுதுகிறார் . காரணம் : Pau Casals அவர்கள் இசுப்பானியச் இராணுவச் சர்வதிகாரி பிரங்கோ(Franco) எதிர்த்தும் , 1933’ஆம் ஆண்டு கிட்லரின் அழைப்பை ஏற்க மறுத்தும் பாசிசத்துக்கு எதிராகப் போராடினார் Pau Casals அவர்கள் .
அதற்காக , கொளரவப்படுத்த ஐன்ஸ்ரைன் கீழ்வரும்படி எழுதுகிறார் : “Pablo Casals hat klar erkannt, dass die Welt mehr bedroht ist durch die, welche das Übel dulden oder ihm Vorschub leisten, als durch die Übeltäter selbst."
Albert Einstein
இதன் பொருள் : “ பாப்லோ காசல் அவர்கள், “இவ்வுலகினுள் தீமை செய்பவர்களை விட தீமையை பொறுத்துக்கொள்ளும் அல்லது ஊக்குவிப்பவர்களால் உலகம் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பதை தெளிவாக உணர்ந்தார்” . இதுதாம் , ஐன்ஸ்ரைன் குறித்த சரியான இடஞ் சூழலுட் சொன்ன கருத்து . இது குறித்துப் பல நூறு விளக்கங்கள் வெளியாகிவிட்டென! செருமானியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான பொழிப்புகள் வெளியிடப்பட்டன .
அடுத்து > gewähren< என்ற சொல்லுக்குப் பல்வேறு அர்த்தம் . இடம் , சூழல் , காலம் இவற்றைக் கணக்கெடுத்தால் எதையாவது தேரடியாகப் போட்டு நிரப்ப முடியாது . ஆக,
[1] ஒருவருக்கு விரும்பிய ஒன்றைச் செய்ய அநுமதி வழங்குதல். [2] யாரோ ஒருவருக்கு ஏதாவது தயார் செய்ய ஒப்புதல் வழங்கல் (கண்டும் காணாமலும்-வாளதிருத்தல்) இத்தோடு ஒத்த சொற்கள்: அனுமதி, கொடு, வழங்கு, ஒப்புக்கொள், ஏற்றுக்கொள்.நான் , என் மொழியாக்கத்துள் அநுமதி என்கிறேன் .
இங்கு , ஆத்திரக்காரர் ; முரடர்கள் என்று நான் சுட்டியது >பொதுப்புத்தி தீயவர்கள்< என்பதை அமைப்பின் அதிகார வர்க்கத்தைத் தமிழில் சுட்டவே . நாம் , மரபு ரீதியாகத் தீயவர்கள் /சண்டாளர்கள் என்பது தனிநபர் நடாத்தையாகப் பார்ப்பதால் அங்ஙனஞ் சுட்டுவது தமிழ்ச் சூழலுக்காக !
கடந்த 40!ஆண்டுகளான ஈழப்போராட்டத்துள் பு~லி~ கள் எங்ஙனம் தமிழ் மொழியைத் துஷ்ப்பிரயோகஞ் செய்தார்கள் என்றும் நோக்கினால் இந்தப் பாசிச மொழியைப் புரியலாம் .
ஈழத்தில் “கரும்புலி ; தற்கொடையாளி “ என்பதை பிறமொழியுள் சொல்லும் போது “குண்டுதாரி, மனித வெடிகுண்டு “ என்றுதாம் மொழியாக்கஞ் செய்ய வேண்டும் .
ஈழத்தில் அடிக்கடி தாயிடம் பிள்ளைகள் சொல்லும் செய்தி ஒன்று கீழ் வரும்படி :
“ அந்த மாமா , கடையில் நின்றபடி எனக்குத் தன் சாமானைத் துக்கிக் காட்டினார் “ என்று சிறுமிகள் சொல்வார்கள் . இங்கு , சாமான் என்பது கடையிலுள்ள பொருள் /பண்டம் அல்ல ! இதை நேரடியாக மொழி பெயர்த்தால் முழு அர்த்தமும் பாழ் !
—ப.வி.ஶ்ரீரங்கன் 11.02.24