புரட்சிகரச்சக்தியாக நடிக்கும்
ஒடுக்குமுறையாளர்களது உறுப்புகள்.
சிறு கவனக் குறிப்பு.
"குருதியின் உலர்ந்த கறை கண்களில் பட்டு
கொடிய நெடிலாக மூக்கைத் துளைக்கும்போதும்
மரணத்தின் நீண்ட வலி நெஞ்சைப் பிழிந்த போதும்
தத்தம் வீடுகளில் இவையெட்டாதவரை
தேசமே விருப்புறுதியாகி
இவையனைத்தும் தியாகமென மெட்டமைத்துப் பாடப்பட்டது!
புலம்பெயர் நாடுகளில்
சாவோலை படித்துக்கொண்டிருக்கும் சில கிழட்டு நரிகள்
கருப்புத்துண்டை கக்கட்டில் சொரிகியபடி
சில்லறைக்கு மௌனித்துக்கொள்ளும் ஒளிச் சட்டகத்துள்
ஊராரின் உயிர்கள்
தேசமென்ற அரக்கியின் பெயரால் வேள்வியாக்பட்டு புதை குழி நிரம்பியது!
கேட்பாரின்றிக் கோலாச்சிய மொழித் தர்பார்
உயிரினது உச்சந் தலையில் மோதிக்கொண்டது..."
ஒடுக்கப்படும் வர்க்க மனிதரை விடுவிக்கும் நோக்கமானது இன்று மெலினப்பட்டுக்கிடக்கிறது.அனைத்து மூலையிலும் இருளின் தூதர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள் . நடந்த முடிந்தவை முடிந்துபோனவையாகவும்,முயற்சியில் இது தவிர்க்கமுடியாததாகவும் உரைக்கப்படுகிறது.புலம் பெயர் தமிழர்களுக்குள் கொட்டப்படும் புலிசார் மதிப்பீடுகள் யாவும் பிழையான தெரிவுகளை இளைஞர்களுக்குள் கட்டியமைக்கிறதோ இல்லையோ அவர்களது சுயதெரிவை இது மழுங்கடிக்கிறது.எல்லாப் பொழுதிலும்"தேசியம்-தமிழ்-தேசம்"அவர்களது நியாயவாதமாகப்படுகிறது.
தனக்குச் சம்பந்தமே இல்லாத தெரிவுகளால் பட்டு அவஸ்த்தைப்படும் இலங்கைவாழ் தமிழர்கள்,மீளவும் புதியதைத் தெரிந்துகொள்ளத் தடையாக"நாடுகடந்த தமிழ்த் தேசம்"அவர்களை இராணவக் கெடுபிடிக்குள் முடக்கியுள்ளது.
புலிகள் போரிட்ட இலங்கையின் அரசியலையும்,மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற்றளத்தையும் இருவேறு கூறுகளாக்கருத முடியாது.இரண்டுமே படுபிற்போக்குவாத சமுதாயத்தின் வெளிப்பாடுகள்.மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு,குறிப்பாக இலங்கையில் இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான புலிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு, மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கிய இழி நிலையில் புலிகள் அழிந்தே போயினர்.எனினும்,களத்துப் புலிகளது மரணத்தில் காசுசேர்த்த சதிகாரக்கூட்டம் மீண்டும்,மீண்டும் பற்பல வேடம் போடுகிறது.
"நாடுகடந்த தமிழீழம்சார்ந்தும்,எதிர்த்தும்,புரட்சிபேசியும்"புலிகள்-புலத்துப் பினாமிகளென ஒவ்வொருவரும் ஏதோ வகையில் இணைந்தபடி புலம்பெயர்தமிழர்களைத் தமக்குள் இணைத்துக்கொள்ளப் பொறிமுறைகளைத் தகவமைக்கின்றனர்.இதில் எவரையும் இலகுவாக இனங்காண முடிவதில்லை!எல்லோருமே புரட்சி-விடுதலையெனத் தத்தமக்குச் சொந்தங்கொண்டாடுவதில் மக்களது தெரிவு என்னவாக இருக்க முடியும்?
புலம்பெயர் தமிழ் மக்கள் பலியாகும் அரசியலானது இதுவரை பல இலட்சம் தமிழ்-முஸ்லீம்,சிங்கள மக்களைப் பலியெடுத்தும் அவர்களது சமூகவாழ்வைச் சிதறடித்துவிட்டும்வியாபாரஞ் செய்வதில் குறியாகவிருக்கிறது. இதற்குப்புலத்து-நிலத்து மக்களது வாழ்வு மூலதனமாக்கப்படுவதில் தமிழ்பேசும் மனிதவுடலானது அந்த அரசியல்- அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத்தமிழ்த் தேசிய நடாத்தையால் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் "நாம்" மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
தேசியம்-தேசம்-பண்பாடு என்ற வர்ணம் பூசிய பூர்ஷ்சுவாக கருத்தானது தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.
தமிழையும்,தேசியத்தையும்,பண்பாட்டையுஞ்சொல்லித் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்துவிட்ட தமிழ் மேட்டுக்குடிகள் இப்போது ஒருகிணையுந்தளம் வர்க்க எதிரிகளைத் தீர்த்துக்கட்டும் ஒடுக்குமுறையாளர்களது தளமாகவே இருக்கிறது.இதற்காகப் புரட்சிகரமான அரசியல் முன்னெடுப்புகளைக் காட்டிக்கொடுப்பதும் அதன்வழி இல்லாதாக்குவதற்கும் அவர்களே"புரட்சிகரமான"அணியாக உருவாகி வருகிறார்கள்.இதை இனங்காணுவதென்பது மிகக்கடினமாகும்.அவர்கள் தமக்கான வரலாறைப் போலிப் புரட்சிகரக் குரல்களின்வழி நிறுவிக்கொண்ட கடந்தகாலம் நம்மையெல்லாம் உதிரிகாளாக்கிவிட்டுள்து.இதில் புலிகளது அரசியல் மிக விவேகமாக அந்நியர்களது பணிப்பின்படி நடந்துள்ளது.இதை இனங்காண்பதும்,அதை முறியடிப்பதென்பதும் இன்னொரு புலிவழிப்பட்ட அல்லது சார்புடைய அணிகளுக்குள் நம்மை விழுத்துவதில் போய் முடியலாம்.அது,ஒரு நெருக்கடியான இன்றைய சூழலில் சாத்தியமாகலாம்.இதைக் குறித்து முன்கூட்டிப் பேசுவது அவசியமானதுதாம்.புலம் பெயர்வுச் சூழலில் ஒவ்வொருவரும் சொந்தங்கொண்டாடும் அரசியலில் மடிந்தவர்கள் பலர்.புரட்சியின் பெயரால் நடந்தேறிய குழிபறிப்பில் புலிகளது இருப்பு நியாயமுற்ற தமிழ்ச் சமுதாயத்தில் இதைவிட மேலான அரசியல் அரும்ப முடியாதுதாம்.என்றபோதும்,இதைக்குறித்த சரியான தேடுதல் அவசியமாகிறது.இங்கே,இனங்காணும் செயற்பாடுகள் அவசியமாகிறது.
புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில்
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குப் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் சமூக இருப்புப் பலமானதாகவில்லை.புலம்பெயர் சமூகம்மிகவும் முரண்படுதன்மைகளை -பொருந்தாத்தன்மைகளை தன்னகத்தே கொண்டுடியங்குகிறது,இணக்கமற்ற இருவேறு அணுகுமுறைகளின் ஒருமாதிரி சேர்க்கையிலேதாம் புலம் பெயர் தமிழ்மக்களினது இருப்பே தங்கியுள்ளது. இங்கெல்லாம் நாம் நமது வாழ்வை சமூகக்கூட்டாகமைக்க முடியவில்லை .இதனால் சமுதாயரீதியான அணுகுமுறையற்றுப்போவதால் குழுவாரீயான அணுகுமுறையே நிலவுவதால் அஃது ஒன்று,மற்றது: தனிநபர்வாத அணுகுமுறை! குழுவாரியான அணுகுமுறைக்குள் சிறு சுய அமைப்பாண்மையும்,ஆற்றலையும் காணும்போது மறுபுறத்திலோ தனிநபர்வாத அணுகுமுறை எல்லாச்சீரழிவுக்கும் பசளையிடும் காரியத்தில் இயங்கிக்கொள்கிறது.
இத்தகைய தனிநபர்வாத அணுகுமுறை பழைய குட்டிப் பூர்ச்சுவா குணாம்சம் காரணமாக மிகவும் இறுக்கமான மரபுசார்ந்து செயற்படும் தந்திரத்தில் மையங்கொண்டுள்ளது, இத்தகையவொரு சூழலில் தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் ஸ்தாபனமடையாதிருப்பதற்கேற்வாறு புலிகளினது தளங்கள்செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டும்,புரட்சிக்காரர்களாகக் காட்டிக்கொண்டும் பல்வேறு முகாங்களாகத் தம்மைத் தகவமைத்து மக்களரங்குக்கு வருகிறார்கள்.இவர்களது வரலாற்றைத் தோண்டி அம்பலப்படுத்தாமல் இலங்கைவாழ்மக்களது விடுதலையென்பது பகற்கனவானது.
புலி அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.களப் புலிகளது அழிவுக்குப்பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில்புரட்சிக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"தமிழ்த் தேசியத்தின்"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்து வருகிறது.சேரன் போன்ற மேட்டுக்குடிச் சிந்தனையாளர்கள் இதையொரு தொழிலாகவே இப்போது செய்து வருகின்றனர்.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த இனவாதப் பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.இதுதாம் தமிழ்சிந்தனை மரபாக இதுவரை செயற்படுகிறது!
நமது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமான இந்தத் "தமிழீழ"அழிவு யுத்தத்துக்கு உடந்தையாக எவரொருவர் இருந்தாரோ-அவர் மக்கள் விரோதியே.ஏனெனில்,இன்றுவரை இலட்சம் மக்கள் சாவதற்கான சித்தாந்தவலுவைச் செய்து,மக்கள் விடுதலையை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்தும்,புலிகள் மூலமாக அந்நியத் தேசங்களுக்கு ஏவல் நாய்களாக நமது மக்களது குழந்தைகளை உருவாக்கியும், இன்று கொன்று குவித்தற்கும்,துரோகிகளாக அழித்தற்கும் இவர்களே உடந்தையாக இருந்தவர்கள்.இவர்களே இப்போது புலியினதும்-புரட்சியினதும் பேச்சாளர்களாக வலம் வருகிறார்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசுக்காரர்கள் புரிய மறுக்கும் இலங்கைச் சிங்களச் சமுதாயமானது, இன்னும் நிலவுடமைச் சமுதாயமாகவே சாரம்ஸ்சத்தில் நிலவுகிறது. காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசமுதலாளியமானது மக்களின் வாழ்வை அதன் கடைக்கோடி நிலைக்குள் தள்ளியதில் போய்முடிந்துள்ளது.தரகு முதலாளிய வர்க்கத்தோடு ஏற்பட்ட சமரசங்கள் அதைக்காக்கவும்,வெல்லவவும் மதவாதக் கட்டுமானங்களைப் புதிய பாணியிலுருவாக்கிப் புத்த சியோனிஸத் தன்மையிலானவொரு கருத்தியல் மேலாண்மையை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள முயன்ற நிலவுடமை வர்க்கமானது, இனங்களாகப் பிளந்துகிடக்கும் தமிழ்-சிங்கள மக்களை தத்தமது இருப்புக்காகக் காவு கொள்ளும் நெறியாண்மையைக் கலாச்சாரமட்டத்தில் நிறுவுகிறது.இதையே ஒத்திசைவாகச் செயற்படுத்த உதவிய புலிவழிச் சிந்தனையாளர்கள் இப்போது நாடுகடந்த அரசுக்கு முண்டுகொடுப்பதில் புலம்பெயர்-நிலத்துத் தமிழ் மக்களை அதிகார மையங்களுக்கு அடிமையாக்கின்றனர்.
தமிழ்மக்களை இரசித்துக் கொல்வதற்கு வழிகாட்டிய தத்துவம் என்ன?
அதன் பின்னால் தெரிவுகளாகிய நலன்கள் யாருடையது?
கடந்தகாலப் புலிகளது போராட்ட வரலாற்றில் கொன்று கவர்வது வழமையானதாகவே இருக்கிறது.மிகச் சிக்கலான பொருள் குவிக்கும் புலிப் பினாமிகளின்ஆசையானது பின்னோக்கிய கற்காலத்தைத்தாண்டியும், இன்றைய பின் முதலாளித்துவச் சூழல்குறித்துக் கருத்தாடும் மனிதச் சமுதாயத்தில் மிக நரித்தனமாகவே உரிமை-தேசியம்-சுயநிர்ணயம் குறித்துப் பேசுகிறது.
புரட்சிகரச் சக்திகளையெல்லாம் உதிரிகளாக்கிய களத்து-புலத்துப் புலிகள், இன்றும் தமது கைவரிசையை புலத்தில் காட்டியே வருகிறார்கள் என்பதற்கு புலம் பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்களின்அணிச் சூழல் நல்ல உதாரணம்.இவர்கள் பேசும் புரட்சிகரச் செயற்பாடு,அணிச் சேர்க்கை,புலிகளுக்குகெதிரான செயற்பாடு,புலிவழித் தேசியத்தை அம்பலப்படுத்தல் என்பதெல்லாம் ஏதோவொரு தளத்துக்குகிசைவானதாகவே இருக்கிறது.அந்தத் தளத்தை அறிவதே இன்றைய மக்கள் நல அரசியலாக இருக்க முடியும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.05.2010
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment