கடந்த வருடம் 15.05.09 இல் இருந்து 18.05.09 வரையான ஏதோவொரு தினத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட அவரைக்குறித்துத் தமிழ்மக்கள் இன்னும் உயிர்வாழ்வதெனக்கொள்ளும் பரப்புரைகளைப் புலத்துப் புலிகள் செய்ய முனைவதில் நாளை மீளவொரு ஈழத்தைக் காணலாம்.இன்று, நாடுகடந்து அதைக்(ஈழத்தை)கண்ட புலத்துப் புலிகள் மக்களது உரிமைக்கான போராட்டத்தில் புதிய திசைவழிகளைக் கண்டதாக "நாடுகடந்த தமிழீழ அரசை"ப் பிரகடனப்படுத்தக் களத்துப் புலிகள் வன்னிக்குள் பலமாக இருந்து, ஒரு பெரும் நிலப்பரப்பைக் கட்டியாண்டபோதுங்கூடச் செய்ய விரும்பாத"தமிழீழப் பிரகடனத்தை"இப்போது தேர்தல்-வாக்கெடுப்பின் மூலம் பிரகடனப்படுத்திய புலத்துப் புலிகள் உண்மையில் "வீரம்"செறிந்த மறவர்கள்தாம்.
அவர்கள் "தமிழருக்கான ஊடகத்தில்"கட்டியமைக்கும் "ஈழம்-தமிழ் மண்"யாவும் அவர்கள்கூறும் பிரபாகரன் வரும் வரை நிலைத்திருக்கும்.அது,எல்லாத் தரப்பாலும் தமிழருக்கான உரிமைக்கான குரலின்-போராட்டத்தின் தொடர்ச்சியெனக் கட்டியமைக்கும் முனைப்பில் பலர் முனைவதும் ஈழத்திற்கான வகைமாதிரிப் போரெனக் கொள்க!
ஆயுதத்தாலும்,அதிகாரத்தாலும்,பணப்பலத்தாலும் நிறுவ முனையும் இந்தப் பாதாளவுலக அரசியலானது, மக்களது அனைத்து உரிமைகளையும் புதை குழிக்கு அனுப்பி வருகிறது.இலட்சம் தமிழ் மக்களது புதை குழியோடும் இவைகள்(வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு-நாடுகடந்த தமிழீழ அரசு)தமது நிலை குறித்துப் பேசிக்கொள்கின்றன.இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களது குடிசார்வுரிமைகளைப் புதைப்பதில் முதன்மையான செயற்பாட்டாளர்களாக இருக்கும் இன்றைய "நாடுகடந்த தமிழீழ அரச" நிறுவனர்கள்-உறுப்பினர்கள், நிறுவனமயப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கத்தினது அதிகாரத்தை மேலும் இருப்புக்குட்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வெறுத்தொதுக்கத் தக்க கருத்து நிலைக் கதம்ப எழுத்தாகுமா?
"நாடு கடந்த" இவ்வரசானது பெரும்பாலும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்குமே துரோகமிழைத்தபடி, தமது அதிகாரத்தைப் பேணும் ஒருசில புலத்துப் புலிக்குடும்பத்தின் நிதியாதாரத்தின்மீது கட்டப்பட்ட குறுகிய நலன்களையும் மறுபுறத்தில்கொண்டியங்குவதால் அதன் அரசியல் ஆதிக்கமானது பாசிசத்துக்கும்,பெயரளவிலான தரகுமுதலாளிய ஜனநாயக நடாத்தைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரிந்து மேவுகிறது.பாசிச ஆட்சியில் நிலவும் அரசினது தாத்பரியம் ஆளும் வர்க்கத்தினது தெரிவை தலையிற் சுமந்து காரியமாற்றுவதில் அதன்பாத்திரம் முழு மக்களையும் காயடித்துக் குதறும்.இது,வருங்காலத்தில் முழுமொத்தப் புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏதோவொரு திசையில் தமது நோக்கிற்கிணங்கப் பயன் படுத்தும்.
"தேசியத் தலைவர்"பிரபாகரன் சரணடைய வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டபோது அவரோடு புதைக்கப்பட்ட"தமிழீழம்"இப்போது நாடுகடத்தப்பட்டு புலத்துப் புலிகளது அனைத்துவகைக் குறுகிய நோக்குக்கும் இசைவாகப் பயன் படுத்தப்படுகிறது.இதன் பயன் இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களது உரிமைக்கான அடுத்த கட்டப் போராட்டத் திசையின்தெரிவாகவும் வலிந்துகூறும் புலிப்பார்வைகள், இதுவரையான புலிவழிப் போராட்டத்தின் அழிவைக்குறித்து மௌனிக்கிறது.அதைத் திரும்பிப் பார்ப்பதற்கு அது மறுத்தொதுக்குவது புலித் தலைவரை உயிர்த்திருக்க வைப்பதன் தொடரில் நியாயமுறுகிறது.இனவாதத்தை உயிர்த்திருக்கவைத்து மக்களை ஏய்த்துப் பலியாக்கும் அரசியலைப் புலிகள் தமிழீழப் போராட்டத்தினூடாக இலங்கை அரசுக்கு மிக நேர்த்தியான இனஞ்சார் அரசியல் வழிகாட்டியாக மாறியதன்பின், இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு உச்சம் பெற்றது.இஃது, கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் சட்டபூர்வமான இனவழிப்பை இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு உலகு தழுவிய ஒப்புதலோடு" தேசத்தின்"இறைமையாகக் கையளித்தது.
இதன்வழி, மிக மோசமானவொரு அரசாக இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றுவதற்கேற்ற திட்டமிடப்பட்ட பாசிச இராணுவாதம், இலங்கை அரச ஆதிக்கத்துக்குள் உள் நுழையும் தருணம் திட்டமிடப்பட்டு, "இலங்கை மக்களது குடிசார்வுரிமைகளை இனவாதத்தேற்றத்தினூடாக" ஒரு பகுதி புலிசார் தமிழ்பயங்கரவாத மக்களிடமிருந்து பறிப்பதாகக்கூறி, முழு இலங்கையின் மக்களிடமிருந்து பறித்தெடுத்தது, மகிந்தா குடும்பத்தின் பின்னாலுள்ள இலங்கை-இந்திய,சீன ஆளும்வர்க்கங்கள்.இதற்கான அனைத்துவகை இசைவுத் தளத்தையும் செய்வித்த புலிப் போராட்டம், இறுதியில் தமது எஜமானர்களது கையினாலேயே கடந்த வருடம் மே 18 இல் அழித்தொழிக்கப்பட்டது.
இத்தொடரான இன்றைய இலங்கை அரசியலின் போக்கானது, மிகவும் கொடிய இராணுவத்தன்மையிலானவொரு அரசவடிவத்தை, இலங்கைக்குள் நிலைப்படுத்துவதில் போய் முடிந்த துர்ப்பாக்கிய நிலைக்கு இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தை கொண்டு சென்றுள்ளது.இதை மாற்றுவதற்கான எந்த பொருளாதார நகர்வும் தனக்கான பொதுமைப்பட்ட கோரிக்கைகளை முன்தள்ள முடியாதவொரு நிலையில்இப்போது உலகப் பொருளாதார நிலைமைகள் உருவாகியுள்ளபோது, இலங்கையின்பெயரளவிலான ஜனநாயத் தன்மை முற்றிலும் சீரழிந்துள்ளது.இலங்கை அரசினது புலியழிப்பு யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து அதன் இறுதி இலக்கு எட்டும்வரை, இலங்கை அரசு சிங்கள அரசாகவே நடந்துகொண்டது.அதன் உண்மையான இலக்கு என்பது சிங்கள ஆதிக்கத்தை இலங்கை வாழ் மற்றைய இனங்கள்மீது திணிப்பதாகவும், அதன் வாயிலாக இனவொடுக்குதலின் உச்சபட்ச சாத்தியத்தை கொண்டியக்குவதாகவும் இருந்தது.இதன் ஊக்கத்துக்கு புலயினது பாசிச அகங்கார நடாத்தை(நான்காம் கட்ட ஈழப்போர் போர் இம் முறை முழு இலங்கையிலும் இரத்த ஆற்றைத் திறக்கும்-தமிழ்ச் செல்வன்) மிக அண்மித்த கருத்தியற்பலத்தை இவ்வரசுக்கு அன்று, வழங்கியிருந்தது.
"தமிழீழத்தனி அரசுக்கான" போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ்உதிரிச் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல்(சம்பந்தன்-சிவாஜிலிங்கம்அரசியல்) முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூக யதார்த்தைக் கோரிக்கொண்டிருக்கிறது. இஃது,முழுமொத்த இலங்கைவாழ் தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கும் முக்கியமான காரணியாக விருத்தியாகியுள்ளது.இதந்த அவலத்தின் தொடராகப் புலத்தில் "நாடுகடந்த தமிழீழ அரசு"அமைக்கப்பட்டு, ஒப்பாரி முள்ளிவாய்க்கால் நினைவாக எமது காதுகளில் கொட்டப்படுகிறது!
இந்த முள்ளி வாய்க்கால்வன்னி மக்கள்- புலிகள் அழிவு குறித்து இன்று நினைவு கூறுவதாகவிருந்தால்"காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில், புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம்ஆற்றியுள்ளார்கள்" என்று கூறுவதைத் தவிர வேறென்னத்தை நினைத்து உருக முடியும்?
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.05.2010
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
3 comments:
pls tell me the truth Thalaivar alive or not?
//கூறுவதைத் தவிர வேறென்னத்தை நினைத்து உருக முடியும்?//
அட மக்களை நினைத்துமா உருகமாட்டீர்.
//அட மக்களை நினைத்துமா உருகமாட்டீர். //
கடந்த முப்பாதாண்டுகளாக மக்களை நினைத்து உருகியவர்கள் இப்போதும் நாடுகடந்த தமிழீழத்தின் வழியாக"மக்களை நினைத்து உருகும்போது"நாம் உருகித்தான் தீரணுமா?அந்தவுரிமையை உண்டியல் கிலுக்க அவர்கள் குத்தகைக்கு எடுத்துள்ளார்கள்.இது உங்களுக்குத் தெரியாதோ?
Post a Comment