Thursday, December 29, 2011

அதிகாரம்: ...பூப்காவின் பாத்திரம்(2)

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்(2)

சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல்.

(அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!)


(2)

பொனபாட்டிசம்

தமிழ்ச் சூழலில் மிக அவசியமான ஆய்வுத் தன்மையுடன் கூடிய கட்டுரைகள் வரவேண்டுமென எனக்குள் எண்ணுவதுண்டு.இந்த வகைப்பட்ட கட்டுரைகள் அதிகமாக வருவதற்கான ஆய்வுத்தகமை சமகால நிகழ்வோட்டத்துடன்,அதுசார்ந்த மிகுந்த புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இந் நிலையுள்,சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!

அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர்வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?அல்லது,மிகேல் பூவ்காவினது பரந்துபட்ட புரிதலுள் புலிகளது இயக்கவாத-அந்நிய அடியாட்படைச் சேவையை ஒடுக்கப்படும் இனத்தின் எதிர்ப்புப் போராட்டமாகவும்-அதுசார்ந்தெழுகிற அதிகாரமாகவும் பார்க்க முடியுமா?

எவன்(ள்),எந்தெந்தத் திசையில் அதிகாரம் குறித்த பரந்துபட்ட புரிதலுள்புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.

இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப்பினாமிகள், மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது மீளவும், "தமிழீழவிடுதலை"யின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

இந்தப் புரிதலிருந்துதாம் அதிகாரம் குறித்த தேடுதலை வைத்துப் புலிகளது பாசிசச் சேட்டையை,சகோதரப்படுகொலைகளை நியாயப்படுத்தும் நம்மை, நாம் கேள்விக்குட் படுத்தியாகவேண்டும். சிங்கள அரசு தமிழினப்படுகொலையை மிக மும்மரமாக நடத்தியபோது,நாம் ஒருங்கிணைந்து பொதுவெதிரியைத் தாக்கி வெற்றிகொள்வதைத்தடுத்து, நமது சகோதரர்களையே நாம் பொதுவெதிரியைவிட மிகமோசமாகத் தாக்கி அழிப்பதென்பது,பேரினவாதத்துக்கெதிரான எதிர்ப்புப் போராட்டமாகாது.அங்கு பூவ்கா குறித்துரைத்த உயிரதிகாரமானது உயிர்வாழுவதற்கான தனது சகோதரர்களது பௌதிக இருப்பை நிராகரித்துவிட்டு, பொதுமைப்பட்ட அரசியல் வாதத்தைத் தகவமைக்க முடியாது-பேரினவாதத்திடம் ஒடுக்குமுறைக்கெதிரான நியாயமான போராட்டத்தைச் செய்யும் அறத்தையும் உலகுக்கு ஒப்ப முடியாது.எங்கு ஒடுக்குமுறை நிலவுகிறதோ,அதற்கு எதிரான போராட்டம் நிலவியே தீரும்.இரண்டினது தளமும் அதிகாரத்திலிருந்து எழுகின்றபோதும்,ஒடுக்கும் அதிகாரம் பலதரப்பட்ட நிறுவனங்களாலும்,பொருளாதார மேலாதிக்கத்தாலும் தொடர்ந்து தன்னைத் தக்கவைக்கிறது.மற்றதோ,நிலைப்புக்கான உயிர்ப்போராட்டத்துள் முழுவதுமாக ஒடுக்கப்படும் உடல்களை-மக்களை நம்பி எழுகிறது.அதுவே,ஒருகட்டத்தில் அந்த நம்பிக்கைக்கு எதிராகத் திரும்பும்போது,ஒடுக்கும் அதிகாரம் ஏதோவொரு வகையில் எதிர் அதிகாரத்தின்-போராட்டத்தின் ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டிருப்பதையே புலிகளதும்,மாற்று இயக்கங்களதும் இதுவரையான மக்கள் விரோத ஆயுத அராஜகம் புலப்படுத்தியது.அந்த ஒடுக்கும் அதிகாரம் ரோ வடிவிலும்,சி.ஐ.ஏ வடிவிலும் மட்டுமல்ல எம்.ஜீ.ஆர்-கருணாநிதி,பிரமதாச,ரணில் வடிவிலும் நம்மிடம் புலப்பட்டுக்கொண்டது.இந்தப் பெயர்கள் வெறும் குறியீடு மட்டுமே.

அல்லது, பூவ்கா கூறியமாதிரி"ஒடுக்குமுயைக்கு எதிரான போராட்டம் எங்கிருக்கிறதோ அங்கு அதிகாரம் வெளிப்படுகிறது"என்று இதற்குச் சமாதானஞ் செய்யமுடியாது!இது முற்றிலும் தவறான புரிதல்.எனவே,நாம் ஆதிகாரம் குறித்து மேலும் புரிதல்களை வளர்த்தாகவேண்டும்.

இந்தத் தவறான புரிதல்கள், தவறானவை என்பதைத்ச் சொல்வதல்ல எனது இந்தத் தொடரின் நோக்கம்.இது,பரந்துபட்ட தளத்தில் எமது எதிர்ப்பு அரசியலது எதிர்காலம் குறித்து நோக்க முனைகிறது.சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து தமிழ்பேசும் மக்களையும்,ஏனைய சிறுபான்மை இனங்களையும் ஒடுக்கும் சட்டரீதியான அடியாளாகச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கும், இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் செயற்படுகிறது.

இலங்கையின் அரைத் தேசியப் பொருளாதாரமானது,அதன் வர்க்கக் குணாம்சத்துக்கொப்ப இலங்கைச் சிறுபான்மை இனங்களையும்,தனக்குள் செரித்துவிட முனைகிறது.இது,இலங்கைக்கானவொரு மொழி,ஒரு மதம்,அதுசார்ந்த பண்பாட்டுருவாக்கத்தைக் கணித்துச் சிறுபான்மை இனங்களை முற்றிலுமாகச் செரிக்கும் பொருளாதார-அரசியல் நகர்வு மிக வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்டபோது, புலித்தலைமையைக் காட்டிக்கொடுத்த புலிப்பினாமிகளோ அதற்குப் புதிய விளக்கங்கொடுத்து மக்களுக்கான "அபிவிருத்தி-பாதிக்கப்பட்ட மக்களுக்கான கஞ்சி" என சிங்கள மேலாதிக்கத்தைப் பட்டுக்குஞ்சங்கட்டி வரவேற்று, அரச ஆதிக்கத்தை வலுவாகத் தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமியில் மறுநிலைப்படுத்தும்போது,அதை எதன் பெயரால் புலிவிசுவாசிகள் புரிந்துகொள்கிறார்கள்?தனியே துரோகி சொல்லியா? இந்தத் துரோகியோடு அரசியல் ரீதியான எதிர்ப்பு அரசியலது நியாயம் சரியாகி விடுகிறதா?அடுத்த கட்டம் என்ன?

எனவே,இந்தத் திசையில், விவாதவுரை பகுப்பாய்வு(Diskursanalyse) அவசியமாகிறது-அதிகாரங் குறித்த விவாத ஆய்வுப் பண்பு தமிழுக்கு இதுவரை செறிவான முறையில் எட்டவில்லை.ஆராய்ச்சி முறையியல்(Methodologie) முற்றிலும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியப்பட்டிருக்கிறதென்பதால் அதிகாரங்குறித்த புரிதலை ஒருவர்மீது சுமத்தி "நீ பூவ்காவை படித்துவிட்டுப் புலிகளது அதிகாரங்குறித்துப் பேசு" என ஓங்கி உரைக்கிறது.இந்த மொழிக்குள்: "மற்றவர்களுக்கு ஆங்கிலமோ அன்றி வேறு அந்நிய மொழியோ தெரியாதென்றும்,புலம்பெயர் இடதுசாரிகள் தமிழகத்து "விரல்சூப்பி"ப் பேராசிரியர்கள் தமிழ்படுத்தியதைமட்டும் வாசித்துவிட்டு,அதிகாரங்குறித்துப் பேசுவதாகவும் புரிந்துகொள்ளச் சொல்கிறது". இது,அடுத்த மோதாவித்தனத்தின் அண்ணன்(சிறு-மெலினப் பட்ட குரல்களை ஒட்ட மட்டந்தட்டும் பார்ப்பன உளவியல்என்று சொல்ல வருகிறேன்). நாம்,இதிலிருந்து சிலவற்றை பகுப்பாய்வு நிலையைகொண்டு பூவ்கா முதல் காபர்மாஸ்வரை அதிகாரம் குறித்து நோக்குவோம்.முதலில் சில வரையறுப்புகள் அவசியமாகிறது.

பகுப்பாய்வு சார்ந்து:

மேற்குலகப் பல்கலைக்கழகத்துள் பூவ்காவின் நிலை என்ன என்பதிலிருந்து,

1 : பேராசிரியர் மார்டின் நொன்கோவ் (Martin Nonhoff,Professsor für Politikwissenschaft an der Universitaet Bremen குறித்தியங்கும்"பகுப்பாய்வின் கேள்விகள்,அதிகாரம்,மேலாதிக்கம்"ஆய்வுமுறையியல் மற்றும் கோட்பாடுகள்சார்ந்து நான்,வரையறுத்த ஒரு புள்ளியல்(இதை இத்தொடரின் இறுதில் விசாலமாகச் சொல்வேன்) கீழ்வரும் தொகுப்பு நிரையை வழங்கி மேற் செல்வேன்:

2: மிகேல் பூவ்கா (Michel Foucault,1926-1984),உலகளவில் அறியப்பட்ட முக்கியமான நவகாலச் சிந்தனையாளர்,பிரான்சின் சிந்தனைப் பாரம்பரியத்தின் அமைப்பியல்(Strukturalismus) அறிஞர்.அவரது பிரதானத் தெரிவானது"பன்முகக் கருத்துவினைப்பாட்டு உரையாடல்"(Diskurs)அதுசார்ந்த பரிசீலித்தலாகும்.பூவ்கா எதையும் பரிசீலிப்பதையே தனது இறுதி முடிவாக எடுத்துக்கொண்டவர். எந்தவொரு தனது சிந்தனைப் போக்கையும்-கருத்தையும் முடிந்த முடிவாகச் சொல்லாமற்றவிற்றபோது,தான்கண்டடைந்தவுண்மைகள் ஒரு வடிவத்துக்குட்பட்ட தத்துவமென எப்போதும் சொல்வதை நிராகரித்துவிட்டுத் தன்னைப் பரிசீலிப்பாளன்-பரிசோதனையாளன் எனக் கூறிக்கொண்டார் (Ich bin ein Experimentator und kein Theoretiker.-Michel Foucault Gespraech mit Ducio Trombadori,Die Hauptwerke-seite:1585/86).அவரது சிந்தனைக்குட்பட்ட புரிதலுள்அதிமுக்கியமாக எடுத்தாளப்பட்ட வார்த்தை Als Dispositiv/disposition முடிவு, ஒழுங்கு அல்லது ஆணை ,இதை விளங்க முற்படுவதில்தாம் சிக்கலே எழுகிறது.இந்தச் சிக்கலை அவரே பல இடங்களில் கைவிரித்துவிட்டார்.இதுவொரு தடை. Tabu... எனது வாசிப்பு உட்பட்ட,
"Die Ordnund der Dinge" 1966
"Archaeologie des Wissen"1973
"Ueberwachen und Strafen"1974
"Sexualitaet und Wahrheit" 1977 bis 1986
"Der Wille zum Wissen "1977
"Foucaults Philosophie der Kritik-Die Hauptwerke
Analytik der Macht" 1970 bis 1983(Analytik der Macht. Frankfurt am Main, 2005 )

Gouvernementalitaet என்பது "அரசு-எண்ணங்கள்"அனைத்து நிறுவனமயப்பட்ட நிறுவனங்களையும் அரசு-தனிமனித நிலை ளிலுமாகப் பன்முகப்பட்ட புரிதலோடு நகர்வது.எனினும் அது, முழுமையற்றது.அதை 1977-78 இல் Collège de France இல் அவரது வகுப்புச் சகாக்களான Daniel Defert, François Ewald, Jacques Donzelot, Giovanna Procacci, Pasquale Pasquino ஆகியோரது துணையோடு முன்நிலை வாசிப்பை/விரிவுரையைச் (Die Vorlesung)செய்துகொண்டபோதும் அதைத் தொடர்ந்து விருத்திக்கிட்டபடி மேலும் விருத்தி செய்யும் தருணத்தில் அவரது மரணம்(1984)அதைத் தடைப்படுத்திவிட்டிருக்கிறது.

3: அடுத்து,அரச ஆதிக்கம்,அர ஜந்திரம் குறித்தான புரிதலில் அதி முக்கியமானவொருவரும்,உரையாடலுக்கான பொதுவெளியைக் குறித்து அழுத்தமாகப் பேசுபவரமான யுர்கன் காபர்மாஸ்.

Juergen Habermas 1929, ஜேர்மனியில் பிறந்தவர்.1956 ஆம் ஆண்டிலிருந்து வருகைதரு பேராசிரியராக தியோடர் வே.ஆடர்னோ கல்லூரில் (Theodor W.Adorno am Institut fuer Sozialforschung in Frankfurt ) கடமையாற்றியவர்.அவரது இன்றைய அனைத்துச் சிந்தனையும் ஒழுங்கமைந்த முதலாளித்துவச் செழுமைப்பட்ட ஒழுங்கை வேண்டுவது.அதிகாரத்துள் நிலைப்படுத்தப்பட்ட நிறுவனங்களைக் குறித்துத் தொடர்ந்து விமர்சிப்பதால் அவரை அரசு குறித்துப் புரிவதில் அதிகமாகத் தொடர்ந்திருக்கிறேன். என்றபோதும்,"நோய்வாய்ப் பட்ட முதலாளியக் குழந்தையின் வைத்தியன் காபர்மாஸ்"என்று கூறிய ஜேர்மனிய இடதுசாரியத் தோழன் இதிலும் என்னை எச்சரிக்கின்றான்.

அவரது முக்கிய நூல்கள்:
" Theorie des Kommunikativen Handelns" in 2 Baenden 1981
"Moralbewusstsein und Kommunikatives Handelns" 1983
"Erlaeuterungen zur Diskursethik"1991
"Faktizitaet und Geltung" 1992

4: Chantal Mouffe 1943, பேராசிரியர் கன்ரால் மூவ்பே வகுப்பெடுக்கும் அரசியல் விஞ்ஞானப் புரிதலில்அவர் தனது நண்பர் லூக்லாவோடு(Ernesto Laclau: wurde 1935 in Buenos Aires geboren und war zuletzt an der University of Essex im Bereich Politische Theorie tätig. Er sieht sich selbst als Vertreter des Postmarximus.) இணைந்தெழுதிய "Hegemonie und radikale Demokratie zur Dekonstruktion des Marxismus" -1985.தொடர்ந்து பேசத் தக்க வெளிகளை அதிகாரத்தின்மீதான புதியவகைத் தேடல்களை பூவ்கா செல்லாத வெளிகளில் வைத்துரையாடுகிறார்(Chantal Mouffe: wurde 1943 in Belgien geboren, ist heute als Professorin für Politische Theorie an der University of Westminster in London tätig. Gemeinsam mit Laclau publiziert sie 1985 „Hegemonie und radikale Demokratie. Zur Dekonstruktion des Marxismus“).

நவ காலச் சிந்தனைமுறைமைகளுக்கப்பால் எடுத்தாளப்படவேண்டிய முக்கியமானவொரு சிந்தனையாராக நான் இனங்காண்பவர் ஜேஆன் ஜாக்கோப்-றுவ்சேவ் (Jean-Jacques Rousseau),1712 இல் இருந்து 1778 வரை வாழ்ந்திருக்கிறார்.ஜெனிவா,இத்தாலி,பிரான்ஸ் என வாழ்ந்த மனிதரது சிந்தனை அன்றைய காலத்து சமூகவியற் போக்குகளை மிகச் சிறந்த புரிதலில் உரைப்பது.அவரது பிரதான தத்துவார்த்தப் போக்கானது "இயற்கையிடம் மீளச் செல்லல்"என்பதாகும். மனிதர்களுக்குக்கீழ் சமமற்ற நிலைகளைக் குறித்தும், மனிதர்களுக் கிடையிலான சமூக வளர்ச்சிப் போக்குகள், இயற்கைக்கும் மனிதர்களுக்குமானவொரு சீரழிவின் நிலையைக்கண்டு சிந்திக்க முனைந்திருக்கிறார்.அவரது முக்கிய-பிரதான நூல்களும் எனது புரிதலுக்குட்பட்டதன் தெரிவில் கீழ்வருவன:

"„Emile oder über die Erziehung“ 176
„Der Gesellschaftsvertrag“ 1726
„Abhandlungen über die Wissenschaften und Künste“ 1750
„Abhandlung über Ursprung und Grundlagen der Ungleichheit unter den Menschen“ 1753

இந்த மொழிவின்வழி,வளர்ச்சியடைந்த ஐரோப்பியச் சமுதாயங்களின் அதிகாரங்குறித்த-அரசு குறித்த அறிவின் நிலவரம்பற்றிய தேடலை நமது சூழலுக்கொப்ப புரிந்துகொள்வதன் அடிப்படைகளை மேற் சொன்ன தெரிவினது தருக்கத்திலிருந்து மேலும் வளர்க்கலாம். சர்வதிகாரப்போக்குடைய பெரும் உரையங்களின் நடுவே,இந்த எழுத்தாக்கத்தின்வழி "ஈழவிடுதலை"ப் போராட்டத்தின் சக்திகளையும்,அதைத் தலைமேற் ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களது உள-உய்வுத் தூண்டலையுங் குறித்து பேசவதுதாம் அதிகாரத்தின் திசைவழிகளை-புரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை எமக்குள் மெல்லச் செரிக்க முடியும்.பொருளாதாரஞ் சார்ந்தியங்கும் வாழ்நிலை சமூகவுணர்வைத் தகவமைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அந்தவுணர் விலிருந்து சிந்தனைப்போக்கு ஒரு அறிகுவியத்திலிருந்து இன்னொரு தளத்திலான அறிகுவியத்துக்கு மாறிக்கொண்டே இருக்கிறதெனக் கொண்டால் இந்த நிகழ்வூக்கத்துக்குள் நிலவுவது அதிகார நிலைப்பட்ட வடிவ மாற்றங்கள்தாம்.பண்புரீதியாகவும்,வடிவரீதியாகவும் இவை மாறும் கட்டங்களைக் குறித்து நோக்குவதில் அதிகாரத்தால் ஒதுக்கப்பட்ட-பட்டுள்ள-விளிம்பு நிலையிலுள்ளவொரு சமுதாயமாக மாற்றப்பட்டுள்ள தமிழ்பேசும் சமுதாயத்தின் தலைவிதியைக் குறித்த கருத்து வினைப்பாடானது தனக்குரிய வீரியத்தையும்,தேம்பலையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கிக்கொண்டிருப்பதால் இதைப் புரிகிற வெளியையாவது நாம் புரிந்துகொண்டால், அடுத்த கட்டம் புலப்படும்.கருத்து வினைப்பாடு என்ற பூவ்காவின் பரிசீலனைப் புள்ளியில் காபமாஸ் கருத்துவினைப்பாட்டைப் புரிந்துகொள்ளல் எனும் தளத்தில் கொஞ்சம் அகலிக்க விரும்பும் தளத்தில்"விருப்பத்துக்குரிய விவாதச் சூழலை" உருவாக்க விரும்புவதுதாம் எனது புள்ளி.


தொடரும்...

முதற் பகுதியை இங்கே வாசிக்கவும்...

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.12.11

Monday, December 26, 2011

அதிகாரம்: ...பூப்காவின் பாத்திரம்

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்!

சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல்.

(அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!)

(1)

லங்கைச் சிறுபான்மை இனங்கள் ஒரு சிக்கலான காலக்கட்டத்துக்குள் புதிய ஆண்டில் நுழையப்போகிறார்கள்.இலங்கை அரச ஆதிக்கத்தின்-அதிகாரத்தின் பதில் விளைவுகளாகப் பின்னப்பட்ட புலியழிப்புப் போராட்டத்துக்குப் பின் இலங்கையின் பொது அரசியற் சூழலானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மாற்றுக் கருத்தியல்-வெகுஜனக் கணிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது.இலங்கை அரச ஆதிக்கத்தைப் புரிந்துகொள்வதென்பதும்,அரச வன் முறை-வன்முறைசார ஜந்திரங்களின்வழி பின்னப்பட்டிருக்கும் அதிகாரமென்பது பெரும் பான்மை மக்களையும்,அவர்களது சுதந்திரத்தையும் "விடுதலை-சுதந்திரம்-இறைமை-தாயகம்" எனும் மந்திரச் சொற்களால் எங்ஙனம் பறித்துவிட்டிருக்கின்றவென்பதும் பெரும் வியப்படையத் தக்க குறிப்புகளாகும்.இதுள் தமிழீழ விடுதலைக்காகப் போராடியதாகச் சொல்லப்பட்ட புலிகளது பாத்திரத்தில் அவர்களுக்குட்பட்ட அரஜந்திரத்துள் நிலவிய அதிகாரமென்பது குறித்தும்,அதன் மறுவிழைவாக முழு இலங்கையின் உழைக்கும் மக்களும் இலங்கை அரசினது ஆதிக்கத்துக்கும்-ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கும் அடி பணிந்து போவதென்பது நடை முறைச் சாத்தியமாகுமா?


இன்றைய இந்தத்(புலிகளது தேசியவிடுதலைப்போராட்ட தோல்விக்குப்பின்) தருணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும்தமிழ்மக்களது அரசியல் சக்திகளால் நிகழவில்லை. இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும், இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது.எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.எனவே,ஒடுக்கப்படும்-நசுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை மக்களினங்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும். இந்தத் தருணத்தில்தாம் அதிகாரம் குறித்துப் பரவலாகப் பேசுவதற்கு நண்பர்கள் முனைகிறார்கள். அவர்களும் அதிகாரங் குறித்துப் பேசுவதில் பூப்காவை-நீட்சேயை முன் தள்ளி ஒற்றை வார்த்தை உதிர்ப்பதில் இடதுசாரியப் போராட்டத் திசையமைவுகளையே நொருக்குவதாகக் காட்சிப்படுத்தியும் விடுகிறார்கள்.மார்க்சை-லெனினைச் சொல்லி இக் கட்டுரைத் தொடரை நான் நகர்த்தப் போவதில்லை!

அதிகாரம் குறித்தும்,நிலவும் இலங்கை அரச இனவொடுக்கு முறையும்,அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்தின்வழி அதிகாரத்தை நிலைப்படுத்தும் சிங்கள-தமிழ் அதிகார வர்க்கங்களின் சட்டரீதியான அதிகாரத்துவ மையங்களை நோக்கி,எதிர் போராட்டங்கள் தனக்கான அதிகாரத்துக்குட்பட்ட வகைகளில் எழுவேண்டிய தருணங்களைப் புரிந்துகொள்வதற்கும் நாம் கடக்கவேண்டிய தூரம் அறிவுப் பாதையின்வழி நீண்ட தூரமாகும்.


புலிவழியான போராட்டச் செல்நெறியானது மக்களது செழுமையான பலத்தைப் பொருட்படுத்தாதென்பதை முதன்மைப்படுத்திச் சொல்வதிலும்,ஒருவகையான அந்நிய "கூறுபோடும்" தந்திரத்தையுரைப்பதாகப் புரிந்துகொள்ளச் சொல்லித் தொடரலாம்.


"Macht,Herrschaft, Gewalt."-அதிகாரம்,ஆதிக்கம்,வன்முறை போன்றவைகளின் வரலாற்று ரீதியான கண்ணோடத்தைக் குறித்தான புரிதல்களை அவசியப்படுத்துகிறேன்.இதற்காக மக்ஸ் வேபர் எழுதிய உலக தழுவிய கண்ணோட்த்துள் அதிகாரத்துவ வடிவங்கள்: சட்டரீதியான அதிகாரத்துவ அலகுகளும் (Herrschaftsformen in universeller historischer Perspektive –
Max Weber: Typen der legitimen Herrschaft) பரவலாகப் புரியப்பட்ட பின்னணியோடு நான்வொல்வ்காங் சோவ்ஸ்கியின் அதிகாரம் என்பது சமூக வடிவங்களாக என்பதை புதிய வகையான தேடதலின் வகைப்பட்ட கருத்தாடலுக்கும் (Macht als soziale Figuration – Wolfgang Sofsky u. Rainer Paris: Figurationen sozialer Macht ) எடுத்தாள்வதில் இலங்கையின் இனவொடுக்குமுறைத் தகவமைப்புகளை விளங்கிக்கொள்வதற்காக நவலிபரல்களது அதீதமான அதிகாரவேட்கையின் சூட்சுமத்தை விளங்கிக்கொள்வதற்கு மிக்கேல் பூவ்கா குறிரைத்த:

„Die Macht ist nicht etwas, was man erwirbt, wegnimmt, teilt, was man bewahrt oder verliert; die Macht ist etwas, was sich von un-zähligen Punkten aus und im Spiel ungleicher und beweglicher Beziehungen vollzieht.“-Michel Foucault[Überwachen und Strafen]

//Capillary power, governmentality, bio - politics குறித்து மேற்கத்திய சூழலை முன்வைத்து ஃபூக்கோ விளக்கியவற்றை விளங்கிக் கொள்ள முற்பட்டு, அதன்பாற்பட்டு புலிகளின் “வன்முறை” குறித்து பேச முன் வந்தால் வரவேற்கலாம்!மேற்கத்திய சூழலில் ஃபூக்கோவும் இன்ன பிறரும் முன்வைத்த ஆய்வுகளை தெற்காசியச் சூழலின் தனித்துவங்களைக் கணக்கில் கொண்டு புரிந்துகொள்ளப் பிரயத்தனப்பட Bernard Cohn ஐயும் Nichols Dirks ஐயும் வாசித்திருக்க வேண்டும், அறிவு வாளிகள் போல பாவனை செய்யும் ...//
by Valar Mathi

அதிகாரமென்பது கையகப்படுத்தி,பகிர்ந்துகொள்வதற்கான அலகு போன்றிருக்க வாய்ப்பில்லை,மனிதர்கள் காத்துக்கொள்வதற்கும்,இழப்பதற்கும்.அதிகாரமானது சமனற்ற விளையாட்டில் எண்ணிக்கைக்குட்படாத பல புள்ளிகளைக் கொண்டிருப்பதையொத்த தன்மைக்குட்பட்டிருக்கிறது. இது, சாதகமானதாகவும்,பாதகமானதாகவுமே இருபக்கங்கங்கட்கு உட்பட்டிருப்பதாகக் கருதும் பூப்கா வரலாற்று ரீதியாக உருவாகிய அதிகாரமென்பதை ஒரு ஸ்த்துலாமான புள்ளியில் நிறுவுவதை மறுத்துரைக்கும் சந்தர்பங்களை விளங்கிக்கொள்வதற்காக நாம்அவரது அனைத்துப் பிரதான எழுத்துப் பதிப்புகளையும் உள்வாங்கிக்கொண்டு தொடருவதும் தவிர்க்கமுடியாத ஒரு பளுத்தாம்.நவலிபரல்களின் முக்கிய மேட்டிமைக் கூட்டணியுள் -மௌன் பிலெரின் செசைட்டியுள் [Mont Pelerin Society ]அதிகாரத்துக்கான அதீத முனைப்புகள் திரண்டிருந்தபோது,கார்ல் போப்பரோடு[Karl Popper] கூடித் திரிந்த ஜேர்மனிய சந்தைப் பொருளாதாரச் சிந்தனையாளன் லூவிட்க் ஏர்ஹார்ட்டும் [Ludwig Erhard ],பிறீட்டிறிக் ஹாய்க்ட்டும்[Friedrich August von Hayek ] பூப்காவை மதித்தேம்பியழைத்திருந்தபோது அவரது அதிகாரம் குறித்த சிந்தனைதாம் அதன் அர்த்த புஷ்டியான வாய்ப்பை நல்கியது.வரலாற்றுக்கட்டமான புரிதலைச் செழுமைப்படுத்துவதிலிருந்து அதை அரூப நிலைக்குத் தள்ளியதிலிருந்து அதிகாரம் என்பது பல தளத்திலிருந்து:

Historische und gesellschaftliche Prozesse folgen für Michel Foucault keiner inneren Entwicklungslogik und ihnen liegt daher auch keine sinnhafte Ordnung zugrunde. Sie sind vielmehr das Ergebnis von andauernden Machtkämpfen. Für Foucault ist Geschichte "Machtverhältnis, nicht Sinnverhältnis" (M. Foucault: Dispositive der Macht, Berlin 1978, S. 29).

வரலாற்று ரீதியான சமூப் படிமுறைவளர்ச்சியானதன் விளைவுகள் பூப்காவைப் பொறுத்தவரை உள் தர்க்கத்துக்கு உகந்ததல்ல.அதேவழியில் அடிப்படையான அர்த்தத்துக்கு உட்பட்டதுமல்ல என்றாகிறது.இவைகள் அதிகம் பேசுவதானால்,தொடர்ந்து நிலவும் அதிகாரத்துக்கான போராட்டத்துள் சில வெளிப்பாடுகள் மட்டுமே.இந்தப் புள்ளியில் தாம் நாம் புலிகளது அதிகாரத்தைப் புரிந்துகொள்ள முனையவேண்டுமெனச் சொல்லப்படுகிறதுபோல் தெரிகிறது.இதை நாம் புரிந்துகொள்வதும்,தொடரும் அதிகாரத்திசையமைவுகளை மிகக் கறாராக வரையறை செய்வதில்இலங்கை அரச ஆதிக்கத்தின் வழி நசுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனங்களது வாழ்வாதாரவுரிமையைப் பின் தள்ளுவதிலிருந்து அவர்களது சுயநிர்ணயத்துக்கான அதுசார்ந்த உரிமைக் குரல்களை ஓரங்கட்டியொதுக்குவதில் புலிகளது எதிரதிகாரத்தின் வினை பயன் என்னவென்பதைக் குறித்துப் பார்ப்பதில் அவசியமான தேடுதல்கள் உருவாக வேண்டுமெனவும் கோருகிறேன்.

//ஃபூக்கோ கொடுத்த தெளிவுகளில் அடிப்படையான ஒன்று, அதிகாரம் என்பது “அரசு” என்பதாக இடதுசாரிகள் கற்பனை செய்துகொண்டிருக்கிற அரசு எந்திரம் என்று சொல்லப்படுவதின் ஒன்றில் மட்டுமே குவிந்திருப்பன்று என்பதுவும்!
இந்த அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாத மாற்றுக் கருத்து ...... இனவெறி அரசுக்கு எதிராகச் செயல்பட்ட ஒரு இயக்க்கத்தை “அதுவும் அதிகார மையச் செயல்பாடுதான்” என்று விமர்சிப்பதில் அடிப்படைக் கோளாறு இருக்கிறது!முதல் கோளாறு, அதிகாரம் என்பது “பிற்போக்கானது - அதனால் எதிர்க்கப்பட வேண்டியது” என்ற மடப்புரிதல்.//
by Valar Mathi


எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு,அது விவேகமாக நிர்மாணிக்கப்படவேண்டும்.இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும்.எமது வரலாற்றுத் தாயகத்தை நாம்(இங்கே, பாசிசப் புலிவழிப் போராட்டத்தைக் கற்பனை செய்யவேண்டாம்) இழந்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக் கப்படவேண்டும். இங்கே, புலிகளின் தவறுகளைக்கொண்டே நம்மை நெருங்கிவரும் இந்திய வலுக்கரம் முறியடிக்கப்படவேண்டும்.இதற்கு நமது மக்களின் பூரணமான பங்களிப்பு அவசியமாகிறது.மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே! மக்கள் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது. எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை,அந்நிய மேற்குலக ஏகாதிபத்தியங்களின் புவிகோள நலனை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.

இதன்தொடர் புரிதலில்தாம் இந்த அதிகாரம் குறித்த புரிதலை மிக நுணுக்கமாக விளங்கும் ஜேர்மனியச் சிந்தனைக்குள்ளிருந்து புரிந்துகொண்டதன்வழி நம்மைப் புரிந்துகொண்டு அடுத்த கட்டதைத் தொடர்ந்து முன் தள்ளுவதில் இக்கட்டுரைத் தொடர் சாதகமாகச் சில புரிதலை வழங்க முடியமெனக் கருதுகிறேன்.


தொடரும்...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.12.11

Wednesday, December 21, 2011

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை!

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை!

"சுகந்தி ஆறுமுகமும்,பெண்ணியல் புழுத்தலும்" -சில குறிப்புகள்.


ன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம். இங்கு, அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில்(தமிழீழப் போராட்டத்துள் புலிவழிப் புரிந்துகொண்ட தமிழர்களது சுயநிர்ணயம்) இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது. இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய புலி-சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.

இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரையான எல்லைகள் நீண்டுபோவதற்கான அரசியல்வரை, இவர்களது பணி(புலிகளும்-புலிகளது அழிவுக்குப் பின்னான பினாமிப் புலிகள்-நா(கா)டு கடந்த தமிழீழ அரசு) தொடர்ந்தே இருந்தது.இப்போதும், அதையே இன்னொரு வழியில் பின்பற்றுகிறார்கள்?

தாலித் தானத்துக்கும்,புலிகளது போராட்டத்துக்குமான ஒற்றுமை என்ன?

கடந்த சில தினங்கட்குமுன் பெண்ணொருத்தி மீளத் தாலிக் கொடியைத் "தமிழீழ விடுதலை"குறித்த போராட்டத்துக்கு-விடுதலைக்குத் தானமாக இட்டபோது அதை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் பெற்றுக்கொண்டு,"தாயகத்தில் எமது தாய்மார்களினதும் சகோதிரிகளினதும் கழுத்துக்களில் தொங்கும் தாலிகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியது. ஈழத் தமிழர் தேசம் தனக்கெனச் சுதந்திரமான இறைமையுடைய தமிழீழத் தனியரசினை அமைத்துஇ தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசப் பறக்க வேண்டும் என்பதற்காக – இந்த அமர்வில் நமது தேசத்தின் தாய் ஒருவர் தனது கழுத்திலிருந்த தனது தாலிக்கொடியினை தானே இறக்கி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் இந்த அரங்கில் கண்டோம்.”[ http://inioru.com/?p=25144 ] என்கின்றாராம்.

இங்கு,இந்தத் தாலி அறுப்புச் சம்பந்தமாக நான்: "புலிகள், இப்படி எத்தனை "தமிழிச்சிகளது" தாலியை அறுத்தாங்களோ,அதே பாணியில் தொடர்ந்து தாலியைத் தட்டிப்பறிக்கும் அதே குணம் தொடர்ந்தே வருகிறது.அப்படி என்னதாம் தாலிக்கும்,புலிகளுக்கும் தொடர்பு?;தாலியறுப்பார்! :-( "என்று வாசுதேவனின் நிலைத் தகவற்தொடர்பில் தாலி வழங்கும் நிழற்படத்துக்குக் கருத்திட்டேன்.


அந்தோ,பெண்ணிய சிங்கம் சுகந்தி ஆறுமுகத்துக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கப் பெண்ணியப் புயலாக மெல்லக் கொக்கரிக்கும்போது:
"எனது பெண்ணியல் புரிதலின்படி தாலியை அழித்தல் அல்லது அதை பொதுவெளியில் கழட்டுதல் என்பது ஒரு புரட்சிகர செயல்பாடு. தனது தாலியை கழட்டுவதற்க்குமுன் பெண் பல்வேறு கருத்தியல் உளவியல் மோதல்களுக்கு உள்ளாகிறாள். அதற்கு அபார துணிவு வேண்டும். அவர் அதை ஒரு பொதுப்பணிக்கு கொடுக்கிறார். சிறீ ரங்கன் உமது எழுத்துக்களில் இயங்கில் வேறுமை எப்பவும் தெக்கிநிற்கும். வெறும் வசைபாடும் அரசியலில் இருந்து வெளியேற முயற்சியுங்கள். புகலிடத்தாரிடம் புலிகள்பற்றி இன்னும் ஒரு நேர்மையான விமர்சனம் எழவில்லை. திட்டித்தீர்தலைத்தவிர.."
இப்படியெழுதி விடுகின்றார்.

ஆக,இது:"பொதுப்பணிக்குத் தாலி கழற்றப்படுகிறது.அது அபாரமான துணிபானது-தியாகமானது,புரட்சிகரமானது,பெண்விடுதலைக்கானது-பெண்ணடிமைத்தனத்தைப் போக்க வல்லது"இந்தப் பொதுப் புத்தியைத் தகவமைக்கும் புலிகளது பிரச்சாரத்தின் வலிமையை நாம் சில மாதிரிக்கான தெரிவுகளின்வழி உடைத்தோமானால்,நமது சமுதாயத்தில் பல இலட்சம் சுகந்தி ஆறுமுகங்களை உருவாக்கும் புலிகளது கருத்தியற் கட்டுமானத்தைப் புரிந்துகொள்ள முடியும்.ஏலவே,புலிகள்"உயிராயுதம்"தயாரித்த கதையும் இப்படியே...

இப்போது,இந்தத் தனித்துவமான பெண்ணியப் பனுவலூடாகக் கடத்தப்படும் தாலியின்-கொடியின் தானத்துக்கூடாகக் கட்டப்படும் குறியீடென்ன?

இதுவரை,சுவிசிட்ஸர்லாந்திலிருந்து ,உலகம் பூராகவும் தொடர்ந்த இந்தத் "தாலித் தானத்தின்" வழி, புலிகள் முன்னெடுக்கும் பிராச்சாரம் என்ன?

அதற்கும், சுகந்தி ஆறுமுகம் வகுப்பெடுக்கும்"பெண்ணிய த்துக்கும்" என்ன தொடர்பு என்பதை நாம் சற்று ஆழ்ந்து(கவனிக்க ஆழ்ந்து என்பதை) நோக்குவோம்.

தாலி,தமிழர்களது பண்பாட்டில் அது பெறுமதியான வாழ்வியற் குறியீடாகவும்,பெண்மீதான ஒருவித உளவியற் தாக்குதலாகவும்,அதன் சாரத்துள் சுமத்தப்படும் சமூகப் பெறுமானம்"சுமங்கலி"ச் சுமையெனும் பண்பாட்டுப் படுதாராகவும் நிலைப்படுத்தப்பட்ட பின்,அதன் சமூகவுளவியற் பெறுமானமானது "வாழ்வு" என்பதாகும்.அதன் அறுப்பில்"வாழ்வு" அற்றதன் தளத்தில்"வாழ்விழந்த"நிலைக் களன் மிக விரைவாகச் சுமத்தப்பட்டு,குறியீட்டுத் தாக்குதலில் பெண் சிதைக்கப்பட்டு மூலையுள் இருத்தப்படுகிறாள்,அல்லது "தமிழ் வாழ்வு"(சைவப் பழம்) விழுமியத்திலிருந்து விலக்கப்படுகிறாள்.

புலிகளது பிரச்சாரயுக்தியுள் "தாலித்தானம்" தான் சொல்வதிலிருந்து வேறொன்றையுங் குறித்துரைக்கிறது.இந்த ஆற்றலானது,தாலியின் குறிப்பான் பங்குக்குக் குங்குமம் பிறிது மொழியாகும்போது,அங்கே-"குங்குமம்" ஒரு நிலையில்வாழ்வாகவும்- சிகப்பு நிறம் மட்டுமாகப் பிறத்தியாருக்கும்-தமிழ் மொழிக்கு அந்நியமானவொரு மாற்று மொழியாளுக்கு-குறிப்பாக ஜேர்மனியர்களுக்கு!

அது ஒரு நிறம் மட்டுமே.அதை மொழிப்படுத்தும்போது,அதற்கு அவ்வளவு பெறுமானமான அர்த்தச்செரிவை எம்மால் ஏற்படுத்த முடியாது.ஆனால்,அது ஒரு குறியீடாகவும்,குறிப்பானகவும்,நமது சமுதாயத்துள் இயங்கும்போது,அகவயக் குறைவான மதிப்பீட்டைத் தள்ளி வைத்து வாழ்வொன்று நிலவுகிறது.அது பிற்போக்கானதாக இருந்துங்கூட.இதுதாம் தாலிக்கான மகிமை!

எனவே,தாலி குறியீடாகிக் குறிப்பானாகவும் விரிந்து ஒரு கட்டத்துள் சொன்மை என்பதாக அது விரிகிறதா? "தாயொருத்தி தாலிக்கொடியைத் தானமாக வழங்கினாள்" எனும் சொல்லின்வழி தரும் அர்த்தமும்,குறிப்பால் தரும் அர்த்தமும் ஒன்றல்ல!


"தாலி-குங்குமம்"என்பவை ஒரு தரப்பில் குறியீடாகிக் குறிப்பானாகவும்-சொன்மை ஆகவும் விரிவதில்தாம் புலிகளது"தாலிக் கொடை"விளம்பரம் உச்சம் பெறுகிறது.இதுதாம் எனது"தாலி அறுப்பு"எனும் கருத்துக்கான மூலச் சொன்மை! எனவே,பெயரிடல் அவ்வளவு இலகுவான பொருட்தரவல்ல பிரயோகமல்ல என்பதான புரிதலுள்,உட்புகுத்தப்பட்ட"வடிவம்"அவசியமானவொரு சமூக உளவியலைச் சொல்வதிலிருந்து பின்வாங்கிச் செல்லும் சுகந்தி ஆறுமுகத்துக்குப் "பெண் விடுதலைப் புரட்சியாக" இவை புரிகிறது.அதாவது,புலிக்குத் தானமாக வழங்கும் தாலி புரட்சி-பெண்விடுதலையாகிறது!ஐயோ,அரமே!

சொல் வேறு,சொன்மை வேறென்று உரைக்க, "உ-மக்கு" விற்றின்கன்ஸ்ரைனை அழைத்துவந்து வகுப்பெடுக்க முடியாது.

"தாலி x பொருண்மை-வாழ்வு x சொன்மை" இரண்டுக்கும் அர்த்தங்காண் அறிவு விலக்கிப் பெண் விடுதலைச் சிந்தனையை எவருக்குரைத்து என்ன பயன்? பெண்ணியமெனப் பெயரிட்டுவிடுவதில் அவசரப்படும் அறிவுக்கு, இந்தச் சிந்தனையை ஒரு சூத்திரமாக மாற்றிவிடுவதில் "பெண்விடுதலை-புரட்சி" அறைகூவலாகி விடுகிறது. இதுவே,"இயக்கவியற் வேறுமை"குறித்து வகுப்பெடுக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்னமே நாம் "தாலியறுத்து" இல்வாழ்வில் இணைந்து"குடும்பம்"நடாத்தும் இதுநாள்வரை, எமக்குப் பெண்ணின் உளவியல் மோதலை வகுப்பெடுக்கும் சுகந்தி ஆறுமுகத்துக்குப் புலிகளது போராட்டச் செல் நெறியோ அல்லது அவர்களது உளவியற் தாக்குதலோ புரிந்த மாதிரித்தாம்.

நான்,இத்தகைய தனிப்பெரும் பெண்ணியப் புரட்டுக்கு அப்பாலே புலிகளது தாக்குதலைக் குறித்துக் கவனப்படுத்தவே ஆர்வமாக இருக்கிறேன்.

தாலிக்கும்,புலிகளுக்கும்,தானத்துக்கும்-தியாகத்துக்கும் என்ன விளக்கங் காணமுடியும் புலிவழிக் கருத்தியலுக்குள்?

"தற்கொடை"
"தாலிக்கொடை"
"உயிற்கொடை"
"உயிராயுதம்"

"உளக்கொடை" இப்படிப் புலிகளது மொழிக்குள் நிலவுகின்ற கருத்தியற் கருவூலமானது ஒவ்வொரு கட்டத்துள்ளும் மிக வேகமான சமூகவுளவியலாக ஆக்கமுற வைக்கப்பட்டுள்ளது.வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பதென்பதும்-வாழும் நிலையைக்கடந்து,புற நிலையின் தன்மையே (நிலையே) சிந்தனையைத் தூண்டுவதென்ற உண்மையில், இத்தகைய கருவூலங்களை சமுதாயத்துள் பெரும்பகுதி மக்கள் வாழும் வாழ்நிலைகளாக மாற்றப் புலிகள் செய்து வரும் மிகக் கேவலமான பிரச்சாரங்களே இன்றுவரை மிகப்பெரும் துன்பத்தைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு அள்ளி வழங்கியது.

இதன்,தாக்கமானது ஒரு கட்டத்துள் தேசத்துக்காக"நீ சாவது"அவசியமானது-அர்த்தம் பொதிந்ததெனச் சொல்லப்பட்டதுவரை,சமூகத்துள் மிகவும் பெறுமானமிக்க வாழ்வை-தாலியைத் தியாகஞ் செய்யும் தாயைவிட,"உன்னிடம் இருக்கும் செல்வம் பெரிதில்லை-அதைப் புலிகளாகிய எமக்குத் தந்துவிடு!"எனச் சொல்லும் இந்த உளவியலை வகுப்பெடுக்க எனக்கு ஒரு சுகந்தி ஆறுமுகம் தேவையா?

தாலிக்கொடி வழங்கும் வர்ணப் போட்டோக்கள்-வீடியோக் காட்சியுருவாக்கத்துள்,இத்தகைய பிரச்சார உத்திகள் ஏலவே மலிந்திருந்தவை.கடந்த இரு சகாப்தத்துள் இது நீண்டவொரு பட்டியலைத் தரவல்லது.இதன் வாயிலாகவொரு கீழ்த்தரமான பிரச்சாரத்தை முன்வைத்த புலிகள்,எத்தனையோ தாய்மார்களது கழுத்துள் கை வைக்காமலே தாலிக்கொடிகளை அபகரித்தது மட்டுமல்ல,நிலத்தில் அத்தகைய தாய்மார்களது கணவர்களையுங் களப் பலியாக்கியது வரலாறுதாம்.இதன் தொடராகக் கட்டியமைக்க முனையும் உளவியலானது, தொடர்ந்து மக்களை மொட்டையடிக்கவும்,உணர்ச்சிவயமாகத் "தமிழீழ விடுதலைக்கு" பொருட்கொடை வழங்கும் ஒருவித மனத்தையே அவர்கள் உருவாக்க முனைகிறார்கள்.அந்த மனத்தைத் தொடர்ந்து தகவமைக்கும் இந்தத் "தாலி-கொடி" , சமூகத்துள் அதி வேகமான குறியீடாகி "அனைத்துக்கும் ஈடாகாதவொரு பொதுமைப்பட்ட சொன்மையாக" மாறும் இந்தப் பிரச்சார உத்தி கீழ்த்தரமான காயடிப்பு அரசியலாகும்.

"மனிதர்கள் மொழியினது கைதிகள்"என்பது ரொலான் பார்த்தின் கூற்றுக்களில் அதிகம் முக்கியமானது.உயிர் வாழ்வின்முக்கியமான பரிணாமம் இந்தக் குறிப்புணர்த்தும் உணர்வினது அனுங்கலான மொழியாகும். எனவே,மொழியென்பது என்ன-வாழ்வென்பது என்னவென மிக இலகுவாகப் புரிந்துபோக முடியாத நெருக்கடியுள்தாம் புலிகளது இந்தப் பிரச்சார உத்தி கையாலாகதவொரு இனத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

ஒன்றைக் காட்சிப்படுத்தும்போதே, இன்னொன்றைக் காட்சிப்படுத்தாது விடப்படுகிறது.குறியீடாகச் சொல்லும்போது, இன்னொன்றைக் குறித்துச் சொல்லாமல் விடப்பட்டு, உண்மை மறைக்கப்படுகிறது.

"தாலி" என்ற பொருண்மை தன்னளவில் ஒரு குறியீடாகவும்-குறிப்பானாகவும் இருக்கும் அதே சமயம் அது வாழ்வெனும் தருணத்துள் ஒரு சொன்மையாக விரிகிறது. இங்கே,பொருண்மையும்,சொன்மையும் மெலிதானவொரு நூலிழையால் பிரிக்கப்படுகிறதே இந்தத் தளத்துள்தாம் புலிகளது "தாலி-கொடித் தானம்" மையங்கொண்டு, மக்களை மொட்டையடிப்பதற்கானவொரு உறுதியான பிராச்சர உத்தியை மறைத்து மக்களுக்கான விடுதலை-தேசவிடுதலை எனப் பரப்புரை செய்து மிகவும் இலகுவாக ஊரார் தாலியை அறுத்துக்கொள்கிறது.இது கிடைக்காத சந்தர்ப்பத்துள் துப்பாக்கிக் காட்டித் தாலியறுக்கும் இன்னொரு கூட்டமோ,அறுத்த தாலிகளுடன் பாரீசில் ஒதுங்கும் இடம்,தமிழ் மளிகைக் கடையாகவும்,தமிழ்அச்சுக் கூடமாகவும் இப்போது இருக்கும்போது,தாலி அறுப்புக்கான இந்த நிகழ்வுகள் அனைத்தும் "பெண் விடுதலைக்கான" முன் நிபந்தனைகள்தாம்.

இதையொட்டிச் சுகந்தி ஆறுமுகங்கள் இயங்கியல்"வேறுமை" வகுப்பெடுக்கட்டும்.நல்லதுதானே?-யாரு, "வேண்டாம்" என்றோம்?


ப.வி.ஸ்ரீரங்கன்,
ஜேர்மனி
21.12.2011

Monday, December 05, 2011

பிச்சை வேண்டாம்...

பிச்சை வேண்டாம்,நாயைப்பிடி:புலிகளது போராட்டஞ் சரியானது!

" மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாகத்தாமிருந்திருக்கிறது.இதைப் புரியாதிருக்கும் ஒரு காலத்தை இனிமேலும் தக்கவைப்பதற்கு எல்லாத் தரப்பும் அதி சிரத்தையெடுத்தபடி "தேசிய உரிமை"பேசுகின்றன."


னவொதுக்குதலுக்கும்-ஒடுக்குமுறைக்குள்ளாகுமொரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் எதிர்ப்புப்போராட்டமென்பது, அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருதே முன்னெடுக்கப்பட வேண்டும். சுயநிர்ணய-விடுதலைப் போராட்டமென்பதைத் தவறான வகையில் "தமிழீழ விடுதலை"என்ற கோசத்துக்குள் உட்படுத்தித் தமிழர்களது சுயநிர்ணயவுரிமையையே அழித்த அந்நியத் தேசங்கள் புலிகளது வரவினூடாகச் சாதித்த இந்த த் திட்டமிடப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கெதிரான வரலாற்றுப் பழியானது நமது மக்களையும் இளைய தலைமுறையையும் மீளவும் ஏமாற்றிவிடும் சூழலொன்றைத் திட்டமிட்டுவுருவாக்குகிறது.இன்றைய ஆளும் வர்க்க-அதிகார நிறுவனங்களது கருத்தியல் தளத்தை உருவாக்கும் ஊடகங்களை மெல்லக் கவனிப்பவர்களுக்கு இந்தவுண்மை எப்போதும் முகத்தில் ஓங்கி அடித்தே தீரும்! முள்ளி வாய்க்காலுக்குப் பின்பு புலிகளது விசுவாசிகளில் பலர் போதகர்களானார்கள்.அவர்களுக்குத் தலைமைகொண்ட கே.பி. மக்களுக்குச் சாப்பாடு போதுமெனவும்"அபிவிருத்தி"யே சுயநிர்ணயமென்றும் வகுப்பெடுக்கும்போது,அவரது தலைமைக்குட்பட்ட கருத்துக் குட்டிகள் சொல்வதென்னவாக இருக்கும்?

இதில் நிலாந்தன் விதிவிலக்காக முடியுமா,அல்லது தமிழ்ச் செல்வன் துணைவி விதிவிலக்காக முடியுமா?ஏன் முக நூல் வட்டத்துத் தேசிய ஆர்வலர்கள் விதிவிலக்காக முடியுமா?இந்த விதிவிலக்கு மக்களுக்கான அரசியலைப் பேசுவதென்பதில் மையங்கொள்கிறது!

சில வியூகங்களும், அந்நிய லொபிகளும்:

1: புலிகளது தவறுகளை,போராட்டச் செல்நெறியின் பாரிய ஊசலாட்டத்தைச் சரியானதெனவும்,மக்களை வன்னியில் கட்டாயமாக மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதும்,பலம் பொருந்திய இலங்கைப் பாசிச இராணுவத்துக்கு எதிராகப் போராடும்படி முன் நிறுத்திப் பலிகொடுத்ததும்,முகம்கொடுக்க முடியாது பின் வாங்கியவர்களைப் புலிகள் தண்டித்துச் சுட்டுக்கொன்றதும்,விடுதலைப்போராட்டத்தில்-தேசத்தைக் காக்கச் சரியானதென விவாதிக்கும் கருத்தை உருவாக்கல்.பிரபாகரனைத் தொடர்ந்து உயிர்வாழுவதாகவும்,அவர் ஒரு மகத்தான மனிதரெனவும்,தேசிய விடுதலையைத்தப்புத் தவறுமற்று முன்னெடுத்தவராகவும்,தமிழ்த் தேசியத்தின் குறியீடாகி வைத்துக்கொள்வதும்,

2:அக்கருத்துக்கு நியாயமாக,பாசிசக் கிட்டலரை எதிர்த்துப் போராடிய இருஷ்சியச் செம்படைகளை ஒப்பீடு செய்து,புலிகளது தவறுகளையும்,மக்கள் விரோதத்தையும் நியாப்படுத்துதல்.புலிகள் சரியான பாதைகளின்வழியேதாம் போராடியதாகக் கருத்துக்கட்டி, மீள ,மீள நம்மை ஏமாற்றுதல்,தவறான பாதையின்வழியே நமக்குப் போராடக் கற்றுக்கொடுத்து இறுதியில் தோற்கடிக்கத்தக்க சூழலை உருவாக்கிக்கொள்ளல்.


மேற்கூறிய வியூகத்துக்கிணைவாக,பல்கலைக்கழக மாணவர்களை,உசுப்பேத்தித் தமிழ்பேசும் மக்களை மேலும் ஒட்ட மொட்டையடிக்கும் அந்நியச் சக்திகளது வியூகமானது நிரந்தரமாகத் தமிழ்பேசும் மக்களை உணர்ச்சி அரசியலுக்குள் கட்டிப்போடுவதில் மிக விவேகமாக முன்னேறுகிறது.இது முள்ளி வாய்காற் படுகொலைகளுக்குப் பின் மிகச் சாதுரியமாகக் கருத்தியலை முன்வைத்து நகர்கிறது.இதன் பின்னே யார் இருக்கிறார்கள்,இதைத் உந்தித் தள்ளும் பொருளாதார ஆர்வமென்ன?சிந்திக்க வேண்டும்!

இதைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களை நாம் உருவாக்க வேண்டும்.

புலிகளது தவறுகளைச் சரியானதென நிறுவிக்கொள்வதால் என்ன நிகழும்?

இந்தக் கேள்விக்குப் பெரிதாகச் சிந்திக்க தேவையில்லை.தவறுகளைத் திருத்திக்கொள்ளாதவரை நமது தேர்வுகள் தப்பாகவே இருக்கும்.சதா படிக்காமல் ரோட்டுச் சுத்திவிட்டுத் தேர்வில் தோற்ற மாணவர்களை"இல்லை நீ செய்தது சரி"உனக்கு எதிராகப் பரிசோதகர் மார்க்ஸ் போட்டுவிட்டான் என்ற கதையாகவே புலிகளது தவறுகளைச் சொல்லிக்கொடுக்கும் இன்றைய தலைமுறைக்கு, உலகப் போராட்டங்கள், விடுதலை-புரட்சியின் புறநிலைமைகள் குறித்து எந்தவிதப் புரிதலும் அவசியமில்லாதபடி "ஒரு பொறி"க்காக மக்கள் காத்திருப் பதாகவும்"திடீர்ப் புரட்சி"ரெடி எனும்படி உலகம் புரிந்து போகிறது. இதுதாம் ஆபத்தானது!

புலிகளது தவறுகளைக் கண்டுகொள்ளாதிருக்கவும்,அவர்களது தியாகங்களை மகத்துவப் படுத்தலூடாகவும்,போராட்டத் தவறுகள் மறைக்கப்படுகின்றன.இந்த வரலாற்றுத் தவறுகளை நியாயப்படுத்துவதனூடாக மீளவும் புலிவழிப் போராட்டச் செல்நெறியும் மக்களைப் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தி இயக்கவாத மாயைக்குள் கட்டிப்போடுவதால் புலிகள் அழிந்த இந்த வெற்றிடத்தில் உருவாகப்போகும் புரட்சிகர அணிதிரட்சிக்கெதிராக மக்களைத் திசை திருப்புவதும்,தொடர்ந்தும் உணர்ச்சி வழிப்பட்ட தேசியப் பெருமிதத்தைப் புலிக்களுக்கூடாகக்கட்டி, அவர்களை அதன்வழி சிந்திக்க வைப்பதுமே அந்நியச் சக்திகளுக்கு அவசியமாகவிருக்கிறது.குறிப்பாக இந்திய ரோ இங்ஙனமே செய்யத் தூண்டுகிறது.

இதனால்,அந்நியச் சக்திகள் அடையும் பலன், பல வடிவங்களிலானது.அவர்கள் இருவிதமான தந்திரத்தில் இளைய தலைமுறையைத் தகவமைத்து வருகிறார்கள்.அவை கீழ்வரும்படி அமைகிறதென அண்மைய முகநூல்-இணைய ஊடகக்கருத்தாடற் போக்குகள் நிரூபிக்கின்றன.

முதலாவது வகை:

1: புலி அற்ற தமிழ் அரசியற்பரப்பில் ஜனநாயக நீரோட்டம் அரும்புவதை(பல்தரக்கருத்தாடல்,வெளிப்படையான பொதுத் தள அரசியல்,குடிசார் அமைப்புகளது முகிழ்ப்பு,மக்கள் பல் முனைக் கருத்தாக்கங்களால் உந்தப்படல்,உளரீதியாகச் சமூகவுணர்வை புறநிலையில் இருந்து பெற்று அதையே மீளத் தகவமைத்தல் போன்றவை)தடுத்தல்,

2:போராட்டவுணர்வுமிக்க தலைமுறைகளது சிந்தையில் புலிகளது கருத்தியலை மீளத் தகவமைத்துத் தேசத்தைக் கட்டும் அபிலாசையை சுயமாகத் தீர்மானிக்கும் உணர்வை அடியோடழித்தல்,

3:நண்பர்கள் யார்-எதிரிகள் யார் என்ற கேள்விக்கு விடை தெரியாதிருப்பதும்,தேசிய விடுதலையை ஏகாதிபத்தியத் தயவில் வென்றெடுக்கும் லொபி அரசியலைத் திட்டமிட்டு விதைப்பதற்காகவேனும் புலிகளது தோல்விகளைத் தப்பான போராட்டச் செல்நெறியைச் சரியானதெனக் கட்டியமைத்துக் கருத்தாட வைத்தல்,இதன்வழியாக இளைஞர்களை மீளவும் புரட்சிகரமான உணர்விலிருந்து அந்நியப்படுத்தித் தலைமை வழிபாடுடையவொரு தலைமுறையாக்கிக் கொள்ளல்(இது பெரும்பாலும் ஓட்டுரகச் சிந்தனையின் மறுவடிவமான இயக்கவாதக் கட்டுமானமே),இதற்குத்தோதாக அந்நியச் சக்திகள் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல்.இதைத் தேசிய விடுதலை,தமிழ்பேசும் மக்களுக்கான நியாயம் கிடைப்பதற்கான வழிமுறையென வகுப்பெடுத்துக்கொள்ளல்,இதன்வழி அந்நியச் சேவைக்குத் தகுந்த அடியாட் படைகளை மீளத் தகவமைத்துக் கொள்ளல்,

4:பலதரப்பட்ட தளத்திலிருந்து புலிக்கு ஆதரவான சக்திகளைத் தொடர்ந்து உருவாக்குதல்,இது பல்கலைக்கழக மாணவர்களிலிருந்து பாட்டாளிவர்க்கம்வரை திட்டமிடப்பட்ட சுழற்சி ரீதியான கருத்தியல் உருவாக்க நிகழ்ச்சி நிரலைத் தயார்ப்படுத்திக்கொள்ளல்,வர்க்க உணர்வு பெறும் சமூக வேலைத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்காதிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதும்,புரட்சிகரமானவொரு கட்சியின் உருவாக்கத்தைத் தொடர்ந்து சிதறிடிப்பதற்கான புலிவழித் தேசியத்தைப் பரப்புதல்-புலிகளைத் தியாகிகளாக்கி மக்களிடம் ஒருவித மாயையைக் கட்டியமைத்து,உரிமைகளை மழுங்கடித்தல்,

இதன்வழியாக ஒரு தேசிய இனத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியான உணர்வைச் சிதைத்து, அவர்களை வெறும் இனக் குழுவாக்கும் வன்மையான போக்கை,மென்மையான முறையில் நிறுவிக்கொள்ளல்.

இரண்டாவது வகை:

இந்த இரண்டாவது வகையானது எப்பவுமே,புலிகளை விமர்சித்தபடி,போராட்டம் என்பது இனிமேல் சரிவாரதென்ற தோரணையில் "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி",என்ற கோசங்களுக்கமையக் கருத்தியலைப் பின்னிக்கொள்ளும்.

இன்று நிலாந்தன் போன்றவர்களது கருத்தானது இங்ஙனமே கட்டியமைக்கப்பட்டுவருவதில் அந்நியச் சக்திகளது இராண்டாவது வகையான அணுகுமுறை இங்கு மையங்கொள்கிறது.இதுதாம் சாணாக்கிய தந்திரமாகும்.இதை உரைத்துப்பார்ப்போமா?

1:புலிகளது முன்னால் உறுப்பினர்கள்,விசுவாசிகள்,அவர்களது அரசியல்-பிரச்சாரகப் பரிவுகளிலிருந்து தெரிந்தெடுத்த நபர்களைவைத்து இத்தகைய போக்குக்குச் சார்பான கருத்தியலை உருவாக்குதல்,

2: மாற்றுக் குழுக்களுக்குள் இருந்து மலினப்பட்ட சக்திகளை(வருவாய்க்கேற்ப இயங்கிக்கொள்ள முனையும் போலி-பினாமிக் குழுக்கள்.முன்னாள் இயக்கங்களிலிருந்து புலிக்குப் பினாமியாக இயங்கிய என்.எல்.எப்.ரீ யின் பிளவுக்குழுக்கள்வரை) திடீர் புரட்சி,கட்சிகளெனக் கட்டவைத்தலும்,ஆட்களைக் காட்டிக் கொடுத்துப் புரட்சிகரச் சக்திகளை அழித்தலும்,

3: புலிகளது மேல் நிலைக் கைகாட்டிகளை வைத்து, இலங்கை அரசினூடாக மக்களை அண்மித்தல். போராட்டமானது பிழையானது,மக்களை அழித்த அந்தத் திசைவழி தேவையற்றதெனக் கருத்துக்கட்டி, மக்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தி அடிமையாக்குவது.அதிகாரங்களுக்குப் பணிந்து போகவைக்கும் வியூகத்தை இதன் போக்கில் தகமைத்து, மக்களை வெறும் நுகர்வடிமைக் கூட்டமாக்கிக்கொள்ளல்.

இதை,இங்ஙனம் புரிந்துகொள்ளவேண்டும்:அதாவது,

1: புலிகளது போராட்டஞ்சரியானதெனக் கட்டியமைப்பதால்,நேர்த்தியான புரட்சிகரமான மக்களது பாத்திரத்தை இல்லாதாக்கல்,சரியான செல்நெறியை மழுங்கடித்தல்,மீளவும் போராடும் மக்களை புலிவழி செலுத்தித் தோற்கடித்தல்,

2: புலிகளது போராட்டம்,மக்களைக் கொன்று குவித்ததன் விளைவாக,எதுவுமே சரிவரவில்லை,போராட்டம்-விடுதலை என்பது அழிவு அரசியலானது,எனவே,புரட்சி-விடுதலை என்பதெல்லாம் மக்கள் விரோதமானதெனக் கட்டியமைக்கும் கருத்தியலை உருவாக்கி, அதேயே பெரும்பகுதி மக்களது சமூக உளவியலாக்கிக்கொண்டு அவர்களது சமுதாய ஆவேசத்தைத் தணித்தல்,அனைத்துத் தவறுகளையும் பிரபாகரனது தலையில் பொறித்துத் தேசியவிடுதலையென்பது இனிமேல் சரிவராது,அது தவறானதென உருவாக்கிக்கொள்ளல்,

இந்த இருவகையான அணுகுமுறையில் மக்களில் பெரும்பாலரைத் தொடர்ந்து இரண்டு இலாடனில் பிணைக்க முடியும்.

ஒன்று: புலிவழிப் போராட்டத்தைச் செய்ய வைத்துக்கொள்வதன் முலமாக(போராட்டவுணர்வுமிக்க இளைஞர்களை,தேசியவிடுதலையை உணர்வு பூர்வமாக அணுகும் பெரும்பகுதிப் புலம்பெயர் இளைஞர்களை) இனவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை மழுங்கடித்தல் அல்லது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லல்.இதன்வழியாக முற்போக்கு அரசியலை நீர்த்துப்போக வைத்தலும்,இளைஞர்களைப் புரட்சிகரமாக அணிதிரளுஞ் சந்தர்ப்பத்திலிருந்து தடுத்துக்கொள்னலும் நிகழ்ந்துவிடுகிறது.இதற்காகத் தொடர்ந்து புலிகளை நியாயப்படுத்தல்.

இரண்டு: புலிகளது போராட்டத்தால் மக்களது கெடுதியான பக்ககங்களைக் காட்டிக்கொள்வதும்,அதன்வழியாக நிலத்தில் இருப்பவர்களது போராட்டவுணர்வை,இலங்கைப் பாசிச அரசின் இனவொதுக்கலை மெல்ல உணர்வுரீதியாக உள்வாங்காதிருக்கும் சந்தர்ப்பத்தைப் புலிகளது கொடுமையின்வழி உணர்த்தித் தடுத்தல்,அழிவு அரசியலது பக்கங்களைப் பேசுவதும்,அதனூடாக மக்களுக்குப் போதித்தல்"பிச்சை வேண்டாம் நாயைப்பிடி"எனும் முதுவாக்கினூடாகப் போராடுவது தவறு என்ற கருத்தியலைத் தொடர்ந்து வளர்த்தெடுத்தல்,போராட்டம் தவறானவர்களால்,தவறான ஆர்வங்களுக்காகத் தவறாக நடாத்தப்பட்டுத் தோல்வியில் முடித்து வைக்கப்பட்டதை, விமர்சனரீதியாக உள்வாங்கிச் சரியான தெரிவுகளை கண்டடைவதற்குக் குறுக்கே இந்தப் போக்கைக் கட்டியமைத்தலே இதன் உட்பரிணாமம்.

இவ்விரு போக்கையும் இனம் காண்பது அவசியம்.இதிலிருந்து புலிகளது தவறான போராட்டத்தை விளங்கிக்கொண்டு சரியான தெரிவுகளினூடாக இலங்கைப் பாசிச அரசுக்கெதிரான,தென்னாசியப் பிராந்திய மற்றும் உலக வல்லாதிக்க ஏகாதிபத்தியங் களுக் கெதிரான ஸ்தானத்தில் மக்கள் புரட்சிகரமாக இயங்குவது எங்ஙனம் சாத்தியமாகும்,இதைச் சாத்தியப்படுத்தும் புரட்சிகரமான புரட்சியின் நிலவரங்கள் என்ன? மக்கள்யாரோடு தோள்சேர்ந்து இவற்றைச் சாதிக்கமுடியும்?

புரட்சிகரமானவொரு அரசியலை எப்படித் தகவமைப்பது? இது பாரியகேள்வியாகும்.மிக இலகுவாக விடை கிடைக்கவில்லை!இந்தச் சூழலை இனம் காண்கின்றோம்.ஆனால்,தடுக்க முடியவில்லை!ஏனெனில், எவர்-எந்த முகாமுக்குள் இருக்கிறாரென்பது இன்னுமே வெட்ட வெளிச்சமாவில்லை!


இந்த நிலையில் என்ன செய்வது?

தமிழ்த் தேசத்தின் நேர் எதிர் மறையான முரண்களாக இருப்பவை பதவிக்கான வேட்கையுடைய தமிழ்க் கைக்கூலிக் குழுக்களின் இன்றைய செயற்பாடாகும்!நமது தேசத்தின்-மக்களின் அபிலாசைகளை வேட்டையாடும் நிலைக்குப் போய்விட்ட கூலிக்குழுக்கள் ஒருபுறமும்,மறுபுறம் ஜனநாயக வேடம் தரித்த குள்ள நரிப் புலிக் கூட்டம்(கே.பி.உருத்திரகுமார்,கருணா-பிள்ளையான்,நெடியவன் மசிர்மட்டை...)வகையறாக்கள் ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டும் வார்த்தை ஜாலக் கதைகளுடன் ஒருபுறமும், அன்னிய சக்திகளைப் பலப்படுத்துவதில்...

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அது அரங்கேற்றி வருகிறது.பேராசை,பதவி வெறி பிடித்த தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள்.இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது.ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.

நமது உரிமையென்பது வெறும் அரசியல் கோசமல்ல.

எங்கள் பாரம்பரிய நிலப்பரம்பல் குறுகுகிறது.நாம் நமது தாயத்தை மெல்ல இழந்து போகிறோம்.நமது உரிமைகள் வெற்று வார்த்தையாகவும்,ஒரு குழுவின் வேண்டாத கோரிக்கையுமாகச் சீரழிந்து போகிறது.இது திட்டமிட்ட சிங்கள அரசியலின் சதிக்கு மிக அண்மையில் இருக்கிறது.எனவே, சிங்களப் பாசிசம் தன் வெற்றியைக் கொண்டாடுவதும்,அதைப் புலிப்பினாமிகள் ஜனநாயகத்தின் பேரால் வாழ்த்தி வரவேற்பதும்கெடுதியான அரசியலின் வெளிப்பாடாகமட்டும் பார்ப்பதற்கில்லை.மாறாக, எஜமான் இந்தியாவின் வற்புறுத்தலாகவும் இருக்கிறது.இது அகண்ட இந்தியாவைத் தக்கவைக்கும் வியூகத்தோடு முடிச்சிடுவது.

மிக நேர்த்தியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் நமது மக்கள் தமது உரிமைகளை வெறும் சலுகைகளுக்காக விட்டுவிடுவதற்கான சமூக உளவியலை ஏற்படுத்தும் நரித்தனமான அரசியலை மேற்முசொன்ன இருவகையான போக்குகள் செய்துவரும்போது இந்தக் "கேடுகெட்ட புலம்பெயர் புலித் தமிழர்கள்"எந்த அரசியல் வியூகமுமற்றச் செத்துக்கிடக்கிறார்கள்!

இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய விய+கத்தைக் கொண்டிருக்கிறது.இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே கிடையாதென்கிறது சிங்களம்.இலங்கையர்கள் எனும் அரசியல் கருத்தாக்கத்தின் மறுவடிவம் சிங்களம் என்பதன் நீட்சியாகும்!நாம் தமிழ் பேசுபவர்கள்.நமது தேசம் பாரம்பரியமாக நமது மக்களின் வாழ்வோடும்,வரலாற்றோடும் தொடர்புடைய தமிழ் மண்ணே.அது வெகு இலகுவாகச் சிங்களமாகிவிட முடியாது.

நமது மக்களை வெறும் பேயர்களாக்கும் அரசியலை மேற்கு கூறிய இரண்டு தரப்புமே செய்துவரும்போது நாம் மௌனித்திருக்க முடியாது!

இந்தத் தருணம் பொல்லாத தருணமாகும்.தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இது அரசியல் வியூகமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.இது ஏற்புடையதல்ல.இதைத்தாம் இதுவரை புலிகளைக்கொண்டு அந்நியச் சக்திகள் செய்து முடித்துக்கொண்டன.தொடர்ந்தும், அவை மாற்று வியூகங்களை நான் மேலே குறிப்பிட்ட வகைகளில் தகவமைத்து வருகின்றன.

நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.

எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.


எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.இதற்குள்தாம் புலிகள் செய்த போராட்டம் சரியானது-தவறற்ற நேரானதெனவும்,பிச்சைவேண்டாம் நாயைப்பிடி,பங்கர்வேண்டாம் படும் கொலைகள் வேண்டாம்,யுத்தம்வேண்டாம் ஒரு சிறுபிடி சாதமே விடுதலை என வகுப்பெடுக்கும் அந்நிய வியூகங்கள்.இதை இனம் கண்டு எதிர்க்காமல் நமது மக்களது உண்மையான விடுதலைக்கான பாதை திறந்துகொள்ளது!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி,

06.12.11

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...