Tuesday, March 08, 2011

உரையூக்கம்

யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த-அடையும் எந்தப் பெறுமானமும் எல்லாவகைப் புரிதற்ப்பாட்டுக்கும் இடையில் சிக்குண்டுபோன எவரையும் இதுவரை காத்துக்கொள்ளவில்லை!எனக்காகவன்றி எமக்கான"விடுதலை"என்று அறைகூவிச் செத்தவர்கள் செத்தவர்களே.செருக்கும்,தார்ப்பாரும், உள் நோக்கமும் கொண்ட பொருள்சார் உலகத்துள் ஏதோவொரு புலப்பாடு பல புள்ளிகளை அழித்தே இயக்குமுறுகிறது.இது சொல்வதற்கும்,உரையாடலுக்கும் அப்பாலுள்ள இயக்கத்துள் மலினப்படுத்தும் சுதந்திரமென்பது அர்த்தமிழந்த மனித இருத்தலுக்கொப்பானது.புரட்சிப்பயனெனப் பகரப்படும் எல்லா நியாவாதமும் நிறுவனப்பட்டியங்கும் மூலதன வியூகத்துக்கு முட்டுக்கொடுத்தவை என்பதில் எனக்கான தெரிவு மேலுஞ் சிலவற்றை நோக்கியதானது.

அ: பௌதிகவுலகமும்,உணர் அறிபுலமும்

ஆ: புறவுலகப் பருப்பொருளும் ,அந்நியப்பாடும்

இ: இடையுறாத காலக் குறுக்கமும்,நித்தியமும்

என்னை அச்சத்துக்குள்ளாக்குபவை.

என்னைக் காலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட கையோடு, குறுகக்கப்படும் வெளியில் மதில்கள் எழும்புகின்றன.எனது கால்களுக்குக் கீழே வளைந்து நெளியும் காலம் இடமின்றித் தவித்தோட முனைகிறது.பௌதிவுலகத்திலிருந்து தனித்துவமான மொழிவுகளை இழந்து வருகிறேன்.



பயங்கரவாதமும்,காட்டுமிராண்டித்தனமும்-கொலையும்,கொள்ளையுமே மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய்,மக்களது "உரிமை"என்ற அடைமொழிக்குட்பட்ட எதிரெதிர் கொல்வதற்கான நியாயம்,"ஜனநாயம்-புரட்சி,விடுதலை"எனப் பரப்பப்படுவதில் முதன்மைப்படுத்தப்படும் நலன்களானது மீளவும் மனிதக் கொலைகளுக்கு வழிவகுக்கும் பொருத்தப்பாடுகளையே உறுதிப்படுத்தும்போது பௌதிகவுலகம்என்பதன் சாரம் என்ன?

எழுதிவைத்து உரைக்கப்படும் அனைத்துமே ஒவ்வொரு கட்டத்துக்குப் பின்னும் திருத்தப்பட்ட நிலைமைக்கொப்பான தெரிவுகளை எங்கிருந்து பெறுவதென்பதன் சுய கேள்விக்குப் பின்பான உண்மையேற்பு-உணர்வு பெறுதல் என்பதிலிருந்து என்னை விடுவித்துவருவதே எனக்கான விடுதலையெனப் பகரமுடியாதபடி என்னைச் சுற்றிய மதில்கள் பெருத்த சந்தேகங்களை கருத்தியற்பரப்புள் புதைத்து வைத்துக்கொண்ட நிலையில், நான் செத்தே போக விரும்புவதில்"சாவு"உனது உரிமையில்லையென மூன்றாவது கண்ணுரைக்கிறது!

பௌதிகவுலகத்துக்கு மூலந்தேடும் பொழுதிலிருந்து எடுக்கப்பட்ட வடிவம் சுருங்கிக்கொண்டே செல்கிறது.

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் "பொருளாதாரச் சிக்கல்கள்" அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு ,சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது


பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமையும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.இத்தகைய ஒடுக்குமுறையின் தொடர்ச்சிகள் எத்தனை ஆயிரம் மக்களைக் கொன்று போட்டும் அதையே அவசியப்பாடனதும், சரியானதுமெனச் சொல்வதிலுள்ள சட்ட-நியாயந்தாம் இன்றைய உரையாடலான வெகுஜன வெளியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. :-(

ப.வி.ஸ்ரீரங்கன்
08.03.11

No comments:

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...